Wednesday, November 10, 2010

என்கவுண்ட்டர் கொலைகள்: ஒளிந்திருக்கும் அரசியல்


கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட, குற்றம் நீதித்துறையால் இன்னும் ஊர்ஜிதமாகாத நிலையில், வேன்டிரைவர் மோகன்ராஜ், காவல் துறையினரால்  'கொலை' செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்கவுண்ட்டர் மீதான விவாதங்கள் மறுபடியும் துவங்கியிருக்கின்றன. மோகன்ராஜின் மரணம் முன்னமே கச்சிதமாக திட்டமிட்டப்பட்டது என்பது 'ஊரறிந்த ரகசியமாக' அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.

தங்கள் மீது பல குற்ற வழக்குகளை பாக்கி வைத்துள்ள ரவுடிகளும் அவர்களின் பின்னணயில் உள்ள அரசியல்வாதிகளுமே கம்பீரமாக உலா வரும் போது வழக்கு விசாரணையின் துவக்கத்திலேயே ஒரு வேன் டிரைவரை காவல் துறையினர் சுட்டுக் கொல்வதற்கு ஏன் இத்தனை அவசரம் காட்டியிருக்கின்றனர்? பதில் வெளிப்படையானது.

1) 'மைனாரிட்டி அரசை' தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சமீபத்திய குற்றச்சாட்டு, 'குழந்தைகள் கடத்தல் வழக்கில் காவல் துறையினர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர். கையலாகாத மைனாரிட்டி அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது. சமீபத்தில் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவனொருவன் பணம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது, காவல்துறையின் திறமைக்கு ஒரு பின்னடைவு' என்பது போல் ஜெ-வின் விமர்சனங்கள் அமைந்தன. (பணம் தர அனுமதிக்கப்பட்டு பின்னர் கடத்தல்காரர்களை பிடித்த விஷயத்தில் காவல்துறையினர் சாமர்த்தியமாக இயங்கியதாகவே நான் நினைக்கிறேன்). ஜெவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியின் அதிரடியான பதிலடியாகவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

2) சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் அதிருப்தியிலிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும், குழந்தைகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர்களின் மீது மக்களிருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பை ஓட்டுக்களாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளவும், மேலே சொன்னது போல் எதிர்க்கட்சியினர் வாயை அடைக்கவும்.. என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க திட்டமிட்டிருக்கிறது ஆளுங்கட்சி.

சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங்களில் அவசியமா, அல்லது முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியதா?. மோகன்ராஜ் மரணத்தை மாத்திரமே முன்னிட்டு 'என்கவுண்ட்டர் கொலை' எனும் விஷயத்தை ஒட்டுமொத்தமாக விவாதிப்பது சரியாகாது.

என்கவுண்ட்டர் கொலைகள் சரியே என பொதுமக்களில் பலரும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்களும், காவல்துறையே தண்டனை தர முடிவு செய்து விட்டால் நீதித்துறை எதற்கு என்ற கேள்விகளும் புறப்படுகின்றன. இதுதான் சமயமென்று முற்போக்குச் சாயத்தை முகத்தில் அப்பிக் கொண்டு 'என்கவுண்ட்டர் கொலைகளுக்கு' எதிரான போக்கில் ஆவேசமாக எழுதப்படும் சில இணையப் பதிவுகளையும் காண்கிறேன். கொலைகாரனின் (?!) அழிவை இனிப்புடன் கொண்டாடின பொதுப்புத்தியை சாடின பதிவுகளையும் இந்தக் கொலையை ஆவேசமாக வரவேற்ற பின்னூட்டங்களையும் காண்கிறேன்.

இதில் எது சரி, எது நியாயம்? எது தவறு, எது அநியாயம். என்னுடைய இரண்டு நயா பைசாக்கள்.

கெளதம் மேனனின் 'காக்க காக்க' திரைப்படத்தின் துவக்கக் காட்சிளுள் ஒன்று. இளம் சிறுமிகளை குரூரமாகக் கற்பழித்து குதறிப் போடுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு ரவுடியை மறைந்திருந்து ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டால் வீழ்த்துவார் காவல்துறை அதிகாரியான ஹீரோ சூர்யா. 'இவனையெல்லாம் கைது பண்ணி பெட்ரோல் போட்டு ஜீப்ல கூட்டிக்கிட்டு போயி, கோர்ட்ல நிறுத்தி, சாப்பாட்டு போட்டு... அரசாங்கத்துக்கு எவ்ள செலவு. இப்பப்பாரு அம்பது ரூபால ஒரே புல்லட்ல வேலை முடிஞ்சது".

இதை நிச்சயம் நம்மில் பெரும்பாலோனோர் அப்போது கைத்தட்டி ரசித்திருப்போம். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு. சாமி.. என்று  பெரும்பாலான போலீஸ் ஹீரோ படங்களில் வரும் என்கவுண்ட்டர் கொலைகளை அதற்கேயுரிய உணர்ச்சிகரமான மனநிலைகளில் நாம் கொண்டாடி ஆதரித்து வந்திருக்கிறோம். ஏன், புராணக் கதாபாத்திரங்களில் தீமையை செய்யும் அரக்கர்களின் அழிவை பண்டிகையாக கொண்டாடுவதிலிருந்து இந்த மனநிலை நம்முள் காலம் காலமாக ஊறிப் போயிருப்பது வெளிப்படை.

இதுதான் கோவை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக மக்களின் கொண்டாட்ட மனநிலையாக வெளிப்பட்டிருக்கிறது. வேறெங்கோ விபத்தில் இறந்து போகும் குழந்தைக்காக ஒரு உச்சுக்கொட்டலில் முடிந்து போகும் நம் அனுதாபம், நம் பக்கத்திலேயே விளையாடி நாம் பெளதீகமாக தொட்டு மகிழ்ந்த குழந்தையெனில் அழுகையாகவும், ஆத்திரமாகவும் குற்றவாளி தண்டனை பெற்ற போது ஆசுவாசமாகவும் நீட்சி கொள்ளுமல்லவா? அந்த நிலையில்தான் கோவை மக்களின் பட்டாசு வெடித்தல்களையும், இனிப்பு பரிமாறல்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹீரோ - வில்லன், என்று எல்லாவற்றையுமே கறுப்பு - வெள்ளைப் பிரச்சினைகளாகவே புரிந்து கொள்ளும் பொதுப்புத்தி சமூகம், நாணயங்களுக்கு இரண்டு பக்கங்கள் மாத்திரமல்ல பல பக்கங்களும் இருக்கலாம் என்கிற தெளிவை அடைவதற்கு அறிவுசார் சமூகம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அவசியமானது. மோகன்ராஜின் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை 'கொலையாளி சுட்டுக் கொலை' என்று ஊடகங்கள் தலைப்புச் செய்தியுடன் அதை நிச்சயப்படுத்தி தீர்ப்பெழுதுவதும் பொதுமக்களும் இந்தப்பிரதிகளை மேலோட்டமாகவாகவே அணுகி மகிழ்வதும் நிச்சயம் சரியானதல்ல. காவல்துறையால் கொல்லப்பட்ட நபர், ஒர் அப்பாவி என்று பின்னதான விசாரணையில் -ஒருவேளை நியாயமான விசாரணையில் அப்படி நிகழ்ந்தால் - ஆனால் அப்படி நிகழ வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன் - தெரியவந்தால் இந்தக் கொலையை கொண்டாடின நாம் நம் முகத்தை எங்கே வைத்துக் கொள்வோம்? 'யாரைக் கொல்லலாம், பராபாஸ் திருடனையா, அல்லது தன்னை தேவகுமாரன் என அழைத்துக் கொள்ளும் இவனையா? என்ற கேள்விக்கு ஜெருசலேத்து மக்கள் 'இயேசுவே கொல்லப்பட வேண்டும்' என்று மதவெறியுடன் கூக்குரலிட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பொதுச் சமூகத்தில் நீடிக்கும் இந்த mob psychology -ல் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டியது அவசியம். பல சமயங்களில் ஆயுதங்கள் மாத்திரமே நம் கண்ணுக்கு வெளிப்படையாய் தெரிகின்றன. ஆயுதங்களுக்கு பின்னாலுள்ள கைகளைப் பற்றி நாம் உரையாடுவதில்லை.

இது ஒருபுறம். ஆனால் இன்னொரு புறத்தில் மிக அரிதான சமயங்களில் தவிர்க்கவே முடியாத சூழலில் இந்த மாதிரியான என்கவுண்ட்டர் கொலைகள் அவசியமானவையே என்று நான் நினைக்கிறேன்.

ஊரே அறிந்த ஒரு ரவுடி இருக்கிறான். அவன்தான் பல அப்பாவிகளை துன்புறுத்துகிறான், கொலை செய்கிறான். மிரட்டுகிறான், கற்பழிக்கிறான் என்று பொதுமக்கள், காவல்துறை உள்ளிட்ட பலருக்கும் தெரிந்தேயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அரசியல் பலத்தின் மூலம் சில நாட்களிலேயே வெளியே வந்து விடப் போகிறான். அட! சிறையிலேயேதான் இருக்கட்டுமே. சிறை என்பது குற்றவாளிகளுக்கான தண்டனைக்கூடம் என்பது அபூர்வமாக குற்றம் செய்து சிறைக்குப் போகிறவர்களுக்குத்தான். இதிலேயே ஊறிப்போனவர்கள், அரசாங்கத்தின் செலவில் சாப்பிட்டுக் கொண்டு, பாதுகாப்பாக இருந்து கொண்டு அங்கிருந்தே தம்முடைய சாம்ராஜயத்தின் நிழலான சமாச்சாரங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். கைது செய்ப்படும் ஒவ்வொரு முறையும் காவல்துறையே இவன் மீதான குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் பல ஆண்டுகளாக தீராத தலைவலியாக இருக்கும் இவனை சாகடித்தால்தான் என்ன? காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்களே கூட ஒன்று கூடி அவனை கொன்று போட நினைப்போமா, மாட்டோமா?.

குற்றவாளிகளை சாகடிப்பதை விட அதற்கான சமூகக் காரணங்களை ஆய்வது, அவர்களை  அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பது, குற்றவாளிகளின் பின்னணயில் இயங்குபவர்களை அடையாளம் காண்பது...போன்ற இதனுடன் தொடர்பான கேள்விகள் எல்லாம் சரிதான். (பல சமயங்களில் இம்மாதிரியான முற்போக்கு சிந்தனைகள் வெறும் பாவனைகளாகவே அமைந்துவிடுவது துரதிர்ஷ்டம்). அவைகளுக்கான முதிர்ச்சியை அடைய இன்னும் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பயிரின் முளையிலிருந்தே இந்தப் பிரச்சினையை ஆராய வேண்டும். இதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் பட்சத்தில் தற்காலிகமான தீர்வாக, வேறு வழியில்லாத சூழலில் என்கவுண்ட்டர் கொலை நிகழ்வுகள் அவசியமென்றே நான் கருதுகிறேன். அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு நீதித்துறையால் மரணத்தண்டனை வழங்குவது போல. 

இந்த மாதிரியான ரவுடிகள், அரசியல்வாதிகளின் ஆயுதங்கள் மாத்திரம்தானே? என்று சிலர் விவாதிக்கலாம். சமயங்களில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய அபாயமான ஆயுதங்களை மக்கள் நலன் கருதி நாம் அழிப்பதில்லையா?

இவர்கள் குற்றவாளிகளா, அல்லவா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதித்துறையே, காவல்துறையோ, அரசியல்வாதிகளோ அல்ல என்பது சிலரின் வாதம். சரிதான். ஆனால் நம்முடைய தேசத்தின் சமகால நீதித்துறையின் லட்சணம் பற்றி நமக்கே தெரியும். ரயிலில் முறையான பயணச்சீட்டு இல்லாதவர்களிலிருந்து தேர்வில் காப்பியடித்து பிடிபடுபவர்கள் வரையான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் நீதிபதிகளும் அடக்கம் என்பதை அதிர்ச்சியுடன் நாம் செய்தித்தாள்களில் வாசித்துக் கொண்டுதானேயிருக்கிறோம். 'என்னால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாத அளவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிற மிரட்டல்களை சந்திக்கிறேன்' என்று ஒரு நீதிபதியே வெளிப்படையாக புலம்புமளவிற்கு நிலைமை அழுகிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட தகரடப்பா போல உள்ள அரசு பஸ், எவ்வாறு ஒரு தர்மநியாயத்திற்கு கட்டுப்பட்டு நம்முடைய ஊருக்கு நிச்சயம் சென்று சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் ஏறி அமர்கிறோமோ, அவ்வாறே இந்தியாவின் நீதித்துறையும். நேர்மையுடன் செயல்படும் சில நீதிபதிகளினாலேயே அந்தத் துறையின் மீதான நம்பிக்கை இன்னும் நமக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

என்கவுண்ட்டர் கொலைகளை எதிர்த்து எழுதும் சில பதிவர்கள், நீதித்துறையினரிடம் முடிவை விட்டுவிடாமல் காவல் துறையினரே தண்டனையை கையில் எடுத்துக் கொள்வதில் உள்ள அநியாயத்தை ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்பதால்தான் பொதுப்புத்தி இத்தனை ஆவேசமாக என்கவுண்ட்டரை ஆதரிக்கிறதாம். இந்தக் கொடுமைகள் இவர்கள் வீட்டில் நிகழ்ந்தாலும் கூட இவர்கள் என்கவுண்ட்டர் மனித உரிமை மீறல்களை ஆதரிக்க மாட்டார்களாம்.

அடடே!  உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட கொலைவெறித் தாக்குதல்களுடன் நீட்டி முழக்கி பதிவிட்டு ஒன்றுக்கு நூறாக பதிலுக்கு திட்டிய பிறகே ஆசுவாசமடையும் இந்த முற்போக்கு போலிகள், இந்தச் சமயங்களில் மாத்திரம் ஒழுங்கு பிள்ளை கிழங்குத் தோலாக, 'நீதித்துறையின்' மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாக உள்ளதா, இல்லையா என்பதை அவர்களது மனச்சாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். நம் வீட்டில் இதெல்லாம் நிகழாது என்கிற பொதுவான குருட்டுத் தைரியமே இப்படி அவர்களை எழுத வைக்கிறது.

இந்த என்கவுண்ட்டர் கொலைகள் நாளைக்கு நமக்கே நிகழலாமாம். உள்ளுக்குள் தயிர்வடைகளாக இருந்து கொண்டு வெளியில் தம்மை புரட்சி வீரர்களாகக் கருதி வெளிப்படுத்திக் கொள்கிறவர்களின் கற்பனை அபாரமானதுதான். பெரும்பான்மையான சமயங்களில் அதிகாரத்தின் வேட்டை நாய்களாக உள்ள காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களையும், காவல் நிலையத்திற்குச் செல்ல நேரும் அப்பாவி பொதுஜனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அவமரியாதைகளையும் அசெளகரியங்களையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்தான் என்றாலும், என்கவுண்ட்டர் என்பதெல்லாம் பெரிய வார்த்தை பாஸூ. அவை தயிர்வடை தேசிகன்களுக்கெல்லாம் நிகழும் என்று பூச்சாண்டி காட்டுவதெல்லாம் அதீதம். அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்கவுண்ட்டர் போன்ற சமாச்சாரங்களை காவல்துறையினர் கையில் எடுக்க முடியாது. அவ்வகையில் இம்மாதிரியான பயமுறுத்தல்கள் அநாவசியம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்லது நிருபீக்கப்பட்ட நபர்களின் மீது அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் (சமீபத்திய உதாரணமான மோகன்ராஜ் போன்றவர்கள்) என்கவுண்ட்டர் கொலைகளை நான் ஆதரிக்கவில்லை, மாறாக பல ஆண்டுகளாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை வேறு வழியில்லாத சூழலில் - பெரும்பாலான முதிர்ச்சியான நாகரிகமான சமூகம் அமையும் வரையாவது - கொல்லப்படுவது அவசியம் என்பதே இப்பதிவின் மூலம் நான் சொல்ல வருவது.

இம்மாதிரியான வன்முறையில் ஊறிப்போன ரவுடிகளை ஒரு புல்லட்டில் சாய்த்துவிடலாம். சரி. ஆனால் இவர்களின் பின்னணியில் இதற்கு மூளையாகச் செயல்படும் வெள்ளைச் சட்டை ரவுடிகளை யார் தண்டிப்பது. நியாயமாக இவர்கள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களை யார் தண்டிப்பது. அவர்களிடம் அதிகாரத்தை தந்தவர்கள் என்ற முறையில் ஒருவகையில் நாமும் குற்றவாளிகளே. இவர்களை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள நம்மிடம் ஒரே ஒரு ஆயுதமே உண்டு.

வாக்குச் சீட்டு.

suresh kannan

23 comments:

priyamudanprabu said...

யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட கொலைவெறித் தாக்குதல்களுடன் நீட்டி முழக்கி பதிவிட்டு ஒன்றுக்கு நூறாக பதிலுக்கு திட்டிய பிறகே ஆசுவாசமடையும் இந்த முற்போக்கு போலிகள், இந்தச் சமயங்களில் மாத்திரம் ஒழுங்கு பிள்ளை கிழங்குத் தோலாக, 'நீதித்துறையின்' மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாக உள்ளதா, இல்லையா என்பதை அவர்களது மனச்சாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். நமக்கு இதெல்லாம் நிகழாது என்ற குருட்டுத் தைரியமே இப்படி அவர்களை எழுத வைக்கிறது.


///

yes

Ramprasad said...

Excellent Gentleman :) I too remember the same KakaKaka scene when i hear this. As you said some people here in web are blabbering some thing about human rights etc.. etc.. But what they have achieved with that is a big zero. Take the example of Kasab, still the judiciary has to hang him. I agree that without introspection encounter is not correct as u said, but if we know that this is an irritating thing to take him to court everytime and the challenges police face, it is better to do this kind of encounters. As some web blogs pointed, nothing will happen to normal person. Kuppanayo Suppanayo summa encounter la pottu thalla mudiyathu... Inga blogs la neraya per olari vaikirarkal... Those people are invertibrates and doesn't have the guts to show case the original social cause. Simple for the sake of advertisement they are doing all this Like how Kugumum ad says... "Paal kolakattai na romba pidikkum konjukirar kumtaj". Ivanga pesarthu yellam ithu mathiri tha irukku

suneel krishnan said...

அன்புள்ள சுரேஷ் அவர்களுக்கு
மிகவும் நேர்மையாக எழுதப்பட்ட வாதம் .
குற்ரம் என்பது எது ? நான் நீங்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு சட்டத்தை ,விதியை மீறுகிறோம் .குற்றம் அதன் விளைவுகளை கொண்டு ஆராய படுகிறது , தர்மபுரி பஸ் எரிப்பு நிகழ்ந்தது அங்கு உயிரிழப்பு நேர்ந்தது ,கிட்ட தட்ட அதே போல் ஒரு தனியார் பள்ளியை கொஞ்சம் காலத்திற்கு முன் நிகழ்ந்தது தனியார் பள்ளி எரித்து சூறையாட பட்டது ஒரு கூட்டத்தால் அதற்க்கு ஏதோ ஒரு ஞாயம் கூட சொன்னார்கள் .ஆனால் அந்த சம்பவத்தில் உயிரிழப்பு இல்லை .செயல் ஒன்று தான் விளைவுகள் வெவ்வேறானவை ஒன்றில் ஈடுப்பட்டவன் தூக்கு கயிறில் தொங்க போகிறான் இன்னொருவன் யாரேன்றரே வெளியுலகிற்கு தெரியாது .
தண்டனை என்பது குற்றம் எனும் செயலுக்கு எதிரானதாக இருக்க வேண்டும் .குற்றவாளிகள் அழிப்பதினால் குற்றங்கள் அழிவதில்லை.செயல்களுக்கு பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது .வீரத்தின் பெயராலே தேசத்தின் பெயராலே ஒரு உயிர் வாங்க பட்டால் அதற்க்கு பதக்கம் , அவன் குடும்பத்தின் பெயராலே அவன் செய்தால் அதற்க்கு தூக்கு .அந்த நோக்கம் தவறானதாக இருந்தால் அதை கண்டித்து வழிநடத்துவதே தனடனையின் ஒட்டு மொத்த நோக்கம் .
இதை பற்றி விவாதிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது .
என் அளவில் வன்முறை அது யார் நிகழ்த்தினாலும் தவிர்க்க பட வேண்டிய ஒன்றே .

இத்தனையும் சொல்லிய பிறகும் வலியும் இழப்பும் உங்களுக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னால் ..
என் மனசாட்சி நான் அனுபவித்த வலியை இன்னொருவர் அனுபவிக்க கூடாது என்று தான் எண்ணுமே தவிர ..சாகட்டும் கழுதை என்று எண்ணாது.

suneel krishnan said...

இத்தனையும் சொல்லிய பிறகும் வலியும் இழப்பும் உங்களுக்கு வந்தால் தான் தெரியும் என்று சொன்னால் ..
என் மனசாட்சி நான் அனுபவித்த வலியை இன்னொருவர் அனுபவிக்க கூடாது அது எனக்கு தீங்கு விளைவித்தவனாக இருந்தாலும் கூட .. என்று தான் எண்ணுமே தவிர ..சாகட்டும் கழுதை என்று எண்ணாது.
இதை எல்லாம் கடந்து நான் இந்த செய்தியை கண்டு உள்ளுர நிம்மதி அடைந்தேன் .
மனிதர்களாகிய நமக்கு பாதுக்காப்பு இல்லை எனும் போது மனம் பதறுகிறது , பாதுகாப்பு நிறுவ படும் போது அது மகிழ்கிறது .இது தான் நம் இயல்பும் கூட

Unknown said...

ஆழமாக எழுதுவதாக நிணைத்து... நன்றாக குழப்பியிருக்கிறீர்கள்... பிளாக் எழுதும் அனைவரும் மோகன் ராஜ் இறந்ததற்கு பரிதாபப்படவில்லை.. காவல்துறையின் அத்துமீறல் பற்றித்தான் கடுமையான விமர்சனம் எழுந்திருக்கிறது. இம்மாதிரியான போக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதகமான விஷயங்களைப்பற்றித்தான் நாம் அனைவரும் கவலைப்படவேண்டியது.. மன்னிக்கவும் உங்களுடைய மிக சாதரணமான கட்டுரை இது..

Anonymous said...

என் கவுண்டர் தேவை தேவை அதனால நூறு காந்தி மாதிரி ஆத்மா செத்தாலும் கூட பராவயில்லை.

கொஞ்சமே கொஞ்சமே என் கவுண்டர் தேவை இல்லைன்னு சொன்னாலும் தப்பு

எங்கேயோ யாரோ எழுதிய பின்னூ.கீழே
நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்படு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகல என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! 3 வயசுக்கு வந்த பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூலா வெளிய திரியனும்.(பான் பராக் போட்டு இவனுக மேல துப்பனும்)

பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுகளை கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு

விடுங்க தலைவா... இவனுகளை எல்லாம் நாய் கூட கடிக்க கூடாது பன்னி தான் கடிக்கனும் வாயக் கழுவாம

உலக சினிமா ரசிகன் said...

மோகன்ராஜ் அழிக்கப்படவேண்டிய பதர்.அந்த என்கவுண்டர் இன்னொரு கடத்தலை உடனே முடிவுக்கு கொண்டு வந்து விட்டது.ஆதாரம்
9-11-2010 தினத்தந்தி கோவை பதிப்பு.
செய்தி:கடத்தப்பட்ட இரு தொழில் அதிபர்களை குற்றவாளிகள் உடனே விடுவித்தனர்.[செயின்,மோதிரம்,பிரேஸ்லெட் போன்றவற்றை மட்டும் பிடிங்கிகொண்டார்கள்]

ஜோதிஜி said...

இது குறித்து எழுதப்பட்ட தலைப்புகளில் முதன்மையான அலசலுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

Anonymous said...

நல்ல நிதானமான பதிவு.
கெட்டவன் ஒழிந்தான் எனக் கொண்டாடாமலும், மனித உரிமை போலீஸ் அராஜகம் எனப் பதறாமலும், இருபக்க
நியாய தர்மங்களையும் நாம் வசிக்கும் சூழலின் நிர்ப்பந்தங்களையும் தெளிவான எழுதியுள்ளீர்.

Anonymous said...

//அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்லது நிருபீக்கப்பட்ட நபர்களின் மீது அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் (சமீபத்திய உதாரணமான மோகன்ராஜ் போன்றவர்கள்) என்கவுண்ட்டர் கொலைகளை நான் ஆதரிக்கவில்லை,//

இப்போ மோகன்ராஜ் என்கவுன்ட்டர ஆதரிக்கிரீங்களா? எதிர்க்கிரீங்களா?

எல்லாம் சரியா எழுதி கடேசில கொழப்பிடீங்களே.

அரசியல் காரனம் இருக்குங்கர ஒரே காரனத்திற்காக எதிர்ப்பது சரியாக படவில்லை.

ஏன், அரசியல் காரன முடிவு, மக்கள் மனநிலை உணர்ந்து, ஆராய்ந்து எடுக்கபட்டதாக இருக்க கூடாதா?
அப்பவும் எதிர்பீர்களா?

Ravi said...

sorry sir,you are not aware of the peoples feelings in coimabtore.

hard core criminals deserve exceptional punishment. You are confusing it with politics . It is not necessary You have not understood the ground reality here at coimabtore.

Unknown said...

//சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங்களில் அவசியமா, அல்லது முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியதா?. மோகன்ராஜ் மரணத்தை மாத்திரமே முன்னிட்டு 'என்கவுண்ட்டர் கொலை' எனும் விஷயத்தை ஒட்டுமொத்தமாக விவாதிப்பது சரியாகாது.//

Point!!

Ashok D said...

u worth reading man... keep justifying

தமிழ்நதி said...

"சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களை யார் தண்டிப்பது. அவர்களிடம் அதிகாரத்தை தந்தவர்கள் என்ற முறையில் ஒருவகையில் நாமும் குற்றவாளிகளே. இவர்களை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள நம்மிடம் ஒரே ஒரு ஆயுதமே உண்டு.

வாக்குச் சீட்டு."

ஆம். அடிப்படையிலிருந்து மாற்றம் வேண்டியிருக்கிறது. அதைத் தீர்மானிக்க வேண்டிய மக்களே விலைபோய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் துர்ப்பாக்கியம்.

இதை வேறொரு கோணத்திலும் சிந்திக்கலாம். வாக்குச் சீட்டுக்காக கைநீட்டிக் காசு வாங்க வேண்டிய ஏழ்மையில் மக்கள் இருக்கிறார்கள். அப்படி அதலபாதாளத்துள் மக்களைத் தள்ளியிருப்பது யார்? ஒரு வட்டத்துள் சுற்றும் விளையாட்டுத்தான்.

உங்கள் மேல் கோபம் குறைந்து கொண்டே வருது said...

Hats off to u!!

குந்தைகளுக்காக தீபாவளி கொண்டாடினேன் என்றும் குழந்தைகளுக்காக எந்திரன் பார்த்தேன் என்றும் சப்பைக்கட்டு கட்டும் முற்போக்குவாதிகள்தான் என்கவுண்டர் கொலையையும் எதிர்க்கிறார்கள். இதற்குமேல் நான் சொல்ல வருவதை நீங்களே புரிந்து கொள்ளவும்.

அயோத்தி விஷயத்தில் நீதி செத்துவிட்டது என்று கூக்குரலிட்டவர்கள் தற்போது Indian Penal Code-ன் கொபசெ ஆகிவிட்டது பலரது கொள்கையின் டவுசரை நன்றாகவே அவிழ்த்து காட்டுகிறது.

Karunanidhi said...

//அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்கவுண்ட்டர் போன்ற சமாச்சாரங்களை காவல்துறையினர் கையில் எடுக்க முடியாது.//
அதிகாரம் செய்யும் தவறை எதிர்த்து போராடும் போராளிகளை நசுக்க, இதே "அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்பும்" செயல்படும் என்பதை மறந்து விட்டீர்களா? இதுவரை பின்னணி இல்லாத, மக்களுக்கான என்கவுண்டர் ஏதேனும் நடந்ததுண்டா. 'நட்புக்காக' திரைப்படத்தில் வரும் 'அதுவும் சரி, இதுவும் சரி' என்றே உள்ளது உங்கள் பதிவு.

ஹரன்பிரசன்னா said...

உங்கள் பதிவு குழப்பத்தைத்தான் முன்வைக்கிறது. யாரை என்கவுண்ட்டரில் கொல்லலாம் என்பது சப்ஜெக்டிவான விஷயமாக மாறினால், யார் அந்த பிரேகிங் பாயிண்ட்டை யார் யார் எப்போது அடைவார்கள் என்று சொல்லவே முடியாது. இதனால் ஒரு என்கவுண்ட்டர் ஒருவருக்கு ஏற்புடையதாகவும் இன்னொருவருக்கு ஏற்பில்லாததாகவுமே மாறும்.

நீங்களும் பொதுமனநிலை ஒன்றைத்தான் முன்வைக்கிறீர்கள். இதனை ஒப்பீட்டு அளவில் அணுகிக்கொண்டிருக்கமுடியாது. இதற்கான தீர்வு, சில தீமைகள் இருந்தாலும், என்கவுண்ட்டர் இல்லாமல், சட்டத்தின் ரீதியில் குற்றங்களையும் குற்றவாளிகளையும் எதிர்கொள்வது மட்டுமே.

Anonymous said...

Your article exposes you as a
modified "middle class" minded person; you just reflect the "Pothu puthi"! But you wish to be a man with sense..try buddy!

Unknown said...

ஒரு புல்லட்டில் வேலை முடிந்தது என்ற எண்ணம் ஒரு எழுத்தாளனின் கருத்து,இயக்குனர்,கதாநாயகன் மூலமாக படத்தில் வெளியடுகிறார்.சினிமாக்காட்சிகள் எல்லாமே போலி.அப்படித்தான்,எம்.ஜி.ஆர், இப்போ ரஜனி எல்லாம் மக்களால் ரசிகர்களால் நம்பப்படுகிறார்கள்.இது உண்மை அல்ல.கதை.நடைமுறை வாழ்க்கையில் இது போல செய்ய முடியாது.கூடாது.இதில் உனக்கு,எனக்கு என்று பேசுவது,அறியாமை,பேதைமை.

Ramprasad said...

What u r saying Mr.Tamilan? One bullet is really helped that animal to come back again. If that culprit has been taken to the court and all the judiciary activities take place... what the heck is going to happen finally. He will having Chicken Briyani inside the jail and once in a bluemoon court will ask him to produce and again some Vayda and again he will enjoy in jail. Finally if he get punishment after a long time, he will finish and come and do some other barbarian activities like this. What happened to Afzal Guru, Kasab and so many... After killing so many they r still free. Human rights has to think one thing that people who are killed are also human beings and they are not aliens. These kind of support from human rights triggers the bad people to do these kind of things assuming even if we get caught, there is a human rights which will help us. Human Rights should concentrate only on Humans right to act, right to speech and right to write. Thats all, they are not supposed to be involved in supporting the criminal and killers.

ஸ்ரீநாராயணன் said...

I agree with Haran prasanna,

The biggest danger is giving the power to police who might not know who is correct who is wrong at that point.

See, we had accepted in our mind that police can beat the criminal (though it is illegal) - the net result is disrespect for every body. Had you seen any body treated respectfully in a police station?
Imagine the same for the power of killing.....

Not but not least...this incident is a political murder which should be opposed with full force...

ganesh said...

உன்னை போல் ஒருவன் படத்தில் வரும் ஒரு வசனம்: ஹீரோ: இவர்கள் 400 பேரை கொல்லலாம். தப்பில்லை. ஆனால் இவர்களில் 4 பேரை நான் கொன்றால் தப்பா?

போலீஸ் அதிகாரி: அதற்காக் அப்பாவி பொதுமக்களை கொல்லலாமா?

ஹீரோ: அவர்கள் எப்படியும் சாகத்தான் போகிறார்கள். அதுவும் இந்த 4 பேர் தான் அவர்களை கொல்வார்கள்

Geeyar(ஜீயார்) said...

ஆளாளுக்கு சினிமா பார்த்து கெட்டு போய்டீங்க. அந்த என்கவுண்டர் சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் ஒருவர் கவலைகிடமாக இருப்பதாகவும் செய்திதாள்கள் தெரிவித்தன. இது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் ............

ஏதோ/யாரோடு ஒரு பிரச்சனைக்காக ரோடுகளில் வந்து போராடுவீர்கள். அங்கே காவலில் இருக்கும் காவல்துறையினர் மீது ஏச்சு, சேறு, கல் என எல்லாவற்றையும் வீசுவீங்க. சூழலின் கடுமை உணர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தினால் உடனே ஒடி வந்துடுவீங்க மனித உரிமை மீறல் என. அந்த காக்கி சட்டைக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான். அவனுடைய உரிமை?????

இந்த பிரச்சனை பற்றி அலசிய எல்லா பிளாக்கரும் சரி யாராவது காக்கி சட்டைக்குள் இருக்கும் மனிதனை பார்தீர்களா?