Thursday, September 11, 2014

13 SINS - பாவத்தின் வசீகரம்



"உங்களுக்கு ஒரு கோடி தருகிறோம். உங்கள் மகனை/மகளை உங்கள் கையினாலேயே கொன்று விட வேண்டும்" என்று யாராவது உத்தரவாதமானதொரு ஆஃபர் தந்தால் நம்மில் எத்தனை பேர் அதனை செய்ய தயாராக இருப்போம்? "சீ.. வாயைக் கழுவு.. கோடி அல்ல.. எத்தனை செல்வத்தை கொண்டு வந்து குவித்தாலும் பெற்ற பிள்ளையை யாராவது கொல்ல முன்வருவார்களா?" என்று ஆவேசத்துடன் நீங்கள் சீற்றம் கொண்டாலும் அதில் தவறில்லை. ஆனால் உங்களை திட்டமிட்டு முறைப்படி இயக்கினால் உங்களை அவ்வாறு செய்ய வைக்க முடியும் என்பதே யதார்த்தமான உண்மை என்கிற ஆபத்தான நிதர்சனத்தை அதன் நிர்வாணத்தனத்தோடு  சொல்கிறது 13 SINS திரைப்படம்.

புதையல் கிடைக்கும் என்கிற ஜோசியனின் வாக்குறுதியை நம்பி  பெற்ற மகனை அல்லது மகளை நரபலி கொடுக்கத் தயாராக இருந்த பெற்றோர்களைப் பற்றிய செய்திகளை நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள். வேறு நபருடன் வளமான வாழ்ககை கிடைக்கிறது என்பதற்காக பெற்ற குழந்தையை தாய்மார்கள் அநாதை இல்லங்களில் ரகசியமாக போட்டுச் சென்றிருக்கும் செய்திகளையும் வாசித்திருப்பீர்கள். " இவையெல்லாம் குதர்க்கமான, விபரீதமான விதிவிலக்குகள்..  புத்தி சரியாக நிதானமாக செயல்படுகிற எவரும் இதையெல்லாம் செய்யத் துணிய மாட்டார்கள்" என்று நீங்கள் வாதிடலாம். தவறில்லை.

ஆனால் சரியான திட்டங்களுடன் மெல்ல மெல்ல ஒருவரால் அல்லது ஒரு குழுவால் உங்களை அந்தச் சூழலுக்குள் இட்டுச் செல்ல முடியும். "ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்" என்றான் புத்தன். கடுகுக்குள் எரிமலையை அடக்கினது போல மிகப் பெரியதொரு உண்மையை, வாழ்வியலின் தத்துவத்தை ஒற்றைவரியில் அவன் சொல்லிச் சென்றாலும் இதையும் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருந்திருந்தாலும் எத்தனை பேர் அந்த வாக்கியத்தில் உண்மையை மனதார உணர்ந்து பின்பற்றுகிறோம்? உண்மையான ஞானிகளைத் தவிர எவருமில்லை. அவர்களும் கேமராவில் மாட்டிக் கொள்ளும் வரை ஞானிகளா என்பதையும் அறிய முடிவதில்லை.

ஆயிரக்கணக்கான ஆசைகள் நம் மனதின் ஆழத்தில் உறைந்திருக்கின்றன. அவைகளில் சில நிறைவேறினாலும் நாம் திருப்தியுறுவதில்லை. அடுத்து அடுத்து .. என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறோம். கீழே சிதறிக் கிடக்கும் பத்து ரூபாயை எடுக்கப் போய் மடியில் வைத்திருக்கும் ஆயிரத்தை இழக்கிறோம். கடவுளின் போதனைகளை விட சாத்தான்களின் கட்டளைகளே நமக்கு வசீகரமாக இருக்கின்றன.  இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் தந்தால் நமக்கு ரூ.100-க்கு ரீசார்ஜ் செய்யப்படும் என்றால் அதன் பின்னுள்ள வலை பற்றி யோசிப்பதில்லை. உடனே செய்யத் தயாராக இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் 'இந்தக் கடவுளின் படத்தை ரீஷேர் செய்தால் நீங்கள் நம்பினது உடனே நடக்கும்" என்றால் அதிலுள்ள முட்டாள்தனத்தை பற்றியெல்லாம் சிந்திக்காமல் உடனே ரீஷேர் செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்க்கிறோம். சில நாட்களில்  சில நன்மைகள், அதுவும் உங்கள் உழைப்பில் நடந்தால் கூட, அது ரீஷேரின் மகிமை என்றே நம்புகிறோம். அடுத்த முறை இன்னமும் பெரிய அளவில் ஏமாறத் தயாராக இருக்கிறோம்.

அரசு அதிகாரிகள், நீதிபதிகள், காவல்துறையினர், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள்.. என்று சமூகத்தின் மையவட்டத்தில் இருப்பவர்கள் கூட சில சம்பவங்களில் ஏமாற்றப்பட்டிருப்பதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட்டிருக்கலாம். 'பாமரர்கள் ஏமாறுவது ஒருபக்கம். அறிவாளிகள் என்று நம்பப்படும் இவர்கள் கூட எப்படி ஏமாந்தார்கள்?' என்கிற கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு நாளின் விடியற்காலையில் ஏமாந்தவர்கள் அல்ல. சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போல அவர்கள் அறியாமலேயே மெல்ல மெல்ல  ஏமாற்றத்தின் வலையில் சிக்கிக் கொண்டவர்கள். ஒரு கனவு போல அது நிகழ்ந்திருக்கும். ஏமாந்த பிறகுதான் அவர்கள் செய்த அபத்தம் அவர்களுக்கே உறைக்கும். அவர்கள் நாமாகவும் இருக்கலாம். ஏமாறும் விருப்பம் அவர்களுக்குள்ளேயே இருந்திருக்கும். அவர்களின் பேராசை ஏமாற்றத்தை நோக்கி செலுத்தியிருக்கும்.

இந்த குரூரமான நீதியைத்தான் இத்திரைப்படம் சொல்கிறது.

***


எலியட்டுக்கு அந்த நாள் மோசமானதாக விடிகிறது. வேலையை இழக்கிறான். புத்தி சுவாதீனமில்லாத சகோதரனை, கர்ப்பிணியாக இருக்கும் காதலியை, வயதான தந்தையை காப்பாற்றும் பொறுப்பு. கடுமையான நிதி நெருக்கடி. மனஉளைச்சல். அந்தச் சமயத்தில்தான் அந்த அநாமதேய ஃபோன் வருகிறது. அவன் எதிரேயிருக்கும் ஒரு ஈயை கொன்றால் உடனே அவனுக்கு ஆயிரம் டாலர் கிடைக்கும். எலியட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. மிக எளிமையான விஷயம், ஆயிரம் டாலர். சரி ஈயை சாகடித்துதான் பார்ப்போமே என்று அந்த ஆணையை செயல்படுத்துகிறான். உடனே அவன் கணக்கில் ஆயிரம் டாலர் வந்து விழுகிறது. அடுத்தது சாகடித்த அந்த ஈயை உண்ண வேண்டும் என்ற ஆணை. இன்னொரு ஆயிரம். இப்படியாக 13 ஆணைகளை அவன் நிறைவேற்றினால் கோடீஸ்வரனாகி விடலாம். ஆனால் தொகை ஏற ஏற ஆணைகளும் விதிகளும் அதற்கேற்ப கடுமையாகும். இதை வெளியில் சொல்லவும் கூடாது.

இப்படியொரு அட்டகாசமான சதுரங்க விளையாட்டு திரைக்கதைக்குள் இத்திரைப்படம் சுவாரசியமாக இயங்குகிறது. இந்த ஆணைகளை நம் வாழ்க்கையின் பல செயல்களுக்குள் பொருத்திப் பார்க்கலாம். அலுவலக பிரமோஷனுக்காக, பக்கத்து வீட்டுக்காரனை விட உசத்தியான பிராண்டில் கார் வாங்குவதற்காக, உயர்தர கான்வென்டில் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக... இப்படி எத்தனை மறைமுக ஆணைகள் நம்மை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்கின்றன. இவையெல்லாம் எதற்காக என்று நிதானமாக நாம் யோசிப்பதேயில்லை, யோசிக்க விரும்புவதும் இல்லை.

இதன் கிளைமாக்சை சற்று புத்திசாலியாக இருந்தால் யூகித்து விடலாம். மிக சுவாரசியமான திரைப்படம். 

suresh kannan

1 comment:

enRenRum-anbudan.BALA said...

எதிர்பார்த்தது போலவே வசீகரமான விமர்சனம், படம் பார்க்கத் தூண்டுவதாய் :) நன்றி. பார்க்கணும்