Thursday, January 08, 2009

சாருவும் நோபல் பரிசும்

தமிழ் நவீன இலக்கிய வாசகர்கள் பலருக்கு கிளர்ச்சி தரும் பெயர்களில் ஒன்று சாருநிவேதிதா. வெகுஜன உலகில் 'சுஜாதா' என்றால் சிற்றிதழ்களின் உலகில் அதற்கு நிகராக சாருவைச் சொல்லலாம். எனவேதான் சுஜாதாவைப் போலவே சாருவின் பத்து புத்தகங்களை ஒரே சமயத்தில் வெளியிட உயிர்மை பதிப்பகத்தால் இயன்றிருக்கிறது. சாருவை விட திறமையாகவும் சுவாரசியமாகவும் எழுதக்கூடியவர்கள் இருந்தாலும் சாருவின் அளவிற்கு புகழின் வெளிச்சம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நேற்று சென்னை புக்பாயிண்டில் நடந்த உயிர்மை புத்தக வெளியீட்டு விழா முடிய இரவு 10.00 மணி ஆகிவிட்டது. என்றாலும் பெரும்பாலான பார்வையாளர்கள் கலையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். பாரதியும் புதுமைப்பித்தனும் ஆத்மாநாமும் ஆதவனும் தங்களுடைய படைப்புகள் தமிழ் வாசகர்களால் கொண்டாடப்படுவதை காண்பதற்குள்ளாகவே இறந்து போனார்கள். ஆனால் சாரு தன் வாழ்நாளிலேயே தன்னுடைய தகுதிக்கும் மீறிய புகழை பெற்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன். என்றாலும் சாருவால் தான் அங்கீகரிக்கப்படுவதின் போதாமை குறித்து தொடர்ந்து செய்கிற புலம்பலை நிறுத்த இயலவில்லை. ஒரு கேரள திரைப்பட இயக்குநருடன் சென்னை நகரத்தின் வீதிகளில் சுற்றித்திரிந்த போது ஒருவரும் சாருவை சீண்டவில்லையாம். இயக்குநர் ஆச்சரியத்துடன் கேட்டாராம் "என்ன சாரு, கேரளாவில் உங்களை அப்படி கொண்டாடுகிறார்கள். ஆனால் இங்கே யாருமே உங்களை நிறுத்தி விசாரிக்கவில்லையே?".

சில வருடங்களுக்கு முன் சென்னை அண்ணாசாலையில் ஆனந்த விகடன் அலுவலகம் அருகே இருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். உலகத்தின் துயரத்தையெல்லாம் தன் முகத்தில் தேக்கிக் கொண்டு பரிதாபமான தோற்றத்துடன் ஒரு தேசலான உருவம் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அசோகமித்திரன். ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு இலக்கியப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக சொற்ப ஊதியம் வாங்கிக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய உழைப்பை அதற்கு செலுத்திக் கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வறுமையுடன் இலக்கியப்பணி செய்துக் கொண்டிருந்தாரே, அவருடைய புத்தகங்கள் பத்து வேண்டாம்.. ஐந்தாவது ஒரே சமயத்தில் வெளியாகியிருக்குமா? ஞானபீடம் அல்ல, நோபல் பரிசு வாங்குமளவிற்கு கூட தகுதி படைத்த எழுத்தாளராக நான் கருதும் அசோகமித்திரனை விட சாரு அதிர்ஷ்டம் செய்தவரா இல்லையா? அப்புறம் ஏன் இந்தப் புலம்பல்.

உண்மைதான். சினிமாவை நடிக, நடிகையர்களை கொண்டாடும் தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை, வரலாற்று ஆசிரியர்களை, ஆய்வாளர்களை, நாட்டார் கலைஞர்களை, நம் கலையை போற்றி வளர்ப்பவர்களைப் பற்றிய எந்தவிதமான பிரக்ஞையும் அற்று சொரணையேயில்லாமல்தான் இருந்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய? சினிமாவும் தொலைக்காட்சியும் நம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல சாகடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அபத்தமான சூழ்நிலையிலும் இலக்கியத்தை நாடி வரும் ஒரு வட்டத்தை சாரு போன்ற ஒரு எழுத்தாளர் அங்கீகரிக்கவோ பாராட்டவோ வேண்டுமா, இல்லையா?

போகட்டும்.

()

சாருவின் எழுத்துடனான முதல் பரிச்சயம் சுஜாதாவினால் ஏற்பட்டது. கணையாழியின் கடைசிப்பக்கங்களில் தமிழில் போர்னோ எழுத்து பற்றி சுஜாதா கீழ்கண்டவாறு எழுதும் போதுதான் சாருவின் பெயரையே முதன்முதலாக அறிந்தேன்.

" தமிழில் போர்னோகிரா•பி இருக்கிறதா என்று கேட்டு சில வருஷங்களுக்கு முன் இந்தப் பக்கங்களில் தமிழில் இருப்பதெல்லாம் ' ஸாப்ட் போர்னோ வகை ' என்று சொல்லியிருந்தேன். இப்போது தமிழில் போர்னோ வயசுக்கு வந்துவிட்டது. அண்மையில் வெளிவந்த சில புத்தகங்களையும் பத்திரிகைக் கதையையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். சாரு நிவேதிதாவின் ' எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும் ', கர்நாடக முரசும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல் ஆய்வும் ' என்ற இவ்விரு புத்தகங்களிலும் (மெட்டா •பிக்ஷன் என்கிறார்கள்) எல்லை மீறிய கெட்ட வார்த்தைகள் பிரயோகித்து இன்னது என்று இல்லா வக்ர உறவுகளும் பெய்து படிக்கிற பேரையெல்லாம் வெறுக்க வைக்கும் வீம்புடன் வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு புத்தகங்களை விவரிக்க வார்த்தைகள் புத்தகத்திலேயே இருக்கிறது. ' டோட்டல் டிஸ் இண்டக்ரேஷன் , டோட்டல் •பார்ம்லஸ்னஸ் '.

கி.ராஜ நாராயணன் எழுதும் ' வயது வந்தவர்களுக்கு ' என்ற கதைத் தொடர் தாய் இதழில் கொஞ்சம் ' wicked ' என்று சொல்வேன். இந்த மாதிரி வார்த்தைகளையும் கதைகளையும் நாம் தினம் தினம் கேட்காமலில்லை. தெருவில் கேட்பது , கழிப்பறைகளில் எழுதுவது அனைத்துமே அச்சில் வருவது மேல்நாட்டு இலக்கியங்களிலும் சினிமாக்களிலும் உண்டு. தமிழில் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இலக்கியம் என்பது கங்கை நதிபோல ; அதில் எல்லா சங்கதிகளும் மிதந்து செல்லும் என்று சொல்வார்கள். அந்த வகையில் மேற்குறித்தவைகளும் பழுப்பாக மிதந்து செல்கின்றன. "

சுஜாதா, நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல தூக்கிப் போட்ட சாருவின் 'எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' என்கிற அந்த நாவலை உடனே ஆர்வத்துடன் வாங்கிப் படித்தேன். அதன் நான்-லீனியர் வடிவமும் பாசாங்கில்லாத மொழியும் எனக்குப் பிடித்திருந்தது.

சமுகத்திற்கென்று ஒரு முகமும் தனியுலகிற்கென்று ஒரு முகமும் நாம் வைத்திருக்கிறோம். தனியுலக முகத்தின் வெளிப்பாடுகளை எல்லாம் 'அந்தரங்கம்' என்று ஒளித்து வைக்கிறோம். இந்தப் பாசாங்கு எனக்கு அபத்தமாகப் படுகிறது. இந்த விகாரங்களையெல்லாம் பதிவு செய்ய வேண்டுமா என்று அருவருப்புடன் சிலர் விமர்சிக்கிறார்கள். நம்முடைய இன்னொரு பகுதியையும் பதிவதில் என்ன தவறிருக்கிறது. அதுவும் ஒருவகையான இலக்கியமே. விமர்சனங்களுக்கும் கலாசாரக் காவலர்களுக்கும் பயப்படாமல் அவ்வாறான இலக்கியத்தை எழுதுபவர்களில் பிரதானமான சாருவை இந்தக் காரணத்தினாலேயே எனக்குப் பிடித்துவிட்டது. சாருவே சொல்லிக் கொள்வது போல அவரைப் பிடிக்காவதர்களும் வெறுக்கிறவர்களும் கூட ரகசியமாகவேனும் ஒப்புக் கொள்கிற சமாச்சாரம், சாரு எழுத்தை கையாள்கிற லாகவம். என்ன, அவரது அலட்டல்களை தாங்கிக் கொண்டுதான் அவரது எழுத்துகளை கடந்துவரவேண்டியிருக்கிறது.

()

நேற்றைய விழாவில் சாரு தன்னுடைய ஏற்புரையில் சொன்ன விஷயத்தைப் பற்றிப் பேசிவிட்டு மற்ற விஷயங்களுக்குள் செல்லலாம்.

"நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ்.ரா., ஆகியோர்களுக்கு அடுத்த மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவருராக சாகித்ய அகாதமி விருது வழங்க வேண்டும்" என்று சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பாரதிமணி சொல்லிவிட்டாராம். இதை உண்மைதமிழனின் பதிவில் படித்த போது எனக்கும் ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. என்ன இது ஏதோ ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் பாரத்தில் எழுதுவது போல் சொல்லியிருக்கிறாரே என்று. ஆனால் பாவம் பாரதிமணி. சாரு பொங்கி விட்டார். (நினைவிலிருந்து எழுதுகிறேன்).

"யாருக்கு வேண்டும் சாகித்ய அகாதமி. இப்ப ஏதோ மேலாண்மை பொன்னுச்சாமின்றவருக்கு கொடுத்திருக்காங்க. கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு. இந்த லிஸ்ட்ல போய் ஏன் எஸ்.ராமகிருஷ்ணணையும் சேத்திருக்கீங்க? ஜெயமோகனுக்கும் நாஞ்சில் நாடனுக்கும் 'கலைமாமணி விருதோ' என்னவோ கொடுத்துப் போகட்டும். ஆனா நம்ம சில எழுத்தாளர்கள் நோபல் பரிசு வாங்குகிற அளவிற்கு தகுதியானவங்கன்னு நான் ரொம்ப வருஷமா சொல்லிட்டு வரேன். (அசோகமித்திரன், ஆதவன். இ.பா., ந.முத்துசாமி... என்று சில எழுத்தாளர்களை சொல்கிறார்). உலகத்துல இருக்கற அத்தனை சிறுகதைகளிலும் சிறந்ததாக 20 தேர்ந்தெடுத்தா அதுல எஸ்.ராவின் 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' சிறுகதையும் ந.முத்துசாமியுடைய 'நீர்மை'யும் வரும். அப்பேர்ப்பட்ட படைப்பாளிகளை சாகித்ய அகாடமி கொடுத்து கேவலப்படுத்த சொல்றீங்களா, வெக்கமாயில்லை. இம்பாக்-னு ஒரு விருது. ஒன்றரை கோடி ரூபா பரிசு. நோபல் பரிசுக்கும் மேல. அடுத்த வருஷம் அந்த விருதுப் பட்டியல்ல என்னோட பேர் இருக்கும்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.

()

சாரு தன்னுடைய சக எழுத்தாளர்கள் குறித்தும் தன்னைக்குறித்தும் இப்படியொரு உயர்வான அபிப்ராயம் வைத்திருப்பது குறித்து சந்தோஷம்தான். இவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் சிந்திப்பவர் ஏன் நாஞ்சில் நாடன் குறித்தும் ஜெயமோகன் குறித்தும் இவ்வளவு காழ்ப்புணர்ச்சியை கொண்டிருக்க வேண்டும்? தனக்கும் தன்னுடைய சக எழுத்தாளர்களுக்கும் சர்வதேச அளவில் நியாயமானதொரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிற சாரு, அந்தச் சமயத்தில் மாத்திரமாவது தனிப்பட்ட மோதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பாரபட்சமற்ற ஒரு பட்டியலை தருவதுதானே முறையான செயலாக இருக்கும்? எப்படி சாருவை விமர்சிப்பவர்கள் கூட அவர் எழுத்தின் சுவாரசியத்தை ஒப்புக் கொள்வார்களோ, அதே போல மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களை விமர்சிப்பவர்கள் கூட அவர்கள் சாருவிற்கும் மேலானதொரு இலக்கிய மதிப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளவார்கள். இதை ஏன் சாரு அங்கீகரிக்க மறுக்கிறார் என்பது தெரியவில்லை. நோபல் பரிசிற்கும் மேலானதொன்றிற்கு தன்னுடைய பெயரை மாத்திரம் சொன்னால் எங்கே சவட்டி எடுத்துவிடுவார்களோ என்று போனால் போகிறது என்று மற்ற சில எழுத்தாளர்களின் பெயர்களையும் பாதுகாப்பாக துணைக்கு அழைத்துக் கொள்கிறாரோ என்கிற சந்தேகம் இதனாலேயே எழுகிறது.

மேலும் ஒரு விருது தரப்படுவது என்பது ஒரு படைப்பாளி அங்கீகரிக்கப்படுவதற்கான அடையாமே. அதனுடன் தரப்படும் பணத்தை வைத்துத்தான் அந்த விருதின் மதிப்பை சாரு அளக்க விரும்புகிறாரா என்று தெரியவில்லை.

எந்தவொரு படைப்பையும் எழுத்தாளனையும் கறாராக அங்கீகரிப்பதோ நிராகரிப்பதோ காலம்தான். சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின் இடம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் சாருவே கூறுகிற மாதிரி நம்முடைய தகுதி குறித்து நமக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. எப்படி கமல் படம் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்று காலங்காலமாக அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறோமோ, அப்படியேதான் இந்த சர்வதேச விருதுகளும். கருணாநிதியும், வைரமுத்துவும் வேறு இந்த வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகிறதோ?

()

சாருவின் உரை தந்த எரிச்சலில் விழாவின் நிகழ்வுகளைப் பற்றி அதிகம் சொல்ல இயலவில்லை. சிலவற்றை மாத்திரம் முயற்சிக்கிறேன். 10 புத்தகங்களையும் இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டார். புத்தகங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய அபிப்ராயத்தை வெளிப்படுத்தினர். (நினைவிலிருப்பற்றை மாத்திரம் எழுதுகிறேன். இந்தப் பதிவு முழுவதிலும் மற்றவர்கள் சொன்னதாக எழுதினதில் ஏதேனும் கருத்துப் பிழை ஏற்பட்டிருந்தால் அது என் நினைவுப் பிசகினால் ஏற்பட்டதே. [அடைப்புக்குறிகளுக்குள் எழுதியிருப்பது என்னுடைய கருத்து].

* சாருவின் சிறுகதைத் தொகுதியைப் பற்றி (மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்) பேசின சுதேசமித்திரன், "சாருவின் தற்கால எழுத்து ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் அவருடைய பழைய சிறுகதைகள் (முள், திரிலோக்புரி போன்றவை) உயிர்ப்புடன் உள்ளன. பழைய முனியாண்டி காணாமற் போய்விட்டார். அவர் மீண்டும் வர வேண்டும். எனக்கு அஞ்சலில் வந்த சாருவின் புத்தகம் அவரது எழுத்துக்களைப் போலவே நிர்வாணமாக அட்டையில்லாமல் வந்து சேர்ந்தது. (இந்த நிர்வாண மேட்டரை பின்னால் வந்த பலரும் பிடித்துக் கொண்டனர்).

* ந.முத்துசாமி உரையாற்றும் போது "ஒரு இலக்கியக் கூட்டத்தில் நான் பேசி முடித்து அமர்ந்த போது சாரு எழுந்து 'இதுவரை முத்துசாமி செய்த கதாகாலட்சேபம் முடிந்ததற்கு நன்றி' என்று கூறினார். அவர் கிண்டலாகக் கூறினதாக எடுத்துக் கொள்வதா, அல்லது கதாகாலட்பேசத்தை உயர்வான தொனியில் வைத்து பாராட்டாக எடுத்துக் கொள்வதா என்று குழப்பமாக இருந்தது. புத்தகம் நிர்வாணமாக வந்தது என்று இதற்கு முன் பேசிய நண்பர் சொன்னார். நான் கேட்கிறேன், அப்படியென்றால் அது ஆண் உடலா, பெண் உடலா?. சாருவின் புத்தகம் என்பதனாலேயே எனக்கும் இவ்வாறெல்லாம் பேசத் தோன்றுகிறது. அதுதான் சாருவின் எழுத்து.

[என்னிடம் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன். புத்தகத்தின் தலைப்பிலேயே 'மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள்' என்கிருக்கிறது. அப்புறம் என்ன அது ஆணா, பெண்ணா என்றொரு கேள்வி?].

* 'தீராக் காதலி' என்ற சினிமாக் கட்டுரைகளைப் பற்றி பேசின இ.பா., "இந்தக் காலத்தில் நிறைய காசு செலவழித்து யாரையெல்லாமோ சூப்பர் ஸ்டார் என்கின்றனர். ஆனால் அந்தக் கால உண்மையான சூப்பர் ஸ்டார்கள் என்றால் அது எம்.கே.டி., கிட்டப்பா போன்றோர்கள்தான். பொதுமக்கள் பாகவதர் படங்கள் திரையிடப்படும் அரங்குகளுக்கு வெளியே அமர்ந்து அவருடைய பாடல்களை ரசிப்பார்கள். அப்படியொரு உயர்வான ரசனையை இன்று நாம் தொலைத்துவிட்டோம். கிட்டப்பா-கே.பி.சுந்தராம்பாள் இடையிலான காதல் மிக உன்னதமானது.

[இந்தக் கட்டுரைகள் உயிர்மையில் வெளிவந்த போது நான் நினைத்தது. 'இதை எழுத சாருநிவேதிதா தேவையில்லை. பிலிம் நியூஸ் ஆனந்தனே போதும். கலகக்குரலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த சாருவின் எழுத்து நீர்த்துப் போவது இம்மாதிரியான எழுத்துகளால்தான்]

* அரசியல் கட்டுரைகளைப் பற்றி எழுத்தாளர் சிவகாமி, IAS பேசினார். 'தலித் எழுத்துக்களில் வெளிப்படும் ஆபாசங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று திருமாவளவனும் ரவிக்குமாரும் கூறினதை சாரு விமர்சித்து எழுதியிருக்கிறார். ஆபாச எழுத்துகளுடன் எழுதப்பட்ட ஒரு தலித் படைப்பு வெற்றி பெற்று விட்ட காரணத்தினாலேயே மற்றவர்களும் இதை நகல் செய்யும் விதமாக ஒரு வித செயற்கைத்தனத்தடன் ஆபாச வார்த்தைகளைப் புகுத்தி எழுதி வருகின்றனர். இதை மட்டுப்படுத்தும் விதமாகவே திருமாவும் ரவிக்குமாரும் அவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன்.

[திரைப்பட இயக்குநர்கள் அமீரும், சசிகுமாரும் புத்தகங்களை இன்னும் படிக்கவில்லை என்றனர். அமீருக்கு புத்தகங்கள் படிக்கும் வழக்கமே இல்லையாம். சமகால தமிழ்ச்சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் என்கிற வகையில் அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் எதற்காக வாசிப்பில் நாட்டமே இல்லாத இம்மாதிரியான பிரபலங்களை ஜோக்கர்கள் போல் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று புரியவில்லை. விழாவிற்கு கவர்ச்சியை கூட்டவா? ஏற்புரையின் போது சாரு அழைக்கப்பட்டவர்கள் மீது கொண்ட காதலால் அவர்களை அழைத்தேன் என்றார். அப்படியென்றால் அவர்களை சிறப்பு பார்வையாளர்களாக அழைக்கலாமே, புத்தகங்களை படிக்காமலேயே அதை பெற்றுக் கொண்டு மேடையில் ஒரு சம்பிதாயத்திற்காக எதையோ பேசிவிட்டுப் போக ஏன் அவர்கள் தேவை என்பது புரியவில்லை. இன்னொரு உயிர்மை விழாவிலும் இதே போல் பார்த்திபன் கலந்து கொண்டு தத்துபித்தென்று எதையோ உளறிச் சென்றார்].

* 'அரவாணிகளைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதும் போது 'பெண்களை விட அழகாக இருந்தார்கள்" என்று எழுதுகிறார் சாரு. 'ஆண்களை விட அழகானவர்கள்' என்று ஏன் அவருக்கு எழுதத் தோன்றவில்லை? என்று கேட்டார் தமிழச்சி. (இதற்கு ஏற்புரையில் பதிலளித்த சாரு.. சீச்சி.. I hate men" என்றார்).

* ஒரு மாறுதலுக்கு சாருவை விளாசி தள்ளிவிட்டார் மதன். "திரைப்பட விமர்சனங்களை எழுதும் போது மிகவும் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள். ஒரு திரைப்படம் என்பது மிகுந்த சிரமத்திற்குப் பின்னும் பல்வேறு உழைப்புகளுக்குப் பின் உருவாவது. அதனால் தமது விமர்சனத்தை முன்வைக்கும் போது சற்று கனிவு காட்டுவது நல்லது. உதாரணமாக பாலுமகேந்திராவைப் பற்றி ஒரு இடத்தில் எழுதும் போது " சந்தியாராகம், வீடு போன்ற படங்களை தர முடிந்த பாலுவால் எப்படி "Julie Ganapathi" என்றதொரு மூன்றாந்தர திரைப்படத்தைத் தர முடிந்தது' என்று எழுதியிருக்கிறீர்கள். இது மிகவும் கடுமையான விமர்சனம். இதற்கு பாலுவிடம் ஏதேனும் ஒரு காரணமிருக்கலாம். மேலும் அந்தப்படம் மோசம் என்று ஒரே வரியில் போகிற போக்கில் சொல்லாமல், ஏன் அது மோசம் என்று விளக்க வேண்டும். "வெள்ளித்திரை என்ற படத்தைப் பார்த்துவிட்டு இடைவேளையிலேயே ஓடிவந்துவிட்டேன்' என்று எழுதியிருக்கிறீர்கள். இடைவேளைக்குப் பின் அந்தப் படம் நன்றாக இருந்திருக்கலாம். ஒரு திரைப்பட இயக்குநருக்கும் நாம் தரும் குறைந்த பட்ச மரியாதை அந்த திரைப்படத்தை முழுதும் பார்ப்பதுதான்.

[மதனின் இந்தப் பார்வையுடன் என்னால் உடன்பட முடியவில்லை. அவர் தொலைக்காட்சியில் செய்யும் விமர்சனத்தில் சிம்பு, விஷால் போன்ற பேர்வழிகளை அமர வைத்து 'நல்லதொரு படத்தை தந்திருக்கிறீர்கள்' என்று மழுப்புவார். அந்த மாதிரி 'கனிவை'த்தான் எதிர்பார்க்கிறாரோ, தெரியவில்லை. வெகுஜன பத்திரிகைகளின் சாதகமான விமர்சனங்களையே சிற்றிதழ்களிலும் எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை. இதையே பின்னால் பேச வந்த பிரபஞ்சனும் குறிப்பிட்டார்.]

* எந்தத் தயாரிப்பாளரையும் குப்பையாக படம் எடுக்கச் சொல்லி நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எனவே எங்களை பாராட்டியோ கனிவாகவோ எழுதச் சொல்லி தயவு செய்து கட்டாயப்படுத்தாதீர்கள். இம்மாதிரியான விமர்சனங்களும் ஒருபுறம் எழுதப்படட்டும். மறைந்த சுப்ரமண்யராஜூ ஒரு திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதினார்.

'அவன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்தன. குனிந்து எடுக்கும் போது இருவரின் தலைகளும் முட்டிக் கொண்டன. கட் செய்தால் இருவரும் பாடும் டூயட். இடைவேளை. இடைவேளைக்கு அப்புறம்?

எவன் பார்த்தான்?'

இந்த விமர்சனத்தினாலேயே இரண்டு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சாவி கூறினார். தயாரிப்பாளர் விளம்பரத்தை நிறுத்தி விட்டாராம்.

- இது பிரபஞ்சன்.

()

மற்றபடி விழா பெரும்பாலும் இறுக்கமின்றி கலகலப்பாகவே இருந்தது. சாருவின் ஏற்புரையில் அவருக்கே உரித்தான நையாண்டியும் உணர்ச்சியும் தூக்கலாகவே இருந்தது. மேடையில் இருந்தவர்கள் பெரும்பாலும் சாரு 'யூத்' என்பதாக குறிப்பிட்டது சற்று அதீதம்தான். 'அராத்தான' தன்னை பெருந்தன்மையுடன் சகித்துக் கொண்ட தம்முடைய குடும்ப உறுப்பினர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாரு. நல்லதொரு முன்னுதாரணம் இது. ந.முத்துசாமியின் 'நீர்மை' சிறுகதை தன்னை ரொம்பவும் பாதித்தாகவும் அந்தக் கதையின் தாக்கமே பெரும்பாலும் தன்னுள் ஓடிக் கொண்டிருப்பதாகவும் ந.முத்துசாமியை தன்னுடைய தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பார்ப்பதாகவும், இதுவரை வெளிப்படுத்த முடியாமலிருந்ததை இப்போது வெளிப்படுத்துவதற்குள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் கடந்து விட்டன என்றார் உணர்ச்சிகரமாக.

()

விழாவில் 'தம்பி' என்கிற பெயரில் எழுதுகிற சக வலைப்பதிவரை சந்தித்தேன். விழாவை தொகுத்து அளித்தது 'முரளி கண்ணன்' என்கிற வலைப்பதிவர். அறிவிப்பாளர்கள் பொதுவாக பேசுகிற 'தமில்' இவருக்கு நன்றாகவே வருகிறது. fm வானொலிக்கோ, தொலைக்காட்சிக்கோ முயற்சி செய்யலாம். (சும்மா ஜாலிக்கு சொன்னது, கோச்சுக்காதீங்க முரளி.).

வாஸ்து, ஜோதிடம் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் பதிப்பாளர்களிடையே நல்ல இலக்கியத்தை தேடிப் பதிப்பிக்கும் உயிர்மைக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பாராட்டுகள்.

suresh kannan

23 comments:

Anonymous said...

/வாஸ்து, ஜோதிடம் என்று பம்மாத்து செய்து கொண்டிருக்கும் பதிப்பாளர்களிடையே நல்ல இலக்கியத்தை தேடிப் பதிப்பிக்கும் உயிர்மைக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பாராட்டுகள். /

இது கிண்டலா? சீரியஸா?

Bleachingpowder said...

//கேவலம் பத்தாயிரம் ரூபா கொடுக்கறாங்க. நான் பைவ் ஸ்டார் ஓட்டல்ல ஒரு வேளைக்கு சாப்பிடறதுக்கு ஆகிற செலவு//

எவன் காசுல.என்ன ஒரு ஆனவம். கேவலம் பத்தாயிரம் ரூபாயா?முதல்ல அந்த காசை உழைச்சு சம்பாதிக்கட்டும் அப்புறம் தெரியும் அதனோட மதிப்பு.பதினெட்டு வயசுக்கு மேல ஒருத்தனுக்கு கை காலு நல்லாயிருந்தும் அடுத்தவன் காசுல சோறு சாப்பிட்டா அதுதான் கேவலம்.

//இயக்குநர் ஆச்சரியத்துடன் கேட்டாராம் "என்ன சாரு, கேரளாவில் உங்களை அப்படி கொண்டாடுகிறார்கள்//

ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இங்கே எப்படி இவரை பத்து பேருக்கு மேல தெரியாதோ அதே மாதிரி தான் கேரளாவிலும்.

Pot"tea" kadai said...

நன்றி!

Raj said...

//ஆனால் சாரு தன் வாழ்நாளிலேயே தன்னுடைய தகுதிக்கும் மீறிய புகழை பெற்றிருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்//

மிக சரி..!
//என்ன, அவரது அலட்டல்களை தாங்கிக் கொண்டுதான் அவரது எழுத்துகளை கடந்துவரவேண்டியிருக்கிறது//

எதற்கு வம்பு....நான் அவர் எழுத்துகளையே கடந்துவந்து விட்டேன்...அதாவது அவர் எழுத்தை படிப்பதையே நிறுத்தி விட்டேன்...அலட்டல் ஒரு அளவுக்குதான் இருக்கலாம்...அலட்டுவதில் இவர் இன்னொரு சிம்பு....இப்படிதான் பாலகுமாரன் எழுத்தை படிப்பதையும் நிறுத்தினேன்.


//நல்ல இலக்கியத்தை தேடிப் பதிப்பிக்கும் உயிர்மைக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் பாராட்டுகள்//

சாரு எழுத்து நல்ல இலக்கியமா...போதும் சாமி...அப்புறம்....

பெருமாள் முருகன்
யூமா வாசுகி
நாஞ்சில் நாடன்
ரா வேலமூர்த்தி
சு வேணுகோபாலன்

இவங்க எழுத்துகளையெல்லாம் நீங்க படிக்கறதில்லயா.....இதில யாராவது ஒருத்தரோட ஒப்பிடற அளவுக்கு சாரு எழுதறாரான்னு படிச்சுட்டு சொல்லுங்க

Anonymous said...

சாருவின் எழுத்தெல்லாம் ஒரு பக்குவப்பட்ட குடிகாரனின் உளறல்கள் போன்றவை. இதில் அவருடைய அலட்டல்கள் சாலையோர குடிகாரனின் பினாத்தல்கள்.

உங்களை போன்றோர் இதையெல்லாம் எப்படித்தான் சகித்துக்கொண்டு அந்த குப்பைகளையும் இலக்கியம் என்கிறீர்களோ தெரியவில்லை.

மேலும் அவர் அவருடய காசில் பைவ் ஸ்டார் ஓட்டலில் குடித்தால் அப்போது தெரியும் பந்தின் அருமை. அடுத்தவன் மொய்யில் தானே.

VIKNESHWARAN ADAKKALAM said...

:-)

மயிலாடுதுறை சிவா said...

பதிவிற்கு நன்றி சுரேஷ்

சாருவின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்!

மதன் சொன்னவற்றில் சிலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு!

எடுத்துகாட்டாக அவர் வாரணம் ஆயிரத்தை நன்கு பாராட்டு எழுதினார், நீங்கள் அதற்கு நேர்மாறாக எழுதினீர்கள்!?

நிறைய படிக்கிறார், நிறைய எழுதுகிறார், முற்போக்கு சிந்தனைவாதி, ஆனால் அவருக்கு பக்குவம் வரவில்லை என்று பலரும் சொல்வதில் சற்று உண்மை இருக்கதான் செய்கிறது!

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

சாரு நிவேதா Blogspot link இருந்த குடுங்க சார்
ப்ளீஸ்
நன்றி. விவேக்

Anonymous said...

சுரேஷ், நீங்கள் எஸ்.ரா. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரவில்லையென நினைக்கிறேன்.

பேசவே தெரியாத என்னை பலியாடு போல முதலில் பேசச்சொன்னார்கள். ஏதோ பேசிவிட்டு, கடைசியில் ’Academy without Sahitya என்று சாகித்ய அகாடெமியைப்பழித்த க.நா.சு.வுக்கும் இரண்டு காரணங்களுக்காக அந்த விருது தேவையாக இருந்தது. முதல் காரணம் விருதுடன் கொடுத்த ரூ.10,000 அவருக்கு தேவையாக இருந்தது. இரண்டாவது, 1988ல் அவர் இறந்தபோது ஆல் இந்தியா ரேடியோவிலும், தூர்தர்ஷனிலும் அவரது சாவுச்செய்தி தலைப்புச்செய்தியாக வந்தற்கு அவர் அவர் அகாடெமி விருது பெற்றவர் என்பது தான் காரணம். இல்லையென்றால், 14-வது நிமிடத்தில் Ka.Naa.Su also died என்று கடைசியில் சொல்லியிருப்பார்கள்’ என்றேன்.

முடிக்கும்போது, ‘எனக்குப்பிடித்த எழுத்தாள நண்பர்களில் நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன் முக்கியமானவர்கள். எனது ஆசை இவர்கள் காத்திருப்போர் பட்டியலிலிருந்து விடுபட்டு. R.A.C இல்லாமல், நேராக 2009ம் சீட் நாஞ்சிலுக்கும், 2010-ம் சீட் ராமகிருஷ்ணனுக்கும், 2011-ம் சீட் ஜெயமோகனுக்கும் கிடைக்க வேண்டுமென்று என்னைப்படைத்த ஆண்டவனை வேண்டிக்கொண்டு விடைபெறுகிறேன்’ என்று நகைச்சுவையாக முடித்தேன்.

வெளியில் வந்தபிறகு ஒரு சாரு ரசிகர் ‘ஏன் சாரு சார் பேரை சொல்லவில்லை?’யென்று கேட்டதற்கு, ‘நான் என்ன க.நா.சு.வா Top Ten List போடுவதற்கு?’ என்று பதில் சொன்னேன்.

நீங்கள் எழுதிய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.

பாரதி மணி

களப்பிரர் - jp said...

என்னது இன்னும் சாருக்கு இதுவரை நோபல் கொடுக்கவில்லையா... ??? என்ன தலை சொல்லுறீங்க ???

கல்வெட்டு said...

நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அனைத்திற்கும் வரிக்கு வரி பதில் எழுதலாம். என்ன பிரயோசனம். எனது கருத்தில் மாற்றம் இல்லை என்று வாத்தியார் பதிவில் நீங்கள் சொன்னதுபோல் இதற்கும் சொல்லி விடுவீர்கள். :-))))

**

பின்னூட்டம் உங்களின் கருத்தை மறுப்பதுட்ன் எனது கருத்தைச் சொல்ல மட்டுமே. நீங்கள் ஏற்கவேண்டும் என்ற் எண்ணத்தில் அல்ல ஆகையால்.....

**// 'அரவாணிகளைப் பற்றி ஒரு கட்டுரையில் எழுதும் போது 'பெண்களை விட அழகாக இருந்தார்கள்" என்று எழுதுகிறார் சாரு. 'ஆண்களை விட அழகானவர்கள்' என்று ஏன் அவருக்கு எழுதத் தோன்றவில்லை? என்று கேட்டார் தமிழச்சி. (இதற்கு ஏற்புரையில் பதிலளித்த சாரு.. சீச்சி.. I hate men" என்றார்).//தர்ம தொரைகளே (எள‌க்கியம் வார்க்கும் சாரு, அந்த எளக்கியப்பட்டறையில் வாசகர் சுரேஷ்... வகையராக்கள் )

ஆண்-> பெண் மாற்றம்
பெண்-> ஆண் மாற்றம் இரண்டும் பால்மாறியவர்களைக் குறிக்கும்.

A transman or transguy is a Female to Male transsexual (often referred to as FTM)

A transwoman or trans-woman is a male-to-female transsexual (often referred to as MTF)

ஆண் ->‍ பெண்ணாக மாறும் போது , அப்படி மாறியவர் இயல்பாக பிறந்த மற்ற பெண்களைவிட அழகாக இருக்கிறார் என்று சொல்வது காம்ப்ளிமென்ட் போன்றது. அவரைப் போய் மீண்டும் ஆணுடன் ஒப்பிட்டால் அது அவரைக் கேவலப்படுத்துவது.

*

பெண்->ஆணாக மாறும்போது , அப்படி மாறியவர் இயல்பாக பிறந்த மற்ற ஆண்களைவிட அழகாக (Handsome) இருக்கிறார் என்று சொல்வது காம்ப்ளிமென்ட் போன்றது. அவரைப் போய் மீண்டும் பெண்ணுடன் ஒப்பிட்டால் அது அவரைக் கேவலப்படுத்துவது.

**

என்ன கொடுமை என்றால் 'அரவாணியோ' அல்லது 'திருநங்கையோ' ஆண்-> பெண் பால் மாற்றத்தைத்தான் குறிக்கிறது.

'அரவாணனோ' அல்லது 'திருமகனோ' தமிழில் புழக்கத்தில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களை ஆண்களுடன் ஒப்பிடலாம்.

**

கேள்விகேட்ட தமிழச்சி,பதில் சொன்ன சாரு,பதிவில்போட்ட சுரேஷ் கண்ணன் அனைவரும் இளக்கிய உலகத்திற்கு ஆற்றும் தொண்டு வியக்க வைக்கிறது. :-)))

Boston Bala said...

:)

Ganesan said...

அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......


அன்புடன்

காவேரி கணேஷ்

kaveriganesh.blogspot.com

Karthik Krishna said...

//
'அவன் அவளைப் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்தன. குனிந்து எடுக்கும் போது இருவரின் தலைகளும் முட்டிக் கொண்டன. கட் செய்தால் இருவரும் பாடும் டூயட். இடைவேளை. இடைவேளைக்கு அப்புறம்?

எவன் பார்த்தான்?'//

உண்மைதான்....

Unknown said...

இன்னொரு பதிவர் எழுதியிருந்தாரு; படிச்சுப் பாருங்க/படித்திருக்கலாம். அதுல எனக்குப் பிடித்த பகுதி, என் கருத்தோடு ஒத்துப் போவது: //ஒரு எழுத்தாளனுக்கு புனைவுக்கு கற்பனை இருக்கவேண்டும் அது சாருவிடம் இல்லை.. //

சாரு பலவற்றைப் படித்தவர், படித்ததைத் தொகுத்து எழுதத் தெரிந்தவர். //சாரு எழுத்தை கையாள்கிற லாகவம்//ங்கறதெல்லாம் ஆனாலும் ஓவர்.

Anonymous said...

"சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின் இடம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."

எனக்கும் இதே போன்ற ஒரு நினைப்பு உண்டு. அதாவது "ஒரு தலை ராகம்" என்று ஒரு படம் வந்த பின் அதற்க்கு கிடைத்த வரவேற்ப்பும், பரபரப்பும் இன்னும் என் நினைவில் இருக்கிறது.அந்த நேரத்தில் வந்த ஒரு கோமாளித்தனமான படமே அது. அப்போது அதுவே ஒரு பெரிய வித்தியாசம். ஆனால் இப்போது அதை ஒருவர் முழுதுமாக பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே இல்லை.
அதே போன்றுதான் இப்போது சாருவின் நிலையம். ஒரு நேரங்கெட்ட நேரத்தில் கிடைத்த அரிப்புதான் அவருக்கு சொரிந்து கொடுக்கப்படுகிறது. வேறொன்றும் இல்லை.

"சில வருடங்களுக்குப் பின் இலக்கிய தளத்தில் சாருவின் இடம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்."
பாருங்கள்....பாருங்கள்....

Unknown said...

நல்ல பதிவு, கிட்டதட்ட ஒரு நேரடி வர்ணனை போல இருந்தது. சாருவை பற்றிய விமர்சனங்களும் சாட்டை அடிகளும் அதிகம். திரு மாலன் அவர்கள் மொட்டை மாடி கூட்டத்தில் பேசும் போது, இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே என்று கூறினார் அது சரியென்றுதான் தோன்றுகிறது, ஜேகே யுடைய படைப்புகள் இன்று அன்று போல் விற்பனையாவதில்லை, அதுபோல் சாரு வருங்காலத்தில் பாதிப்பாரா என்பது முக்கியமில்லை, அவசியமும் இல்லை. சமகாலத்தில் அது சிலரை சிந்திக்கவைத்தால் அதுதான் கலையின் வெற்றி. சாரு தனது திருப்தியின்மை வெளிப்படுத்தி புலம்புகிறார் என்பது தவறு என்று தோன்றவில்லை, ஒரு இடத்தில் திருப்தி அடைவது இலக்கியவாதியின் இயங்காமைக்கு அடையாளமாகும், அசோகமித்திரன் எளிமையாக இருந்திருக்கலாம் ஆனால் அவருக்குள்ளும் ஒரு திசையில் புலம்பல் இருக்கும், புலம்பல் இல்லாமல் போனால் எப்படி இலக்கியம் பிறக்கும் நண்பரே,

Anonymous said...

"இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே..."

இது ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? உதாரணத்திற்கு..செல்வி என்ற மெகா தொடர் அது வந்த காலகட்டத்தில் பலரையும் பாதித்தது. அந்த நேரத்திற்கு தவறாமல் டிவி முன் ஆஜராகத் தூண்டியது. அப்படி எனில் அதை ஒரு இலக்கிய படைப்பு என்று ஒத்துக்கொள்ள முடியுமா? இலக்கியம் என்பதின் வரையறை நீங்கள் சொல்வது போல் அல்ல அது எக்காலத்து வாசகன் அதை எடுத்தாலும் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

"புலம்பல் இல்லாமல் போனால் எப்படி இலக்கியம் பிறக்கும் நண்பரே..."

எதை நோக்கிய புலம்பல்?........ ஒரு உயர் இலட்சியத்திர்கானதாகத் தெரியவில்ல. லட்சத்திர்கானதகத்தான் தெரிகிறது. அதற்க்கு பணம் சம்பாதிக்கும் வழியை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டார் ஹோட்டல்களில் "தண்ணி" அடிக்க காசில்லையே, ஆட்டோவிற்கு காசில்லையே என்று புலம்புவதை நிறுத்தலாம்.

Anonymous said...

"இலக்கியம் அது வெளிவரும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் அவ்வளவே..."

இது ஒத்துக்கொள்ள முடியாது. ஏன்? உதாரணத்திற்கு..செல்வி என்ற மெகா தொடர் அது வந்த காலகட்டத்தில் பலரையும் பாதித்தது. அந்த நேரத்திற்கு தவறாமல் டிவி முன் ஆஜராகத் தூண்டியது. அப்படி எனில் அதை ஒரு இலக்கிய படைப்பு என்று ஒத்துக்கொள்ள முடியுமா? இலக்கியம் என்பதின் வரையறை நீங்கள் சொல்வது போல் அல்ல அது எக்காலத்து வாசகன் அதை எடுத்தாலும் அவனுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

"புலம்பல் இல்லாமல் போனால் எப்படி இலக்கியம் பிறக்கும் நண்பரே..."

எதை நோக்கிய புலம்பல்?........ ஒரு உயர் இலட்சியத்திர்கானதாகத் தெரியவில்ல. லட்சத்திர்கானதகத்தான் தெரிகிறது. அதற்க்கு பணம் சம்பாதிக்கும் வழியை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டார் ஹோட்டல்களில் "தண்ணி" அடிக்க காசில்லையே, ஆட்டோவிற்கு காசில்லையே என்று புலம்புவதை நிறுத்தலாம்.

Unknown said...

மாற்றம் என்பதுதான் மாறாதது என்பது உண்மையானால் வாசகன் மாறிக்கொண்டேதான் இருக்கவேண்டும், எல்லா காலத்திலும் பாதிக்கவேண்டும் என்பது எந்த இலக்கியத்திலும் சாத்தியமில்லாதது. உலகின் பல மேலான இலக்கியங்கள் தாங்கள் வெளிவந்த காலத்தில் இருந்த பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல தேய்ந்து வந்து மறைந்து கொண்டிருப்பதை காணலாம், ஆகையால் இலக்கியம் அந்த அந்த கால வாழ்க்கை முறையை ஒட்டி உருவாகவேண்டியவை, அந்த வாழ்க்கை முறை மாறும்போது அந்த இலக்கியம் ஒரு பழய வாழ்க்கை பதிவாக இருக்குமே ஒழிய பெரிய சாதனைகளை செய்ய முடியாது, புதிய இலக்கியவாதிகளுக்கு அது உதவும் ஆனால் சமுதாயத்தில் அது காணாமல் போய்விடும், இன்றைய புத்தக கண்காட்சியில் சென்று பார்த்தீர்களே ஆனால் தற்பொது இயங்கி கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள்தான் அதிகம் விற்கும், ஜேகே போன்றோர் பின் தங்கி இருப்பார்கள், காரணம் அதன் பணி அந்த காலங்களில் தேவையாய் இருந்தது அதுதான் இலக்கியத்தின் வெற்றியும் கூட. ஒரு இலக்கியம் எல்லா காலத்திற்கும் படைக்கப்பட்டால் பின் புதிய இலக்கியங்கள் ஏன் பிறக்கின்றன. நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சாருவின் புலம்பல் ஆக்கபூர்வமானதா என்பதை நீங்கள் எப்படி பார்கின்றீர்கள் எனதெரியவில்லை, ஒரு ஆக்க பூர்வமான செயலை செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கம் தேவைப்படுகிறது சாருவுக்கு இது போல ஒரு உயர்நிலை வாழ்வு தேவைப்படுகிறது அவ்வளவே அதற்காக அவர் புலம்புகிறார்.அதுதான் அவரின் பல எழுத்துக்களை சுவையாக்குகின்றன,

தமிழ்நதி said...

விவரமான விவகாரமான பதிவு சுரேஷ் கண்ணன். ஒருவரைப் பற்றி, அவரது எழுத்துக்களைப் பற்றி எழுதும்போது வாசகரை அந்தப் பதிவோடு கட்டிவைத்திருக்க முடிகிறது. ஏனென்றால், நம் எல்லோருக்குள்ளும் மற்றவர்களைப் பற்றி அறியும் ஆவல் இருக்கிறது. அந்த வகையில் உங்கள் பதிவோடு ஒன்றி வாசிக்க முடிந்தது. பொதுவாக சாருவைப் பற்றியும் ஏனைய சில விடயங்கள் பற்றியும் உங்களுடைய கருத்தே எனதாகவும் இருக்கிறது.

சாரு மட்டுமென்றில்லை... மேலும் சிலரும் அவர்களது தகுதிக்கு மேற்பட்டுத் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. எம்மில் எவருமே உண்மை பேசுபவர்களாக இல்லை. அற்ப சலுகைகளுக்காக சமரசம் செய்துகொண்டும் எம்மை விற்றுவிடுகிறோம்.

நியாயமான ஒரு விமர்சனத்தைக் கூட வெளிப்படையாகப் எழுதமுடியாத காலத்தில் வாழ்கிறோம் இல்லையா? இந்த 'இலக்கிய அரசியல்'மீதான வெறுப்பு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 'எழுத்துமாச்சு மண்ணுமாச்சு'என்று ஒதுங்கிவிடுவோமோ என்று எண்ணும்படியாக பொய்மை நிறைந்ததாயிருக்கிறது எழுத்துலகம்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளையும் படிப்பதில்லை. சுரேஷ் நீங்கள் சொன்னதுபோல், சாருவின் அலட்டல்களை தாண்டி என்னால் அவரது எழுத்துகளை ரசிக்க முடிவதில்லை. சும்மா பம்மாத்து பண்ணும் இவர்களைத்தான் "வாத்து மடையர்களின் இலக்கியம்" என்றேன். இது என்னுடைய கருத்து.

நன்றி

தோழன் மபா

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நான் எப்பொழுதுமே சாருவின் கதைகளையும், கட்டுரைகளையும் படிப்பதில்லை. சுரேஷ் நீங்கள் சொன்னதுபோல், சாருவின் அலட்டல்களை தாண்டி என்னால் அவரது எழுத்துகளை ரசிக்க முடிவதில்லை. சும்மா பம்மாத்து பண்ணும் இவர்களைத்தான் "வாத்து மடையர்களின் இலக்கியம்" என்றேன். இது என்னுடைய கருத்து.

நன்றி

தோழன் மபா