Tuesday, October 27, 2009

நாயின் நிழலும் சிக்கன் பிரியாணியும்


நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஞாயிறு அன்று (25.10.09) மிக சுவாரசியமானதொரு இந்தியத் திரைப்படத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. இதற்கு முன் இவ்வாறாக ரசித்துப் பார்த்தது ஷ்யாம்பிரசாத்தின் மம்முட்டி, மீரா நடித்த மலையாளத் திரைப்படமான 'ஒரே கடல்'.

புரட்டாசி மாதம் முடிந்து மக்கள் அசைவம் மீது காய்ந்த மாடாக பாய்ந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய மெனு சிக்கன் பிரியாணி. இந்த உணவின் மீது எனக்குள்ள பிரேமையை வேலை வெட்டியில்லாத ஒரு அற்புத தருணத்தில் இங்கே வாசித்து தெரிந்து கொள்ளலாம். படத்தைக் காண ஆரம்பித்த சில நிமிஷங்களிலேயே உணவுத் தட்டு கைக்கு வந்தது. எனக்கு மிகப் பிரியமான அந்த உணவை தொலைக்காட்சியிலிருந்து கண்ணை விலக்காமலேயே வைக்கோல் போல் ஏனோதானோவென்று மென்று முடித்து கையை கழுவிக் கொண்டு மீண்டும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்து முட்டாள் பெட்டியோடு ஒட்டிக் கொண்டேன். படம் எனக்கு எவ்வளவு சுவாரசியமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் பதிவின் தேவையில்லாத தலைப்பை நியாயப்படுத்த வேண்டியும் இந்தச் சுயவிவரம்.

கிரிஷ் காசரவள்ளி இயக்கிய Naayi Neralu (நாயின் நிழல்) என்கிற கன்னடத் திரைப்படம்தான் அப்படியொரு சுவாரசிய, உணர்ச்சிகரமான அனுபவத்தைத் தந்தது. ஒரு திரைப்படத்தின் முழு அல்லது முக்கால் கதையை சுருக்கமாக எழுதும் கெட்ட வழக்கத்தை நான் கைவிட்டிருப்பதை கடந்த சில பதிவுகளின் மூலம் உங்களால் உணர்ந்து கொள்ள முடியும். என்றாலும் நிறைய பேருக்கு இந்தப் படத்தை காணும் வாய்ப்பு அமையாமல் போகலாம் என்பதால் படத்தின் மையக்கதையை மிகச் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

சுதந்திரத்திற்கு சமீபத்திய கர்நாடகாவின் ஒரு குக்கிராமம். 20 வருடத்திற்கு முன்பு இறந்து போன மகன் இன்னொரு ஊரில் 'மறுபிறப்பு' அடைந்திருக்கும் செய்தியை முதியவரான அச்சைன்யாவிடம் அவருடைய நண்பர் சொல்கிறார். இதை நம்ப மறுக்கும் அச்சைன்யா நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய மனைவியிடம் இதைக் கூற கிழவி அப்போதே துள்ளி எழுந்து 'அது உண்மையாக இருக்கக்கூடும்' என்கிறார். சென்று பார்க்க அந்த 20 வயது eccentric இளைஞன் இவரின் குடும்ப உறவுகளை அடையாளங் காணுவதில் சில விஷயங்கள் பொருத்தமாக அமைந்து விடுகிறது. அந்தக் குடும்பத்திடம் பேசி இளைஞனை அழைத்து வருகிறார்கள். கிழவி 'இது இறந்து போன தன் மகனேதான்' என்று பூரித்துப் போகிறார். ஊரிலுள்ள வேலை வெட்டியில்லாதவர்களும் உற்சாகமாய் திரண்டு வந்து இதை உறுதிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வீட்டின் மருமகளான சுமார் 35 வயது விதவையான வெங்கடலஷ்மிக்கு இது மிக தர்மசங்கடமாய் அமைகிறது. அந்த 20 வயது இளைஞன் உறவு முறையில் இவளுக்கு 'கணவன்' நிலையிலிருக்கிறான். அந்த இளைஞன் இவளை உடனே அடையாளங் கொண்டு தேன் குடித்த நரி போல் மந்தகாசமாக பார்க்கிறான்.

முதலில் அவனை தன்னுடைய கணவனாக அங்கீரிக்க மறுக்கும் அவள், ஒரு சந்தர்ப்பத்தில் அவனோடு நெருக்கமாகிறாள். அது உடல் ரீதியான நேசத்தில் தொடர்கிறது. இளைஞனை 'மகனாக' அங்கீகரிக்கும் அந்தக் குடும்பமும் ஊரும், அவனை ஒரு விதவையின் 'கணவனாக' அங்கீகரிக்க மறுப்பதில் காட்சிகள் சங்கடமான ஒரு நிலையை நோக்கி பயணிக்கின்றன. தன்னுடைய தாயின் விதவைக் கோலத்தை வெறுக்கும் சற்று முற்போக்கான சிந்தனை உடைய மகள் கூட இந்த உறவை வெறுக்கிறாள். தனக்கும் தன்னுடைய மறுபிறப்பு 'தந்தை'க்கும் ஒரே வயது என்கிற விநோதமான உறவு அவளை வெறுப்புறச் செய்கிறது. இந்த அபத்தமான சூழலில் இருந்து தன்னுடைய தாயை மீட்க முனைகிறாள். எல்லோருடைய வெறுப்பிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் தப்பிக்க விரும்பும் வெங்கடலஷ்மி தன்னுடைய 'கணவனோடு' ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசிக்கச் செல்கிறாள். முதியவர் அச்சைன்யாவும் தன்னுடைய மருமகளின் சிக்கலான சூழலைப் புரிந்து கொண்டு இதற்கு ஆதரவளிக்கிறார்.

எப்போதும் 'பறவையை' வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனோடு லெளதீக வாழ்க்கையை நடத்துவது வெங்கடலஷ்மிக்கு சிரமமாக இருந்தாலும் அவனை பரிவோடு கவனித்துக் கொள்கிறாள். அவனோ அங்கு படகு ஓட்டும் யுவதியின் மீது மையல் கொள்கிறான். தன்னுடைய தாயை எப்படியாவது இளைஞனிடமிருந்து மீட்க நினைக்கும் மகள், இளைஞன் படகுப் பெண்ணை மானப்பங்கப்படுத்தியதாக பொய் வழக்கு ஒன்றினை ஜோடித்து சிறைக்கு அனுப்புகிறாள். இதனால் வெறுப்புறும் அந்த இளைஞன் புதிதாக பிறந்துள்ள தன் மகள் உட்பட யாரையில் சிறையில் சந்திக்க மறுத்துவிடுகிறான். சிறையிலிருந்து அவன் தன்னிடம் திரும்பி வருவான் என்கிற அவநம்பிக்கை வெங்கடலஷ்மிக்கு இருந்தாலும் அவனுக்காக தனிமையில் காத்திருப்பதோடு படம் நிறைவடைகிறது.பிரபல கன்னட நாவலாசிரியரான S.L.பைரப்பா எழுதியிருக்கும் மிகச் சிக்கலான இந்தக் கதைக்கு காசரவள்ளி அமைத்திருக்கும் எளிமையான திரைக்கதை பிரமிக்க வைக்கிறது. மூல வடிவத்திலிருந்து திரைப்படம் விலகியிருப்பதான விமர்சனமிருந்தாலும் திரைப்படத்திற்கு நியாயம் செய்திருக்கும் இயக்குநருக்கு அளிக்கப்படும் சுதந்திரமாகக் கொண்டு இந்த விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே நான் கருதுகிறேன். மிகவும் சிக்கலான ஒன்றுக்கொன்று முரண்படுகிற விநோதமான மனித உணர்வுகளை மோதச் செய்வதே ஒரு நல்ல கதாசிரியனின் பணி. எழுத்தில் ஒருவேளை கொண்டுவர முடிகிற இந்த அகவயமான வடிவத்தை திரைமொழிக்கு மாற்றுவது ஒரு திரை இயக்குநருக்கு மிகுந்த சவாலான பணி. காசரவள்ளி இதை திறம்படச் செய்திருக்கிறார். இந்தச் சிக்கலான சூழ்நிலை பயணம் செய்யக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் இயக்குநர் முயன்று பார்த்திருக்கிறார். (ஆனால் மறுபிறப்பு இளைஞன் அதே பிராமண இனத்தில் பிறந்ததாக அல்லாமல் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வருவதாக அமைக்கப்பட்டிருந்தால் இன்னும் கூட சுவாரசியம் கூடியிருக்கும்).

வழக்கமான திரைக்கதையிலிருந்து விலகி படம் பல இடங்களில் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியைச் சொல்ல முடியும். 'மறுபிறப்பு' கொண்டிருப்பதாக நம்பப்படும் அந்த 20 வயது இளைஞன் அந்தக் குடும்பத்திற்குள் நுழைகிறான். 20 வருடத்திற்கு முன்பு கணவனை இழந்த விதவையும் அந்த வீட்டில் இருக்கிறாள். இருவரும் சந்தித்துக் கொள்வது எப்படியிருக்கும்? பார்வையாளனுக்கே மிகுந்த சங்கடத்தையும் குறுகுறுப்பான ஆர்வத்தையும் ஏற்படுத்தக் கூடிய இந்தச் சூழ்நிலையை எந்தவொரு திரைக்கதையாசிரியனும் மெல்ல மெல்ல சாவகாசமாய் சென்று ஒரு உச்சத்தை அடையுமாறு ஏற்படுமாறு அமைப்பார். ஆனால் இயக்குநர் இளைஞன் வீட்டிற்குள் நுழைந்த சில கணங்களிலேயே இந்த சிக்கலான காட்சியை பார்வையாளன் முன்வைக்கிறார். சன்னல் கட்டைகளின் பின்னே மறைந்திருக்கும் பெண்ணும் ஒரு வேட்டை நாயின் பார்வையோடு அந்த இளைஞனும்.

இன்னொரு காட்சி. விதவைக் கோலத்தில் தம்முடைய முன்ஜென்ம 'மனைவி'யை காண விரும்பாத இளைஞன், கோபத்தோடு அமர்ந்திருக்கிறான். அவனை சாந்தப்படுத்த வேண்டி வழக்கமான உடையை அணியச் சொல்லி விதவையை வற்புறுத்துகிறாள் கிழவி. முதலில் மறுக்கும் வெங்கடலஷ்மி பின்பு தனியறையில் அந்த வண்ண ஆடையை மிகுந்த விருப்பத்துடன் அணிந்து கொள்கிறார். வெறுப்புறச் செய்யும் விதவைச் சம்பிதாயங்களிலிருந்து தன்னை விடுவிக்க வந்தவன் என்பதும் அந்த இளைஞன் மீது அவள் இணங்கிப் போவதற்கு ஒரு காரணமாக அமைகிறது என்பதாக இந்தக் காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது என் புரிதல்.


ஒரு விதவைப் பெண்ணின் மன உணர்வுகளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டுச் செல்லும் இந்தத் திரைப்படம் பல ஆழமான காட்சிகளோடு பயணிக்கிறது. தன்னுடைய தாய் அவ்வப்போது மொட்டையடித்துக் கொள்வதை விரும்பாத மகள், அவள் வயது குறைந்த இளைஞனை கணவனாக ஏற்றுக் கொள்ளுவதோடு மாத்திரம் முரண்படுகிறாள். தன்னுடைய மகனை 'மறுபிறப்பின்' மூலம் காண்பதில் மகிழச்சி கொள்ளும் கிழவி, அவனை தன்னுடைய விதவை 'மருமகளின்' துணையாக காண்பதை விரும்பவில்லை. வெங்கடலஷ்மியின் வக்கீல் சகோதரனும் இதை 'சொத்து' பிரச்சினையாக மாத்திரமே காண்கிறான். ஊர்க்காரர்கள் தம்முடைய ஆச்சாரத்திற்கு பங்கம் நேர்ந்துவிடுமோ என்றுதான் கவலைப்படுகிறார்கள். ஆனால் யாருமே அந்த பேரிளம் விதவையின் மன உணர்வுகளை கருத்தில் கொள்வதில்லை. முதியவர் மாத்திரமே இதற்கு மெளன சாட்சியாய் இருக்கிறார்.


()

இளைஞனோடு தனியான வாழ்க்கைக்குச் சென்ற பிறகும் நீடிக்கிற தன்னுடைய நிராதரவான நிலையை ஒரு கட்டத்தில் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள் வெங்கடலஷ்மி. உடல்வேட்கையைத் தவிர எந்தவிதத்திலும் இளைஞன் தன்னுடைய 'கணவனாக இல்லை'. விதவையாக இருந்த போது ஒதுக்கி வைத்த ஊரார் தன்னுடைய புதிய உறவிற்குப் பிறகும் தன்னை ஒதுக்கி வைப்பதைக் கண்டு வேதனைப்படும் அவள் தான் 'விதவையா, சுமங்கலியா" என்கிற சிக்கலான நிலையில் இருப்பதைச் சொல்லி புலம்புகிறாள்.

இறுதிக்காட்சியில் வெங்கடலஷ்மி தன்னுடைய மகளுடனான உரையாடலின் போது இந்தப்படம் மிகுந்த அழுத்தமான திருப்பத்தைக் கொண்டிருக்கிறது. 'நீ உண்மையாகவே அவனை உன்னுடைய கணவனின் 'மறுபிறப்பு' என்று நம்பினாயா?' என்று மகள் கோபத்துடன் கேட்க 'தான் எப்போதுமே அவ்வாறு நினைக்கவில்லை' என்று வெங்கடலஷ்மி சொல்லும் போது படத்தின் அதுவரையான காட்சிகளை வேறொரு தளத்தில் வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆச்சாரமான பின்னணிச் சூழலில் ஒரு பெண்ணால் எவ்வாறு ஒரு அந்நியனை 'மறுபிறப்பு’ காரணமாக எப்படி கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது என்று எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது.

சமூகம் எந்தவொரு பாவமும் அறியாத விதவைகளின் மீது அழுத்தி வைத்திருக்கும் அர்த்தமில்லாத பாரம்பரியச் சுமைகளை இந்தப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது. 'மறுபிறப்பு' போன்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாத விஷயத்தை, 'விதவை மறுமணம்' என்கிற முற்போக்கான விஷயத்தைச் சொல்ல பயன்படுத்தியிருக்கும் லாவகம் கதாசிரியரை வியக்கச் செய்கிறது. இயக்குநர் கிரிஷ் காசரவள்ளி ஒவ்வொரு பாத்திரத்தையும் அதற்குண்டான தனித்தன்மையோடு பயன்படுத்தியிருக்கிறார். லெளதீக வாழ்க்கைப் பற்றி அறியாத அப்பாவியாக காமத்தை மாத்திரம் பிரக்ஞையோடு அணுகுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த இளைஞன் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்ல வந்த படகோட்டிப் பெண் கேள்விக்கணைகளால் குதறப்படுவதை காணச் சகிக்காமல் செய்யாத அந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். அதன் மூலமாவது அந்தக் குதறல் நிறுத்தப்படும் என்பது அவன் நோக்கம்.

()

மேலே சொல்லப்பட்டிருக்கும் எந்த வார்த்தைகளாலும் இந்தப் படத்தின் மையத்தை உங்களால் உணர்ந்து கொள்ளவே முடியாது. அது என்னுடைய எழுத்தின் போதாமையாகவோ அல்லது அழுத்தமாக காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குநரின் திறமையாகவோ இருக்கலாம். நேரடியான சாட்சியின் துணை கொண்டுதான் இதன் ஆன்மாவை நீங்கள் உணர முடியும்.

ஓயாது துரத்தப்படும் அங்காடி நாயின் நிலையும், சமூகத்தினால் அலைக்கழிக்கப்படும் பெண்களின் - குறிப்பாக விதவைகளின் நிலையும் - ஒரே புள்ளியில் நின்றிருப்பதை குறியீடாக உணர்த்த இந்தத் தலைப்பை கதாசிரியர் தேர்ந்தெடுந்த்திருக்கக்கூடும்.

பெரும்பான்மையான உலகத் தரமான சினிமாக்கள் அந்தந்த மொழியிலுள்ள உன்னதமான இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைகின்றன. தமிழிற்கும் அவ்வாறான வளமான இலக்கியப் பின்னணி உண்டு. ஆனால் தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் மாத்திரம் 'கதையை’ சவேரா ஓட்டலின் சிகரெட் புகை நடுவிலும் பர்மா பஜார் டிவிடிகளிலும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தைப் பற்றின பிரசன்னாவின் பதிவு.

suresh kannan

20 comments:

மணிஜி said...

அருமையான விமர்சனம் சுரேஷ்.மிகவும் ரசித்து வாசித்தேன்

மணிஜி said...

கொஞ்சம் மோகமுள்ளை ஒத்திருக்கிறதோ?

சென்ஷி said...

அருமையான திரைப்படத்தைப் பற்றிய விமர்சனம். நன்றி சுரேஷ்கண்ணன்

ரவி said...

நல்ல விமர்சனம்.

செ.சரவணக்குமார் said...

அருமையான விமர்சனம். பகிர்ந்ததற்கு நன்றி.

மயிலாடுதுறை சிவா said...

வாசகர்களுக்கு மிக எளிமையாக புரியம் வண்ணம் இந்த திரைப் படத்தைப் பற்றி நன்கு எழதியுள்ளீர்கள்! ஓர் கடல் (மம்மூட்டி, மீரா ஜாஸ்மின்) பார்த்து அதில் இருந்து மனம் விடுபட நீண்ட நாள் ஆயுற்று!

இந்த திரைப் படத்தின் டிவிடி சென்னையில் கிடைக்குமா?

நல்ல பல திரைப் படத்தை தொடர்ந்து அறிமுகப் படுத்துவதிற்கு நன்றிகள் பல....

மயிலாடுதுறை சிவா...

Gurusamy Thangavel said...

Very interesting review

ஷண்முகப்ரியன் said...

அருமை.

ILA (a) இளா said...

தமிழ்ல கூட இதே கருவோட ஒரு படம் வந்துச்சுங்களே.

முரளிகண்ணன் said...

அருமையான விமர்சனம்.

Ayyanar Viswanath said...

அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ்.

PRABHU RAJADURAI said...

சின்னதாய், ஒரு மின்னல்!
http://marchoflaw.blogspot.com/2007/11/blog-post_7781.html

எனக்கு உடனே நினைவுக்கு வந்தது, எனது இந்த பதிவு!

PRABHU RAJADURAI said...

”ஆனால் தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் மாத்திரம் 'கதையை’ சவேரா ஓட்டலின் சிகரெட் புகை நடுவிலும் பர்மா பஜார் டிவிடிகளிலும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்”

You can reserve your judgment...It seems all the stories of this world have already been written...

Gokul R said...

Where do you found this movie ?
I have always wished to watched Girish Kasaravalli's movies ...

But coudnt find them on internet/torrents ....

Have you any idea ?

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

தண்டோரா: // மோகமுள் //

பேரிளம் பெண் x இளைஞன் என்கிற ஒரு புள்ளியில்தான் ஒத்துப்போகிறதே ஒழிய இரண்டும் வேறு வேறு திசைகளில் பயணிக்கிறது.

சிவா மற்றும் கோகுல்:

இணையத்தில் தேடினால் பல தளங்களில் படம் காணக் கிடைக்கிறது. ஆங்கில துணையெழுத்துக்களுடன் என்றால் இன்னும் தேட வேண்டும். டிவிடி விற்கிற ஒரு தளத்தைக் கூட பார்த்தேன்.

பிரபு ராஜதுரை:

இருக்கலாம். எல்லாக்கதைகளையும் ஒரு குறிப்பிட்ட வகைமைகளுக்குள் அடைத்துவிடலாம். நான் சொல்ல வந்தது, இவ்வாறான எழுத்தாளர்களின் படைப்புகளை இயக்குநர்கள் அவர்களின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளலாமே என்பதைத்தான்.

வசந்த் said...

மகளாக நடித்திருப்பது இயக்குநர் கிரிஷ் காசரவள்ளியின் மகள் அனன்யா காசரவள்ளி என்பதைக் குறிப்பிட்டிருக்கலாமே.

லேகா said...

சுரேஷ்,

திரைப்பட அறிமுகத்திற்கு நன்றி.அருமையான விமர்சனம்.அதிலும் கடைசி வரிகள் வெகு உண்மை.

கன்னட,மலையாள திரையுலகில் நல்ல இலக்கியங்கள் திரைப்படமாய் உருமாறுகின்றன..நம்மவர்கள் அதற்கு தயங்குவது ஏன் என்று தெரியவில்லை..சுஜாதாவை தவிர்த்து இவர்களுக்கு வேறு எழுத்தாளர்கள் தெரிவதில்லை.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் "கடஷ்ரதா" நாவலை கிரிஷ் திரைப்படமாய் இயக்கியுள்ளார் கன்னடத்தில்.அந்த திரைப்படமும் இளம் விதவையின் சங்கடங்களை சொல்லுவதாய் இருக்கும்..நான் ரசித்து பார்த்த திரைபடம் அது.

இந்த திரைபடத்தை பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்.

Toto said...

ந‌ல்ல‌ ப‌ட‌த்தை‌ மிக‌ நேர்த்தியாக‌ அறிமுக‌ம் செய்த‌த‌ற்கு ந‌ன்றி ஸார்.

Toto
www.pixmonk.com

Anonymous said...

There was a japanese movie on similar line. That name's also starts with dog but not sure.

Looks like this movie is an indianized version of that particular movie.

radhakrishnan said...

அருமையான பதிவு
படத்தை இப்போது பார்த்தவுடன், நீங்கள் ரிவ்யூ எழுதியிருந்த்து ஞாபகம் வந்த்து. உடனே
தேடிப் படித்தேன். அருமையான விளக்கங்கள். நன்றி சார். வாழ்த்துக்கள்