Friday, August 05, 2011

அவன் இவன்தான் பாலா




பாலாவின் 'அவன் இவன்' பார்த்தேன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே இது எனக்கு ஏனோ ஏற்படுத்திய ஒவ்வாமையையும் பாலா தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தேய்வழக்குகளையும் இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அதனாலேயே இதை உடனே பார்க்க எனக்கு எவ்வித சுவாரசியமும் ஏற்படவில்லை.

இத்திரைப்படம் குறித்து பரவலாக உரையாடப்பட்ட குறைகள், அதிருப்திகள், முணுமுணுப்புகள் போன்றவற்றை படத்தைப் பார்த்த பிறகு நானும் உணர்ந்தேன். ஒழுங்குபடுத்தப்பட்ட கதை, திரைக்கதை போன்ற வஸ்துகளைப் பற்றி கவலைப்படாமல் நகைச்சுவை சம்பவங்களின் மூலமே படத்தை நகர்த்தி விட்டு, பிறகு யாரோ தொட்டு உசுப்பினாற் போல் கவலையடைந்து விழித்து 'ஏதோ செய்ய வேண்டும்' என்று ஹைனஸை சாகடித்து கூடவே படத்தையும் சாகடித்து விட்டார்கள்.

பாலா தம்முடைய படங்களில் தொடர்ந்து சில விஷயங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் அதை தன்னுடைய அழுத்தமான அடையாளமாக வெளிப்படுத்துவதற்கு எதிர்மறையாக தன்னுடைய தேய்வழக்கு அடையாளமாக மாற்றி விட்டாரோ என்று தோன்றுகிறது. வழக்கமாக அவரது படங்களில் தோன்றும் பெரும்பாலான பாத்திரங்களும் நிகழ்வுகளும் 'அவன் இவனிலும்' தோன்றுகின்றன.

செம்பட்டைத் தலையுடன், முரட்டுத்தனமாக ,யாருக்காவது விசுவாசமாய் இருந்தே தீரும் விளிம்புநிலை மனிதர்கள், அவர்களால் துரத்தப்பட்டு அடிவாங்கி வெறுத்து பின்பு அவர்களையே காதலிக்கும் அக்ரஹாரத்து, நடுத்தர வர்க்கத்துப் பெண்கள், திரைக்கதைக்குள் செயற்கையாக திணிக்கப்படும் திரையின் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள், காமெடி நடிகர்களை விடவும் மோசமாய் சித்தரிக்கப்படும் கீழ்நிலை காவல்துறையினர், இன்னொரு புறம் மிக முரட்டுத்தனமாய் சித்தரிக்கப்படும் உயர்நிலை காவல்துறையினர், கோமாளிகளாய் சித்தரிக்கப்படும் மாஜிஸ்ரேட் நீதிபதிகள்... என்று எல்லாம் அவன் இவனிலும் உண்டு. அதிகாரத்தை வைத்திருப்பவர்களின் மீது அடிபணிபவர்களுக்கு பொதுச் சமூகத்திற்கு உள்ளார்ந்த ரகசிய வெறுப்பு உண்டு. இந்த உளவியல் உணர்வைப் பயன்படுத்தி அதற்கான வடிகாலான காட்சிகளை அமைத்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுவதில் பாலா சமர்த்தராய் இருக்கிறார். எனவேதான் அவரது படங்களில் வரும் காவல்துறையினரும் நீதித்துறையினரும் கோமாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். பாலா இதை திட்டமிட்டே செய்கிறாரா அல்லது அவரது இளமைக்கால வாழ்வியல் அனுபவங்களையொட்டி தன்னிச்சையாக செய்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.

ஆனால் இத்தனை தடைகளையும் மீறி எனக்கு ஒரளவிற்கு பிடித்திருந்ததற்கு காரணம் இதிலிருந்த அடித்தட்டு மக்களின் 'பச்சையான' நகைச்சுவைக்காகவும் (இங்கு பச்சை என்பதை RAW என்றும் வாசிக்கலாம்) பாலா தனது பிரத்யேகமான திறமையின் மூலம் பாத்திரங்களை அதனதன் தனித்தன்மையுடன் வலுவாகவும் கச்சிதமாகவும் உருவாக்கியிருந்த காரணத்திற்காகவும்.

இதில் ஏன் விஷாலுக்கு 'ஒன்றரைக்கண்' தோற்றத்தை பாலா வைக்க வேண்டும் என்று யோசித்தேன். அந்தப் பாத்திரத்திற்கு அந்தத் தோற்றத்தை வைத்தேயாக வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை கதை நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாலா தன்னுடைய படங்களில் பிரபல ஹீரோக்களுக்கு ஏற்கெனவே சமூகத்தில் பதிந்துள்ள, பிம்பங்களை அழுத்தமாக சிதைக்க விரும்புகிறார்.அப்போதுதான் பார்வையாளன், அந்த நடிகர்களை பாலாவின் படத்திலுள்ள பாத்திரங்களாக பார்க்கவும் உணரவும் முடியும். ஒவ்வொரு திரைப்பட இயக்குநரும் பின்பற்ற வேண்டிய விஷயமிது. ஆனால் பெரிதும் பரவலாக பாராட்டப்பட்ட விஷாலை விட ஆர்யாவின் இயல்பான நடிப்புதான் எனக்குப் பிடித்திருந்தது. இத்தனைக்கும் பொதுவாக நான் ரசிக்கும் தமிழ் நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இல்லை. பழைய திரைப்பட இயக்குநர் குமார், ஆர்யா கூடச்சுற்றும் சிறுவன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பு.

இத்திரைப்படத்தில் பிடித்திருந்த இன்னொரு அம்சம், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அடித்தட்டு மக்களின் பாசாங்கற்ற நகைச்சுவை. சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்ற முறையில் இன்னும் கூட இயல்பான ஆபாசமான, பாலியல் சார்ந்த கிண்டல்களும், பொதுவாக பிறப்புறுப்புக்களை உதாரணப்படுத்தி நடைபெறும் உரையாடல்களும் தினமும் கேட்கக் கிடைத்தவை. 'சாமானைப்பிடிச்சு ஒண்ணுக்கு போகத் தெரியாது' என்பதெல்லாம் அங்கே மிகச் சாதாரணமான கிண்டல். நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட நடுத்தர வயதைக் கடந்த பெண்மணியொருவர், சேலையை உயர்த்திக் கொண்டு நின்றபடியே சாக்கடையில் சளசளவென்ற சப்தத்துடன் சிறுநீர் கழிக்கும் கோலமே ஏறக்குறைய நாங்கள் அன்றாடம் காலையில் காணும் காடசி. சுருட்டு பிடித்தபடியே போகிற வருகிற ஆண்,பெண்களை வயது வித்தியாசமில்லாமல் பாலியல் தொடர்பான கிண்டல்களை உதிர்த்தபடியே இருக்கும் அவர் இரவுகளில் சாராயம் குடித்து விட்டு சொரணயில்லாமல் எங்கள் வீட்டுத் திண்ணையில் மல்லாந்திருப்பார். நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு இது அருவருப்பானதாக, ஆபாசமானதாக தோன்றியிருக்கலாம். ஆனால் இதுதான் அங்கு யதார்த்தமான வாழ்வியல் நடைமுறை. இதை பாலா கூடுமான அளவிற்கான நாகரிகத்துடன் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.

வலுவான கதைப்பின்னணியும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட திரைக்கதையும் இல்லாத காரணத்தினால் அனைத்தும் முயற்சிகளுமே வீணாகிவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம், இயக்குநரான பாலாதான்.

suresh kannan

13 comments:

கத்தார் சீனு said...

மிகக்கச்சிதமான விமர்சனம்.
கதை, திரைக்கதை படத்திற்கு மைனஸ் ஆகிவிட்டது.
பாலா அவரின் டெம்ப்லட்டை உடைத்து வெளிய வர வேண்டும்.....

Ashok D said...

சும்மா நறுக்குன்னு(ஷாட் & ஸ்வீட்டா) சொல்லிகினீங்க... அந்த ஹிரோவின் பிம்பம் உடைத்தல் மேட்ரு.. அப்டியே வியப்பா ஆகிடிச்சு....(பதிவுலகல யாரும் சொல்லாதது)

Jegadeesh Kumar said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

உங்கள் விமர்சனத்தில் அநியாயத்துக்கு பாலாவுக்கு மென்மைமூலையைக்(soft corner?) காண்பித்திருக்கிறீர்கள்.

நானும் சமீபத்தில் இப்படத்தைப் பார்த்தேன். பாலாவின் பிரத்யேக வக்ரம் படம் முழுக்க விரவிக் கிடக்கிறது.

ஜி.எம்.குமார் என்ற சுமாரான நடிகரைத் தேர்ந்தெடுத்தது அம்மணமாகத் தொங்கவிடமட்டும்தான் என்று நினைக்கிறேன்.

பாலாவின் பெண்கள் கதாபாத்திரம் எனக்கு எப்போதுமே பிடித்ததில்லை. மிகுந்த செயற்கையானவை. மேலும் பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார் போல.

எஸ்.ராவின் வசனங்கள் கோர்வையற்றும், செயற்கையாகவும் இருந்தன.

ஆர்யாவின் நடிப்பு மிகுந்த செயற்கையாக இருந்தமாதிரி பட்டது. விஷாலின் மாறுகண் ஒன்றுதான் படத்தின் மாறுபட்ட விஷயம்.

சுருக்கமாக விமர்சனம் எழுதி படத்தின் தகுதியை உணர்த்தி விட்டீர்கள்.
நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

M (Real Santhanam Fanz) said...

உங்க விமர்சனமும் எங்க விமர்சனமும் ஓரளவுக்கு ஒத்து போகுதுன்னு நினைக்கிறோம்

குரங்குபெடல் said...

"இந்தாளு இப்படிதான் எழுதுவாருய்யா"

என்ற கமெண்டுகளை தவிர்க்கவேண்டும் என்றே

எழுதியது போல் உள்ளது . . .

நன்றி

schools said...

i have expected more form bala. but this film is not as much my expectation

Funny Videos

Anonymous said...

//பாலா இதை திட்டமிட்டே செய்கிறாரா அல்லது அவரது இளமைக்கால வாழ்வியல் அனுபவங்களையொட்டி தன்னிச்சையாக செய்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.//--->

Balavirkku andha alavirkku thittamidum arivellaam kidaiyaadhu...தன்னிச்சையாக செய்கிறார்

Anonymous said...

சைக்கிளிலேயே ஊரை சுற்றுகிரவனின் பிளாக்
http://govenkygo.blogspot.com/

Anonymous said...

i saw tis in ur buzz...

// குறைந்தபட்சம் தார்மீக நியாயத்துடன் அதற்கான க்ரெட்டியையும் மற்ற இயக்குநர்களான சசி, வெற்றிமாறன் செய்தது போல் //

did vetri maran steal any movie story for aadukalam? what did he do? and what about director sasi? tell me plz...d

இந்திரா said...

பாலாவின் தொடர்ச்சியான ஒரே மாதிரியான கதாபாத்திரங்களும், கதையம்சங்களும் சலிப்பைக் குடுக்கிறன்றன.

யதார்த்தமான விமர்சனம்.
பகிர்விற்கு நன்றி.

யாழினி said...

அவன் -இவன்
அதிகப்பிரசங்கித்தனம்

Anonymous said...

http://rameshwritings.blogspot.com/2011/07/blog-post.html

I would like u to post this in your buzz...

it is about a painter...I too saw his paintings on the road side walls...at the time he drew the paintings I watched him...he looked like a beggar...so i prejudiced him and ignore him...(I don't know even what prejudice was at that time)...

one of his paintings still remains in a wall in my town...தான் செல்லும் பல ஊர்களிலும் சுவற்களில் வரைந்து விட்டு போவான் போலிருக்கிறது அந்த ஓவியன்....d..