Friday, July 08, 2005

'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு

மழை காரணமாக முன்னர் ஏற்பாடு செய்திருந்த மெரீனா, (இல்லாத) கண்ணகி சிலைக்குப் பதிலாக உட்லண்ஸ் டிரைவ்-இன்-னில் சந்திக்க காசியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் போவதற்குள் கலந்துரையாடல் சாம்பார் வடையுடன் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முன்னமே சந்தித்திருந்தவர்கள் தவிர, காசி ஆறுமுகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். (ஆர்.வெங்கடேஷ், பத்ரி, பிரகாஷ், ராம்கி, சாகரன், நாராயண், இராம.கி, அருள் செல்வன், சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா மற்றும் சிலர் வந்திருந்தனர்)

எதிர்பார்த்திருந்த மாதிரியே தமிழ்மணத்தின் burning issue-வான (நான் அப்படி நினைக்கவில்லை) ஆபாச மற்றும் போலி பின்னூட்டங்களைப் பற்றி உரையாடல் போய்க் கொண்டிருந்தது. நான் சற்று தொலைவில் அமர்ந்திருந்ததால் (வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும் என்று சுஜாதா சொன்னதிலிருந்து நான் எல்லோரிடமும் - முக்கியமாக தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்திருக்கும் எழுத்தாளர்களிடமிருந்து - சற்று தூரத்தை மெயின்டெயின் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்) உரையாடலை முழுமையாக என்னால் கேட்க இயலவில்லை.

காசியையும், செல்வராஜையும் சந்தித்தது முக்கியமான விஷயமென்றாலும் ஆபாச பின்னூட்டங்களை ஒரு பிரச்சினையாக கருதி கூடி விவாதிப்பது என்னைப் பொருத்தவரை ஒரு அவமானமாகரமான காரியமாகவே கருதுகிறேன். ஒரு சில உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுபவர்கள் செய்யும் காரியங்களை ஒரு பொருட்டாக கருதி, நம்முடைய நேரத்தை செலவு செய்வதே சம்பந்தப்பட்டவர்களால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஆபாச பின்னூட்டக்காரர்கள் உணர்ந்து மகிழ்ந்து போக ஏதுவாக இருக்கும் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு மேல் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்; சற்றும் பொருட்படுத்தப்படக்கூடாதவர்கள்.

மேலும் ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு அமைப்பில் உள்ளவர்கள் மற்றும் அந்த வசதியில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவே - சில பிரத்யேக வசதிகள் இருந்தாலும் - இன்னொரு அமைப்பிற்கு மாறுவது அல்லது மாறுவதற்கு யோசனை கூறுவது மிக மிக அபத்தமான கருத்து. இருக்கிற இடத்தில் உள்ள பிரச்சினைகளை களைய அல்லது ஒதுக்க வேண்டிய வழிவகைளை ஆராய வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் போல் அவ்வப் போது கட்சி மாறுவது ஒரு நிலையான தீர்வு அல்ல.

()

இந்த Official மீட்டிங் முடிந்தவுடன் நண்பர் அருள் செல்வன் பற்றவைத்த நெருப்புப் பொறிதான் நேற்றைய மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக்கியது. அவர் சொன்னதில் நான் உள்வாங்கிக் கொண்டது இதுதான்.

1980-களில், 'இதுதான் இலக்கியம்' என்று சிலபலர் எழுதி எழுதி பம்மாத்து செய்துக் கொண்டிருக்கையில் அந்த மாயையை உடைக்க ஒரு கலகக்கூட்டம் புறப்பட்டது. ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிற மாய பிம்பங்களை கலைத்துப் போடுவதுதான் அந்த கூட்டத்தின் நோக்கம். இதன் மூலம் ஒரு மாற்று இலக்கியம் புதுவெள்ளமென தமிழ் இலக்கியத்திற்குள் பாய இது ஏதுவாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. நாகார்ஜீனன், தமிழவன், கார்லோஸ், சாருநிவேதிதா போன்றோர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வடிவங்களை தங்களின் மாற்று இலக்கியத்தால் கலைத்துப் போட்டனர். ஆங்கிலத்தில் இம்மாதிரியான உடைப்புகள் காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தமிழில்தான் அவ்வப்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு குட்டையில் சுகமாக ஊறிக் கொண்டிருக்கிற எருமைமாடுகள் போல் நாம் ஒரேமாதிரியான இலக்கியத்தை வேறுவழியில்லாமல் சுகித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது 2005-ல் ஏறக்குயை இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் என்றவுடன் நமக்கு சில பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் எழுதுவதையும், அவர்களின் தகுதிகளையும் கட்டுடைத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதுவகையான இலக்கியம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. இந்நிலை மாற இளம் எழுத்தாளர்கள் இருக்கிற பிம்பங்களை உடைத்து ஒரு புதிய வழியை ஏற்படுத்த வேண்டும் என்பது அருளின் ஆதங்கம்.

என்ன செய்யப் போகிறோம்?

()

மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

13 comments:

Jayaprakash Sampath said...

//அருள் செல்வன் பற்றவைத்த நெருப்புப் பொறிதான் நேற்றைய மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக்கியது//

முற்றிலும் உண்மை. இதுக்கு மேல் எதுவும் பேசப்போறதில்லை. ஒன்லி ஏக்சன்.

//நாகார்ஜீனன், தமிழவன், கார்லோஸ், சாருநிவேதிதா போன்றோர் //

சுரேஷ், தமிழவன் தான் கார்லோஸ்.

SnackDragon said...

//என்பதை ஆபாச பின்னூட்டக்காரர்கள் உணர்ந்து மகிழ்ந்து போக ஏதுவாக இருக்கும் என்பது என் கருத்து.//
அப்படி என்றால் இதை எழுதாமல் விட்டிருக்க்லாம். :-)

Anonymous said...

Very valuable question raised by Arul Selvan. Hats off!.

- Balaji

Anonymous said...

>>>>சற்று தூரத்தை மெயின்டெயின் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்

நல்ல 'நச்' கருத்து.

>>>>மற்றும் சிலர் வந்திருந்தனர்

மாலன் கூட வந்திருந்ததாக படித்தேனே?

>>>>இன்னொரு அமைப்பிற்கு மாறுவது அல்லது மாறுவதற்கு யோசனை கூறுவது மிக மிக அபத்தமான கருத்து

அவ்வாறு மாறுவதில் தவறில்லை. ஆனால் மாற்றாக வைக்கப்படும் அமைப்பு ஏற்கனவே நிறுவப்பட்டிருப்பதைக்காட்டிலும் மேன்மையானதாக இருத்தல் அவசியம். ஏதோ ஒருவர் மட்டுமே தனக்கு ஏற்பட்ட அரைகுறை அனுபவங்களை மட்டும் முன்னிறுத்தி இதை முன்மொழிவதுதான் வேடிக்கையானது. தொழிநுட்ப அறிவு உள்ளவரே இம்மாதிரியான விஷயங்களை ஆராய்ந்து நிகழ்த்துவதும் நலம் (காசி செய்தது போல).

மாற்றாக வைக்கப்படும் அமைப்பு வலைப்பதிவுகள் கொடுக்கும் சுதந்திரத்தை மறுக்குமாயின் அல்லது வலைப்பதிவு என்ற ஊடகத்தையே கேள்வி கேட்பதாயின் அதை ஆராதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். நான் பார்த்த வரையில் 'நான் பீடத்திலிருந்து கக்கும் குப்பைகளை பொறுக்கிக்கொண்டுபோ... உன் கருத்து எனக்கு முக்கியமில்லை, (அல்லது) என் நண்பர்களுக்காகவும் அவர்களது கருத்துகளுக்குமே வலைப்பதிகிறேன்' என்ற மனநிலையிலிருப்பவர்களால் வலைப்பதிவில் தாக்குபிடிக்க முடிவதில்லை. அவர்களுக்கு என் பரிந்துரை... வலைப்பதியாதீர்கள். அதற்கு மாற்றாக 'வலைப்பக்கம்' அமைத்துகொள்ளுவது நலம். கருத்துகளையும் மின்மடல்களில் பரிமாறிக்கொள்ளலாம்.

(தமிழர்களின்) ஆங்கில வலைப்பதிவுகளில் இந்த பின்னூட்ட பேயாட்டம் இல்லை என்ற கருத்தும் விவாதிக்கப்பெற்றதாக அறிகிறேன். அதற்கு காரணம் இம்மாதிரியான பீடதிபதிகள் அங்கு இல்லை என்பதை கருத்தில்கொள்ளவேண்டும்.

>>>>அருள் செல்வன் பற்றவைத்த நெருப்புப் பொறி...
அருள் செல்வனின் கருத்து மிகவும் வரவேற்றகப்பட வேண்டிய ஒன்று. இதைப்பற்றி மேலும் ஆழமாக யோசித்து விளக்கமாக ஒரு பதிவு இடப்படவேண்டும். வலைப்பதிவுகளிலாவது மாற்று இலக்கியங்களை அறிமுகப்படுத்தவேண்டும். புத்தக மீம் இதை செய்யும் என்றே நினைத்திருந்தேன், ஆனால் அம்புலி மாமாவும் ஆனந்த விகடனும் வாசித்த கதைகள்தான் பெரும்பாலும் முன்னிறுத்தப்பட்டது. புத்தக விக்கி துவங்கப்பட்டதையும் கண்டேன். நல்ல முயற்சிதான் ஆனாலும் அதனால் பெரிதான பயன் இருப்பதை அறியமுடியவில்லை. இம்மாதிரியான முயற்சிகள் காமதேனு.காமிற்கும் எனிஇந்தியன்.காமிற்கும் (Online Book shops என்று வாசிக்க) வேண்டுமானால் உபயோகமாக இருக்கும், அதனால் அம்முயற்சிகளை அவர்களைப் போன்றவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டியது அவசியம். சாதாரண வாசகனுக்கு எந்த வகையில் அவன் வாசிப்புதன்மையை உயர்த்தப்போகிறது என்பதையும் சிந்திக்க வேண்டும்.

>>>>கட்டுடைத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது

பிம்பங்களை கட்டுடைத்தால் குருபீட எழுத்தாளர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை, வாசகர்களுக்கு அறிவு கம்மி என்று பம்மாத்து காட்டி ஏளனம் செய்வர். அதற்கு துணையாக நண்பர்கூட்டமும் சேற்றை வாரியிறைத்து வாசகனை முட்டாளாக்கி விடுவர். அதையும் மீறி புது வகை இலக்கியம் படைக்கிறேன் என்று யாராவது வந்தால் அவனு(ளு)டைய நதிரிஷி மூலங்களை அவிழ்த்துவிட்டு, தனிமனித தாக்குதலுக்காட்படுத்தி அவனு(ளு)க்கும் மங்களம்தான்! பால்மொழி பெண் கவிதாயினிகளுக்குகெதிரான விமர்சனங்களை இந்த கண்ணோட்டதில் பார்த்தால் நான் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

.:டைனோ:.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சுரேஷ் கண்ணன்,

இன்னொரு சந்திப்பா?

நடத்துங்க! ;)


====

டைனோ,

ரொம்ப நாளைக்கப்புறம் ஃபார்முக்கு வந்து கலக்கியிருக்கீங்க!

-மதி

Anonymous said...

//நான் சற்று தொலைவில் அமர்ந்திருந்ததால் (வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும் என்று சுஜாதா சொன்னதிலிருந்து நான் எல்லோரிடமும் //
ஒருமுறை எங்கள் கல்லூரிக்குப் பேசவந்திருக்கிறார்; சரி ஒரு வார்த்தை மரியாதைக்குப் பேசலாமே என்று சில வருடங்களுக்குமுன்பு QMC புத்தகக் கண்காட்சியில் பார்த்தபோது நெருங்கிப் போய் அழைத்தால், ஏதோ ஆட்டோகிராஃப் கேட்டுத் துரத்தப்படும் சினிமா நடிகை மாதிரி திரும்பிப்பார்க்காமல் குடுகுடுவென்று ஓட்டமும் நடையுமாக வேகமாக உள்ளே போய்விட்டார். அந்தக் கணத்தின் அபத்தத்தை நினைத்து அதற்குப்பிறகு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தேன் ;-)

Jayaprakash Sampath said...

//பிம்பங்களை கட்டுடைத்தால் குருபீட எழுத்தாளர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை, வாசகர்களுக்கு அறிவு கம்மி என்று பம்மாத்து காட்டி ஏளனம் செய்வர். அதற்கு துணையாக நண்பர்கூட்டமும் சேற்றை வாரியிறைத்து வாசகனை முட்டாளாக்கி விடுவர். அதையும் மீறி புது வகை இலக்கியம் படைக்கிறேன் என்று யாராவது வந்தால் அவனு(ளு)டைய நதிரிஷி மூலங்களை அவிழ்த்துவிட்டு, தனிமனித தாக்குதலுக்காட்படுத்தி அவனு(ளு)க்கும் மங்களம்தான்//

டைனோ : அப்ப சான்ஸே இல்லேங்கறீங்களா?

SnackDragon said...

டைனோ, உங்கள் பெரும்பாலான கருத்துக்களில் உடன்பாடே. ஆனால் இதில் இல்லை.
/புத்தக மீம் இதை செய்யும் என்றே நினைத்திருந்தேன், ஆனால் அம்புலி மாமாவும் ஆனந்த விகடனும் வாசித்த கதைகள்தான் பெரும்பாலும் முன்னிறுத்தப்பட்டது./
புத்தக மீம் ஒரு விளையாட்டு. அதன் வடிவத்துக்கு அதைதான் செய்யமுடியும்.
வலைப்பதிவுகளில் மாற்று இலக்கியங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பேன். இன்னும் நிறைய வரவேண்டும் என்று வேண்டுமானால் சொல்லமுடியும்.

[தற்போது மண்டையில் இளங்கோவின் கவிதைகள வருகிறது. மனுசன் கலக்குறார் ]

மாண்டி, சுஜாதாபற்றி இதேபோல் இன்னொருவர் சொல்லியும் கேட்டுள்ளேன்.
கற்றதும்பெற்றதுமென்னே?

Anonymous said...

>>>> புத்தக மீம் ஒரு விளையாட்டு. அதன் வடிவத்துக்கு அதைதான் செய்யமுடியும்

கார்த்திக்ராமாஸ்

உங்கள் கூற்றுப்படி பார்த்தோமானால் அவ்விளையாட்டு அது துவங்கிய வடிவிலா நடந்தது? மீம் என்பதே பரிணமிப்பதுதான். இன்னும் குறிப்பிட்டுக் கூறவேண்டுமெனில் கலாச்சார பரிணமிப்பே மீம்! மீம் அது துவங்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே சுழலவேண்டுமென்பதில்லையே? தங்கமணி அவ்வகையில் முதல் கட்டுடைப்பை நிகழ்த்தினார், ஆனால் அதற்கு பின் தொடர்ந்தவர்கள் அவர் 'ரத்னபாலா'வைப்பற்றி எழுதியதை பற்றிக்கொண்டளவு அவர் புத்தரையும் கழிப்பறை காகிதங்களையும் குறித்து எழுதியதை நினைவிலிருத்தினார்களா என்று சிந்திக்க வேண்டும்!

>>>> வலைப்பதிவுகளில் மாற்று இலக்கியங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன

வலையுலகில் இலக்கியமே இல்லை என்றெல்லாம் திருவாய்மலர மாட்டேன் (அப்படிகூறுவேனாயின் கருட புராணம் என்னை தண்டிக்கட்டும்!). தமிழ் வலையுலகில் முன்பிலுமதிகமாகவே இலக்கியம் படைக்கப்படுவதாக தெரிகிறது, ஆனால், "மாற்று" இலக்கியங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தென்படுகின்றன. அதுவும் குழுமனப்பான்மையால் கவனம் பெறாமல் போய்விடுவதை மறுக்கமுடியுமா நம்மால்?


>>>>அப்ப சான்ஸே இல்லேங்கறீங்களா?

பிரகாஷ்

உங்க கேள்வி புரியிதுங்க. சும்மா நொள்ள சொல்லறது சுலபம் வழியகாட்டுன்றீங்க... அதுவுஞ்சரிதான்! :)

அதுக்கு குறைந்த பச்சம் மூன்று பிரிவினர் மனசு வெக்கணும். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்கள். மொதரெண்டும் நம்ம மையில் இல்ல ஆனா ஓரளவு மூனாதவங்க அவிகள இன்·ப்ளுயன்ஸ் பண்ணலாம். ஆதவனையும் சுராவையும் மோந்து பாக்கறதெ கொஞ்ச மூட்ட கட்டீட்டு பாமரனையும் தமிழவனையும் கொஞ்ச நுகரலாம். சுஜாதாத்தாக்கு விடுப்பு கொடுத்துட்டு சக்காரியாவையும் கொஞ்சம் கடைக்காணலாம். மகுடேஸ்வரனைப்'போல' அல்லது அதைவிட நல்ல கவிதைகள் எழுதுபவர்களும் இருப்பதை அவரை சந்திக்கும்போது உணர்த்தலாம். அருந்ததிராயையும் (ஆதவன்) தீட்சண்யாவையும் நண்பர்களுக்கு அறிமுகஞ்செய்யலாம். நண்பர்கள் பரிந்துரையை மட்டும் நம்பிக்கிட்டிருக்காம புத்தகக்கடைக்கு போய் நாலு புத்தகத்த புரட்டிபாத்தும் வாங்கலாம். அதைப்பற்றி வலைப்பதிஞ்சி நம்மல போல ஆளுகளுக்கு உதவலாம். நாம போற எலக்கிய கூட்டத்துல தாட்சண்யம் பார்க்காமல் கேள்வி எழுப்பலாம் (அதுக்காக சத்தியராஜ்குமாரோட 'இலக்கியவாதி' போல அடிவாங்கீட்டு வந்து நம்மல க(ல)¡ய்க்ககூடாது!). நாம (வாசகனுங்க) நெசஸிட்டிய வளர்த்தா அவிங்க இன்வெண்ட் பண்ணுவாங்க. கதை எழுதனவிங்க எல்லாம் இப்போ கட்டுரை எழுதி பேர்வாங்கலையா? அதுபோலத்தான்! :)


.:டைனோ:.

Anonymous said...

மதி,
நன்றி!
·பார்ம் எல்லாம் இல்ல, ஆபிஸ¤ல பாஸ¤ லீவு ;)
.:டைனோ:.

Chenthil said...

I am one of those Tamil bloggers blogging in English. And what dyno says about anonymous comments is true in English blogs, because most of it is for timepass. The one difference I find between English and Tamil blogs is, most of the Tamil bloggers write as if they have to prove something. In comaprison most of the English bloggers are in the Goindasamy mould :-). (Runs away before the bricks come in)

rajkumar said...

அன்பு சுரேஸ்,

மாற்று இலக்கியத்திற்கான தளமாக வலைப்பதிவுகள் மாறும் எனத்தான் நான் நம்பிக் கொண்டிருந்தேன்.ஆனால் நடப்பது வேறு மாதிரியாக இருக்கிறது.

உலகெங்கும் சிதறிக் கிடப்பவர்களையும் சாதியை தவிர வேறு பிரச்சனைகளை பேசையலாதவாறு செய்து விட்டார்கள் அல்லது செய்து விட்டோம் ( வலைகளை படிப்பதால் நானும் அதற்கு ஏதோ ஒருவிதத்தில் பொறுப்பு).ஆகவே புதிய இலக்கிய முயற்சிகளுக்கான மேடைகளும் தளங்களும் எங்கே உள்ளது. மீண்டும் சிற்றிதழ்கள் மட்டுமே இதற்கான தளமாக அமைய முடியாது.இதைப்பற்றி மேலும் விவாதிக்க வேண்டும்.

அன்புடன்

ராஜ்குமார்

Anonymous said...

//உலகெங்கும் சிதறிக் கிடப்பவர்களையும் சாதியை தவிர வேறு பிரச்சனைகளை பேசையலாதவாறு செய்து விட்டார்கள் //

உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் குலப்பெருமையையும், சாதிப் பெருமையையும் சுமந்து கொண்டு போகிற தமிழனைப் பற்றி ராசுகுமார் போன்ற இலக்கியகர்த்தாக்களுக்கு தெரியுமா??
மனசுக்குள் மூட்டை மூட்டையாய் குலத்தாழ்ச்சி-உயர்ச்சியை வைத்துக் கொண்டு என்ன இலக்கியம் படைத்துக் கிழித்து என்ன புண்ணியம். நல்ல சமூகத்திலிருந்துதான் நல்ல இலக்கியம் கிடைக்கும். நம் சமூகம் அப்படியா இருக்கிறது. அதை முதல்ல உருப்படியா கழுவிட்டு, அப்புறம் இலக்கியம் படைக்கலாம்.சரியா??