Wednesday, May 20, 2020

Rams (2015) - 'இரண்டு கிழவர்களும் சில ஆடுகளும்'




மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல் போன்ற அசைவ உணவு வகைகளைத் தாண்டி விலங்குகள், பறவைகளின் மீது பொதுவாக நகரத்து மனிதர்களுக்கு எவ்வித பந்தமும் இல்லை. ஆனால் கிராமத்து மனிதர்களால் அப்படியிருக்க முடியாது. பொருளாதாரக் காரணங்களைத் தாண்டியும் வளர்ப்பு உயிரினங்களை தங்களின் வீட்டு உறுப்பினர்களாகவே கருதுவார்கள்.

அப்படியொரு கிழவரைப் பற்றிய உணர்வுபூர்வமான திரைப்படம் இது. ஐஸ்லாந்து நாட்டுத் தயாரிப்பு. தான் வளர்க்கும் ஆடுகளை காப்பாற்ற தன் உயிரையும் பணயம் வைக்கிறார் ஒரு கிழவர்.

**

ஐஸ்லாந்து நாட்டின் ஒரு பள்ளத்தாக்கு. ஆடு வளர்ப்பு சில குடும்பங்களின் வருமானம் ஈட்டும் தொழில். அங்கு இரண்டு கிழவர்கள் அருகருகே வசிக்கிறார்கள். ராம் சகோதரர்கள். குடும்பத் தகராறு காரணமாக இருவரும் 40 வருடங்களுக்கும் மேலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. இருவருமே திருமணம் செய்து கொள்ளாத தனிக்கட்டைகள்.

சிறந்த முறையில் வளர்க்கப்படும் ஆட்டிற்கான விருது, அந்த வருடம் அண்ணனிற்கு கிடைக்கிறது. தம்பிக்கு கோபம் வருகிறது. ‘அப்படியென்ன வளர்த்து கிழிச்சிட்டான்’ என்று ரகசியமாக சென்று விருது பெற்ற ஆட்டைப் பரிசோதிக்கிறார். அதற்கு Scrapie எனப்படும் தொற்றுநோய் இருக்குமோ என சந்தேகம் வருகிறது. விலங்குகளின் மூளை நரம்புகளைப் பாதித்து மரணமடையச் செய்யும் ஆபத்தான தொற்று நோய் அது. குணப்படுத்த முடியாதது.

அந்த நோய் இருப்பது உறுதியானால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆடு வளர்ப்பாளர்களுக்கும் அது ஒரு கெட்ட செய்தி. ஏனெனில் தொற்று நோய் பரவாமல் இருக்க அரசாங்கம் அனைத்து ஆடுகளையும் கொன்று புதைத்து விடும்.

**

தம்பி கிழவருக்கு கோபம் போய் கவலை வருகிறது. இந்த விஷயம் மெல்ல பரவி அரசு தரப்பில் இருந்து வந்து பரிசோதனை செய்கிறார்கள். அந்த நோய் இருப்பது உறுதியாகிறது. ஆடு வளர்ப்பாளர்கள் அனைவரும் சோகமாகின்றனர். தம்பியால்தான் இந்தச் செய்தி வெளியே தெரிந்தது என்று அண்ணன் கிழவர் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார். தம்பி வீட்டின் நிலவறையில் பதுங்கி உயிர் தப்பிக்கிறார்.

அண்ணன் கிழவர் தன் ஆடுகளை இழக்க விரும்பாமல் கலாட்டா செய்ய போலீஸ் வந்து அழைத்துப் போகிறது. தான் வளர்க்கும் ஆடுகள், மற்றவர்களின் கையால் கொல்லப்பட விரும்பாமல் மனதை கல்லாக்கிக் கொண்டு தானே கொன்று போடுகிறார் தம்பி. அரசு மருத்துவர்கள் வந்து அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

**

ஆடுகளை இழந்த துக்கம் தாங்காமல் எப்பவும் மதுவும் கையுமாக இருக்கிறார் அண்ணன் கிழவர். அவ்வப்போது தம்பி வீட்டில் வந்து புலம்புவதும் வழக்கமாகிறது. ஒருமுறை பனியில் விழுந்து கிடக்கும் அண்ணனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றுகிறார் தம்பி. இதனால் பரஸ்பர வெறுப்பு மறைந்து சற்று இணக்கம் தோன்றுகிறது. இருவருக்குள்ளான சொத்து தகராறு ஒன்றும் தீர்கிறது. என்றாலும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தம்பி கிழவர் மிக மிக ரகசியமாக செய்திருக்கும் காரியம் ஒன்றிருக்கிறது. அவர் அனைத்து ஆடுகளையும் கொல்வதில்லை. அவரின் குடும்பப் பெருமையை காப்பாற்றும் விதமாக ஆண் ஆடு ஒன்றையும் சில பெண் ஆடுகளையும் தன் வீட்டில் நிலவறையில் ரகசியமாக வளர்க்கிறார். அவற்றின் வளர்ச்சியை நினைத்து பெருமையடைகிறார். வீட்டிற்குள் எவரையும் அநாவசியமாக அனுமதிப்பதில்லை.

ஒரு நாள் அண்ணன் கிழவர் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகளைப் பார்த்து விட அவரை எச்சரிக்கிறார் தம்பி.

**

ஆடுகளை அப்புறப்படுத்தியது மட்டுமல்லாமல் அது சார்ந்த அனைத்துப் பொருட்களையும் எரிக்கச் சொல்கிறது அரசாங்கம். ஆடு வளர்க்கப்பட்ட இடங்களில் எல்லாம் மருந்து அடிக்கிறது. அந்தப் பணியைச் செல்லும் இளைஞன், தம்பி கிழவரின் வீட்டிற்கு வந்து கழிப்பறையை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கிறான். அரை மனதுடன் சம்மதிக்கிறார் கிழவர்.

ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக் கொள்ளும் சத்தமும் அவற்றின் குரல்களும் இளைஞனுக்கு கேட்கின்றன. நன்றி சொல்லி விட்டு அவசரமாக வெளியேறுகிறான். தம்பி கிழவருக்கு பயம் வந்து விடுகிறது. நேராக அண்ணன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுகிறார். “மிக அவசரம். நீதான் உதவ வேண்டும்”. ஆடு வளர்ப்பாளராக அண்ணனிற்கும் அதன் முக்கியத்துவம் தெரியும் என்பதால் எல்லா ஆடுகளையும் தன் வீட்டிற்குள் எடுத்துச் சென்று ஒளித்து வைக்க அனுமதிக்கிறார். அரசு அதிகாரிகள் தம்பியின் வீட்டில் சோதனை செய்ய வந்து ஆடுகளை காணாமல் திகைக்கிறார்கள்.


**

அவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் என்பதால் இரு சகோதர்களும் இணைந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். ஆடுகளை அழைத்துச் சென்று மலைப்பகுதியில் ஒளித்து வைத்து விடலாம். பிறகு அழைத்து வரலாம் என்று தீர்மானிக்கிறார்கள். ஆனால் அது பனிக்காலம் என்பதால் அந்தப் பயணம் ஆபத்தானதாக அமையலாம். இருந்தாலும் ஆடுகளை அழைத்துக் கொண்டு இரவு நேரத்தில் கிளம்புகிறார்கள்.

வழியில் பனிப்புயல் அடிக்கிறது. வண்டி பழுதாகிறது. அடிக்கிற புயலில் கண்ணிற்கு எதுவும் தெரிவதில்லை. இடையில் தம்பி காணாமற் போகிறார். அண்ணன் கிழவர், தம்பியின் பெயரைக் கத்திக் கொண்டே தேடுகிறார். புயல் சற்று ஓய்ந்தவுடன் தம்பி ஓரிடத்தில் மயங்கி விழுந்து கிடப்பது தெரிகிறது. குளிரில் உடல் விறைத்திருக்கிறது.

பனியை வெட்டியெடுத்து அருகே ஒரு பதுங்கு குழியை அமைக்கிறார். அதன் உள்ளே தம்பியின் உடலை எடுத்துச் செல்கிறார். உடலை கதகதப்பாக்குவதற்காக ஆடையைக் களைந்து தன் உடம்புச் சூட்டை தம்பியின் உடலுக்கு பரவச் செய்கிறார். 40 வருட பகைமை அந்த அணைப்பில் மறைந்து போவதுடன் படம் நிறைகிறது.

**

அபாரமான ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கொண்ட இந்த திரைப்படம், விலங்கிற்கும் மனிதனுக்குமான உன்னதமான உறவையும் பாசத்தையும் நெகிழ்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது. Grímur Hákonarson அற்புதமாக இயக்கியிருக்கிறார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: