Wednesday, May 06, 2020

Nebraska (2013) - நெடுஞ்சாலையில் ஒரு கிழவர்






வயதானவர்கள் இளைய தலைமுறையினரால் தேவையில்லாத லக்கேஜ் போல ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அனுபவம் என்கிற பலவருட மதிப்பு மிக்க சொத்து முதியவர்களிடம் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது ஒரு புறம்.

வயதானவர்களின் சில எளிய ஆசைகளைக் குறித்து "பெரிசிற்கு வந்த ஆசையைப் பாருய்யா" என்று கிண்டலடிப்பது இன்னொரு புறம் . உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளை துறந்து ஓடி ஓடி உழைத்த நபர், தன் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கிழவர் குழந்தைத்தனமான விருப்பத்துடன் ஐஸ்கீரீம் சாப்பிட ஆசைப்பட்டு அது அவரது பிள்ளைகளுக்கு சிரிப்பும் எரிச்சலும் தருகிறதென்றால் பிரச்சினை பெரியர்வர்களிடமல்ல.

அப்படியொரு விநோதமான விருப்பத்தைக் கொண்ட ஒரு முதியவரைப் பற்றிய திரைப்படம் Nebraska. கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அது என்ன விநோதம் என்று பார்க்கலாம்.

***

மெயின்ரோடில்  ஒரு கிழவர் தள்ளாடி தள்ளாடி நடந்து செல்வதைப் பார்த்து அவரை விசாரிக்கிறார் காவல்அதிகாரி. பிறகு அவரை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறார். "ஏம்யா.. உமக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு..?" என்று ஏக வசனத்தில் ஆரம்பித்து திட்டித் தீர்க்கிறார் அவரது மனைவி. பிள்ளைகளும் இணைந்து கொள்கிறார்கள். கிழவருக்கு எதற்காக இந்த அர்ச்சனை? விஷயம் இதுதான்.

பத்திரிகையொன்று தனது சந்தாதாரர்களுக்காக ஒரு பரிசுத்திட்டத்தை அறிவித்திருக்கிறது. விளம்பரச் சீட்டில் உள்ள எண் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு மில்லியன் டாலர் பரிசு. இது வழக்கமான வணிக டுபாக்கூர் தந்திரம்.

ஆனால் அந்தப் பரிசு தனக்கு உறுதியாக கிடைத்து விட்டது என்று நம்புகிறார் கிழவர். அதை  குடும்பத்தில்  உள்ள எவருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாததால் நெடுந்தூரத்தில் வேறொரு நகரத்தில் இருக்கும் அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு நடந்தே செல்வதென்று அவ்வப்போது கிழவர் கிளம்பி விடுவதும் எவராவது அவரைத் தடுத்து திரும்ப வீட்டிற்கு அழைத்து வருவதும் வாடிக்கை.

கிழவரின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மனைவியும் மூத்த மகனும் இவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் இளைய மகன் டேவிட்-க்கு  மட்டும் இவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கிழவரின் விருப்பப்படி ஒரு நடை அந்த பத்திரிகை அலுவலகத்திற்கே அழைத்துச் சென்று விட்டால் இந்தப் பைத்தியம் தந்தைக்கு தெளிந்து விடும் என நம்புகிறான்.

 'உங்க அப்பனை மாதிரியே உனக்கும் கிறுக்கு பிடிச்சிருக்காடா?' என்கிற தாயின் ஆசியோடு கிழவரை அழைத்துக் கொண்டு ஒரு நாள் கிளம்புகிறான்.

***

ஒரு மில்லியன் டாலரை கோணிப்பையில் போட்டு வாங்கச் செல்லும் இந்தப் பயணத்தின் வழியில் கிழவர் பிறந்த ஊருக்கும் சென்று அவரின் உறவினர்களையும் அப்படியே பார்த்து வருவது என்று ஏற்பாடு. செல்லும் வழியிலும் மகனுக்கும் தகப்பனுக்கும் இடையே வாக்குவாதமும் கிழவர் மறைந்து காணாமற் போய் சாலையில் கண்டுபிடிக்கப்படும் வரலாறும் தொடர்கிறது. ஒருவழியாக உறவினர் வீட்டிற்குச் செல்கிறார்கள். கிழவரின் மனைவியும் மூத்த மகனும் பிறகு அங்கு வந்து அவர்களுடன் இணைகிறார்கள்.

பரிசுப்பணம் என்பது பொய் என்பது தெரிந்தே இருந்தாலும் 'யாரிடம் அதைப் பற்றி சொல்லாதே' என்று எச்சரித்தே அழைத்துச் செல்கிறான் மகன். ஆனால் கிழவர் சொல்லி விடுகிறார். அது சிறிய நகரம் என்பதால் ஊரெங்கும் இந்தச் செய்தி பரவி கிழவருக்கு ஏறத்தாழ கதாநாயக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. 'உனக்கென்னப்பா ஜாலி' என்று ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள். ஆனால் கூடவே வில்லங்கமும் வருகிறது.

கிழவரின் ஒரு பழைய நண்பனொருவர் டேவிட்டிடம் "தோ.. பாருப்பா.. உன் அப்பா இளமைப்பருவத்தில் என்னிடம் கடன் வாங்கிய பணம் பாக்கி இருக்கிறது. எடுத்து வை" என்று மிரட்டுகிறார். கிழவரின் உறவினர்களும் பங்குப் பணத்திற்காக சண்டையிடுகிறார்கள். ஒரே கலாட்டாவாகி விடுகிறது. "யோவ். மண்ணாந்தைகளா. பரிசுப் பணமும் இல்ல. ஒண்ணுமில்ல. பெரிசுக்கு நட்டு கழண்டு போச்சுய்யா" என்று கிழவரின் குடும்பத்தினர் கோரஸாக கத்தினாலும் எவரும் நம்ப மறுக்கிறார்கள் "அய்.. யாராச்சும் சும்மா.. இவ்ள தூரம் வருவாங்களா?" என்று சந்தேகப்படுகிறார்கள்.

அது தந்தையின் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் கிழவரின் இளமைக்கால ரகசியங்கள் சிலவும் மகன் டேவிட்டிற்கு தெரிய வருகிறது. அவருடைய காதலியொருத்தி இருந்ததும் அவளை திருமணம் செய்ய முடியாமல் போன விஷயமெல்லாம் வெளியே வருகிறது.. தகப்பனின் குடிப்பழக்கத்தின் பின்னணியை ஒருவாறு யூகிக்க முயல்கிறான் மகன். அவர் மீது பரிதாபம் தோன்றுகிறது.

இதற்கிடையில் இவரிடமுள்ளது வெறும் விளம்பரச்சீீட்டு மட்டுமே என்கிற உண்மை தெரிய வந்து நண்பர்கள் எல்லோரும் கிழவரை நோக்கி சிரித்து மகிழ்கிறார்கள். டேவிட் அவமானமாக உணர்கிறான்.

***

இந்தக் கலாட்டாவின் இடையில் கிழவர் ஓரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விட டேவிட் எரிச்சல் தாங்காமல் கேட்கிறான். "அப்படியே இந்தப் பணம் கிடைச்சாலும் என்னதான் செய்யப் போறீங்க?"  கிழவர் சொல்கிறார். "ஒரு புது டிரக்கும், ஒரு கம்ப்ரஸ்ஸர் மெஷினும் வாங்கணும்". இரண்டுமே கிழவர் தன் இளமைப் பருவத்தில் இழந்தவை. அந்த ஏக்கம் வயதானவுடன் முளை விட்டு பெரிய மரமாக வந்து நிற்கிறது.

"அதுசரி. அப்ப கூட நிறையப் பணம் மிச்சமிருக்குமே?. ஏன் ஒரு மில்லியன் டாலர்?"என்று கேட்கிறான் டேவிட். "உங்க ரெண்டு பேருக்கும் ஏதாச்சும் பணம் வெச்சுட்டு போகணும்னு தோணுது" என்கிறார் கிழவர் தலையைக் குனிந்து கொண்டே. அதுவரை அவரை குடிகாரராகவும் கோமாளியாகவும் பார்த்த டேவிட் மிகவும் நெகிழ்ந்து போகிறான்.

எதிர்பார்த்தபடியே பத்திரிகை அலுவலகத்தில் 'இந்த எண்ணுக்கு பரிசில்லை' என்று ஒரு தொப்பியை பரிசாக தருகிறார்கள். கிழவர் ஒரு மாதிரியாக உண்மையை ஏற்றுக் கொண்டு திரும்புகிறார். ஒரு புத்தம் புதிய டிரக்குடனும், கம்ப்ரஸ்ஸருடன் நிற்கிறான் மகன். 'என்னடா இது?" என்கிறார் கிழவர் "காரை வித்துட்டு இதை வாங்கிட்டேம்பா" என்கிறான் மகன்.

ஊருக்குத் திரும்பும் போது புத்தம் புதிய டிரக்கை அவருடைய பிறந்த ஊரின் தெரு வழியாக கிழவர் ஓட்டி வர நண்பர்கள், உறவினர்கள், பழைய காதலி என்று எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இதன் மூலம் அவர் பரிசுப் பணம் பெற்றது போன்ற பாவனையை உருவாக்கி அவர்களின் முகத்தில் கரியைப் பூசுகிறார் கிழவர்.

***

கிழவராக Bruce Dern நடித்திருக்கிறார். ஒரு பிடிவாதமான முதியவரின் உடல்மொழியையும்,  தளர்வு, ஏக்கம், நிராசை போன்ற உணர்வுகளையும் அச்சு அசலாக பிரதிபலித்துள்ளார். உங்கள் வீட்டு தாத்தாவை இவர் மூலம் நெருக்கமாக உணரலாம். கிழவரின் மனைவியாக நடித்துள்ளவரின் பங்கு ரகளையானது. படம் பூராவும் கிழவரை திட்டிக் கொண்டிருந்தாலும் ஒரு காட்சியில் அவர் காட்டும் அன்பு நெகிழ வைக்கிறது. இளைய மகனாக நடித்துள்ள Will Forte-ன் இயல்பான நடிப்பும் குறிப்பிடத்தக்கது. படத்தின் இயக்குநர் Alexander Payne.

கடந்த கால ஏக்கத்தை நினைவுப்படுத்தும் வகையில் முழுக்க முழுக்க கறுப்பு -வெள்ளையின் அழகிய ஒளிப்பதிவுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் முதியவர்களுடைய உலகின் ஒரு பகுதியை இளைய தலைமுறை அறிந்த கொள்ள உதவும்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

1 comment:

Avargal Unmaigal said...

பதிவின் முதல் 3 பாராக்கள் மனதை தொட்டு நெகிழ் செய்துவிட்டது.....