Friday, May 15, 2020

Veteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'





ஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப்படத்தின் வெற்றிக்கு பாதி உத்தரவாதம் கிடைத்து விடும். பார்வையாளர்களும் ஹீரோவின் பழிவாங்கலோடு தம்மையும் ஆவேசமாக இணைத்துக் கொள்வார்கள். எம்.ஜி,ஆரின் வெற்றிக்கு நம்பியார், வீரப்பாக்களும் முக்கிய காரணம். இந்த அடிப்படையான உத்தியை மீண்டும் நிரூபிக்கிறது இந்த தென்கொரியத் திரைப்படம். அதன் திரைவரலாற்றிலேயே அதிகம் வசூலான திரைப்படங்களில் மூன்றாம் இடத்தைப் பெற்ற பெருமை இதற்குண்டு.

**

Seo Do-cheol ஒரு திறமையான போலீஸ்காரர். நேர்மையானவரும் கூட. சர்வதேச கார் திருட்டு கும்பல் ஒன்றை பிடிப்பதன் மூலம் அவருடைய திறமை மேலதிகமாக அங்கீகரிக்கப்படுகிறது.  தொழில்முறை சார்ந்து ஒரு டிரைவருடன் அவருக்கு நட்பு ஏற்படுகிறது.  'என்ன உதவி வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்' என்கிறார்.

டிரைவருக்கு அவருடைய முதலாளியிடமிருந்து ஊதியப் பாக்கி இருக்கிறது. கேட்கப் போனால் முதலாளி இவரைத் திமிருடன் தள்ளி  விடுகிறான். 'நான் சப்-காண்டிராக்டர்தான். வேண்டுமானால் கார்ப்பரேட் கம்பெனியில் போய்க்  கேள்' என்று அலட்சியமாக பதில் சொல்கிறான். எனவே டிரைவர் கார்ப்பரேட் கம்பெனி முன்னால் ஒரு பேனருடன் ஊதியத்தைக் கேட்டு  தனிநபர் போராட்டம் செய்கிறார்.

கார்ப்பரேட் கம்பெனியின் இயக்குநரான Jo Tae-oh பணத்திமிர் கொண்ட இளைஞன்.  spoiled child.  தனது ஊழியர்களை குரூரமாக  அவமானப்படுத்தும் வழக்கம் கொண்டவன். கம்பெனி வாசலில் நிற்கும் டிரைவரையும் அவனது மகனையும் தனது ஆடம்பர அறைக்குள் அழைத்து ஆரவரமாகவும் அன்பாகவும் உபசரிக்கிறான். பிறகு அந்த சப்-காண்டிராக்டரையும் வரவழைக்கிறான். பிறகு இரண்டு பேருக்கும் குத்துச்சண்டை  கையுறைகளை அணிவித்து 'சண்டையில் யார் ஜெயிக்கிறீர்களோ, அவருக்குப் பணம்'' என்கிறான். டிரைவரின் மகன் இதையெல்லாம் பார்த்து  பயத்தில் கதறுகிறான்.

பணம் கேட்டு வந்த தன்னை, தன் மகனின் முன்னால் அவமானப்படுத்துகிறார்களே என்று டிரைவர் திகைத்து நிற்க,  சப்-காண்டிராக்டர் இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரைப் பலமாக தாக்கி வீழ்த்துகிறான். டிரைவர் அவமானம் தாங்காமல் தன் மகனை ஒரு காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு மறுபடியும் அந்தக் கார்ப்பரேட் கம்பெனியின் மாடியில் இருந்து கீழே விழுந்து 'கோமா' நிலைக்குப் போகிறார்.

இந்தச் சம்பவத்தை கார்ப்பரேட் கம்பெனி தனது அனைத்து செல்வாக்கையும் கொண்டு மூடி மறைக்க முயல்கிறது.

***

இந்தச் செய்தியைக் கேட்டு மருத்துவனைக்கு வரும் போலீஸ்காரர், டிரைவரின் மகனின் மூலம் நடந்த உண்மையை அறிந்து கொள்கிறார். அவருக்கு ரத்தம் கொதிக்கிறது. முதலாளி இளைஞனின் சைக்கோ தனத்தைப் பற்றி ஏற்கெனவே அவர் சிறிது அறிந்திருக்கிறார். எனவே இந்த உண்மையை வெளியில் கொண்டு வர  முடிவு செய்கிறார். ஆனால் அது அத்தனை எளிதாக இல்லை.

கார்ப்பரேட் கம்பெனிக்குள் இவரை உள்ளே விடவே மறுக்கிறார்கள். சக காவல்துறையினரே "ஹலோ.. இது எங்க ஏரியா வழக்கு. நாங்க பார்த்துக்கறோம். நீ போய் உன் வேலையைக் கவனி" என்கிறார்கள். அந்த அளவிற்கு  பணமும் செல்வாக்கும் விளையாடுகிறது.  உயரதிகாரியே இவரை அழைத்து கண்டிக்கிறார். என்றாலும் இவர் தன் பிடிவாதத்தை விடுவதாயில்லை.

பூனை எலி விளையாட்டு ஆரம்பிக்கிறது. இந்தக்  குற்றத்தை மூடி மறைக்க கார்ப்பரேட் கம்பெனி பல்வேறு வழிகளை கையாள்கிறது. டிரைவரை அடித்த சப்-காண்டிராக்டருக்கு பணம் தர முன்வருகிறது. அவன் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக பணத்தை கறக்க முயல்கிறான். போலீஸ்காரரின் மனைவிக்கும் கூட பணம் தருகிறார்கள். அவர்களின் முகத்திலேயே இதை விட்டெறிந்து விட்டு போலீஸ்காரரின் அலுவலகத்திற்குள் புயல் மாதிரி நுழைந்து 'இன்னா மேன், இது பப்பி ஷேம்' என்கிறாள். போலீஸ்காரருக்கு இன்னமும் வெறுப்பு ஏறுகிறது.

***

கார்ப்பரேட் வில்லன் மூட நினைக்கும் ஒவ்வொரு வழியையும் போலீஸ்காரர் திறக்கிறார். சப்-காண்டிராக்டர் தனக்கு தரப்பட்ட பணத்துடன் வேறு இடத்திற்கு ஓடுவதற்குள் தேடிப்பிடித்து கைது செய்கிறார். இந்த மோதலில் புதிதாக சேர்ந்த காவல்துறை இளைஞன் ஒருவன் கத்தியால் குத்துப்பட, இப்போது காவல்துறைக்கே கோபமும் ரோஷமும் வந்து விடுகிறது.

இதன் இடையில் டிரைவர் செய்தது தற்கொலை முயற்சி அல்ல என்பதையும்  வில்லன் அவரை ஆத்திரத்தில் தாக்கி பின்பு உடலை மேலேயிருந்து தூக்கி வீசி தற்காலை போல நாடகம் செய்ததை போலீஸ்காரர் கண்டுபிடிக்கிறார்.

வலை இறுகுவதால் கம்பெனி உரிமையாளர் தன் அனுபவத்தின் சாகசத்தோடு ஓர் ஏற்பாடு செய்கிறார். தன் மகனின் உதவியாளரை அழைத்து அவரை இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறார்.

கார்ப்பரேட் இளைஞன் வெளிநாட்டுக்கு தப்பிக்கும் திட்டம் போலிஸிற்க்கு தெரிய வருகிறது. அதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும். வெளிநாட்டிற்கு போவதற்கு முன் அவன் தன் நண்பர்களுக்கு  ஒரு சொகுசு ஹோட்டலில் பார்ட்டி தருவதாக தகவல் கிடைக்கிறது. போலீஸார் அங்கு சூழ்கிறார்கள். என்றாலும் அவர்களை ஏமாற்றி விட்டு வில்லன் தப்பித்து விடுகிறான்.

இதைப் பார்த்து விடும் போலீஸ்காரர், சாலையில் நிகழும் சில பல சாகசங்களுக்குப் பிறகு அவனை துரத்திப் பிடிக்கிறார். ஆனால் அவனை சட்டத்தின் கையில் சிக்க வைக்க வேண்டுமானால் வலுவான ஆதாரம் வேண்டும். சாலையோர சிசிடிவி காமிராக்கள் இருப்பதைப் பார்க்கிறார். போதாக்குறைக்கும் இந்தச் சண்டையை வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் வழக்கம் போல் ஆளுக்கொரு மொபைலில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே வில்லனின் பலமான தாக்குதலை வாங்கிக் கொள்கிறார். ரத்தம் வழியும் முகத்துடன் சில அடிகளை திருப்பித் தருகிறார். போலீஸ் குழு வந்து வில்லனை கைது செய்கிறது. சுபம்.

விக்ரமின் 'சாமி' போல தென்கொரியாவில் ஒரு ஆறுச்சாமி.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: