Saturday, July 14, 2012

பில்லா 2-ம் ஆட்டு மூளைகளும்


பில்லா 1 -ஐ இன்னும் நான் பார்க்கவில்லை (நயனதாராவின் அந்த புகழ்பெற்ற பிகினி காட்சி தவிர்த்து) என்கிற அதிமுக்கிய குறிப்போடு இந்தப் பதிவை துவங்க  விரும்புகிறேன்.

உள்ளடக்கம் எதுவாக இருக்கும் என்கிற தெளிவான யூகத்தை வைத்துக் கொண்டே இது போன்ற வணிகநோக்குத் திரைப்படங்களை படம்வெளிவந்தவுடனேயே அடித்துப் பிடித்து பார்த்துவிட்டு பின்பு அதில் நொட்டை & நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பதில் உள்ள ஆர்வம் எனக்கு எப்போதோ விட்டுப் போயிற்று. அதையெல்லாம் கடந்து வந்து விட்டேன். ஆனால் பாருங்கள். விதி வலியது. பில்லா -2ஐ ஓசியில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலவசமென்றால் ஓட்டை விழுந்த ஆணுறையைக் கூட ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வைத்துக் கொள்கிற தமிழ் மரபிலிருந்து வந்த காரணத்தினால் சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் அஜித் குமார் மேல் எப்பவுமே எனக்கொரு சாப்ட் கார்னர் உண்டு. இந்த ஆளின் ஸ்மார்ட்மெண்ட்ஸ் மேல் ஒரு ரகசியக் காதல் உண்டு. 'வெள்ளையாய் இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா' என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்துத் திணிப்புகள் உறைந்த ஆழ்மனதில் 'சிவப்பு அழகு' என்கிற உணர்வு பிரக்ஞையை மீறி தன்னிச்சையாய் மேலெழுவதும் ஒரு காரணமாயிருக்கலாம். (நான் சரியாத்தான் பேசறனா).

ஒரு பக்கா கமர்சியல் படத்தை பார்க்கப் போகிறோம் என்று தெளிவாக தெரிந்திருந்ததாலும்  ஒரு பிரபலநடிகரின் படத்தின் முதல் நாளில் ரசிக கனவான்கள் செய்யப் போகும் உற்சாக அபத்தங்களைப் பற்றி அறிந்திருந்ததாலும் ஒரு கூட்டுக்கலவிக்கு என்னை விரும்பி ஒப்படைப்பதற்கான தயார்ப்படுத்துதலுடனான மனநிலையுடன்தான் சென்றிருந்தேன். படம் எத்தனை திராபையாக இருந்தாலும் அதைப் பற்றி மூச்சு விடக்கூடாது என்கிற உறுதியுடன்தான் இருந்தேன். 'பிரதியில் உறைந்திருக்கும் நுண்ணரசியல். கலையின் அரூபத்தன்மை, கோட்பாடுகளை மீறின கோளாறுகள் என்றெல்லாம் பில்டப்புடன் எழுத வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனாலும் பாருங்கள்..... முடியல..

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் கதை/திரைக்கதை உருவாக்க குழுவினர்களையும் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்வது...இன்றைக்கு ஒரு சராசரி தமிழ் சினிமா பார்வையாளனுக்கு அடுத்த நிலையில் உள்ளவன் (எனக்குள் இருப்பவனையும் உள்ளிட்டு) கூட சில பல நல்ல திரைப்படங்கள் பார்த்து....முன்னேறி விட்டான் ஐயா. அச்சுப்பிசகாத மசாலா என்றால் கூட அதில் சிறிதாவது புத்திசாலித்தனத்தையும் சுவாரசியத்தையும் ஒரிஜினாலிட்டியையும் எதிர்பார்க்கிறான். இன்னமும் அவனை ஆட்டுக்கு இருக்கிற மூளை கூட இல்லாதவன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது மிக அநியாயம். உங்களின் அடுத்த கதை விவாதங்களில் இதை சிறிதாவது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

()

பில்லா -2ல் கதை என்று ஒரு சுக்குமில்லை. பரவாயில்லை. கதையை வைத்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்கிற பாலபாடத்தை  தாராளமாக மீறிக் கொள்ளலாம். தவறேயில்லை. ஆனாலும் பாருங்கள். இந்த திரைக்கதை என்றொரு சமாச்சாரம் இருக்கிறதே. அதையாவது வலிமையாக சுவாரசியமாக உருவாக்க வேண்டும். உச்சபட்ச உழைப்பை அதற்கு செலுத்த வேண்டும். இப்படி எதற்குமே மெனக்கெடாமல் ஒரு பிரபல நடிகரின் பிம்பத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் வேகாத சப்பாத்தி சுடுவேன் என்று அடம்பிடித்தால் எப்படி?

அஜித் குமார் செம ஸ்டைலாக இருக்கிறார். 'அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆண்மகன் எவனோ அவனே. காதல் மன்னன்' என்று வைரமுத்து எழுதின மாதிரி லுங்கி சட்டையிலும் படு கிளாமராய் இருக்கிறார். மருத்துவர் அறிவுறுத்தலோ அல்லது அடு்த்த படத்திற்கான தயார்ப்படுத்துதலோ என்னவோ... அவர் தாராளமாய் 'வாக்கிங்' போய் உடம்பை திடமாக வைத்துக் கொள்ளட்டும். ஆனாலும் படப்பிடிப்பிலும் நடந்து கொண்டே இருந்தால் எப்படி ஐயா?. சரி விடுங்கள். சில காட்சிகளில் 'தல' ஸ்மார்ட்டாய்தான் இருக்கிறது.

திரையரங்கில் பின்இருக்கையில் இருப்பவரிடம் 'காலை கொஞ்சம் இடிக்காம இருங்க' என்று சொல்லி விட்டுத் திரும்பும் அந்த சொற்ப தருணத்திற்குள், பில்லா திரையில் குறைந்தது சுமார் எண்பது பேரை 'போட்டுத் தள்ளுவதெல்லாம்' சற்று அதீதம்தான். பாப்கார்ன் சமயம் வருவதற்குள் சுமார் ஐநூறு பேராவது பரலோகம் போய்ச் சேர்கிறார்கள். மனித இருப்பின் நிச்சயமின்மை குறித்தும்  அதிகரித்துக் கொண்டே வரும் உலக மக்கள் தொகை குறித்த கவலை சார்ந்த ஆசுவாசமும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றன.

சோமாலிய கடற்கொள்ளையர்கள் கூட செய்யத் தயங்கும் காரியங்களையெல்லாம் கூட பில்லா அசால்ட்டாக ஏற்றுக் கொள்கிறார். அவர் கூட ரெண்டே ரெண்டு பேர்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாராவது இரண்டு மாஃபியா ஆட்கள் ஒரு கஷ்டமான அஸென்மென்டை பற்றி பேசிக் கொண்டிருந்தால் அதை (ஒட்டுக்) கேட்டுக் கொண்டிருக்கும் பில்லா உள்ளே மூக்கை நுழைத்து அதை அசால்ட்டாக தான் ஏற்றுக் கொள்கிறார்.

()

பில்லாவின் இந்த அசகாய சூரத்தனத்தை இப்படியாக கற்பனை செய்துப் பார்த்தேன்.

பாஜகவின் தலைமை அலுவலக முகாம். உயர்மட்ட தலைவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

"என்னய்யா.. இந்த மன்மோகன் சிங்கை கஷ்டப்பட்டு எப்படி கலாய்த்தாலும் சூடு  சொரணையே இல்லாமல் ஏதோ "பெங்காலி ஸ்வீட் சாப்பிடறீங்களா".. ன்னு கேட்டா மாதிரியே மழுப்பலா சிரிக்கிறாரே. இந்த ஆளை என்னதான்யா பண்றது.. நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறா மாதிரி நாலே கேள்வி கேட்கணும். இப்படிச் செய்ய யாருமே இல்லையா?"

பக்கத்திலேயே பான்பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பில்லாவிடம் அவரது வலது கை கேட்கிறார். "என்ன பில்லா.. சும்மா இருக்கீங்க.. எத்தனையோ பாத்துட்டம். ஒத்துக்கங்க".

சற்று யோசித்து விட்டு பில்லா சொல்கிறார். "வேணாம். ரொம்ப கஷ்டம்."

()

என்றாலும் பல அசந்தர்ப்பமான சூழ்நிலைகளில் வலியச் சென்று மாட்டிக் கொள்கிறார். மதியத்திற்கு தயிர்சாதமும் பூண்டு ஊறுகாயும் சாப்பிடும் நடுத்தரவர்க்க குமாஸ்தா மனோநிலை வாய்த்த நாமே பலவற்றை எளிதாக யூகிக்க முடிகிற போது ... இண்டர்நேஷனல் வெப்பன் பிஸினஸ் செய்யத்துணியும் பில்லா இப்படி ஒரு 'கோயிஞ்சாமி'யாய் இருப்பதை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது. கூடவே இருக்கும் நண்பன் காட்டிக் கொடுப்பது.. முன்னாள் பாஸிடம் இருந்த காதலி துரோகம் செய்வது... என்று பல அபத்தமான கிளிஷேக்கள்...


படத்தில் பாராட்ட வேண்டிய விஷயமே இல்லையா என்றால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. பாடல் காட்சிகளில் பிரதான நடன நங்கைகள் முதற்கொண்டு சுற்றி ஆடுபவர்கள்.. (ஒரு பிரேமிலேயே மனதைக் கொள்ளையடித்த அந்த பொன்னிற முடியழகி உட்பட) என்று எல்லா கன்னிகைகளும் அளவெடு்த்துச் செய்தது மாதிரி 'நச்'சென்று இருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதம் வைத்து அழகு பார்க்கலாம் போலிருக்கிறது. அதிலும் பில்லாவின் so called நண்பியாக வரும் அரபு - பிரேசில் கூட்டுத்தயாரிப்பான புருனா அப்துல்லா ஸ்கேலில் அளவெடுத்துச் செய்தது மாதிரி நேர்கோட்டு வாளிப்புடன் இருக்கிறார். இவர் பிகினியில் வரும் காட்சிகளில் மூச்சு திணறுகிறது. (மேலேயுள்ள புகைப்படத்தில் அஜித்திற்கு இருபக்கமுமாக நிற்பதில்  இடதுபக்கத்தில் உள்ள, என்னை ஒரு வாரம் தூங்க விடாமல் செய்த சொர்க்கத்தை கவனியுங்கள்)

பார்வதி ஓமனக்குட்டன் என்றொரு பரிதாப ஜீவனும் இதில் நடித்திருக்கிறது. ஏசியாநெட் ரியாலிட்டி ஷோவில் வந்திருந்தால் கூட இன்னமும் அதிக காட்சிகளில் தோன்றியிருக்கலாம்.

கில்லி படத்திலிருந்தே ராஜசேகரின் அதிரடி காமிராவை அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன். மனிதர் குறைவைக்கவில்லைதான். ஆரம்பக்காட்சிகளில் கச்சிதமாக திருநெல்வேலித்தமிழ் பேசும் இளவரசு பிள்ளைவாளை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாம். படம் அந்தரத்திலேயே பறந்து கொண்டிராமல் கொஞ்சம் கீழே வந்திருக்கும்.

வசனம் இரா.முருகன்.. "நல்லவங்களைக் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம்" "ஆசை இல்ல அண்ணாச்சி. பசி" போன்ற அபூர்வ பஞ்ச்சுக்களில் தியேட்டரில் விசில் பறக்கிறது. "நீ 'போ' ன்னு சொல்லுவேன் -னு முன்னாடியே தெரியும்' போன்ற மயிலிறகுள் ஆங்காங்கே. ஆனாலும் இந்த 'போராளி - தீவிரவாதி' கான்செப்டைத்தான் என்ன முயன்றாலும் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

படத்தில் வில்லன் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையே வைத்திருந்தாலும் கூட அதில் ஒன்றையாவது பயன்படுத்தாமல் இன்னமும் டுஷ்யூம் டுஷ்யூம் என்று கையால் சண்டை போடுவது... ஹெலிகாப்டரில் உயிரைப் பணயம் வைத்து தொங்குவது.. போன்ற காமெடிகளையெல்லாம் எப்போதுதான் கைவிடுவார்கள் என்று தெரியவில்லை.

தொழில்நுட்பமே சினிமாவாகி விடாது என்பதை பிடிவாதமாக ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

()

ராமேஸ்வர அகதிகள் முகாமில் படம் துவங்கும் போது சுவாரசியமாக இருக்குமோ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் "ஹலோ மிஸ்டர்.. நீ பார்ப்பது தமிழ் சினிமா" என்று தலையில் தட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். ஆனால் அகதிகள் முகாமை ஏதோ சுவாரசியமான டீக்கடை பெஞ்ச் மாதிரி சித்தரித்திருப்பதெல்லாம் அநியாயம். "நாங்கதான் கஷ்டப்படறோம். உங்க அக்காதான் மெட்ராஸ்ல இருக்காங்க இல்ல. நீ அங்க போய் இருக்கலாமே? என்று அஜித்தி்டம் ஒரு பாத்திரம் பேசுகிறது. யதார்த்தத்தில் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறுவது எல்லாம் இத்தனை எளிதா என்று தெரியவில்லை.

குடும்ப புகைப்பட ஆல்பத்தையும் சில பின்னணிக் காட்சிகளையும் வைத்து நகர்த்தியிருக்கும் அந்த ஆரம்ப டைட்டில் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. 'உனக்குள்ளே மிருகம்' பாடலை ஒரு கிராஃபிக் நாவல் போன்ற தோற்றத்துடன் உருவாக்கியிருப்பது நன்றாக இருந்தது. படத்தின் ஒரே  மெலடியான 'இதயம்...இந்த இதயம்...(ஸ்வேதா பண்டிட் அருமையாக பாடியிருக்கிறார்) படத்தில் காணவில்லை. (ஓமனக்குட்டன் உருகி உருகி பாடியிருப்பாராக்கும்). படத்தின் இசை ஆல்பத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது....'டான்... டான்... என்று வரும் Gangster பாடல்தான். ஆனால் இதை ஆரம்பத்திலேயே பயன்படுத்தியிருக்கலாம். படத்தின் இறுதியில் யுவன் அஜித்திற்கு போட்டியாக கோட், கண்ணாடி போட்டுக் கொண்டு அசத்தலாக தோன்றுகிறார்.

ஆனால் 'படம் எப்போதடா முடியும்' என்று கொலைவெறியுடன் அவசரமாக கலைந்து செல்லும் ரசிகர்கள் காரணமாக இந்தப் பாடலை சாவகாசமாக பார்க்க முடியவில்லை.

()

படத்தின் இயக்குநர் 'சக்ரி டோலட்டி'. யாரென்று யோசித்தால் 'சலங்கை ஒலி' யில் நடனக்கலைஞர் கமலை சொதப்பலாக படமெடுத்த சிறுவன் என்பது நினைவிற்கு வந்தது. இவர் அப்போதே இப்படித்தான் என்பதையாவது அஜித் சூசகமாக கவனித்திருக்கலாம். (இதை நிச்சயம் கிண்டலாக எழுதவில்லை. இயக்குநரின் அசாத்தியமான உழைப்பு வீணாகிப் போன வேதனையுடன்தான் எழுதுகிறேன்).

"என்னோட வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும்.. ஏன்.. ஒவ்வொரு நொடியும் நானா.. செதுக்கினதுடா". இது படத்தில் பில்லா பேசும் வசனம்.. சரி 'தல' என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். படத்தை உருவாக்கினவர்கள் சற்றாவது மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருந்தால் இந்த மகா சொதப்பலான படம் சற்றாவது உருப்படியாய் அமைந்திருக்கும்.

Final verdict: படத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லை. :)

suresh kannan

Sunday, July 08, 2012

வேளச்சேரி - குறும்படம்

'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் சற்று நேரம் முன்னர் ஒரு குறும்படத்தைப் பார்த்தேன்.

நண்பரொருவர் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருந்ததால் அவர் சென்ற பின்னர் இடையிலிருந்துதான் அந்தப் படத்தைப் பார்க்க முடிந்தது. அதனால் படத்தின் தலைப்பும் தெரியவில்லை. ஆனால் பார்த்த உடனே இதைப் பற்றி சிறு குறிப்பொன்றை இட வேண்டும் என்கிற உத்வேகத்தை தந்ததுதான் இக்குறும்படத்தி்ன் பலம் என்று சொல்ல வேண்டும்.

படத்தின் ஆரம்ப, இடைக்காட்சிகள் 'காதல்' திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல் அமைந்திருந்தாலும் இறுதிக் காட்சியில்தான் படம் இன்னொரு பரிமாணத்தில் அசத்தியிருக்கிறது.

தான் காதலிக்கிற பெண்ணை ஊரிலிருந்து அழைத்துக் கொண்டு நண்பனை நம்பி நகரத்திற்கு வந்து விடுகிறான் ஓர் இளைஞன். அவனை உடனே தொடர்பு கொள்ள முடியாததால் பீச், ஹோட்டல் என்று நேரத்தைக் கழிக்கிறான். நண்பன் சொன்னபடி இரவு 10.30 மணிக்கு பொதுதொலைபேசியிலிருந்து அவனை அழைக்கிறான். 'not reachable' என்றே வருகிறது. காதலியை ஒரு ஹோட்டலில் அமர வைத்து விட்டு நண்பன் இருக்கும் இடத்திற்கே செல்கிறான். ஆனால் அங்கிருக்கும் ஒரு வடநாட்டு இளைஞன் (இதை கவனத்தில் கொள்ளுங்கள்) மொழிக்குழப்பத்தினால் இவனை துரத்தி விடுகிறான்.

ஆனால் இவனும் விடாப்பிடியாக கதவைத்தட்ட இன்னொரு தமிழ் இளைஞன் வந்து இவனுக்கு உதவுகிறான். உதவுகிற இளைஞன் தருகிற மொபைல் மூலம் நண்பனிடம் பேசின பிறகுதான் தான் தவறான முகவரிக்கு வந்திருப்பதை உணர்கிறான். குழப்பமெல்லாம் சரியாகி உதவின இளைஞனுக்கு நன்றி சொல்லி வெளியே செல்ல கதவைத் திறக்கிறான்.

இங்குதான் படம் இன்னொரு திறப்பிற்குள் செல்கிறது.

கதவைத் திறக்கிற இளைஞன் எதனாலோ தாக்கப்படுவதோடு காட்சி blackout ஆகிறது. பிறகான காட்சியில் அந்த அறையில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் காவல் துறையினரால் சுடப்பட்டிருப்பதாக காட்டப்படுகிறது. தான் சுட்ட இளைஞர்கள் அனைவரும் அப்பாவிகள் மாதிரிதான் தெரிகிறார்கள் என்பதை காவல்துறை அதிகாரியே தன்னுடைய உயர் அதிகாரிக்கு தெரிவிக்கிறார். என்றாலும் வேறு வழியில்லை. தான் தேடி வந்த வங்கிக் கொள்ளையர்கள் அவர்கள்தான் என்பதை 'வழக்கம் போல' ஊடகங்கள் உதவியுடன் காவல்துறை நிறுவுகிறது.

அந்தப் பெண் ஹோட்டலில் மேஜையில் தலைகவிழ்ந்து இன்னும் காத்திருப்பதுடன் படம் நிறைகிறது.
 
சில மாதங்களுக்கு முன் வேளச்சேரியில் சில வடநாட்டு இளைஞர்கள் 'வங்கிக் கொள்ளைக்காரர்கள்' என்று காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை இக்குறும்படம் விமர்சிப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகார வர்க்கத்தினர் தவறாகவோ அல்லது தவறான பாவனையில் எடுக்கும் முடிவுகள் எப்படி ஒரு சாமானியனை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்கும் என்பதை இதை விட அருமையாக சொல்லி விட முடியாது.

அந்தக் காதலர்கள் கடற்கரையில் பதட்டத்துடன் பாவமாக அமர்ந்திருக்க சுற்றியுள்ள மற்றவர்கள கடற்கரை சூழலை சந்தோஷத்துடன் கொண்டாடும் அந்த contrast நன்றாக பதிவாகியுள்ளது. Protagonist  ஆன நடித்துள்ள இளைஞன் சிறப்பாக நடித்துள்ளான்.

தொடர்புள்ள நிகழ்ச்சியில் 'Cop Story' வகையில் உருவாக்கப்பட வேண்டிய படம் போல. அந்த விஷயத்தை படம் தவற விட்டதையும் அதை எப்படி subtle ஆக உபயோகத்திருக்கலாம் என்பதை இயக்குநர் பிரபுசாலமன் குறிப்பிட்டது  பொருத்தமாகவும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இருந்தது.

சொல்ல வந்த செய்தியை ஒரு shocking உடன் சொன்ன வகையில் சிறப்பான குறும்படம்.  அழுத்தமாக பரிந்துரைக்கிறேன். இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் குறும்படத்தின் பெயரை பகிர்ந்து கொண்டால் நன்றி.

suresh kannan