Monday, November 28, 2016

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ஒரு கதைசொல்லி




வருடம் 1985. நான் பத்தாம் வகுப்பில் இருக்கும் போது தமிழ்  இரண்டாம் தாளில் சில சிறுகதைகள் பாடத்திற்கு வைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமலேயே அதிலுள்ள ஒரு சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. வட்டார வழக்கு தடைகளையும் தாண்டி அதன் சுவாரசியத்தை அந்த இளம் வயதிலேயே உணர முடிந்தது.

நடுத்தர வர்க்க வாழ்வின் அவல நகைச்சுவையை  நையாண்டியுடன் சித்தரிக்கிற சிறுகதையது  என்பதும்  அதை எழுதியவர் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான  'புதுமைப்பித்தன்' என்பது புரிவதற்கும்  அறிவதற்கும் சில வருடங்கள் கடக்க வேண்டியிருந்தாலும் அப்போதைய முதிரா வாசிப்பில் சிறுகதையில் வரும் சிறுமியின் சித்திரம் மிகவும் பிடித்திருந்தது. வர்க்க பேதத்தை உணராமல் ரிக்ஷாவில் ஏறிக் கொண்டு வீட்டில் விட அடம் பிடிக்கும் காட்சியும், விருந்தாளியை 'பல்லு மாமா' என்றழைக்கும் குறும்புத்தனமும் அந்தச் சிறுகதையை மறக்க முடியாமல் செய்தன.


***

சிறுகதை எனும் வடிவம் மேற்கிலிருந்து தமிழிற்கு  இறக்குமதியானது என்றாலும் அந்த வடிவம் இங்கு பரவலாக அறிமுகமாவதற்கு முன்பே அதில் உள்ள பல சாத்தியங்களை புதுமைப்பித்தன் முயன்று பார்த்து விட்டார் என்பது பிரமிப்பிற்கு உரியது. உலக இலக்கியத்தில் பரிச்சயம் கொண்டிருந்த அவர், வேறு வேறு பாணிகளில் நிறைய சிறுகதைகளை தமிழில் எழுதினார்.  நடுத்தர வர்க்க வாழ்வின் அவலம், விளிம்பு நிலை மக்களின் நுண்மையான சித்தரிப்புகள், இதிகாச கதையின் மீளுருவாக்கம்  என்று பல வகைகள்.

'அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்து சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.' (மகாமசானம்) என்பது  போன்ற  இன்றைக்கும் நவீனமாகத் தோன்றுகிற வாக்கியங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

புதுமைப்பித்தனின் சிறுகதை தொகுப்புகள் பல்வேறு வடிவங்களில் வந்து விட்டன.  நாட்டுடமையாக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை கையாள்வது பற்றி கேட்பாரே இல்லை. 'சிறந்த சிறுகதைகள்' 'பத்து முத்துகள்' என்ற தலைப்புகளில் இஷ்டம் போல் அடித்து தள்ளுவது ஒரு மோசமான வணிக உத்தியாக மாறி விட்டது. ஒரு முன்னோடி எழுத்தாளரின் படைப்புகளை கால வரிசையில் தொகுத்து பிழையின்றி செம்மை பதிப்பாக கொண்டு வர வேண்டும் என்கிற நாணயமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான பதிப்பாளர்களிடம் இல்லை. சில  பதிப்பகங்களே அந்த  நியாயங்களைச் செய்கின்றன. அந்த வகையில் ஆ.இரா.வேங்கடாசலபதியை பதிப்பாசிரியராக கொண்டு காலச்சுவடு பதிப்பகத்தால் கொண்டு வரப்பட்ட செம்மை பதிப்பு குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து சமீபத்தில் அன்னம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கும் 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுப்பு முக்கியமானது. இது எந்த வகையில் முந்தைய  முயற்சிகளிலிருந்து வேறுபட்டது?

சிறுகதையின் தன்மையைக் கொண்டு அதை ஒரு குறிப்பிட்ட வகைமையில் பகுத்து கீழ்கண்ட  பதினோரு பகுப்புகளாக பிரித்து இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சி.மோகன். மிகுந்த உழைப்பையும் நுண்ணுணர்வுடனான வாசிப்புத் தன்மையையும் கோரும் விஷயம் இது.

1) மாயப் புனைவு, 2) விந்தைப் புனைவு, 3) வேதாந்த விசாரம், 4) புராண, இதிகாசங்கள் - மீள்பரிசீலனை, 5) துப்பறியும் கதைகள், 6) குழந்தை-சிறுவர் - இளைஞர் உலகம், 7) விளிம்பு நிலை மற்றும் புலம்பெயர் வாழ்க்கை, 8) எழுத்தாளர் வாழக்கை 9) கால யதார்த்தமும் மனித மனமும், 10) சமூக யதார்த்தமும் காதல் மனமும், 11) தாம்பத்யம்.

சில சிறுகதைகளை ஒரு குறிப்பிட்ட வகைமையில் அடக்க முடியாமல் தவித்த அவஸ்தை உள்ளிட்ட பல விவரங்களை முன்னுரையில் விஸ்தாரமாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான தொகுப்பு நூல் என்று இதைச் சொல்லலாம்.

**

வருடம் 2016. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என்னுடைய மகளின் தமிழ் பாட நூலை தற்செயலாக புரட்டிப் பார்த்தேன். என் இளம்வயதில் நான் வாசித்து ரசித்த அதே சிறுகதை - 'ஒரு நாள் கழிந்தது', இதிலும் இருந்தது.

"பிடிச்சிருந்துதா?" என்று கேட்டேன்.. "பல்லு மாமா கதைதானே? ம்.." என்றாள் உற்சாகமாய். காலம் அப்படியே உறைந்து நின்றது போன்ற பிரமை.  புதுமைப்பித்தன் எழுத்தின் சாஸ்வதத்திற்கு இதுவொரு சிறிய உதாரணம்.

**

புதுமைப்பித்தன் சிறுகதைகள் / பகுப்பு: சி.மோகன் /முதற்பதிப்பு மே 2016 / 
 வெளியீடு: அன்னம், மனை எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007. 
விலை. ரூ.500/-

நன்றி: அலமாரி - புத்தக மதிப்புரை இதழ்

suresh kannan

Sunday, November 27, 2016

மீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்



வளரிளம் பருவத்தில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் போன்றவை வாசிக்கும் போது இஸ்லாமியக் கதைகள் கண்ணில் படும். ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் கதைகள் வெளிவரும். ஆனால் அவற்றை வாசிப்பதில் சில இடையூறுகள் இருந்தன. அந்தச் சமூகத்திற்கேயுரிய வழக்குச் சொற்களும் அரபிப் பெயர்களும் வட்டார வழக்குளும் புரியாமல் தடுமாற வைக்கும். எனவே வாசிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தாண்டிப் போக வேண்டியிருக்கும். சில படைப்புகளின் இறுதியில் வழக்குச் சொற்களின் பொருள் தந்திருப்பார்கள். எனவே ஏணியில் ஏறி இறங்கும் விளையாட்டு போல, திரைப்படத்தின் சப்டைட்டிலை கவனித்துக் கொண்டே பார்ப்பது போல சொற்களின் அர்த்தத்தை கவனித்துக்  கொண்டே வாசிக்க வேண்டியதிருக்கும்.

அந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள்  உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அந்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.

ஆனால் பிற்பாடு வாசிப்பின் ருசி கூடிய பிறகு குறிப்பிட்ட சமூகத்தின், வழக்குச் சொற்கள் கலாசார கலப்பின் அடையாளம் என்பதும் அவை அந்தப் புதினங்களுக்கு பிரத்யேகமான சுவையைக் கூட்டுகின்றன, அடையாளத்தை தருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வட்டார வழக்குச் சொற்களின் ருசி என்னுள் இறங்குவதற்கு கி.ராவின் நாட்டார் இலக்கியங்கள் காரணமாக இருந்தது. தோப்பில் முகம்மது மீரானின் புதினங்களை வாசிக்கும் போது இஸ்லாமிய சமூகத்தின் வழக்குச் சொற்கள் வாசிப்பிற்கு தடையாய் இல்லை. வாக்கியத்தின் தொடர்ச்சியோடு அவற்றின் பொருள் தன்னிச்சையாக புரிந்து போகும் அனுபவம் கூடியது.

**

ஜெ. பானு ஹாருன் அவர்கள் வாசிக்க அனுப்பித் தந்த புதினமான ‘மீண்டும் பூக்கும்’ நூலை சமீபத்தில் வாசித்தேன். பிரபல யுனானி மருத்துவரும் எழுத்தாளருமான எம்.ஏ.ஹாரூனின் துணைவியார் இவர்.

பாலின சமத்துவமற்ற சூழலில், மற்ற துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனைகளே நிறைந்திருக்கும் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு பரவலாக நிகழத் துவங்குவது  எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம். அதிலும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் தடைகளும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் படைப்பாளிகள் உருவாவது, அவர்களின் தரப்பு இடம் பெறுவது மிக அவசியமானது. பாலின நோக்கில் பெண் எழுத்தாளர்களை தனித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும் பெண்களின் சில பிரத்யேகமான பிரச்சினைகளை, அகச்சிக்கல்களை பெண்கள்களால்தான் நுட்பமாகவும் உண்மையானதாகவும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

எனவே பெண்களின் இவ்வாறான வருகையை துவக்க கட்டத்திலேயே விமர்சன நோக்கில் ‘முதிரா முயற்சிகள்’ என கறாராக புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது பெண் என்பதால் தரப்படும் சிறப்புச் சலுகையல்ல. சமூகத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை இணைத்து அணுகுவது,  புரிந்து கொள்வது கறாரான விமர்சனத்தை விடவும் முக்கியமானது என நினைக்கிறேன்.

பானு ஹாருனின் புதினம் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைக் கொண்டது. ஒரு மாத நாவலை வாசிப்பது போன்று இரண்டு மூன்று பயண நேரத்தில் வாசித்து முடித்து விட முடிந்தது. இந்த சுவாரசியமே இவரது அடிப்படையான எழுத்து திறனின் வெற்றியாக கருதுகிறேன்.

**

ஸக்கியா என்கிற பெண்ணின் துயர வாழ்வை விவரித்துச் செல்லும் நாவல் இது. அவளது வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்குப் பிறகு காலம் கடந்து ஒரு வசந்தம் பிறக்கிறது. அதைத்தான் தலைப்பு உணர்த்துகிறது ‘மீண்டும் பூக்கும்’

முதலாளிகளிடம் அடியாளாக வேலை செய்து பிழைக்கும் குடிகார கணவனிடம் சிக்கி ஸக்கியா துன்பப்படும் சித்தரிப்புகளோடு நாவல் துவங்குகிறது.  அநாதையான ஸக்கியாவிற்கு பெரியம்மாதான் ஆதரவு. தனது சொந்த மகள்களை நன்கு படிக்க வைத்து, வசதியான இடங்களில் திருமணம் செய்து தரும் பெரியம்மா, இவளை மட்டும் வேற்றூரில் ஓர் எளிய உழைப்பாளிக்கு திருமணம் செய்து அனுப்பி விடுகிறார். ஸக்கியாவிற்கும் படிப்பதை விடவும் பெரியம்மாவின் அருகாமையில் இருந்து சேவை புரிவதே திருப்தியாக இருக்கிறது. ஆனால் கல்வி கற்காமல் போனதின் விலையை திருமணத்திற்குப் பிறகு அவள் தரவேண்டியிருக்கிறது.

அடியாள் வேலைக்குச் சென்ற கணவன் எதிரிகளால் கொலைசெய்யப்படுவதால் மறுபடியும் பெரியம்மாவை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஸக்கியாவிற்கு. ஆனால் அங்கும் துரதிர்ஷ்டம் இவளை துரத்துகிறது. பெரியம்மாவின் மரணச் செய்தியைத்தான் அங்கு அறிந்து கொள்ள முடிகிறது.

எதிர்காலம் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் ஸக்கியா. இவளுடைய சேவையும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இரண்டு மகள்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறாள்.

அந்த வீட்டின் பெரியவருக்கு இறக்கும் தருவாயில்தான் ஸக்கியாவின் நிராதரவற்ற நிலை அதிகம் உறுத்துகிறது. ‘தங்கள் வீட்டின் மகள்களைப் போல் அல்லாமல் இவளை வசதி குறைவான இடத்தில், தவறான நபருக்கு திருமணம் செய்து தந்து இவளின் வாழ்வை பாழடித்து விட்டோமே என்று குற்றவுணர்ச்சியின் தத்தளிப்பிற்கு ஆளாகிறார்.  ஸக்கியாவின் எதிர்காலத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை பிடிவாதத்துடன் செய்கிறார்.

ஸக்கியாவின் அதுவரையான துயரக்காலக்கட்டம் ஓய்ந்து வருங்காலத்தின் நம்பிக்கை வெளிச்சம் பிறக்கும் நல்ல செய்தியோடு நாவல் நிறைகிறது.

**

இஸ்லாமிய சமூகம் குறித்து இதர  சமூகங்களின் பொதுப்புத்தியில் நல்லதும் கெட்டதுமாக நிறைய முன்தீர்மான சித்திரங்கள் உள்ளன. மேலைய நாட்டவர்கள் பெரும்பாலும் கற்பு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் என்கிற மேலோட்டமான புரிதல் இங்கு இருப்பதைப் போல ‘அவங்க நாலு திருமணம் கூட செய்துக்குவாங்க’ என்று இஸ்லாமிய சமூகத்தை சர்வசாதாரணமாக கூறி விடுவதைப் போன்ற அர்த்தமற்ற சித்திரங்கள்.

இது மட்டுமல்லாது சினிமாவும் ஊடகங்களும் இன்னபிற அமைப்புகளும் இது சார்ந்து பல ஆபத்தமான மதீப்பீடுகளை இங்கு உருவாக்குகின்றன. இஸ்லாமியர் என்பவர்கள், மதம் சார்ந்த தீவிரப்பற்றுவள்ளவர்கள், பிற்போக்கானவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்பது போன்ற பல ஆபத்தான கருத்துக்கள் பொதுச்சமூகத்தின் மையத்திற்குள் வீசப்படுகின்றன. மத அரசியல் திட்டமிட்டு இவற்றை ஊதிப் பெருக்குகிறது.

ஜெ. பானு ஹாருன் முன்வைக்கும் இந்தப் புதினத்தின் மூலம் ஒரு சராசரியான இஸ்லாமிய குடும்பத்தின் இயக்கத்தை, அதன் போக்கை நாம் நெருங்கி நின்று கவனிக்க முடிகிறது. அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையுமே சமநிலையுடன் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று அறம் சார்ந்த விழுமியங்களுக்கு கட்டுப்படுபவர்கள்தான். மனச்சாட்சியுடன் இயங்குகிறவர்கள்தான்.

மற்றவர்களைப் போல் தன் கணவன் கடல் கடந்து சம்பாதித்து வராத அங்கலாய்ப்புடன் இருக்கிறாள் ஜம்ஷித்தின் மனைவி. இதனாலேயே அந்த உறவில் விலகல் ஏற்படுகிறது. இன்னொரு திருமணத்திற்கான வாய்ப்பு இருந்தும் தன்னுடைய மகள்களின் எதிர்காலத்தையும் ஊருக்குச் செய்யும் சேவையையும் மட்டுமே நினைத்து காலம் கடத்துகிறான் ஜம்ஷித். இறுதிக் கட்டத்தில் பெரியவர்களின் நெருக்கடிக்கும் தன் மகள்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து நிராதரவாக நிற்கும் ஸக்கியாவை திருமணம் செய்ய  சம்மதிக்கிறான். ‘நாலு திருமணம் கூட’ செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் சமூகமாக கருதப்படுவதிலுள்ள பொதுப்புத்தியின் மேலோட்டமான கருத்தை ஜம்ஷித்தின் நிதானமான பாத்திரம் சிதறடிக்கிறது.

ஜம்ஷித்தின் இரண்டாவது மகளுக்கு கல்வியின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளால், அடக்குமுறைகளால் அவளது கனவை தடுக்க முடியவில்லை. ‘கல்விதான் தன் விடுதலைக்கான ஆயுதம்’ என்கிற முதிர்ச்சியும் புரிதலும் அவளுக்கு இருக்கிறது. பழமையிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் ஒரு நவீன இஸ்லாமிய பெண்ணின் சித்திரம்.

திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அதன் சம்பிரதாயங்கள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை அபாரமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். வடகரை இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு சார்ந்த நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.

**

அது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், தேசமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒரு சராசரியான பெண்ணின் இயக்கமும் வாழ்வும் ஆணாதிக்க சமூகம் உண்டாக்கும் பல அல்லல்களுக்கும் தடைகளுக்கும் இடையே நீந்திக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. ஸக்கியா அம்மாதிரியான பிரதிநிதித்துவத்தை எதிரொலிக்கும் ஒரு பிம்பம். ஆனால் அவளின் வாழ்வை துயரத்தில் மூழ்கடித்து விடாமல் நம்பிக்கைக் கீற்றோடு நிறைவுறச் செய்திருப்பது சிறப்பான விஷயம்.

**

‘மீண்டும் பூக்கும்’ (புதினம்)
-    ஜெ. பானு ஹாருன்
அபு பப்ளிகேஷனஸ், வடகரை
பக்கம் 132, விலை – ரூ.70
suresh kannan

ஆதவன் தீட்சண்யாவின் எட்டு வெடிகுண்டுகள்





இலக்கிய வாசிப்பு அனுபவமுள்ள நண்பரொருவருடன் 'ஆதவன் தீட்சண்யா' வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவரை 'தலித் படைப்பாளி' என்கிற வகைமைக்குள் சுருக்க முயன்றார். தலித் என்கிற சொல்லாடல் இன்னமும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அது சாதிய நோக்கிலான சொல்லாகவே இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வர்க்க அரசியலுடனும் தொடர்புள்ளது அது. சாதிய படிநிலை மட்டுமல்லாது, பொருளாதார படி நிலையிலும் கீழேயுள்ள மக்கள், அதிகார வலுவற்ற சமூகம், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக உள்ள மதிப்பு இங்கு உணரப்படவில்லை. மராத்தியில் உருவான இந்தச் சொல்லுக்கு அழுத்தப்பட்டவர்கள் என்கிற பொருளே உண்டு.

இன்னுமொன்று, அரசாங்கப் பதிவேடுகளில் தலித் என்கிற சொல் இல்லை. அட்டவணை சாதிகள் என்கிற குறிப்பே உண்டு. ஆனால் பொருளாதாரத்தில் மேம்பட்ட பிரிவில் உள்ள சில சமூகத்தினரும் இடஒதுக்கீட்டின் சலுகைகளை குறுக்குவழியில் பெற தம்முடைய சமூகத்தை அட்டவணை சாதிப்பிரிவில் இணைப்பதற்காக நிகழ்த்தும் போராட்டங்களையும் பார்க்கிறோம். தலித் சமூகத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தலித் இலக்கியத்தை எழுத முடியும் என்கிற குரலும் ஒருபக்கம் ஒலிக்கிறது.

இவ்வாறான அரசியல் காரணங்களை வைத்து கலைஞர்களை வரையறையோ பாகுபாடோ செய்ய முடியாது. தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஓர் எழுத்தாளன் உணர முடியாது என்பது அபத்தமானது. அதை உறுதியாக மறுப்பதற்கான முன்னுதாரண படைப்புகள் உள்ளன. கலைஞன் கூடுவிட்டு கூடு பாயும் வல்லமையும் இந்தப் பாகுபாடுகளைக் கடந்து மானுட குலத்தை பரந்து பட்ட நோக்கில் காணக்கூடிய கருணை மனமும் பரிவும் கொண்டவன்.

***

ஆதவன் தீட்சண்யாவின் 'சொல்லவே முடியாத கதைகளின் கதை' என்கிற சிறுகதை தொகுப்பு இதைத்தான் நிரூபிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சமூக அநீதிகளை அடித்து நொறுக்குவதற்கான வெடிகுண்டுகளைப் போலவே வன்மையான மொழியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சாதியைக் காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் மத அரசியலாலும் வர்க்க அரசியலாலும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் துயரங்களைப் பற்றி தார்மீக ஆவேசத்துடன் அவருடைய கதைகள் உரையாடுகின்றன.

அரசியல் சார்ந்த எழுத்து என்கிற போதிலும் அதிலுள்ள கலைநயம் எவ்விதத்திலும் குறைந்து போவதில்லை. முன்குறிப்பில் ஓடை. பொ.துரைஅரசன், ஆதவன் தீட்சண்யாவின் எழுத்து குறித்து  கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது மிக சரியானது.

'...சார்பு நிலைப் படைப்பாளிகளின் பிரதிகளில் அழகியலைக் காட்டிலும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் துறுத்திக் கொண்டு மேலோங்கி நிற்கும் என்பது காலங்காலமாக எதிர்கொள்ளப்படும் பொதுவான விமர்சனம். ஆனால் ஆதவன் தீட்சண்யாவின் எந்தப் பிரதியிலும், அதன் மூலை முடுக்குகளில் எங்கு நுழைந்து பார்த்தாலும் அவரது அரசியலையும் அழகியலையும் பிரிக்கும் எல்லைக்கோட்டைக் காண முடியாது. அவரது பிரதிகளில் அவர் சார்ந்துள்ள அரசியலும் ஊடும் பாவுமாயப் பின்னிப் பிணைந்துள்ளது.'..

***

இந்த தொகுப்பில் எட்டு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையுமே அதனதன் நோக்கில் சாதியால், மதத்தால், அதிகாரத்தால், பொருளாதார அரசியலால் ஒடுக்கப்படும் மக்களைப் பற்றிய உரையாடல்களை தன்னுடைய வலிமையான, எளிமையான மொழியால் முன்வைக்கின்றன.

'பொங்காரம்' என்கிற சிறுகதை கொத்தடிமைகளாக அவதிப்படும் உழைக்கும் மக்களின் வாழ்வியல் துன்பங்களை அதன் நுண்மைகளுடன் விவரிக்கிறது.'பரதேசி' திரைப்படத்தைப்  போன்று, வறுமை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிராம மக்கள் கூட்டத்தை ஆசைகாட்டி அழைத்துச் செல்கிறான் கங்காணி. பரம்பரையாக கல்லுடைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பங்காளிக்கூட்டமொன்று, கல்லுடைப்பதற்கும் இயந்திரம் வந்து வி்ட்ட காரணத்தினால் வேலை குறைந்து வறுமை சூழ்ந்த காரணத்தினால் கங்காணியின் வாக்குறுதியை நம்பி முன்பணம் வாங்கிக் கொண்டு கிளம்புகின்றனர். எங்கே என்று தெரியாத அத்துவானக்காட்டைப் போன்றதொரு இடத்தில் அவர்களின் உழைப்பு கணக்கில்லாமல் உறிஞ்சப்படுகிறது. ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டல், இன்னொரு பக்கம் பெண்களின் மீதான பாலியல் சீண்டல் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளாத அந்தக் கூட்டம் கங்காணியையும்  உடுப்புக்காரனையும் ஓர் ஆவேசமான கணத்தில்  கொல்வதோடு தடயம் தெரியாமல் தப்பிச் செல்கிறது.

ஊரிலுள்ள கடன்காரர்களுக்கு பதில் சொல்லவும் இழந்த தங்கள் வாழ்வை மறுபடி உயிர்ப்பிப்பதற்காககவும் மறுபடியும் எங்காவது ஒரு பணிக்கு சென்றுதான் ஆக வேண்டும். அதற்கு சற்று முன்பணம் வேண்டும் என்கிற குறிப்புடன் இக்கதை நிறைகிறது.  உழைக்கும் மக்களுக்கு விடியல் என்பதே கானல் நீராக உள்ளது; நெருப்பிலிருந்து தப்பி எரிமலைக்குள் சென்று விழுவதைப் போல அவர்களின் துயரம் ஒரு சுழற்சியாக அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது என்பதை ஆதவன் தீட்சண்யா நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

இக்கதை முழுவதுமே அடித்தட்டு மக்களின் பேச்சு மொழியில் உரையாடிச் செல்வது மிகப் பொருத்தமானது. சில ஆண்டுகளுக்கு முன் ஆதவனின் ஏதோ ஒரு படைப்பில் வாசித்த 'விளக்கெண்ணையில் குண்டியைக் கழுவினாற் போல' என்கிற சொற்பிரயோகம் அதன் நகைச்சுவை நயத்திற்காகவே இன்னமும் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. பல இடங்களில் அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன். இந்தச் சிறுகதையிலும் அவ்வாறான பல சுவையான சொற்பிரயோகங்கள் உள்ளன.  இந்த ஒரு பத்தியை கவனியுங்கள். கிராமத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வறுமை சார்ந்து அவரவர் நோக்கில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி உரையாடும் புலம்பலின் ஒரு பகுதியிது.

'ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப் போட்டாப்பல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம். இன்னிக்கு நேத்திக்கு இப்படியாகல, காலம் முச்சூடும் இப்படியேதான். நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்குப் பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கும் வழி தெரியல, மாள்றதுக்கும் குழி தெரியல.

இப்படி எளிய மக்களின் வாழ்வியல் துயரங்கள் அதனுடைய இயல்பான சொலவடைகளில் விவரிக்கப்படுகின்றன. தொகுப்பின் தலைப்பில் அமைந்துள்ள 'சொல்லவே முடியாத கதைகளின் கதை'  பெண்களைத் தொடரும் கண்காணிப்பு சமூகத்தைப் பற்றி விவரிக்கிறது. பெண்களால் வெளிப்படையாக உரையாட முடியாத கதைகளின் கதை. கதை சொல்லியிடம் ஒரு கிராமப்புறத்து பெண் உரையாடுவதைப் போன்ற பாவனையில் அமைந்திருக்கிறது. ஆனால் அவளால் தன் கதையை அவனிடம் முழுக்க தொடர்ச்சியாக, சாவகாசமாக சொல்ல முடியவில்லை. பணியிடத்தில் ஆண்டைகளால் கண்காணிக்கப்படுகிறாள்; வீட்டில் கணவன் சந்தேகப்படுவானோ என்று அஞ்சுகிறாள். இவளுடைய துயரம் சிசுக்கொலையிலிருந்து தப்பித்த அவளது இரண்டாவது மகள் வரைக்குமாக நீள்கிறது.

'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்பது ரகளையான இருண்மை நகைச்சுவையுடன் கூடிய சிறுகதை. மலமள்ளும் தொழிலாளர்களுக்கெல்லாம் ஜனாதிபதிக்கு நிகரான சம்பளமும் சலுகையும் தரும் ஒரு சூழல் உருவானால் அது சமூகத்தில் எம்மாதிரியான தலைகீழ் மாற்றங்களையெல்லாம் உண்டாக்கும் என்பதை விளக்கிச் செல்கிறது இச்சிறுகதை. மலம் அள்ள கற்றுத் தருவதற்கான பல்கலைகழகங்கள், அது சார்ந்த கல்வித்திட்டங்கள், அதற்கான போட்டிகள் ஆகியவற்றைச் சிரிக்கச் சிரிக்க சொல்கிறார் ஆதவன். ஆனால் இந்த சிரிப்பின் ஊடே இந்தக் கற்பனையின் பின்னுள்ள யதார்த்தத்தின் நிஜம் உறைத்து அந்தப் புன்னகைகளை உறைய வைக்கிறது.

'நான் நீங்கள் மற்றும் சதாம்' என்ற சிறுகதை மத அரசியலின் வன்முறை சார்ந்த குற்றவுணர்வில் அமிழ்ந்திருக்கும் ஒருவனைப் பற்றி பேசுகிறது. 'இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை' என்கிற சிறுகதை, வரலாற்றில் பதியப்படாமல் அதன் இருளுக்குள் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளின் போராட்டங்களைப் பற்றி உரையாடுகிறது.

***

இதிலுள்ள எட்டு சிறுகதைகளும் அதனதன் நோக்கில் மிக முக்கியமான பதிவுகள். சமூகச் சொரணையொடும் அதன் மீதான அக்கறையுடனும் கூடிய ஆவேசத்தில் எழுதப்பட்ட புனைவுகள். ஆதவன் தீட்சண்யாவின் இதர சிறுகதைகளை தேடி வாசிக்க வேண்டுமென்கிற பேராவலை இந்தச் சிறுகதை எழுப்புகிறது.

சொல்லவே முடியாத கதைகளின் கதை
(ஆதவன் தீட்சண்யா) சிறுகதை தொகுப்பு
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 128 - ரூ.50/-

('குறி' சிற்றிதழில் பிரசுரமானது - நன்றி: 'குறி')

suresh kannan

Friday, November 25, 2016

குமுதம் - உலக சினிமா தொடர் - 25வது வாரம்



நண்பர்களே,

குமுதம் வார இதழில் வெளிவந்து கொண்டிருக்கும்  'வாரம் ஒரு உலக சினிமா' என்கிற தொடரில் (ஃபிலிம் காட்டலாமா) இது 25வது வாரத் திரைப்படம்.



Chef (2014)




suresh kannan