இந்த வகைமையிலான பிரக்ஞையுடன் தமிழில் வந்த முதல் திரைப்படம் என தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டத்தை சொல்லலாம். அதைத் தொடர்ந்து 'சூது கவுவும்' போன்ற முயற்சிகள். இப்போது 'மூடர் கூடம்'.
என்றாலும் ஆரண்ய காண்டம், மற்றவை தொட்டு விட முடியாத, ஒப்பிட முடியாத அதே உயரத்திலேயே இருக்கிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
***
முதலில் இயக்குநர்
நவீனைப் பாராட்டி விடலாம். முதல் படமாக இருப்பதால் தன்னைத் தக்க வைத்துக்
கொள்ள பாதுகாப்பாக வழக்கமான தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டின் பின் ஓடாமல்
வித்தியாசப்பட்டு நிற்க வேண்டும் என்கிற முடிவிற்காகவும்
பிடிவாதத்திற்காகவும். நவீனுக்கு நவீன சினிமாவின் இலக்கணங்கள் குறித்த
அறிவும் இலக்கணமு்ம் தெரிந்திருக்கிறது என்பதை அறியவே மகிழ்ச்சியாக
இருக்கிறது. வீட்டில் வளரும் நாய் முதற்கொண்டு ஒவ்வொரு
கதாபாத்திரத்திற்குமான பிரத்யேக வார்ப்பையும், பின்புலத்தையும் கதைச்
சூழலுக்கு பொருத்தமாக உருவாக்கியுள்ளார். அப்படியே ஒவ்வொரு
பாத்திரத்திற்கும், துவக்க கால மெளன சினிமா, அனிமேஷன் என்று வகைவகையான
பிளாஷ்பேக்குகள். (அதற்காக கிளைமாக்ஸ் முன்பு வரை கூட பிளாஷ்பேக்
நீட்டித்திருப்பது சற்று ஓவர்தான்).
அதே போல்
திரைக்கதையையும் பாத்திரங்களையும் பாடல்களையும் கூட தன்னுடைய
பிடிவாதத்தின்படியே உபயோகித்திருக்கிறார் என யூகிக்கிறேன். படத்தில் பல இழைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன. சுமார்
பன்னிரெண்டு வயதுச் சிறுமிக்கு, 25 வயது இளைஞன் மேல் வரும் அந்த
இனக்கவர்ச்சி, இதுவரை தமிழ் சினிமா பார்த்திராதது. வயதுக்கு வந்த பெண்ணை,
தந்தை உட்பட எவரும் அடிக்கக்கூடாது என்பதற்கு சொல்வதற்கான பழமையான
காரணமும் அதில் அடங்கியிருக்கிறது. அதற்காக தமிழ் சினிமாவிலிருந்து உதாரணம்
ஒன்றை முன்னோட்டமாக அவர் தந்திருப்பதும் சிறப்பு. அதே போல் செண்ட்ராயன்
எனும் திறமையான இளைஞனை சிறப்பாக பயன்படுத்தியிருப்பதும்.
சாதாரணமாகச்
சென்று கொண்டிருக்கும் வசனங்களில் சில 'அட' என்று நிமிர்ந்து
பார்க்குமளவிற்கு புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. (காதல் தோல்வி
-ன்றதுலாம் ஆடம்பரமான விஷயம். சோத்துக்கே லாட்டரி அடிக்கற நமக்கு
அதெல்லாம் தேவையா). அது போல் கஞ்சா வாங்க வருகிறவர் பனியனில் உள்ள காந்தி
படம், சுடப்படுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறவர் பந்து விளையாடும்
படம்... என்று பல காட்சிகள், எதிர்பாராத இடங்களில் வித்தியாசமான பாடல்
காட்சிகள் என ரகளையாகவே உள்ளன.
***
***
ஆனால்
படம் எங்கே தவறி விட்டது என்றால் படத்திற்குள் இயங்கியிருக்க வேண்டிய
நம்பகத்தன்மையிலும் தீவிரத்தன்மையிலும். ஒரு சிறந்த நகைச்சுவைப் படத்தை
எடுப்பதே கடினமான காரியம் எனும் போது, எதிர் அறத்தினைப் பாட வேண்டிய
பிளாக் காமெடி திரைப்படத்தை உருவாக்குவது இன்னமும் சிரமமான காரியம்.
நகைச்சுவையான சம்பவங்கள், காட்சிகள், வசனங்கள் என்றாலும் மைய இழையாக ஒரு
தீவிரத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
க்ளிஷே எனும் விஷயத்தை
பகடி செய்ய வேண்டிய இந்த வகைத்திரைப்படமே பல க்ளிஷேக்களில் மாட்டிக்
கொண்டியிருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு வீட்டை நான்கைந்து
முட்டாள்கள் இணைந்து கொள்ளையடிக்க முடிவு செய்வதிலிருந்து பொம்மைக்குள்
வைரத்தை ஒளித்து வைப்பது வரை பல க்ளிஷேக்கள். மேலும் பல நம்பகத்தன்மையற்ற
காட்சிகளாலும் சுவாரசியமற்ற திரைக்கதையினாலும் சமயங்களில் முதிர்ச்சியற்ற
ஒரு டெலி பிலிமைப் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.
ஒரு
காட்சியில் துப்பாக்கியைக் காட்டினால் பின்பு எங்காவது அது வெடித்தேயாக
வேண்டும் என்கிற அடிப்படையெல்லாம் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிற
இயக்குநர் நவீன் சிறப்பாகவும் நடித்திருக்கிறார். ஆனால் இன்னமும் கடுமையாக
உழைத்திருந்தால் 'மூடர் கூடத்தை' சிறப்பாக உருவாக்கியிருந்திருக்கலாம்.
என்றாலும் அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிற அவருக்குப்
பாராட்டுக்கள்.
வழக்கமான மசாலா சினிமாக்களை
எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாய் பிடிக்காது. மாறாக
அதிலிருந்து சலித்துப் போய் மாற்று முயற்சிகளை விரும்பகிறவர்களுக்கும்
ஆதரிக்க விரும்புகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஆறுதலான முயற்சியாகத்
தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.
suresh kannan