Monday, May 18, 2020

The Kid with a Bike (2011) - 'சிறுவனும் சைக்கிளும்'






அன்பிற்காக ஏங்கும் ஒரு முரட்டுத்தனமான சிறுவனின் மன மாற்றத்தை அழகாக விவரிக்கிறது இந்த பிரெஞ்சு திரைப்படம். சிறுவனின் அற்புதமான நடிப்பு. படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.

**

சிறுவர்களுக்கான அடைக்கல வசிப்பிடத்தில் இருப்பவன், 12 வயது சிறில். தனது தந்தையைக் காண வேண்டும் என்று பாதுகாவலர்களிடம் அடம் பிடிக்கிறான். முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

எவரும் கவனிக்காத ஒரு சமயத்தில் அங்கிருந்து தப்பி தன்னுடைய வீட்டிற்கு வருகிறான். அங்கு எவரும் இருப்பதில்லை. அவனுக்குப் பிரியமான சைக்கிளும் இருப்பதில்லை. அவனைத் தேடி வரும் பாதுகாவலர்கள், ‘அவனது தந்தை எங்கேயோ சென்று விட்டார்’ என்று புரிய வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவன் நம்புவதாயில்லை.

இவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் சமந்தா என்கிற பெண்மணி அவனுடைய சைக்கிளை திரும்பத் தருகிறாள். சிறிலின் அப்பா அதை விற்றிருக்கிறார். ‘என் அப்பா அப்படிச் செய்ய மாட்டார். எவரோ திருடி விற்றிருக்க வேண்டும்’ என்று அப்போதும் தன் தந்தையை விட்டுத் தராமல் பேசுகிறான். திரும்பக் கிடைத்த சைக்கிளை மகிழ்ச்சியுடன் ஓட்டுகிறான். அவனுடைய உறுப்புகளில் ஒன்று போவே இணைந்திருக்கிறது சைக்கிள்.

**

மற்றவர்களுக்கு அடங்காத சிறில், சமந்தாவின் அன்பிற்கு இணங்குகிறான். “வார இறுதி நாட்களில் உங்கள் வீட்டிற்கு வந்து தங்கிக் கொள்ளட்டுமா?’ என கேட்கிறான். சமந்தா சம்மதிக்கிறாள். அங்கும் சிறிலின் பிடிவாதக் குணங்கள் தலைதூக்குகின்றன. தந்தையைக் காண வேண்டுமென்கிற ஏக்கம்தான் பிரச்சினைக்கு காரணம் என்று உணர்கிற சமந்தா, அவனுடைய தந்தையின் புதிய முகவரியைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறார்.

ஆனால் மகனைக் காணும் தந்தை பிடிப்பில்லாமல் விலகலாகவே பேசுகிறார். ‘எப்ப என்னை வந்து கூட்டிட்டுப் போவீங்க?’ என்று சிறில் கேட்பதற்கு நேரிடையாக பதில் சொல்வதில்லை. “இயன்றால் போன் செய்கிறேன். இங்கு நானே சிரமத்தில் இருக்கிறேன். இப்ப கிளம்பு’ என்று துரத்துகிறார். பின்பு சமந்தாவை தனியாக அழைத்து ‘அவனை இனி என்னால் பார்த்துக் கொள்ள முடியாது. அவன் ஹோமிலேயே இருக்கட்டும். இதை அவனிடம் சொல்லி விடுங்கள்’ என்கிறார்.

இந்த கசப்பான உண்மையை சிறிலே நேரிடையாக தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கும் சமந்தா, ‘நீங்களே அவனிடம் சொல்லுங்கள்’ என்கிறார். ‘நீ இனிமேல் என்னைத் தேடி வராதே” என்று தந்தை சொல்ல, சிறில் மனம் உடைந்து போய் அழுகிறான்.

**

தந்தையின் நிராகரிப்பின் வேதனையில் இருக்கும் சிறிலை மகிழ்ச்சிப்படுத்த தன்னால் ஆன முயற்சிகளை செய்கிறார் சமந்தா. ஆனால் இன்னமும் மூர்க்கமானவனாக மாறுகிறான் அவன்.

நிழலான காரியங்களைச் செய்யும் ஓர் இளைஞனுடன் சிறிலுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அவனுடைய நடவடிக்கைகள் சிறிலுக்குப் பிடித்துப் போகிறது. ‘அவனுடன் சேராதே’ என்று தடுக்கிறாள் சமந்தா. இவன் கேட்பதாயில்லை.

அந்த இளைஞன், வழிப்பறிக் கொள்ளை செய்வது தொடர்பாக சிறிலுக்கு பயிற்சி தருகிறான். சம்பவத்தை நிகழ்த்தும் நாள் வருகிறது. ஏதோ விபரீதம் என்பதை உள்ளுணர்வால் உணரும் சமந்தா, அந்த நாளின் இரவில் சிறில் வீட்டை விட்டுப் போகாமல் தடுக்க முயல, அவளை கத்தியால் காயப்படுத்தி விட்டு சிறில் ஓடிப் போகிறான்.

**

பயிற்சி பெற்றபடி மறைந்திருந்து வரும் ஆளை தலையில் தாக்க அவர் மயங்கி விழுகிறார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரின் மகன் அங்கு வர, அவன் தலையிலும் ஒரு போடு போடுகிறான் சிறில். அவனும் மயக்கமாக, பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இளைஞனிடம் கொண்டு போய் தருகிறான்.

தாக்கப்பட்டவரின் மகன், சிறிலின் முகத்தைப் பார்த்து விட்டதால் அச்சமடையும் இளைஞன் பணத்தின் ஒரு பகுதியை இவனிடம் தந்து விட்டு ‘இதற்கு நீதான் பொறுப்பு. எவரிடமும் என் பெயரை சொல்லாதே’ என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறான்.

சிறில் பணத்திற்காக இந்தச் சம்பவத்தை செய்யவில்லை என்றாலும் அதை எடுத்துக் கொண்டு போய், தன் தந்தையிடம் தருகிறான். ‘என்னை ஜெயிலுக்கு அனுப்பப் பார்க்கிறாயா?” என்று பணத்தை விட்டெறிகிறார் அவர்.

**

நிலைகுலைந்து போகும் சிறில், திரும்பவும் சமந்தாவின் வீட்டிற்கு வருகிறான். அவளிடம் மனதார மன்னிப்பு கேட்கிறான். ஆனால் காவல்துறை அவனைத் தேடுவதாய் சொல்லி சமந்தா அழைத்துப் போகிறாள்.

தாக்கப்பட்ட நபருக்கும் சிறில் தரப்பிற்கும் இடையே ஓர் அதிகாரியின் முன்னால் பேச்சுவார்த்தை நடக்கிறது. கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை  தவணை முறையில் தந்து விடுவதாக சமந்தா சொல்கிறார். ‘தாக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேள்’ என்று அதிகாரி சொல்ல சிறில் மன்னிப்பு கேட்கிறான். ‘உங்கள் மகனிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், அவன் வரவில்லையா” என கேட்க ‘அவன் உன்னை மன்னிக்கத் தயாராக இல்லை’ என்கிறார்.

**

மறுநாள் சைக்களில் செல்லும் சிறிலை, தாக்கப்பட்டவரின் மகன் பார்த்து விட்டு துரத்துகிறான். சிறில் பயந்து போய் ஒரு மரத்தில் ஏறிக் கொள்ள, கல்லைத் தூக்கி அடிக்கிறான். சிறில் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட அவன் இறந்து விட்டானோ என்று பயப்படுகிறான். ஆனால் மயக்கம் கலைந்து சிறில் அமைதியாக எழுந்து செல்வதோடு படம் நிறைகிறது.

அவன் பழைய முரட்டுத்தனமான சிறில் இல்லை என்பதை இறுதிக் காட்சி உணர்த்துகிறது. சம்பந்தமில்லாத சிறுவனுக்கு சமந்தா தரும் நிபந்தனையில்லாத அன்பு நெகிழ வைக்கிறது.

பெற்றோர்களின் பிரிவால் உரிய வயதில் அன்பும் ஆதரவும் கிடைக்காத, சிறார்கள், வன்முறையாளர்களாக பாதிப்பு அடைவதை இத்திரைப்படம் சொல்கிறது. ஆதரவற்ற சிறுவர்களை, நல்ல குடிமகன்களாக ஆக்க மேற்கத்திய நாடுகள் உருவாக்கும் சமூக ஏற்பாடுகள், நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றன.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: