Thursday, September 06, 2012

பீட்சா - இசை வெளியீடுமேற்கத்திய நாடுகளில் குறும்படங்களுக்கென்று பிரத்யேக ரசிகர்களும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அதற்கென்று தனியான திரையிடல்களும் விழாக்களும் வணிகமும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ச்சூழலில் குறும்படம் என்றொரு வஸ்து இருப்பதையே நெடுங்காலமாக யாரும் சீந்தாமல் இருந்தார்கள்.  இப்போது இணைய வட்டத்தைத் தாண்டி பொது வெளியில் குறும்படங்கள் சமீபத்தில் கவனத்தைப் பெற துவங்கியிருக்கின்றன. குறும்படங்களும் முழு நீளத் திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த காலம் மெல்ல மறைகிறது. பாலாஜி மோகன் தன்னுடைய குறும்படமான 'காதலில் சொதப்புவது எப்படி'யை வெற்றிகரமாக முழு நீளத் திரைப்படமாக மாற்றியது பல குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாசலைத் திறந்திருக்கிறது. அவர்களை பல சினிமா தயாரிப்பாளர்களும் சினிமா ஆர்வலர்களும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாலாஜி மோகனைத் தொடர்ந்து குறும்பட உலகிலிருந்து முழு நீளத் திரைப்பட உலகிற்கு சமீபத்தில் வந்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் இவரது பல குறும்படங்களை அப்போதே ரசித்திருக்கிறேன். மடற்குழும காலத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த கவிஞர் ராஜ்குமார் மூலமாக எனக்கு கார்த்திக் அறிமுகமானார். திறமையான இளைஞர். என்னவொன்று.. ரஜினிகாந்த்தைப் பற்றி ஏதாவது சொன்னால் மாத்திரம் 'சுருக்'கென்று கோபம் வந்துவிடும். ராஜ்குமாரும் அவ்வாறே. எனக்கும் இவருக்கும் இணைய விவாதங்களில் வாய்க்கா தகராறு ஒன்று ஏற்படுமென்றால் அது ரஜினி குறித்த சர்ச்சை மற்றும் விவாதங்களில் மாத்திரமே. மற்றபடி பழக இனிமையானவர்.

கார்த்திக்கின் நீர், ப்ளாக் அண்ட் வொயிட் போன்ற குறும்படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போதே ரசித்துப் பார்த்திருக்கிறேன். இணையத்தில் இவரது குறும்படங்களுக்கென்று பெரிய ரசிக வட்டம் இருக்கிறது என்று அறிகிறேன். நீர் குறும்படம் தொடர்பாக தொலைபேசியில் அவரோடு உரையாடினது நினைவிருக்கிறது.. கேமரா வைத்திருக்கிற எவரும் குறும்படம் எடுத்து விட முடியும். ஆனால் திரைக்கென்று உள்ள பிரத்யேக மொழியை அது குறித்தான பிரக்ஞையோடு பதிவு செய்பவர்கள் குறைவே. கார்த்திக்கின் குறும்படங்களில் அதற்கான தடயங்கள் தெரிகின்றன.

பீட்சா இசை வெளியீட்டிற்கு அழைத்திருந்தார் கார்த்திக். சத்யம் திரையரங்கம். நான் சற்று தாமதமாக அதற்கான படபடப்புடன் சென்றிருந்தேன். ஆனால் அப்போதுதான் நிகழ்ச்சி துவங்கியது ஆசுவாசமாக இருந்தது.  சினிமாவிற்குரிய பிரத்யேக அலட்டல்கள் அல்லாமல் நிகழ்ச்சி இயல்பாக இயங்குவதற்கு பிரதானமான காரணமாயிருந்தவர் தொகுப்பாளர் பாலாஜி. சமயங்களில் அதீதமாய் பேசினாலும் இவரது டைமிங்கான கமெண்ட்டுகள் சுவாரசியமாக இருந்தன. 


 
பீட்சாவின் டீசர் வெளியிடப்பட்டது. முதலில் கவர்ந்தது அதன் ஒளிப்பதிவு. ரொமாண்டிக் திரில்லர் என்று போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் திரில்லர் தொடர்பான காட்சிகளை விட ரொமாண்ட்டிக் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக ஹீரோவும் -யினும் கொட்டும் மழையில் பிளாஸ்டிக் படுதாவினுள் இருக்கும் பிரேம் கண்ணிலேயே நிற்கிறது. படுதாவினுள்.... யினுக்கு...ரோ.. நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநருக்கு நல்ல ரசனை. எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது பின்னணி இசையும் திரில்லர் வகைப்படங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருந்தது.

இது போன்ற திரில்லர் வகை படங்களுக்கு பாடல்கள் தேவையில்லையெனினும் இந்தியச் சினிமாவின் சில சம்பிரதாயங்களை அத்தனை எளிதில் மீறி விட முடியாது. அட்டகத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின அதே இசை இயக்குநர் சந்தோஷ் நாராயணன். மூன்று பாடல்கள். முதல் மெலடியான பாடலை இசை இயக்குநரே பாடினார். 'ஆசை ஓர் புல்வெளி'... சாயலில் அற்புதமாக இருந்தது. மாண்டேஜ் பாடலாக இருக்கக்கூடும். பாடல் முழுக்க கிடாரின் ஆதிக்கம். அடுத்த பாடலை ஹரிசரணும்.. இன்னொரு இளைஞரும் பாடினார்கள். ஹரி ராக் ஸ்டைலில் உச்சஸ்தாயியில் பாட (அவரது குரல் எவ்வித சிரமுமுமில்லாமல் இலகுவாக மேலே பறக்கிறது). இன்னொரு இளைஞர் ராப் பாணியில் இணைந்து பாடினார். படத்தில், பரபரப்பான காட்சிகளின் பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கும் என யூகிக்கிறேன்.

மூன்றாவது பாடல் பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியது. கானா பாலா பாடியிருக்கிறார். அவரது வழக்கமான கானா இசைக்காக அவரைப் பயன்படுத்தாமல் இன்னொரு பாணியில் அவரைப் பாட வைத்தது இசை இயக்குநரின் பரிசோதனை ஆர்வத்தைக் காட்டுகிறது. ஜாஸ் பாணி (Jazz) இசையொலிக்க, கானா பாலா ஓர் ஆப்ரிக்க -அமெரி்க்க பாடகருக்கான தேர்ச்சியுடன் அதைப் பாடியிருக்கிறார். இயக்குநர் காட்சிக் கோர்வைகளில் இந்தப் பாடலை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிய ஆவலாக இருக்கிறது.

பாடல் மாத்திரமல்ல. நிகழ்ச்சியில் பேசியவர்களிலும் கானா பாலாவின் பேச்சுதான் சிறப்பாக இருந்தது. "என்னமோ ஜாஸ் ங்கறாங்க.. ப்ளூஸ் -ங்கறாங்க. எனக்கொன்னும் அதெல்லாம் தெரியாது்ங்க. என்னமோ பாடச் சொன்னாங்க. பாடிட்டேன்"... ரெக்கார்டிங் தியேட்டரில் விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொல்லி இவர் பாடின அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்ட போது அரங்கில் ஒரே ஆரவாரம். ஆனால் மனிதர் எளிமையாக, அப்பாவித்தனமாக பேசினாலும்... "பேமெண்ட் எல்லாம் செக் வேண்டாம். கிழிஞ்சு போன நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. ரிசர்வ் பாங்கில் மாத்திக்கறேன். கேஷாவே கொடுங்க'.... என்று விவரமாகவே இருக்கிறார்.


கார்த்திக் சுப்பராஜின் 'பீட்சா' நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படமும் அந்த எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.

()

பரவை முனியம்மா தவிர அனைத்து நடிகைகளுடன் இணைந்து இதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் உண்மைத் தமிழன் அண்ணாச்சியை ஒரு பத்திரிகையாளராக நிகழ்ச்சியில் சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சியை அத்தனை ஆர்வமாக கவனிக்காமல் மொபைல் இணையததில் எதையோ நோண்டிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அப்படியும் பக்கம் பக்கமாக எழுதுவது எப்படி என்று ஆச்சரியம். நீஎபொவ - இசை வெளியீட்டு நிகழ்ச்சியைப் பற்றி சுமார் முப்பது பக்கம் எழுதி வெளியிட வைத்திருக்கிறாராம். மூச்சைப் பிடித்துக் கொண்டு வாசிக்க காத்திருங்கள். கவிஞர் ராஜ்குமாரையும் சந்தித்து சில நிமிடங்கள் உரையாட முடிந்தது.

suresh kannan

2 comments:

மயிலாடுதுறை சிவா said...

Arumai SK

Sivaa....
Washington

Unknown said...

பீட்ஸான்னு ஒரு படம். அப்படி எல்லோரும் கொண்டாடுற அளவுக்கு இந்தப் படத்துல என்ன இருக்குன்னு தெரியல. முதல்ல படத்தோட பெயர் பாருங்க..பீட்ஸான்னு இங்கிலிஷ் பெயரை வச்சு பார்க்க வர்றவங்களை ஈர்க்கப் பார்க்கிறார் டைரக்டர். ஏன் இட்லி, வடை, பொங்கல், பொறி உருண்டைன்னு வைக்க வேண்டியதுதானே..வைக்க மாட்டாங்க...ஏன்னா இது கலிகாலம்...தினமும் சாப்பிடறத கண்டுக்க மாட்டாங்களாம்.. ஆனா எங்கேயோ வெளிநாட்டுலருந்து வந்தத கொண்டாடுறா.

கதை என்னன்னு பார்த்தீங்கன்னா கதாநாயகனும் கதாநாயகியும் கல்யாணம் கட்டாமலேயே சேர்ந்து வாழுறாங்க.. கதாநாயகி கர்ப்பம் ஆகிடுறா. என்ன கதையோ கண்றாவியோ? அப்பலருந்து என்னால சீட்டுல உட்கார முடியல. இந்தப் படத்தைப் பார்த்து இளைய சமுதாயமே கெட்டுப் போகப் போறது. ஹீரோ முகத்தைப் பார்த்தா நாலு நாளைக்கு சாதம் இறங்காது. அப்படியொரு முகம். ஹீரோயின் அதுக்கும் மேல. அந்தப் பொண்ணும் அதோட கலரும் பேச்சும். முதல்ல கேரளாவுலருந்து நடிகைகளைக் கூட்டிட்டு வர்றதை தமிழ் சினிமா உலகம் நிறுத்தணும். நயந்தாரா, அசின் வேணும்னா இருந்துட்டுப் போகட்டும். மற்றவங்களையெல்லாம் துரத்திடணும். என்னமோ தமிழ்நாட்டில் அழகா, சிவப்பா நடிகைகள் இல்லாத மாதிரி கூட்டிட்டு வர்றாங்க. எந்த மலையாளப் படத்துலையாவது தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புக் கொடுத்திருப்பாங்களா? நாம மட்டும் கொடுக்குறதுல என்ன நியாயம் இருக்கு? பாவனா, விஜயலக்ஷ்மின்னு அழகேயில்லாத நடிகைகளைத் தமிழ்ல அறிமுகப்படுத்தினதுல ஆரம்பத்துல மிஸ்கீன் மேல எனக்கு ரொம்பக் கோபம் இருந்தது. ஆனா அதுக்கும் சேர்த்து லட்டு மாதிரி ஒரு இந்திய அழகியையும், ஒரு வெள்ளைக்கார அழகியையும் முகமூடியில் அறிமுகப்படுத்தினதுல எனக்கு அவர் மேல இருந்த கோபம் எல்லாம் போயிட்டுது. இதுக்காகவே மிஸ்கீனை நேர்ல சந்திச்சு பாராட்டினேன்..அடுத்தடுத்த படங்கள்லையும் இந்திய அழகிகள அறிமுகப்படுத்தப் போறதா சொன்னார்.. நல்லாருக்கட்டும்.

ரம்யா நம்பீசனுக்கு வரேன். ஏன் இந்தப் பொண்ணு இப்படி இருக்கு? படத்தோட கிளைமாக்ஸ்ல எனக்கு இவ மேல பயங்கரக் கோபம். திருட்டுப் பொண்ணு.. என்ன ஒரு கெட்ட புத்தி? ஹீரோவுக்கு கன்னத்துல அறையுறா..நானா இருந்தா கையைப் பிடிச்சு வெண்டிக்கா உடைக்கிறமாதிரி உடைச்சுப் போட்டிருப்பேன்..இதெல்லாம் ஜீன்ஸ்லருந்து வர்றது.. இவருக்கெல்லாம் தமிழ்ப் படங்கள்ல சான்ஸே கொடுக்கக் கூடாது. அதுல வேற சொந்தக் குரல்ல பேசி ஆளைக் கொல்றா. பேசாம சின்மயிக்கு குரல் கொடுக்கச் சொல்லியிருக்கலாம். சின்மயி குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் கச்சேரி செய்ய ஆரம்பிச்சா நாள் முழுக்க உட்கார்ந்து கேட்டுட்டேயிருப்பேன். அவரோட குரலைப் போலவே அவரும் அழகு..பேசாம அவரையும் சினிமால நடிக்க வைக்கலாம். ஆனா இந்த மாதிரி குப்பைப் படங்கள்லயெல்லாம் சின்மயி நடிக்க மாட்டார்..

யாரும் பீட்ஸா பார்க்க விரும்பினீங்கன்னா இனிமே விரும்பாதீங்க.. படம் படு மட்டம். நம்ம பண்பாடுகளை குழி தோண்டிப் புதைக்குது.. கதாநாயகன், கதாநாயகின்னா சமூகத்துக்கு முன்மாதிரியா இருக்கணும்..நல்லவங்களா இருக்கணும்..ஹீரோ வீரமானவனா, நாலு பேர் இல்ல நாப்பது பேர் வந்தாலும் அசராம சண்டை போடக் கூடியவனா இருக்கணும்..ஹீரோயின்னா அடக்க ஒடுக்கமா, ஹீரோவுக்கு அடங்கினவளா இருக்கணும்... இது எதுவுமே படத்துல இல்ல..இப்படித்தான் முன்னாடி ஆரண்ய காண்டம்னு ஒண்ணு வந்துச்சு..இந்தப் படத்து டைரக்டர் கார்த்திக் மட்டும் என் கண்ணுல சிக்கினா நல்லதா நாலு கேட்கலாம்னு இருக்கேன்.