Monday, July 11, 2016

தொலைந்து போய்க் கொண்டிருக்கும் சந்தானம்?சந்தானத்தின் ரசிகன் நான் என்று சொன்னால் உங்களில் சிலர் ஆச்சரியப்படலாம். ஒரு நடிகனை, படைப்பாளியை, எழுத்தாளனை அவனுடைய சில பிரத்யேகமான திறமைகளுக்காக சமகாலத்தில் கொண்டாடுவது தவறு என்பது தமிழ் மரபின் வழக்கம். இயங்கும் காலத்தில் அவனுடைய குறைகளுக்காக திட்டித் தீர்ப்பதும் அவன் மறைந்த பிறகு, அல்லது ஓய்ந்த பிறகு தெவசப்படையல் போல அவனுடைய சிறப்பம்சங்களை தொகுத்து மிகையாக கொண்டாடி அவனை ஒரு திருவுருக்குவாக்கி மகிழ்வதும் இதே மரபின் வழக்கம். அதற்கான உதாரணம் கவுண்டமணி.

சந்தானம் ஒருவகையில் கவுண்டமணியின் ‘இடக்கான நக்கல் எதிர்வினை’ என்னும் கவுண்ட்டர் பாணியை பின்பற்றுபவர் என்றாலும் சமகால இளைஞர்களின் கலாய்த்தல் முறையை கச்சிதமாக எதிரொலிப்பவர். லொள்ளு சபா காலத்திலிருந்தே அவரை நான் பார்த்து, ரசித்து வருகிறேன். 

இந்த நிலையில் அவர் தன்னை நாயகராக நிலைநிறுத்திக் கொள்கிற பயணத்தின் முயற்சிகளுக்கு அவரை வாழ்த்த விருப்பம்தான் என்றாலும் சந்தானத்தின் அந்த பிரத்யேகமான நகைச்சுவையை இழந்து கொண்டிருக்கிறோமோ என்றும் ஒருபக்கம் கவலையாகவும் இருக்கிறது. 

ஏற்கெனவே வடிவேலு இட்டு வைத்திருக்கும் வெற்றிடத்தை, அவரோடு ஒப்பிட முடியாதவர் என்றாலும் ஓரளவிற்காவது நிரப்பிக் கொண்டிருந்த சந்தானமும் கதாநாயகப் பயணத்தில் தன் நிலையை இழந்து தன்னையே பலி கொடுத்துக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதன் சமீபத்திய உதாரணம் ‘தில்லுக்கு துட்டு’

மக்களிடமிருந்து கிடைக்கும் ஆரவாரமான புகழ் வெளிச்சத்தில் மயங்கி அடுத்த நிலைக்கு நகர்வதாக எண்ணி பல காரணங்களினால் தங்களின் ஆதாரமான திறமைகளை இழந்து மீண்டும் திரும்பவும் முடியாமல் அவதிப்பட்ட தமிழ் நகைச்சுவை நடிகர்கள் பலர் உண்டு. சந்திரபாபு துவங்கி வடிவேலு வரை பல நடிகர்களை சொல்ல முடியும். கவுண்டமணி கூட சில படங்களில் நாயகராக நடித்து சுதாரித்து உடனே திரும்பி விட்டார். ஆனால் தன் நிலையை சரியாக உணர்ந்து அதிலேயே நீடித்து சாதித்தவர்களில் நாகேஷ் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

பாலச்சந்தரின் மூலம் நாகேஷிற்கும் ஏறத்தாழ நாயக அந்தஸ்து கொண்ட சில வெற்றித் திரைப்படங்கள் கிடைத்தன. ஏனெனில் அதன் திரைக்கதைகள் நாகேஷின் பிம்பத்திற்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குநர் தீர்மானித்ததும் அதற்கேற்ப மாறுதல் செய்ததும் போன்ற காரணங்களினால் கிட்டிய வெற்றியது. ஆனால் அந்தப் புகழ் நாகேஷை அதிகம் பாதிக்காமல் இருந்தது நாகேஷ் மற்றும் தமிழ் சினிமாவின் நல்லூழ்.

நகைச்சுவை பிம்பம் ஆழமாக பதிந்து போன நடிகர்களை, வழக்கமான நாயகர்களின் சித்திரத்தில் பொருத்திப் பார்க்க ரசிக மனம் அவ்வளவாக விரும்புவதில்லை. இது இயல்பானதுதான். தண்ணீரில்தான் முதலையின் பலம் அதிகம் எனும் போது அது தரையில் குதித்து தள்ளாடுவதை எவர்தான் ரசிப்பார்கள்?

சந்தானத்தின் வளர்ச்சி மெல்ல மெல்ல நடைபெற்றாலும் அவருடைய nuances-களை சரியாக உணர்ந்து அதற்கேற்ப கச்சிதமாக உபயோகப்படுத்தியவர் என்று இயக்குநர் ராஜேஷை குறிப்பாக சொல்ல முடியும். சிவா மனசுல சக்தி தொடங்கி அவரின் பெரும்பாலான திரைப்படங்கள் இன்றும் கூட ரசிக்கக் கூடியதாக அமைந்திருப்பதற்கு சந்தானத்தின் பங்கு முக்கியமானது. குறிப்பாக ஆர்யாவுடனான காம்பினேஷன் பொருத்தமாக அமைவதையும் கவனிக்கலாம்.

அறை எண்.305-ல் கடவுள் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலமாக ஏறத்தாழ நாயகன் போன்ற பாத்திரம் என்கிற வளர்ச்சி அமைந்தாலும், சந்தானம் பிரத்யேகமாக தனி நாயகனாக துவங்கிய திரைப்படம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ராஜ்மெளலியின் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக். அதன் சப்ஜெக்ட் ஒரு நகைச்சுவை நாயகனுக்கு பொருத்தமானது என்பதால் பெரிய அளவிற்கான நெருடல் எதையும் ஏற்படுத்தவில்லை. ரசிக்கவும் வைத்தது. போலவே அடுத்த நாயகத் திரைப்படமான ‘இனிமே இப்படித்தான்’ என்று தலைப்பிலேயே தன் நாயகப் பயணத்தைப் பற்றி சூசகமாக சொன்னாலும் அந்தப்படமும் கூட தேவலையாகவே இருந்தது. இரண்டுமே சந்தானத்தின் தயாரிப்பில் அமைந்த திரைப்படங்கள்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படத்தில் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவைத்தன்மையை பெரும்பாலும் கைவிட்டு ஒரு வழக்கமான ஹீரோவாகும் முயற்சியில் ‘அறிமுகப்பாட்டு’ சண்டை, டூயட் என்று இறங்கியிருப்பது நிச்சயம் அவருக்கு பொருந்தவேயில்லை. அதிலும் தொடர்ச்சியான படங்களாக வந்து சலிக்கத் துவங்கியிருக்கும் ஹாரர் காமெடி வகையில் தாமதமாக இணைந்து கொண்ட கொடுமை வேறு.

இத்தனைக்கும் இத்திரைப்படத்தை எடுத்தவர் யார் என்று பார்த்ததில் இந்தக் கொடுமையின் துயரம் அதிக அளவில் கூடிப் போனது. லொள்ளு சபா இயக்குநர் ராம்பாலா.

நாடி, நரம்பு, ரத்தம், சதை என்று எல்லாவற்றிலும் கலாய்ப்புத்தன்மையும் அபத்த நகைச்சுவைத்தன்மையும் கொண்டவரால்தான் ‘லொள்ளு சபா’ போன்ற தொடரை உருவாக்க முடியும். அப்படியொரு குணாதிசயத்தைக் கொண்டவர், அதிலும் சந்தானத்தை துவக்கத்தில் வடிவமைத்தவர் இப்படியொரு வகைமையைத் தேர்வு செய்து சறுக்கியதுதான் பெரிய ஆச்சரியம். துயரமும் கூட.

‘நான் பார்த்தா பேசறண்டா’ என்று பிராமண அப்பாவித்தனமான குரலோடு பேசிய சந்தானத்தை இந்த நாயக விருப்பம் விழுங்கி விடக்கூடாது என்கிற கவலை தோன்றியிருக்கிறது. 

suresh kannan

No comments: