Monday, December 19, 2016

Inside Out - ரைலியின் மனதிற்குள் என்ன நடக்கிறது?





ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இன்பம், துன்பம், பயம், கோபம் போன்ற உணர்ச்சிகள் இருப்பது நமக்குத் தெரியும். அவை உருவமில்லாதவை. நம்மால் உணரக்கூடியவை மட்டுமே. ஆனால் அவற்றிற்கு உருவம் இருந்து நம்மால் பார்க்க முடியும் என்றால் எப்படியிருக்கும்? சுவாரசியமான கற்பனை அல்லவா? இதை அடிப்படையாக வைத்து 2015-ல் உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம்தான் Inside out.


***

அமெரிக்க நகரின் மினசோட்டா மாநிலத்தில் ஓர் அழகான பெண் குழந்தை பிறக்கிறது. அதன் பெயர்  ரைலி. அவளுக்குள் இருக்கும் இன்பம், துன்பம், கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் அதற்குப் பொருத்தமான வண்ணங்களில் நமக்கு உருவங்களாக காண்பிக்கப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் அவளுடைய தலைமைச் செயலகமான மூளைக்குள், அதாவது மனதின்  செயல்களாக அவளைக் கட்டுப்படுத்துவதை நாம் பார்க்கிறோம். இதில் இன்பமே பிரதானமான பங்காற்றுகிறது. எனவே ரைலி பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

அவளுடைய குடும்பம் சான்பிராஸிஸ்கோ நகருக்கு இடம் பெயர்கிறது. அதிலிருந்து பிரச்சினைகள் துவங்குகின்றன. புதிய இடம் அவளுக்கு அத்தனை இன்பத்தைத் தரவில்லை. அவளுடைய தந்தைக்கு தொழில்ரீதியாக பிரச்சினை ஏற்படுவதால் வழக்கம் போல்  இவளிடம் பிரியமாக இல்லாமல் விலகி இருக்கிறார்.  எனவே ரைலி மகிழ்ச்சியைத் தவிர இன்ன பிற உணர்ச்சிகளால் அதிகம் ஆட்படுகிறாள்.

***

புதிய பள்ளி, புதிய நண்பர்கள். வகுப்பின் முதல் நாளன்று ஆசிரியை ரைலியை விசாரிக்கும் போது அவள் துன்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறாள். அப்போது தலைமைச் செயலகத்திற்குள் துன்பம் என்கிற பாத்திரம் கோளாற்றை ஏற்படுத்தி விட இன்பமும் துன்பமும் அங்கிருந்து வெளியேறும் நிலைமை ஏற்படுகிறது. எனவே ரைலி, இன்ன பிற உணர்ச்சிகளான கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய உணர்ச்சிகளால் மட்டுமே ஆட்பட்டிருக்கிறாள். இந்த மூன்று உணர்ச்சிகளும் நிலைமையை சமாளிக்க முயல்கின்றன. என்றாலும் இயலவில்லை.

இந்த நிலையில் தன் பெற்றோருக்குத் தெரியாமல் ரைலி, தான் பிறந்த ஊருக்கே தனியாக திரும்பிச் செல்ல  முடிவெடுக்கிறாள். அவள் ஒவ்வொரு மீறலையும் நிகழ்த்தும் போது அவளுக்குள் இருந்த நற்பண்புகள், நல்ல நினைவுகள் ஆகிய உருவங்கள் இடிந்து ஆழ்மனதிற்குள் சென்று விழுகின்றன.

இன்பம் என்கிற பாத்திரம் தலைமைச் செயலகத்திற்குள் திரும்பினால்தான் ரைலி வழக்கமான இயல்பிற்கு திரும்ப முடியும். பல்வேறு தடைகளுக்கும் சிக்கல்களுக்கும்  பின்னர் இன்பமும், துன்பமும் அங்கு திரும்பி வருகின்றன. ரைலி  வழக்கம் போல் இன்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் திரும்பும் மகிழ்ச்சியோடு படம் நிறைகிறது.


***

இந்த திரைப்படம் நல்ல கற்பனைதான் என்றாலும் நம் மனம் பல்வேறு உணர்ச்சிகளால் இயங்குவதை வண்ண மயமான உருவங்களாக காண்பிக்கிறது. எனவே நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. நம்முடைய ஒவ்வொரு உணர்ச்சிக்கும் நாமேதான் காரணமாக இருக்கிறோம். நம்மை இன்பம் ஆக்ரமிக்க வேண்டுமா அல்லது இன்ன பிற உணர்ச்சிகளா என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம் என்பதை இத்திரைப்படம் மிக அழுத்தமாக நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் இது தெரியாமல் நம்மை வேறு எவரோ கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற நினைப்பில் மகிழ்ச்சியைத் தவிர இன்ன பிற உணர்ச்சிகளுக்கு தேவையில்லாமல் ஆட்பட்டு அவஸ்தைப்படுகிறோம். சுருக்கமாகச் சொன்னால் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' ஒவ்வொரு உணர்ச்சியுமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தின் கிராஃபிக்ஸ், நுட்பத்தின் உச்சம் எனலாம். ரைலியின் மனதிற்குள் நிகழும் ஒவ்வொரு உணர்ச்சியின் செயற்பாடும் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சுவாரசியமான திரைப்படம் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் கூட இதில் பாடம் உள்ளது.

ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இத்திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள்.

(உயர்நிலைப் பள்ளியொன்றின் News Letter-க்காக எழுதிய திரைப்பட அறிமுகக் கட்டுரை)

suresh kannan