Wednesday, May 14, 2014

Free Men - Les hommes libres - இஸ்லாமிய யூதர்கள்



அனுதினமும் பார்க்கின்ற திரைப்படங்களைப் பற்றி சிறுகுறிப்பாவது எழுதிவிட வேண்டும் என எண்ணுவேன். பல சமயங்களில் அது இயலாமல் போகும். இனி அதை உறுதியாக கடைப்பிடிப்பதாக உத்தேசம்.

சமீபத்தில் பார்த்த நல்ல திரைப்படம் - Free Men (French: Les hommes libres).

இன்று அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாய் இருந்து கொண்டு இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் யூதர்கள் உலகமெங்கிலும் நாஜிப்படைகளால் அனுபவித்த கொடுமைகளை திரைப்படங்களின் மூலம் காணும்  போதெல்லாம்  மனம் பதறுகிறது. எத்தனை பெரிய வரலாற்று சோகம் அது? எப்போது வேண்டுமானாலும் சாகடிக்கப்படக்கூடிய அபாயம் இருக்கக்கூடிய யூதர்கள் கரப்பான்பூச்சிகளைப் போல ஓடி ஒளிந்து தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தை சித்தரிக்கும் திரைப்படங்களுள் இதுவொன்று.

1940-ம் வருடம். ஜெர்மானியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட பாரிஸ் நகரம். பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே புலம்பெயர்ந்து கருப்புச் சந்தையில் பொருட்களை விற்கும் யூனுஸ் என்கிற அல்ஜீரிய இசுலாமிய இளைஞன் நாஜிகளால் கைதாகி உள்ளுர் மசூதி ஒன்றை கண்காணித்து உளவு சொல்ல வேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் விடுவிக்கப்படுகிறான். மதம், புரட்சி, போராட்டம், தடை என்கிற எவ்வித கவலைகளுமில்லாத அந்த இளைஞன் மெல்ல மெல்ல அந்த பயங்கரமான உலகிற்குள் சென்ற பின்பு தன்னிச்சையாகவே அதன் நியாயத்தை உணர்ந்து புரட்சியின் ஒரு பகுதியாக ஆகி விடுகிறான்.

யூதர்களைக் குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் இத்திரைப்படத்தின் மையம் மிக முக்கியமாக வேறுபாடுவது, யூதர்களை அவர்களின் அடையாளத்தை மறைத்து மசூதிக்குள் புகலிடம் கொடுத்து காப்பாற்றும் இசுலாமியர்களைப் பற்றியது. வட ஆப்ரிக்க யூதர்களை, இசுலாமியர்கள் என்கிற போலியான சான்றிதழ்களை தருவதன் மூலம் அந்த மசூதியின் இமாம் அவர்களைக் காப்பாற்றுகிறார்.

சலீம் என்கிற அல்ஜீரிய இளைஞன் (உண்மையான கதாபாத்திரம் இது) அற்புதமான இசைத்திறமையைக் கொண்டிருந்தாலும் யூதனாக இருப்பதினாலேயே தன்னுடைய கலையையும் பாரிஸில் புகழ்பெற்ற பாடகனாக ஆக வேண்டும் என்கிற கனவையும் வெளிப்படுத்த இயலாமல் மறைந்திருக்கும் துரதிர்ஷ்டமும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.

யூனுஸாக நடித்திருக்கும் இளைஞர் Tahar Rahim மிக இயல்பான முகபாவங்களால் அசத்தியிருக்கிறார். அது போலவே சலீமாக நடித்திருக்கும் இளைஞரும். காட்சிகள் மிகையின்றி யதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தன்னைச் சுற்றி உருவாகிக் கொண்டிருக்கும் வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லாமலிருக்கும் ஓர் இளைஞன் அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகவே உருமாறும் அற்புதத்தை திரைப்படம் அபாரமாக பதிவாக்கியிருக்கிறது.


suresh kannan

No comments: