Wednesday, November 03, 2010

சப்தங்களின் வன்புணர்ச்சி


'கடைசியாக எப்போது மெளனத்தை நீங்கள் கேட்டீர்கள்?' என்றொரு ஆங்கிலக் கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். யோசித்துப் பார்க்கிறேன். ஆம். நாம் சப்தங்களின் இடையில்தான் தொடர்ந்து ஆனால் அது குறித்த பிரக்ஞையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காலையில் எழுந்தவுடனேயே வானொலியில் பண்பலை தொணதொணா. அல்லது தொலைக்காட்சியில் பொய்களுக்கும் உண்மைகளுக்கும் இடையில் ஊசலாடும் செய்திகள். அலுவலகத்திற்கு கிளம்பும் போது திரையிசைப்பாடல்கள். வெளியில் வந்தவுடன் மனிதர்கள் இணைந்து எழுப்பும் நாராச சப்தங்கள். அலுவலத்தில் தொலைபேசியில் ஓயாத பொய்கள். கைபேசி மாய்மாலங்கள். விதவித ரிங்டோன்கள். மாலை வீடு திரும்பும் போதும் ஹெட்போன் சனியன்கள். சர்க்கரை நோய், பி.எப் கடன் வட்டி, ஹவுசிங் லோன், லெளதீக கவலைகள், பிரபுதேவா -நயனதாரா வம்புகள், இலக்கில்லாத அபத்த உரையாடல்கள், மறுபடியும் கைபேசி. வீட்டுக்குள் நுழைந்தவுடன் சீரியல் அழுகைகள், குழந்தைகளின் வீறிடல்கள், அக்கம் பக்க அல்லது சொந்த வீட்டு சண்டைகள், எரிச்சலில் வெளிப்படும் வன்மங்கள், வார்த்தைகள். உப்புப் பெறாத அல்லது ரசத்தில் உப்புப் போடாத விஷயங்களுக்காக மீண்டும் சண்டை. அந்த எரிச்சலிலேயே குப்புறப்படுத்து பண்பலை தொணாதொணா. தூக்கம்...

மீண்டும் காலையில் செல்போன் அலாரத்தின் ஒலியோடு விழிப்பு...

எப்போது நாம் சில நிமிடங்களையாவது பரிபூர்ண அமைதியுடன் கழித்திருக்கிறோம்?

இருந்திருக்கவே இருந்திருக்காது. மின்தடையினால் ஏற்படும் தற்காலிக அமைதி கூட நம்முள் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. குறைந்த பட்சம் பாட்டரி ரேடியோ கொண்டாவது சப்தத்தை ஏற்படுத்தி அந்தப் பதட்டத்தை தணித்துக் கொள்ளும் முயற்சியில்தான் நாம் ஈடுபடுகிறோம்.

இதோ தீபாவளி வரப்போகிறது. ஊரே பட்டாசும் தித்திப்புமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது நான் மாத்திரம் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பண்டிகையை கலக்கத்துடன் கடந்து கொண்டிருக்கிறேன். விநோதமாக இருக்கிறதல்லவா?

சிறுவயதிலிருந்தே எனக்கு அதிகம் பிடித்த விஷயங்களுள் பிரதானமானது. தனிமை. "பூனை மாதிரிடா நீ' என்று அடிக்கடி சொல்வாள் என் அம்மா. வீட்டுக்கு வரும் உறவினர் கூட எப்போது கிளம்பிப் போவார்கள் என்றே சங்கடத்துடன் காத்திருப்பேன். தனிமையில்தான் நான் நானாக, யதார்த்த வாழ்வின் போலித்தனங்களின் கட்டாயங்கள் அற்ற அகவயமான நிர்வாணத்துடன் இயங்க முடிகிறது.

மறுபுறம், பிடிக்காத விஷயங்களில் தலையாயது சப்தம். ஆடி மாத 'செல்லாத்தாக்களின்" மெகா ஸ்பீக்கர் அலறல்கள், தாலாட்டு போல் மிருதுவாக ஒலித்துக் கொண்டிருந்த ஆனால் சமீபங்களில் பீதியை கிளப்புகிற மசூதியின் பாங்கொலி, யாரையோ உரக்க காறித்துப்புகிற தொனியில் ஒலிக்கிற 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று அலட்டும் தொலைக்காட்சிகள், ஓலைப்பாய் ஒண்ணுக்கு பாணியில் மூச்சுவிடாமல் பேசி உயிரை வாங்குகிற பண்பலை வானொலி்க்கள், இரண்டு அடி தள்ளி அமர்ந்திருக்கிற மகனிடம் பழங்காலத்தில் எஸ்டிடி பேசுகிற டெசிபலில் ஹோம்ஒர்க் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாக்களின் அலறல்கள், 'மார் மேல கை வெய்டா' என்பதை வேறு வேறு மறைமுக வார்த்தைகளில் அலறும் குத்துப்பாடல்கள்,  செல்பேசி தேவையே அன்றி இங்கிருந்து பேசினாலே எதிர்முனையிலிருப்பவருக்கு ஒருவேளை கேட்கலாம் என்கிற ரீதியில் உரக்க கத்தி உயிரை வாங்கும்  கனவான்கள்,

இது போதாதென்று 'இங்கே வாங்களேன். உங்க காதுல ஒரு ரகசியம் சொல்லணும்' என்று அன்பொழுக கூப்பிட்டு காதருகில் ரயில் இன்ஜின் போல 'கூ.... வென்று' கத்தி விட்டு பின்பு சிரிக்கும் வாண்டுகள்.

சற்று மிகைப்படுத்துகிறேனோ என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் இந்த 'உரத்த சிந்தனையை' (?!) நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.

சரி. தீபாவளி மேட்டருக்கு திரும்புகிறேன்.

நான் வசிக்கும் அபார்ட்மெண்ட் கட்டிடம், சுவர்கள் இருப்பது போன்ற பாவனையில் உருவாக்கப்பட்டது. கீழ்தளத்தில் இருப்பவர் மனைவி மீதிருக்கிற கோபத்தில் வீட்டுக் கதவை டமால் என்று சாத்தி விட்டு வெளியே கிளம்பும் போது அதன் எதிரொலியாக மூன்றாவது மாடியில் இருக்கும் என்னுடைய மேஜை அதிர்ந்து நான் அருந்த காத்திருக்கும் காப்பி டம்ளர் சலனமடைந்து புவியீர்ப்பை இச்சையுடன் காதலிக்கும். இதனாலேயே கீழ்வீட்டுக்காரர் போன்ற நிலைமை எனக்கும் ஏற்பட்டு 'காலைல எத்தனை தடவை காஃபி போடறது?" என்று மனைவி என்னிடமும் சண்டை போடலாம். கேயாஸ் தியரி.

கீழே பார்க்கிங்கில் எவரோ இருவர் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பதை 'டால்ஃபி' எபெக்டில் மேலே என் வீட்டில் தெளிவாக கேட்க முடியும். ரகசியம் என்கிற சமாச்சாரத்தை யாரும் பேணிக்காக்கவே முடியாது. வீக்கிலீக்ஸ் தேவையெல்லாம் இல்லாமல் அந்தக்  கணமே விஷயம் லீக்காகி விடும். இந்த நிலையில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வெடிக்க ஆரம்பித்து விடும் வெடிகள், ஏதோ இரண்டாம் உலகப் போர்ச்சூழலின் இடையே பதுங்குதளத்தில் படுத்துக் கிடக்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

முன்பெல்லாம் எங்களுக்கு தீபாவளிக்கு 'பொட்டுப் பட்டாசு' மட்டுமே வாங்கித் தருவார்கள். ரசத்திற்கு இஞ்சி,பூண்டு நசுக்குகிற ரேஞ்சில் அதை தரையில் வைத்து ஒவ்வொன்றாக வெடிக்கும் அற்ப சப்தங்களோடு எங்கள் தீபாவளி கழிந்து விடும். அப்போதைய உயர்பட்ச சப்தமே 'லஷ்மி வெடிதான்'.

ஆனால் இப்போதோ ஆண்டுக்கு ஆண்டு சூழலை மாசுபடுத்துவதோடு காதுகளையும் காயப்படுத்தும் வெடிகளின் டெசிபல் அளவுகள் உயர்ந்து கொண்டே போகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசோ, சுற்றுச்சூழல் துறையோ, பட்டாசுகளுக்கு அனுமதி தருகிற அரசு அதிகாரிகளோ கவனிப்பதாய்த் தெரியவில்லை. ஒவ்வொரு அதிர்விற்கும் உயிர் போய்த் திரும்புகிறது. தொடர்ந்து இதைக் கேட்பதில் பைத்தியம் கூட பிடித்து விடலாம் என்கிற நிலைமையில் தவி்க்கிறேன். மற்றவர்கள் எவரும் இந்த பிரக்ஞைகளின் தொல்லைகள் இல்லாமல் இயல்பாய் இயங்குவதை ஆச்சரியத்துடன் கவனிக்கும் போது 'நான்தான் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறேனோ' என்று என் மீதே கோபமாய் வருகிறது.

இத்தனைக்கும் இந்த வெடிகளுக்காக சிறுவயதுகளில் நாயாய் பேயாய் அலைந்திருக்கிறேன். முன்னரே சொன்னது போல் 'பொட்டுப் பட்டாசை' தவிர வேறெதுவும் வீட்டில் வாங்கித்தர மாட்டார்கள். போதாமை. மற்றவர்கள் உற்சாகமாய் சரவெடிப்பதை ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருப்போம். என் வயதையொத்த சிறுவர்கள் மறுநாள் விடிகாலையிலேயே கிளம்பி தெருவெங்கும் கிடக்கிற வெடிக்காத வெடிகளை தேடி பொறுக்கிக் கொண்டு வருவோம். திரியில்லாத வெடிகளை பிய்த்துப் போட்டு உள்ளேயிருக்கும் கருமருந்துகளை மொத்தமாக சேகரித்து கொளுத்தி அது நெருப்பாய் பொங்கி வருவதைக் காண ஓர் ஆனந்தம்.

ஆனால் இப்போது பத்தாயிரம் சரவெடியை வெடிப்பதற்கான வசதியிருந்தும் சுத்தமாக அதன் மீது ஆர்வமே போய் மாறாக ஓர் ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. குழந்தைகளுக்காக வாங்கித் தரும் வெடிகளையும் அவர்களின் பயம் காரணமாக நாமே வெடிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வெடியையும் வெடித்து முடித்தவுடன் அதில் ஏற்படும் சப்தம் மூர்க்கமான வன்முறையாக நம்முள் தொற்றிக் கொண்டு 'இன்னும் இன்னும்' என தீனி கேட்பதை கவனித்திருக்கிறேன். யாரையாவது நாம் தாக்கும் போது இன்னும் இன்னும் என நம்முள்ளிருக்கிற மூர்க்கம் உற்சாகத்துடன் குரல் கொடுப்பதற்கு இணையானதாக பட்டாசு வெடிப்பதும் அமைந்திருக்கிறது. எனவேதான் பல ஆயிரங்களுக்குக் கூட ஒரு குடும்பம் பட்டாசிற்கு செலவழிப்பது நிகழ்கிறதா என்பது ஆய்வுக்குரியது.

இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க தீபாவளி நாட்களில் வேறு எங்காவது சென்று விடலாம் என்று திட்டமிட்டாலும் 'நல்ல நாள்ல கூட வீடு தங்க மாட்டீங்களா' என்று இல்லாள் எறிகிற அணுகுண்டுவிற்கு இவையே தேவலாம் என்றாகி விடும். இந்த தீபாவளிக்கு ஒரே ஒரு நாள்தான் அலுவலக விடுமுறை என்பதே வழக்கமாக விடுமுறைகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் எனக்கு ஆறுதலளிப்பதாக இருக்கிறது.

காதில் பஞ்சை அடைத்துக் கொள்ளலாம் என்கிற தத்துப்பித்து ஆலோசனைகளைத் தவிர இந்த தீபாவளியை ஒலி ஆபத்திலிருந்து எவ்வாறு தப்பித்து கடப்பது என்பதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் என்னைப் போன்றே இதே மாதிரியான விநோதப்பிரச்சினையில் அவதிப்படும் சக ஜீவிகளும் இருக்கலாம். அவர்களின் தோழமையான குரல்கள் என்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இந்தப் பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே சம்பிதாயமான கணங்களைத் தவிர யாருக்கும் தீபாவளி வாழ்த்தெல்லாம் சொல்லி வழக்கமில்லை. எனவே...

ஒளிரட்டும் ஒலியில்லா தீபாவளி  :-)

suresh kannan

18 comments:

sathishsangkavi.blogspot.com said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

//ஒளிரட்டும் ஒலியில்லா தீபாவளி :-)//

சவுதிக்கு வந்துடுங்க, இங்கே பட்டாசுக்கு தடா :-)

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

Katz said...

"சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்" பாடலை அதிக சத்தம் வைத்து கேளுங்கள். ;-)

Anonymous said...

//ஆனால் இப்போது பத்தாயிரம் சரவெடியை வெடிப்பதற்கான வசதியிருந்தும் சுத்தமாக அதன் மீது ஆர்வமே போய் மாறாக ஓர் ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது//

ஒளியும் ஒலியும் இல்லாத தீபாவளி நன்றாக இருக்குமா?.. மேலும் பண்டிகைகள் என்பது உணவுபூர்வமாகவும் உணர்வுபூர்மாகவும் நமது கலச்சாரத்தினை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு அல்லவா.. போங்க சார்.. போய் ஒரு பத்து பாக்கெட் லஷ்மி வெடி வாங்கிகிட்டு வந்து.. உங்க அப்பார்மென்ட் கேட்டுகிட்ட நின்னுகிட்டு உங்க குழந்த பட்டாசு வெடிக்கிறத வேடிக்க பாத்துகிட்டு இருக்கிற அந்த வசதியில்லாத பசங்களுக்கு கொடுத்துட்டு அவங்க கொளுத்தி வெடிக்கறத, சந்தோஷப்படுறத உங்க குடும்பத்தோட சந்தோஷமா வேடிக்க பாருங்க.. வாழ்க தீபாவளி.. வளர்க சுரேஷ் கண்ணன். வாழ்த்துக்கள்.

ஹரன்பிரசன்னா said...

டிவிட்டரில் எழுதவேண்டிய பதிவை, டிவிட்டரில் எழுதுவதில்லை என்ற ஒரே காரணத்துக்காக் 1400 எழுத்துகளில் எழுதுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஐயா

குசும்பன் said...

மாணவன்: குரு அமைதியான இடத்தில் தவம் செய்யவேண்டும், நான் காட்டுக்கு செல்கிறேன், நம் ஆசிர்மத்தின் ஓரத்தில் இருக்கும் நதி சத்தத்தில் தவம் செய்ய முடியவில்லை...

ஜென்: சரி போ

மாணவன்: குருவே அங்கே என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை, ஒரே பறவைகள் சத்தம்...நான் மலை உச்சிக்கு செல்கிறேன்..

ஜென்: சரி போ

மாணவன்: குருவே அங்கே காற்று சத்தம் அதிகமாக இருக்கிறது அங்கேயும் என்னால் தவம் செய்யமுடியவில்லை...


ஜென்: அமைதி என்பது வெளியிலிருந்து வருவது அல்ல...உன்னுள் இருப்பதே:)))

ஹி ஹி நாங்களும் கதை சொல்லுவோமுல்ல:)))

iniyavan said...

உங்களின் பல கருத்துக்கள் எனக்கு ஒத்து போனாலும், இந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கும் சில விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. சப்தம் இல்லாத அமைதி தேவைதான். ஆனால் உங்களால் ஒரு நாள் முழுக்க சப்தம் இல்லாமல் இருக்கும் ஒரு அறையில் இருக்க முடியுமா? முடியவே முடியாது.

சில சமயம் நாம் சமுதாயத்துடன் ஒத்து வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் சுரேஷ் கண்ணன்.

நீங்கள் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை என்றால் என்ன? நான் உங்களுக்கு சொல்கிறேன்,

"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

உலக சினிமா ரசிகன் said...

தீபாவளி நமது பாரம்பரியம் மட்டுமல்ல ..இந்தியப்பொருளாதாரமே அடங்கியுள்ளது.

கல்வெட்டு said...

*

சுரேஷ்,

சவுண்ட் புரூஃப் செய்யப்பட்ட அத்ரிபன்ஸ்கா நாசா ஆய்வுக்கூடத்தில் நீஙகள் இருந்தால்கூட கொஞ்ச நேரத்தில் (தியேட்டர் இருட்டில் நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்க்க முடிவது போல) உங்களின் இதயத்துடிப்பும் , மூச்சுசத்தமும், வயிற்றின் கடபுடா சத்தங்களும் கேட்க ஆரம்பித்துவிடும்.

***

பிடித்த சத்தங்கள் வேண்டும் என்று சொல்லுங்கள் அது சரி.

***
சப்தம் வேண்டாம் என்றால் ஒன்று சாகவேண்டும் அல்லது காதைச் செவிடாக்கிக்கொள்ள வேண்டும்.

:-)))

.

ரவிஷா said...

நீங்கள் சொல்ல வந்தது தனிமையில் இருப்பது! அதற்கு சம்பந்தமில்லாமல் சப்தத்தை வம்புக்கு இழுக்கிறீர்கள்! தவிரவும், தீபாவளி பட்டாசு சமாச்சாரம் உங்களுக்கு வயதாகிவிட்டதை காண்பிக்கிறது!

nellai அண்ணாச்சி said...

ரவிஷா சொல்றது வாஸ்தவமான பேச்சி

PB Raj said...

குழந்தைகளுக்காக வாங்கித் தரும் வெடிகளையும் அவர்களின் பயம் காரணமாக நாமே வெடிக்க வேண்டியிருக்கிறது. உண்மைதான் சுரேஷ்

Anonymous said...

i came to know your blog through puthiyathalaimurai weekly. nice blog. will visit frequently. RAJESH

துளசி கோபால் said...

தீபாவளியாவது விழாக்காலமுன்னு ஒரு சாக்கு சொல்லிக்கலாம் வெடிச்சத்ததுக்கு. வீடுகளில் டிவி போடும் சத்தத்தை என்னன்னு சொல்றது. சென்னையில் தெருவில் நடக்கும்போதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கிட்டே வாக் போகலாம்:(

சத்தம் இப்பெல்லாம் சகிக்க முடியலை. சீக்கிரம் காது அவுட் ஆகிவிடும் நிலை. எல்லாம் வெளியார் உண்டாக்கும் இரைச்சல்தான். இதுலே சினிமாப் பாட்டுகள் என்ற பெயரில் எல்லா இசைக்கருவிகளையும் போட்டு அடிஅடின்னு அடிச்சு.............ப்ச்.... என்னவோ போங்க.....
மக்கள் விரும்புறாங்களாமே:(

பதிவு அருமை.

தியாகு said...

அந்த ஆங்கில கட்டுரையின் சுட்டியினை தரமுடியுமா?

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

குசும்பன்: ரசித்தேன். :-)

கல்வெட்டு: இறப்பிற்கு பிறகு எந்த சத்தமும் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? :-)

தியாகு: 'தி இந்து' ஆங்கில் நாளிதழின் சப்ளிமெண்டரி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு படித்த கட்டுரை. தலைப்பு ஞாபகமில்லை. தேடிப் பார்த்து சுட்டி கிடைத்தால் இணைக்கிறேன்.

வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றிகள். ஒரு நாளின் சில நிமிட அமைதியைப் பற்றித்தான் இங்கு குறிப்பிட விரும்பினேன். நிரந்தர அமைதியை அல்ல. :-)

கல்வெட்டு said...

.

//கல்வெட்டு: இறப்பிற்கு பிறகு எந்த சத்தமும் இருக்காது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா? :‍)//

சுரேஷ்,
இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா. :-)))

இதெல்லாம் செத்துப் பாத்தா சொல்லமுடியும். ஒரு யூகம்தான். ^_^ .

பல ஆயிரம் சரவெடிகளை உங்கள் வீட்டின் முன் சேட்டுப்பசங்கள் போட வேண்டும் என்று சாபம் இடுகிறேன். :-))

.

Anonymous said...

"வன்புணர்ச்சி " - இந்த வார்த்தை உங்களக்கு அவ்வளவு பிடிக்குமா என்ன? :-)