Friday, May 29, 2020

The Intern (2015) - ‘அனுபவம் எனும் அற்புதம்'




பழங்கால கடிகாரத்தை உடைத்து விட்டு "பழசா...நான் கூட புதுசோன்னு பயந்துட்டேன்" என்பார் வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில். அவரைப் போலவே நமக்கும் பெரும்பாலான சமயங்களில் பழமையின் அருமை தெரிவதில்லை.

இதைப் போலவே வயதானவர்களின் அருமையும் நமக்குப் புரிவதில்லை. 'பெரிசு' 'ஒரே நச்சு' என்று சில வார்த்தைகளில் அவர்களை நிராகரித்து விடுகிறோம். அனுபவம் என்பது உடனே  கிடைத்து விடாத விலைமதிப்பில்லாத சொத்து. பல வருடங்களைக் கடந்த பிறகுதான் அந்தச் சொத்து கிடைக்கும். அம்மாதிரியான ஓர் அனுபவசாலி பெரியவரின் அருமையைச் சொல்லும் திரைப்படம் இது.

**

நியூயார்க்கில் வசிக்கும் பென் எழுபது வயது முதியவர். மனைவியை இழந்தவர். சுறுசுறுப்பாக இருந்து பழகியவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பல்வேறு வழிகளில் பிஸியாக இருக்க முயல்கிறார். ஆனால் எல்லாமே போரடிக்கிறது. வயதான காலத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார். அங்கு பணிபுரியும் எல்லோருமே பரபரப்பான இளைஞர்கள். நவீன உலகத்தின் அடையாளங்கள். பென் வயதால் பழமையானவராக இருந்தாலும் மனதால் இளையவர். எனவே நவீன விஷயங்களை உடனே கிரகித்துக் கொள்ளும் மனோபாவம்  உள்ளவராக இருக்கிறார். அவருடைய அனுபவம் மற்றும் இனிமையான சுபாவம் காரணமாக அலுவலகத்திலுள்ள பெரும்பாலோனோருக்கு அவரை பிடித்துப் போகிறது.

ஆனால் அதன் நிறுவனரான ஜூல்ஸிற்கு கிழவரைப் பிடிக்கவில்லை. பென் என்றல்ல, வயதானவர்கள் என்றாலே அவளுக்குப் பிடிக்காது, ஒரு நொடி நிற்க கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் சமகால இளைய தலைமுறையின் சரியான பிரதிநிதி ஜுல்ஸ். பேசுவது கூட தனியார் எப்.ஃஎம் –மின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போல அத்தனை வேகம்.

எனவே அவளுடைய வேகத்தை மட்டுப்படுத்துவதற்காக கம்பெனியின் பார்ட்னர் ஓர் உபாயம் செய்கிறார். நமது எழுபது வயது ஹீரோவான பென்னை அவளுக்கு உதவியாளராக நியமிக்கிறார். “என்னது, இந்தப் பெரிசு எனக்கு உதவியா, என்ன விளையாடறியா?’ என்று எரிச்சலாகும் ஜுல்ஸ், வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்கிறாள்.

ஒருபக்கம் ராக்கெட் வேகத்தில் பறக்கும் இளம்பெண். இன்னொரு பக்கம் கூட்ஸ் வண்டி மாதிரி ஆனால் அறிவுபூர்வமான நிதானத்துடன் நகரும் கிழவர். இந்த சுவாரசியமான முரணால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஜூல்ஸிற்கு அவசியம் தேவையான ஒரு ஸ்பீட் பிரேக்கரைப் போல அமைகிறார் பென்.

**

ஜூல்ஸிற்கு  உதவியாளர் பணி என்றாலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார் கிழவர். சமயங்களில் தன் அனுபவத்தின் மூலம் அவர் தரும் ஐடியாக்கள் கம்பெனிக்கு உபயோகமாக இருக்கின்றன. ஜூல்ஸிற்கு கிழவரை மெல்ல பிடித்துப் போக ஆரம்பிக்கிறது. ஆனால் தன்னுடைய விஷயத்தில் நிறைய மூக்கை நுழைக்கிறாரோ என்கிற நெருடலும் ஏற்படுகிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் பென் இல்லாமல் ஜூல்ஸ் நிம்மதியாக அவளுடைய பணியைச் செய்ய முடியாது என்கிற நிலை ஏற்படுகிறது. அலுவலக விஷயத்திலும் மட்டுமல்லாமல் ஜூல்ஸின் தனிப்பட்ட பணிகளிலும் கெளவரம் பார்க்காமல் உதவுகிறார் பென். ஜூல்ஸின் குழந்தையை வெளியே அழைத்துச் செல்கிறார். டிரைவர் வேலையைப் பார்க்கிறார்.

**
ஜூல்ஸ் மனதில் ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது. அவளே எல்லா வேலைகளையும் பரபரப்பாக செய்வதால் சமயங்களில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே கம்பெனிக்கு ஒரு CEO தேவை என்கிறார் பார்ட்னர். ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பில் உருவான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை இன்னொருவரிடம் தர வேண்டுமா என குழம்புகிறாள் ஜூல்ஸ். அதே சமயத்தில் அதை செய்யாமலும் இருக்க முடியாது.

இதே சமயத்தில் இன்னொரு பிரச்சினையும் கிளம்புகிறது. ஜூல்ஸின் கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருக்கும் விஷயம் தெரிய வருகிறது. ‘எப்போது பார்த்தாலும் கம்பெனி விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?’ அவளுடைய கணவன் தனக்காக வேறொரு ‘கம்பெனி’யைத் தேடிக் கொள்கிறான்.

**

உடைந்து போகும் ஜூல்ஸிற்கு ஆபத்பாந்தவனாக வருகிறார் பென். ஏறத்தாழ ஒரு தந்தையின் நிலையில் இருந்து அவளுக்கு யோசனை தருகிறார். ‘நன்றாக யோசி பெண்ணே.. உன் உழைப்பில், யோசனையில் உருவான நிறுவனத்தில் ஓர் அந்நியரை தலையிட விடலாமா?. உன் பணியாளர்கள் அருமையானவர்கள். வேலையைப் பகிர்ந்தளித்து விட்டு உன் சுமையைக் குறைத்து குடும்பத்தையும் சற்று கவனி. எல்லாம் சரியாகும்” என்கிறார்.

அவர் சொல்லியபடியே எல்லாம் சுபமாகிறது. ரிலாக்ஸ் ஆக உடற்பயிற்சி செய்யும் பென்னுடன் ஜூல்ஸூம் இணைந்து கொள்ளும் காட்சியுடன் படம் நிறைவடைகிறது. உதவியாளராக வந்து இணையும் பென், ஜூல்ஸ்ஸிற்கு உபாத்தியாயரான கதை இது.

**

கிழவர் பென்னாக அட்டகாசம் செய்திருக்கிறார் ராபர்ட் டி நீரோ. இத்தனை அனுபவம் வாய்ந்த நடிகர் இப்படியாரு பாத்திரத்தில் கெளரவம் பார்க்காமல் நடிக்க முன்வருவது தமிழில் நடப்பது சந்தேகமே. போலவே ஜூல்ஸ் ஆக நடித்த அன்னா ஹாத்அவேயின் நடிப்பும் அபாரம்‘ அனுபவத்திற்கு ஓய்வு கிடையாது’ எனும் அழுத்தமான கருத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அருமையானதொரு திரைப்படமாக இயக்கியிருக்கிறார் நான்சி மேயர்ஸ்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: