Sunday, May 17, 2020

The Pope's Toilet (2007) - 'கடவுளின் தூதரும் கழிப்பறையும்'







அண்மையில் வெளியான 'ஜோக்கர்'  திரைப்படத்தில், ஜனாதிபதி வருகையின் மூலம் ஒரு கிராமத்துப் பெண்ணின் கழிப்பறை கனவு  எவ்வாறு கலைந்து போகிறது என்பதை அரசியல் கலந்த உருக்கமாகச் சொல்லியிருந்தார்கள். இதுவும் அதைப் போன்றதொரு திரைப்படமே. 'கடவுள், மதம்' போன்ற விஷயங்கள், அன்றாட ஜீவனத்திற்கே சிரமப்படும் எளிய மக்களுக்கு என்னவாகப் பொருள் தருகிறது என்பதை உரையாடுகிறது, இந்த உருகுவே நாட்டுத் திரைப்படம். 1998-ல் நிகழ்ந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் இது.

**

பிரேசில் எல்லையில் உள்ள  சிறிய நகரம் மெலோ. பெரும்பாலும் வறியவர்கள் உள்ள பகுதி. அங்கு சில ஆண்கள் கடத்தல் தொழில் செய்கிறார்கள். பிரேசில் நகரின் சந்தைக்குச் சென்று அன்றாட உபயோகப் பொருட்களை வாங்கி காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கடத்தி வந்து உள்ளூர் வியாபாரிகளிடம் தந்து பணம் சம்பாதிக்கிறார்கள். சில சமயங்களில் கண்காணிப்பு அதிகாரிகளிடம் சிக்கி தங்களின் பொருட்களையும் மரியாதையையும் இழப்பதுண்டு.

இவ்வாறான கடத்தல் தொழிலுக்குச் செல்பவர்களில் ஒருவன் பெட்டோ.  போலீஸ்காரர்களின் கண்களில் தென்படாமல் காடு, மேடெல்லாம் ஒளிந்து ஒளிந்து  லொங்கு லொங்கென்று சைக்கிள்  ஓட்டி தப்புவதற்குள் அவனுக்கு முட்டி கழன்று விடுகிறது. ஒரு பைக் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். மனைவியிடம் காசு கேட்டுப் பார்க்கிறான்.

மகளின் படிப்புச் செலவிற்கென்று சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை அவள் தர மறுக்கிறாள். வறுமையான குடும்பம். அடிக்கடி சில்லறை தகராறுகள் நடக்கின்றன. வானொலி அறிவிப்பாளராக ஆகும் கனவுடன் இருக்கும் அவர்களது மகள், இவர்களது சண்டைகளை வெறுப்புடன் பார்க்கிறாள்.

**

இந்த நிலையில் அந்தச் சிறிய நகரத்திற்கு போப் வரவிருப்பதாக தகவல் பரவுகிறது. அவர் சுற்றுப் பயணத்தின் போது இந்த சிறுநகரத்திற்கும் வந்து உரையாற்றப் போகிறார். இந்தச் செய்தி  பெரிய பரபரப்பைக் கிளப்பி விடுகிறது. போப்பைக் காண்பதற்காக சுமார் அறுபதாயிரம் நபர்கள் வரவிருப்பதாக ஊடகங்கள் இந்த பரபரப்பை மேலும் கூட்டுகின்றன.

அந்த நகரத்தின் எளிய மக்கள், போப்பின் வருகையை முன்னிட்டு பணம் சம்பாதிக்க முடியுமா என யோசிக்கிறார்கள். இது அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானதுதான். ஆனால் வறுமையின் முன் என்ன செய்ய முடியும்? விதம் விதமான உணவுக்கடைகளும், கேளிக்கை விஷயங்களும் தயாராகின்றன. போப்பின் வருகை லாட்டரியில் அடித்த பம்பர் பரிசு மாதிரி அவர்களுக்கு இருக்கிறது.

***

பைக் வாங்க முடியாத எரிச்சலில் இருக்கும் பெட்டோ, மனைவியிடம் சண்டை போடுவதும், மதுவருந்துவதும் அல்லாத ஒரு நேரத்தில் சிந்தித்துப் பார்க்கிறான். 'தானும் இது போல் ஏதாவது செய்து சம்பாதித்தால் என்ன?' மெல்ல மெல்ல ஒரு யோசனை அவனுக்குள் தோன்றுகிறது. மற்றவர்கள் மாதிரி உணவுக்கடைகள் போடாமல் வருகிற கனவான்களுக்காக ஒரு கழிப்பறையைக் கட்டினால் என்ன?'

இந்த யோசனையை மனைவி, மகளிடம் பகிர்கிறான். இதற்காக கடத்தல் தொழிலுக்கு அதிக டிரிப் போக வேண்டியிருக்கிறது. போலீ்ஸ்காரர்களின் தொல்லையைத் தடுக்க, தன் கூட்டாளிகளுக்குத் தெரியாமல், தலைமை காவல் அதிகாரியிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறான். அவர் மேற்பார்வையில் பொருட்களை எடுத்து வந்தால் அவர் கமிஷன் தருவார்.  மெல்ல மெல்ல பணம் சேர்கிறது. கழிவறை உருவாக ஆரம்பிக்கிறது.

***

கழிவறைக்கு வரும் நபர்களை எப்படி வரவேற்பது, எப்படி கட்டணம் வாங்குவது, அதிக நேரத்தை எடுத்துக் கொள்பவர்களை எப்படி நாசூக்காக வெளியே வரச் சொல்வது என்று மனைவிக்கும், மகளுக்கும் பயிற்சி தருகிறான். சிரித்தபடியே கற்றுக் கொள்கிறார்கள். வரப்போகும் பணத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று குடும்பமே இன்பக் கனவில் மூழ்குகிறது.


கழிவறைக் கட்டிடம் பெரும்பாலும் உருவாகி விட்டாலும் நபர்கள் அமரும் பீங்கான் தொட்டி இன்னமும் வாங்கப்படவில்லை. இதற்கிடையில் போலீஸ்காரருடன் பெட்டோ போட்டுள்ள கள்ள ஒப்பந்தம், மனைவிக்குத் தெரிய வருகிறது. 'அவன் மூலம் சம்பாதித்த பணமா இது?' என்று திட்டுகிறாள்.

போப் வரும் கடைசி நாள். அதற்குள் எப்படியாவது தொட்டியை வாங்கி விட வேண்டும். பெட்டோ இடிந்து போய் அமர்ந்திருக்கிறான்.

***

பெட்டோவின் மனைவி, மகளின் படிப்புச் செலவிற்காக வைத்திருந்த சேமிப்பு பணத்தை தருகிறாள். சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்.  விடிவதற்குள் ஊர் திரும்ப வேண்டும். தொட்டியை வாங்கிக் கொண்டு சைக்கிளில் வேகமாக வரும் போது செயின் கழன்று விழுகிறது. அதையும் சமாளித்துக் கொண்டு வரும் போது தலைமை போலீஸ்காரன் வழிமறிக்கிறான். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீஸ்காரன் ஆத்திரத்தில் சைக்கிளை பிடுங்கிக் கொள்கிறான்.

பெட்டோ தொட்டியை தோளில் ஏற்றிக் கொண்டு வேகவேகமாக ஓடி வருகிறான். போப் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இவனுடைய மனைவியும் மகளும் தவிப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெட்டோ கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவருவது தொலைக்காட்சியில் தெரிகிறது. ஒருவழியாக தொட்டியை இறக்கி பொருத்தி வைக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் போப்பின் உரை முடிந்து மக்கள் கலைய ஆரம்பிக்கிறார்கள். பெட்டோ ஒவ்வொருவரிடமும் சென்று 'கழிவறையை உபயோகப்படுத்த வேண்டுமா' என்று கெஞ்சுகிறான். எவரும் அதற்குத் தயாராக இல்லை. மகள் அதைப் பார்த்து அழுகிறாள்.

***

ஊடகங்கள் சொன்னபடி அதிக கூட்டம் வருவதில்லை.  உள்ளுர் மக்கள் தவிர வெளியில் இருந்து மொத்தமே நானுாறு நபர்கள்தான் வந்திருந்தார்கள். மக்கள் தயார் செய்திருந்த உணவுப் பொருட்கள் அதிகம் விற்காமல் வீணாக,  ஊரே சோகத்தில் ஆழ்கிறது. ஆனால் போப் உரையைக் கேட்க அதிக நபர்கள் வந்ததாக செய்தித்தாள்கள் சொல்கின்றன.

பெட்டோ மறுநாள் சைக்கிள் இல்லாமல் நடந்து  பணிக்குச் செல்லும் போது, அதுவரை அவனுடன் வர மறுத்திருந்த மகளும் கூட  நடந்து செல்வதோடு படம் நிறைவுறுகிறது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: