Friday, July 18, 2014

சாமானிய நாயகர்களின் மரணம்


வாரம் ஒரு முறை மாத்திரமே திரைப்படம் ஒன்றைக் காண கூடிய தூர்தர்ஷன் காலக்கட்டத்தில் அதைக் காணப் போகும் பரவசத்தின் ஊடே பெயர்கள் ஓடும் போது 'சண்டைக்காட்சிகள் அமைப்பு" என்கிற வார்த்தை வருகிறதா என்பதை நண்பர்களுடன் இணைந்து கூர்மையாக கவனித்து நிச்சயித்துக் கொள்வோம். அந்த வார்த்தைதான் அந்தப் படத்தை தொடர்ந்து பார்க்கப் போகிறோமோ அல்லவா என்பதை தீர்மானிக்கும் விஷயமாக அப்போது இருந்தது. ஹீரோ என்று ஒருவன் இருந்தால் அவன் நிச்சயம் சண்டை போடத்தெரிந்தவனாகத்தான் இருந்தாக வேண்டும், அல்லாவிடில் அவன் ஹீரோவே அல்ல என்று நம்பிக் கொண்டிருந்த விடலை வயதுக் காலத்தை தாண்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு திரைப்படத்தின் காட்சி என்னை சற்று கலைத்துப் போட்டது.

அது 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் என்றுதான் நினைக்கிறேன். அதன் நாயகனான மோகன், நாயகியான பூர்ணிமா ஜெயராமிடம் இங்க் பேனாவை கடன் வாங்கி அதனுள் இருக்கும் மையையெல்லாம் ரகசியமாக தன் பேனாவில் ஊற்றிக் கொண்டு வெறும் பேனாவை திருப்பித் தருவதை வழக்கமாக வைத்திருப்பார். ஒரு முறை மாட்டிக் கொண்டவுடன் அசட்டுத்தனமாக சிரித்து மழுப்புவார். ஒரு சாமனியன் செய்யும் இந்த அற்ப செயலை  திரையில் ஓரு ஹீரோவால் செய்ய முடியுமா என்று எனக்கு அப்போது மிக ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அதுவரையில் ஹீரோக்கள் என்பவர்கள் ஒரு சாதாரணன் தன் அன்றாட வாழ்க்கையில் நிகழத்த முடியாத சாகசங்களையும் தீரச்செயல்களையும் திரையில் மிகைப்பட நிகழ்த்தி பார்வையாளனின் ஆழ்மன புனைவுலகை திருப்தி செய்வதின் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர்கள் என்பதை லேசுபாசாகவாவது அறிந்திருந்த அந்த வயதில் இப்படியொரு காட்சி, ஹீரோக்களின் மீதான பிரமைகளை உடைத்த அதிர்ச்சியையும் என்னுடைய பிரதிநிதி ஒருவனை திரையில் சந்தித்துவிட்ட திருப்தியையும் ஒருசேர அளித்தது. மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நாயகனுக்கு இயற்கை உபாதையை கழித்துக் கொள்ளக்கூடிய அவசரமான அசந்தர்ப்பங்களைக் கொண்ட காட்சி தமிழ் சினிமாவில் ஏன் ஒரு முறை கூட நிகழ்வதில்லை என்று எழுத்தாளர் சுஜாதா கிண்டலடித்து எழுதியிருந்தது நினைவிற்கு வருகிறது.


***

தமிழ் சினிமாவின் வரலாற்றில் பொதுவாக எப்போதுமே இரு பெரும் நடிகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த தற்செயலான வழக்கம் இருந்தாலும் அவர்களின் இடையே சாமானியர்களின்  பிரதிபலிப்புடனும் நாயகர்கள் இருந்து கொண்டுதான் இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் x பி.யு. சின்னப்பா காலத்தில்தான் டி.ஆர்.மகாலிங்கம் இருந்தார். எம்.ஜி.ஆர் x சிவாஜியின் கொடி பறந்து கொண்டிருந்த காலத்தில்தான் ஜெமினி கணேசன் 'காதல் மன்னன்' பட்டத்தை அநாயசமாக தட்டிச் சென்றார். கமல் x ரஜினி காலத்தில் கூட மோகன், முரளி போன்ற சாதாரண நாயகர்களும் தங்களுக்கு சாத்தியமான பகுதிகளில் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார்கள். இந்த பரிமாணம் அஜித் x விஜய் என்பதாக திசை திரும்பிய போது மெல்ல மங்கத் துவங்கியது. ஒரு திரைப்படத்தின் வணிக ரீதியான வெற்றியே அப்போதைக்கு அப்போதைய சூப்பர் ஸ்டாரை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது எனவே இந்த வரிசையில் சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம் போன்றோர்களும் இரண்டறக் கலந்தார்கள். இரண்டு மூன்று திரைப்படங்கள் தோற்றால் அவர்களின் ஸ்டார் அந்தஸ்து தடாலென தடம் புரண்டது.

இப்போது எனக்குள்ள பிரச்சினை என்னவெனில் சமகால தமிழ் சினிமாவில் சாமானியர்களின் கூறுகளை பிரதிபலித்த இடைநிலை கதாநாயகர்கள் ஏன் காணமாற் போனார்கள் என்பதுதான். இப்போது வரும் எல்லா ஹீரோக்களுமே அசகாய சூரர்களாகத்தான் இருக்கிறார்கள். கேமிராவை நோக்கி வெறித்தனமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள். அவர்கள் சுண்டுவிரலை உயர்த்தினால் கூட டாட்டா சுமோக்கள் ஆகாயத்தில் பறந்து விழுகின்றன. ஹீரோ என்பவன் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சரி  அல்லது பொறுக்கியாக இருந்தாலும் சரி, தீயசக்திகளை துரத்தி அழித்து பொதுச் சமூகத்தை காக்கும் விஷ்ணு அவதாரத்தை நிகழத்துவதில் விற்பன்னர்களாக இருக்கிறான். இடையில் காதலியுடன் டூயட் பாடும் அல்லது குத்துப்பாட்டு பாடும் அத்தியவாசிய கடமைகளையும் மறப்பதி்ல்லை. இம்மாதிரியான ஆக்ஷன் மசாலாக்கள் இங்கு திரும்பத் திரும்ப வேறு வேறு வடிவில் இறக்குமதி டிவிடி காட்சிகளின் நகல்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு விரிவான அளவில் நுட்பமாக சந்தைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் அந்த சாமானிய நாயகன் எங்கே தொலைந்து போனான்? ஏன் காணாமற் போனான்?

ஒரு சினிமா உருவாவதின் பின்னணிகளைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத அந்தக் காலக் கட்டத்தில் அந்த அசகாய சூரத்தனங்களைக் கொண்ட நாயகர்களின் மீதான பிரமிப்பையும் ஹீரோதான் நிஜமாகவே சண்டையிடுகிறான் என்று நினைத்துக் கொண்ட அறியாமையையும் புரிந்து கொள்ள முடிகிறது. எம்.ஜி.ஆர் நடித்திருந்த ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு பரபரப்பான சண்டைக்காட்சியில் அவர் தன் வாளைத் தவற விட்ட காட்சி வந்த போது அவருக்கு உதவுவதற்காக பார்வையாளர்களிலிருந்து ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னிடமிருந்த கத்தியை திரையை நோக்கி தூக்கிப்போட்டதான வரலாற்றுச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான் தமிழ் சினிமா பார்வையாளர்களின் வரலாறு. ஆனால் ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதும் சண்டைக்காட்சிகள் பெரும்பாலும் புனைவே என்பதும் இன்று ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. சினிமா படப்பிடிப்புகளை காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் அதன் உத்திகளை பார்வையாளர்களும் அறிந்திருக்கிறார்கள், அதன் போலித்தன்மைகளைப் பற்றி பொதுவில் விவாதிக்கவும் கிண்டலடிக்கவும் கூட செய்கிறார்கள்.

இன்று திரையில் ஒரு ஹீரோ நம்பமுடியாத ஒரு மிகையான சாகசத்தை நிகழ்த்தினால் பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டலுக்குப் பதிலாக சிரிப்பொலியே எதிர்வினையாக கிடைக்கிறது. எனில் ஆக்ஷன் நாயகர்களின் மீதான பிரமிப்பும் நம்பகத்தன்மையும் குறைந்திருக்கத்தானே வேண்டும்? மக்களின் அன்றாட பிரச்சினைகளைப் பற்றி பேசும் திரைப்படங்களும் அவர்களை பிரதிபலிப்பவர்களும்தானே ஒரு திரைப்படத்தின் நாயகனாக இருந்திருக்க வேண்டிய அவசியம் நிகழ்ந்திருக்க வேண்டும்? ஆனால் மாறாக இந்த ஆக்ஷன் மசாலாக்கள்தானே திரும்பத் திரும்ப உருவாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றன? இது ஒரு விசித்திரமான முரணாக உள்ளது. சாமானிய மனதுகளின் ஆழ்மனதுகளில் உறைந்துள்ள கையாலாகாததன்மை இந்த விஷ்ணு அவதாரங்களை கைவிட விரும்பவில்லையா? நமக்கு முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராட ஆகாயத்திலிருந்து குதித்து ஒரு அதிசய நாயகன் வரவேண்டும் என்று ஒரு சாமான்ய மனம் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதா?

***

இந்த சாமானிய நாயகனின் மிக கச்சிதமான உதாரணம் ஆரம்ப கால பாக்கியராஜ். ஒரு சாதாரணனின் அறியாமையையும் பாமரத்தனத்தையும் தனித்துவமான நகைச்சுவையுடன் திரையில் பிரதிபலித்தார் பாக்யராஜ். தன்னுடைய கலைவாரிசு என்று எம்.ஜி.ஆர் எப்படி இவரை அறிவித்தார் என்பது இன்னமும் கூட  அகலாததொரு ஆச்சரியம். திரையில் எம்.ஜி.ஆர் பயணமும் பாக்கியராஜின் பயணமும் நேரெதிர் திசையில் அமைந்திருந்தது. துவக்க கால திரைப்படங்களில் மிக அப்பாவித்தனத்துடன் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த பாக்யராஜ் மெல்ல மெல்ல ஒரு வழக்கமான கதாநாயகனின் சம்பிதாயங்களுக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயன்ற போது அவரது தனித்துவத்தை இழந்தார் என்று தோன்றுகிறது. மலையாள திரையுலகில் பாக்யராஜை விடவும் சிறந்த திரைக்கதையாசிரியராகவும் நடிகராகவும் இருக்கும் சீனிவாசன் பெரும்பாலும் இறுதிவரையிலும் தனது சாமானிய முகத்தை இழக்கவேயில்லை. தமிழ் திரையுலகில்தான் நடிக்க வருகிற அனைவருக்குமே சூப்பர் ஸ்டார் கனவு ஏற்பட்டு விடுகிறது. தன்னுடைய பிரத்யேக பலம் எதுவோ அதில் தொடர்ந்து சோபிக்க வேண்டும் என்று தோன்றுவதில்லை. எனவேதான் சாமானியர்களின் பிரதிநிதியாக தன் பயணத்தை துவங்குகிற நாயகர்கள் மெல்ல மெல்ல அடுத்த நிலைக்கு நகரும் ஆசையில் தன்னுடைய இடத்தை இழந்து காணாமற் போகிறார்கள்.

பொருளாதார வெற்றியின் மூலம் மாத்திரமே ஒருவரின் சாதனை அளக்கப்படும் இந்த உலகமயமாக்க காலகட்டத்தில் சாமானியனின் முகத்தை எவருமே விரும்புவதில்லையோ என்றும் கூட தோன்றுகிறது.  சமீபத்தில் 'தங்கமீன்கள்' என்றொரு திரைப்படம் வெளிவந்து தேசிய விருது கூட பெற்றது. பொருளியல் உலகில் அதன் நாயகன் ஒரு தோல்வியுற்றவன். அவனது மகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டக்கூட தந்தையை எதிர்பார்த்திருப்பவன். மகளின் அருகாமையை இழக்க விரும்பாமல் சொற்ப சம்பளத்தில் தன் ஜீவிதத்தை தொடர்கிறான். அதையும் கூட இழக்க நேரும் போது தனது மகளைப் பிரிந்து வேறோரு இடத்தில் அமைந்த பணியில் துன்புறுகிறான். இப்படியொரு சாமானியனை பெரும்பாலோனோர்க்கு பிடிக்கவேயில்லை. அவன் ஒரு கேலிச் சித்திரமாகவே தெரிந்தான். மிகையாக சித்தரிக்கப்படும் காட்சிகளை கிண்டலடித்தும் வெறுத்தும், யதார்த்ததிற்கு நெருக்கமாக காட்சிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஒரு ரசனை மாற்றத்திற்கு பயணித்திருக்கிற சமகால சினிமா பார்வையாள சமூகம், இந்தச் சமூகத்திலேயே இருக்கிற ஒரு சாமானியனை நாயகனாக பார்க்க ஏன் விரும்புவதில்லை என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு முரண்.

ஒரு காலத்தில் சூப்பர் நாயகர்களுக்கு ஏறத்தாழ இணையாக பயணித்துக் கொண்டிருந்த சாமானிய நாயகர்கள் இன்று பெரும்பாலும் காணாமற் போயிருந்தாலும் அதற்கான தடயங்களைக் கொண்ட சொற்ப அடையாளங்களாவது மீதம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்ததில் சமீபத்தில் வெளியான இரண்டு திரைப்படங்கள் கிடைத்தன. சிவகார்த்திகேயன் நடித்த 'மான்கராத்தே' மற்றும் சந்தானம் நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'  இதில் சாமானிய நாயகனுக்கு மிக கச்சிதமாகப் பொருந்தக் கூடிய ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில்தான் அவரது துவக்க காலத்திரைப்படங்களும் இருந்தன. ஆனால் வணிகசினிமா அவரையும் தனக்குள் செரித்துக் கொண்டது ஒரு துரதிர்ஷ்டம்.

மான்கராத்தே என்பதன் விளக்கமே ஏற்கெனவே வந்திருந்த ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியொன்றில் விவரித்திருந்த படி ஏதாவது சண்டையொன்று வந்தால் மான் போல் ஓடி விடுவதையே சங்கேத பாணியில் அதை ஏதோ ஒரு வித்தையைப் போல நகைச்சுவையாக குறிக்கும் வார்த்தை. ஒரு சாமான்யனுக்கு சரியாகப் பொருந்தக்கூடிய கதைக்களம். இந்த ஒரு வார்த்தைக்கேற்ப கதையை அமைத்துக் கொண்டு இத்திரைப்படத்தை மிக மிக சுவாரசியமாக உருவாக்கியிருக்கலாம்.

ஆனால் இதன் நாயகன், சண்டையிடுவதை  தவிர ஒரு சம்பிரதாய ஹீரோவுக்குரிய சகலவிதமான கல்யாண குணங்களுடன் இருக்கிறான். இதன் கதை ஏ.ஆர்.முருகதாஸாம். மனிதர் இன்னும் 'போதி தர்மர்' ஹேங் ஓவரிலிருந்து வெளியே வரவில்லை என தெரிகிறது. ஒரு சாமியாரிடமிருந்து வருங்காலத்தில் பிரசுரமாகயிருக்கும் நாளிதழ் ஒன்று கிடைக்கிறதாம். அதில் பீட்டர் என்கிற பாக்சிங் சேம்பியனுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளும், வேலையை இழந்த நாலைந்து சாஃப்ட்வேர் இளைஞர்கள் அவரை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்களாம். இதற்கு மாதம் ஆயிரக்கணக்கில் சம்பளமும் ஏஸி, பைக் என்று இன்னபிற பல வசதிகளை பீட்டருக்கு தருகிறார்களாம். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பதை விடவும் கேனத்தனமான இப்படியொரு யோசனை, ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாளுக்கு கூட தோன்றாது. இப்படியொரு அற்புதமான கதையின் பின்புலத்தில் நடனமாடுகிறது இந்த மான்கராத்தே.

இதன் ஹீரோ வடசென்னையின் பின்புலத்திலிருந்து வருவதாக அமைந்திருக்கிறது திரைக்கதை. ஆனால் வடசென்னையை அதன் கலாசார மற்றும் வரலாற்று பின்புலத்திலிருந்து யோக்கியமாக சித்தரித்த ஒரு தமிழ் திரைப்படமும் இதுவரை உருவாகவில்லை. ஷாப்பிங் மால்களிலேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கும் நவநாகரிக உடைகள் அணிந்த ஒரு ஹை-டெக் இளைஞனாகவே காட்டப்படுகிறார் இதன் நாயகன். ஏனெனில் சினிமா இலக்கணத்தின் படி பொதுப்புத்தியில் பதிந்துள்ள ஓர் அசலான வடசென்னைவாசியை அப்படியே ஹீரோவாக சித்தரித்தால் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்கள் முகஞ்சுளிக்கலாம் என்று இயக்குநர் நினைத்திருக்கலாம். இதற்கான நிரூபணம் இதன் படத்திலேயே உள்ளது. குண்டாகவும் கருப்பாகவும் ஓர் இளைஞன் லிப்டில் பெருமளவு அபானவாயுவை வெளியிடுகிறான். அதற்குப் பின்னால் வரும் சிவகார்த்திகேயனை சந்தேகமாக பார்க்கிறாள் வெள்ளைத் தோல் நாயகி. பிறகு இருவரும் வாந்தியெடுக்குமளவிற்கு ஓங்கரிக்கின்றனர். உலக அழகியாகவே இருந்தாலும் அவரின் அபானவாயு நாற்றமுடையதாகத்தான் இருக்கும்.  இது மாத்திரமல்ல நாயகனுக்கு நண்பனாக வருபவனும் கருப்பாக, அவலட்சணமாகவே ஒரு அடிமை போல சித்தரிக்கபட்டிருக்கிறான். நாயகனை அழகானவனாக காட்டும் உத்தி போல. பத்து திருக்குறள்களை மனப்பாடமாக சொல்பவனுக்கு தன் மகளை மணமுடித்து தர தயாராக இருக்கும் ஒரு தந்தையின் அற்புதமான காமெடி டிராக் வேறு.

இத்திரைப்படத்தில் குத்துச் சண்டை விளையாட்டை தவறுதலாக சித்தரித்ததாக அதன் சம்மேளனத்திலிருந்து எதிர்ப்பும் தடையுத்தரவு வழக்கும் போடப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாயின. உண்மைதான். அந்த விளையாட்டை மிக மலினமானதொரு கேளிக்கையாகவும் நகைச்சுவையாகவும்தான் இத்திரைப்படத்தில் சித்தரித்திருப்பார்கள். குத்துச்சண்டை விளையாட்டை அதன் தீவிரத்தோடு முன்வைத்த சிறந்த வணிகசினிமாவாக சில்வஸ்டர் ஸ்டாலினின் 'ராக்கி' தொடர் திரைப்படங்களைச் சொல்லலாம். சண்டையை விடவும் அது நிகழப் போவதற்கான முன்னோட்டங்களையும் கொந்தளிப்பான உணர்ச்சிகளையும் பார்வையாளனின் ஆர்வத்தை உயர்த்தும் வகையில் அற்புதமான திரைக்கதையால் உருவாக்கியிருப்பார்கள். ஆனால் மான் கராத்தேவில் சில காட்சிகளில் சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' திரைப்படத்தின் காட்சிகளை மிக மோசமாக நகலெடுத்திருக்கிறார்கள்.

'மான் கராத்தே' என்கிற தலைப்பின் நோக்கத்திலிருந்து விலகும் வரையில் பாக்ஸிங் என்றால் என்னவென்றெ தெரியாத ஹீரோ, ஏற்கெனவே சாம்பியனாக உள்ளவரை திடீரென்று உந்தப்பட்ட ஆக்ரோஷத்தின் மூலம் வெற்றி கொள்வதாக இதன் உச்சக்காட்சி அமைந்திருக்கும். இதற்கான பின்னணியும் அபத்தமானது. ஒரு சாமானிய நாயகனை எந்தவகையிலும் இத்திரைப்படம் பிரதிபலிக்கவில்லை.

***

இன்னொரு சமகால திரைப்படமான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' அதன் தலைப்பிலேயே ஒரு சாமானிய நாயகனை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதன் திரைக்கதையும் ஏறக்குறைய அவ்வாறே அமைந்திருக்கும். ராஜ்மெளலியின் தெலுங்கு திரைப்படமான 'மரியாத ராமண்ணா'வின் மறுஉருவாக்கமே வ.பு.ஆ.  ஆனால் இதன் மூலம் பஸ்டர் கீட்டனுடையது. மெளன திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் 1932-ல் வெளியான Our Hospitality  என்கிற திரைப்படத்தின் நகலே 'மரியாத ராமண்ணா'. சார்லி சாப்ளினின் அபரிதமான புகழின் வெளிச்சத்தில் மங்கிப் போன, சாப்ளினுக்கு இணையாக வைத்து போற்றப்படக் கூடிய கலைஞன் பஸ்டர் கீட்டன். ஒரு சாமானிய நாயகனின் அசலான சித்திரம் கீட்டன். தன்னுடைய உயிராபத்திலிருந்து தப்பிப்பதற்காக இத்தி்ரைப்படத்தில் கீட்டன் செய்யும் ஒவ்வொரு கோணங்கித்தனமான, புத்திசாலித்தனமான முயற்சியும் விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவை. இதன் உன்னதத்தை நகல்களில் அதுவும் இந்தியத் திரைப்படங்களில் எதிர்பார்ப்பது அதிகமானதுதான் என்றாலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்தின் திரைக்கதை அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் இருப்பது சற்று ஆசுவாசமளிக்கிறது.

குறுகிய காலத்தில் புகழ் பெற்று விட்ட சந்தானம் அடுத்த படிநிலைக்கு உயர விரும்பி அதற்கேற்ற திரைக்கதையை தேர்வு செய்தது புத்திசாலித்தனமானதுதான் என்றாலும் தன்னுடைய பாணி நையாண்டியை அவரால் பெரிதும் கைவிட முடியவில்லை. பெரும்பாலான ஹீரோக்களைப் போலவே இவரும் ஒரு அறிமுகக்காட்சியோடும் பாடலோடும்தான் தோன்றுகிறார். அதன் இறுதியிலாவது தன்னை சுயஎள்ளல் செய்து கொள்ளும் ஒரு வசனம் மூலம் அந்தக் குறையை சமன் செய்வார் என்று எதிர்பார்த்தேன். அவ்வாறு நிகழவில்லை. தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலமாகவே நாயகன் தன் மீதுள்ள ஆபத்தை எதிர்கொள்ளும் அதே திசையிலேயே திரைக்கதை பயணிக்கிறது என்றாலும் மான்கராத்தே -வைப் போலவே அதன் உச்சக்காட்சியில் தன் இயல்பிலிருந்து நழுவி தடாலென்று விழுந்து விடுகின்றது.

உயரமானதொரு மலையில் இருந்து ஆற்றில் குதித்து விடுவாள் நாயகி. மிக முரட்டுத்தனமானவர்களாகவும் வீரர்களாகவும் அதுவரை சித்தரிக்கப்படும் அவளது சகோதரர்களும் அவர்களது ஆட்களும் கூட அங்கிருந்து குதிக்க அஞ்சி கண்ணீர்விடும் போது அசமஞ்சமாக இருக்கும் ஹீரோ திடீரென்று வீரம் பெற்று ஆற்றில் குதித்து நாயகியை காப்பாற்றி விடுவான். இதன் மூலம் அத்திரைப்படத்தில்அது வரையாவது சற்று உயிர்ப்போடு இருந்த சாமானிய நாயகன் தடாலென்று இறந்து போகிறான். இந்த சூழலை பஸ்டர் கீட்டன் தன் திரைப்படத்தில் ஏற்றுக் கொள்ளும் வகையில் இயல்பாக உருவாக்கியிருப்பார்.

சாமானிய நாயகன் என்பது வேறு யாருமல்ல. நம்மில் இருந்து உருவாகிறவன்தான். சினிமாத்தனங்கள் இல்லாதவன். அசந்தர்ப்பான சூழலை எவ்வித நாயகத்தனங்களும் அல்லாமல் பெரும்பாலும் இயல்பாகவும் கோழைத்தனங்களுடன் எதிர்கொள்கிறவன். அவன் துப்பாக்கி என்கிற வஸ்துவை தன் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டான். அதை உபயோகிப்பதை கனவிலும் கூட எதிர்பாாத்திருக்க மாட்டான். எதிர்பாராதவிதமாக அவனுக்கு திடீரென்று கோடிக்கணக்கான பணம் வழியில் கிடைத்தால், சுஜாதாவின் சிறுகதையொன்றில் வருவது போல கை நடுங்க  கடன் வாங்கியாவது ஆட்டோ பிடித்து கைகள் நடுங்க அதை காவல்நிலையத்தில் ஒப்படைத்து விடுவான். அவனுக்கு பஞ்ச் டயலாக்குகள் பேசத் தெரியாது. அநியாயங்களைக் கண்டு மனம் குமுறி ரகசியமாக அழத் தெரியும். சில பல குறைகளும் அபத்தங்களும் பழமைவாத சிந்தனைகளைக் கொண்டிருந்தாலும் பொதுவாக நல்லவனாக இருப்பான். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழுமியங்களுக்கு மதிப்பளிப்பவனாக இருப்பான்.

திரைப்படத்தின் இறுதி வரையிலும் தன் இயல்பிலிருந்து மாறாத தர்க்கத்தோடு உருவாகும் சாமானிய நாயகனின் சித்திரத்தை யோசித்துப் பார்த்தால் பாக்கியராஜ்தான் மறுபடியும் நினைவுக்கு வருகிறார். 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில் தன்னைக் காதலிக்கும் மூன்று இளைஞர்களை சோதிக்க 'தான் கற்பை இழந்தவள்' என்று நாயகி பொய் சொல்லும் போது மற்றவர்கள் விலகி செல்ல அவளை அந்நிலையிலேயே ஏற்றுக் கொள்ள முன்வரும் இளைஞன் சாமானியர்களின் நாயகன் என்று கொள்ளலாமா? தான் காதலித்த பெண் திருமணமானவள் என்பதை அறிந்ததும் அவளது கணவனிடமே ஒப்படைக்கும் 'பாலக்காட்டு மாதவனை" எவ்வாறு வகைப்படுத்தலாம்? அபத்தமான சென்டிமென்ட்டுகளை பின்பற்றுவன் என்றாலும் சாமானியனால் அதைத்தானே செய்ய முடியும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி நம்முடைய சமகால திரைப்படங்களில் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான காட்சிகளையும் மனிதர்களையும் எதிர்பார்க்கும் சமகால பார்வையாளன், அதற்கு முரணாக அதே பழைய ஆக்ஷன் நாயகர்களை, காக்கும் அவதாரங்களை வழிபட்டுக் கொண்டிருப்பது விநோதமாகத்தான் இருக்கிறது. மாறாக தமிழ்த்திரையில் முன்பு உயிர்ப்புடன் இருந்த சாமானிய நாயகர்கள் மேலதிக இயல்புத்தன்மையுடன் தமிழ் சினிமாவில் மீண்டும் வலம் வருவார்களா என்பதற்கான விடை தமிழ் இயக்குநர்களின் கையில்தான் இருக்கிறது. 

(காட்சிப் பிழை, ஜூலை  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)    

suresh kannan

Thursday, July 17, 2014

சினிமாவும் ஊதிப் பெருக்கப்பட்ட மஞ்சள் பலூனும்



சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி விருது விழாவில் சரமாரியாக விருதுகளை சுண்டல் மாதிரி அள்ளி இறைத்துக் கொண்டடேயிருந்தார்கள். நானும் கூட போயிருக்கலாம் என்று தோன்றியது. பொதுவாக இம்மாதிரியான விழாக்களில் சிறந்த சினிமா, சிறந்த நடிகர் என்று விருதளிப்பதுதான் இதுபோன்ற சினிமா நிகழ்ச்சிகள் சார்ந்த மரபு. ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அந்த சானலின் தொடர்களில் நடிப்பவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், டான்ஸ் ஆடியவர்கள், பாட்டு பாடியவர்கள், என்று துவங்கி பல்வேறு தலைப்புகளில் பல நபர்களுக்கு புதிது புதிதாக நிறைய விருதுகள். அந்தக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கு கூட ஒரு விருது வழங்கியிருப்பார்கள் போல.

இந்த விருது நிகழ்ச்சியில் blowing their own trumpet என்பது போல அவர்களது நிகழ்ச்சிகளை அவர்களே புகழ்ந்து கொண்டு விருதுகள் அளித்து சானலுக்கு மைலேஜ் சேர்த்தது ஒருபுறம் இருக்கட்டும். இந்த சுயபுகழ்தல் நிகழ்ச்சிக்கு இடையிலேயும் வழக்கம் போல எக்கச்சக்க விளம்பரங்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அல்ல, ஒரு மாந்தோப்பையே விழவைப்பதுதான் இப்போதைய கார்ப்பரேட் தந்திரம்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மொத்த சிறப்பு விருந்தினர்களும் ஒன்று விருது வாங்குபவர்களாக அல்லது தருபவர்களாக அமைந்திருந்தார்கள். தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் சந்தைப்படுத்துதலின் நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பதைதான் இதன் மூலம் உணர முடிகிறது. 'இது உங்கள் சானல்' என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் பார்வையாளர்களுக்கும் அந்த தொலைக்காட்சிக்குமான ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதிலுள்ள நடிகர்களையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தங்களுக்கு அந்நியோன்யமான மனிதர்களாக பார்வையாளர்கள் உணரும்படி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாட்டுப்பாடுவது, நடனமாடுவது என்று ரியாலிட்டி ஷோக்களில் மாற்றுத் திறனாளிகள் ஏதாவது ஒரு விஷயத்தில் சற்று திறமையாக செயல்பட்டால் உடனே  இவர்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட். அதை மிக இயல்பாக வெளிப்படுத்தவிடாமல் பின்னணியில் ஒரு சோக இசையைப் போட்டு கண்கலங்கி அமர்ந்திருக்கும் நடுவர்களையும் பார்வையாளர்களையும் தேடிப் பிடித்து ஒரு க்ளோசப் போட்டு அதை ஸ்லோ மோஷன் உத்தியில் மிகையுணர்ச்சியுடன் மறுபடி மறுபடி காண்பித்து அட்டகாசமாய் டிஆர்பியில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இந்த சீரியல்கள் எனும் கொடுங்கனவுகளில் தொடர்ந்து உழல்பவர்களின் உலகம் இன்னொரு வகையான கொடுமை.  தமிழ் கூறும் நல்லுலகம் தன்னுடைய பெரும்பாலான  பொழுதுகளை உச்சுக் கொட்டியபடியே இவைகளுடன்தான் கழிக்கிறது. 'மஸோக்கிஸம்' என்கிற சொல்லுக்கான கச்சிதமான உதாரணம் இந்திய தொலைக்காட்சிகளின் பார்வையாளர்கள்தான்.

இந்தக் கட்டுரை தொலைக்காட்சி எனும் போதை மருந்தைப் பற்றியோ அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் அபத்தங்கள் பற்றியோ அல்ல. சினிமாவையே சுவாசிக்கும் தமிழகத்தைப் பற்றியது. இங்கு சினிமாவில் ஜெயிப்பவர்கள்தான் குறிப்பாக நடிகர்கள்தான் ஒரு சமூகத்தின் அசலான வெற்றியாளர்கள் என்பது போல ஒரு மாயச்சித்திரம் ஊடகங்களால் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது காந்தி பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பாரதி நினைவு நாளாக இருந்தாலும் சரி. இந்த விடுமுறை தினங்களுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமாவில் வெற்றி வெற்றவர்கள் தோன்றி ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு தங்களின் வெற்றிக் கதைகளையும், அனுபவங்களையும் தொடர்ந்து பீற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலதிகமாக தங்களின் துறைசாரா கருத்துக்களையும் உபதேசங்களையும் நீதிபதியாக அமர்ந்து தீர்ப்பெழுதுவதும் அதற்கே பிரதானமாக ஊடகங்கள் முக்கியத்துவம் தருவதும் எரிச்சலையை தருகிறது. ஒரு சமூகத்தின் அறிவுசார்ந்த அசலான பிரதிநிதிகளை வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்வதேயில்லை. பொதுமக்களுக்கும் இவர்கள் தேவைப்படவில்லை. சினிமா நடிகர்கள் மூலம் சொல்லப்படுவதுதான் அவர்களுக்கான செய்தி.


மேலே குறிப்பிட்ட விருது நிகழ்ச்சியும் ஒரு குறிப்பிட்ட நடிகரையே மையமாக கொண்டு சுற்றியது. அந்த நடிகர் அந்த சானலில் மிமிக்ரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று வணிகரீதியாக வெற்றி பெற்ற இரண்டு மூன்று திரைப்படங்களின் நாயகராக ஆகியிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் ஏதோ அவர்தான் மின்சாரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி என்கிற ரீதியில் "நீங்க இத்தனை உச்சிக்கு போயிட்டீங்க, சாதனை செஞ்சிட்டீங்க....உயரத்துக்குப் போயிட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் தொடர்ந்து பாராட்டிக் கொண்டேயிருந்தார்கள். அவரும் வரவழைக்கப்பட்ட தன்னடக்கத்துடன் "ஆமாம். இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா பயமா இருக்கு. இதை தக்க வெச்சிக்கணும். இன்னும் மேலே போகணும்" என்று கூச்சமேயில்லாமல் அந்த பாராட்டுக்களை விழுங்கிக் கொண்டேயிருந்தார். அவர் மீது எனக்கு புகார் ஏதுமில்லை. நான்கைந்து திரைப்படங்களில் தங்களின் வாரிசுகளின் முகத்தை திரும்பத்திரும்ப காண்பித்து சினிமாவில் எப்படியாவது அவர்களை திணித்து வெற்றியும் பெற்று விடும் தந்திரங்களுக்கு இடையே அது போன்ற எந்த பின்புலங்களுமில்லாமல் தன்னுடைய தனித்துவமான திறமையின் மூலமாக அவர் நடிகரானது குறித்து மகிழ்ச்சியே.

ஆனால் மற்ற துறைகளில் இயங்குபவர்களைப் போலவே தாங்களும் ஒரு சமூகத்தின் பகுதிதான் என்பதை திரைத்துறையினர் உணராமல் தாங்கள் பெரிதாக ஏதோ சாதித்து சமூகத்திற்கு பயனளித்து விட்டோம் என்பதாகவும் தங்களை சமூகத்தின் முக்கியஸ்தர்கள் என்பதாகவும் மனச்சாட்சியேயின்றி நினைத்துக் கொள்வது ஒருபுறமிருக்க இதை ஊடகங்களும் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வணிகத்தின் முக்கியமான கச்சாப்பொருளாக சினிமாவை பயன்படுத்திக் கொள்வதும் நாமும் அதில் மயங்கி நிற்பதும்தான் மிகவும் துரதிர்ஷ்டமான நிலை. என்றாலும் இந்த சினிமா மோகத்தை அந்தத் துறையில் இருந்து கொண்டே கிண்டலடித்த கலகக்கார கலைஞர்களும் இருந்துள்ளனர் என்பதுதான் சற்று ஆறுதல்.  'இந்த நடிகன்ங்க ஏண்டா பிறந்த நாளைக்கு போஸ்டரா ஒட்டி சுவத்தை நாறடிக்கறாங்க.. இவங்கதான் பொறந்துட்டாங்களாமா? அப்ப நாமள்ளாம் தேவையில்லாம பொறந்துட்டோமா?' என்று சீறிய கவுண்டமணி உட்பட என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சந்திரபாபு போன்றோர் நிஜ வாழ்க்கையிலேயே சினிமா நடிகர்களுக்கு சமூகத்தில் தரப்படும் அதீத முக்கியத்துவத்தை தத்தம் பாணியில் நையாண்டி செய்தும் விமர்சித்தும் உள்ளனர்.

நாம் ஏன் சினிமாவை, அதில் இயங்குபவர்களை அவர்களின் தகுதிக்கும் அதிகமாக புகழ்ந்தும் வியந்தும் போற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்துதான் என்னுடைய புகாரும் கவலையும். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இளைய மனங்களில், வருங்காலத்தில் தான் என்னவாக வேண்டும் என்கிற கனவுகளில் என்ன தோன்றும்? ஒரு சினிமா நடிகராக அல்லது இயக்குநராக ஆவதுதான் இச்சமூகத்தில் எல்லோராலும் கவனிக்கப்படக்கூடிய சாதனையாளர்களின் இடம் என்றுதானே? அதுதான் வெற்றியின் அடையாளம் என்பது அழுத்தமாகப் பதிந்து விடாதா?

வருங்கால தலைமுறையிடமிருந்து ஒரு சிறந்த இலக்கியவாதி வரலாம், ஒரு தொல்லியல் அறிஞர் தோன்றலாம். சிறந்த சமையல் கலைஞர் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் தனிநபர்களுக்கு அவர்களுக்குள் இயல்பாக எழும் திறமைகளையும் உருமாற்றங்களையும் கனவுகளையும் மலர விடாமல் சினிமா எனும் ராட்சச மிருகம் நசுக்கி சிதைத்து கவர்ந்து தனக்குள் செரித்துக் கொண்டிருக்கும் ஒரு சமகால பயங்கரத்தின் அபாயத்தை உணராமல் அதை எவ்வாறு இச்சமூகம் தனக்குள் அனுமதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிய எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. 'தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் கவிதை எழுதுபவரின் மீதுதான் விழ வேண்டும்' என்று ஒரு காலத்தில் புற்றீசல்களாக புறப்பட்டுக் கொண்டிருந்த கவிஞர்களை கிண்டலடித்ததைப் போலவே இன்று வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ  சினிமாவின் கனவுகளில் வாழும் நபர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இன்று எந்தவொரு இளைஞரை சந்தித்து உரையாடினாலும் அவர் வேறு ஒரு துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் கூட அவரின் கண்கள் ரகசிய பெருமூச்சுடன் சினிமாவை நோக்கித்தான் இருக்கிறது. அந்த கனவு நாற்காலியில் அமர லட்சக்கணக்கானவர்கள் முட்டி மோதுகிறார்கள். ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சமும் திறமை சார்ந்தோ அல்லது அதிர்ஷ்டம் சார்ந்தோ அந்த நாற்காலியில் தற்செயலாக அமர்ந்தவரின் மீதுதான் விழுகிறது. அது கூட தற்காலிகம்தான். நாற்காலியில் இருப்பவர் இரண்டு திரைப்படங்களில் தோற்று விட்டால் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டு வேறு ஒரு புதியவர் வந்து அமர்கிறார். ஆனால் அந்த நாற்காலியின் பின்னேயுள்ள இருளில் தோற்றுப் போன லட்சக்கணக்கானவர்கள் விரக்தியுடன் நிற்பது எவர் கண்களிலும் படவில்லை. விழுந்தாலும் பலர் அந்த குரூர நிர்வாண உண்மையை பார்க்க விரும்பாமல் என்றாவது நாற்காலியில் அமர்ந்து விடும் அதிர்ஷ்டம் கிடைத்து விடும் என்கிற கனவிலேயே வாழ விரும்புகிறார்கள்.

மஞ்சள் வெளிச்சத்தில் அமர்ந்து பெருமிதமாக உரையாடும் நபரைப் பார்த்த பரவசத்தில் அதன் பின்னுள்ள உண்மை அறியாத இன்னும் மேலும் பல புதிய நபர்கள் நாற்காலிக்காக போட்டியிட வந்து கொண்டேயிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு சமூகம் சினிமாவின் மீதுள்ள கவர்ச்சியினால் சொரணையிழந்து காயடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை வேறு எந்த வளர்ந்த நாடுகளின் தேசத்திலாவது உள்ளதா?

முன்பெல்லாம் அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் இலக்கியம் படிக்க முன்வருபவர்கள், சமூகத்தின் மையத்தில் முண்டியடித்தாவது இடம்பிடிக்க தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழியாக சினிமா இருந்தது. ஆனால் இன்று ஊடகங்கள் சினிமாவிற்கு தரும் முக்கியத்துவம் காரணமாகவும் குறுகிய காலத்திலேயே  புகழும் பணமும் கிடைக்கும் துறையாக சினிமா இருப்பதாலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படித்தவர்களும் அதில் தொடர வேண்டிய பணிகளை உதறி விட்டு சினிமாவில் தஞ்சமடையுமளவிற்கு ஏறத்தாழ இளைய தலைமுறையினரின் அனைத்து மனதுகளிலும் சினிமா என்பது நீறு பூத்த கனவாக பதிந்திருப்பதை காண முடிகிறது. இப்படி சினிமா என்பது ஒரு ராட்சத விதையாக தன் கால்களை மிக ஆழமாக இச்சமூகத்தில் ஊன்றி வளர்ந்து பிரம்மாண்ட விருட்சமாக ஆகியிருப்பது யார் காரணம்? நம்மிடமுள்ள சினிமா மோகமா அல்லது இதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களா அல்லது இரண்டுமே ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றனவா என்பது சிந்திக்கப்பட வேண்டியது.

இத்தனை பெரிய மக்கள் திரளுடைய தேசத்தில் சமகாலத்தில் நாம் எந்தெந்த துறைகளில் உலக அளவில் சாதித்திருக்கிறோம் என்று பார்த்தால் சில அபூர்வ விதிவிலக்குகளைத் தவிர பெரிதாக  ஒன்றுமேயில்லை என்கிற கசப்புதான் உண்மையில் மிஞ்சுகிறது. கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்துடன் விளங்குகிறோம் என்றாலும் அதிலுள்ள ஊழலும் முன்தீர்மானிக்கப்ட்ட நாடகங்களும் அந்தப் பெருமையை அனுபவிக்க முடியாததாக ஆக்கி விடுகிறது. சினிமா மோகம் மற்ற துறைகளின் மீதான ஆர்வத்தையும் வளர்ச்சியையும் நசுக்குவதைப் போலவே கிரிக்கெட்டும் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதரவோடு மற்ற விளையாட்டுக்களை ஒழித்து அதில்தான் வளர்கிறது. இலக்கியத்தில்,.. மருத்துவத்தில்... உலகம் பாராட்டும் படியாக ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பாவது இந்த தேசத்தில் நிகழ்ந்திருக்கிறதா? ஒரு விரல் மாத்திரம் பெரிதாக வீங்கியிருப்பது போல அதிகம் சம்பாதித்து சமூகத்தில் பொருளாதார சமநிலையின்மையை ஏற்படுத்தும் கணினித் துறையினர் உண்மையில் சுயமாக ஒன்றையும் கண்டுபிடிக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூலியாக இருப்பதிலேயே திருப்தியடைந்து விடும் அவல நிலையைத்தான் நடைமுறையில் காணமுடிகிறது.

சரி. இப்படி சினிமா மோகத்திலேயே மூழ்கிப் போயிருக்கும் ஒரு துருப்பிடித்த சமூகம் அந்தத் துறையிலாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட அளவிலாவது சாதனையை செய்திருக்கிறதா என்று பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. காலங்காலமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே ஆக்ஷன் மசாலாக்களும் சென்ட்டிமெண்ட் குப்பைகளும் வேறு வேறு வடிவில் வேறு வேறு நபர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அட என்று ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒரு பகுதியை ரசித்து வியந்தால் கூட அது வெளிநாட்டுத் திரைப்படத்தின் டிவிடியிலிருந்து உருவப்பட்டது என்பது பிற்பாடு தெரிய வருகிறது. இந்த மண் சாாந்த கலாசாரத்தின் பின்புலத்திருந்து உருவான படைப்புகளோ சுயமான திறமைகளின் உருவாக்கங்களோ ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். திரைப்படங்களை உருவாக்குவதில் உலகிலேயே அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஒரு தேசம் பல்லாண்டுகளாக ஆஸ்கர் விருது என்கிற கனவுடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருப்பது இன்னொரு பரிதாபம். படைப்பாளிகளின் நிலை ஒருபுறம் இவ்வாறு என்று பார்த்தால் ரசனை என்கிற அளவில் கற்காலத்திலேயே தேங்கிப் போயிருக்கும் பார்வையாள சமூகமும் இவ்வகையான அரைவேக்காட்டு குப்பைகளுக்கு ஆதரவளித்து முதலாளிகள் உருவாக்கும் சந்தைக் கலாச்சாரத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

சினிமா என்பது நம்முடைய பொழுதுபோக்கு நேரத்து கேளிக்கையின் ஒரு பகுதி. அவ்வளவுதான். அதில் காக்கும் அவதாரங்களாக சித்தரிக்கப்படுபவர்கள் நிஜத்திலும் நம்மை காக்க முன்வருவார்கள் என்றெண்ணி அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முட்டாள்தனத்தை நாம் நிறுத்திக் கொள்வது நல்லது. சினிமாவைத் தாண்டியும் உலகின் பல அறிவுசார் விஷயங்களும் சாதனைகளும் நம்மால் அறியப்படக்கூடாமல் இருக்கின்றன. சினிமாவையும் அது தொடர்பான நபர்களையும் பளபளப்பான கனவுகளுடன் முன்நிறுத்தும் ஊடகங்களை ஓரளவில் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்களின் வெளிச்சத்தில் பூதாகரமாய் வளர்ந்து நிற்கும் சினிமா என்னும் அந்த மஞ்சள் பலூனை உடைக்க வேண்டிய நேரம் இது. இன்னமும் சினிமாதான் உலகம் என்று கிணற்றுத் தவளையாய் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் எல்லா விதத்திலும் நம்மை வேகமாக கடந்து போகும் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பாமரர்களின் தீவுப்பிரதேசமாய் நாம் ஆகி விடுவோம். 

- உயிர்மை - ஜூலை 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 
suresh kannan

Wednesday, July 16, 2014

Last Vegas - English - இலக்கிய ஆளுமைகளின் அட்டகாசங்கள் நிறைந்த படம்



Last Vegas திரைப்படத்தை நான் பார்க்க தேர்ந்தெடுத்ததற்கு நான் ஒரு காலத்தில் பார்த்து வியந்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் அதில் நடித்திருந்ததுதான் காரணம்.

மைக்கேல் டக்ளஸ், ராபர்ட் டி நீரோ, மார்கன் ப்ரிமேன். பொதுவாக கலைத்துறையில் இயங்குபவர்கள் தங்களின் புகழ் உச்சத்தில் இருக்கும் போதே அதிலிருந்து விலகி விடுவது நல்லது. எல்லாத்துறைக்குமே இது பொருந்தும். 'இல்லையப்பா, நான் இன்னும் அத்தனை சேர்த்து விடவில்லை, இன்னமும் ஓடினால்தான் குடும்பத்திற்கான எரிபொருள்' என்கிற நிலையில் இருப்பவர்கள் இதில் விதிவிலக்கு.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் உதாரணத்திற்கு நாம் ஒரு காலத்தில் வியந்து ரசித்துப் பாராட்டின ஒரு பாடகர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்கிறார், தமக்கு பிடித்த இசையை ரசித்துக் கொண்டு சமகால கலைஞர்களை கவனித்துக் கொண்டு வீட்டில் அக்கடா என்று இருக்கலாம் அல்லவா? அப்படி இருக்க மாட்டார்கள். ஒருகாலத்தில் தமது கழுத்தில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்த மாலைகளின் குறுகுறுப்புகள் அவர்களை தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும் போல. மஞ்சள் வெளிச்சத்தின் ஓரத்திலாவது நனைந்து விட்டுப் போவோமே என்று சமகால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், விருது மேடைகளில் வந்து தாம் பாடினதிலேயே புகழ் பெற்ற பாடலை சிரமப்பட்டு பாடுவார்கள்.

ஆஸ்துமா பிரச்சினையும் உள்ளவருக்கு தொண்டையும் கட்டிக் கொண்டது போன குரலில் ஸ்ருதியிலும் சேராமல் அவர் இழுத்து இழுத்து பாடுவதைக் கேட்கும் ஒரு கொடுமை இருக்கிறதே...அந்தப் பாடலின் மூலம் பாடகரின் மற்றும் பாடலின் மீது நமக்கு இருந்த பிரமிப்புகளின் பிம்பங்கள் எல்லாம் அத்தனையும் ஒரு நொடியில் உடைந்து போகும். அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் அந்த மேடையில் இருக்கும் எவரும் இதை சுட்டிக் காட்ட மாட்டார்கள். அவரிடம் இருக்கும் மரியாதை காரணமாகவும் டிஆர்பி மைலேஜ் காரணமாகவும் அந்தச் சபையே கைதட்டி 'சூப்பர் சார்.. எப்படி உங்க குரல் இன்னும் அப்படியே இருக்கு'?, என்று உசுப்பேற்றி விட்டு காலில் விழுந்து போலியாக ஆசிர்வாதம் வாங்கி பாடகரையே உள்ளுக்குள் பெருமையாக நம்ப வைத்து விடுவார்கள். அவர் இன்னொரு மேடையை, சானலைத் தேடி ஓடுவார். ஆனால் அவரின் உண்மையான ரசிகர்கள் உள்ளுறாவது இதை நிச்சயம் வெறுப்பார்கள் என்கிற உண்மை வெளியில் வரவே வராது.

இதற்குப் பொருள் வயதான கலைஞர்கள் எல்லாம் வெளியிலேயே வரக்கூடாது, தங்கள் திறமைகளை மறுபடியும் நிரூபிக்கக்கூடாது என்பதி்ல்லை. தங்களின் சாதனைகளின் பிம்பங்களை அழிக்கும் வேலையை அதில் கீறல் போடும் வேலையை அவர்களே செய்யக்கூடாது என்கிற ஆதங்கம்தான் முக்கிய காரணம். தமிழ் சினிமாவிலும் சிவாஜி கணேசன் என்ற மிகச் சிறந்த நடிகர் இருந்தார். விமர்சகர்கள் அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களை அடுக்கினாலும் அவர் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கலையாளுமை என்பதை மறுபேச்சு இல்லாமல் மனப்பூர்வமாக அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ஒரு காலக்கட்டதிற்குப் பின் என்ன ஆயிற்று? கோட்சூட் கூலிங்கிளாஸ் மாட்டிக் கொண்டு தன்னுடைய மகள் வயதுள்ள நடிகைகளிடமெல்லாம் டூயட் பாடிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டே சண்டை போட்டு ரசிகர்களை அவர் நெளிய வைத்தார். அது தொடர்புள்ள சினிமாக்களை, காட்சிகளை இப்போது பார்த்தால் மகா காமெடியாக இருக்கிறது. தனது இறுதிக் காலத்தில் கூட திரைப்படங்களில் நடிக்கத்தான் செய்தார். சமகால இயக்குநர்கள் என்ன செய்தார்கள்.. அவரை ஒரு செட் ப்ராப்பர்டி போலவே அமர வைத்தார்கள். அவர் பிரேமில் இருந்தால் போதும். அவரது முந்தைய படத்தின் பிரபலமான காட்சியை நினைவுகூரும் வகையில் அந்தத் திரைப்படத்திற்கு தொடர்பேயில்லாமல் யாராவது ஏதாவது ஒரு வசனம் சொல்வார்கள். நடிகரும் மீசையை முறுக்கிக் கொண்டே சிரித்துக் கொள்வார். சுற்றியுள்ளவர்களும் கெக்கே கெக்கே என்று சிரிப்பார்கள். கொடுமையாகவும் காமெடியாகவும் இருக்கும். இதிலிருந்து முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற அபூர்வமானவைதான் சில விதிவிலக்குகளாக இருந்தன.

()

Last Vegas -லும் அப்படித்தான். ஒரு காலத்தில் மாத்திரமல்ல சமீப படங்களிலும் கூட வியந்து பிரமித்த நடிகர்கள் இதில் காலி பெருங்காய டப்பாக்கள் போல லூட்டியடித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் தமிழ் சினிமாக்கள் போல் அத்தனை மோசமல்ல என்பதுதான் சிறிய ஆறுதல்.

ஏதோவொரு தமிழ் இலக்கிய வம்புக் கட்டுரையை வாசித்த கையோடு தற்செயலாக இத்திரைப்படத்தைப் பார்த்ததினால் இதில் வரும் பாத்திரங்களுக்கு தமிழ் இலக்கியத்தில் பிரபலமானவர்களை பொருத்திப் பார்க்கும் விபரீதமான எண்ணம் தோன்றியது. நிச்சயம் அதிகப்பிரசங்கித்தனம்தான். தொடர்புள்ளவர்களும் இலக்கிய வாசகர்களும் மன்னிக்க வேண்டும். நகைச்சுவை என்று கருதி என்னை விட்டுவிட்டு ... கொஞ்சம் ஜாலியா படிங்க பாஸ்....

ஏறத்தாழ அறுபது வயதை நெருங்கும் பிரமச்சாரியான மைக்கேல் டக்ளஸ் அந்திமக்காலத்தில் ஓர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். (வேறு வழியேயில்லை, சாருதான் இதற்கு நினைவிற்கு வந்தார்). தமது பால்ய கால நண்பர்களான ராபர்ட் டி நீரோ, மார்கன் ப்ரிமேன், கெவின் க்ளெயின் ஆகியோரை அழைத்து இந்த விபரீத செய்தியை சொல்கிறார். அவரவர்களுக்கான வாழ்க்கையின் உடல் உபாதைகளோடும் சலிப்புகளோடும் லெளகீக கூண்டுகளிலும் இருக்கும் அவர்கள் "ஏண்டா பாவி இப்படிச் செய்யறே? சரி ஒழிஞ்சு போ. எஞ்ஞாய்... அப்படியே எங்களுக்கும் லாஸ் வேகஸில்  பாச்சுலர் பார்ட்டி கொடு.. நாமளும் மீட் பண்ணி நாளாச்சு" என்கின்றனர்.

இதில் ராபர்ட் டி நீரோ மாத்திரம் வர முரண்டு பிடிக்கிறார். ஏனெனில் அவருக்கும் டக்ளஸூக்கும் ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து ரகசியமாக ஓடிக் கொண்டிருப்பது திரைக்கதையில் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படுகிறது. அதாவது சிறிய வயதிலிருந்து இரண்டு பேருமே ஒரே பொண்ணை லவ்வுகின்றனர். பெண்ணுக்கும் குழப்பம். திருமண வயது சமயத்தில் அவளிடம் இரண்டு பேருமே சொல்லி விடுகின்றனர். "தோ.. பாரும்மா...உனக்கு யாரைப் பிடிக்குதோ, அவனைத் தேர்ந்தெடு. மற்றவர் பிரச்சினையின்றி விலகி விடுவோம்" பெண் ரகசியமாக சென்று டக்ளஸிடம் ஆலோசனை கேட்க அவரோ பெருந்தன்மையாக ராபர்ட்டிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். இந்த விஷயம் ராபாட்டிற்கு தெரியாது. ஆனால் தனது மனைவியின் மரணத்திற்கு டக்ளஸ் வரவில்லை என்பதுதான் அவருடைய தற்போதைய புகார். என்ன இருந்தாலும் அவரும் மனைவியின் முன்னாள் காதலன்தானே?.... (இந்த ராபர்ட் பாத்திரத்திற்கும் வேறு வழியேயில்லை..ஜெ..தான் மிகப் பொருத்தமானவர் என்று தோன்றியது. சாரு என்றால் அதன் எதிர்பாத்திரத்திற்கு ஜெ.. தானே.. எப்படி Casting)

ஏற்கெனவே ஒரு முறை மாரடைப்பு வந்ததன் காரணமாக தன்னுடைய மகனின் அதீக அன்பிலும் கண்காணிப்பிலும் வாழ்பவர் மார்கன் ப்ரிமேன். "அப்பா.. இங்க போகாத.. அங்க போகாத.. என்று அன்புத் தொந்தரவுகளை தன் பேரப் பிள்ளையை கொஞ்சுவதின் மூலம் கடந்து வருபவர். மகனுக்குத் தெரியாமல் லாஸ் வேகஸுற்கு செல்ல முடியாது என்பதால் கோயில் விழாவிற்கு சென்று வருகிறேன் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டு சன்னல் வழியாக குதித்து கிளம்புகிறார். (இதில் குதித்து என்பதை சன்னல் தாண்டி குதித்து என்றும் சந்தோஷத்தில் குதித்து என்றும் இருவழியில் சிலேடையாக புரிந்து கொள்ளலாம் - ஹூம்...இதையும் நானேதான் விளக்க வேண்டியிருக்கு). இந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமானவராக நாஞ்சில் நாடன் மிக கச்சிதமானவராக இருப்பார் என தோன்றிற்று. ஜெயமோகனின் நண்பர் என்பதற்காக மாத்திரமல்ல. நாஞ்சில் எழுத்தாளர்தான் என்றாலும் கலகங்களில் நம்பிக்கையில்லாதவர். குடும்பம் எனும் அமைப்பிற்கு முக்கியத்துவம் தருபவர். பயணம் செய்வதில் விருப்பமுள்ளவர். மார்கன் பிறகு வரும் காட்சிகளில் செய்பவதைப் போலவே உற்சாகமான சமயங்களில் தாறுமாறாக தண்ணியடிக்க தயங்காதவர் என்பதால் என்பதால் இந்த யூகம்.

நான்காவது ஆசாமி கெவின் க்ளெயின். இந்தப் பாத்திரத்திற்கு எனக்குத் தோன்றியது சுரா. முந்தையவர்களைப் போல எனக்கு இதற்கு சட்டென்று குயுக்தியாக விளக்கம் தர தோன்றவில்லை என்றாலும் இத்திரைப்படத்தில் இவர் வெள்ளைத் தாடியுடன் வந்ததும் சுராவின் ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெள்ளைத் தாடியுடன் பார்த்ததும் கூட இப்படியொரு வில்லங்கமான தொடர்பிற்கு காரணமாக இருக்கலாம். இவர் லாஸ் வேகஸ் செல்வதை இவரது மனைவியே உற்சாகமாக வழியனுப்பி வைக்கிறார்.. அதுவும் எப்படி தெரியுமா? ஒரு வயாகரா மாத்திரையுடனும் ஆணுறையுடனும்... "இதோ பாரு புருஷா.. என்னமோ ரொம்ப வருஷமா...உன் மூஞ்சிலே ஒரு சுரத்தேயில்ல...எப்பவும் இஞ்சி தின்னா மாதிரியே இருக்கே. என்னமோ இந்த டிராவல் பத்தி பிளான் பண்ணவுடனேதான் உன் மூஞ்சில ஒரு பல்பு வெளிச்சம் தெரியது. உன் கிட்ட என்ன பிரச்சினைன்னு தெரியல. இருந்தாலும் போ.. சந்தோஷமா இருந்துட்டு எல்லாப் பிரச்சினையும் அங்கயே தூக்கிப் போட்டுட்டு வா..." என்கிறார்.

'பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.." என்று ஜனகராஜ் போல் குதிப்பது மாதிரி 'பொண்டாட்டியே ஊருக்குப் போகச் சொல்லிட்டா" என்று இவர் குதிப்பது காமெடி. திரைப்படமெங்கும் தன் பாக்கெட்டில் இருக்கும் காண்டமை தட்டிக் கொண்டே பெண்களை ஜொள்ளுகிறார். ( சுரா குறித்த ஏதோவொரு வம்புக்கட்டுரையில் அவர் திரைப்பட போஸ்டரில் நடிகையொருவரை வேடிக்கை பார்த்திருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு குதர்க்கமாக எழுதிய விமர்சனம் ஒன்றை படித்துத் தொலைத்ததும் இந்தப் பாத்திரத்திற்கு அவரை நினைவு கூர காரணமாக இருந்திருக்கலாம்.) மாத்திரமல்ல... திரைப்படத்தில் பின்பு செக்ஸ் பற்றி வரும் ஒரு உரையாடலில் 'நீங்க கடைசியா எப்ப செக்ஸ் வெச்சுக்கிட்டீங்க.. என்று ஒரு ஹாலிவுட் ஆண்ட்டி கேட்கும் போது 'ஞாபகம் இல்ல' என்று சொல்லி சிரிக்கிறார்.

திரைப்படம் முடியும் தறுவாயில் ஆணுறையை சிறப்பாக பயன்படுத்த இவருக்கான ஒரு வாய்ப்பும் லட்டு மாதிரி மாட்டுகிறது. இருந்தாலும் தன்னை இத்தனை அன்பாக வழியனுப்பி வைத்த மனைவியின் ஞாபகம் வர அந்த வாய்ப்பை மிக நல்லவராக மறுத்துவிடுகிறார். மனம் போன வழியில் நனவோடை உத்தியில் அப்படியே எழுதிச் செல்வது ஒருவகை. ஆனால் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையையும் பிரக்ஞையுடன் செதுக்கி செதுக்கி எழுதுவது ஒருவகை. இரண்டாவது வகைக்கு சுரா பிரசித்தம். தக்க சமயத்தில் தன்னுடைய பிரக்ஞையை கச்சிதமாக உணர்ந்த பாத்திரம் என்பதால் இவர்தான் அதற்கு பொருத்தம் என தோன்றியது.

டக்ளஸூம் ராபர்ட்டும் அவ்வப்போது வெளிப்படையாகவே முறைத்துக் கொண்டாலும் நால்வரும் பொதுவாக உற்சாகமாகவே பாச்சுலர் பாாட்டிக்கு லாஸ் வேகஸூக்கு கிளம்புகிறார்கள். அங்குதான் மேற்பத்தியில் குறிப்பிட்ட ஹாலிவுட் ஆண்ட்டி அறிமுகமாகிறார். இனிமையான பாடகி. உற்சாகி. நால்வருக்குமே அவளைப் பிடித்துப் போகிறது. ஆனால் அந்த ஆண்ட்டிக்கோ திருமண மாப்பிள்ளையான டக்ளஸை அதிகமாகவே பிடித்துப் போகிறது. ஆனால் திரைக்கதையாசிரியரின் திறமை இங்கேதான் உச்சத்தில் பீய்ச்சியடிக்கிறது. மனைவியை இழந்த ராபர்ட்டிற்கும் அந்த ஆண்ட்டியை பிடித்திருக்கிறது. சிறுவயதுகளில் ஒரு பெண்ணுக்காக மோதின ஆட்டம் கிழவயதில் இன்னொரு ஆண்ட்டியிடம் வந்து தொடரும் போதும்தான் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்று விஜய் சொன்ன மிக அரிய தத்துவம் உண்மை என்று தோன்றுவது இம்மாதிரியான சமயங்களில்தான்.

டக்ளஸ் ஆண்ட்டியை லவ்வும் விஷயம் ராபர்ட்டிற்கு தெரிய வருகிறது. முன்னர் டக்ளஸ் செய்த தியாகத்திற்கு பரிகாரம் செய்ய அவருக்கொரு நல்ல வாய்ப்பு. எனவே.. 'இதோ பார்.. டக்ளஸ்.உன்னுடைய மகளின் வயதுடைய ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்ததே ரொம்ப தப்பு. அப்புறம் அவஸ்தைப்படுவே.. அது மாத்திரமல்ல... உனக்கு உண்மையாகவே யார் மீது அன்பிருக்கிறது என்று பார். யாரின் அருகாமையில் நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாய் என்று பார்" என்று உபதேசிக்கிறார். (இப்படியாக இந்து ஞானவழி மரபு உபதேசத்தை சாருவிற்கு ஜெ செய்வது பொருத்தமாகத்தானே இருக்கும்). பிறகென்ன.. புத்தி வந்த சாரு.. மன்னிக்க.. டக்ளஸ் தன் திருமணத்தை ரத்து செய்து தன் மனதுக்கு பிடித்த ஆண்ட்டியுடன் வாழ்வைத் தொடர முடிவு செய்ய ... நண்பர்கள் நால்வரும் மீண்ட மகிழ்ச்சியுடன் அவரவர்களின் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றனர். சுபம்.

சற்று வேலை வெட்டியில்லாத நேரத்தில் நான் எழுதின பாத்திர திணிப்புகளையெல்லாம் உதறித் தள்ளி விட்டு இந்த ஜாலியான திரைப்படத்தை ஜாலியான மனநிலையுடன் கண்டு களிக்கலாம். அப்படியொன்று மோசமான திரைப்படமொன்றுமல்ல.


suresh kannan

Tuesday, July 15, 2014

Daisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்



இத்திரைப்படத்தினைப் பற்றின எவ்வித அறிமுகமும் இல்லாமல் இரவில் பார்க்கத் துவங்கி தொடரும் மனஅவஸ்தையை தாங்க முடியாமல் அணைத்து விட்டு மஸோக்கிஸ மனதின் உந்துதலில் மறுபடியும் விடியற்காலையில் எழுந்து பார்த்து முடித்தேன்.

அன்னா ஒரு சிறந்த நடிகையாகி விடும் பேரராவலில் இருப்பவள். அதற்கான உண்மையான தேடலும் உழைப்பும் கொண்டவள். நண்பனால் கற்பழிக்கப்பட்டு குழந்தையொன்று பிறக்க குடும்பத்தாராலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வறுமையான single mom படும் அத்தனை அவஸ்தைகளையும் படுகிறார். அவளது குழந்தையான டெய்சி சில சொற்பமான அற்புத கணங்களைத் தவிர மற்ற நேரம் முழுக்க அழுது கொண்டு வீறிட்டுக் கொண்டும் இருக்கிறது. இதனால் அவள் நடிக்க வாய்ப்பு தேடும் இடங்களிலெல்லாம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள். 'நான் நடிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டால்தான் பணம் கிடைக்கும். அப்போதுதான் உனக்கு பால் வாங்க முடியும்' என்று குழந்தையிடம் அன்பாகவும் நயமாகவும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் அதுவோ நெருக்கடியான நேரங்களில் அழுது உயிரை வாங்கி அவளை அவஸ்தைக்குள்ளாக்கி சாவகாசமான நேரங்களில் 'ஙே' என்று அபூர்வமாக சிரிக்கிறது.

தொடரும் குழந்தையின் அழுகையும் சப்தமும் அவளை மனநெருக்கடியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. அவளால் இரண்டு நிமிடங்கள் கூட நிம்மதியாக தூங்க முடிவதில்லை. நடிக்கும் வாய்ப்பிற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த நெருக்கடி மனநிலை தரும் உச்சத்தில்தான் அவள் அந்த முடிவை எடுக்கிறாள்.

அதன் பிறகும் அவளால் திரை வாய்ப்பை பெற முடிவதில்லை. அதிலுள்ள பலரும் அவளை தங்களின் பாலியல் விழைவுகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்கிற பேதமில்லை என்பதுதான் அதிர்ச்சியே. வேறு வழியின்றி porn படங்களில் நடிக்கிறாள். பாலியல் தொழிலாளியாகிறாள். கடைசியாக அவள் எதிர்பார்க்கும் திரை வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்படிப்பில் அவள் என்ன செய்கிறாள் என்பதை டிவிடி பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

()

2007-ல் வெளியாகியிருக்கும் இந்த டென்மார்க் திரைப்படத்தை Simon Staho என்பவர் அற்புதமாக, இயக்கியிருக்கிறார். அன்னாவின் மனநெருக்கடிகளை அகச்சிக்கல்களை பார்வையாளனும் மிக நெருக்கமாக உணர முடிகிறது. படத்தின் ஒரேயொரு பிரதான பாத்திரமானஅன்னாவாக Roomi Rapace என்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான சட்டகங்களில் இவளது முகம் அண்மைக் கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உரையாடுவது நல்ல உத்தி. படப்பிடிப்புத் தளங்களில் நிகழும் ஒத்திகைகளும் அனனாவின் அப்போதைய வாழ்க்கை துயரங்களும் ஒன்றொடு ஒன்ற இணைந்து பொருந்திப் போவது செயற்கையானதாக இருந்தாலும் தற்செயலானது என்கிற நோக்கில் திரைக்கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

ஏறத்தாழ படத்தின் முதல் 40 நிமிடங்களை குழந்தையின் தொடர்ச்சியான அழுகையே ஆக்ரமிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அன்னா எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போகும் போது அவள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சிக்கலை பார்வையாளனும் அடைகிறான். மழலை, புன்னகை, தாய்மை போன்றவை புதினப்படுத்தப்பட்ட விழுமியங்களாக பெண்களின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் நடைமுறையில் ஒரு பிடிவாதமான குழந்தையை வளர்க்க நேரும் அனைத்து தாய்களும் அன்னா எதிர்கொள்ளும் அதே சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று தோன்றுகிறது. வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர அந்தக் குழந்தையை வெறுக்கும் கணங்களும் நேரக்கூடும். கலவியின்பத்தை இருபாலரும் அனுபவிக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ளும் உடற்கூற்றையும் வளர்ப்பதற்கான பொறுமையையும் பொறுப்பையும் பெண்களுக்கு மட்டும் அளித்தது இயற்கையின் வரமா அல்லது சாபமா?

அன்னா அந்த அதிர்ச்சியான முடிவை எடுக்கும் போது ஏறத்தாழ பார்வையாளர்களும் அந்த மனநிலைக்கு இணங்க நெருங்கி வருவது அற்புதமான திரையாக்கத்திற்கு உதாரணம். குடும்பம் எனும் அமைப்பு கீழை தேசங்களில் ஏறத்தாழ தொடரும் போது மேற்குலகில் single parent குடும்பத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு இத்திரைப்படம் உதாரணமானதாக இருக்கிறது. ஒரு நபரின் அகச்சிக்கல்களை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய திரைப்படைப்பாளிகளே அன்னாவை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் போது பாலியல் தொழிலை நடத்தும் ஒரு திருநங்கை நபர் அன்னாவிற்கு ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. அவளுடான உறவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வக்கிரங்கள், பொதுச் சமூகத்தில் நாகரிக கனவான்களாக உலவும் நபர்கள் அந்தரங்கமான தருணங்களில் எத்துணை விகார எண்ணங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

தம்முடைய பாவச் செயலுக்காக குற்றவுணர்வு கொள்ளும் அன்னா, அக உலகில் குழந்தையுடன் அவள் சிறுமியாகும் வரையும் கூட  தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறாள். அதுவும் அவளை குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கிறது. இந்த உரையாடலின் மூலம்தான் தன்னுடைய துயரங்களை அவளால் கடக்க முடிகிறது. பாலியல் தொழிலாளியாகும் போது தனக்கொரு முகமூடிப் பெயர் தேவைப்படும் போது 'Daisy Diamond' என்கிற பெயரை தேர்வு செய்வதின் மூலம் மகளின் மீது அவளுக்குள்ள நேசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தையின் அழுகை அல்ல, கலைத்துறையில் அவள் எதிர்கொள்ளும் தொடர் நிராகரிப்பும் கசப்பும் கூட அவளுடைய விபரீதமான முடிவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.

பாலியல் தொடர்பான நம்முடைய விகார எண்ணங்களுக்கு வடிகாலாக அமையும் திரை நடிகைகளுக்கும், பாலுறவுக் காட்சிகளின் வீடியோக்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் பின்னால் எத்தனை கசப்புகளும் துயரங்களும் ஒளிந்திருக்கின்றன என்கிற நிர்வாண உண்மையை அறிய வேதனையாய்த்தான் இருக்கிறது.

suresh kannan

Monday, July 14, 2014

2 States - Hindi - கலாசார முரண்களோடு ஒரு காதல்



காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல இணையத்தில் மின்னூல்களை அலைந்து தேடித் தேடி சேர்த்த காலம் ஒன்றுண்டு. கிட்டத்தட்ட 10 ஜிபிக்களை கடந்தவுடன் ஆவேசம் மட்டுப்பட்டு இப்போது  'Shakeela's autobiography - Translated in English- free download' என்ற லிங்க் கண்ணில் பட்டால்கூட 'ச்சே.. போ.." என்று சோம்பேறி்த்தனமாக இருக்கிறது. இப்படி ஆர்வமாய் தரவிறக்கம் செய்பவர்கள் அதில் எத்தனை நூல்களை வாசித்து முடிக்கிறார்கள் என்று கேட்கப்படும் போது பெரும்பாலோனோர்களைப் போல நானும் ஹிஹி என்றுதான் அசடு வழிவேன். என்றாலும் இப்படி இறக்கியதில் முழுதாய் வாசித்து முடித்த துவக்க கால  நூல்களில் ஒன்று சேத்தன் பகத்தின் '2 states'. அலுவலகத்து லஞ்ச் பிரேக்கில் வாசிக்க ஆரம்பித்து நேரம் போவது கூட தெரியாமல் திருட்டுத்தனமாக தொடர்ந்து வேறுவழியில்லாமல் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய சமயத்தில் பென்டிரைவ்வில் நகலெடுத்து வந்தவுடன் சாப்பிட்ட கையோடு வாசிப்பை தொடர்ந்தாலும் நள்ளிரவானாலும் முடிக்குமளவிற்கு பரபர சுவாரசிமாய் இருந்தது அந்த நாவல். ஏறத்தாழ நூலாசிரியரின் சுயவரலாறாய் இருந்த அது திரைப்படமாய் உருவாகப் போகிறது என்ற செய்தியைக் கேட்ட போது நிறைய சந்தோஷமாயும் பயமாயும் இருந்தது. பழைய மில்ஸ் அண்ட் பூன்களின் நவீன வடிவம்தான் சேத்தன் பகத் என்றாலும் நாம் வாசித்திருந்த நாவல் படமாகப் போகிறது என்றவுடனே ஒரு வாசகனுக்கு இயல்பாய் தோன்றும் எதிர்பார்ப்புகள் எனக்கும் தோன்றின.

இப்போதுதான் அந்தத் திரைப்படத்தை பார்க்கும் எண்ணமும் வாய்ப்பும் ஏற்பட்டது. நாவலில் இருந்த இளமையும் துள்ளலும் மகிழ்ச்சியும் சுவாரசியமும் பரபரவும் திரைப்படத்தில் பெரிதும் காணாதது சோகம்தான்.  சேத்தன் நாவலின் வசனங்களில் இருந்த பல சுவாரசியமான குறும்புத்தனமான ஒன்லைனர்களைக் கூட படத்தில் காணமுடியவில்லை. குறிப்பாக சென்னையில் அவர் வந்து இறங்கும் அத்தியாயத்தின் விவரணைகள் சுவையாக இருக்கும். ஆனால் ஏதோ கடமையேயென்று இயக்குநர் உருவாக்கியிருந்தது போன்றதொரு சலிப்பு. ஷாரூக்கான்+பிரியங்கா சோப்ரா+விஷால் பரத்வாஜ் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகவிருந்ததாக கூட ஒரு திட்டம் முன்பிருந்ததாம். செய்தி படித்தேன். அது சாத்தியமாகியிருந்தால் இத்திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியிருக்கும் என்பது என் அனுமானம். ஏனெனில் இத்திரைப்படத்தின் துறுதுறு நாயகன் பாத்திரத்திற்கு ஷாரூக்கான் மிக பொருத்தமானவர். போலவே பிரியங்கா சோப்ராவும்.

இதன் நாயகன் அர்ஜூன் கபூர் நம்மூர் விமலைப் போலவே பெரும்பாலான தருணங்களுக்கு ஒரே முகபாவத்தை தந்திருக்கிறார். ஷாரூக்காக இருந்திருந்தால் ஒரு ரகளையே செய்திருப்பார். அவருடைய சென்னை எக்ஸ்பிரஸூம் ஏறத்தாழ இவ்வகை திரைக்கதைதான் போல. இன்னமும் பார்க்கவில்லை. 1999-லேயே வந்துவிட்ட வசந்த்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைக்கதையின் சாயலையும் இந்த நாவல் கொண்டுள்ளது. பார்த்தவுடனே காதல் கொள்ளும்படி அலியா பட் அத்தனை அழகாகத்தான் உள்ளார். ஆனால் சென்னைப் பெண் என்கிற வகையில் அவரது தோற்றமும் உடல்மொழியும் ஏற்க முடியாத வகையில் பொருத்தமில்லா ஆடம்பரமாக உள்ளது. நாயகனுடன் பத்து விநாடிக்கொரு முறை பச்பச்கென்று இவர் முத்தமிட்டுக் கொள்வது எரிச்சலாகவும் (பொறாமையாகவும்) இருக்கிறது. முத்தத்திற்கென்று ஒரு காத்திருத்தலும் மதிப்பும் வேண்டாமா?

கக்கூஸிற்கும் ஏசி போட்டது போல படத்தின் அனைத்துக் காட்சிகளின் பின்புலமும் ஒளிப்பதிவும் பேஷன்டிவி விளம்பரம் மாதிரி பணக்காரத்தனமாகவே இருந்தது சலிப்பை ஏற்படுத்தியது. ஐஐஎம்,அகமதாபாத்தின் ஹாஸ்டல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் இருக்குமா என்ன? தாம் காதலிக்கும் மாணவியுடன் விரும்பும் போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்ளும் தனியறை வாய்ப்பெல்லாம் அங்கு கிடைக்கும் என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் நான் கூட கஷ்டப்பட்டு படித்தாவது அங்கு போயிருப்பேன். படத்தில் உருப்படியாய் நடித்திருப்பவர்களில் ஒருவர் அம்ரிதா சிங்.. தன்னுடைய மகனை இழந்து விடுவோமோ - அதுவும் ஓர் மதராசி குடும்பத்திடம் - என்று வழக்கமாய் மணமகனின் தாய்களுக்குத் தோன்றும் பயத்தையும் வீறாப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஒரே தேசமாக இருந்தாலும் பல்வேறு கலாசார முரண்கள் கொண்ட தொடர்பில்லாத இரு சமூகத்திலிருந்து தோன்றும் காதலையும் திருமணத்தையும் அதற்கேயுரிய முரண்நகைகளோடும் அபத்த நகைச்சுவைகளோடும் உருப்படியாய் செய்திருக்கலாம்தான். செய்யவில்லை.

suresh kannan

பாசமலர்கள் ஜோடியாக நடிக்கலாமா?



தி இந்து ஆங்கில நாளிதழின் பிரதி ஞாயிறு இணைப்பில் ரேண்டார் கை எழுதி வரும் இந்தத் தொடர் குறிப்புகளை ஆர்வமாக வாசிப்பேன். .

இந்த வாரத்தில் எழுதப்பட்டிருக்கும், 1961-ல் வெளிவந்த 'எல்லாம் உனக்காக' எனும் தமிழ் சினிமாவைப் பற்றி உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருக்கிறீர்களா என தெரியவில்லை. பழைய தமிழ் சினிமாக்களை ஆர்வமுடன் தொடரும் நான் அறியேன். இத்திரைப்படத்தைப் பற்றி ரேண்டார் கை குறிப்பிடும் போது, கதையமைப்பும் நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்த போதிலும் வணிக ரீதியாக இத்திரைப்படம் தோல்வியடைந்ததற்கு 'நடிகர்களின் தேர்வு' (casting) என்பதையே காரணமாக குறிப்பிடுகிறார். அதாவது சிவாஜியின் முந்தைய திரைப்படமான பாசமலரில் அவரும் சாவித்திரியும் அண்ணன் -தங்கையாக நடித்து அது பெரும் வெற்றியை சந்தித்தது. எனவே அதற்குப் பிந்தைய இத்திரைப்படத்தில் அவர்கள் ஜோடியாக நடித்ததை மக்கள் விரும்பாததின் காரணமாகவே படம் தோல்வியடைந்தது என்கிறார்.

தினத்தந்தி நாளிதழில் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் எழுதி வரும் சுவாரசியமான தொடரையும் வாசிக்கிறேன். திரைத்துறையில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஆணை நாயகனாக தேர்வு செய்வதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. ஏன், அதற்காக கடுமையான போட்டியே நடக்கும். ஏனெனில் அவன்தான் அத்திரைப்படத்தின் மையம். ஆனால் ஒரு நாயகியை தேர்வு செய்யும் போது அவர் முன்னதாக யார் யாருக்கெல்லாம் ஹீரோயினியாக நடித்தார், அவைகளில் எவை வெற்றி பெற்றன? இந்த குறிப்பிட்ட நாயகனுடன் எத்தனை படங்களுக்கு பிறகு நடிக்கிறார்? மக்களுக்கு சலிப்பேறாமல் இருக்குமா? என்றெல்லாம் கதை விவாதங்களின் போது இயக்குநர்களும் கதாசிரியர்களும் யோசிக்கிறார்கள் என்பது அத் தொடர்களில் வெளிப்படும் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஒரு திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறும் ஒரே நோக்கத்திற்காக அதில் எத்தனை சமரசங்கள்? எனில் அத்திரைப்படம் எப்படி ஒழுங்குணர்வோடு சிறப்பாக வெளிவரும்?
 
பார்வையாளர்களாக ஒரு திரைப்படத்தை  முறையாக அணுகுவதற்கான போதிய பயிற்சி நம்மிடம் இல்லை என்பதற்கான பல அடையாளங்களில் இதுவுமொன்று. ஒரு திரைப்படத்தின் பாத்திரங்களை அந்தச் கதைச் சூழலில் பொருந்திருக்கும் நபர்களாக அணுகாமல் வெகுசன இதழ்கள் தங்களின் வணிகத்திற்கென உண்மையும் பொய்யுமாக அள்ளி இறைக்கும் பல வம்புகளின் மூலமும் அவர்களின் உண்மையான வாழ்க்கையின் தகவல்களையும் நிலைகளின் மூலமும் அவைகளை திரைப்படத்தில் பொருத்திப் பார்த்து அதை பாராட்டும் அல்லது விலகும் முதிரா மனநிலையே இதற்கு காரணமாகிறது.

ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் ஸ்கிரிப்டிற்கு குறிப்பிட்ட நடிகரும் நடிகையும் மிக மிக பொருத்தமாக அமைவார்கள் என அதன் இயக்குநர் யூகித்திருந்து ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை என்று ஏதோவொரு உறவுமுறையில் இருக்கும் பட்சத்தில், தொடர்புள்ள நடிகர்களுக்கு சம்மதமிருந்தும், மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதன் காரணமாகவே இயக்குநர் அந்தத் தேர்வை நிராகரிப்பாராயின் ஒரு நல்ல திரைப்படம் உருவாவதை தடுப்பதற்கு  நம்மிடமுள்ள இந்த அபத்தமான மனநிலையும் ஒரு காரணமாயிருக்கிறது என்பது எத்தனையொரு கொடுமை?

suresh kannan

Sunday, July 13, 2014

உன் சமையலறையில் - விமர்சனம்

வெள்ளை ரவை 200 கிராம்
கடுகு 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
கடலைப் பருப்பு 2 ஸ்பூன்
வரமிளகாய் 3
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
பட்டாணி, காரட், பீன்ஸ் 100 கிராம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 8 ஸ்பூன்

செய்முறை :
வெறும் வாணலியில் ரவையை சூடு வரும் வரை வறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு , கடலைப் பருப்பு , வரமிளகாய் போடவும். தாளித்து சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், காய்களைப் போட்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூளைப் போட்டு, 3 டம்ளர் (600 மில்லி) தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5 நிமிடத்தில் காய்கள் சற்று வெந்ததும் உப்பு சேர்த்து, பின் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டி படாமல் கிளறவும். 5 நிமிடத்தில் ரவை வெந்ததும் இறக்கி, மல்லித் தழையை நறுக்கித் தூவி அலங்கரிக்கவும். (ரவை சேர்ந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்)

மேற்குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்க்கும் நேரத்தில் மேற்குறிப்பிட்ட ரெசிப்பையையாவது முயற்சி செய்தால் பயனுள்ள முறையில் நேரத்தை செலவு செய்வதோடு மனைவியிடமும் நல்ல பெயர் பெற முயற்சி செய்யலாம்.



அன்புள்ள பிரகாஷ்ராஜ் சார், 

நீங்கள் ஓர் அற்புதமான நடிகர். அற்புதமான, வெளிப்படையான மனிதரும் கூட என்பதை உங்களின் கட்டுரைகளின் மூலம் உணர்கிறேன். அந்த அன்பிலும் உரிமையிலும் ஒரு ரசிகனாக சொல்கிறேன். டைரக்ஷன் என்கிற சமாச்சாரத்திற்கும் உங்களுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. அதனால் அதில் செலவிடும் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல் அதிக திரைப்படங்களில் நடித்து எங்களை மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன்.

சமையற் குறிப்பு இந்த தளத்திலிருந்து எடுத்தது. 


suresh kannan

Saturday, July 12, 2014

Saivam - Tamil - சைவத்தின் அரசியல்



சைவம் திரைப்படத்தின் ஒன்லைனை இப்படியாக சொல்லலாம் - "ஒரு புறாவிற்கு இத்தனை அக்கப்போரா?"

இயக்குநர் விஜய் தம்முடைய முந்தைய திரைப்படங்களை வேறு அந்நிய பிரதேச திரைப்படங்களிலிருந்து மோசமாக நகலெடுத்து விமர்சகர்களால் திட்டித் தீர்க்கப்பட்டவர். இம்முறை தன்னுடைய அம்மா சைவத்திற்கு மாறினதற்கு காரணமாக இருந்ததாக சொல்லப்பட்ட ஒரு 'உண்மையான' நிகழ்வை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க முன்வந்ததிற்கு மகிழ்ச்சி. ஆனால் இத்திரைப்படத்தின் மூலம் அவர் என்ன செய்தியை சொல்ல வருகிறார் என்பது அழுத்தமாக வெளிப்படவில்லை. படத்தின் தலைப்பை வைத்தும் பிரச்சாரத் தொனியின்றி மிதமாக இறுதிக் காட்சியின் மூலம் இயக்குநர் சொல்ல வருதைப் பார்த்தும் 'உயிர்க்கொலை வேண்டாம், சைவத்திற்கு மாறிவிடுங்கள்' என்பதுதான் இயக்குநர் சொல்ல வருவது என்றால்  நன்றாக வறுக்கப்பட்டு பார்த்தவுடன் உண்ண நாவூறும்படி ஒரு தேர்ந்த உணவு புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரேயொரு புகைப்படத்தின் வெற்றியைக் கூட இத்திரைப்படத்தினால் அடையமுடியவில்லை என்பதுதான் பொருள். 'கோயில்களில் உயிர்ப்பலி கூடாது' என்று அதிமுக அரசு முன்பொரு அரசு உத்தரவைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த முடியாமல் தோல்வியடைந்ததை நினைவுகூர்ந்தால், அதற்கு ஆதரவான ஒரு படைப்பை உருவாக்கி அதிகாரத்தின் கனிவைப் பெறுவதுதான் இயக்குநரின் நோக்கமா என்பதும் தெளிவில்லை.

சைவத்திற்கு மாற வலியுறுத்தும் ஆதாரச் செய்தியாக இத்திரைப்படத்தை ஒற்றைத்தன்மையில் அணுகினாலும் காட்சிகளின் ஊடே பல  மூடத்தனமான பிற்போக்குத்தனங்களை மிக தன்னிச்சையாக இத்திரைப்படம் சொல்லிச் செல்வதுதான் இதன் மிகப் பெரிய ஆபத்தே.

சமையலறையும் அது தொடபான விஷயங்களும்தான் பெண்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறைந்தபட்ச எல்லை  என்று நாம் நம்பிக் கொண்டிருந்தாலும் அதுவும் ஆண்களுக்கு உட்பட்டதே என்பதை இத்திரைப்படம் நிறுவ முயல்கிறது. படத்தின் துவக்க காட்சியொன்றில் சந்தைக்குச் செல்லும் இல்லத்தரசி அங்கு எதை வாங்குவது என்று குழம்பி அதைக் கூட தீர்மானிக்க இயலாமல் வீட்டுக்காரருக்கு 'ஒரு போனைப் போடு' என்கிறாள். பொருளீட்டுவதன் மூலம் தன் அதிகாரத்தின் வலிமையை சமையல் அறையிலும் கூட மறைமுகவாவேனும் ஆண்கள் கைப்பற்றியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்றால் அந்த வீட்டில் வளரும் சேவலுக்கு இருக்கும் மூளையும் தன்னிச்சையான சுதந்திரமும் கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறதா? உண்மையில் வீடுகளில் 'ஆண்கள்தான் சமைக்கிறார்கள்' என்பது மாதிரி பெரும்பாலும் ஆண்களாலேயே எழுதப்படும்  நகைச்சுவைத் துணுக்குகள் அவர்களின் குற்றவுணர்வின் வடிகால்தானா?

இன்னொரு காட்சியில், நகரத்திலிருந்து வரும் சிறுவனுக்கு ஈடாக கிராமத்துப் பள்ளியில் வாசிக்கும் சிறுமி  சரிக்கு சரியாக ஆங்கிலத்தில் சண்டையிடுகிறாள். 'படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்' என்று கிராமத்து சிறுமியின் தந்தை, நகரத்து சிறுவனின் தந்தையைப் பார்த்து நமட்டுச்சிரிப்புடன் சொல்கிறார். ஒருவர் முறையாக கல்வி கற்றிருப்பதின் அடையாளம் என்றால் அது ஆங்கிலத்தில் உரையாடுவதுதான் என்பது மாதிரியான, ரிக்ஷாக்காரராக இருக்கும் எம்.ஜி.ஆர் ஒரு அசந்தர்ப்பமான காட்சியில் திடீரென சடசடவென ஆங்கிலத்தில் உரையாடி பார்வையாளர்களை அதிர்ச்சியும் பிரமிப்பும் அடையச் செய்யும் தாழ்வுமனப்பான்மையிலிருந்து இன்னமும் தமிழ்சினிமா பழமைவாதத்திலிருந்து வெளிவரவில்லை என்பதை அறிய அப்படியொன்றும் ஆச்சரியமாக இல்லை.

நெருங்கிய உறவினர்களிடையே செய்யும் திருமணங்களால் உடற்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதை அறிவியல் மருத்துவம் மறுபடி மறுபடி எச்சரித்துக் கொண்டிருந்தாலும் "முறைப் பொண்ணை லவ்வடிச்சா என்னடே தப்பு?" என்கிற செய்தியையும் அதுவும் ஒரு சிறுமியின் மூலமாக இத்திரைப்படம் சொல்லிச் செல்கிறது. ஈட்டப்படும் சொத்துக்கள் நெருங்கிய உறவினர்களிடையேதான் புழங்க வேண்டும், அது வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக சுயநல நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கும் பழைய ஏற்பாடுகளில் உள்ள ஆபத்தை இத்திரைப்படம் ஞாபகமாக மறந்து விலகி அதிலுள்ள ரொமாண்டிசத்தை மாத்திரம் பேசுகிறது.

இன்றும் கிராமங்களில் விவசாயம் தொடர்வது வேறுவழியில்லாமல் அவர்களுக்குத் தெரிந்த தொழிலாக, பாரம்பரியமான தன்னிச்சையான நிகழ்வே. மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் செய்யப்படும் ஆபத்தான விளையாட்டுக்களை போல விவசாயமும் இன்று ஒரு தற்கொலை முயற்சியாக மாறிவிட்டதற்கு நீர்பகிர்வு அரசியல் துவங்கி அதிகாரமும் வேலைவாய்ப்பும் நகர்ப்புறங்களில் மாத்திரம் குவிக்கப்பட்டு விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தராப்படாதுதான். விளைநிலங்களை வீடு கட்டுவதற்கான நிலமாக மாற்றப்படுவதுதான் புத்திசாலித்தனமான பிழைக்கத் தெரிந்த வழியாக மாறிவிட்ட பிறகு, இத்திரைப்படத்தின் குடும்பத்தலைவர் சொல்வது போல "நாம விவசாயம் செய்யலைன்னா அரிசி எப்படிப்பா கிடைக்கும்" என்னும் சமூகப் பொறுப்பின் பெருந்தன்மையோடு யோசிக்கும்  விவசாயப் பணக்காரர்கள் யதார்த்தத்தில் ஒன்றிரண்டு பேர்களாவது மிஞ்சுவார்களா என்று தெரியவில்லை. வெறுமனே லட்சியவாதக் குரல்களை மாத்திரம் பின்னுறுத்தி அதன் பின்னேயுள்ள அரசியல் குறித்து மெளனம் சாதிப்பது படைப்பாளிகளுக்கு அழகல்ல.

சிறுதெய்வ வழிபாடுகளின் ஒருபகுதியாக உள்ள உயிர்ப்பலியின் பின்னுள்ள மூடத்தனத்தை மிதமாக விமர்சிக்கும்  இத்திரைப்படம் பெருந்தெய்வ வழிபாடுகளில் உள்ள மூடத்தனங்களைப் பற்றி ஏதும் பேசாமல் மெளனமாகவே நகர்கிறது.

இப்படியாக திரைப்படத்தினுள் உறைந்திருக்கும் பழமைவாத அரசியல்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தாலும் கூட இத்திரைப்படம் வருஷம் 16, பாண்டவர் பூமி, அழகர்சாமியின் குதிரை ஆகிய திரைப்படங்களை நினைவுப்படுத்தும் வகையிலும் தொலைக்காட்சித் தொடர்களை நினைவுப்படுத்தும் வகையிலும் நாடகத்தன்மையோடும் மிகையுணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டதொன்றாக இருக்கிறது. காட்சியில் வெளிப்படும் ஒரு அதிர்ச்சியான தகவலுக்கு அந்த பிரேமில் உள்ள அத்தனை பாத்திரங்களுக்கும் ஒரு ரியாக்ஷன் ஷாட் வைத்திருப்பதை படம் பூராவும் தொடர்வது சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஓர் இரானிய திரைப்படத்தின் எளிமையோடும் அழகியலோடும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி விடவேண்டுமென்கிற இயக்குநரின் நோக்கத்தை யூகிக்க முடிகிறதென்றாலும் தட்டையாக உருவாக்கத்தினால் அது நிறைவேறவில்லை. சிறுமிக்கும் சேவலுக்குமான நேசமும் பிணைப்பும் இயல்பான காட்சிகளின்  மூலம் முறையாக முன்பே நிறுவப்படாததால் அது குறித்து பின்னால் வரும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு எவ்வித அனுதாக சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக சேவலை தேடுகிறேன் என்று இவர்கள் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல் "எப்பா.. அந்த சனியன் பிடிச்ச சேவ எப்ப கிடைக்கும்.. இவங்க எப்ப பலி கொடுத்து பொங்க வைத்து படத்தை முடித்து நம்மை விடுவிப்பார்களோ. என்கிற சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஓயாமல் கத்தி அலைந்து கொண்டிருக்கும் ஒரு பறவையினம், இத்திரைப்படத்தினுள் மாத்திரம் எப்படி ஒரு சாதுர்யமான திருடன் மாதிரி வீட்டு மச்சினுள் அமைதியாக ஒளிந்திருக்கும் என்பது போல உள்ளுக்குள் எழும் தர்க்க ரீதியான கேள்விகளை புறந்தள்ளாமல் இத்திரைப்படத்தை ரசிக்க முடியவில்லை.

இத்திரைப்படத்தின் பலங்களுள் ஒன்றாக இதன் casting ஐ சொல்லலாம். நாசரை விடுங்கள்.. யானைக்கு சோளப்பொறி. ஆனால் அவரது உறவுகளாக வரும் நபர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள். குறிப்பாக பணிப்பெண்ணாக வரும் நபர் ஓர் அசாத்தியமான தேர்வு. வெற்றிலையை இயல்பாக மென்று கொண்டே தோன்றும் முதல் காட்சியிலிருந்தே நம்மைக் கவர்ந்து விடுகிறார். போலவே மற்ற நபர்களும். முன்பு பேபி ஷாலினி என்கிற குழந்தை நட்சத்திரத்தை வைத்து மிகையான முகபாவங்களையும் செய்கைகளையும் செய்ய வைத்து நம்மைக் கொன்று கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. இந்த இயக்குநரே முன்பு அது போன்று தெய்வத் திருமகளை உருவாக்கியிருக்கிறார். ஆனால் சிறுமி சாராவை இதில் அப்படியெல்லாம் பெரிதாக செய்ய விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஓர் ஆறுதலான சமாச்சாரம். உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா பாடியிருக்கும் ஓர் அருமையான பாடல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தானே என்ற கேள்வியை எழுப்புகிறது.

மற்றபடி ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை எவ்வித தர்க்கப் பிழைகளும் மனச்சாட்சி தொந்தரவும் அற்று ரசிக்க விரும்பினால் இத்திரைப்படம் அதற்கு ஏற்றவாறான சுவாரசியமான திரைக்கதையைக் கொண்ட ஒரு வெகுசன படைப்பே.

()

சைவம் x அசைவம் என்பது அரதப்பழசான விவாதம் என்றாலும் கூட என் தனிப்பட்ட மனப்பதிவுகளை வைத்து பார்க்கும் போது நான் அசைவம் உண்ணும் வழக்கம் உள்ளவன் என்றாலும் என்னுடைய தராசு சைவத்தின் பக்கமே சாயும். 'கீரையைப் பறிக்கிறோமே, அது உயிர் இல்லையா?" என்று....அசைவம் உண்ணுவதை எந்த அபத்தமான தர்க்கமும் கொண்டு நான் நியாயப்படுத்த முயலமாட்டேன். பல முறை இதைக் கைவிட முயன்றாலும் இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. இந்த வழக்கம் நாம் பிறந்து வளரும் சூழலால் நம் மீது திணிக்கப்படுவதேயன்றி நாம் தேர்வு செய்வதல்ல. இந்த வழக்கம் காரணமாக ஒருவரை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ பார்ப்பது எனக்கு உவப்பில்லாத செயல். அசைவம் உண்ணுபவர்களை ஏதோ பாவம் செய்பவர்களாக சித்தரித்து அவர்களை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்வதும் ஒப்புக் கொள்ளக்கூடியதல்ல. சனாதன மனங்கள் இயங்கும் மத அரசியல் கொண்டு இதை அணுகுவது ஆபத்தானது.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கானது. அவை அவைகளின் இயற்கை விதிகளுக்கேற்ப சுதந்திரமாக புழங்குவதுதான் நியாயமானது. ஆனால் மனித இனம் தனது சிந்திக்கும் அறிவைக் கொண்டு இயற்கையையும் பெரும்பாலான உயிரினங்களையும் அழித்து வளர்வது எனக்கு ஏற்புடையதில்லை. தாவரங்கள் அதிகம் வளர முடியாத வேறு வழியில்லாத சூழலில் பறவைகளை, விலங்குகளை உணவுக்காக கொல்வதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வேறு வகையான உணவு வாய்ப்புகள் இருக்கும் சூழலிலும் சக உயிர்களைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டியதே என்பது என் நிலைப்பாடு.  ஒரு ஆப்பிள் அல்லது ஒரு கோழிக்கால் துண்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் உண்டு உயிர்வாழ முடியும் என்றொரு நிராகரிக்க முடியாத வாய்ப்பு என் முன் வைக்கப்படுமாயின் நான் ஆப்பிளைத்தான் தேர்வு செய்வேன். ஜீவிப்பதற்காக குறைந்த பாவத்தை தேர்வு செய்வதுதான் குறைந்தபட்ச நியாயமாகவாவது இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

நிற்க.. இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போலவே எங்கள் வீட்டிலும் ஒரு கோழி வளர்ந்து இளவயது சகோதரர்களான நாங்கள் அதன் மீது தன்னிச்சையாக பாசம் கொண்ட ஒரு சிறுவயதுக் கதையொன்று உண்டு. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். 

suresh kannan

Friday, July 11, 2014

Lucky Star - Malayalam - தத்துக் குழந்தையும் முத்தான திரைக்கதையும்



மருத்துவ விடுமுறை காரணமாக, திட்டமிடாமல் random  ஆக தேர்வு செய்து சில திரைப்படங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி சில வரிகள் எழுத உத்தேசம்.

சமீப காலமாகத்தான் மலையாள சினிமாக்களை நிறைய கவனித்து வருகிறேன். அழுது வடிந்து காடா விளக்கில் சாவகாசமாக எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த கலை சார்நத படங்கள் ஒருபுறமும் ஜாக்கெட்டை A முத்திரையோடு கழற்றிக் கொண்டிருந்த மித பாலியல் தன்மையுடன் கூடிய படங்கள் இன்னொரு புறமாக இருந்த மலையாள சினிமாக்களின் முகம் மாறி நீண்ட வருடங்களாகி விட்டது போலிருக்கிறது. அவை தமிழ் சினிமைக்களின் வணிக வெற்றியை பார்த்து நகலெடுத்து சேட்டன்மார்களும் இப்போது எடோ....என்று பஞ்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டதாய் சொல்கிறார்கள். ஏதோ ஒரு ஸ்டில்லில் லாலேட்டன் வேட்டியை அபாயகரமான கோணத்தில் தூக்கிக் கட்டி யாருக்கோ சவால் விடும் போஸில் நிற்பதைக் காண சற்று பயமாய்த்தான் இருந்தது. என்றாலும் மலையாள சினிமை அத்தனை சீக்கிரம் தமிழ் போல் அழிந்து விடாது என்பதை புதிய அலை சினிமாக்கள் பறைசாற்றி வருகின்றன.

சமீபத்தில் பார்த்தது 'லக்கி ஸ்டார்' எனும் சித்திரம். வாடகைத் தாய், தத்துக் குழந்தையினால் ஏற்படும் சிக்கல்கள், மனநெருக்கடிகள், சென்டிமென்டுகள் என்று... தமிழில் 1980-களிலேயே வந்து விட்ட 'அவன் அவள் அது' போன்று அதே அரதப் பழசான டெம்ப்ளேட் கதையைக் கொண்டிருந்த 'சினிமாத்தனமான' திரைப்படம் என்றாலும் மையத்திலிருந்து விலகாத சுவாரசியமான நேர்க்கோட்டு திரைக்கதையினால் படம் பார்க்கும் முழுமையை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். என்னதான் நாம் மெல்லுணர்ச்சிகளை சமயங்களில் கிண்டலடித்தாலும் ஆழ்மனதில் அவற்றின் அடிமைகள் என்பதால் இது போன்ற திரைப்படங்கள் நம்மைக் கவர்ந்து விடுவதை தவிர்த்து விட முடியவில்லை. இந்த வகைமையில் பாசிலின் 'என் பொம்முக் குட்டி அம்மாவிற்கு' எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு திரைப்படம்.

இத்திரைப்படத்தில் சில இழுவைக் காட்சிகள் உண்டென்றாலும் நகைச்சுவையையும் சென்ட்டிமென்ட்டையும் உறுத்தாமல் எப்படி கலப்பது என்பதற்கு இதன் திரைக்கதை சிறந்த உதாரணம். சமீபத்திய மலையாள சினிமைக்களின் ஒளிப்பதிவு அபாரமான அழகுணர்ச்சியுடன் அமைந்திருப்பதை கவனிக்கிறேன். இதுவும் அப்படியே.

ஒரு சாமானிய நாயகனின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ஜெயராம். இவர் ஏன் தமிழ் சினிமாக்களில் (குறிப்பாக கமல் படங்களில்) வந்து ஜூனியர் ஆர்டிஸ்ட் போல அவமானப்படுத்தப்பட்டு சீரழிகிறார் என்று தெரியவில்லை. அங்கே அத்தனை சில்லறை பெயராதோ என்னவோ.. லாலேட்டனே விஜய் படத்திற்கு வந்து அழியும் போது ஜெயராம் எம்மாத்திரம்? நாயகியாக ரச்சனா என்னும் தொலைக்காட்சி புகழ் நடித்திருக்கிறார். இயற்கை வளம், அழகான பெண்கள் என்று...(இரண்டையும் இணைத்துப் படிக்காதீர்கள்) நிறைய நல்ல விஷயங்களை கேரள தேசத்திற்கு மாத்திரம் ஸ்பெஷலாய் கொட்டியிருக்கும் இயற்கையை திட்டவே தோன்றுகிறது.

மலையாளிகள் தமிழர்களை தம்முடைய படங்களில் கேவலமாய்த்தான் சித்தரிப்பார்கள் என்று யோசிப்பவர்களுக்கு வாகாக சில காட்சிகள் உள்ளன. கதை பூராவும் சென்னையில் நிகழ்வதான திரைக்கதை என்றாலும் சென்னையைப் பார்க்க முடியாதது ஒன்றும் பெரிய குறையில்லை. தமிழ் படங்களிலேயே அப்படித்தான் எனும் போது இது பெரிய விஷயமில்லை. ரஜினியை கிண்டலடித்து வரும் ஒரு வசனத்தை யாரும் தவற விட்டு விடக்கூடாது என்பதே என் கவலை.

சென்டிமென்ட் என்பதற்காக ரொம்பவும் அழுது வடியவும் இல்லை. சில காட்சிகளில் லேசான அதிர்ச்சி தந்து சிரிக்கவும் வைக்கிறார்கள்..அமெரிக்க தம்பதியினருக்காக வாடகைத் தாயாக இருக்கும் நாயகி, குழந்தை பிறந்து அதை ஜெயராம் எடுத்துச் செல்லும் போது 'ஒரு நிமிடம்' என்று தடுக்கிறார்.. குழந்தையை கடைசியாக பார்க்க விரும்பி ஓர் அழுகாச்சி சீன் போல எனும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே 'மீதிப் பணத்தை சரியா செக் பண்ணி வாங்கிட்டு வந்திடுங்க' என்று ரச்சனா குறும்பான முகபாவத்துடன் சொல்லும் போது என்னென்னவோ தோன்றுகிறது. அறிமுக இயக்குநர் தீபன் அந்திக்காடுக்கு பாராட்டுக்கள்.

வாரஇறுதியில் குடும்பத்துடன் கண்டு களித்து நெகிழ்ந்து மகிழ ஓர் அருமையான குடும்பச் சித்திரம்.


suresh kannan