Thursday, May 02, 2019

ஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை

ஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம்.

ருஷ்ய இலக்கியத்தில் டால்ஸ்டாய், தஸ்தயெவ்ஸ்கி ஆகிய இருபெரும் ஆளுமைகளைத் தாண்டி பல உன்னதமான படைப்பாளிகள் இருந்தனர். அவர்களில் தனித்துவமானவர் ஆன்டன் செகாவ்.

ஓர் அயல் தேசத்தின் எழுத்தாளுமையைப் பற்றி மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, கேட்பவர் சலிப்படையாமல் பேச முடியுமா? முடியும் என்று சாதித்துக் காட்டியிருக்கிறார் எஸ்.ரா. உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இவர் முன்னர் நிகழ்த்திய பல நீண்ட உரைகளின் தொடர்ச்சி இது.

தம்புராவின் ரீங்காரம் பின்னணியில் ஒலிக்க மெல்ல சுருதி கூட்டப்படும் கச்சேரி போல துவங்குகிறது எஸ்.ராவின் இந்த உரை.

ஆன்டன் செகாவின் அறிமுகம் மெல்ல துவங்குகிறது. அது மெல்ல விரிந்து ஒரு பெரிய ஆகிருதியாக நம் முன் விஸ்வரூபம் எடுக்கிறார் செகாவ். அவரின் இளமைக்கால பின்னணி, பணத்திற்காக எழுதத் துவங்கிய செகாவ் பின்னர் ஒரு மகத்தான புனைவாசிரியராக உருமாறிய அந்தப் பயணம். சமகால எழுத்தாளர்களுடன் அவருக்கு இருந்த நட்பு, அவரின் பயணங்கள், அலைச்சல்கள், மனத் தத்தளிப்புகள், உயிரைக்குடிக்க வந்த காசநோய், தாமதமாக நிகழ்ந்த திருமணம். அதில் இருந்த விசித்திரமான ஆனால் முற்போக்கான ஒப்பந்தம், அவரின் மறைவு, பிரியமான சகோதரியின் மூலம் செகாவின் எழுத்து ஆவணமாக்கப்பட்ட முறை, செகாவின் மரணத்திற்கு ருஷ்ய மக்கள் செலுத்திய மரியாதை, அரசு அங்கீகாரம் போன்ற நிகழ்வுகளை ஆங்காங்கே கலைந்து செல்லும் ஒரு நேர்க்கோட்டு வரிசையில் மிக சுவாரசியமாக விவரித்துச் செல்கிறார் எஸ்.ரா.

இதற்கு இடையில் செகாவின் சில சிறந்த கதைகளுக்கான அறிமுகத்தையும் அவர் வழங்குகிறார்.

பொதுவாக இது போன்ற கதைசொல்லிகள் என்ன செய்வார்கள் என்றால், சிரிக்கச் சிரிக்க ஒரு கதையை சுவாரசியமாகச் சொல்வார்கள். ஆனால் அதன் ஆன்மாவை பெரும்பாலும் கொன்று விடுவார்கள். நீங்கள் அந்தக் கதையை வாசித்த நுட்பமான வாசிப்பாளர் என்றால் அவர் செய்த படுபாதகம் புரிய வரும். கதை சொல்லி என்பதை விட நேரக்கொல்லி என்பதுதான் அவர்களின் அடிப்படையான தகுதி.

ஆனால் செகாவின் கதைகளை மிக சுவாரசியமாக விவரிப்பதோடு அதன் மையத்தையும் அதன் நுட்பங்களையும் விவரித்துச் செல்கிறார் எஸ்.ரா.

இதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழும். ஒன்று நீங்கள் அந்தக் கதையை ஏற்கெனவே வாசித்திருந்தாலும் நீங்கள் உணரத் தவறிய பகுதிகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார் எஸ்.ரா. அல்லது நீங்கள் அந்தக் கதையை வாசிக்காதவர் என்றால் உடனே தேடிப்பிடித்து வாசிக்கும் ஆர்வத்தை விதைக்கிறார்.

செகாவின் கதைகளை விவரிப்பதோடு மட்டும் எஸ்.ரா நின்று விடவில்லை. அதே வகைமையில் எழுதப்பட்ட இதர உலக எழுத்தாளர்களின் கதைகளையும் அவற்றோடு ஒப்பிடுகிறார். செகாவின் எழுத்துக்களில் எங்கெல்லாம் டால்ஸ்டாயின் பாதிப்பு அல்லது தூண்டுதல் இருந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும் என்கிற இவரது தன்னம்பிக்கை, செகாவின் எழுத்தை பல ஆண்டுகளாக சுவாசித்ததின் மூலமாக மட்டுமே எழ முடியும்.

சில ஸ்வரங்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக் கொண்டு இசைக்கப்படும் ஒரு மகத்தான இசைக்கச்சேரி போல சில வரி குறிப்புகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு நீண்ட உரையை வழங்குவதற்கு செகாவை வாசித்திருந்தால் மட்டும் போதாது, அவருடனே நீண்ட காலம் பயணம் செய்திருக்க வேண்டும். எஸ்.ரா அந்த உன்னதமான பயணத்தை செய்திருக்கிறார் என்பதற்கான அற்புத சாட்சியமாக அமைந்திருக்கிறது இந்த உரை.

அவசியம் காணுங்கள். 


https://www.youtube.com/watch?v=2j1xAKbR8MM

suresh kannan