Friday, May 22, 2020

Nightcrawler (2014) - 'செய்திக் கொடூரன்'





செய்திகளை பரபரப்பாக்கி முந்தித் தரும் வணிகப் போட்டிக்காக ஊடகங்கள் அறவுணர்வை இழந்து எவ்வகையான கீழ்மைகளுக்கெல்லாம் செல்லுகின்றன என்பதையும் மனிதத்தன்மையை இழக்கும் இந்த கலாச்சாரம் வளரும் பயங்கரத்தையும் முகத்தில் அறையும் கடுமையுடன் சொல்கிறது இந்த திரைப்படம்.

**

லூ ப்ளூம் ஒரு சில்லறைத் திருடன். தடுப்புக் கம்பிகள், சாக்கடை மூடிகள் போன்றவற்றை திருடி விற்று சம்பாதிப்பவன். திருடன் என்பதால் எவரும் வேலை தருவதில்லை. ஆனால் நிலையானதொரு தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்கிற வெறி அவனுக்குண்டு.

அந்தச் சிந்தனையில் அவன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு  சாலை விபத்தையும், அதை ஒருவன் அவசரம் அவசரமாக  காமிராவில் படம்பிடிப்பதையும்  பார்க்கிறான். . என்னவென்று விசாரிக்கிறான். இம்மாதிரியான விபத்துக் காட்சிகளை, ரத்தம் வழியும் பயங்கரமான தருணங்களை படமாக்கி, அந்தக் காட்சித் துண்டுகளை செய்தி சானல்களிடம் விற்று பணமாக்க முடியும் என்று தெரிய வருகிறது.

விலையுயர்ந்த சைக்கிள் ஒன்றை திருடி விற்று தன் தொழிலைத் துவங்குகிறான். காவல்துறையினரின் உரையாடல்களை கேட்கக்கூடிய கருவி மற்றும் ஒரு காமிராவை வாங்குகிறான். முதலில் சில தோல்விகளைச் சந்தித்தாலும் இதிலுள்ள போட்டிகளையும் விதிகளையும் பிறகு மெல்ல மெல்ல அறிகிறான்.

விபத்து, குற்றம், வன்முறை நிகழும் இடத்திற்கு எவர் முதலில் விரைவாகச் சென்று அந்தக் காட்சிகளை திறமையாக பதிவு செய்கிறார்களோ அவர்களே இதில் சம்பாதிக்க முடியும். சற்று தாமதம் ஆனாலும் போச்சு. போட்டியில் எவனாவது முந்திக் கொள்வான்.

லூ இந்த வித்தையில் மெல்ல முன்னேறுகிறான். முதல் போணி. விபத்து தொடர்பான ரத்தம் ஒழுகும் ஒரு வீடியோ துண்டை எடுத்துக் கொண்டு  செய்தி சானலுக்கு செல்கிறான். நிகழ்ச்சி அதிகாரி அதை எடுத்துக் கொண்டு பேரத்திற்குப் பிறகு சொற்ப தொகையை தருகிறாள். ‘உன்னிடம் திறமை இருக்கிறது. நல்லதாக ஒரு கேமரா வாங்கிக் கொள்’.

**

வேலை தேடி அலையும் ஓர் இளைஞனை தன்னுடைய உதவியாளனாக அமர்த்திக் கொள்கிறான் லூ. அவனிடம் சாமர்த்தியமாக பேசி குறைந்த தொகைக்கு ஒப்புக் கொள்ளச் செய்கிறான்.

குற்றச் செய்திகளை அதிவேகமாக துரத்தும் இதன் வசீகரம் அவனுக்கு பிடித்துப் போகிறது. மூர்க்கமாக முன்னேறுகிறான். இதே தொழிலில் இருக்கும் ஒரு போட்டியாளன் விபத்தில் சிக்கும் போது அவனையும் வீடியோ எடுக்க லூ தயங்குவதில்லை. அந்த அளவிற்கு மனிதத்தன்மையை இழப்பவனாக மாறுகிறான். இதற்காக சட்டமீறல்களையும் சாமர்த்தியமாக செய்கிறான்.

லூ விற்கும் அவனுடைய உதவியாளனுக்கும் சம்பளம் தொடர்பாக அவ்வப்போது விவாதங்கள் நிகழ்கின்றன. அவனுக்கு ஆசை காட்டி ஒரு மாதிரியாக சமாளிக்கிறான். ‘என்னுடைய வேகத்திற்கு நீ ஈடு தந்தால் அதற்கேற்ப பணம் கிடைக்கும். வேலையை கற்றுக் கொள்”

**

ஒரு வீட்டில் துப்பாக்கிச் சப்தம் கேட்பதாக ஸ்கேனர் கருவியில் தகவல் கிடைக்கிறது. தனது காரை அதிவிரைவாக எடுத்துச் சென்று மின்னல் வேகத்தில் அந்த இடத்தை அடைகிறான். கொலையாளிகள் அப்போதுதான் வெளியேறுகிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு அந்தக் காட்சிகளை பதிவு செய்கிறான். பிறகு கொலை நடந்த வீட்டிற்குள் நுழைந்து ரத்தம் வழிய கிடக்கும் சடலங்களை வீடியோ எடுக்கிறான். இதற்குப் பிறகுதான் போலீஸே வருகிறது. அவசரம் அவசரமாக வெளியேறி விடுகிறான்.

செய்தி சானலுக்குப் போகும் வழியில் சாமர்த்தியமாக ஒரு காரியத்தைச் செய்கிறான். கொலைகாரர்களின் முகம் பதிந்திருக்கும் காட்சிகளை துண்டித்து தனியாக எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை செய்தி சானலுக்கு அதிக விலைக்கு விற்கிறான். இதன் பிரத்யேகமான காட்சிகள் வேறு எந்த தொலைக்காட்சியிடமும் இல்லை என்பதால் இவனுடைய மதிப்பு உயர்கிறது.

**

வீடியோவில் தெரியும் கொலைகாரர்களின் வாகன எண்ணின் மூலம் அவர்களது முகவரியை அறிந்து வெளியே காத்திருக்கிறான். அவர்கள் கிளம்பும் போது பின்தொடர்கிறான். அவர்கள் ஒரு உணவகத்தில் இருக்கும் போது காவல்துறையினருக்கு அவர்களைப் பற்றிய தகவலைத் தருகிறான்.

போலீஸ் அங்கே வரும் போது அவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் மோதல் நிகழும். அதை வீடியோ எடுத்து ‘Exclusive News’ ஆக விற்பனை செய்வது அவனது நோக்கம். “இது சட்டவிரோதம்” என்று உதவியாளன் தடுக்க முயல்கிறான். லூ கேட்பதாயில்லை. ‘தான் இதற்கு ஒத்துழைக்க முடியாது” என்று உதவியாளன் பின்வாங்க முயல, அவனை மிரட்டியும் ஆசை காட்டியும் பணிய வைக்கிறான் லூ.

இவன் எதிர்பார்த்தபடியே போலிஸூக்கும் கொலைகாரர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. கொலையாளிகள் தப்பிச் செல்ல அவர்களை காரில் வேகமாக பின்தொடர்கிறான். போலீஸூம் அவர்களைத் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் கொலைகாரர்களின் வாகனம் தடுமாறி விழுகிறது.

அருகில் சென்று பார்க்கும் லூ, தனது உதவியாளனை நெருங்கி வந்து வீடியோ எடுக்கச் சொல்கிறான். உள்ளே இருக்கும் கொலைகாரன் ஆத்திரத்துடன் உதவியாளனை துப்பாக்கியால் சுட பரிதாபமாக அவன் செத்துப் போகிறான். கருணையேயின்றி அவனுடைய சடலத்தையும் வீடியோ எடுக்கிறான் லூ..

**

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் இவனிடம் விசாரணை செய்கிறது. எல்லாவற்றிற்கும் சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பிக்கிறான்.

மனித உயிர்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ எந்தக் கவலையுமில்லாமல் பணத்திற்காக பரபரப்பு செய்திகளை நோக்கி ஓடும் இவனும் ஒரு விபத்தில் இறந்து விடுவான் என்கிற நீதிக்கதையின் முடிவை நீங்கள் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். யதார்த்தம் அப்படியல்ல. அவன் சில பல உதவியாளர்களோடு ஒரு செய்தி நிறுவனத்தை உருவாக்குவதோடு படம் நிறைகிறது.

**

லூ ப்ளூம் ஆக Jake Gyllenhaal அற்புதமாக நடித்திருக்கிறார். Dan Gilroy இயக்கிய இந்த திரைப்படம் ‘சிறந்த திரைக்கதைக்காக’ ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

1 comment:

Yaathoramani.blogspot.com said...

நம்முடைய ஊடகங்கள் இப்போது அப்படித்தானே உள்ளது....உணரும்படி கதை சொல்லிப் போன விதம் அருமை... வாழ்த்துகளுடன்...