Monday, October 13, 2014

கடவுள் தேசத்து திரைப்படங்கள்

திரைப்படங்கள் பெரும்பான்மையாக உருவாக்கப்படும் தேசங்களில் பொதுவாக அவை இரண்டு பிரிவுகளாக இயங்குகின்றன. ஒன்று வெகுஜன மக்களுக்கான மசாலா சினிமா. இன்னொன்று தூயகலை சார்ந்த அறிவுஜீவிகளுக்கான சினிமா. முதல் வகை பெரும் பணத்தையும் இரண்டாம் வகை விருதுகளையும் சம்பாதிக்கின்றன. உலகமெங்கும் இதுதான் நிலை. இரண்டையும் தொட்டுச் செல்லும் இடைநிலை சார்ந்த மாற்றுச் சினிமாக்களும் உண்டு. நாம் இங்கு பார்க்கும் விருது சினிமாக்களை வைத்து எல்லா அயல் சினிமாக்களும் இதே தரத்துடன் இருக்கும் என்ற முடிவிற்கு வரக்கூடாது.  பல்வேறு கலாசார பின்னணிகளைக் கொண்ட பிரதேசங்களினால் கட்டப்பட்ட இந்தியாவில் வேறுவிதமான சூழல் நிலவியது. அந்தந்த பிரதேச்து சூழல்களுக்கு ஏற்ப திரைப்படங்கள் உருவாகின.  கல்வியறிவு சதவீதம் அதிகமாயிருந்த மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் வணிக சினிமாக்கள் ஒருபுறமும் கலைசார்ந்த சினிமாக்கள் ஒருபுறமும் இணைக் கோடுகளாக பயணித்தன. ஆனால் இதற்கு மாறாக நமது தமிழ் சினிமா சூழல் (கன்னடமும் தெலுங்கும் கூட) பெரும்பாலும் மசாலாவிலேயே ஊறிக்கொண்டிருந்தது. யதார்தத்திலிருந்து பல மைல்கள் விலகியிருக்கும் செயற்கையான திரைக்கதைகள், பார்வையாளர்களை மிரட்டியாவது அழவைக்கும் மெலோடிராமாக்கள், மிகையுணர்ச்சி காவியங்கள், எக்கச்சக்க எதுகை மோனைகளுடன் கூடிய நாடக வசனங்கள், திணிக்கப்பட்ட பாடல்கள், ஏழைகளை மீட்கும் பாவனைஅவதாரங்கள் என தனக்கான தனி உலகில் இயங்கியது. ஐரோப்பிய சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தைக் கொண்டு செயல்பட்ட சில இயக்குநர்களால் எண்பதுகளில் இந்த நிலை இங்கு சற்று மாறிய போது அந்த மாற்றம் தற்காலிகமாகத்தான் நீடிக்க முடிந்தது.

அதன் பிறகான நீண்ட இடைவேளைக்குப் பிறகு  புதிய அலை இளம் இயக்குநர்கள் புயலென உள்ளே நுழைகிற சமகாலத்தின் போதுதான் சற்று சுதந்திரக் காற்று வீசுகிறது. அதுவரை உருவாக்கப்பட்டு வைத்திருந்த மசாலா கோட்டைகளை இந்த இயக்குநர்கள் மெல்ல தகர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். மசாலா திரைப்பட இயக்குநர்களும் நடிகர்களும் இந்த புதிய அலையின் வெற்றிகளால் ஆடிப் போயிருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் இவைகளின் வணிகரீதியான வெற்றியின் துணை கொண்டு கலை சார்ந்த திரைப்படங்கள் உருவாகும் சூழலுக்கு அது இட்டுச் செல்லலாம். ஆனால் மறுபடியும் வணிகநோக்குத் திரைப்படங்கள் ஆக்ரமிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இயக்குநர்கள் மற்றும் பார்வையாளர்களின் கடமை.

மேற்கு வங்கத்தைப் போலவே நமது அண்டை மாநிலமான கேரளத்தின் எழுபதுகளில் அருமையான கலைசார்ந்த திரைப்படங்கள் உருவாகின. அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன், ஜான் ஆப்ரஹாம்,பத்மராஜன் என்று மிகச்சிறப்பான படைப்பாளிகள் மேலெழுந்து வந்தார்கள். மலையாள சினிமா என்றாலே ஒரு சராசரி தமிழனுக்கு சட்டென்று நினைவிற்கு வரக்கூடிய மிதபாலியல் திரைப்படங்களும் உருவாகின. ஆனால் உலகமயமாக்கத்திற்குப் பிறகு பொருளாதார வெற்றியே பிரதானம் எனும் நிலை ஏற்பட்ட பிறகு மலையாளத் திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்களை நகலெடுக்கத் துவங்கின. பூனையைப் பார்த்து புலிகள் சூடு போட்டுக் கொண்டதைப் போல லாலும் மம்முட்டியும் விஜய்,அஜித் வகையறாக்களின் பஞ்ச் டயலாக்குகளை நகலெடுத்து நாசமாய்ப் போனார்கள். சுமாராக 2010-க்குப் பிறகு இந்த நிலை மெல்ல மாறத்துவங்கியிருக்கிறது. தங்களின் பழைய காலத்திற்கு திரும்புவதற்கான திரைப்படங்களை புதிய இயக்குநர்கள் உருவாக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவை வணிகரீதியான வெற்றியும் பெற்றுவருவதுதான் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இந்தி சினிமாவில் இந்த நிலை சில ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டது.

அவ்வகையில் சமீபத்தில் பரவலான கவனத்துக்குள்ளான இரண்டு மலையாள சினிமாக்களைப் பற்றி பார்க்கலாம்.மலையாள சினிமா வரலாற்றிலேயே மிக அதிக அளவு வசூல் சாதனை செய்த (சுமார் 50 கோடி என்கிறார்கள்) திரைப்படம் திருஷ்யம். கமல்ஹாசன் இதை தமிழில் மீளுருவாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம். இந்த செய்தி மகிழ்ச்சியானது என்றாலும் தமிழ் திரைப்படத்திலேயே தலைப்பிலேயே 'நாசம்' இருப்பதால் குறியீட்டு ரீதியாக சற்று கலவரமாகத்தான் உணரவேண்டியிருக்கிறது. என்றாலும் 'மகாநதி' கமல் மூலப்படைப்பை சிதைக்காமல் நம்மை காப்பாற்றி விடுவார் என்று நம்புவோம்.

திருஷ்யம் என்றால் காட்சி என்றொரு பொருள். 'காட்சிகள் உங்களை ஏமாற்றலாம்' என்பதே இத்திரைப்படத்தின் துணை தலைப்பு. கேரள கிராமத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத ஒரு சாதாரண குடிமகன் தன்னுடைய புத்தி சாதுர்யத்தால் மூர்க்கமான அரசு இயந்திரத்தை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கிறான் என்பதே இந்த திரில்லர் வகை திரைப்படத்தின் உள்ளடக்கம். ஒரு சாதாரணனுக்கும் அரசுக்கும் இடையே நிகழும் மறைமுகமான போர்.

ஜார்ஜ் குட்டி ஒரு சுயமரியாதையுள்ள  நடுத்தரவர்க்க மனிதன். சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறவன் என்பதால் சிக்கனமாக இருக்கிறான். மனைவி,இரண்டு மகள்கள் கொண்ட அமைதியான குடும்பம். அவனது பெரிய மகள் பள்ளி சார்பில் நடைபெறும் இயற்கை முகாமில் கலந்து கொள்ளும் போது அவள் குளித்து விட்டு உடை மாற்றுவதை சக மாணவனொருவன் தனது செல்போனில் பதிவு செய்து விடுகிறான். அதைக் காட்டி மிரட்டி பாலுறவிற்கு அழைக்கிறான். இரவு அவளது வீட்டிற்கு வரும் அவனிடம் பெண்ணின் தாய் செல்போன் வீடியோவை அழித்து விடுமாறு கெஞ்சுகிறாள். அவன் மறுத்து தகாத முறையில் நடந்து கொள்ள முனையும் போது தற்காப்பிற்காக மகள் அவனுடைய தலையில் இரும்புக் கம்பியால் அடிக்க அவன் அங்கேயே விழுந்து இறந்து விடுகிறான். பதறிப் போகும் தாயும் மகளும் செய்வதறியாது திகை்கிறார்கள். பின்பு சடலத்தை வீட்டுத் தோட்டத்தின் எருக்குழியில் போட்டுப் புதைக்கிறார்கள். இது ஏதும் அறியாது விடியற்காலையில் வரும் ஜார்ஜ் குட்டி இதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான். இறந்து போனவன் உயர் காவல்அதிகாரியின் மகன் என்பதால் போலீஸ் ரகசியமாக ஆனால் தீவிர விசாரணையை மேற்கொள்கிறது. காவல்துறை நிச்சயம் தன்னையும் தன் குடும்பத்தையும் தேடி வரும் என்று தன் நுண்ணுணர்வால் யூகிக்கும் ஜார்ஜ் குட்டி அதிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு திறமையான புனைவை உருவாக்குகிறான். இந்தச் சிக்கலிலிருந்து அந்தக் குடும்பம் தப்பித்ததா, ஜார்ஜ் குட்டியின் புனைவு காவல்துறையிடம் செல்லுபடியானதா என்பதை இறுதிப்பகுதி மிக சுவாரசியமாக விளக்குகிறது.

சினிமா என்பது மிக வலிமையானதொரு ஊடகம் என்பதையும் பாமரர் உட்பட பெரும்பான்மையான சமூகத்தின் நனவிலி மனதை அது எப்படி ஆக்ரமிக்கிறது, என்னவெல்லாம் கற்றுத்தருகிறது என்பதை  இந்த சினிமாவே உறுதிப்படுத்துகிறது. கேபிள் தொழில் நடத்தும் ஜார்ஜ் குட்டிக்கு சினிமா பார்ப்பதென்பது மிக விருப்பமானதொரு பணியாக இருக்கிறது. அவன் நாள்தோறும் ஒளிபரப்பும் சினிமாக்களை அவனே முதல் பார்வையாளனாக அமர்ந்து எல்லாவற்றையும் ஆழ்ந்து ரசிக்கிறான். படிப்பறிவு குறைந்தவனாக, செய்தித்தாள் வாசிக்காதவனாக இருந்தாலும் சினிமாக்கள் பார்த்தே பல விஷயங்களை அறிந்து கொள்கிறான். தன்னுடைய அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் சினிமாக்காட்சிகளில் இருந்தே தீர்வை தேர்ந்தெடுக்கிறான். எதிர்பாராமல் நிகழும் ஒரு விபத்து காரணமாக தன்னுடைய குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கலை தான் பார்த்திருக்கும் சினிமாக்களின் துணை கொண்டு போக்க முயற்சிக்கிறான். காவல்துறை தன்னை நோக்கி வரக்கூடிய அத்தனை கதவுகளையும் மூடிவிட்டு தடயங்களையும் அழித்து விட்டு கொலை நடந்த நாளன்று தன்னுடைய குடும்பம் ஊரிலேயே இல்லை என்பதை நிரூபிப்பதற்காக ஒரு புனைவை உருவாக்கி தன்னுடைய மனைவி மற்றும் மகள்களிடம் அதனை விளக்கமாக போதிக்கிறான். காவல்துறையின் நுட்பமான மற்றும் மூர்க்கமான விசாரணைகளைப் பற்றி அவனுக்கு தெரிந்திருக்கிறது. என்ன நேர்ந்தாலும் தான் உருவாக்கின புனைவிலிருந்து தானும் தன் குடும்பமும் விலகாமலிருந்தால் இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது அவனது திட்டமாக இருக்கிறது. இதற்காக அவன் அமைக்கும் வியூகங்கள், சாட்சிகளின் ஆழ்மனதில் தன்னுடைய நோக்கத்திற்கு சாதகமான காலத்தை விதைக்கும் யுக்திகள் ஆகியவை சுவாரசியமாக அமைந்திருக்கின்றன.

ஒருவகையில் இது நீதித்துறையையும் சட்டத்தின் ஓட்டைகளையும் நடுத்தரவர்க்கத்தின் பார்வையில் பரிகசிக்கும் திரைப்படம் எனக்கூட சொல்லலாம். கடுமையான குற்றம் செய்ததொரு நபரை ஒரு திறமையான வழக்குரைஞரால் சட்டத்தி்ன் சந்து பொந்துகளின் வழியாக எளிதில் அழைத்து வந்துவிட முடியும் என்கிற நடைமுறை யதார்த்ம் உண்மை எனும் போது அதே உத்தியை சந்தர்ப்பவசத்தால் குற்றத்தில் வீழ்ந்த ஏறக்குறைய நிரபராதியான மனிதனுக்கும் பொருத்திப் பார்க்கும் திரைப்படம்.  'உன்னை ஒருவன் பலாத்காரமாக கற்பழிக்க முயலும் பொழுது உனக்கு நான் அஹிம்சையை போதிகக மாட்டேன். அந்த மனித மிருகத்தை எதிர்த்து நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்தால்..இயற்கை உனக்கு தந்திருக்கும் பற்களும் நகங்களும் எங்கே போயின? இந்த நிலைமையில் நீ செய்கிற கொலையோ.. அது முடியாத போது நீ செய்து கொள்கிற தற்கொலையோ..ஒரு போதும் பாவம் ஆகாது' என்று உபசேித்தார் காந்தி. ஆனால் இப்படி தற்காப்பிற்காக செய்யும் கொலையையும் அதே திறமையான வழக்குரைஞரால் ஒரு திட்டமிட்ட கொலையாக மாற்றி சித்தரிக்க முடியும் என்பதுதான் சட்டவிதிகளில் உள்ள விந்தை. மேலும் காவல்துறையும் நீதித்துறையும், செல்வந்தர்களுக்கு ஒருவிதமாகவும் ஏழைகளுக்கு இன்னொரு விதமாகவும் தன் முகத்தைக் காட்டும்  என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

'இந்த சினிமாவில் வரும் காட்சியைப் பார்த்து இந்தக் குற்றத்தை செய்யும் உத்வேகமும் யோசனையும் எனக்கு வந்தது' என்பது பொதுவாக சில குற்றவாளிகளின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்திலுள்ள ஒரு பகுதி. ஜார்ஜ்குட்டி தான் பார்த்த சினிமாக்களிலிருந்து குற்றத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக குற்றத்தின் பின்விளைவுகளிலிருந்து எப்படி தன்னை தற்காத்துக் கொள்கிறான் என்பதுதான் இதிலுள்ள வேறுபாடு. எத்தனை திறமையான குற்றவாளியாக இருந்தாலும் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு விடுவான் என்பது குற்றவியலின் பால பாடம். உயர் காவல் அதிகாரியாக இருக்கும், இறந்து போன இளைஞனின் தாய், தனக்கு நேர்ந்த துயரம் என்பதால் இந்த வழக்கை ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்கிறார். தன்னுடைய மகனின் மறைவிற்கும் ஜாாஜ் குட்டிக்கும் ஏதோவொரு தொடர்பிருக்கிறது என்பதை அவரது காவல்துறை பயிற்சி சார்ந்த உள்ளுணர்வு கூறினாலும் அதை சாட்சியங்களுடன் நிரூபிக்க முடியாமல் போராட வேண்டியிருக்கிறது. படிப்பறிவில்லாத ஒருவனின் கூரிய திறமை அவருக்கு முன் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. பூனைக்கும் எலிக்குமான இந்தப் போராட்டத்தில் அவர் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை சட்டவிரோதமாக தாக்கவும் தயங்குவதில்லை. ஜார்ஜ் குட்டி தன்னுடைய குற்றத்தை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் மிக நுட்பமானதொரு குறிப்புடனும் பார்வையாளர்களை வியக்க வைக்கும் ஒரு திருப்பக் காட்சியுடன் இத்திரைப்படம் நிறைவுறுகிறது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் முன்னர் இயக்கியிருக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் இவ்வகையான திரில்லர் வகையைச் சார்ந்தவையே. திருஷ்யம் படத்திற்காக அவர் அமைத்திருக்கும் திரைக்கதை மிக சுவாரசியமானது. மீன்பிடி தூண்டிலில் மாட்டப்படும் புழுக்களைப் போல பின்னர் நிகழப் போகும் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களை முதல் பகுதியிலேயே அவர் ஆங்காங்கே புதைத்து வைத்திருக்கும் நுட்பம் பாராட்டத்தக்கது. மிக இயல்பான காட்சிகளுடன் நகரும் துவக்கக் காட்சிகள் கொலைச் சம்பவத்திற்கு பிறகு பரபரப்பாக மின்னல் வேகத்தில் நகர்கின்றன. ஜார்ஜ் குட்டியின் குடும்பம் அடையும் பதட்டங்களையும் மனஉளைச்சல்களையும் பார்வையாளர்களும் அடைகிறார்கள் என்பதே இந்த திரைக்கதையின் வெற்றி. தான் ஒரு உன்னதமான கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மோகன்லால். காவல்துறையினரால் இவர் தாக்கப்படும் காட்சிகள் பொதுவாக ஸ்டார் நடிகர்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குபவை. குற்றமும் தண்டனையும் என்கிற தலைப்பு பற்றிய பல விஷயங்களை மீள்பரிசீலனை செய்யுவும் அதன் மீது விவாதிப்பதற்கான ஒரு திறப்பையும் இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது.சுமார 15 வருடங்களுக்குப் பிறகு திரும்ப நடிக்க வந்திருக்கும் நடிகை மஞ்சு வாரியரின் சமீபத்திய திரைப்படம். 'How old are you'. பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. இத்திரைப்படம் அவரது சுயவாழ்க்கை சம்பவங்களை எதிரொலிப்பது போல் அமைந்திருப்பது தற்செயலா அல்லது திட்டமிட்டதா என்பது தெரியவில்லை. ஒரு நடுத்தர வயது பெண் எதிர்கொள்ளும் உறவுச் சிக்கல்களையும் முதிர்ந்த வயது காரணமாக எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகளையும் அதிலிருந்து மீளும் நம்பிக்கை முனைகளையும் இத்திரைப்படம் மிக நுட்பமாக முன்வைக்கிறது.

ஒரு பெண்ணின் வாழ்க்கை, திருமணத்திற்கு முன்பு, பின்பு என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்து நிற்கிறது. திருமணத்திற்கு முன்பு அவளொரு வாய் துடுக்குக் காரியாக இருக்கலாம். விளையாட்டில் ஈடுபாட்டுடனும் அது சார்ந்த வெற்றிகளுடனும் கனவுகளுடன் இருக்கலாம். எழுதுவதில் விருப்பம் கொண்டிருக்கலாம், ஆண் நண்பர்களையும் கொண்டிருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின் இவை அனைத்தையும் துறந்து குடும்பம் என்ற நிறுவனத்திற்குள் நுழைந்த பிறகு அவள் தனது கனவுகளையும், லட்சியங்களையும், சுயவெறுப்பு விருப்புகளையும் தனித்தன்மைகளையும் என எல்லாவற்றையும் இழந்து தன் சுயத்தைக் களைந்து குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்ளும் ஒரு இயந்திரமாக மாற வேண்டியிருக்கிறது. ஒரு பொறுப்பான இல்லத்தரசி அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்றுதான் இச்சமூகம் எதிர்பார்க்கிறது. அவ்வாறின்றி தன் கனவுகளை, லட்சியங்களை நோக்கி பொருளாதார தன்னிறைவுடனும் தன்னம்பிக்கையுடனும் உலகத்தை எதிர்கொள்ள புறப்படுகிறவர், பெரும்பாலும் தன் குடும்பத்திலிருந்து விலகவோ அல்லது புறக்கணிக்கப்படவோ நேர்கிறது. ஒருகாலத்தில் தாய்வழிச் சமூகம் இயங்கின நிலைக்கு நேர்எதிரான திசையில் இன்றைய பெண்ணுலகம் நிற்கிறது.

ஓர் அயல் நிறுவன நேர்முகத்திற்காக செல்லும் நிருபமா ராஜீவிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே 'உங்கள் வயது என்ன?'

ஒரு கிளார்க்காக அரசுப் பணியில் இருக்கும் நிருபமா, அயர்லாந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். ஏனெனில் அவனது கணவன் பணிநிமித்தமாக அங்கு செல்கிறான். மகளும் உயர்கல்விற்காக செல்கிறாள். ஆகவே தனது குடும்பத்தைப் பின்பற்றி இவளும் அங்குதான் செல்ல வேண்டும். அதற்காக இந்த அயல்நாட்டுப் பணி அவளுக்கு அவசியம். ஆனால் ஒரு வயது கூடின காரணத்திற்காக அந்த வாய்ப்பை இழக்கிறாள் நிருபமா. தன் மகளின் பள்ளி ப்ராஜக்ட் விஷயமாக அவள் உருவாக்கித் தரும் ஒரு கேள்வியின் மூலம் இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் அங்குள்ள பதட்டமான சூழல் காரணமாக குடியரசுத் தலைவரை கண்டவுடன் மயங்கி விழுகிறாள். இதன் மூலம் அவளது குடும்பத்தினர் உட்பட சுற்றத்தாரால் கிண்டலடிக்கப்படுகிறாள். இணையத்தில் அவளைப் பற்றிய நகைச்சுவைகள் நிறைகின்றன. கணவனும் மகளும் இவளை விட்டு அயர்லாந்து செல்கின்றனர். சோர்ந்து நிற்கும் நிருபமாவின் வாழ்க்கையில் புயலென நுழைகிறாள் அவளது கல்லூரி தோழியொருத்தி. ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் பணிபுரிந்து கொண்டு உலகத்தின் பல நாடுகளுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் அவளுக்கு ஒரு அசட்டுத்தனமான அரசாங்க குமாஸ்தாவாக நிற்கும் நிருபமாவைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது.ஏனெனில் கல்லூரி காலங்களில் அங்கு நிகழ்ந்த ஒரு போரட்டத்திற்கு தலைமை தாங்கின அளவிற்கு துணிச்சல் உள்ளவளாகவும் விளையாட்டுக்களில் பல விருதுகளையும் வாங்கின நிருபமா, இப்படி ஒரு சராசரியாக நிற்பது அவளுக்கு சங்கடமாக இருக்கிறது. தோழி ஊட்டும் தன்னம்பிக்கையின் மூலம் உத்வேகம் பெறுகிறாள் நிருபமா.

வேதிப் பொருட்கள் அல்லாது இயற்கை உரங்கள் மூலம் அவள் உருவாக்கி வைத்திருக்கும் ஆனால் தொடர்வதற்கு சோம்பியிருக்கும் சிறிய தோட்டத்திலிருந்து வரும் காய்கறியை சுவைக்கும் ஒரு தொழிலதிபர் அவரது மகளது திருமணத்திற்காக ஒரு பெரிய காய்கறி ஆர்டரை நிருபமாவிற்குத் தருகிறார். அதற்கான காய்கறிகள் முழுவதும் இயற்கையான முறையில் மாத்திரமே விளைவிக்கப்பட வேண்டும் என்கிற கடுமையான நிபந்தனையின் பேரில் அந்த ஆர்டர் கிடைக்கிறது. இத்தனை பெரிய வாய்ப்பை செயலாக்க முடியுமா என்கிற மலைப்பு நிருபமாவிற்கு இருந்தாலும் உள்ளுள் தோன்றும் உத்வேகம் காரணமாக ஒப்புக் கொள்கிறாள். தனது அக்கம் பக்கத்திலிருக்கும் வீடுகளின் மொட்டை மாடிகளை தோட்டமாக்கி அதன் மூலம் இதை சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது. அதற்கான பணிகளில் முழு உற்சாகமாக ஈடுபடுகிறாள். ஓர் அரசு நிகழ்ச்சியில் வேதிப் பொருட்கள் கலந்த உரங்களின் மூலம் பயிராகும் உணவுப் பொருட்களினால் எத்தனை கொடிய நோய்கள் சமூகத்தில் உண்டாகின்றன என்று அவள் பேசுவது அரசின் கவனத்திற்கு செல்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் மாடித் தோட்டங்களை அமைப்பதின் மூலம் நாமே இயற்கை உரங்களின் மூலம் சுத்தமான காய்கறிகளை விளைவிக்க முடியும்' என்பது  குறித்த இயக்கம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு நிருபமாவையே தலைமையேற்க செய்வதென அரசு முடிவு செய்கிறது. இதன் மூலம் அவளது புகழ் பரவுகிறது. இதன் காரணமாக இந்திய குடியரசுத்தலைவரை மீண்டும் சந்திக்க வாய்ப்பும் அவளுக்கு கிட்டுகிறது.

இம்முறை மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவள் தனது குடும்பத்தினருடன் குடியரசுத் தலைவரை சந்தித்து உரையாடுகிறாள். அவளுள் உறங்கிக் கொண்டிருந்த பெண் சக்தி மீண்டும் விழிப்பு கண்டுவிட்டது என்பதின் அடையாளமது.

***

நிருபமாகவாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் சில வருடங்களுக்குப் பிறகு திரைத்துறைக்கு திரும்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் காரணமாகவே அவரது விவாகரத்தும் குடும்பத்தை விட்டு பிரியும் சம்பவங்களும் நேர்ந்தன என்பதாக கருதப்படுகிறது. இவரது கணவரும் மலையாள நடிகருமான திலீப் தன் மகளை தன்னுடனே வைத்துக் கொண்டிருப்பதாக அறியப்படும் செய்திகளை வாசிக்கும் போது இத்திரைப்படத்திற்கும் நடிகையின் வாழ்க்கைக்குமான ஒற்றுமைகள் தற்செயலானதல்ல என்பதை உணர முடிகிறது.

திருமணத்திற்குப் பிறகு கணவன், குழந்தைகள் ஆகியவர்களின் நலனுக்காக மாத்திரமே உழைத்து சமைலறையில் அடைபட்டு தன்னுள் உறைந்திருக்கும் சக்தியை உணராத கோடிக்கணக்கான இல்லத்தரசிகளின் சித்திரம் இது. குடும்பம் என்கிற நிறுவனத்திற்காகத்தான் தன்னுடைய இறக்கைகளை வெட்டிக் கொண்டு ஒரு கூட்டுக்குள் பாசப்பிணைப்பு காரணமாக அவள் ஒடுங்கியிருக்கிறாள் என்கிற உண்மையை அறியாத குடும்ப உறுப்பினர்கள் அவளை ஏதும்அறியாத பத்தாம்பசலியாக கருதி எள்ளி நகையாடுகின்றனர். என்றாவது ஒரு நாள் அவளது சுயம் விழித்து அதற்காக செயல்பட புறப்படும் போது இளமையைக் கடந்த அவளது வயது ஒரு பெரிய முட்டுக்கட்டையாக அவள் முன் நிற்கிறது. ஆண்ட்டியாக கிழவியாக அவள் பரிகசிக்கப்படுகிறாள். சாதிப்பதற்கு வயதெல்லாம் ஒரு பெரிய தடையே அல்ல என்பதையே இத்திரைப்படம் மிகச் சிறப்பாக முன்வைக்கிறது.

பெண் அடையாளத்தை சிறப்பாக முன்வைக்கும் திரைப்படம் என்பதற்காக நாடகத்தனமான சித்தரிப்புகள் ஏதும் இத்திரைப்படத்தில் இல்லை. ஃபைலின் உள்ளே மாத இதழை ஒளித்து வைத்து வாசிக்கும் ஒரு சராசரி அரசு ஊழியராகத்தான் நிருபமா நமக்கு அறிமுகமாகிறார். கணவன் ஏற்படுத்திய விபத்திற்காக, அவன் வழக்கில் சிக்கினால் வெளிநாட்டு வாய்ப்பில் தடை ஏற்படலாம் என்பதற்காக அந்தக் குற்றத்தை தான் ஏற்றுக் கொள்ளும் அப்பாவியான ஒரு இல்லத்தரசியாகத்தான் நிற்கிறாள். இதை அவள் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைக்கும் கணவனின் தந்திரங்களும் குயுக்திகளும் ஆணாதிக்க உலகின் வழக்கமான ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்துகின்றன. கல்லூரி தோழி தரும் உத்வேகம் காரணமாக இணையத்தில் தன் மீது நிகழ்த்தப்படும் நகைச்சுவைகளை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் காட்சி சிறப்பானதொன்று. அவள் உயரப் பறக்கும் நினைக்கும் சமயத்தில் எல்லாம் மறைமுகமாக குடும்ப சென்ட்டிமென்ட்டுகளை கொண்டு வீழத்த நினைக்கிறான் அவளது கணவன்.

மறைமுகமாக இதில் உணரப்படும் பிரதேச அரசியலும் கவனிக்கத்தக்கது. கேரளத்திற்கு பெருமளவில் காய்கிற சப்ளை செய்கிற பிரதேசங்களில் தமிழ்நாடு பிரதானமானது. செயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளில் படிந்திருக்கும் வேதிப்பொருட்கள் காரணமாக கேரளச் சமூகம் பாழ்படுவதைப் பற்றி அதன் சட்டமன்றத்திலேயே அடிக்கடி விவாதம் நிகழ்ந்திருக்கிறது. நீர்ப்பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் எழும் போது, அங்கிருந்துதானே காற்கறிகள் வருகிறது, நாம் நீர் தர மறுக்கலாமா என்பது சில நியாயவாதிகளின் வாதமாக இருக்கிறது. இவை அனைத்தையும் முறியடிக்கும் விதமாக காற்கறி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக கேரளம் மாற வேண்டும் என்கிற மறைமுக பிரச்சாரத்தையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது என்பதாகவும் இதை அணுகலாம்.

2012-ல் வெளியான English Vinglish திரைப்படமும் ஏறத்தாழ 'How old are you' போன்றே தனது சக்தியையும் திறமையையும் தன்னிச்சையாக கண்டுகொள்ளும் ஒரு நடுத்தரவயது பெண்ணைப் பற்றிய திரைப்படமாகும். மஞ்சு வாரியரைப் போலவே அதில் பிரதான பாத்திரமாக நடித்திருந்த ஸ்ரீதேவி பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமண நாளன்று தன்னை விட்டுச் செல்லும் காதலனைப் புறக்கணித்து தனியாகவே தேனிலவு செல்வதன் மூலம் அயல் நாடுகளின் கலாசாரங்களின் மூலம் தன்னுடைய சுதந்திரத்தையும் அடையாளத்தையும் உணரும், கங்கனா ராவத் நடித்த 'Queen' திரைப்படமும் முக்கியமானது.

செயற்கைத்தனமாகவும் மிகைப்படுத்தலுடனும் அல்லாத பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்ட இம்மாதிரியான இயல்பான மாற்று சினிமாக்கள் பெருமளவில் தமிழிலும் உருவாகினால்தான் 'பொம்பளைன்றவ பொம்பளையா இருக்கணும், ஆடக்கூடாது' என்கிற அரைவேக்காட்டுத்தனமான வசனங்களைக் கொண்ட ஆணாதிக்க சினிமாக்கள் மறையும் சூழல் ஏற்படும். 

- உயிர்மை - அக்டோபர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 

suresh kannan

4 comments:

Sriram said...

என்னை கேட்டால் திருஷ்யம் படத்தை பல தமிழ் மசாலா (விஷால் நடித்த பாண்டிய நாடு நல்ல உதாரணம்) படத்துடன் தான் ஒப்பிட வேண்டும். சற்றும் தோய்வு இல்லாத திரைக்கதை, பாமரன் வலிமையான சக்திகளை வெல்வது இதுவே கதைக்களம். இந்த படத்தின் பல ஓட்டைகளும் மிகவும் புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டுள்ளன. என்னை கேட்டால் சற்றும் நம்பும் படியாக இல்லை. ஒரு மசாலா படத்தை கலை படம் போல் மாற்றி மக்கள் கண்ணை ஏமாற்றி இருக்கிறார்கள். உண்மையான கலை படமாக இருந்தால் தெலுகு கன்னட மக்கள் எல்லாம் இதை சீண்ட கூட மாட்டார்கள்.

Dwarak R - Aimless Arrow said...

Nice reviews. Off late, lot of good movies from malayalam industry. I am personally happy to see malayalam cinemas returning to good old days.

On recently watched, I would also recommend Bangalore Days, Ustad Hotel,

Happy to see young film makers and actors making sensible films.

Unknown said...

Hi....I am a follower of ur blog...how is ur health....I read somewhere u were ill....may Almighty bless u......happy Deepavali.......

Unknown said...

Hi....I am a follower of ur blog...how is ur health....I read somewhere u were ill....may Almighty bless u......happy Deepavali.......