Thursday, January 17, 2008

ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை

(பகுதி 1)

நான் வித்யா - 'லிவிங் ஸ்மைல் வித்யா - கிழக்கு பதிப்பகம் - 216 பக்கங்கள் - விலை ரூ.100/-


'ஒம்போது', 'பொட்டை', 'அலி' - இவ்வாறாக திருநங்கைகள் (Transgenders) குறித்து பொதுப்புத்தியுடன் அணுகுகிற மனோபாவம்தான் எனக்கும் ஒரு காலகட்டத்தில் இருந்தது. சிறுவயதில் என் அம்மாவுடன் அசைவம் வாங்குவதற்காக மீன்கள் விற்கும் கடைகளுக்கு செல்ல நேர்ந்த போதுதான் நான் முதன்முதலில் 'ஒருவரை' பார்க்க நேர்ந்தது. மிகச் சரளமாகவும், விநோதமான உரத்த குரலுடனும்/தோற்றத்துடனும் மீன் விற்றுக் கொண்டிருந்த அவரைப் பார்த்த போது உடனே தோன்றிய உணர்வு - பயம். சமூகம் அவர்களை கேலி/அருவெறுப்பு/கிளர்ச்சி/விநோதம் போன்ற உணர்வுகளோடு அணுகியதை கவனிக்க நேர்ந்த போது நானும் அதில் ஒருவனாகிப் போனேன். நண்பர்களிடையே வசவு வார்த்தைகளை பரிமாறிக் கொள்ளும் போது கூட 'தே..... பையா' என்கிற வசவை விட 'போடா பொட்டை' என்கிற வசவிற்குத்தான் வீர்யமும்/எதிர்வினையும் அதிகமிருந்தது. தனது ஆண்மையை மறுக்கும்/பங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு விஷயத்தையும் ஒர் ஆண் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை.

இத்தகைய அறியாமையின் பரப்பில் சற்றே சலனத்தை ஏற்படுத்தியது, சு.சமுத்திரத்தின் 'வாடாமல்லி' என்கிற நாவல். 'பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது' என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது. அதுவரை அவர்கள் ஏதோ ஒரு விசித்திரமான உலகிலிருந்து வந்து சமூகத்தினுள் உலாவுபவர்கள் என்கிற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அந்த நூல்தான் பிற்பாடு அரவாணிகள் என்றழைக்கப்பட்ட திருநங்கைகள் குறித்து மருத்துவ/உளவியல் ரீதியான உண்மைகளை நோக்கி பயணம் செய்ய வைத்தது. 'எஸ்ட்ராஜென், டெஸ்டெஸ்ட்ரோன் ஆகிய இரு கூறுகள்தான் பெண்மை/ஆண்மை விழைவுகளை, அவற்றைக் கூர்மைப்படுத்தும் உடற்கூறு சா¡ர்ந்த நுகர்வின்பத்தைத் தீர்மானிக்கிறது' என்கிறது அ.மங்கையின் ஒரு சிறு நூல்.

()

ஆச்சாரமான சூழலில் மாத்திரம் ஒரு கால கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நவீன தமிழ் இலக்கிய பரப்பின் எல்லை விரிந்து விளிம்பு நிலை மனிதர்களும் தங்களுக்கான இடத்தை போராடியேனும் பெற்றுக் கொண்டு வரும் சூழல் ஆரோக்கியமானதாகவே எனக்குப் படுகிறது. நளினி ஜமீலா என்கிற பாலியல் தொழிலாளியின் சுயசரிதை மொழிபெயர்ப்பின் வரவு ஒரு சிறந்த உதாரணம்.

அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னொரு முக்கியமான நேரடி தமிழ் நூலாக "நான் வித்யா" என்கிற, சகவலைப்பதிவாளாரான 'லிவிங் ஸ்மைல் வித்யா' எழுதின புத்தகத்தை நான் பார்க்கிறேன். திருநங்கைகளைப் பற்றி மற்றவர்கள் எழுதிய கட்டுரைகள், இனவரைவியல் ஆய்வுத் தொகுதிகள், அரவாணிகளே சுயமாக எழுதிய கட்டுரைகள் என்று தமிழில் பல வந்திருந்தாலும் திருநங்கை ஒருவரே நேரடியாக தம் வாழ்வை எழுதிய முதல் சுயசரிதை நூல் இதுதான் என்று நினைக்கிறேன். வித்யாவின் வாழ்க்கையை புத்தகத்தின் பக்கங்களில் ரத்தமும் சதையுமாக நாம் கடந்து செல்லும் போது வேதனையடையாமல் இருக்கவே முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை ஒரு எழுத்தாளன் உள்வாங்கி எழுதுவதை விட அந்த மக்களில் ஒருவரே எழுதுவதால் படைப்பின் தாக்கம் அதிகமாகிறது.

'என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ' என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் 'எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்" என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும். ஆனால் வித்யா அனுபவித்த வேதனையான சூழல்களை வாசிக்கும் போது அதை நம்மோடு ஒப்பிட்டுக் கொள்ளும் போதும் நம்முடைய துயரங்கள் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தோடு தோன்றுகிறது.

()

சரவணன், தான் பெண்ணாக உணரும் மனநிலையை சமூகத்தின் கிண்டல்களுக்கு பயந்து முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளேயே போராடி, அழுத்தம் தாங்காமல் வெடித்து சூழலிலிருந்து வெளியேறி பல்வேறு வேதனையான சூழல்களைக் கடந்து அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்குறியை நீக்கிக் கொண்டு (நிர்வாணம் என்று சொல்லப்படுகிறது) தன்னை முழுமையான பெண்ணாக மாற்றிக் கொள்ளும் உத்வேகத்துடன் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலையோடு இந்த நூல் துவங்குகிறது.

Sex Reassignement Surgery என்று குறிப்பிடப்படும் பால்மாற்று சிகிச்சை சட்டரீதியாக தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் செய்யப்படுவது Casteration என்கிற பிறப்புறுப்பை நீக்குவது மட்டுமே. பெரும்பாலும் இந்த சிகிச்சை முறையான மருத்துவ முறை இல்லாமல் சட்டவிரோதமாகத்தான் நடத்தப்படுகிறது.

சில சூழல்களை நூலாசிரியரின் மொழியிலேயே குறிப்பிட்டால்தான் வாசிப்பவரால் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவற்றின் சில பகுதிகளை மாத்திரம் தேவையான இடங்களில் கிழக்கு பதிப்பகத்திற்கும் வித்யாவிற்கும் நன்றி கூறி மீள்பிரசுரம் செய்கிறேன்.


()

.......... மருத்துவர் கத்தியை எடுத்து முதல் கீறலை என் அடிவயிற்றில் தொடங்கிய போதுதான், எனக்கு இன்னும் முழுமையாக மரத்துப் போகவில்லை என்பதை உணர்ந்தேன். வலியில் நான் அலறுவதைப் பார்த்து மேலும் ஒரு ஊசியைத் தண்டுவடத்தில் ஏற்றினார்கள். முன்பை விட இப்போது வலி குறைந்ததேயன்றி முற்றிலும் நின்றுவிடவில்லை. கை கால்களை மட்டும்தான் அசைக்க முடியவில்லை. ஆனால் கத்தி நகரும் தடமும், வலியும் நன்றாகவே உணர முடிந்தது.

... வலிக்க வலிக்க மருத்துவம் பா¡க்கும் டாக்டரையும், உதவியாளரையும் கொன்றுவிடலாம் என என்¦ன்னவோ மனதில் தோன்றியது. வலியைக் கடக்க வழி தெரியாமல் கிழவி சொன்னது போல் மாத்தா மாத்தா என்று அரற்றிக் கொண்டிருக்கும் போது 'மாஆஆ...த்ததாஆஆஆ' என்று பெருவலியொன்றால் உச்சத்தில் அலறினேன். ஆபரேஷனின் உச்சகட்டமாக வயிற்றின் உள்ளாகக் கம்பியை விட்டு உள்ளிருக்கும் குடல் அனைத்தையும் உருவுவது போல் ஒரு வலி. ஆம். அந்த நொடியில் நான் கண்டதின் பெயர்தான் மரணம். (பக்கம் 17)

..... பிறப்புறுப்பு நீக்கப்படும் போது எவ்வாறு வலிக்கும் என்பதை ஒரு போதும் வெறும் சொற்களால் விவரிக்க முடியாது. அது வீண் முயற்சி. அதற்குப்பதில் இறந்துவிடலாம் என்று அவசியம் தோன்றும். பலர் இறந்தும் இருக்கிறார்கள். அநேகமாகக் கசாப்புக் கடைகளில் செய்யப்படுகிற காரியத்துக்குப் பல விதங்களிலும் நெருக்கமான ஆபரேஷன் இது. (பக்கம் 140)

.....சட்டவிரோதமாகாவது அப்படியொரு அறுவைச் சிகிச்சை ஏன் செய்து கொள்ள வேண்டும்? இது நல்ல கேள்வி. இதற்கான பதில் நாங்கள் எங்களை ஆணாக ஒருபோதும் உணர்வதில்லை என்பதுதான். ஆணுக்குரிய பிறப்புறுப்பு அடையாளம் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அமைந்துவிடுகிறது. மனத்தளவில் பெண்ணாகவே எங்களைக் கருதுகிறோம். (பக்கம் 139)

()

சில பெண்குழந்தைகளுக்குப் பின் ஆண்குழந்தைக்காக தவமிருந்து பிறந்தவன்தான் சரவணன். இதனால் மற்றவர்களை விட வீட்டில் அதிகச் சலுகை கிடைக்கிறது. துப்புரவு பணியாளரான அப்பா, தான்படும் கஷ்டம் மகனின் காலத்திலாவது நீங்க வேண்டும் என்பதால் மகனின் கல்வியில் அதிக கவனத்தை செலுத்துகிறார். மகன் நன்றாகப் படித்தாலும் வழக்கமான முதல் ரேங்க் தவறி ஒரு முறை இரண்டாவது ரேங்க் வாங்கும் இயல்பான நிலையைக் கூட அப்பாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாமல் அடித்து நொறுக்கி கடுமையாக நடக்கின்றார். விளையாடக்கூட அனுமதிக்காமல் எப்போதும் படிக்கச் சொல்லும் அப்பாவின் கண்டிப்பு, அன்பான சகோதரிகளுக்கிடையே வளரும் சூழல், பாசமான அம்மாவின் மரணத்திற்குப் பிறகு சித்தி என்று கலவையான சூழலில் வளரும் சரவணன் ஆறுதலாக உணர்வது தனது சித்தப்பாவின் வீட்டில். தனிமையில் பெண்களின் உடையைப் போட்டுப் பார்த்து மகிழ்கிறான். மற்றவர்களால் இதற்காக கிண்டல் செய்யப்படுகிறான்.

கல்லூரிப் படிப்பின் போது கலை நிகழ்ச்சிகளில் ஆர்வம் ஏற்பட்டு அதில் தீவிரமாக ஈடுபடுகிறான். நாடகத்துறை பேராசிரியராக இருந்த மு.ராமசாமி உட்பட பல நாடகக் கலைஞர்களின் அறிமுகம் கிடைக்கிறது உற்சாகமாக இருந்தாலும் மறுபுறம் உள்ளுக்குள் அடைபட்டிருக்கும் பெண்மை உணர்வு தன்னை நிரூபித்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் சூழல் வேறு. ஒரு நிலையில் சூழ்நிலைகளின் உச்ச அழுத்தத்தில் வீட்டை விட்டு விலக முடிவு செய்கிறான்.

(தொடரும்)

11 comments:

Anonymous said...

வழிமொழிகிறேன். வரவேற்கிறேன்.

துளசி கோபால் said...

பிரகாசர் சொன்னதுக்கு ஒரு 'ரிப்பீட்டேய்'

நன்றி சுரேஷ் கண்ணன்.இப்போதைக்குப்ப் புத்தகம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு.
உங்கள் பதிவின் வாயிலாகப் படித்துக்கொள்வேன்.

Unknown said...

// திருநங்கைகள் (Transgenders)//

Transgenders- ஐ பொத்தாம் பொதுவாக திருநங்கை என்று சொல்ல முடியாது.

ஆண்->பெண் மாற்றமே (MTF or M2F -Male to Female Transgender)அதிகமாகப் பேசப்படுகிறது இங்கே.

(பெண்->ஆண் மாற்றம் (FTM or F2M- Female to Male )இன்னும் பேசப்படவில்லை.

இந்த நிலையில் Love என்ற ஆங்கில வார்த்தையை "காதல்" என்ற அளவில் சுருக்கியது போல Transgender -ஐ திருநங்கை என்ற அளவில் சுருக்க வேண்டாம். (காதல் Vs Love விளக்கம் பார்க்க http://imsaiarasi.blogspot.com/2007/12/blog-post_20.html )

**

ஆண்->பெண் MTF பிரிவினரிடம்கூட தங்களின் சகோதரச் சமூகத்தைப் (FTM )பற்றிய புரிதல்கள் இல்லை.

FTM க்காக இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு:
LesBiT -> http://lesbit.org

FYI:
http://sangama.org/node/20

http://www.hindu.com/mag/2007/09/09/stories/2007090950090400.htm

**

திரு (ஆணைக் குறிப்பது) + நங்கை (பெண்ணைக் குறிப்பது) = திருநங்கை என்பதனால் இந்த வார்த்தை FTM க்கும் (பெண்->ஆண் மாற்றம் )கொண்டவர்களுக்கும் பொருந்துமா?

தறுதலை said...

நன்றி

........................
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Anonymous said...

Sex Reassignement Surgery என்று குறிப்பிடப்படும் பால்மாற்று சிகிச்சை சட்டரீதியாக தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் செய்யப்படுவது Casteration என்கிற பிறப்புறுப்பை நீக்குவது மட்டுமே. பெரும்பாலும் இந்த சிகிச்சை முறையான மருத்துவ முறை இல்லாமல் சட்டவிரோதமாகத்தான் நடத்தப்படுகிறது.

This is not correct.SRS is done in India. It is legal and is expensive.It is not just a surgery but a series of treatments
including hormonal injections,
counselling, and is done over a
period. The 'patient' needs lots of support- mental and emotional
as it is more than 'tinkering' with
body organs. Castration when done
properly by doctors is very painful but once can survive
and live. Crude methods result
in many problems and one may die
due to infections and other
complications.

G.Ragavan said...

திருநங்கைகளைப் பொறுத்தவரையில் நினைத்துப் பார்க்கவே அச்சப்படும் ஒரு விஷயம்... தன்னுடைய உடலில் ஒரு பாகத்தையே வலிக்க வலிக்க அறுத்தெரியும் அளவிற்கு அது தேவைப்படாமை. அந்த அளவிற்கு அது தன்னுடையதில்லை என்ற எண்ணம் எப்படி வருகின்றது என்பது நமக்குத் தெரியவில்லையானாலும்....அப்படி எண்ணம் வரும் என்பது புரிகிறது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் உள்ளப்போராட்டங்களையும் வாழ்க்கைப் போராங்களையும் எழுத்து வடிவில் கொண்டுவந்திருப்பது மிகவும் சிறப்பு. உங்கள் வலியும் வேதனையும் புரிகின்றது. உங்களை மதிக்கிறோம்.

எழுத்தாளராகியிருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு எனது வாழ்த்துகள்.

Anonymous said...

transgenders,transexual,men who dress as women for pleasure and women who dress as women for pleasure,bisexual- there are many
categories beyond male and female.
Not all of them are transgenders.
Not all men who feel that they are
women trapped in male bodies want to undergo a transformation into women. Because between 100% male and 100% female there are many degrees of both. Hence Transgender -ஐ திருநங்கை என்ற அளவில் சுருக்க வேண்டாம்
is opt.

Anonymous said...

oru thirunangaiyin unnarvukalukku mathippu kodukkum manitharae, um manitha naeyathai paaraattavendum

உங்கள் பதிவின் வாயிலாகப் படித்துக்கொள்வேன்

anyhow we also try to buy the same - by doing so, indirectly it means that we honour ms. vidhya

manjoorraja said...

சிறந்த பதிவு, வித்யாவிற்கான பதிவுலக மற்றும் அவரது அனைத்து நண்பர்களின் ஆதரவும், அவர் மூலம் திருநங்கைகள் மீது பலருக்கும் ஏற்பட்டிருக்கும் தவறான புரிதல்களும் விரைவில் விலகும் என்று நம்பலாம்.

ILA (a) இளா said...

நல்ல பதிவும், புத்தகத்துக்கு நல்ல முன்னுரையும் கூட.

Boston Bala said...

சமீபத்தில் வாசித்த தொடர்பான கட்டுரை:

The Wall Street Journal Online - Taste Commentary:
"Crossing Over
by NAOMI SCHAEFER RILEY"