Tuesday, April 24, 2012

ரவுடிகள் விழித்தெழும் தருணம்


 லிங்குசாமி இயக்கிய 'வேட்டை' பார்த்தேன். என்ன சொல்ல... ரன், பையா... என்று அவர் மீது நான் வழக்கமாக வைக்கும் குற்றச்சாட்டையே இதிலும் இன்னமும் அழுத்தமாக வைக்க வேண்டியுள்ளது. வழக்கம் போலவே இந்தப் படத்திலும் புஜபராக்கிரம பான்பராக் சவுரிமுடி அதிபயங்கர ரவடிகளை எவ்வித வன்முறை பின்புலமுமில்லாத, குறைந்த பட்சம் கராத்தே கிளாஸ் போவதாக ஒரு காட்சியில் கூட காண்பிக்கப்படாத  பால்மணம் மாறா இளைஞனொருவன் கதறக் கதற அடித்து நொறுக்குகிறான். அவர்கள் ரடிவுகளா அல்லது நங்கநல்லூர் கோயிஞ்சாமிகளா என்கிற புகைமயக்கத்தை நமக்கு ஏற்படுத்தும் வண்ணம்,பஞ்ச் டயலாக் பேசும் போது உரக்க சற்று பயப்படும் படி கெத்தாக பேசினாலும் சண்டைக்காட்சிகளில் தேமேவென்று அடிவாங்கிக் கொண்டு பின்பு கிராபிக்ஸில் மாய்மாலமாக மறைக்கப்படப் போகும் ரோப் உபயத்தில் வானில் பறந்து கீழே எதையாவது சரியாக உடைத்துக் கொண்டு விழுகிறார்கள்.

இயக்குநர் லிங்குசாமி முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ரவடியாவது அத்தனை சுலபமல்ல. திடீரென்று ஒருவன் 'ஒரு கோடி வெல்லு்ஙகள் சூர்யா' புண்ணியத்தில் பணக்காரனாக கூட ஆகி விடலாம். அல்லது திடீரென்று நன்றாகப் படித்து (வசூல்ராஜா மாதிரி) டாக்டராக கூட ஆகி விடலாம். ஆனால் பாருங்கள். ஜீப்பில் ஏறுவது மாதிரி அல்லாமல் உண்மையிலேயே ரவுடியாவதற்கு நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. உபநயனம் நடத்தி வைத்து உபதேசிக்கப்படும் வேதம் போல சிறுவயதிலேயே அந்த முரட்டு வன்முறையை பழக வேண்டும். அதற்கான சூழலும் துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அமைய வேண்டும். தொழில் பழகும் வரை அண்ணன்மார்களிடம் அடிபட்டே சாக வேண்டும். பான்பராக் வாங்கி்த் தருதல், கட்டிங்கில் பாக்கெட் நீர் மிக்ஸ் செய்தல், கஸ்டமர் இல்லாத நேரத்து சரோஜா அக்காவை விசாரித்து அழைத்து வருதல், கான்ஸ்டபிள்களுக்கு லெக்பீஸ்ஸூடன் பிரியாணி வாங்கி வருதல் என்று இன்னபிற கச்சடா முறைவாசல் அடிப்படை வேலையெல்லாம் செய்த பின்புதான் குழுமத்தில் ஒரு ஆள் என்கிற அடிப்படைத் தேர்விலேயே முன்னேற முடிகிறது.

இந்த இழவுகளையும் தாண்டி டீக்கடைகளில் சில்லறை அல்டாப் பஞ்சாயத்துக்கள் செய்வதற்கு தோதாக தினமும் இரண்டு நாட்டுக்கோழி முட்டை, குஸ்கா, பீஃப் எல்லாம் சாப்பிட்டு பேரக்ஸில் பளு தூக்கி டைட்பனியன் போட்டு எல்லா டிராமாவும் செய்ய வேண்டியிருக்கிறது. குடுமியுடன் கிராஸ் செய்பவனை "போடாங்க....'என்று தட்டி தன் வீரத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. கஞ்சாப் பொட்டலம், சரக்கு உறை, ரயில்வே கிராஸிங் என்று சிறிது சிறிதாக முன்னேற வேண்டியிருக்கிறது. 'தல'யின் அபிமானத்தைப் பெற இரவு பகலாக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. 'அஸ்வின் ஆயில்' பெண்கள் பொறாமைப்படுமளவிற்கு அத்தனை நீளமான தலைமுடியை முறையாக பராமரிக்க எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை குறைந்த பட்சம் நினைத்துப் பார்த்தாலாவது நம்மையுமறியாமல் கண்ணீர் பெருகும்.

ஒரு ரவுடியாவதற்கான அடிப்படையே இத்தனை சிரமமென்றால் படிப்படியாக முன்னேறி ஒரு சமஸ்தானத்தை கைப்பற்றி தாதாவாவதற்கு எத்தனை சிரமம் என்பதை அடிப்படை மனித நேயம் உள்ளவர்கள் சற்று யூகித்தாவதுக் கொள்வது நல்லது. இதையெல்லாம் இயக்குநர் லிங்குசாமி அவர்கள் மீது அனுதாபப்பட்டாவது கதையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்வது நல்லது. அவர் மீது குற்றமில்லை. ஏதோ கோயில் க்யூவில் சுண்டல் வாங்குவது போல வரிசையாக வந்து அடிவாங்கிப் போவது மாதிரி காட்டப்படும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த அவலம் தொடர்வது காணச் சகியாதது.

காட்சி ஊடகத்தின் மிக வலிமையான சினிமாவில் தங்கள் சமூகம் தொடர்ந்து கேவலப்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வும் பிரக்ஞையும் ரவுடிகளுக்கும் தாதாக்களுக்கும் ஏற்பட வேண்டும். கல்விப் பின்புலமில்லாத காரணத்தினால் அறியாமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு அறிவுசார் குழுமமும் ஆதரவாக நின்று இயங்கி ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது. இனி தமிழ் சினிமாவில் எந்தவொரு காட்சியிலும் யதார்த்தத்திற்கு புறம்பாக ரவுடிகள் சித்தரி்க்கப்பட்டால் தொடர்பான இயக்குநர்களையும் சீன்பிடிக்கும் உதவிகளையும் சட்டத்தின் துணை கொண்டு (அதாவது இரும்புச் சட்டம்) நீதிமன்ற வாசலிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் பரிந்துரைக்கிறேன். 

suresh kannan

11 comments:

அகமது சுபைர் said...

ரவுடிகளுக்கு வாழ்வில் ஒளியேற்றிய வள்ளலுக்கு வாழ்த்துகள்....

முத்தரசு said...

படிச்சுட்டு அப்பாலிக்க வாரேன்

Ashok D said...

:))

குரங்குபெடல் said...

பிளாக்கு சுரேஷு( எ ) சுரேஷ் கண்ணன் . . !?


நல்லபதிவு

நன்றி

Prathap Kumar S. said...

:))))))))))))))

பல்லுத்தேக்காத ரவுடிகளை டாப்கிளாஸ் ஃபிகருங்க லவ் பண்ணும் காட்சிகளையும் சேர்க்காம வுட்டிங்களே. :)

கோவை நேரம் said...

என்னா...டீடெயில்...

Anonymous said...

ஒரு ரவுடியோட மனசு இன்னொரு ரவுடிக்கு தான் தெரியும்!!

Rettaival's Blog said...

மிகச்சில வினாடிகளே வந்து அடிவாங்கிப் போகும் ரவுடிகளே இவ்வளவு கஷ்டப்பட்டுத் தான் உருவாகமுடியும் என்றால்... தாதாக்களின் கூடவே நின்று கொண்டு பில்லியர்ட்ஸ் ஆடி, அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் டான்ஸ் ஆடும் ஜூலி,ஸ்டெல்லா வகையாறாக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வரவேண்டும்..?

Excellent Post Suresh

சிந்திப்பவன் said...

சினிமா என்பது அதை சார்ந்த சமூகத்தின் பிரதிபலிப்பே.30,40 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் போன்றவர்களெல்லாம் காமிராவிற்கு முன்னாடியே வரமுடியாது.இன்று அவர் ஹீரோ.அன்று ஹீரோக்களின் touch up boys களின் வேலை ஹீரோக்களின் தலைமுடியை ஒழுங்குபடுத்தி அடுத்த shot டிற்கு
தயார் செய்தல்.இன்றோ அவர்கள் வேலை ஹீரோக்களின் தலைமுடியை கலைத்து அடுத்த shot டிற்கு தயார் செய்தல்
அன்று குழவி சுற்ற ஆட்டுக்கல் நின்றது.இன்று குழவி நிற்க ஆட்டுக்கல் சுற்றுகிறது.
அன்று படிக்கட்டு நிற்க நாம் ஏறி மேலே செல்வோம்.இன்றோ நாம் நிற்க படிக்கட்டு ஏறி நம்மை மேலே கொண்டு சேர்க்கிறது.
இன்னும் பத்து ஆண்டுகளில்
இரு நடிகர்கள் (அ) இரு நடிகைகள்
காதலர்களாக நடிக்கும் படம் கூட வரலாம்.

Anonymous said...

வாழ்க உங்கள் சமூக தொண்டு..கட்டுரை எழுதி சமூக தொண்டு

Anand, Salem said...

அது சிக்கன் பக்கோடா அல்ல முந்திரி பக்கோடா. வரலாறு முக்கியம்.