Friday, May 08, 2020

Whiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா?






புராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கும் படைப்புகள் நிறைய உண்டு. அந்த வரிசையில் மிக முக்கியமான, உணர்ச்சிகரமான திரைப்படம்  - Whiplash.

இசை பயிலும் மாணவனானஆண்ட்ரூவிற்கு டிரம்ஸ் வாத்தியத்தில் உலகின் திறமையான கலைஞர்களின் வரிசையில் இடம்பிடிக்க வேண்டுமென்பது லட்சியம். ஏன், வெறி என்று கூட சொல்லலாம். அதற்காக இளமையில் இருந்தே கடுமையான பயிற்சியை மேற்கொள்கிறான்.

புகழ்பெற்ற இசை பயிற்சிக்கூடமொன்றில் திறமையான நடத்துநராக இருப்பவர் ப்ளெச்சர். இரண்டாவது வரிசையில்  மூன்றாவது நபர் சுருதியிலிருந்து விலகி டிரம்ப்பெட் வாசித்தாலும் உடனே கண்டுபிடிக்குமளவிற்கு நுண்மையான இசை ஞானம் உள்ளவர். ஆனால் மிகவும் கறாரான ஆசிரியர். தம்முடைய எதிர்பார்ப்பின் உயரத்தை எட்ட முடியாத மாணவர்களை கூனிக்குறுகும் படி திட்டுவது இவரது பாணி.

 மிகவும் ஆர்வத்துடன் டிரம்ஸ் வாசிக்கும் ஆண்ட்ரூவை கவனிக்கும் ப்ளெச்சர் அவனை தம்முடைய இசைக்குழுவில் இணைத்துக் கொள்கிறார். ஆனால் அவன் தவறு செய்யும் போதெல்லாம் மிகவும் கடுமையாக திட்டுகிறார். அவனுடைய தகுதியை குறைக்கிறார். என்றாலும் ஆண்ட்ரூ மனம் தளராமல் தன் கடுமையான பயிற்சியை தொடர்கிறான். இதற்காக தன் காதலியைக் கூட பிரிய முடிவு செய்து விடுகிறான். ஒரு நிலையில் குருவின் அபிமானத்தைப் பெற்று மறுபடியும் உயர்கிறான்.

ஓர் இசைப் போட்டிக்காக  குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல வேண்டும் என்கிற பரபரப்பில் டிரம்ஸ் குச்சிகளை மறந்து விடுகிறான் ஆண்ட்ரூ. தாமதமாக வந்ததற்காக குரு  அவனை கடுமையாக கோபித்துக் கொள்கிறார். வேறொரு மாணவனை அவனுடைய இடத்தில் அமர்த்தியிருப்பதாக சொல்கிறார். பதிலுக்கு கோபம் கொள்ளும் ஆண்ட்ரூ 'இது என் திறமையின் மூலம் கிடைத்த இடம். இதை விட்டுத்தர முடியாது' என்று அவரிடம் விவாதிக்கிறான்.

"நீ பத்து நிமிடங்களுக்குள் திரும்பி வரவில்லையென்றால் உன் இடம் காலி" என்கிறார் ஆசிரியர். வருகிறேன் என்று சவால் விட்டு கிளம்பும் ஆண்ட்ரூ தன் குச்சிகளை எடுத்துக் கொண்டு திரும்ப வேகமாக காரில் வரும் போது விபத்தில் சிக்கிக் கொள்கிறான். என்றாலும் ரத்தக் காயங்களுடன் அரங்கின் உள்ளே வந்து வாசிக்க ஆரம்பிக்கிறான். ஆசிரியர் உட்பட மற்றவர்கள் எல்லோருமே அதிர்ச்சியடைகின்றனர். ஆனால் அப்போதும் கூட அவனுடைய வாசிப்பில் உள்ள குறையைச் சுட்டி அவனை நிராகரிக்கிறார் ஆசிரியர். வரும் கோபத்தில் அவர் மீது பாய்ந்து தாக்குகிறான் ஆண்ட்ரூ. அந்தக் கோபத்தோடு இசைப் பயிற்சியையும் மூட்டை கட்டி வைத்து விடுகிறான்.

***

ப்ளெச்சரின் இந்த கடுமைத்தனத்தால் மனஉளைச்சல் அடைந்து ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஒருவரைச் சுட்டிக் காட்டி குருவின் மீது ரகசியமாக புகார் தரச் சொல்கிறார் ஆண்ட்ரூவின் தந்தை.  தயக்கமாக  இருந்தாலும் ஆண்ட்ரூ அதைச் செய்கிறான். ப்ளெச்சரின் பணி பறிபோகிறது. ஒரு நாள் ஹோட்டலில் ஆசிரியர் கீபோர்டு வாசிப்பதை பார்க்கிறான் ஆண்ட்ரூ. இருவரும் பேசுகின்றனர்.

'என் மாணவர்களிடம் உள்ள இசைத்திறமையை அதன் உச்சப்புள்ளிக்கு நகர்த்திச் செல்வதும் அவனுக்கே அவனுடைய உச்ச திறமையை  அடையாளம் காட்டுவதுதான் என் நோக்கம்' என்று தன் கடுமைத்தனத்தைப் பற்றி  சமாதானமாக சொல்கிறார் ஆசிரியர். ஆண்ட்ரூவின் மனம் மாறுகிறது. அவர் இன்னொரு இசைப்பள்ளியில் பணிக்கு சேரவிருப்பதால் அங்கு டிரம்மர் இல்லை என்று  இவனை அழைக்கிறார். ஆண்ட்ரூ தன் பயிற்சியை மறுபடியும் தீவிரமாக தொடர்கிறான்.

இசை நிகழ்ச்சி நடக்கும் நாளன்று ஏற்கெனவே தீர்மானித்து பயிற்சி பெற்றிருந்த இசை உருவாக்கத்திற்கு  மாறாக திடீரென்று வேறொன்றை மாற்றி விடுகிறார் ஆசிரியர். ஆண்ட்ரூவிடம் அதற்கான இசைக்குறிப்பு தாள்களும் இல்லை. அவன் தடுமாறுகிறான்.  "என் மீது  புகாரை நீதான் அளித்தாய் என்று தெரியும்" என்று அவன் காதில் ரகசியமாக சொல்லி விட்டுப் போகிறார் ப்ளெச்சர்.

ஆசிரியர் தம்மை மறுபடியும் பழிவாங்க முயல்கிறார் என்பதை உணரும் ஆண்ட்ரூ, அந்த நிகழ்ச்சியின் இடையில் வேண்டுமென்றே வேறு தாளயிசையை வாசிக்கிறான். அடுத்த இசையின் தலைப்பை பற்றி அவர் அறிவிக்கும் முன்பே தாம் நன்றாக பயிற்சி எடுத்திருக்கும் இசையை  வாசிக்கத் துவங்கி விடுகிறான். ப்ளெச்சர் தடுத்தாலும் அவன் நிறுத்துவதாயில்லை. அந்த இசை முடிவடைந்தாலும் கூட ஆவேசத்துடன் தன் வாசிப்பைத் தொடர்கிறான் ஆண்ட்ரூ. வேறு வழியின்றி அவனைத் தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் ஆசிரியர்.

ஆண்ட்ரூ உன்மத்தம் பிடித்தவன் போல் தன் வாசிப்பை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறான். ஒரு கட்டத்தில் ஆசிரியர் ப்ளெச்சரே அவனுடைய அசாத்தியமான திறமையைக் கண்டு அவனுடன் இணைந்து ஊக்கப்படுத்துகிறார். ஆண்ட்ரூவின் இந்த ஆவேசமான இசை வாசிப்பின் உச்சமான ஒரு நிறைவுப் புள்ளியில் ஆண்ட்ரூவின் கண்களும் ப்ளெச்சரின் கண்களும் சந்தித்துக் கொள்கின்றன. ப்ளெச்சரின் புன்னகைக்கான  புரிதலைல உணர்கிறான் ஆண்ட்ரூ.

ஆம். அவனுடைய திறமையின் அசாத்தியமான உயரத்தை நோக்கி அவனை தள்ளுவதற்காகவே அவர் இத்தனை நாளும் முயன்றிருக்கிறார், கடுமையாக நடந்திருக்கிறார் என்கிற உண்மையை அவனுக்கு உணர்த்துவதுடன் படம் நிறைவடைகிறது.

***

இத்திரைப்படம் முழுவதுமே இசையால் நிறைந்து வழிகிறது. ஜாஸ் இசையின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு கூட ஆர்வத்தை உண்டாக்கும் உண்டாக்கும்படியான திரைக்கதை. குருவிற்கும் சீடனிற்கும் இடையில் நிகழும் கற்றல் முறைகளும் அது தொடர்பான உணர்வுப் போராட்டங்களும்  பரபரப்பாக பதிவாகியிருக்கின்றன. குருவாக d J. K. Simmons-ம் மாணவன் ஆண்ட்ரூவாக Miles Teller-ம் போட்டி போட்டு நடித்திருந்தாலும் சிம்மனஸ்ஸின் நடிப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது. அதற்காகவே  சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தது. படத்தை சிறப்பாக இயக்கியிருப்பவர் Damien Chazelle.

குரு, ஆசிரியர் என்கிற நிலையின் உள்ள புனிதத்தன்மைகள் அதன் அர்த்தங்களை இழந்து கொண்டிருக்கும் சூழல் இது.  ஆனால் சில உண்மையான குருமார்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை எவ்வகையிலாவது அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட வேண்டும் என்கிற ஆத்மார்த்தமான போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டேயிருப்பார்கள். அந்தக் கற்றலில் சில முறைகள் தீவிரமானதாக இருக்கலாம். கடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் அதன்  நோக்கம் அடிப்படையில் உயர்ந்தது என்பதை சீடர்கள் கண்டுணர வேண்டும். அப்படியொரு குருவை அடையாளம் காட்டும் அற்புதமான திரைப்படம் இது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: