Sunday, May 31, 2020

Tickets (2005) - ‘டிக்கெட், டிக்கெட்'




இத்திரைப்படம் மூன்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டது. பயணச்சீட்டு எனும் பொதுவான விஷயம் இவற்றை இணைப்பதாக இருக்கிறது. இதன்  காட்சிகள் மொத்தமுமே ஓடும் ரயிலில் நிகழ்பவை. Ermanno Olmi, Abbas Kiarostami, Ken Loach ஆகிய மூன்று இயக்குநர்களின் பங்களிப்பில் உருவானது . மூன்று பகுதிகளுமே ஒவ்வொரு நோக்கில் உணர்வுபூர்வமான விஷயங்களைக் கையாள்கின்றன.

***

முதல் பகுதி: ரோமிற்குச் செல்லும் ரயில்.  இதில் பயணம் செய்கிறார் ஒரு விஞ்ஞானி. முதியவரான அவர், தன்னுடைய பயண ஏற்பாடுகளை திறமையாகச் செய்த இளம் பெண்ணை நினைத்துப் பார்க்கிறார். அவளால் வசீகரிக்கப்படுகிறார். அவளுடன் உரையாடிய சம்பவங்கள் பகற்கனவுகளுடன் இணைந்து மனதிற்குள் விரிகின்றன.

முதல் வகுப்பில் அமர்ந்திருக்கும் இவருக்கு எதிரேயுள்ள தடுப்பிற்கு பின்னால் அமர இருக்கை இல்லாமல் பரிதவிக்கும் எளிய மக்கள். அல்பேனியாவிலிருந்து வரும் அகதிகளின் குடும்பம் அதில் இருக்கிறது. சிறிய குழந்தையுடன் ஒரு தாய். தன்னுடைய பகற்கனவுகளின் இடையே தாயையும் பாலுக்காக அழும் குழந்தையையும் கவனிக்கிறார் விஞ்ஞானி. நின்று கொண்டிருக்கும் கூட்டத்திடம் ராணுவ அதிகாரி கடுமையாக நடந்து கொள்கிறான். குழந்தைக்காக தயார் செய்யப்படும் பாலை அவன் தவறுதலாக  தட்டி விட்டு விடுகிறான். குழந்தை பசியால் அழுகிறது.

வெதுவெதுப்பான பாலை 'ஆர்டர்' பெரியவர். மற்றவர்கள்  இவரை ஆச்சரியமாக பார்க்க, மெல்ல எழுந்து தடுப்பை கடந்து சென்று பால்  கோப்பையை தாயிடம் தருகிறார்.



***

இரண்டாவது பகுதி இது. ரயில் நின்று கடக்கும் ஒரு நிறுத்தத்தில் ஏறுகிறார் அந்த மூதாட்டி. அவருடன் ஓர் இளைஞன். மகனைப் போல தோன்றுகிறான்.  ஆனால் கிழவி அந்த இளைஞனை அடிமை போல நடத்துகிறார். இளைஞன் கழிவறைக்குச் சென்றிருக்கும் நேரத்தில் எதிர் இருக்கையில் ஒருவர் வந்து அமர்கிறார். மூதாட்டி பேசிக் கொண்டிருக்கும் மொபைல் போன் தன்னுடையது என்கிறார்.  இருவருக்கும் வாக்குவாதம் நீள்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு கிழவியின் மீதுதான் சந்தேகம் வருகிறது.

ரயில்வே அதிகாரியிடம் முறையிடப்படுகிறது. அவர் தன் மொபைல் போனிலிருந்து எதிர் இருக்கை நபரின் மொபைலுக்கு போன் செய்ய, அதற்கும் பக்கத்து இருக்கையில் போன் அடிக்கிறது. தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் அந்த ஆசாமி செல்கிறார். மூதாட்டிக்கு கோபத்திற்கு இடையில் துக்கமும் பொங்குகிறது. ராணுவ அதிகாரியாக பணிபுரிந்த  கணவனின் முதலாவது ஆண்டு நினைவுதின சடங்கிற்காக அவர் சென்று கொண்டிருக்கிறார்.

மறுபடியும் இன்னொரு கலாட்டா ஆரம்பமாகிறது. மூதாட்டியும் இளைஞனும் அமர்ந்திருக்கும் இருக்கைகள், தாங்கள் முன்பதிவு செய்தது என்று கூறி இரண்டு நபர்கள் வருகிறார்கள். மறுபடியும் வாக்குவாதம். 'அந்நியன்' திரைப்படத்தின் விக்ரம் போல 'ட்ட்டிஆர்' என்று அவர்கள் கூவ, ரயில்வே அதிகாரி பஞ்சாயத்திற்கு வருகிறார். மூதாட்டியின் பயணச்சீட்டுகளை சோதித்துப் பார்த்தால் அதே இருக்கை எண்கள். ஆனால் இரண்டாம் வகுப்பிற்கானது. கிழவி எழுந்து செல்ல மறுக்கிறார். இரக்கப்படும் டிக்கெட் பரிசோதகர், முதல் வகுப்பிலேயே ஒரு வசதியான இடத்தை ஒதுக்கித் தருகிறார்.

கிழவியுடன் வந்திருக்கும் இளைஞன் ரயிலில் பயணிக்கும் ஓர் இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறான். இளைஞன் பிறந்து வளர்ந்த பிரதேசத்தைச் சேர்ந்தவள் அவள். எனவே பழைய கதைகள், இளைஞனின் காதலி தொடர்பான சம்பவங்கள் உரையாடலில் வருகின்றன. ஆனால் இளைஞனை அவ்வப்போது அதிகாரத்துடன் அழைக்கும் கிழவி, 'ஏன் கூப்பிட்டவுடன் வரவில்லை' என்று கோபித்துக் கொள்கிறாள்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்குகிறது. கிழவிக்கு உடைமாற்ற உதவுகிறான் இளைஞன். அவன் பொறுமையுடன் உதவினாலும் கிழவி தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் எரிச்சல் தாங்காமல் அங்கிருந்து காணாமற் போய்  விடுகிறான். கிழவி அவனைத் தேடி அலைகிறார். தன்னுடைய சுமைகளை எப்படி இறக்குவது என தவிக்கும் அவருக்கு, முன்னர் செல்போனிற்காக சண்டை போட்ட நபர் உதவுகிறார்.

***

மூன்றாவது பகுதி: மூன்று இளைஞர்கள். ரோமில் நடக்கும் கால்பந்து போட்டியைக் காண்பதற்காக உற்சாகமாக செல்கிறார்கள். இதற்காக அவர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டிருக்கிறார்கள்..

அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் வழியில் தென்படுகிறான். அவனிடம் தங்கள் பயணத்தைப் பற்றி சொல்கிறார்கள். தங்களிடமிருக்கும் சாண்ட்விச்சை அவனுக்குத் தருகிறார்கள். தங்களின் இருக்கைக்கு வந்து மீண்டும் உற்சாகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அகதிக் குடும்பம் அந்த ஒற்றை சாண்ட்விச்சை தங்களுக்குள் பங்கு போட்டு சாப்பிடுவதைப் பார்த்ததும் கருணை சுரந்து தங்களிடம் மிகுதியாக உள்ள சாண்ட்விச்சுகளை தந்து விடுகிறார்கள்.

பயணச்சீட்டு பரிசோதகர் வருகிறார். மூன்று இளைஞர்களில் ஒருவனின் டிக்கெட் காணவில்லை. தனது பாக்கெட் முழுக்க தேடுகிறான். 'இந்தப் பயணத்தை பாழடிக்கிறாயே' என்று அவர்களுக்குள் சண்டை மூள்கிறது. திரும்பி வருவதற்குள் டிக்கெட் தரவில்லையென்றால் 'போலீஸை கூப்பிடுவேன்' என்கிறார் அதிகாரி. சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அகதிச் சிறுவன் அந்த டிக்கெட்டை திருடியிருப்பான் என்கிற முடிவிற்கு வருகிறார்கள்.

சற்று நேரத்திற்கு முன் இரக்கம் காட்டியே இவர்களே, அந்தக் குடும்பத்திடம் சென்று முரட்டுத்தனமாக சண்டையிடுகிறார்கள். அந்தக் குடும்பத்தின் பெண் இவர்களிடம் மன்றாடுகிறாள். தங்களின் சோகக் கதையை கண்ணீருடன் விவரிக்கிறாள். டிக்கெட்டை பறிகொடுத்த இளைஞனுக்கு பரிதாபம் உண்டாகிறது. 'உனக்கென்ன தலையெழுத்தாடா?' என்று இன்னொரு இளைஞன் கத்துகிறான்.

ரயில்  ரோம் நகரை வந்தடைகிறது. டிக்கெட் இல்லாத இளைஞனை காவல் அதிகாரிகள் பிடித்துச் செல்கிறார்கள். அகதிகளின் குடும்பம் நீண்ட காலம் பிரிந்திருந்த அவர்களின் குடும்பத்தலைவருடன் கண்ணீருடன் இணைகிறது. காவல் அதிகாரியின் பிடியிலிருந்து இளைஞர்கள் உற்சாகமாக தப்பி ஓடுகிறார்கள்.

**

விதம் விதமான மனிதர்கள், அனுபவங்கள். ஓடும் ரயிலில் நாமும் பயணம் செய்யும் அனுபவத்தை  தருகிறது இந்த திரைப்படம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: