Monday, May 11, 2020

Panchayat (2020) Web Series





‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிமிடங்களுக்குத்தான் இருக்கிறது. எனவே ஒரே நாளில் கூட பார்த்து விடலாம்.

இது பரபரப்பான தொடர் கிடையாது. மாறாக மென் நகைச்சுவையும் இயல்பும் ஒரு மெல்லிய சரடு போல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் தொடர். எனவே அத்தகைய படைப்புகளை ரசிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ‘Malgudi days’ போல.

ஒரு கிராமத்தை முதன்முறையாக எதிர்கொள்ளும் நகரத்தைச் சேர்ந்த நவீன இளைஞனின் சுவாரசியமான அனுபவங்கள் இதில் பதிவாகியிருக்கின்றன.

**

அபிஷேக் திரிபாதி, மால் கலாசாரத்தில் வளர்ந்திருக்கும் ஒரு நகர இளைஞன். படிக்கிற காலத்தில் அதைச் சரியாக செய்யாமல் நிறைய ஓபி அடித்ததால் சரியான வேலை கிடைக்கவில்லை. எனவே அது சார்ந்த தாழ்வுணர்ச்சியிலேயே இருக்கிறான். இந்தச் சமயத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து செக்ரட்டரியாக பணிபுரியும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கிறது. ரூ.20000 சம்பளம்.‘கால் காசு என்றாலும் அரசாங்க காசு’ என்று ஒரு காலத்தில் அரசு வேலைக்கு பெரிய மதிப்பு இருந்தது.

‘ஒரு கிராமத்துப் பணிக்கா.. செல்வது என்று அபிஷேக் தத்தளிக்கிறான். ஆனால் வேறு வழியில்லை. “அடேங்கப்பா.. நீ கொடுத்து வெச்சவன்டா.. இந்தியாவோட ஆன்மாவையே சந்திக்கப் போகிறாய்” என்று கூட இருக்கும் நண்பன் உசுப்பேற்றிக் கொண்டே இருக்கிறான். அவன் பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறவன். பின் ஏன் சொல்ல மாட்டான்?

‘சரி.. முதலில் இந்த வேலையில் சேருவோம்.. பிறகு CAT தேர்வு எழுதி நல்ல வேலைக்கு விண்ணப்பிப்போம்’ என்கிற முடிவுடன் அரை மனதாக அந்தக் கிராமத்திற்கு கிளம்புகிறான்.

முதல் நாளே அபிஷேக்கிற்கு நல்ல முகூர்த்த நாளாக அமைகிறது. பஞ்சாயத்து அலுவலகத்தின் சாவியை அதன் தலைவர் ‘ஆய்’ போகும் போது எங்கோ தொலைத்து விடுவதால் அதைத் தேடி அவர் ‘ஆய்’ சென்றவிடமெல்லாம் தேடுகிறார்கள். ‘கற்றோர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு’ என்பது இதுதான் போல. அபிஷேக்கிற்காக வைத்த இனிப்பு பண்டத்தை அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞனும் பஞ்சாயத்து துணைத் தலைவரும் கூட்டுக் களவாணித்தனத்தோடு தின்று விடுகிறார்கள்.

அபிஷேக்கிற்கு இன்னொரு அதிர்ச்சியான தகவலும் தெரியவருகிறது. உண்மையில் பஞ்சாயத்து தலைவர் என்பது ஒரு பெண்மணி. ஆனால் இந்திய மரபுப்படி ரிசர்வ் கோட்டா தேர்தலில் மனைவியின் முகத்தை மட்டும் காட்டி விட்டு அவருடைய கணவர்தான் பஞ்சாயத்து தலைவராக அதிகாரத்தில் இருக்கிறார்.

ஒரு இந்தியக் கிராமத்திலுள்ள அறியாமை, மூடத்தனம் தொடர்பான காட்சிகள் இப்படியாக மென்நகைச்சுவையுடன் பயணிக்கின்றன.

**

இந்தத் தொடரில் எனக்கு அறிமுகமான முகங்கள் என்று பஞ்சாயத்து தலைவராக நடித்திருந்த ரகுபிர் யாதவ் மற்றும் அவருடைய மனைவியான நீனா குப்தாவை மட்டுமே சொல்ல வேண்டும். மற்ற அனைவரும் புதுமுகங்கள்.

வெளியில் வீறாப்பாக உலா வந்தாலும் வீட்டில் மனைவியின் குரலுக்கு அஞ்சி நடுங்கும் ‘கைப்புள்ள’ பஞ்சாயத்து தலைவராக ரகுபிர் சிறப்பாக நடித்திருந்தார். போலவே அவரை அதட்டி உருட்டும் மனைவியாக நீனா குப்தாவின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

தொடரின் நாயகனான ஜித்தேந்திர குமாரின் நடிப்பும் அருமை. நகரத்துச் சூழலில் வளர்ந்து அரசாங்கப் பணிக்காக கிராமத்து மூலையில் துரத்தியடிக்கப்படும் இளைஞனின் நடைமுறைச் சிக்கல்களையும் சங்கடங்களையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருந்தார்.

பஞ்சாயத்து துணைத் தலைவராக நடித்த ஃபைசல் மாலிக்கின் நடிப்பும் அருமை. பஞ்சாயத்து தலைவரை அனுசரித்தும் அதே சமயத்தில் தனக்கான அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் இவர் காட்டும் அலைச்சலும் நகைக்க வைக்கின்றன.

பஞ்சாயத்து அலுவலகத்தின் உதவியாளராக நடித்திருக்கும் சந்தன் ராயை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டும். நடிகர் சிவகார்த்திகேயனை நினைவுப்படுத்தும் தோற்றத்தைக் கொண்ட இவர், கிராமத்து தலைவர்களுக்கு மிக அனுசரணையானவராக இருக்கிறார். அதே சமயத்தில் அபிஷேக் சிக்கலில் மாட்டித் தவிக்கும் போதெல்லாம் உதவி செய்ய முன் வருகிறார்.

**

பேய் பிடித்த மரம் ஒன்று இரவில் துரத்துவதாக கிராமத்து மக்கள் நடுங்கிக் கொண்டிருப்பது, ‘மாட்டுக்கண்ல எம்.ஜி.ஆர் தெரியறாராம்’ என்று போகும் அதன் பின்னணி விசாரணை, பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கணினி மானிட்டரை ‘டிவி’ என்று நினைத்து எவரோ திருடிக் கொண்டு போவது, தான் அவமானப்படுத்தப்பட்டதாக கருதும் மாப்பிள்ளை அதன் பிறகு அபிஷேக்கிற்கு அளிக்கும் தண்டனை, குடும்பக் கட்டுப்பாடு வாசகங்களை அவமதிப்பாக எடுத்துக் கொண்டு கொந்தளிக்கும் கிராமத்து மக்களின் அறியாமை போன்ற காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன.

ஐடி நண்பன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ‘பார்ட்டி’ கொண்டாட்ட புகைப்படத்தைக் கண்டு காண்டாகி தானும் பியர் பாட்டில்களை வாங்கி அருந்தி உறக்கத்தில் கணினித் திரை களவாடுதலுக்கு காரணமாகும் அபிஷேக், பஞ்சாயத்து தலைவர் அது தொடர்பாக திட்டும் போது ‘எனக்கென யாரும் இல்லையே.. உனக்கது தோன்றவில்லையே…” என்பது போல் வெடிக்கும் காட்சி அற்புதம்.

அவனுடைய தனிமையைப் புரிந்து கொண்டு அன்று இரவே பியர் பாட்டில்களுடன் கூடி கும்மியடிக்கும் பஞ்சாயத்து ஆசாமிகள் தொடர்பான காட்சியில் கிராமத்து மக்களின் அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.

போலவே ஒரு சில்லறைச் சண்டையில் அபிஷேக் மாட்டிக் கொண்ட பிறகு தொடரும் நகைச்சுவைகளும், தன் மகளை அபிஷேக்கிற்கு திருமணம் செய்ய உத்தேசிக்கும் பஞ்சாயத்து தலைவர் அவனுடைய புத்திசாலித்தனத்தை மறைமுகமாக சோதிக்கும் காட்சிகளும் புன்னகையை வரவழைக்கின்றன.

**

இதன் டைட்டில் இசை ‘Narcos’ சீரிஸின் இசையை நினைவுப்படுத்துகிறது. எனக்கு கிராமத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் இதில் காட்டப்படும் கிராமம் தொடர்பான காட்சிகள் அசலானதாக இல்லை என்று மட்டும் சொல்ல முடியும்.

பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடம், தலைவரின் வீடு போன்ற குறிப்பிட்ட இடங்களே திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றன. மேலும் இதில் வரும் நடிகர்களும் ஒப்பனை கூட்டப்பட்டவர்களாக இருக்கிறார்களே ஒழிய, அசலான கிராமத்து முகங்கள் எதுவும் இல்லை. டைட்டிலில் காட்டப்படும் காட்சிகளின் இயல்பான தன்மை கூட தொடரில் வரும் காட்சிகளில் இல்லை.  இந்தத் தொடரின் பின்னடைவு இது.

பஞ்சாயத்து செக்ரட்டரிக்கு உண்மையில் அதிகாரம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவனுடைய அனுபவமின்மை காரணமா என்று தெரியவில்லை. பாவம் அபிஷேக், கிராமத்தார்களின் திருமணத்திற்கு நெய் டப்பா தூக்கிச் செல்வது முதல் பல்வேறு விதங்களில் அல்லாடுகிறான்.

உண்மையில் இதன் இறுதி எபிஸோட் அருமையானது. இந்தத் தொடரின் சாரம் என்று குறிப்பிட்டு விடலாம். உண்மையான பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் பெண் என்பதால் வீட்டோடு முடங்கிக் கிடப்பவரிடம் அவரது பணியின் முக்கியத்துவத்தை அபிஷேக் குத்திக் காட்டுவதும் தேசிய கீதம் பாட பயிற்சியளிப்பதும் சிறப்பான காட்சிகள். கணவரை அதட்டி மிரட்டும் நீனா குப்தா, பஞ்சாயத்து தலைவராக இல்லாதது காரெக்ட்டர் ஸ்கெட்ச்சின் குறையாக தெரிகிறது. கணவருக்கு அஞ்சி நடுங்குபவர்தானே அப்படி வீட்டோடு இருப்பார்?

ஒரு நல்ல சிறுகதையின் இறுதி வரி போல இந்தத் தொடரின் கடைசி காடசி ஓர் அருமையான முத்தாய்ப்புடன் நிறைவடைகிறது.

ஒளிப்பதிவு மிகத் தரமானதாக இருக்கிறது. போலவே பின்னணி இசையும்.

ஒரு இந்தியக் கிராமம் தொடர்பான மென் நகைச்சுவை புனைவை காட்சிகளின் வடிவில் பார்க்க வேண்டுமானால் இந்தத் தொடரை அவசியம் பார்க்கலாம்.. பார்வையாளர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர் IMDB-ல் 8.9 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அத்தனை தகுதியானதா என்பது சந்தேகமே. ஆனால் சுவாரசியமானதாக இருந்தது.




suresh kannan

No comments: