தமிழ் சினிமாவின் மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஆடுகளின் எண்ணிக்கை அபூர்வமாகவே இருந்தாலும் எப்போதுமே அதிலொரு தொடர்ச்சி இருப்பது ஆறுதலான விஷயம். உரைநடைத் தமிழில் உரையாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை யதார்த்த தமழில் பேச வைத்த ஸ்ரீதர், செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குள் இயங்கிக் கொண்டிருந்ததை அசலான திறந்த வெளிக்குள் இழுத்துப் போட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்த பாரதிராஜா, வசனங்களின் சிக்கனத்தையும் காட்சிகளின் நவீனத்தையும் அறிமுகப்படுத்திய மணிரத்னம் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் ஆச்சாரங்களைக் கலைத்து வேறொரு பரிமாணத்திற்குள் பயணிக்க வைத்தார்கள். தங்களால் ஆன மாற்றங்களை இவர்களால் சாத்தியப்படுத்த இயன்றாலும் தமிழ் சினிமாவின் சில பிரத்யேகமான சம்பிதாயங்களிலிருந்து இவர்களால் வெளிவரவே முடியவில்லை. எவ்வித வணிக சமரசங்களும் அல்லாமல், சராசரியான தமிழ் சினிமா பார்வையாளனின் புரிதல்களை கருத்தில் கொண்டு காட்சிகளில் செய்த சமரசங்கள் அல்லாமல், எவ்வித தடைகளும் அல்லாமல் ஓர் இயக்குநர் தான் உருவாக்க விரும்பினபடியான கறாரான ஒரு படைப்பையாவது இதுவரை தமிழ் சினிமாவில் சாத்தியப்படுத்த இயன்றிருக்கிறதா என்றால் யோசிக்க வேண்டியிருக்கிறது. வீடு,சந்தியா ராகம் என்று திரும்பத் திரும்ப சில பெயர்களிலேயேதான் ஒரு யூகமாகத்தான் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது எந்தவொரு ஆடும் மந்தையிலிருந்து முழுமையாக விலகவில்லை என்பதுதான் சோகமும் ஆதங்கமும்.
இம்மாதிரியான வேலிகளைத் தாண்ட முயலும் சமீபத்திய ஆடு மிஷ்கின். சில ஆதாரமான விஷயங்களை அவரின் துவக்கப் படைப்பிலிருந்து கவனித்தால் தமிழ் சினிமாவின் சலித்துப் போன வடிவமைப்பிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டேயிருப்பதைக் கவனிக்கலாம். குறிப்பாக திரைமொழியை அவர் பயன்படுத்தும் விதம் நுட்பமானது. ஆனால் தமிழ் சினிமாவிலுள்ள இன்னொரு பிரச்சினை என்னவென்றால் இவற்றில் சிறந்த படங்களாக கருதப்படுபவற்றை இன்னொரு சக தமிழ் சினிமாவுடன்தான் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் என்று அறியப்படுபவற்றுக்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ளது ஓர் அகண்ட துன்பியல் இடைவெளி. எந்தவொரு மற்ற சிறந்த படைப்புகளிலும் உள்ள கதை உள்ளிட்ட சிறந்த அம்சங்களை தமிழ் சினிமா நகலெடுக்கும் போது அதை தன்னுடைய வார்ப்பிற்குள்ளாக செரித்துக் கொள்ளும்படி இயங்குவதும் இன்னொரு துன்பியல் சமாச்சாரம்.
அந்த வகையில் மிஷ்கினின் மூலாதாராமான விருப்பங்கள், நகல்கள் ஏதாவதொரு ஜப்பானிய, கொரிய திரைப்படங்களின் விதைகளிலிருந்து முளைத்திருக்கலாம் என்றொரு யூகம். ஓ.ஆ -விலும் மருத்துவ கல்லூரி மாணவனின் தோற்றம், கொரியத் திரைப்படங்களின் மனிதர்களை நினைவுப்படுத்துவது தற்செயலா அல்லது இயக்குநரின் ஆழ்மனதிலிருந்து விளைந்த தன்னிச்சையான செயல்பாடா என்று யோசிக்கலாம். 'நந்தலாலா' வை டகேஷி கிட்டனோவிற்கு செய்த காணிக்கை என மிஷ்கின் நம்பிக் கொண்டிருப்பது அவர் விருப்பம். இரண்டு பிரதியையும் கண்டிருப்பவர்களால் 'கிகுஜிரோவில்' இருந்த கலையமைதி மிஷ்கினின் படைப்பில் இல்லை என்பதையும் அது தமிழ் சினிமாவுக்குள்ள சில குணாதியங்களிலிருந்து விலகவில்லை என்பதையும் எளிதாகவே உணரமுடியும்.
அந்தவகையிலேயே மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' திரைப்படத்தை உலகசினிமா என்றெல்லாம் வகைப்படுத்தி உணர்சசிவசப்படாமல் ஒரு சுவாரசியமான தமிழ் சினிமா திரில்லர்' என்கிற வகையிலேயே பார்த்தால் எந்த பிரச்சினையுமின்றி ரசிக்க முடியும். அந்த வகையில் சமீபத்திய தமிழ் சினிமாக்களில் இது ஒரு சிறந்த வரவு. மிகுகற்பனைத் திரைப்படங்களில் தர்க்க ஒழுங்குகளின் அடிப்படையை ஒரு பார்வையாளன் எதிர்பார்க்கவே கூடாது. இயக்குநர் கறாராக தான் உருவாக்க விரும்பும் கற்பனை உலகில் கதைகேட்கும் குழந்தையின் மனோநிலையுடன் நம்மை ஒரு செயலற்ற பார்வையாளராக ஏற்றுக் கொண்டால்தான் அந்தப் படைப்பை அந்தக் கணத்தில் முழுமையாக ரசிக்க முடியும். அதிலுள்ள தர்கக ஓட்டைகளை நம் மனம் பிறகு நிதானமாக யோசிப்பது இயல்புதானென்றாலும் திரைப்படத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் இணையாக இதையும் சிநதித்துக் கொண்டிருத்தல், புணர்ச்சி நேரத்தில் மக்கள் தொகை பற்றிய புள்ளவிவரங்களை சிந்தித்துக் கொண்டிருக்கும் அபத்தத்திற்கு இணையானதாக இருக்கும். மிஷ்கினின் திரைப்படம் அவரது முந்தைய படங்களில் உள்ள தேய்வழக்குகள் சிலவற்றை பெரும்பாலும் தவிர்த்து சுவாரசியமான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் தலைப்பே குழந்தைகளின் கதைக்கான எளிமையையும் தொனியையும் கொண்டிருக்கிறது. கதையின் உள்ளடக்கமும் பழைய நீதிக்கதையொன்றின் சாரமே. இது பல திரைப்படங்களின் உள்ளடக்கமாக வந்திருக்கிறது. 'அன்புக்கு நான் அடிமை' என்றொரு திரைப்படத்தில் தன்னால் கொல்லப்பட்டு விடும் ஒரு காவல்துறை அதிகாரியின் நிராதரவான குடும்பத்திற்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் ரஜினிகாந்த் இருப்பதுதான் அதன் கதைக்களம். இந்த மசாலாவை ரசிக்கத்தக்க திரைமொழியின் மூலமும் சுவாரசியமான திரைக்கதையின் மூலமும் அடுத்த தளத்திற்கு நகர்த்திச் சென்றிருப்பதே மிஷ்கினின் உன்னதமான பணி. ஒரு படைப்பின் இடைவெளிகளை வாசகன் பூர்த்தி செய்து கொள்வான் என்கிற வகையிலும் அவனையும் தன்னுடைய படைப்பில் பங்குபெற வைக்க வேண்டும் என்பதே ஒரு நல்ல படைப்பாளியின் உருவாக்க சிந்தனையாக இருக்க முடியும். அந்த வகையில் சில விஷயங்களை மிஷ்கின் திட்டமிட்டு வேண்டுமென்றே தாண்டிச் செல்கிறார். இல்லையெனில் ஒரு கதாபாத்திரத்தின் பெயருக்கு மிக அந்நியமாக 'வுல்ஃப்' என்று அத்தனை நேரிடையாக பெயரிட முடியாது.
***
காவல்துறையால் தீவிரமாக தேடப்படும் ஒரு கொலையாளி சுடப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறான் (மிஷ்கின்). அவனை மருத்துவக் கல்லூரி மாணவனொருவன் (ஸ்ரீ) தானே சிகிச்சையளித்து காப்பாற்றுகிறான். ஆனால் கொலையாளியோ மாணவனை கடத்திக் கொண்டு பயணிக்கிறான். ஒருபுறம் காவல்துறை 'வுல்ஃப்' என்கிற அந்தக் கொலையாளியை கொல்லத் துரத்துகிறது. இன்னொருபுறம் வுல்ஃபின் பழைய முதலாளியின் ஆட்கள் சாகடிக்கத் துரத்துகிறார்கள். இதற்கிடையில் வுல்ஃபிற்கு தப்பிப்பதை விடவும் இன்னொரு நோக்கமிருப்பது பூடகமான சில சம்பவங்களின் மூலம் தெரிகிறது. ஆக ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தங்களின் உயிர்வாழ்தலுக்காக ஆபத்துக்களின் இடையில் நிகழ்த்தும் பயணமே இத்திரைப்படத்தின் மையம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தற்காலிமாக பரஸ்பரம் தங்களின் நிலைகளில் இருந்து மாறி மாறி பயணிப்பது சுவாரசியம்.
இத்திரைப்படத்தில் பாராட்டுதலுக்குரிய முக்கியமான அம்சமே, பிளாஷ்பேக் எனும் உத்தியை இயக்குநர் பயன்படுத்தாமலிருப்பது. பூடகமான காட்சிகளின் தொடர்ச்சியான இயங்குதலில் பார்வையாளனுக்கு அவற்றின் பின்னணி குறித்த ஆர்வம் அதிகமாகும். சமயங்களில் அவன் எரிச்சலடைந்து படைப்பிலிருந்து விலகுவதற்கான சாத்தியங்கள் உண்டு. இதனாலேயே இயக்குநர்கள் பார்வையாளனின் நிலையை கருத்தில் கொண்டு பொருத்தமான இடங்களில் அவற்றிற்கான தொடர்புகளை விளக்கி விடுவார்கள். ஆனால் மிஷ்கின் பார்வையாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு சம்பவங்களின் பின்னணிகளிலிருந்து மெல்ல மெல்ல அவர்களே உணர்ந்து கொள்ளுமாறு திரைக்கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. என்றாலும் இது புரியாமற் போய் விடுமோ எ்னகிற சந்தேகம் காரணமாக ஒரு குழந்தைக்கு கதை சொல்லும் சாக்கில் சமபவங்களின் பின்னணியை ஒரு இடத்தில் அடுக்குகிறார். மிகச்சிறந்த காட்சி என்று பாராட்டப்படும் இதுவே திரைக்கதையின் ஒரு பலவீனமான அம்சம் என்பதாக நான் கருதுகிறேன். ஏறக்குறைய படம் நிறைவுறுவதற்கு முன்னால்தான் இ்ந்தக் காட்சி வருவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை இல்லாமலேயே பார்வையாளனால் திரைப்படத்தை உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதனாலேயேதான் இதை தமிழ் சினிமாவின் பலவீனங்களுள் ஒன்றாக சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பல நுட்பமான காட்சிகள் இதை ஒரு சுவாரசியமான அனுபவமாக்குகிறது. மருத்துவக் கல்லூரி மாணவன், மருத்துவர்களுக்கு மிக அடிப்படையாக இருக்க வேண்டிய அறம் சார்ந்தவனாக இருந்தாலும், கொலையாளிக்கு சிகிச்சையளிக்கும் போது அவன் மீதே அவனுக்கு நம்பிக்கையில்லாதனாக இருக்கிறான். என்றாலும் சிக்கலான ஒரு சூழலில் கொலையாளியின் இதயத்தை உயிர்த்தெழச் செய்யும் போது அருகிலிருக்கும் மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதன் 'நீதான் டாக்டர்" என்கிறான். ஒரு மருத்துவரை நோயாளி அடையாளங்காட்டும் முரணை இயக்குநர் இந்தக் காட்சியில் நிகழ்த்தியிருக்கிறார்.
இன்னொரு காட்சி. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் சந்தேகத்திற்குரிய இளைஞன் ஒருவனை நிறுத்தி விசாரிக்கிறார்கள். அவனை சோதனை செய்யும் கான்ஸ்டபிள் ஒருவர் அவனிடமிருக்கும் துப்பாக்கியைப் பார்த்து 'ஐயா' என்று அலறுகிறார். பின்னாலேயே வரும் இன்னொருவன், இளைஞனை காப்பாற்றும் நோக்கில் காவலர்களை சுட்டுத் தள்ளியவுடன் அவனை நோக்கியும் 'ஐயா' என்று விளித்து சல்யூட் அடிக்கும் நிலையில் விறைப்பாக நிற்கிறார். அவர்கள் தப்பித்து போகும் போது இவரையும் சுட்டு விட்டுப் போக ''ஐயா' என்ற படியே கீழே விழுகிறார்.
ஜெயந்தனின் 'முனுசாமி' என்றொரு சிறுகதை. நிலப்பிரபுத்துவ காலத்தில் எவ்வாறு அடிமைகள் உருவாக்கப்பட்டு, அவர்கள் அடிமை மனோநிலையுடனேயே வாழ்கிறார்கள் என்பதை சிறப்பாக உணர்த்தும் கதை. ஓர் அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் கடைநிலைச் சிப்பந்தியான முனுசாமி, எவ்வாறு தனக்கு விசுவாசம் உடையவனாக இருக்கிறான் என்று அகமகிழ்ந்து போவார் ஓர் அதிகாரி. அந்த அளவிற்கு பணிவிடைகள் செய்வதில் விசுவாசமாக இருப்பான் முனுசாமி. ஆனால் அதிகாரி பணிமூப்பு அடைந்த கடைசி நாளன்று, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அதிகாரி அழைத்தவுடன் முனுசாமி தனது விசுவாசத்தை சட்டென்று இடமாற்றம் செய்வதைக் கண்டு திகைத்துப் போய் விடுவார். முனுசாமி அளித்த விசுவாசம் அவருக்கு அளிக்கப்பட்டது அல்ல, அவருடைய பதவிக்காக அளிக்கப்பட்டது என்பதை அவருடைய நண்பரொருவர் விளக்கிச் சொல்வார். மேலே குறிப்பிட்ட கான்ஸ்டபிளின் 'ஐயா' விளிப்பைக் கண்டவுடன் இச்சிறுகதை நினைவிற்கு வந்தது. இந்தக் காட்சியில் குற்றவாளிகள் தப்பிப்பது மிக மிக நிதானமாக காட்டப்பட்டிருக்கும். சில நிமிடங்கள் வந்து போகும் பாத்திரங்களைக் கூட இயக்குநர் சுவாரசியமாக வடிவமைத்திருந்தது பாராட்டப்பட வேண்டியது.
***
எழுத்தாளராகவும் இசை விமர்சகராகவும் அறியப்பட்டிருக்கும் ஷாஜி, இ்த்திரைப்படத்தில் ஒரு நடிகராக புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறார். அதுவரையிலான தமிழ் சினிமாக்கள், காவல்துறை அதிகாரிகள் என்றாலே வழக்கமாக சித்தரிக்கும் பிம்பங்களையும் நாயகத்தனங்களையும் மிகைகளையும் தொடர்ச்சியாக மிஷ்கின் உடைத்திருக்கிறார். இதில் காவல்துறையாக வரும் ஷாஜியின் பாத்திர வடிவமைப்பும், மிஷ்கினின் முந்தைய திரைப்படங்களான அஞ்சாதே (பொன்வண்ணன்), யுத்தம் செய் (சேரன்) ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. காவல்துறை எனும் அமைப்பே அவரவர் அதிகாரிகளின் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து இயங்கும் இயந்திரங்களாக இருக்க, குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து சுயமாக சிந்திக்கும் அதிகாரிகளே, மிஷ்கின் சித்தரிக்க விரும்பின அதிகாரிகளாக இருக்கிறார்கள். விலகின ஆடுகள்.
மிகையுணர்ச்சிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவின் ரசனை, சில படைப்பாளிகளை கடவுளின் நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது. அவர்கள் மீது வைக்கப்படும் எந்தவொரு மெல்லிய விமர்சனத்திற்கு கூட துடிதுடித்து பதைபதைத்து விமர்சிப்பவர்களை ஆபாச வசைகளால் எதிர்கொள்வது தமிழ் மரபு. அந்த வரிசையில் ஒரு முக்கியமான படைப்பாளி இளையராஜா. இணையம் என்கிற சமாச்சாரம் தமிழுலகத்தில் நுழைந்த நாள் துவங்கியே இளையராஜா பற்றிய விவாதங்களில் நிகழும் அடிதடிகளும் ரத்தகாயங்களும் இதற்கொரு உதாரணம். நல்ல கலையை ரசிப்பதின் மூலம் தன்னுடைய கீழ்மைகளிலிருந்து வெளிவந்து உயர்ந்த அனுபவங்களுக்கு, எவரையும் நேசிக்க சாத்தியப்படும் ஆன்மிக நிலைக்கு ஒருவரை பயணப்பட வைப்பதே கலையின் ஒருவகையான செயல்பாடு என்று நம்பிக் கொண்டிருக்கும் சூழலில், நல்ல இசையை ரசிப்பவர்களாக கூறிக் கொள்கிறவர்கள் அதற்கு முரணாக விமர்சிப்பவர்களின் மீது பாயும் முரணிற்கு பின்னாலுள்ள உளவியல் விநோதமானது. அந்த வகையில் இளையராஜாவைப் பற்றி விமர்சித்து எழுதுவது ஓநாய்களின் கூட்டத்தில் மாட்டிக் கொள்வதற்கு சமம்.
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே பின்னணி இசைக்கு ஒரு தனித்துவத்தையும் கவனிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் அதற்கொரு அந்தஸ்தை ஏற்படுத்தியவர் என்கிற வகையில் இளையராஜாவின் மேதைமையை மறுக்கவே முடியாது. ஓ.ஆ -விலும் காட்சிகளின் வெற்றிடத்தை நிரப்பி பார்வையாளர்கள் அந்தக் காட்சிகள் தொடர்பாக மேலதிக மனவெழுச்சி பெறுவதில் இளையராஜாவின் பங்கு உறுதியாகவும் அடிப்படையாகவும் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் மெளனமாக கடந்திருந்தாலும் இன்னமும் சிறப்பாக ஆகியிருக்கும் காட்சிகளில் கூட அவர் தன்னுடைய இருப்பை நினைவுருத்திக் கொண்டேயிருக்கும் குறுக்கீட்டை தவிர்த்திருக்கலாம். சமயங்களில் இந்த இடையூறு எரிச்சலூட்டும் அளவிற்கு நரம்பு வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.
பின்னணி இசை என்றே காலங்காலமாக அறியப்பட்டுக் கொண்டிருந்த ஒரு தொழில்நுட்பத்திற்கு இத்திரைப்படத்தில் 'முன்னணி இசை' என்று அடையாளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதன் மூலம் இளையராஜாவை அவர் பகடி செய்திருக்கிறாரோ என்று எண்ணுமளவிற்கு இசை பல இடங்களில் மிகையாக துருத்திக் கொண்டு 'முன்னணி'யில் செயற்கைத்தனமாக நின்று கொண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தின் சுவாரசியத்தை முழுமையாக்குவது இதன் ஒளிப்பதிவு (பாலாஜி ரங்கா). படத்தின் பெரும்பான்மையும் (ஒரே) இரவில் நிகழும் காட்சிகளின் கோர்வை என்பதால் இருளின் அழகியலுடன் நிதானமாக நகரும் காட்சிகள் வசீகரிக்கின்றன.
இரை தேடுதலுக்கும் உயிர் வாழ்தலுக்குமான போராட்டத்தில் இடையில் தத்தளிக்கும் வாழ்க்கையின் நிதர்சனத்தையும் பாவத்திற்கும் மனந்திரும்புதலுக்குமான ஆன்மிக இடைவெளியையும் மிஷ்கின் பல காட்சிகளின் மூலமாக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். உயிர்களுக்கிடையே கானகத்தில் நிகழும் போராட்டத்தைப் போலவே இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. காட்டிலாவது, புலி மானைத் தின்னும், யானை புல்லைத் தின்னும் எனும் தெளிவான இயற்கை விதிகளும் அடையாளங்களும் உள்ளன. உயிர்களும் தங்களின் இயல்புகளை எப்போதும் மீறுவதில்லை. ஆனால் காங்கீரிட் காட்டில் நிகழும் இந்தப் போராட்டத்தில் எது ஓநாய் எது ஆடு. எது புலி என்று தெரிவதில்லை. காவல்துறைக்குள் குற்றவாளிக்கு சாதகமாக இயங்கும் ஓநாய் ஒளிந்திருக்கிறது. 'அப்பாவி இளைஞன் இறந்தாலும் பரவாயில்லை.கொலையாளியை சுட வேண்டும்' என்று குரூரமான புலித்தனத்தைக் காட்டுகிறது காவல்துறை. திருந்திய ஓநாயும் ஓநாயாக மாறுகிற ஆடும், இவர்களுக்கிடையிலான அப்பாவி ஆட்டுக்குட்டிகளும் என ஒரு குரூரமான சாகச விளையாட்டை தனது பிரத்யேகமான திரைமொழியின் நிகழ்த்திக் காட்டியுள்ளார் மிஷ்கின். (என்றாலும் எண்ட் கார்டில் A for Apple என்பது போல யார் ஓநாய், யார் புலி என்பதையெல்லாம் நடிகர்களின் பெயர்களோடு இணைத்து அடையாளப்படுத்தியிருக்க வேண்டியதில்லை).
இத்திரைப்படத்திலுள்ள தர்ககப் பிழைகளையும் யதார்த்தத்தை விட்டு விலகுகிற விஷயங்களையும் பற்றி ஒரு பட்டியலே போடலாம். கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதில் உள்ள ஒழுங்கற்ற தன்மையையும் சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரு காட்சியில் மருத்துவக் கல்லூரி மாணவன், கொலையாளியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரு குழந்தையை கொல்வதாக மிரட்டி பணிய வைக்கிறான். இவன்தான் மருத்துவத்தின் மீதுள்ள பிரியம் காரணமாக, காவல்துறை பற்றிய பயத்தையும் மீறி கொலையாளியை முன்னர் அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றுகிறான். அது மாத்திரமல்ல, ஒரு சிக்கலான சூழலிலும் காலில் சுடப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு முதலுதவி செய்கிறான். எனில் உயிரைக் கொல்லும் துணிவோ வன்மமோ இவனுக்கு எப்போதும் வராது என்பது 'மிகுந்த புத்திசாலியாக' சித்தரிக்கப்படும் கொலையாளிக்குத் தெரியும். எனினும் ஏன் அந்த இளைஞனுக்கு பணிய வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்பிப் பார்ககலாம். ஆனால் இத்தனை கேள்விகளையும் எழுப்ப விடாமல் மிஷ்கினின் அற்புதமான திரைக்கதையும் திரைமொழியும் இதை அற்புதமான ஒரு அனுபவமாக ஆக்கியிருக்கிறது என்பதாலேயே இத்திரைப்படத்தை எளிதில் புறக்கணித்து விட முடியாது.
முன்னரே குறிப்பிட்டபடி மிஷ்கினின் இந்தத் திரைப்படத்தை மற்ற தமிழ் திரைப்படங்களுடன் மாத்திரமே ஒப்பி்ட்டு ஆறுதலடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஹாலிவுட், கொரியத் திரைப்படங்கள் எல்லாம் உள்ளடகத்திலும், உருவாக்கத்திலும், காட்சியமைப்புகளிலும், இந்தியத் திரைப்படங்கள் துரத்தி துரத்தி தங்களின் மோசமான வார்ப்பில் நகலெடுக்க கோருகிற அசாத்தியமான உயரத்தில் இருக்கின்றன. தமிழ் திரைப்படமும் ஒரு நாள் அந்த உயரத்தை தொட முடியும் என்கிற நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்திருப்பதே மிஷ்கினின் சாதனை.
- உயிர்மை - நவம்பா 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
suresh kannan