Thursday, November 22, 2012

சசியின் இந்திய லட்டும் அமெரிக்க ஆங்கிலமும்


பெளதீக ரீதியாக காலனியாதிக்கம் நம்மை வி்ட்டு விலகிப் போயிருந்தாலும் அது ஏற்படுத்தி வைத்திருக்கும் வரலாற்றுக் கறைகள், தழும்புகள், உளவியில் ரீதியான அகச்சிக்கல்கள் போன்ற பலவற்றின் மூலமாக நம்மை  இன்னமும் அவற்றின் பிடியிலேயே வைத்திருக்கிறது. உலகமயமாக்கம் என்னும் தந்திர வலைப்பின்னல் காரணமாக இன்னமும் வளர்ந்த நாடுகளின் அடிமைகளாக இருக்கிறோம். சுயஅடையாளங்களை தொலைத்து விட்டு அவற்றின் கலாச்சாரத்தை தன்னிச்சையாக நகல் செய்து கொண்டு 'நாகரிகம்' என்கிற பெயரில் கோமாளிகளாக, கூலிகளாக திரிந்து கொண்டிருக்கிறோம். இந்த மோசமான சூழலை சரி செய்ய வேண்டிய கல்வித்துறை தம்முடைய 'மெக்காலே' தூக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் விழித்துக் கொள்ளாமல் இன்னமும் ஆழமாக நம்மை அந்தச் சகதியிலேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. 'ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது இன்னொரு மொழியே' என்பதை அழுத்தமாக இல்லாவிடினும் நீக்கு போக்காகவாவது சொல்லிச் செல்கிறது கவுரி ஷிண்டேவின் திரைப்படமான 'English Vinglish'.

இத் திரைப்படம் பிரதானமாக இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று, ஆங்கில மொழி அறியாததின் காரணமாக தம்முடைய குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவமானப்படுத்தப்படும் ஒரு பெண், குறைபாடு என்று கருதப்படும் அந்தப் பிரச்சினையிலிருந்து தன்னை மீட்டெடுப்பது, இன்னொன்று, பெரும்பாலான குடும்பத் தலைவிகள் எதி்ர்கொள்வது. Home Manager என்று கெளரவமாக பட்டம் சூட்டப்பட்ட ஊழியம் அல்லாத பணிப்பெண்ணாய் கணவனாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் மிக நுட்பமாக சீண்டல்களாலும் அவமரியாதைகளாலும் சுயஅடையாளத்தையும் மரியாதையையும் இழந்து நிற்கும் உலகளாவிய பிரச்சினை. முந்தைய பிரச்சினையையாவது சசியைப் போல சில மாத உழைப்பில் கடந்து வரலாம். ஆனால் பல காலமாகத் தொடரும் இரண்டாவது பிரச்சினை, ஆணாதிக்க மனோபாவம் மாறும் சூழல் மற்றும் அசலான பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வு ஆகிவற்றின் மூலம்தான் தீரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதலாம்.

உயர் மத்திய தர வர்க்க குடும்பத் தலைவியான சசி, ஆங்கிலம் அறியாத காரணத்தினால் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் தன்னுடைய கணவனாலும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் சுமார் 15 வயதுடைய மகளாலும் தொடர்ந்து சீண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.கள்ளங்கபடறியாத  இளைய மகன்தான் அவளுடைய ஒரே ஆறுதல். வீ்ட்டியிலேயே லட்டு தயாரித்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுதான் அவளுக்கு சிறிய மகிழ்ச்சியையும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது.

தன்னுடைய சகோதரியின் மகள் திருமணத்திற்காக சசி அமெரிக்கா போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சில பல தயக்கங்களுடன் தனிமையில் செல்லும் அவளை அந்த தேசம் பயமுறுத்துகிறது. ஆங்கில மொழி அறியாத தன்னுடைய பலவீனத்தை அந்த மொழியை கற்றுக் கொள்வதின் மூலம் வெற்றிகரமாக கடந்து வருவதாக மீதமுள்ள கதை சற்று நகைச்சுவையுடன் பயணிக்கிறது.

எவ்வித சுய அடையாளமும் பெருமையும் இல்லாத அவளுக்கு முதன் முதலாக தன்னம்பிக்கையை அளிக்கும் வார்த்தை 'entrepreneur' அமெரிக்க ஆங்கில வகுப்பில் முதல் நாளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது வீட்டில் லட்டு செய்து விற்பனை செய்யும் வழக்கத்தைப் பற்றிக்கூறுகிறாள். எனில் அவள் ஒரு 'தொழில் முனைவோர்' என்கிறார் ஆசிரியர். மிகுந்த பெருமையுடன் அவள் இதைப் பற்றி கணவனிடம் தொலைபேசியில் கூறும் போது அவன் வழக்கமான கேலியோடு அதை புறந்தள்ளிப் போகிறான்.

சசியாக ஸ்ரீதேவி. மிகச் சிறந்த மீள்வரவு. சில பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் குரலை கேட்கும் போது பதின்மங்களில் கேட்டுப் பழகி நியூரான்களில் பதிந்துள்ள அந்தக் குரல் உயிர் பெற்று சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. சிறப்பாகவும் நடித்திருக்கிறார். என்றாலும் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருப்பவராக பிரெஞ்சு நடிகர், Mehdi Nebbou -அவர்களைச் சொல்ல வேண்டும். சசியுடன் ஆங்கில வகுப்பில் படிக்கும் சக மாணவர். சசியை மெளனக் காதல் செய்கிறார். சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் இவரின் உடல்மொழியும் நடிப்பும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

இவரும் சசியும் தனிமையில் நெருக்கமாக உணரும் ஒரு சூழ்நிலை படத்தில் வருகிறது. ஐரோப்பிய,அமெரிக்கத் திரைப்படங்களாக இருந்தால் உடலுறவுக் காட்சி அல்லது குறைந்தபட்சம் ஒரு முத்தக் காட்சியாவது இடம் பெற்றிருக்கும். கலாச்சார காவலர்கள் பொங்கி விடுவார்கள் என்பதால் கவுரி ஷிண்டே இதை மென்மையாக தவிர்த்திருக்கிறார் என்று கருதுகிறேன். 

நடிகர் அஜித் (இந்தியில் அமிதாப்) சில காட்சியில் தோன்றுகிறார். விமானப்பயணத்தில் தடுமாறும் சசிக்கு உதவி அவளுக்கு தன்னம்பி்க்கை ஊட்டுபவராக வருகிறார். இதற்கு அஜித்தை தேர்ந்தெடுத்தது கச்சிதமாக பொருந்துகிறது. சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள அஜித் படத்திற்காக ஒப்பனை ஏதும் செய்து கொள்ளாமல் தன்னுடைய அன்றாட தோற்றத்திலேயே நரைமுடியுடன் நடித்திருக்கிறார். பொது வாழ்க்கையிலும் இரவல் முடியை மாட்டிக் கொண்டு இமேஜை மெயின்டெயின் செய்யும் நடிகர்களுக்கு இடையில் இவரது தன்னம்பிக்கை காட்சிக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. (இந்தப் பாத்திரத்திற்கு முன்னர் ரஜினியை அணுகி அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது).

சசி அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தடுமாறி அங்குள்ள விற்பனையாளரால் அவமானத்துக்குள்ளாகிறாள். அவளை அவமானப்படுத்துபவர் ஓர் ஆப்ரிக்க அமெரிக்கன் பெண்மணி. நிறவெறி காரணமாக வெள்ளையர்களால் அவமரியாதைக்குள்ளாகும் ஒரு இனத்திலிருந்து வருபவர், மொழிக் குறைபாடு காரணமாக இன்னொரு நபரை அவமானப்படுத்தும் நுட்பமான உளவியல் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அடிமை சற்று உயர்ந்தாலும் மிதிப்பதற்கென்று அவருக்கு ஓர் அடிமை தேவைப்படுகிறது. யூத இனம் ஒரு கால கட்டத்தில் உலகெங்கிலும் துரத்தி துரத்தி கொன்று அழிக்கப்பட்டது. ஆனால் அதே யூத இனமே இன்று பாலஸ்தீனியர்களை கொன்றுக் குவிக்கிறது வரலாற்று முரண்.

'English Vinglish'.  - சுவாரசியமான காட்சிகளைக் கொண்ட  திரைப்படமென்றாலும் சில பல கிளிஷே காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. உதாரணமாக ஆங்கிலத்தில் தடுமாறி பின்பு அதைக் கற்றுக் கொள்கிற சசி, கிளைமாக்சில் அதை நிரூபிப்பது போல் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசுவாள் என்கிற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இயக்குநர் ஏமாற்றாமல் பூர்த்தி செய்கிறார். முன்பே குறிப்பிட்ட படி ஆங்கிலம் ஒரு மொழிதான், அதுவே அறிவு அல்ல என்கிற செய்தியை இயக்குநர் அழுத்தமாக சொல்லத் தவறியிருக்கிறார். தன்னை அவமானம் கொள்ளச் செய்கிற ஆங்கிலத்தை ஏன் சசி கற்றுக் கொள்ளாமலேயே நிராகரித்து திரும்பக் கூடாது?. 'தொழில்முனைவோர்' என்கிற தன்னம்பிக்கையும் சுயஅடையாளமுமே அவளுக்குப் போதுதானது என்று ஏன் சசி கருதக்கூடாது?.

உண்மையில் இந்த தொனியிலும் சில காட்சிகளில் படம் சற்று பயணிக்கிறது. அக்கா பெண்ணின் திருமணத்திற்காக சசியே பிரத்யேகமாக உருவாக்கின லட்டுக்கள் எல்லாமே பாழாகிறது. ஆனால் விடாப்பிடியாக மறுபடியும் அதை உருவாக்க முடிவு செய்கிறாள். ஆனால் அன்றுதான் அவளுடைய ஆங்கில வகுப்பின் இறுதி தேர்வு நாள். ஆனால் வகுப்பை புறக்கணித்து லட்டு செய்ய முடிவெடுக்கிறாள். அக்கா பெண் இதைச் சுட்டிக் காட்டும் போது சசி இப்படியாக பதில் சொல்கிறாள்: "எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் நான் தேர்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. நான் எனக்கு மிகவும் தெரிந்த விஷயத்தில் நான் தோற்றுப் போக விரும்பவில்லை".

இந்த தொனியையே உச்சக்கட்ட காட்சியாக வைத்திருந்தால் 'English Vinglish' ஒரு மாற்று சினிமாவாக உருவாகியிருக்கும்.

suresh kannan

8 comments:

புதியவன் பக்கம் said...

//இந்த தொனியையே உச்சக்கட்ட காட்சியாக வைத்திருந்தால் 'English Vinglish' ஒரு மாற்று சினிமாவாக உருவாகியிருக்கும்.//
...யிருக்கும்தான். ஆனால் வசூலும் ஆகியிருக்குமா?

வவ்வால் said...



சுரேஷ் கண்ணன்,


//"எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் நான் தேர்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. நான் எனக்கு மிகவும் தெரிந்த விஷயத்தில் நான் தோற்றுப் போக விரும்பவில்லை".
//

தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்னு ஊரில சொல்வதுண்டு.

தெரிஞ்ச விஷயத்தில் தோல்வியை அடைய மாட்டேன் என சொல்வதையே மையக்கருவாக வைத்து படம் உருவாகியிருக்கலாம்.

ஆனால் படைப்பாளியின் சுதந்திரம் மேலும் வணிக நிர்பந்தங்கள் என ஒரு மாதிரியாக சமாளித்து ஒரு இந்திய படமாக தான் எடுக்க முடியும்.

CS. Mohan Kumar said...

இப்போது தான் பார்த்தேன் படம் எனக்கு மிக பிடித்தது. விமர்சனம் இங்கு:

http://veeduthirumbal.blogspot.com/2012/11/blog-post_25.html

//படம் சொல்ல வரும் விஷயம் : ஆங்கிலம் கற்பதன் அவசியத்தை அல்ல. ஒவ்வொரு குடும்பமும், குடும்ப தலைவியை எப்படி நடத்துகிறது என்பதை தான்.

யோசித்து பாருங்கள்: உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே !

ஒவ்வொரு குடும்ப தலைவியாலும் எந்த விஷயத்திலும் நமக்கு சமமாக வரமுடியும் என்பதை காட்ட, இப்பட இயக்குனர் எடுத்து கொண்ட ஒரு விஷயம் ஆங்கிலம். அவ்வளவு தான் ! ஆங்கிலம் பேசுவதில் தான் நான்கு வாரத்தில் ஒரு மாறுதலை காட்ட முடியும். சினிமாவிற்கும் ஆங்கிலம் பேசுவதில் உள்ள சிரமம் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றபடி பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம், அவர்கள் உணர்வுகளை எப்படி மதிக்கிறோம் என்பதை பற்றிய ஒரு பார்வையே இப்படம். //

Doha Talkies said...

நானும் இந்த படத்தை பார்த்தேன் நண்பரே.. கதை இது தான் என்று நமக்கு தெரிந்து இருந்தாலும், திரைக்கதையும் அதில் வரும் கதா பாத்திரங்களும் இயல்பாக இருந்தது. என்ன தான் சசி இறுதி காட்சியில் ஆங்கிலத்தில் நாம் ஏதிர்பார்த்த படி பேசினாலும், இந்தியா வரும் பொது, படிப்பதற்கு தமிழ் செய்தித்தாள் இருக்கிறதா என்று கேட்கும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி விடுகிறாள்..

Ganpat said...

மிக எளிதாக இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ஸ்ரீதேவிக்கு வழங்கலாம்.அடேங்கப்பா அசர வைக்கும் நடிப்பு.அதுவும் ஒரு இந்திய குடும்பத்தலைவி,ஒரு அந்நிய
ஆணின் தற்செயலான அணைப்பை எதிர்கொள்ளும் விதம் ஒரு benchmark ஆகிறது.ஸ்ரீதேவி ji Indian Cinema needs you badly..

படத்தின் மிகப்பெரிய குறை அதன் நீளம்..ஒரு முப்பது நிமிடங்கள் குறைத்திருக்கலாம்.

Refreshingly Fresh..

Thanks M'am!

Sriram said...

ஆங்கிலம் அறிவு அல்லதான், வெறும் மொழி தான். ஆனால் இன்று ஆங்கிலம் ஒரு உலக மொழி, உலக வணிக மொழி - இந்த மொழி அறிவு பொக்கிஷத்தின் திறவுகோளாக பயன்படக்கூடிய மொழி.

Unknown said...

சமீபத்துல வந்திருக்கிற இங்கிலிஷ் விங்கிலிஷ் இன்னுமொரு குப்பை. பொம்பளைன்னா எப்படி இருக்கணும்னு புரிய வைக்கிறதுக்காக ஒரு பொம்பளை எப்படி இருக்கக் கூடாதுன்னு படம் எடுத்து வச்சிருக்கார் டைரக்டர். பொம்பளைன்னா புருஷனுக்கு அடிபணிஞ்சு, அவர் சொல்ற வேலைகளைச் செஞ்சு கொடுத்துட்டு வீட்டோட அடங்கியிருக்க வேண்டாமோ? இவா அமெரிக்கா போறாராம். இங்கிலிஷ் கத்துக்குறாராம். நாலுபேர் இருக்குற சபையில புருஷனையும் மீறி எழுந்து இங்கிலிஷ்ல பேசுவாராம். நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொன்னதால படத்துக்குப் போனேன்.. படத்துல பாதியிலேயே பொண்டாட்டியையும் இழுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..அப்றம் டவுன்லோட் செஞ்சுதான் மீதிப் படத்தைப் பார்த்தேன்.

ஸ்ரீதேவியைப் போய் ஹீரோயினாப் போட்டிருக்கார். அவருக்கு நடிக்கவே தெரியலை. மூன்றாம் பிறைலருந்து பார்த்துட்டே வர்ற முகம்..நல்ல நடிப்புன்னா முகத்துல ரியாக்ஷன் காட்டவேண்டாமோ? அது சுத்தமா இல்ல. எப்பவும் சேலையில வந்து ஒரு ப்ரெஞ்சுக்காரனைக் கவர்றா. அபச்சாரம். ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா, இன்னொருத்தனை நெனச்சுப் பார்க்குறது எம்மாம் பெரிய தப்பு. எனக்கு கோபம் கோபமா வந்தது. அஜித்குமார் வேற இடையில வந்துபோறார். நல்ல சிவப்பான அஜித், தாடியெல்லாம் நரைச்சு வயசானவராத் தெரியுறார்..கொஞ்சம் டை அடிச்சா என்னவாம்? படத்தோட பட்ஜெட்ல அதுக்கு என்ன பெரிய செலவா வரப் போறது?

தமிழ்ல இன்னுமொரு தெரிஞ்ச முகம்னா அது ப்ரியா ஆனந்த். இந்தப் பொண்ணப் போய் இன்னுமொரு கதாநாயகியாப் போட்டதுக்கு பேசாம வேறொரு தமிழ் நடிகையைப் போட்டிருக்கலாம். ஏன் வெளிநாட்டுல இருக்குற இந்தியப் பொண்ணுன்னா கறுப்பாவே இருப்பாளா? எப்ப இந்த குறுகிய மனப்பான்மை மாறும்? தமன்னாவை இந்தக் கேரக்டர்ல நடிக்க வச்சு, அவரோட காதலனா ஒரு ஹீரோவப் போட்டிருந்தா படத்துல நல்லதா நாலு டூயட் பாட்டு சேர்த்திருக்கலாம், 3 சண்டைக்காட்சி சேர்த்திருக்கலாம். டைரக்டருக்கு படம் எடுக்கவே தெரியல.

கதை எனக்குப் பிடிக்கவேயில்ல. என்னோட பாட்டியை எடுத்துக்குங்க. 17 வயசுல புருஷனைப் பறிகொடுத்துட்டு தலையை மழிச்சுட்டு விதவையா நின்னவ..அதுக்கப்புறம் 89 வயசுல சாகுற வரைக்கும் இன்னுமொரு ஆம்பளையை நெனச்சுக் கூடப் பார்க்கல. என் மனைவி நான் சொன்னதை மீறி எதுவுமே செய்யப் பயப்படுவா. சாப்பாடு, துணிமணி ஏன் பார்க்குற சானல், திரைப்படம் கூட என்னோட சாய்ஸ்தான். புருஷன்னா அப்படி இருக்கணும்...பொண்டாட்டின்னா இப்படி இருக்கணும்..அதையெல்லாம் படமா எடுத்துக் காட்டுங்கோ..நான் என்ன வேணாம்னா சொல்றேன்..வேணும்னா ஃப்ரீயா நடிச்சுக் கூட கொடுக்குறேன்.. அதெல்லாம் விட்டுட்டு புருஷனைப் பிரிஞ்ச 3 மாசத்துலேயே பொண்டாட்டி புருஷனுக்குத் தெரியாம படிக்கப் போறதும், என்ன குலமோ கோத்திரமோன்னு கூடத் தெரியாத ஒருத்தன் கொடுத்த தண்ணியையும், காப்பியையும் வாங்கிக் குடிக்கிறதும்.. சுத்தமா எனக்குப் பிடிக்கவேயில்ல.

இதுக்கு முன்னாடியும் இப்படி ஒரு படம் வந்தது.. 'மித்ரு மை ஃபிரண்டு'ன்னு பெயர். நடிகை ரேவதி, சோபனாவ வச்சு எடுத்திருந்தார்..அதுலயும் இப்படித்தான்..பொண்டாட்டி கம்ப்யூட்டர் கத்துக்குறா.. புருஷனையே யாரோன்னு நெனச்சு சாட்டுல லவ் பண்றா.. என்ன ஒரு குப்பைக் கதை? ரேவதியை நேர்ல சந்திச்சப்பக் கேட்டேன்.. ஒண்ணுமே சொல்லாம புன்னகைச்சுட்டுப் போயிட்டார். சில நடிகைகளுக்கு இப்படித்தான்..நடிக்கவும் வராது..பேசவும் வராது..

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் முழுக்க ஓட்டை.. யாரும் பார்க்கப் போயிடாதீங்க.. கலாச்சாரச் சீரழிவுகளுக்கு இடம் கொடுக்காதீங்க..

Anonymous said...

உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே !///
.
.
பாஸ் நீங்க மாதம் ஐநூறு செலவு செய்து இணையத்தில் இதை சொன்ன நேரத்துக்கு இதே காசில் உங்கள் வீட்டு பெண்மணிகளுக்கு அவற்றை வாங்கி கொடுக்கலாம்