Thursday, May 07, 2020

A Girl at My Door (2014) - சிறுமியும் வன்முறையும்





சிறார்களின் மீது பிரயோகிக்கப்படும் குடும்ப வன்முறை அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதையும் தங்களையும் தனக்குப் பிடித்தமானவர்களையும் காப்பாற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை  ஓர் அதிர்ச்சிகரமான கிளைமாக்சுடன் சொல்கிறது இத்திரைப்படம்.

****

பெரிய நகரத்திலிருந்து  கடலோர நகருக்கு மாற்றமாகி வருகிறாள் பெண் காவல்துறை அதிகாரி லீ யங்-நம்.

வரும் வழியில் ஒரு சிறுமி தனியாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அடுத்த நாளில் அந்தச் சிறுமியை சக மாணவர்கள் சிலர் துன்புறுத்திக் கொண்டிருப்பதை பார்த்து விலக்கி விடுகிறாள். சிறுமியை விசாரித்தால் அது பேசா மடந்தையாக இருக்கிறது. சில சமயங்களில் அந்தச் சிறுமி கடற்கரையில் தனியாக நடனமாடிக் கொண்டும் இரவு நேரங்களில் விநோதமாக தனிமையில் உலவிக் கொண்டும் இருப்பதை லீ கவனிக்கிறாள்.

சிறுமியின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கிறாள். அவளுடைய தகப்பன் குடிகாரன். குடித்து விட்டு கண்மண் தெரியாமல் சிறுமியை அடிப்பது வழக்கமாம். போதாக்குறைக்கு குடிகாரனின் தாயும் இந்தச் சிறுமியை அடிப்பதுண்டாம். குடிகாரனின் மனைவி கொடுமை தாங்காமல் எங்கோ சென்று விட்டாளாம். கைவிடப்பட்ட அந்தச் சிறுமியின் மீீது  லீக்கு அனுதாபம் பிறக்கிறது.

***

இந்த நிலையில் குடிகாரனின் தாய் தனது ஓட்டை வண்டியை வேகமாக ஓட்டுவதில் கடலில் விழுந்து செத்துப் போகிறாள். அவளுக்கும் குடிப்பழக்கம் இருப்பதால் விபத்து என்று போலீஸ் கருதுகிறது. ஆனால் லீக்கு மாத்திரம் ஏதோ மர்மமாக இருக்கிறது. சிறுமியை விசாரித்தால்  வழக்கம் போல் மெளனம் சாதிக்கிறாள். தன் தாயின் சாவிற்கு இந்தச் சனியன்தான் காரணம் என்று சிறுமியை குடிகாரத் தகப்பன் மறுபடியும் அடிக்கத் துவங்குகிறான்.

லீ சிறுமியைக் காப்பாற்றி  வீட்டிற்கு அழைத்து வருகிறாள். குளிக்க வைப்பதற்காக சட்டையைக் கழற்றி பார்த்தால் சிறுமியின் உடம்பு முழுவதும் ரத்தக் காயங்களாக இருக்கின்றன. தன்னை யாரும் துன்புறுத்தாத மகிழ்ச்சியோடு அவளுடனே தங்கத் துவங்குகிறாள் சிறுமி. குடிகாரன் அவ்வப்போது வந்து சண்டை போடுகிறான். சட்டவிரோதமான முறையில் அவன் தொழிலாளிகளை கடத்தி வந்து கொடுமைப்படுத்துகிறான் என்று தெரியவந்து அவன் மீது வழக்குப் போடுகிறாள் லீ. அவனின் கோபம் அதிகமாகிறது.

லீயின் பழைய தோழி ஒருத்தி இவளுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறாள். லீயின் அறையில் நிறைய மது பாட்டில்களை இருப்பதை காண்கிறாள். 'ஏன் இப்படி குடித்து கெட்டுப் போகிறாய்?' என்று கண்டிக்கிறாள். இருவரும் சாலையில் பிரியும் போது உணர்வு பூர்வமாக முத்தமிட்டுக் கொள்கிறார்கள். குடிகாரன் இதனைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். லீ ஏன் பெரிய நகரத்தை விட்டு இந்த சிறிய நகரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டாள் என்பதற்கான காரணம் தெரிகிறது.

லீ ஓரின பாலுறவுப் பழக்கம் உள்ளவள். அதன் காரணமாக காவல்துறை தண்டனையாக லீயை இந்த ஊருக்கு மாற்றியிருக்கிறது. எனவே குடிகார தகப்பன் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஓர் அபாண்டமான காரியத்தை செய்கிறான். ''தம் மகளை லீ தவறான உறவிற்காக பயன்படுத்திக் கொண்டாள்' என்று  புகார் அளிக்கிறான். லீ மீது இது தொடர்பான குற்றச்சாட்டு ஏற்கெனவே இருப்பதால் காவல்துறையும் நம்புகிறது. சிறுமிக்கு அடைக்கலம் தந்த பாவத்திற்காக லீ லாக்-அப்பில் அடைபடுகிறாள். சிறுமி மறுபடியும் தகப்பனிடம் அடிபடுகிறாள்.

***

காவல்துறையினர் சிறுமியை விசாரிக்கிறார்கள். லீ தன்னைக் குளிப்பாட்டிய சம்பவங்களை சிறுமி விவரிக்கிறாள். காவல்துறை அதை தவறாக புரிந்து கொள்கிறது. லீ தன்னுடைய தரப்பு விளக்கத்தை சொன்னாலும் அது எடுபடுவதில்லை. காவலர் ஒருவரின் துணையுடன் சிறுமி வீட்டிற்கு செல்கிறாள். தன்னுடைய தந்தை அடித்தால் என்ன செய்வது என்கிற பயம் அவளுக்கு இருக்கிறது. காவலர் ஒரு மொபைல் போனை தந்து 'எந்த ஆபத்து என்றாலும் உடனே இதை அழுத்து' என்று கற்றுத் தருகிறார்.

அன்று இரவு. வழக்கம் போல் தகப்பன் அதிகமாக குடித்து விட்டு வருகிறான். சிறுமியை மிரட்டி விட்டு தூங்கத் துவங்குகிறான். சிறுமி தன்னுடைய உடையை தானே அகற்றிக் கொள்கிறாள். தந்தையின் அருகில் படுக்கிறாள். பிறகு மொபைல் போனை ஆன் செய்து விட்டு 'வேண்டாம்ப்பா.. வேண்டாம்ப்பா.. என்று அலறுகிறாள். எதிர்முனையில் இதைக் கேட்கும் காவல்துறை உடனே பாய்ந்து வந்து கதவை உடைத்துக் கொண்டு பார்க்கிறது. அரைகுறையான உடையில் சிறுமி. பக்கத்தில் குடிகாரன். என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க அவர்களுக்கு அதிக நேரம் பிடிப்பதில்லை. குடிகாரனை இழுத்துக் கொண்டு  போகிறார்கள்.

மறுநாள் விசாரணையில் சிறுமி லீயைப் பற்றிய சரியான சித்திரத்தை அளிக்கிறாள். துன்புறுத்திய தன் தந்தையிடமிருந்து லீதான் காப்பாற்றினாள் என்பதை காவல்துறைக்கு உணர்த்துகிறாள். காவல்துறை அதிகாரிகள் அவளிடம் மன்னிப்பு கேட்டு விடுதலை செய்கிறார்கள். ஊரை விட்டுச் செல்லும் லீ சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்கிறாள்.

***

சிறுமியாக நடித்திருக்கும் Kim Sae-ron-ன்  நடிப்பு மிக அற்புதமாக இருக்கிறது. தன்னுடைய மெளனமான கண்ணீரின் மூலமே தான் படும் அவஸ்தைகளை பெரும்பாலான காட்சிகளில் வெளிப்படுத்தி விடுகிறாள்.

பெண் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Bae Doona-ன்  நடிப்பும் குறிப்பிடத்தக்கது.   ஓரினப் பாலுறவு பழக்கம் உள்ளவர்களும் எல்லா மனிதர்களையும் போலவே அன்பு, பாசம் கொண்டவர்கள்தான். அவர்கள் தீயவர்களோ, சமூகத்தால் விலக்கி  வைக்கப்பட வேண்டியவர்களோ அல்ல என்கிற செய்தியையும் இத்திரைப்படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.

தென்கொரிய திரைப்படமான இதை பெண் இயக்குநரான July Jung உருவாக்கியுள்ளார்.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: