Saturday, December 24, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்


இன்று இரண்டு அழகான திரைப்படங்களைக் காண முடிந்தது. 

முதலில் LAS ACACIAS என்கிற அர்ஜென்டினா திரைப்படம். 85 நிமிடங்கள் ஓடினாலும் இதை குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். அதில் ஒன்று கைக்குழந்தை வேறு. படம் முழுக்க சலிப்பான வாகனப்பயணம். A Road Movie.

இருபது வருடங்களுக்கும் மேலாக டிரக் டிரைவராக இருக்கும் ரூபன் அதிகம் பேசாத ஒரு தனிமைவாதி. பராகுவேயிலி்ருந்து Buenos Aires-க்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போது ஒரு பெண்ணையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுடைய முதலாளியால் பணிக்கப்படுகிறான். அவள் ஒரு கைக்குழந்தையுடன் வருகிறாள். இந்தப் பயணக் காட்சிகளால் முழுத்திரைப்படமு்ம இயங்குகிறது.

படத்தின் நீளம் இன்னும் சற்று எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கும் படி வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் நீண்டிருந்தாலும் பார்வையாளனும் அந்த பயணச் சலிப்பை அடைய வேண்டும் என்று இயக்குநர் செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன். முசுடான டிரைவருக்கும் அந்தப் பெண் மற்றும் குழந்தைக்கும் சிறிது சிறிதாக வளரும் நேசமும் அன்பும் மிக நுட்பமாகவும் அமைதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. டிரைவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து அந்த அழகான குழந்தையும் கொட்டாவி விடும் போன்றதான காட்சிகள் அற்புதமானவை. இருவரும் ஒருவரையொருவரைப் பற்றி மெலிதாக விசாரித்துக் கொண்டாலும் அவர்களுடைய இருவரின் பின்னணியும் மிகப் பூடகமாகவே பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

சற்று நிதானமாக நகர்ந்தாலும் மிக அழகானதொரு முடிவை நோக்கி நிறைந்திருக்கிறது இத்திரைப்படம். 




அடுத்தது HASTA LA VISTA என்கிற பெல்ஜியம் திரைப்படம். இப்படியொரு ஸ்கிரிப்ட்டை யோசித்தற்காகவே இயக்குநரின் கையில் முத்தமிட விரும்புகிறேன்.

மூன்று மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தாங்கள் இதுவரை அனுபவித்தறியாத பாலியல் இன்பத்தை துய்ப்பதற்காக அவர்களைப் போன்றவர்களுக்கென்று பிரத்யேகமாகவுள்ள 'பாலியல் விடுதி்க்கு'  பெற்றோர் அறியாமல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களுடன் ஒரு குண்டுப் பெண்ணும் டிரைவராக இணைகிறாள். மிக ஜாலியான பயணம்.

மாற்றுத்திறனாளிகளின் பிடிவாதமும் நிராசையும் இயலாமையும் நகைச்சுவையுடன் திறமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் காட்சியும். சமயங்களில் சினிக்கலாகவும். மூவரின் பாத்திரமு்ம் பிரத்யேக தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மெல்லிய நகைச்சுவைத் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு. 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 


suresh kannan

Thursday, December 22, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்

இன்று எல்லாமே தூக்க தினமாகிப் போனதால் துக்க தினமாகவும் போனது. 



முதலில் பார்க்க கறாராக திட்டமிட்டது, Confessions என்கிற ஜப்பானிய திரைப்படத்திற்கு. தன் மகளைக் கொன்ற சிறுவர்களை பழிவாங்கும் ஒரு டீச்சரைப் பற்றியது. மூளையை உரசிப் பார்க்கும் சற்று சிக்கலான திரைக்கதை. வெவ்வேறு பிரேம்களில் சட்சட்டென்று மாறி சில பல வாக்குமூலங்களின் மூலம் நகர்கிறது. ஆனால் அதற்கேற்ற மனநிலை இல்லாததால் கனவிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இயலாமல் வெளியேறி விட்டேன். 'பிட் படத்திற்கு ஆவலுடன் சென்ற பதின்ம சிறுவர்கள் அது கிடைக்காத ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு ' 'வக்காலி, காட்டுக்குள்ள என்னமா சூப்பரா படமெடுத்திருக்கான்' என்று இரா.முருகனின் ஒரு சிறுகதையில் வருபவன் தன்னை மறைத்துக் கொள்ள முயல்வது போல 'ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருந்தது' என்று வேண்டுமானாலும் இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிதானமானதெர்ரு மனநிலையில் இதைப் பார்த்திரு்நதால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


அங்கிருந்து விறுவிறுவென்று சத்யம் (Studio 5) தியேட்டருக்கு சென்றது, Nothing's All Bad என்கிற டென்மார்க் திரைப்படத்திற்காக. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளன என்கிற காரணத்திற்காக கால்மணி நேரம் வரிசையில் நின்றும் அனுமதி மறுத்து விட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 


ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அங்கிருந்து பிலிம்சேம்பருக்கு ஓடியது 'The Prize' என்னும் பிரெஞ்சு திரைப்படத்திற்காக. ஆனால் அரங்கில் நுழைந்த போது தமிழ் வசனம் கேட்டுக் கொண்டிருந்தது. அடடா! பிரெஞ்சு திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரங்களா? என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த போதுதான் தெரிந்தது, அது ஜெயபாரதியின் 'புத்ரன்' என்கிற திரைப்படம். ஏதோ டெலிவிஷன் சீரியல் போன்றே இருந்தது. கடந்த சில நாட்களாக நல்ல உருவாக்கங்களைப் பார்த்து விட்டு இப்படி பார்க்கும் போது படு ஏமாற்றமாக இருக்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்த போது உள்ளே திரையில் அழுது வடிந்து கொண்டிருந்த ஒய்.ஜி. மகேந்திரன் மலர்ச்சியாக நின்று கொண்டிருந்தார். பல ரிடையர்டு நடிகைகளையும் படம் முடிந்து வந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக அரைமணி நேர தாமதத்தி்ல் துவங்கியது பிரெஞ்சு.

கடற்கரைக்கு மிக அருகிலிருக்கும் வீட்டில் தனிமையில் வாழ்கிறார்கள் ஒரு தாயும் மகளும். தந்தை எங்கோ மறைந்து வாழ்கிறார். இருவரும் உயிருக்கு தப்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது. மற்றபடி படு நிதானமான எரிச்சலடைய வைக்கும் திரைக்கதை. இரண்டு சிறுமிகளின் விளையாட்டு உலகம் மிகத் திறமையாக வெளிக் கொண்ரப்பட்டிருக்கிறது. ரொம்பவும் போரடித்ததால் வெளியே வந்து விட்டேன்.

நாளையாவது சிறப்பான நாளாக அமைய வேண்டும். வெறும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சினிமா பதிவு எழுதுவது எப்படி என்று இதைப் பார்த்தாவது யாராவது கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

Wednesday, December 21, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்



முன்தினம் தவற விட்ட இரானிய திரைப்படத்தை இன்று பிடித்து விட்டதில் ரொம்பவும்  திருப்தி. A Seperation. ஒரு ஹைவோல்டேஜ் குடும்ப டிராமா.

உலகத் திரைப்படங்களில் இரானியத் திரைப்படங்களுக்கென்று ஒரு தனி மரியாதையும் தகுதியும் உண்டு. 'உணர்வு வெளிப்படுத்தும் சுதந்திரம்' பெரிதுமுள்ள மேற்கத்திய நாடுகளில் அதிகார, மத நிறுவனங்களை விமர்சிக்கும் கிண்டலடிக்கும் படைப்புகளை உருவாக்குதில் கூட பெரிய ஆச்சரியமொன்றுமில்லை.  ஆனால் கடுமையான அடக்குமுறை, தண்டனைகள் கொண்ட இரான் போன்ற நாடுகளின் அடிப்படைவாத சூழலின் உள்ளே இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய படைப்புகளை உருவாக்குவதில் உள்ள அபாயமும் பிடிவாதமும் பிரத்யேகமானவை. 

சமகால இரானிய சினிமாவான இந்தத் திரைப்படத்திலிருந்தே ஓர் உதாரணம் கூறுகிறேன். தான் பணிபுரியும் வீட்டின் கிழவர் (அல்ஜைமர் வியாதியுள்ளவர்) உடையிலேயே சிறுநீர் கழித்து விடுவதைக் காணும் அந்த நடுத்தர வயது பணிப்பெண்ணுக்கு கிழவருக்கு உதவ உள்ளூர விருப்பமும் கருணையும் இருந்தாலும் அவளுக்கு புகட்டப்பட்ட மதநெறிமுறைகள் காரணமாக தயங்குகிறாள். பிறகு தாங்க முடியாமல் தொலைபேசியில் யாரிடமோ "கிழவருக்கு உதவுவதன் மூலம் நான் ஏதும் பாவம் செய்துவிடவில்லையே?" என்று விசாரிக்கிறாள்.  கணவனுக்கு இது தெரியக்கூடாதே என்பதும் அவளுடைய கவலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 'கவலைப்படாதே, அப்பாவிடம் சொல்ல மாட்டேன்" என்கிறாள் அவளுடைய சிறுவயது மகள்.

ஒரு வயதான நபருக்கு அடிப்படை மனித நேயத்துடன் உதவுவதில் கூட அவர் ஆண் என்பதால் இத்தனை தயக்கங்களையும் சந்தேகங்களையும் புகட்டி வைத்திருக்கின்றன மத நிறுவனங்கள். நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக கருதப்படும் இந்தச் சமகாலத்திலும் இப்படியாகவும் சில இனக்குழுக்கள் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது.  

ஒரு நடுத்தர வயது தம்பதியினர் நீதியமைப்பிடம் விவாகரத்து கோருவதில் துவங்குகிறது திரைப்படம். மனைவிக்கு வெளிநாட்டில் சென்று வாழ விருப்பம். அல்ஜைமர் நோய் கொண்ட தந்தையை விட்டு வர விருப்பமில்லை கணவனுக்கு. "நீங்கள் அவருடைய மகன் என்று உணரக்கூடிய நிலையில் கூட அவர் இல்லை" என்கிறாள் மனைவி. "அவர் என் தந்தை என்று உணரக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன் அல்லவா? அது போதும்" என்கிறான் கணவன். 


தீபாவளி சரவெடி போன்று இம்மாதிரியான கூர்மையான வசனங்களாலும் உணர்ச்சிகரமான விவாதங்களினாலும் வன்மங்களாலும் கருணைகளாலும் இத்திரைப்படம் நிரம்பி வழிகிறது. இதன் அபாரமான திரைக்கதை பார்வையாளனை இறுதி வரை ஒரு பதட்டத்திலேயே அமர வைக்கிறது.  ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வேயே ஏற்படுத்தாமல் அச்சு அசலாக சிலர் வாழ்க்கைப் பகுதியின் துண்டுகளை கண்டு கொண்டிருக்கிறோம் என்கிற candid camera நம்பகத்தன்மையை ஏற்படுத்தி படைப்பை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். 

குழந்தைகள் முதற்கொண்டு ஒவ்வொருவரின் நடிப்பும் அத்தனை அற்புதமாக இருக்கிறது. பணிப்பெண்ணாக நடித்திருக்கும் Sareh Bayat, மகேந்திரன் திரைப்படங்களில் வரும் அஸ்வினியை நினைவுப்படுத்தும் சோகச் சித்திரமாக இருக்கிறார். பிரதான பாத்திரங்களில் ஒன்றை ஏற்றிருக்கும் peyman moaadi-ன் பங்களிப்பும் அபாரமானது. அல்ஜைமர் கிழவராக வருபவரின் பங்களிப்பு அத்தனை அபாரமானதாக இருக்கிறது.

இந்தத் திரைவிழாவின் முக்கியமான திரைப்படங்களுள் இது ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. பெர்லின் திரைவிழாவில் 'தங்க கரடி'விருது முதற்கொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 


உட்லண்ட்ஸிலிருந்து பரபரவென்று பிலிம் சேம்பருக்கு நடந்து சென்றது - இன்னொரு இரானிய திரைப்படமான Ashk-E Sarma -க்காக. ஆனால் விதி தேய்ந்து போன டிவிடி வடிவத்தில் காத்திருக்கும் என்பதை யூகிக்க முடியாமலே போனது. படத்தை அறிமுகப்படுத்தியவர் முன்பே இது குறித்த எச்சரிக்கையை வழங்கினாலும் திரைப்படம் அவ்வப்போது நின்று நின்று எரி்ச்சலை ஏற்படுத்தியது. "போய்த் தொலைங்கடா" என்று ஒரு கட்டத்தில் நின்றே போனது. அதன் பேச்சை மறுக்க முடியாமல் கிளம்பி விட்டேன். சர்வதேச திரைவிழா என்கிற அலட்டலான பிராண்டின் கீழ் இம்மாதிரியான அலட்சியங்கள் நிகழ்வது மிக துரதிர்ஷ்டவசமானது.

மோசமான பிரிண்ட் என்றாலும் கூட சுவாரசியமான உருவாக்கத்தின் காரணமாக அதுவொரு குறையாகத் தோன்றவில்லை. கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் அங்கு ஆடு மேய்க்கும், கொரிலாக்களுக்கு உதவும் ஒரு பெண்ணுக்கும் இடையிலுள்ள நேசத்தைப் பற்றி சொல்லிச் சென்ற (முடிவு என்னவென்று அறிய முடியாமற் போன) அற்புதமான திரைப்படம். ஆகவே இதை ஒரு அரைகுறை விமர்சனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

டெஸ்க்டாப் வால்பேப்பரை உடனே மாற்றுமளவிற்கு, ஆடு மேய்க்கும் பெண்ணாக வரும் Golshifteh Farahani-ன் அழகிற்கு உடனே ரசிகனாகி விட்டேன் என்பது இந்தத் திரைப்படத்திற்கு சென்றதில் உள்ள எளிய ஆறுதல்.


suresh kannan

Sunday, December 18, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்

இன்று நான் அலுவலகத்திலிருந்து சிரமப்பட்டு பிய்த்துக் கொண்டு ஓடியது,  இந்த விழாவில் அதிகம் எதிர்பார்த்திருந்த 'A Seperation' என்கிற இரானிய திரைப்படத்திற்காக . 'இரானிய படங்களின் மீது எனக்கு பெரிய மரியாதை ஒன்றுமில்லை, அவை பார்வையாளனை நெகிழச் செய்வதையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன' என்கிறார் விமலாதித்த மாமல்லன்.

ஆனால் என்ன காரணத்தினாலேயோ ஷெட்யூலை மாற்றி HABEMUS PAPAM (WE HAVE A POPE) என்கிற இத்தாலிய திரைப்படத்தை திரையிட்டனர். படு ரகளையான திரைப்படம். உரத்த குரலில் அல்லாமல் subtle ஆக மிக நுட்பமான பகடிகளால் நிறைந்து வழிகிறது. மத நிறுவனங்களையும் குருமார்களையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கிறது. இப்படியொரு படத்தை இந்தியச் சூழலில் யோசிக்கவே முடியாது. நம்முடைய முதிர்ச்சியின்மையின் பல அடையாளங்களில் இதுவுமொன்று.

நம்முடைய பொதுச் சமூகத்திற்கு பல 'புதினப்பசுக்களின்' தேவையும் இருப்பும் அவசியமானதொன்றாயிருக்கிறது. அன்றாடம் வெளிப்பட்டிருக்கும் நம்முடைய தீய எண்ணங்களுக்கு மாற்றாக எங்கோ சில தூய மனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்ப வேண்டியிருக்கிறது. குற்றங்களின் வடிகாலாக அந்த socalled தூய மனங்கள் இருக்க வேண்டுமென்றும் அவை அதிதூய்மையாகவே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது்; நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த தூயமனங்களும் நம்மைப் போலவே சதையும் ரத்தமும் கொண்டவை என்பதும் எல்லா அடிப்படை இச்சைகளுக்கும் உட்பட்டவையே என்பதை நம்பவோ விரும்பவோ மறுக்கிறது. இதில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் கூட கோபம் கொள்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஓர் இளம் சாமியார் நடிகையுடன் இருந்த அந்தரங்க தருணங்களை 'நீதிமான்களாக' வேஷம் போடும் ஊடகங்களில் ஒன்று வெளிப்படுத்திய போது 'ஒரு சாமியார் இப்படிச் செய்யலாமா?' என்று பொதுச்சமூகம் கோபமும் அருவருப்பும் கொண்டது. இதன் மூலம் தன்னையும் ஒரு புனிதனாக காட்டிக் கொள்ள விரும்புகிறது.  இருவரும் மனமொப்பி தன்னிச்சையாக அதை மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி கேள்வி கேட்க எவருக்குமே உரிமை கிடையாது. மற்ற service provider -களைப் போல ஆன்மீகத்தையும் அதன் உள்ளடக்கத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டு அதைத் தருபவர்களைப் பற்றிய ஆராய்ச்சியை விடும்வரை இந்த 'வெற்றுப் பொங்கல்'கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்ய வருபவரின் உடையும் அதிதூய்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நம்முடைய அறியாமைதானே?
 
 
spoilers warning

ரோம் நகரத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம். பல நாட்டு கிறித்துவ குருமார்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். தேர்வு துவங்குகிறது. கடுமையான விதிமுறைகள் காரணமாக பலருக்கும் தான் போப்பாக தேர்வு செய்யப்படுவதில் விருப்பமில்லை. உள்ளூற பதட்டமும் பயமுமாக அமர்ந்திருக்கின்றனர். உள்ளூற இறைவனிடம் மன்றாடுகின்றனர். இறுதிச் சுற்றில் ஒருவர்  பலியாடாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் மக்களின் முன் தோன்றி ஆசி வழங்குவதற்கு முந்தைய தருணத்தில் பயந்து போய் விலகிப் போய் விடுகிறார்.

விதிமுறைகளின் படி புதிய போப் பால்கனியில் தோன்றாத வரை அவர் யார் என்பதை பொதுவெளியில் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாத சூழல். மேலும் அப்படி வெளிப்படும் வரை இது ரகசியமாகவும் வைக்கப்பட வேண்டும்.
 
உளவியல் மருத்துவர் ஒருவரை (இயக்குநர் Nannai Moretti) போப்பிடம் உரையாட வைக்கின்றனர். உளவியல் மருத்துவரே ஒருவகையான depression-ல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் போப் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார். அமைப்பின் தொடர்பு அதிகாரி போலியாக ஒருவரை ஏற்பாடு செய்து 'போப்' அங்கேதான் இருக்கிறார் என்று நம்பச் செய்கிறார். 
 
 

இப்படியாக படம் முழுவதும் பகடியான காட்சிகளாலும் வசனங்களாலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக இயக்குநர் Nannai Moretti படுஜாலியாக நடித்திருக்கிறார். இவரின் இன்னொரு அற்புதமான திரைப்படமான 'The Son's Room'-ல் இவரை சீரியசாக பார்த்து விட்டு இதில் படு ஜாலியாக பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. புதிய போப்பாக நடித்திருக்கும் Michel Piccoli-ன் நடிப்பும் அற்புதம். 'நான் ஒரு நடிகன்' என்று பெண் உளவியல் மருத்துவரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் காட்சியிலும் 'புதிய வழிகர்ட்டியை' அறிந்து கொள்ளும் ஆவலில் மாளிகையின் முன் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் இடையில் நெகிழ்ச்சியாக நடந்து செல்வதும் இறுதியில் 'நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது' என்று அறிவிக்கும் காட்சியிலும் நெகிழ வைத்து விடுகிறார்.

போப் தேர்வு செய்யப்படும் காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரவசத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
எல்லா மனிதர்களும் இயற்கையின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு இயங்குபவர்கள்தான், யாரும் அதிபுனிதர்கள் அல்ல, ஆன்மீகம் என்கிற வஸ்துவை வெளியே தேடாமல் உள்நோக்கிய பயணமாக கொண்டிருக்கிற வேண்டும் என்கிற பல ஊடிழைச் செய்திகளை இந்தத் திரைப்படம் தரமான பகடிகளுடன் சொல்லிச் செல்கிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். ஒருவேளை தமிழில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டால் எந்த மதகுரு இதற்கு அதிபொருத்தமானவர் என்று யோசித்துப் பாருங்கள். சுவாரசியமான கற்பனையாக இருக்கும்.  
 
தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 
suresh kannan

Saturday, December 17, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்

முதலில் நேர்மையாக ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று என்னால் திரைவிழாவிற்குச் செல்ல இயலவிலலை. என்றாலும் நினைவு முழுக்க அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

பெரும்பாலான உலகத் திரைப்படங்கள் குறுந்தகட்டிலும் இணையத்தில் கிடைக்கும் போது நிம்மதியாக வீட்டுத்தனிமையில் நள்ளிரவில் பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு நேரம் செலவு செய்து சில பல இடையூறுகளுடன் திரைவிழாவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கடந்து வருடங்களில் நினைத்திருந்தேன். ஆனால் இதற்காக மெனக்கெட்டு அங்கே சென்று ஒத்தஅலைவரிசையுள்ள பல பார்வையாளர்களுடன் இணைந்து பார்ப்பதும் பிறகு அதைப் பற்றி பரவசமாக பேசிக் கொண்டிருப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆகவே என்னைப் போன்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நேற்று இரண்டு திரைப்படங்களைக் காண வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தேன். 1) பிரெஞ்சு திரைப்படம் - The Snows of Kilimanjaro 2) ருஷ்ய திரைப்படம் - Elena.

முன்னரே குறிப்பிட்டது போல் திரைவிழாவிற்குச் செல்ல முடியவில்லையென்றாலும் இந்த தளத்தை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான (?!) வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே இணையத்தில் தரவிறக்கி வைத்திருந்த ருஷயத் திரைப்படத்தை நள்ளிரவைக் கடந்தும் பார்த்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா?' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

Spoilers Warning..



பிரதானமாக இரண்டு வயதான பாத்திரங்களைச் சுற்றி நிகழ்வதாலோ என்னவோ மிக மிக நிதானமாக நகர்கிறது  ELENA.  ஆனால் நிகழ்ந்து கெர்ணடிருக்கும் மிக அற்புதமான டிராமா காரணமாக அதுவொரு பெரிய குறையாகத் தோன்றவில்லை.

சுஜாதாவின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் கடிதப் பரிமாற்றங்களின் வடிவத்தில் அந்தச் சிறுகதையை வடிவமைத்திருப்பார் சுஜாதா. கணவனின் கொடுமையையும் அது தரும் மன உளைச்சல்களையும் பற்றி தாய்க்கு எழுதிக் கொண்டிருப்பாள் மகள். தாயும் ஆறுதலாக பதிலளித்துக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் துன்பம் பெருகிக் கொண்டிருக்க அதிலிருந்து விடுபடுவதற்கானதொரு யோசனையை தாய் மிக சூசகமாக பரிந்துரைப்பார். அவர் வேதியியல் படித்தவராக இருப்பார் என்பது உப தகவல்.

இந்தத் திரைப்படமும் அந்தச் சிறுகதையை நினைவுப்படுத்தியது.

பணக்கார கிழவர் ஒருவர். மருத்துவமனையில் அவருக்கு பணிவிடை செய்யும் சமவயது நர்ஸ் ஒருவரின் கனிவான சேவையில் உருகி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் இணைந்து தனிமையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரின் முன்னாள் திருமணங்களின் மூலம் முறையே கிழவருக்கு லோகாயாத பொறுப்பில்லாத விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் மகளும்,  நர்ஸிற்கு வேலைக்குச் செல்லாத அம்மாவின் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சோம்பேறி மகனும் இருக்கிறார்கள். நர்ஸின் சமீபத்திய மிகப் பெரிய கவலை, அவருடைய பேரனின் கல்விச் செலவிற்காக மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது. "உன்னுடைய குடும்பத்திற்காக என் பணத்தை ஏன் வாரியிறைக்க வேண்டும்?' உன் மகனை உருப்படியாக வேலை பார்க்க்ச் சொல்" என்று எரிந்து விழுகிறார் கிழவர்.

கிழவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. உயில் எழுதுவதைப் பற்றி சிந்திக்கிறார். விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் 'தன்' மகளைப் பற்றிய கவலை அவருக்கு. எங்கே சொத்து முழுவதையும் 'அவருடைய' மகளுக்கு எழுதி வைத்து விடுவாரோ, எங்கே தன் மகனுக்கு உதவ முடியாமற் போய் விடுமோ என்று தவிக்கும் நர்ஸ் ஒரு 'காரியம்' செய்கிறார்.

()

குறுந்தகடு சிக்கி நின்று விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு சில நிமிடங்கள் ப்ரீஸ் ஆகி நிற்கிற பிரேமுடன் துவங்குகிறது திரைப்படம். அங்கேயே படத்தின் நிதானத்திற்கு நம்மை தயார்ப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

கறாராக தீர்மானிக்ப்பட்ட உடல்மொழிகள் மூலமும் முன்னுழைப்பு திட்டமிடல்களின் மூலமும் ஒரு காட்சியை எத்தனை அழுததமாக பார்வையாளனின் நெஞ்சில் பதிய வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இதில் பல காட்சிகள் உள்ளன்.

பென்ஷன் பணத்தை எடுத்துக் கொண்டு கிழவரின் க்ரெடிட் கார்டை உபயோகித்து மளிகைப் பொருட்களை மகனின் வீட்டுக்கு பயணிக்கிறார் நர்ஸ். அங்கே அவள் தேவைப்படவில்லை, அவள் கொண்டு வரும் பணம்தான் எதிர்பார்க்கப்பபடுகிறது' என்பதை மிக நுட்பமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறார் இயக்குநர். சோம்பேறித் தந்தையைப் போலவே மகனும் உருப்படியில்லாமல் போகிறான் என்பதற்கான குறியீட்டுக் காட்சியொன்று. நர்ஸூம் கிழவரின் மகளும் உரையாடல் காட்சி மிக அற்புதம். "கவலையடைந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை நீ மிக திறமையாகச் செய்கிறாய்?, வாழ்த்துகள்" என்று கிழவரின் மகள் கூறும் சினிக்கலான வசனங்களெல்லாம் எனக்கு எழுத்தாளர் ஆதவனை நினைவுப்படுத்தின.

நீதிக்கதை போல் எவ்வித தண்டனைகளுமில்லாமல் மிக இயல்பாக நிறைவு பெறுகிறது திரைப்படம். கேனஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருது பெற்றிருக்கிறது. 

தமிழ் பேப்பரில் வெளியானது. 

suresh kannan

Friday, December 16, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்

இன்று பார்க்க வாய்த்த இரண்டு திரைப்படங்களுமே அருமை. இரண்டாவது திரைப்படம் அருமையோ அருமை. இப்படி ஒரே ஒரு படம், தமிழில் வந்தால்... சரி வேண்டாம். விட்டு விடுவோம்.

உட்லண்ஸில் ஐந்தரை மணிக்கு அல்பேனிய திரைப்படமான Amnesty. சிம்பொனியில் ஐந்தே முக்காலுக்கு பிரெஞ்சு திரைப்படமான Heat Wave (Apres Le Sud). இதுவா, அதுவா என்று மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அல்பேனியாவே சிறப்பான திரைப்படம் என்று அரங்கத்தில் பொதுவான பேச்சு அடிபட்டது. ஆனால் நான் முன்பே சற்று ஹோம்ஒர்க் செய்திருந்ததால் பிரெஞ்சே சிறந்தது என்பதை ஒருமாதிரியாக யூகித்திருந்தேன். இம்மாதிரியான யூகங்கள் சமயத்தில் காலை வாரி விட்டு விடும். எனவேதான் அந்த குழப்பம். 'பத்து நிமிடங்கள் அல்பேனியாவை பார்ப்பேன், சரியில்லை என்று தோன்றினால் பிரெஞ்சுக்கு மாறி விடுவேன்' என்று நண்பர் பாஸ்கர் சக்தியிடம் கூறிக் கொண்டிருந்தேன். அப்படியாகவே அல்பேனியாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு எச்சரிக்க, பிரெஞ்சுக்கு பாய்ந்து சென்றேன். நான் உள்நுழையும் போது படத்தின் இயக்குநரான Jean-Jacques Jauffret படத்தை அறிமுகப்படுத்தி விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். 



மிக அற்புதமான நான்-லீனியர் திரைக்கதை கொண்ட படம். கதை என்று பெரியதாக ஒன்றுமில்லை.

கர்ப்பம் அடைந்த குற்றவுணர்வில் ஓர் இளம்பெண், தந்தையிடம் அடிபட்ட எரிச்சலில் ஊருக்குச் செல்ல துடிக்கும் அவளின் காதலன், தனது குண்டான உடம்பை குறைப்பதற்கான மனஉளைச்சலில் இருக்கும் இளம் பெண்ணின் அம்மா, எதற்காகவோ சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பீத்தோவனின் இசைக்குறுந்தகட்டை திருடி அவமானப்படும் ரிடையர்டு கிழவர்...

இவர்கள் தொடர்பான சம்பவங்களை கலைடாஸ்கோப் பார்வை போல முன்னும் பின்னுமாக கலைத்து கலைத்துப் போட்டு சிலம்பாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர். ஏற்கெனவே பார்த்த சம்பவத்தை, மறுபடியும் வேறு காமிரா கோணத்தில் பார்க்கும் போது நாமும் அந்த பாத்திரமாகவே மாறிவிடும் மாயாஜாலம் நடக்கிறது. பெண்ணிற்குத் தெரியாமல் மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் குண்டு அம்மா, உபாதை தாங்காத அவஸ்தையில் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி உணவை விழுங்கும் காட்சியில் அவரது நடிப்பு அற்புதம். குண்டாக இருப்பவர்களின் பிரச்சினையையும் மனஉளைச்சலையும் உள்வாங்கிக் கொள்ள முடியாத சில் பார்வையாளர்கள் விவஸ்தையின்றி சிரித்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது.

படத்தின் சிறப்பான திரைக்கதை உத்திக்காகவே பார்க்கலாம்.


இரண்டாவது அர்ஜென்டினா /ஸ்பெயின் திரைப்படம். NO RETURN / SIN RETORNO. இது பற்றி முன்பே தீர்மானித்திருந்ததால் எவ்வித குழப்பமுமின்றி இதை தேர்வு செய்தேன்.

அற்புதமான சைக்காலஜிக்கல் திரில்லர். ஒரு சாலை விபத்து. அதைத் தொடர்ந்து ஒரு மரணம். இதை வைத்துக் கொண்டு இத்தனை அற்புதமான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்று பிரமிப்பே வந்து விட்டது. படம் எதிர்பார்க்கவே முடியாத யூகங்களில் முட்டுச் சந்து திருப்பங்கள் போல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. 'குற்றமும் தண்டனையும்' என்று சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீதியமைப்பு எத்தனை தூரம் சரியானது என்கிற கேள்வியையும் சந்தேகத்தையும் படம் எழுப்புகிறது. என்றாலும் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் மனச்சாட்சி அவனுக்கான தண்டனையைத் தந்து விடுகிறது. ஊடகங்கள் வெறும் பரப்பிற்காக செயல்பட்டு எத்தனை தனிமனித வாழ்க்கைகளை பாழாக்குகிறது என்பதும் ஊடிழையாக வெளிப்படுகிறது.

அடுத்த முறை ஊடகங்களில் திரும்பத் திரும்ப  'குற்றவாளி' என்று அழுத்தமாக முத்திரை குத்தப்பட்டு வெளிப்படும் ஒருவரை, அவர் குற்றவாளிதானா என்று பொதுமனங்களில் கேள்வி எழுப்புவதில் இத்திரைப்படம் வெற்றி கண்டிருக்கிறது எனலாம். மிக அபாரமான திரைக்கதை. சமீபத்தில் நான் கண்ட திரைப்படங்களில் மிக அற்புதமான, உணாச்சிவசப்பட வைக்கக்கூடிய கிளைமாக்ஸ் கொண்டது இத்திரைப்படமே. சிக்கலான நேரங்களில் அகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது படம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. Leonardo Sbaraglia -வின் நடிப்பு இரண்டாவது பகுதியில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

Thursday, December 15, 2011

சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011

இந்த துவக்க நாளில் இரண்டு திரைப்படங்களை மாத்திரமே என்னால் காண முடிந்தது. சினிமாவில் மாத்திரம் ஆர்வமுள்ளவர்கள் துவக்க விழா அபத்தங்களை தவிர்த்து விட வேண்டும் என்பதுதான் அன்று எனக்கு கிடைத்த நீதி. அதைப் பற்றி பின்னால்.


பிலிம் சேம்பரில் மழைக்கு ஒதுங்கிய சோகையான கூட்டத்துடன் முதலில் பார்த்தது Varjoja paratiisissa என்கிற 1986 பின்லாந்து திரைப்படம். குப்பை அள்ளும் தொழிலாளியின் அகச்சிக்கலயும் காதலையும் பற்றியது. பின்லாந்தில் மருந்திற்குக் கூட யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதை அன்றுதான்  அறிந்து கொண்டேன். 'போய் வருகிறேன்' என்பதைக் கூட 'தொலைஞ்சு போ நாயே' என்கிற தீவிர முக பாவத்துடன் படம் முழுவதும் இறுக்கமாகத்தான் சொல்கிறார்கள். இதை  பிளாக் காமெடி என்று எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்கிற வழக்கமாக எனக்கு ஏற்படுகிற சந்தேகம் அன்றும் ஏற்பட்டது. 'இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷமா குப்பை கொட்டறீங்க?' என்று கேட்கப்படக்கூடிய அந்தத் தொழிலாளியின் தனிமையில் வாழ்வில் இனிமையாக குறுக்கிடுகிறாள் சூப்பர் மார்க்கெட் பணிப்பெண் ஒருத்தி. இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு இருந்தாலும் ஈகோவினால் தவிர்த்துக் கொள்ள முனைகிறார்கள். தமிழ்ச்சினிமா போலவே இறுதியில் காதல் வெல்கிறது. போகிறார்கள், வருகிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள். படம் முழுக்க இதுவே. இயக்குநர் Aki Kaurismäki-ன் வழக்கமான பாணி இது என்கிறார் கூட வந்திருந்த நண்பர் அக்னிபார்வை. படம் குப்பை என்று சொல்ல விடாமல் ஏதோ தடுக்கிறது. மீண்டும் நிதானமாக பார்க்க வேண்டும். 

இரண்டாவது பார்த்த பிரெஞ்சு படம் - The Kid with a Bike  இதற்கு நேர்மாறாக திருப்தியான அனுபவத்தைத் தந்தது. அற்புதமான, நிச்சயம் தவறவிடக்கூடாத படம். அன்பு என்பது சாஸ்வதமானது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு. முட்களினால் உருவான ஒரு பூவைப் போன்ற ஓர் இளம் சிறுவனைச் சுற்றி இயங்குகிறது திரைப்படம். தன்னை நிராகரித்துச் சென்ற தந்தையை அது அறியாமல் தீவிரமாகத் தேடுகிறான் அந்தச் சிறுவன். இந்த முரட்டுத்தனமான தேடலில் தன்னை நேசிக்கும் சிகைத் தொழிலாளி பெண்ணொருத்தியின்  அன்பை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. இறுதியில் சுபம்.  

ஆரம்பித்த கணத்திலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது படம். தந்தை ஏன் அந்தச் சிறுவனை நிராகரித்துச் சென்றான்? தாய் என்ன ஆனாள்? சிகைத் தொழிலாளி பெண் ஏன் அந்தச் சிறுவனை அப்படி நேசிக்கிறாள்... என்று அதற்கு முந்தைய தருணங்கள், நினைவோட்டங்கள் என்று எதுவுமே படத்தில் சொல்லப்படவேயில்லை. ஆனால் அழுத்தமான காட்சிகளின் மூலம் எதுவும் சொல்லாமலேயே நமக்கு எல்லாமே புரிகிறது. அபாரமான திரைக்கதை. அந்தச் சிறுவனுக்கு என்னாகுமோ என்று நமக்குள் பதைபதைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் செய்வது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பின்னணி இசை ஒலிக்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே திரைப்படம் முடிந்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

ஒரு சிறந்த டிராமா திரைப்படத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான அடிப்படை பால பாடங்கள் இதிலுள்ளது. இதையும் மீண்டுமொரு முறை நிதானமாக பார்க்க வேண்டும்.

()

இனி துவக்க விழா நிகழ்ச்சிகள் பற்றி..

வந்திருந்த அமைச்சர் முதல் அரங்கத்தின் வாட்ச்மேன் வரை முதலமைச்சர் தந்த 25 லட்சம் ரூக்கு பவ்யமாக நன்றி கூறிக் கொண்டேயிருந்தனர். அது என்னவாகப் போகிறது என்பதைப் பற்றி ஞாபகமாக யாரும் கூறவேயில்லை. லோக்கல் தமிழில் பார்த்திபன் பேசியதுதான் கூட்டத்திற்குப் பிடித்திருந்தது. 80 வருட தமிழ் சினி்மாவைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறோம் என்று பிலிம் காட்டி விட்டு... பெரும்பாலான கு்த்துப் பாடல்களின் பின்னணியில் ரெக்கார்டு டான்ஸ் போட்டதெலெலாம் ஓவர். (நான் பால்கனியில் அமர்ந்திருந்ததால் 'உன்னிப்பாக' ரசிக்க முடியாமற் போனது வேறு விஷயம்). தமிழ் சினிமாவில் மிருதுவான இசை வாத்தியங்களையே உபயோகிக்க மாட்டார்கள் என்பதுதான் அதன் வெளிப்பட்ட நீதி என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும்.

"ஊடகச்சுதந்திரத்தின் கழுத்தை அதிகார அமைப்பு நெறிக்கக்கூடாது' என்று இந்து ராம் பேசியமர்ந்த கணமே அதற்கு பொருத்தமாக 'செங்கடல்' திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து லீனா மணிமேகலை குழுவினர் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அரங்கத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாட்டாமை சரத்குமார் மிகத் திறமையாக இங்கும் "பசுபதி எட்றா வண்டியை" ரேஞ்சிற்கு சமாதானப்படுத்தினார். மேடையில் அமர்ந்திருந்த விஐபி பிரகஸ்பதிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே போக நேரம் ஆகிக் கொண்டிருந்த டென்ஷன் எகிறியது. கலையாளுமை பவர் ஸ்டார் சீனிவாசன்தரிசனம் தந்ததுதான் இடையில் ஆறுதலளித்த ஒரே காமெடி.

தமிழ்த்திரைப்படங்கள் வரிசையில் "ஆரண்ய காண்டம்' போன்ற சிறந்த திரைப்படங்கள் இல்லாமல் 'கோ' "தூங்காநகரம்" போன்ற குப்பைகள் இடம் பெற்றிருந்தனின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. வீட்டுத்தனிமையில் திரைப்படம் பார்ப்பது ஒரு ருசி என்றால், இப்படியாக அபத்தங்களுக்கிடையில் திரைப்படம் பார்ப்பது இன்னொரு வகையான ருசியாகத்தான் இருக்கிறது.




suresh kannan

Tuesday, December 13, 2011

சர்வதேச திரைவிழா - ஒரு வார்ம் அப்




இந்த முறை சென்னையில் நிகழும் சர்வதேச திரைவிழாவிற்கு செல்லலாம் என்றிருக்கிறேன். 

கடந்த வருடங்களில் செல்லாமலிருந்தற்கு காரணம், வாங்கி வைத்திருக்கும் திரைப்பட டிவிடிகளையே இன்னும் பார்க்காமலிருக்கும் குற்றவுணர்வும் சோம்பேறித்தனமும். சில உபகாரணங்களும். ரூ.500/- தந்து அனுமதியட்டையை வாங்கி விட்டாலும் அது தொடர்பாக வரப்போகும் addon செலவுகளை நினைத்து. எனக்கு பொதுவாக ஆறு, ஏழு மணியாகி விட்டாலே கடுமையாக பசிக்க ஆரம்பித்து விடும்.  அந்த நேரத்தில் ஜெயமாலினி நடனமே என்றாலும் கூட மனதில் ஏறாது. இதனாலேயே எந்த நூல் விழாவிற்குச் செல்வதென்றாலும்  முன்னமே ஏதாவது சாப்பிட்டு விட்டுச் சென்று விடுவேன். அப்படி இல்லாமல் போனதால்தான் சமீபத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்தது.

இந்த திரைவிழாவிலும் அதே பிரச்சினைதான். எனவே இந்த 9 நாட்களுக்கும் அப்படியாக உணவிற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அது கூட ரோட்டோர டீக்கடை சமோசாவின் மூலம் முடித்துக் கொள்ளலாம். அதை விட பெரிய பிரச்சினை, அரங்கம் அரங்கமாக மாற வேண்டியதற்கான போக்குவரத்து. அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக எனக்கு வண்டி ஓட்டத்தெரியாது. பேருந்திற்காக காத்திருந்தால் படம் முடிந்து எல்லோரும் கைதட்டும் நேரம் வந்து விடும். ஆட்டோவிற்கு செலவு செய்து மாளாது. 

இதை வாசிக்கும்  இருசக்கர வாகனம் வைத்திருக்கும் திரைவிழாவிற்கு கலந்து எந்தவொரு நண்பராவது இந்த உதவியை செய்தால் நன்றியுடையவனாயிருப்பேன். 


()

விழாவில் திரையிடவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலின் முதல் பகுதியை  இங்கு காணலாம். இந்தப் படங்களின் IMDB தர வரிசைப்பட்டியலின் தொகுப்பை இங்கு காணலாம். கோ, தூங்காநகரம் போன்ற மொக்கையான தமிழ்ப்படங்களையும்  சுமாரான இந்தியத் திரைப்படங்களையும் தவிர்த்து விட்டு குறிப்பாக இரான், எகிப்து திரைப்படங்களை முக்கியமாக காண உத்தேசம். இதில் A Separation (2011)  என்கிற இரானிய திரைப்படத்தை குறிப்பாக காண விருப்பம். அலுவலகத்திலிருந்து தப்பிக்கும் சாத்தியமுள்ள அன்று காணும் திரைப்படங்களைப் பற்றி அன்றிரவே எழுதவும் உத்தேசம். பார்க்கலாம்.

suresh kannan

Monday, December 12, 2011

சாருலதா ஊஞ்சல் ஷாட்



சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா' திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடல் காட்சி வருகிறது. மாதவி முகர்ஜி ஊஞ்சலில் ஆடிக் கொண்டே பாடும் அந்தப் பாடல் காட்சியி்ல் காமிரா ஊஞ்சலின் கூடவே எந்த வித ஜெர்க்கும் இல்லாமல் பயணிக்கும். திரை உருவாக்க நுட்பங்களில் அனுபவமில்லாவிட்டாலும் ஆர்வம் காரணமாக  அந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நிறைய முறை யோசி்த்திருக்கிறேன். (பாடலை மேற்கண்ட இணைப்பில் காணலாம்)

 இயக்குநர் சார்லஸின் வலைப்பதிவு இணையத்தில் அறிமுகமான பிறகு அங்கும் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அது தொடர்பான விவாதம் இங்கே.

நேற்றைய இந்து நாளிதழில்தான் இதற்கான விடை கிடைத்தது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப் பதிப்பில் குறிப்பிட்ட காமிரா கோணங்களை உதாரணங்களுடன் விளக்கும் தொடர் ஒன்று வெளிவருகிறது. அந்த வரிசையில் இந்தப் பாடலை உதாரணம் காட்டி இது SNORRICAM வகை நுட்ப உத்தி என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். 

suresh kannan

Tuesday, December 06, 2011

சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா



காமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.

மேடையின் பின்னணி பேனரில் பெரிய அளவு சாரு, மெரூன் நிற சட்டையில் குறுந்தாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்க அதன் மினியேச்சர் போல் அதே போல மெரூன் நிற சட்டையணிந்த நிஜ சாரு கீழே உலவிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இதே போல் எங்கோ ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்று நெருடியது. 'நாடோடிகள்' என்கிற திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். அவர் யாருக்காவது உதவி செய்கிற மறு கணமே அவரது ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுத்து கட்அவுட் வைத்து அசத்தி விடுவார்கள் . சாரு வாசகர் வட்டத்தினரும் தீயாய் வேலை செய்கிறார்கள் என்பதறிய மகிழ்ச்சி. சிறிது நேரத்திலேயே  கோட், சூட் அணிந்து CEO போல சாரு வந்தது, ஒரு MNC பிராடக்டின் அறிமுகப்படுத்தும் வணிக விழா போல் இருந்தது. தவறில்லை. ஜோல்னாப் பையும் கதர் சட்டையுமாகத்தான் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று யார் சொன்னது.

'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத்  தவிர்க்க முடியாது' என்று நண்பர் சிவராமன் கூறினாலும் இம்மாதிரியான கிம்மிக்கிஸ்களுக்கு இடையில்தான் தமிழ் இலக்கியம் ஜீவித்தாக வேண்டும் என்பது சற்றே பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

வாலி மொக்கைதான் போடுவார் என்று ஏற்கெனவே சர்வநிச்சயமாக எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமெதுவும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை முதல் சுயபுராணத்தை ஆரம்பித்தாலும் நாவலை 150 பக்கங்கள் வரை வாசித்திரு்ந்தாலும் நாவலின் மையத்தைப் பற்றி அவர் பேசவில்லை. ஆனால் இபாவும் சற்று மொக்கை போட்டதுதான் ஆச்சரியம். 'செக்ஸ் குற்றம் என்று நினைப்பவர்களுக்களுக்கானதல்ல இந்த நாவல். இது 'சாப்ட் போர்னோகிராபி அல்ல, ஹார்டு போர்னோகிராபி' என்றார் இ.பா.  'உச்சா' கூட போகத் தோன்றாமல் நாவலை ஏறக்குறைய முழுவதும் வாசித்திருந்த திடீர் பேச்சாளரான மதன்தான் நாவலைப் பற்றின அவுட்லைனை அடிக்கோடிட்டுப் பேசினார். இவர்கள் உரையாடின வரை வைத்துப் பார்த்தவரை சாருவின் தனிமனித அனுபவங்கள், வாசித்ததில் உருவியவை, வம்பு, கிசுகிசுக்கள் போன்றவைகளின் காக்டெயிலாகத்தான் 'எக்ஸைல்' இருக்கும் என்று தோன்றுகிறது. அது தவறா என்பதை நூலை வாசித்த பின்புதான் அறிய முடியும். ஆனால் எத்தனை பெரிய அறிவுஜீவிகளாயிருந்தாலும் மேடையேறின உடனே மிகுந்த பரவசத்துடன் 'விழா நாயகரை' பாராட்டி 'சர்வதேச படைப்பு' என்று உணர்ச்சிவசப்படும் தமிழ் மேடைகளின் மர்மம்தான் இன்னும் விளங்கவில்லை.

'தேகம்' ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த சூட்டின் விளைவாக இந்த நாவலை உடனே வாசிக்கவோ வாங்கவோ தோன்றவி்ல்லை. இத்தனைக்கும் அந்த நாவலை 'நான் இதுவரை எழுதினதிலேயே மிகச் சிறந்த எழுத்து' என்று தேகத்தைப் பற்றி சாருவே முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தாலும் நாவல் என்கிற பெயரில் அவர் செய்த பம்மாத்து அது என்பதுதான் என் அபிப்ராயம். எனவே பரவலான விமர்சனங்களுக்குப் பின்புதான் 'எக்ஸைலை' வாசிப்பது பற்றி முடிவு செய்ய முடியும்.

சாருவின் வாசகர் வட்டம் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்க விஷயம். அப்படியே சாருவையும் நன்றாக எழுதச் செய்யும் நெருக்கடியையும் அவர்கள் தரலாம். சாரு தன் உரையாடலில் தன்னுடைய பிரத்யேக பாணியில் பாசாங்குகளைக் களைந்த சில தருணங்களை வெளிப்படுத்தினார். முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது. 

image courtesy: http://twitpic.com/photos/haranprasanna

தொடர்புடைய பதிவுகள்




suresh kannan

Saturday, December 03, 2011

பெண்குறிமையவாத திரைப்படம்


  கொலம்பியானா' என்கிற பிரெஞ்ச் - அமெரிக்க திரைப்படம் பார்த்தேன். வழக்கமான பழிவாங்கும் கதை. தன் கண்ணெதிரே பெற்றோரை கொலைசெய்யும் மாஃபியா கும்பலை தேடி பழி தீர்க்கும் ஒரு பெண்ணின் கதை. ஆணே பெரும்பாலும் பறந்து சாகசம் செய்யும் பெண் சரசம் மாத்திரமே செய்யும் ஆண்குறிமையவாத (எப்பூடி, இலக்கிய வாசனை வருதா) ஆக்சன் திரைப்படங்களில் இருந்து விலகி ஒரு பெண் (அதுவும் கருப்பினப் பெண்) சாகசம் செய்வதை பிரதானப்படுத்தியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். மற்றபடி அதே லாஜிக் இல்லாத கிளிஷேவான ஆக்சன் காட்சிகள்.  "அவ எலி மாதிரி எங்கிருந்தாவது புகுந்து வருவா" என்று வில்லனே சொல்வது போல் பாதாளக்குழிகளில் பதுங்கி பழி தீர்க்கிறாள் ஹீரோயின். FBI அதிகாரியாக வருபவரின் காட்சிகள் சிறிது நேரமே என்றாலும் (Lennie James) அந்த நபர் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கமான திரைப்படமென்றாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதைக்காக பார்த்து வைக்கலாம்.


suresh kannan

Saturday, November 26, 2011

மயக்கம் என்ன ... செல்வா


இயக்குநர் செல்வராகவன் ஏறக்குறைய ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப தனது படைப்புகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.

பிரத்யேக திறமையிருந்தும் தொடர்ந்து தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆணின் வாழ்க்கையில் நுழையும் பெண், அவனுக்கு தார்மீக ஆதரவாயும் உத்வேகமாகவும் அமைந்து அவனை வெற்றி பெறச் செய்கிறாள். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என்று தொடர்ந்து இந்த விஷயமே அந்தத் திரைப்படங்களின் ஆதார மையமாக இயங்குகிறது. 'மயக்கம் என்ன' திரைப்படத்திலும் அதுவே. துவக்கத்திலிருந்தே அல்லது ஆடி அடங்கின பிறகு தன்னிச்சையாக பெண்ணைச் சரணடைபவர்களால் (பொதுவாக மனைவியிடம்) இதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும்.

சர்வதேச தர புகைப்படக்காரனாய் ஆவதே தன் வாழ்வின் கனவாய்க் கொண்டு ஆனால் யதார்த்தத்தில் காதுகுத்து நிகழ்ச்சிகளே விதித்திருக்கும் கார்த்திக் விஸ்வநாதனை (தனுஷ்) பல சிரமங்களுக்கிடையில் அவனுடைய ஆதர்சப் புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்கிறாள் அவனது மனைவி யாமினி (ரிச்சா).

இந்த டெம்ப்ளேட் சமாச்சாரத்தை முந்தைய படங்களுக்கான அளவிற்கு அழுத்தமும் உழைப்புமில்லாமல் போகிற போக்கில் 'மயக்கம் என்ன?' திரைப்படம் இயங்குவதுதான் இந்த படத்திற்கான காண்பனுபவத்தில் சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. மொண்ணையாக படமெடுத்துத் தொலைக்கும் பல தமிழ் இயக்குநர்கள் மத்தியில் தான் வடிவமைக்கும் காட்சிகளை பிரக்ஞைபூர்வமாக, நுண்ணுணர்வுடன் இயங்கும் அபூர்வமான இயக்குநர்களுள் செல்வராகவனும் ஒருவர்தான் என்பதுதான் அவர் படைப்புகளின் மீது பார்வையாளனுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. 'மயக்கம் என்ன?'வில் அவர் அந்த எதிர்பார்ப்பை போதுமான அளவிற்கு பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

தனுஷின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே போகிறது. இன்னும் பல நல்ல இயக்குநர்கள் கையில் கிடைத்தால் பல உயரங்களை அவரால் தொட முடியும். இந்தப் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை தனியாகவே தோளில் சுமந்துச் சென்றிருக்கிறார் என்று சொல்ல முடியும். அவரை ஓரளவிற்குச் சரியாக பயன்படுத்தியிருக்கும் இயக்குநருக்கும் இதில் பங்குண்டு. அபூர்வமாக நாயகி ரிச்சாவும் (குறிப்பாக இரண்டாவது பகுதியில்) தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக உபயோகப்படுத்தியிருப்பதற்கு செல்வாவை பாராட்டத் தோன்றுகிறது. தனது சிசுசிதைவுக் குருதியை தானே துடைத்தெடுக்கும் காட்சியில் அவர் தனுஷிடம் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான உடல்மொழி யதார்த்திற்கு மிக அருகில் பயணிக்கிறது.

பொதுவாக செல்வராகவனின் திரைப்படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 'மயக்கம் என்ன'வில் ஜீவி பிரகாஷ் என்னதான் சிறப்பாக இசையமைத்திருந்தாலும் பொருத்தமேயில்லாத இடங்களில் பாடல் காட்சிகள் அதுவும் மொண்ணைத்தனமாக வருகின்றன. நண்பனின் நண்பி தன்னைக் காதலிப்பதாக சொல்லும் போது அதிர்ச்சியடைந்து 'நீ என் சிஸ்டர் மாதிரி' என்று அறைவாங்கி விட்டு தொடர்ச்சியேயில்லாமல் 'காதல் என் காதல் அது கண்ணீரிலே' என்று தனுஷ் பாடும் போது  எரிச்சல் வருகிறது. (ஆனால் பத்திருபது திமுசுக்கட்டைகள் வெள்ளைப்பாவாடை உடுத்தி பின்னணியில் ஆடுவதைக் காண ஒரு மாதிரி ஜிவ்வென்று இருப்பது வேறு விஷயம்). படம் பூரர்வுமே இம்மாதிரியான ஒரு தொடர்ச்சியின்மை நம்மை அசெளகரியப்படுத்துகிறது. அவசரமாக கிளறப்பட்ட உப்புமா போல் ஓர் அசட்டுச் சுவையை உணர முடிகிறது. மேலும் 'மயக்கம் என்ன' ஆல்பத்திலேயே எனக்கு மிகவும் பாடலான 'என்னென்ன செய்தோம் இங்கு' படத்தில் இடம்பெறவேயில்லை. டிரைலரில் பார்த்த சில காட்சிகளும்.

'நீ ஒரு சிறந்த புகைப்படக்காரனில்லை' என்று ரிச்சாவால் அலட்சியப்படுத்தப்படும் தனுஷ், ரோட்டில் அமர்ந்திருக்கும் ஒரு பாட்டியை புகைப்படமெடுத்து அவரை மகிழச்செய்யும் காட்சியை பார்வையாளர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. படம் பூராவும் ஓவென்று சலிப்புக் கூச்சல்கள். நான் அபூர்வமாக முதல்நாளே ஒரு தமிழ்த்திரைப்படத்தை காண வேண்டுமென்று ஆசைப்பட்டதின் தண்டனையை திரையரங்கில் பெற்றுக் கொண்டேன்.

ஏற்கெனவே சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கும் இன்னொரு புகைப்படக் கலைஞரை வில்லனாய் சித்தரித்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. செயற்கைத்தனமான கிளிஷேவாக இருக்கிறது. மேலும் தனுஷ் சர்வதேச விருதுக் காட்சிகளெல்லாம் பரவசமாக அல்லாமல் காமெடியாகவே தோன்றுகிறது. செல்வா இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் கடும் உழைப்பு படம் பூராவும் தெரிகிறது. ஏறக்குறைய எல்லா பிரேம்களும் மிகுந்த அழகியல் உணர்வுடன் பதிவாகியிருக்கின்றன.

'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பெரிய அளவிற்கான முயற்சியை எடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் செல்வராகவன்,விஐபி எழுத்தாளர்களின் தீபாவளி மலர் சிறுகதைகள் போல ஏனோதானோவென்று அவசர கதியில் தனது வழக்கமான டெம்ப்ளேட்டை உபயோகித்திருப்பது சலிப்பூட்டுகிறது. அடுத்த முயற்சியிலாவது தனது மயக்கத்திலிருந்து விடுபடுவது அவருக்கும் தமிழ்த்திரைக்கும் நலமூட்டும் விஷயம்.

தொடர்புடைய பதிவுகள்:




 suresh kannan

Friday, November 25, 2011

வொய் திஸ் கொலைவெறி....

பெரும்பாலோனோரைப் போலவே எனக்கும் இந்தப் பாடலை முதன் முறை கேட்கும் போது 'என்னடா கொடுமை' என்று கொலைவெறி ஏறியது. மாறாக சில வருடங்களுக்கு முன்பு தமிழின் முதல் (?) ராப் பாடலான 'பேட்டை ரேப்' (காதலன்) முதலில் கேட்கும் போது உடனே பிடித்துப் போயிற்று. காலம் சற்று கடந்திருப்பது உண்மைதான் போலும்.

ஆனால் கொலைவெறியை கேட்க கேட்க அதில் உள்ள மேஜிக் பிடித்துப் போயிற்று. குறிப்பாக புதுமுக இசையமைப்பாளர் அனிருத் அதை டிசைன் செய்திருக்கும் விதமும் படு கேஷூவலாக தனுஷ் பாடியிருக்கும் விதமும்.

அனிருத்தின் மற்ற பாடல்களையும் உடனே கேட்கும் ஆவல், மன்னிக்க கொலைவெறி உடனே ஏற்படுகிறது.

அங்கிள்ஸ்-லாம் ஒதுங்கிப் போயிடுங்க. கமான் யூத்ஸ் let's sing this soup song togther...

வொய் திஸ் கொலைவெறி....




suresh kannan

Monday, August 22, 2011

தெய்வத்திருமகன் எனும் இதிகாசம்



மூலப்படத்தில் காஃபி ஷாப்பில் சர்வராக பணிபுரியும் ஷான் பென், தனது அடுத்த நிலை பதவி உயர்விற்காக (காஃபி தயாரிப்பாளர்) போராடிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அது வெற்றிகரமாக தோற்றுப் போகும். ஏழு வயது உறைந்து போன மனநிலையில் இருந்து சூழ்நிலைகளின் மூலம் கற்றலில் அவர் முன்னேறத் துடிப்பதின் அடையாளமாக அது இருக்கும். ஆனால் தமிழில் அது விக்ரம் சாக்லேட் டப்பாவை  துடைப்பதோடு நின்று விடுகிறது. அது மாத்திரமல்லாமல், ஷான்பென் பாத்திரம் நுண்ணுணர்வு கொண்ட பாத்திரம் என்பது அவர் தனது உணவு வகையை கறாராக தேர்வு செய்வதிலிருந்தும், பீட்டில்ஸ் இசை அறிந்து வைத்திருப்பதிலிருந்தும், தனக்காக வாதாடும் வக்கீலே தன்னை அவமதிப்பதாக உணரும் போது வெடிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படியாக எதுவுமில்லை. ஒரு பாத்திரத்தை மிக நுட்பமாக பிரத்யேகமாக வடிவமைப்பதற்கும் மொண்ணையாக காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

ஷான் பென்னின் நண்பர்களாக வரும் மாற்றுத் திறனாளிகள் நால்வருமே பிரத்யேக தனி அடையாளங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தனது அன்றாட உரையாடலில் உலக சினிமாக் காட்சியை உதாரணம் காட்டிக் கொண்டேயிருப்பார். ஆனால் தமிழில் அந்த நால்வருமே மொண்ணையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். காலர் பட்டனை இறுக்கக் கட்டிவிட்டு குளறி குளறிப் பேசினால் அவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவ்வளவுதான். பழைய கால ஜெய்சங்கர் படங்களில் ஹீரோ, முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வில்லனின் இடத்திலேயே நடமாடுவான். யாருக்கும் அவனை அடையாளம் தெரியாது. சமகால தமிழ் சினிமாவும் பாத்திர வடிவமைப்பு விஷயத்தில் காலத்தால் உறைந்து போய் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

ஆங்கிலப்படத்தில் குழந்தையின் தாய், அது பிறந்தவுடனே தந்தையிடம் கொடுத்து விட்டு போய்க் கொண்டேயிருப்பாள். ஆனால் தமிழில் அவ்வாறு வைத்து விட முடியுமா? தமிழ் இயக்குநர்கள், பண்பாடு, கலாசாரம் குறித்த கவலையுடன் இந்தக் காட்சியை மாற்றி அமைத்ததாக முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளக்கூடாது. 'லேடீஸ் ஆடியன்ஸ்'-ன் வருகை பாதிக்கப்படலாம், அவர்கள் சங்கடப்படலாம்; எதிர்ப்பு வரலாம் என்கிற வணிக நோக்கம் சார்ந்த சிந்தனையே அந்தப் பாத்திரத்தை இறந்து போவதாக சித்தரிக்கிறது. அவ்வப் போது போட்டோவை காட்டினால் சென்டிமென்ட்டுக்கும் ஆகுது பாருங்கள்.

படத்தின் மிக முக்கிய அம்சமே, மன வளர்ச்சி குன்றியவனால், அதாவது ஏழு வயதுக்குரிய மனநிலை கொண்டவனால் எப்படி ஆறு வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தையை பொதுச் சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளுடனும் கற்றல்களுடனும் வளர்க்க முடியும் என்று அடிப்படை மனிதஉரிமை சார்ந்து நீதித்துறை தன் பார்வையை முன்வைப்பதுதான். சட்டத்தின் பார்வையில் நோக்கும் போது அது சரியானதொன்றுதான். குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு அதுதான் நல்லது. தந்தையின் பாசம் குறித்த மிகையுணர்ச்சியுடன் இயங்கினாலும் ஆங்கிலப்படம் இந்தப் புள்ளியையும் அடிநாதமாக கொண்டிருக்கும். ஆனால் தமிழிலோ சட்டத்தை ஏதோ மோசமான வில்லனைப் போல சித்தரித்திருப்பார்கள்.

இப்படியாக, ஹாலிவுட்டிலிருந்து உருவப்பட்ட தெய்வத்திருமகள், தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான கச்சடாக்களால் பிசையப்பட்டு எத்தனை மோசமானதொரு பண்டமாக கெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கமாகவே நிறுவ முடியும். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 


தெய்வத்திருமகளையொட்டி, தமிழ் சினிமா சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கு சராசரி பார்வையாளர்களின் பொதுப்பார்வையில் தோன்றும் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.

1) தமிழ் சினிமாவில் தொடர்ந்து வணிக மசாலாக்களை உள்ளடக்கிய மோசமான திரைப்படங்களே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தெய்வத்திருமகள் போன்று அபூர்வமாக வெளியாகும் நல்ல திரைப்படங்களை உங்கள் மேதமையை காட்டிக் கொள்வதற்காக இப்படி குதறியெடுக்கிறீர்களே, இது நியாயமா?

மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். குத்துப்பாடல், ஆபாச நகைச்சுவை, பஞ்ச் டயலாக் வெற்று வீராப்புகள் போன்ற வணிகநோக்கு சினிமாக்களின் வடிவமைப்புகளைத் தாண்டி அல்லது அதைத் தவிர்த்து ஒரு சினிமா வந்தாலே அது 'நல்ல சினிமா' என்கிற உணர்வு நமக்குள் தோன்றி விடுகிறது. ஊடகங்களும் சம்பந்தப்பட்ட இயக்குநர்களும் இதை இன்னும் ஊதிப் பெருக்கி 'உலக சினிமா' 'சர்வதேச தரம்' 'ஆங்கிலப்படங்களுக்கு நிகராக' என்றெல்லாம் தம்பட்டமடித்துக் கொள்கிறார்கள். (இவ்வாறான போலித்தனங்கள் அல்லாமல் 'வணிக நோக்கத்திற்காகத்தான் படமெடுக்கிறேன்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்ளும் பேரரசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி..போன்றவர்களை அந்த ஒரு காரணத்திற்காகவே பாராட்டித் தொலைக்கலாமோ என்கிற நிலைக்குத் தள்ளி விடுகிறது இவர்களின் போலித் தம்பட்டங்கள்).

சர்வதேச அளவில் வெளியாகும் சிறந்த படைப்பாளிகளை, சினிமாக்களை தொடர்ந்து அவதானிப்பதின் மூலம் 'நலல சினிமா' என அறியப்படும் இவ்வகையான போலிகளை உடனேயே அடையாளம் காண முடியும். போலிகள் என்றால் கூட பரவாயில்லை. மோசமாக நகலெடுக்கப்பட்ட போலி என்பதுதான் கொடுமை. மோனாலிசா படத்தை காப்பியடிக்கிறேன் பேர்வழி என்று  கொல்லங்குடி கருப்பாயியின் படத்தை வரைந்து வைத்தால் எப்படி? (கருப்பாயியின் ரசிகர்கள் உடனே பாய வேண்டாம். ஓர் உதாரணத்திற்காகச் சொன்னது).

தமிழ் சினிமாக்களைப் பற்றி எழுதும் போது சற்று அதீத கோபமும் மேதமைத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதான பாவனையும் வெளிப்படுவதில் சற்று உண்மையிருக்கலாம். நல்ல கலையை நுகர்பவர்களுக்கு தன்னிச்சையாக வெளிப்படும் உணர்வுதான் அது. குட்டி குட்டி தேசங்களிலிருந்து கூட மகத்தான திரைப்படங்கள் வெளியாகும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும், பண்பாட்டு பின்புலமுள்ள  தேசத்திலிருந்து பெரும்பாலும் குப்பைகளே வெளியாவது குறித்து ஆதங்கமும் கோபமும் கூட உபகாரணங்கள். அதனால்தான் பாலைவனத்தில் இரண்டு நாட்கள் நா வறண்டு நடந்தவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கிடைத்தைப் போன்று 'ஆரண்ய காண்டம்' போல அபூர்வமாக நல்ல முயற்சிகள் வந்து விடும் போது சற்று உயரமாகவே தூக்கிக் கொண்டாடும் உணர்வு தோன்றி விடுகிறது.

2) ஆங்கிலம் தெரியாதவர்களும், உலக சினிமாக்களைப் பார்க்கும் ரசனையும் வாய்ப்பும் இல்லாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு - அது திருடப்பட்டால்தான் என்ன - அதைப் போன்ற கதைகளைக் கொண்ட படங்களை தமிழில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறதே? அதில் என்ன உங்களுக்கு பிரச்சினை?

சத்யராஜூம் கவுண்டமணியும் நடித்த நகைச்சுவைக் காட்சியொன்று. இரண்டு பேரையும் லாக்கப்பில் போட்டுவிடுவார்கள். கவுண்டமணி அவமானத்திலும் பயத்திலும் புலம்பிக் கொண்டிருக்க, சத்யராஜ், கொட்டாவியுடன் எழுந்து சொல்வார். 'இந்த லாக்கப்லதான் கொசுத் தொல்லையே கிடையாது'.

ஆக.. தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையும் இப்படித்தான் ஆகி விட்டது. எந்த சூழலுக்கும்  ஊழலுக்கும் பழகி விடும் தன்மையும் எதையும் சகித்துக் கொண்டு வாழும் தன்மையும் சினிமாவிற்கும் பொருந்திப் போய் விட்டது போலும். எனவேதான் அரைவேக்கான படைப்போடு திருப்தியடைந்து விடுகிறான். ஒரு நல்ல எழுத்திலிருந்து, படைப்பிலிருந்து, சினிமாவிலிருந்து பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று இன்னொரு படைப்பை உருவாக்குவதில் தவறொன்றுமில்லை. இன்னொரு பண்பாட்டின், கலாச்சாரத்தின் பாதிப்புகளோடு மரபுத் தொடர்ச்சியுடன் பாதிப்புடன் உருவாவதுதான் (உருவுவது அல்ல) கலையின் வரலாறு.

ஒரு நல்ல படைப்பினால் பாதிப்படைந்து அதற்கு உரிய மரியாதையை அளித்து அதையும் தாண்டி ஒரு படி உயர்ந்து நிற்கிற கலைப்படைப்பாக உருவாக்குபவரை நாம் கலைஞன், படைப்பாளி என்லாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக  நிகழ்வது வேறு. எந்தவொரு சர்வதேச சினிமாவையும், சினிமா ஆர்வலர்களையும் தாண்டி மிக ஆவலாக எதிர்பார்ப்பவர்கள் அதன் இயக்குநர்கள்தான் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் சராசரி பார்வையாளனின் மனநிலைக்கு எது ஒத்துவருமோ, இதமாக இருக்குமோ அந்தப் படத்தின அவுட்லைனையும் சில காட்சிகளையும் மாத்திரம் சுட்டு அதற்குரிய மரியாதையையும அளிக்காமல் வணிக நோக்கத்திற்காக தமிழ் சினிமாவின் சம்பிதாயமான கச்சாடாக்களை அதில் பிசைந்து தந்து மூலத்தையும் அவமரியாதை செய்து விட்டு அதை 'சுய படைப்பாக' பிரகடனம் செய்வதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

இதை சம்பந்தப்பட்ட குழு மாத்திரம் செய்யாமல் பெரும்பாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையே இந்த களவாணித்தனத்திற்கு உடன்போகிறது. ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காத மாஃபியாத்தனமான கட்டுப்பாட்டோடு அமைதி காப்பது மட்டுமன்றி, இந்த போலிப் படைப்புகளை வாய்கூசாமல் புகழவும் செய்கின்றனர். தெய்வத்திருமகளின் பத்திரிகை விளம்பரங்களை கவனித்தால் தினந்தோறும் ஒரு இயக்குநர் அதைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகளை முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றனர். அந்த வரிசையில் ஓர் இயக்குநர் சொன்னது "இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களின் வரிசையில் தெய்வத்திருமகளை வைக்கலாம்". 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' என்று ஓவராக கூவும் நகைச்சுவைக்காட்சி நினைவிற்கு வருகிறதா? இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இது போன்ற திருட்டுப் படைப்பு இயக்குநர்களும் நடிகர்களும் தொலைக்காட்சிகளில் 'திருட்டு விசிடிகளில் பார்க்காதீர்கள்' என்று வைக்கும் வேண்டுகோள்கள்தான்.

இவ்வாறான திருட்டுக்களை 'தமிழில் பார்க்க இயலும் ஒரேவாய்ப்பிற்காக' நாம் ஆதரிப்பதும் அதற்கு உடன்போவதும் எத்தனை பெரிய தவறு?

இன்னொன்று. உலக சினிமா என்று கருதப்படும் படைப்புகள், ஒரு சராசரி பார்வையாளனுக்கு புரியாது, ரசிக்க முடியாது  என்று உலவும் கருத்துக்கள் எல்லாம் ஒரு மாயை. முயற்சி ஏதும் செய்யப்படாமல் தாழ்வு மனப்பான்மையின் முனையில் நின்று சொல்லப்படுபவை. இன்று உலக சினிமா பார்வையாளர்களாக இருக்கும் பெரும்பான்மையோர் அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து வந்தவர்கள்தான். நம்முடைய ரசனையை நாமே தாழ்த்தி மதிப்பிட்டுக் கொள்வதும் அதையே சொல்லி்த் திரிவதும்  அறியாமையே அன்றி வேறில்லை.

3) ஊர்ல உலகத்துல எவனுமே திருடலையா? என்னமோ நீங்கதான் ரொம்ப யோக்கியம் போல சுவுண்டு வுடறீங்க? ஒலக சினிமா பார்த்துக் கிழிக்கிற நீங்களே நெட்லதானே இருந்துதானே அதையெல்லாம் டவுன்லோட் செய்யறீங்க?

என்னைப் பொறுத்தவரை இப்படியாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்ப்பது நிச்சயம் தவறுதான். அதை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். ஒரு படைப்பிற்கு தகுந்த சன்மானம் அளிக்காமல் நுகர முயல்வது நிச்சயம் அயோக்கியத்தனம்தான். (இம்மாதிரியான கட்டணங்களில் அதிகம் கொள்ளையடிப்பது இடைத்தரகர்கள்தான் என்பது வேறு விஷயம்). அதனால் தமிழில் நல்ல சினிமா முயற்சியாக அறியப்படுபவைகளை அரங்கில் சென்று பார்ப்பது என்பதை ஒரு தார்மீக நியாயமாக சுயக்கடடுப்பாடாக வைத்துள்ளேன்.

ஆனால் சினிமா மீது அதீத ஆர்வமுள்ளதைத் தவிர வேறெந்த நோக்கமும் அல்லாத தனிநபர் செய்வதற்கும் அதையே பல கோடிகள் சம்பாதிப்பதற்கான ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ள முயலும் வணிகர்களுக்கும் வித்தியாசமுள்ளதா இல்லையா? அது மாத்திரமல்ல. மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை 'தமிழின் உலக சினிமா' என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும்? இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல.

4) மூலப் படைப்பை acknowledge செய்யாதது அத்தனை பெரிய குற்றமா என்ன? சிலாகிக்கப்படும் அந்த மூலப்படைப்பே இன்னொரு பிரதியின் நகலாக இருக்கும் வாய்ப்பிருக்கிறதே? 

இருக்கலாம். ஆனால் அது நிறுவப்படாத வரை நாம் அறிந்திருப்பதுதான் மூலப்படைப்பாக இருக்க முடியும். வெளிநாட்டுத் திரைப்படங்களை நககெலடுப்பது என்பது சமீபத்தில் துவங்கினதொன்றோ அல்லது கமல்ஹாசன்தான் இதை நிறையச் செய்திருக்கிறார் என்பதோதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சினிமா என்கிற நுட்பம் இங்கு இறக்குமதியானவுடன் கூத்து, நாடக வடிவம்தான் அப்படியே திரைப்படச் சுருளுக்குள் புராணப்படங்களாக சென்றன. அது தீர்ந்தவுடன், மக்களின் மனநிலையும் மாறினவுடன் சமூகப்படங்கள் உருவாகத் துவங்கின. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் பிரதான நடிகர்களாக புழங்கின காலகட்டத்திலேயே வெளிநாட்டுத் திரைப்படங்களும் அயல்மாநிலத் திரைப்படங்களும் (வங்காளம்) அனுமதி ஏதும் பெறப்படாமல் தமிழில் அதன் பிரத்யேக மசாலா கலந்து உருமாறத் துவங்கின. திரைத்துறையினர் மாத்திரம் அறிந்திருந்த இந்த ரகசியங்களும் சர்ச்சைகளும் பார்வையாளர்களின் கவனத்திற்கு வராமலே போனதால் பெரிதும் எவ்வித சர்ச்சையும் உருவாகாமல் போனது. தமிழ் சினிமாவின் பிரம்மாக்களின் பெருமையும் அதுநாள் வரை காப்பாற்றப்பட்டு வந்தது. 

ஆனால உலக சினிமா பற்றிய தேடலும் நுட்பம் காரணமாக அதை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் கூட பிரம்மாக்கள் அதையே தொடர்வது, சமூகத்தை முட்டாள்களின் கூட்டமாக, வணிகர்களின் பார்வையில் தங்கள் பொருட்களின் நுகர்வோர்களாக மாத்திரமே பார்ப்பது கொடுமை. என்றாலும் கெளதம் மேனன், சசி, வெற்றிமாறன் போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் தாம் உருவாக்கிய திரைப்படத்திற்கும் வெளிப்படையான ஒற்றுமை ஏதுமில்லாமலேயே 'அதன் பாதிப்பில்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கியதாக அறிவித்து திரைப்படத்திலும் அத்ற்கான முறையான ஒப்புதலை அளிததார் மகேந்திரன். அதுதான் ஒரு கலைஞனின் அடிப்படை அறமாக, நேர்மையாக இருக்க முடியும். 

suresh kannan

Friday, August 12, 2011

தெய்வத் திரு(ட்டு)மகன்


சரி. முதலில் நல்ல விஷயங்களைப் பேசி விடலாம்.

அதிகார அமைப்புகள் எந்தவொரு சட்ட,திட்டத்தையும் உருவாக்கும் போதும் பெரும்பாலும் அவை சமூகத்தின் மையத்தையே கவனத்தில் கொள்கின்றன. சிறுபான்மை, விளிம்புநிலை போன்ற சமூகங்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. மனித உரிமை அமைப்புகள், தன்னார்வல அமைப்புகள் போன்றவைதான் இவர்களுக்காக குரல் தரவேண்டியிருப்பது மாத்திரமல்ல, பாதிப்பை அடையும் சமூகமும் தனக்கான உரிமைகளுக்காக தானே போராட வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இது இப்படியென்றால் பொதுச் சமூகமும் விளிம்புநிலைச் சமூகத்தை வெற்று அனுதாப பாவனையுடன் உள்ளூற வெறுத்து ஒதுக்குகிறது. எல்லாமே விளம்பரப் படங்களில் வரும் பளபளப்பான விஷயங்கள் போல இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. பக்கத்து இருக்கையில் ஒரு திருநங்கை அமர்வதை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. கட்டணம் செலுத்த தயாராயிருந்தும் கூட திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் பற்றின செய்தியை நாளிதழ்களில் வாசித்திருக்கலாம்.

விளிம்புநிலை மனிதர்களுக்கென்று ஒரு மனமிருக்கும், பிரத்யேகமான உலகிருக்கும், பாசமும் மகிழ்ச்சிகரமான தருணங்கள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை எவரும் யூகிக்கவோ கவனிக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் சமூகத்தின் ஓரத்தில் வாழ்ந்து அப்படியே மறைந்து தொலைய வேண்டுமென்றுதான் பொதுச்சமூகம் விரும்புகிறது.

மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை நம் தமி்ழ்சினிமா இதுவரை எப்படி சித்தரித்திருக்கிறது என்று பார்க்கும் போது ஏமாற்றமாகவே இருக்கிறது. மிகையுணர்ச்சியுடன், செயற்ர்கையாக் கட்டமைக்கப்பட்ட பரிதாபத்துடன், பார்வையாளர்களுக்கு அவர்களின் மீது அதீத பரிதாபம் அல்லது பயம் ஏற்படும்படியான அசட்டுத்தனத்துடன் காட்டியிருக்கிறதே ஒழிய, இயல்பாக சித்தரித்ததேயில்லை. சிப்பிக்குள் முத்து, அக்னிசாட்சி, குணா, அஞ்சலி, ஆளவந்தான், குடைக்குள் மழை, பிதாமகன் என்று சட்டென்று நினைவுக்கு வருகிற சில உதாரணங்களைச் சொல்லலாம். இதில் பாலச்சந்தரின் அக்னிசாட்சி மாத்திரம் சற்று சுமாரான முயற்சி. ஆனால் இவைகளை இந்திய இயக்குநர் அபர்ணா சென் இயக்கிய 15 பார்க் அவென்யூ - போன்ற உதாரணத்துடன் ஒப்பி்ட்டால் தமிழ் சினிமா எத்தனை பரிதாபகரமான நிலையில் நிற்கிறது என்பதை உணரலாம். உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்கிற கேள்வியும் இங்கு தோன்றுகிறது.

இயக்குநர் விஜய் இயக்கிய 'தெய்வத் திருமகளும்' இந்த வரிசையில் அச்சு பிறழாமல் இயங்குகிறது. இந்தத் திரைப்படத்தை மூன்று அடுத்தடுத்த நிலைகளில் இருந்து பார்க்கலாம்.

முதல் நிலையில் பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் வழக்கமான ஆபாசங்களிலிருந்தும் அசட்டுத்தனங்களிலிருந்தும் பெரும்பாலும் விலகி நிற்கிற காரணத்திற்காகவே இந்தத் திரைப்படத்தையும் இயக்குநர் விஜய்யையும் பாராட்டலாம். 'பஞ்ச் டயலாக்' மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இன்னும் ஒருபடி மேலே ஏறுவதற்கான வாய்ப்பிருந்தும் இப்படியொரு மாற்று முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்காக விக்ரம் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அவரிடம் வெளிப்படும் செயற்கையான பாவனைகளைத் தவிர்த்து, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த்ப் பாத்திரத்திலிருந்து பெரிதும் விலகாமலிருந்தது ஓர் ஆறுதல். நாசர் மற்றும் சிறுமியின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

ஒளிப்பதிவாளர் நீரவ்-ஷாவின் பங்களிப்பு அபாரமானது. ஊட்டியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம். அந்த அளவில் கலலா கட்டும் முயற்சியில் படம் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாவது நிலையில் ஒரு படைப்பை அடிப்படை தர்க்க நிலையில் நோக்கும் பார்வையாளனின் நிலையில் பார்க்கும் போது படத்தில் தனித்தன்மையுடன் வலிமையாக உருவாக்கப்பட்ட பாத்திரங்களோ, காட்சிகளில் எந்தவிதமான தர்க்க ஒழுங்கோ என்று எதுவுமில்லை. எல்லாமே மொண்ணைத் தனமான அசட்டுத்தனங்களுடன் இயங்குகிறது.

அமலாபாலின் பாத்திரம் ஒன்று போதும். குழந்தைகளிடம் அத்தனை கருணையுடன் பழகுவதாக அறிமுகப்படுத்தப்படும் இவர், பின்பு ஏன் அத்தனை குரூரமாக குழந்தையை தந்தையிடமிருந்து பிரித்து வைக்க ஒப்புகிறார் என்பது புரியவில்லை. அதே போல் அவரது தந்தையும் சொல்லி வைத்தாற் போல் கிளைமாக்சில் சட்டென்று திருந்தி விடுகிறார். வக்கீல்களை இத்தனை கீழ்த்தரமாக சித்தரித்த படமொன்றும் சமீபத்தில் வந்ததாய் நினைவில்லை. தனியார் பேருந்து நடத்துநர்கள் டிக்கெட்டிற்காக கூவுவது போன்று வக்கீல்கள் கேஸிற்காக அலைகிறார்கள். நாசர் பாத்திரம் பழைய கால நம்பியார் பாத்திரத்திற்கு சற்றும் குறையாத தோரணையிலிருக்கிறது. மனநல வளர்ச்சி குன்றிய கிருஷ்ணாவிற்கும் தனது மனைவிக்கும் முறைகேடான உறவிருக்குமோ என்று சந்தேகப்படுகிறார் கிருஷ்ணாவின் சகதொழிலாளி ஒருவர்.(எம்.எஸ்.பாஸ்கர்). இது தொடர்பான காட்சிகள் கீழ்த்தரமான நகைச்சுவை சிந்தனையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாறாக அவரின் சந்தேகத்தை, மனஉளைச்சலை subtle ஆக சொல்லியிருந்தால் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பிறகு நீதிமன்றத்தில் கிருஷ்ணாவிற்கு எதிராக சாட்சி சொல்லும் இவர், அடுத்த காட்சியிலேயே கிருஷ்ணாவுடன் கண்ணீர் விட்டு கதறுவது என்ன காட்சித் தொடர்ச்சியோ?

ஒரு காட்சியில் கிருஷ்ணா மேல் தெரியாத்தனமாக மோதி விடுகிறார் பெண் வக்கீலான அனுஷ்கா. "என்னய்யா நீ.. இத்தனை செலவு செஞ்சு அனுஷ்காவைப் போட்டுட்டு கொஞ்சம் கூட கிளுகிளுப்பே இல்லாம" என்று தயாரிப்பாளர் இடையில் திட்டியிருப்பார் போலிருக்கிறது. அந்த இடத்தில் CG மாயமாலங்களோடு இயக்குநர் ஒரு பாட்டு போட்டிருக்கிறார் பாருங்கள். தமிழ்சினிமா திருந்த வாய்ப்பேயில்லை என்று நான் எரிச்சலுடன் மனதிற்குள் முனகிக் கொண்டேன்.

இப்படியாக ஒரு படைப்பில் குறைந்த பட்ச அடிப்படையான தர்க்க ஒழுங்கைஎதிர்பார்ப்பவர்கள இதில் காணப்படும் பல பிழைகளை பெரிய பட்டியலாகவே போட முடியும்.

ஒளிப்பதிவு தமிழ்சினிமாவின் சம்பிரதாயமான தரத்தை தாண்டவில்லையென்றாலும் நான் கவனித்த வரையில் ஒரேயொரு இடத்தில் பாத்திரத்தின் அகவுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தி்ல் ஒளிப்பதிவு அமைந்திருப்பதாக உணர்ந்தேன். அமலாபால் தன் காதலனிடம், "குழந்தையை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம், திருமணம் கூட அத்தனை முக்கியமில்லை' என்று உரையாடும் காட்சியில் காமிரா அமலா பாலின் முகத்தை ஃபோகஸிலும் காதலனின் முகத்தை அவுட் ஆஃப் போகஸிலும் காட்டுகிறது. பொதுவாக இவ்வாறு காட்டும் போது, ஃபோகஸில் காட்டப்படும் பாத்திரம் பேசி முடித்தவுடன், அவுட் ஆஃப் போகஸ் பாத்திரம் ஃபோகஸிற்கு வரும். ஆனால் இந்தக் காட்சியில் கேமிரா இறுதிவரையில் முதல் நிலையிலேயே நீடிக்கிறது. காதலன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மறையக்கூடிய முடிவைக் கூட அவள் எடுக்கத் தயாராயிருக்கிறாள் என்பதை இது சூசகமாக வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறேன்.


மூன்றாம் நிலையில்தான் பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதாவது I AM SAM என்கிற ஹாலிவுட் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தவர்கள், தெரியாமல் இதைப் பார்க்க வந்திருந்தால் தொலைக்காட்சி சீரியல் காண திணிக்கப்பட்டவர்கள் போல் மகா அவஸ்தைக்கு ஆளாகியிருப்பார்கள். ஆம், தெய்வத்திருமகள், குறிப்பிட்ட ஹாலிவுட் படத்திலிருந்து மிக மோசமாக நகலெடுக்கப்பட்ட ஒரு திருட்டுப் பிரதி. கதையின் அவுட்லைன் முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் ஹேர்ஸ்டைல், உடை (அங்கே கோட் என்றால் இங்கே ஸ்வெட்டர்), உடல்மொழி, வசனங்கள் போன்றவை மிக அலங்கோலமாக காப்பியடிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஹாலிவுட் படத்தில் ஷான் பென், சிக்னலைக் கடந்து வரும் போது சிவப்பில் முறையாய் நின்று வருவார். படத்தில் போகிற போக்கில் இந்தக் காட்சி சில விநாடிகள் காட்டப்படும். ஏழு வயதுச் சிறுவனுக்குரிய மனவளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் முறையான குடிமை உணர்வையும் ஒழுங்குணர்வையும் அவன் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளமது. படத்தின் துவக்கத்திலேயே இது பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாய் நிறுவப்பட்டு விடும்.

ஆனால் இதே காட்சி தமிழ்படத்தில் குதறி எடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா மகளைக் காண சில நிமிடங்களே நேரமிருக்கும் போது கூட சிக்னல் சிவப்பில் பரபரப்பான பின்னணி இசையுடன் காத்திருப்பதாக இயக்குநர் இந்தக் காட்சியை 'தமிழ்ப்' படுத்தியிருக்கிறார். போக்குவரத்து விதிகளை ஒழுங்காக மதிப்பதென்பது பொதுவாக மேற்கத்தியர்களுக்கு ரத்தத்தில் ஊறிப்போனதொன்று. அதைக் கொண்டு வந்து இங்கு சென்டிமென்ட்டாக இணைப்பது எத்தனை அபத்தம்?. ஆனால் இதே கிருஷணாதான் நாசரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து தப்பித்துப் போகிறான். ஏனாம்? நாசரின் மகனின் உயிரைக் காப்பாற்ற. விதிகளை மதிக்கும் ஒழுங்குணர்ச்சி இங்கு மீறப்படுகிறது. மருந்து வாங்கி வந்தவுடன் மீண்டும் வந்து தானே சிறையில் அடைபட்டுக் கொள்கிறான். ஏழு வயதிற்கான மனநிலையில் இயங்குபவனால் எத்தனை சென்டிமென்ட்டாக நடந்து கொள்ள முடிகிறது பாருங்கள்.

(தொடரும்)

Friday, August 05, 2011

அவன் இவன்தான் பாலா




பாலாவின் 'அவன் இவன்' பார்த்தேன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே இது எனக்கு ஏனோ ஏற்படுத்திய ஒவ்வாமையையும் பாலா தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தேய்வழக்குகளையும் இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அதனாலேயே இதை உடனே பார்க்க எனக்கு எவ்வித சுவாரசியமும் ஏற்படவில்லை.

இத்திரைப்படம் குறித்து பரவலாக உரையாடப்பட்ட குறைகள், அதிருப்திகள், முணுமுணுப்புகள் போன்றவற்றை படத்தைப் பார்த்த பிறகு நானும் உணர்ந்தேன். ஒழுங்குபடுத்தப்பட்ட கதை, திரைக்கதை போன்ற வஸ்துகளைப் பற்றி கவலைப்படாமல் நகைச்சுவை சம்பவங்களின் மூலமே படத்தை நகர்த்தி விட்டு, பிறகு யாரோ தொட்டு உசுப்பினாற் போல் கவலையடைந்து விழித்து 'ஏதோ செய்ய வேண்டும்' என்று ஹைனஸை சாகடித்து கூடவே படத்தையும் சாகடித்து விட்டார்கள்.

பாலா தம்முடைய படங்களில் தொடர்ந்து சில விஷயங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் அதை தன்னுடைய அழுத்தமான அடையாளமாக வெளிப்படுத்துவதற்கு எதிர்மறையாக தன்னுடைய தேய்வழக்கு அடையாளமாக மாற்றி விட்டாரோ என்று தோன்றுகிறது. வழக்கமாக அவரது படங்களில் தோன்றும் பெரும்பாலான பாத்திரங்களும் நிகழ்வுகளும் 'அவன் இவனிலும்' தோன்றுகின்றன.

செம்பட்டைத் தலையுடன், முரட்டுத்தனமாக ,யாருக்காவது விசுவாசமாய் இருந்தே தீரும் விளிம்புநிலை மனிதர்கள், அவர்களால் துரத்தப்பட்டு அடிவாங்கி வெறுத்து பின்பு அவர்களையே காதலிக்கும் அக்ரஹாரத்து, நடுத்தர வர்க்கத்துப் பெண்கள், திரைக்கதைக்குள் செயற்கையாக திணிக்கப்படும் திரையின் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள், காமெடி நடிகர்களை விடவும் மோசமாய் சித்தரிக்கப்படும் கீழ்நிலை காவல்துறையினர், இன்னொரு புறம் மிக முரட்டுத்தனமாய் சித்தரிக்கப்படும் உயர்நிலை காவல்துறையினர், கோமாளிகளாய் சித்தரிக்கப்படும் மாஜிஸ்ரேட் நீதிபதிகள்... என்று எல்லாம் அவன் இவனிலும் உண்டு. அதிகாரத்தை வைத்திருப்பவர்களின் மீது அடிபணிபவர்களுக்கு பொதுச் சமூகத்திற்கு உள்ளார்ந்த ரகசிய வெறுப்பு உண்டு. இந்த உளவியல் உணர்வைப் பயன்படுத்தி அதற்கான வடிகாலான காட்சிகளை அமைத்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுவதில் பாலா சமர்த்தராய் இருக்கிறார். எனவேதான் அவரது படங்களில் வரும் காவல்துறையினரும் நீதித்துறையினரும் கோமாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். பாலா இதை திட்டமிட்டே செய்கிறாரா அல்லது அவரது இளமைக்கால வாழ்வியல் அனுபவங்களையொட்டி தன்னிச்சையாக செய்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.

ஆனால் இத்தனை தடைகளையும் மீறி எனக்கு ஒரளவிற்கு பிடித்திருந்ததற்கு காரணம் இதிலிருந்த அடித்தட்டு மக்களின் 'பச்சையான' நகைச்சுவைக்காகவும் (இங்கு பச்சை என்பதை RAW என்றும் வாசிக்கலாம்) பாலா தனது பிரத்யேகமான திறமையின் மூலம் பாத்திரங்களை அதனதன் தனித்தன்மையுடன் வலுவாகவும் கச்சிதமாகவும் உருவாக்கியிருந்த காரணத்திற்காகவும்.

இதில் ஏன் விஷாலுக்கு 'ஒன்றரைக்கண்' தோற்றத்தை பாலா வைக்க வேண்டும் என்று யோசித்தேன். அந்தப் பாத்திரத்திற்கு அந்தத் தோற்றத்தை வைத்தேயாக வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை கதை நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாலா தன்னுடைய படங்களில் பிரபல ஹீரோக்களுக்கு ஏற்கெனவே சமூகத்தில் பதிந்துள்ள, பிம்பங்களை அழுத்தமாக சிதைக்க விரும்புகிறார்.அப்போதுதான் பார்வையாளன், அந்த நடிகர்களை பாலாவின் படத்திலுள்ள பாத்திரங்களாக பார்க்கவும் உணரவும் முடியும். ஒவ்வொரு திரைப்பட இயக்குநரும் பின்பற்ற வேண்டிய விஷயமிது. ஆனால் பெரிதும் பரவலாக பாராட்டப்பட்ட விஷாலை விட ஆர்யாவின் இயல்பான நடிப்புதான் எனக்குப் பிடித்திருந்தது. இத்தனைக்கும் பொதுவாக நான் ரசிக்கும் தமிழ் நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இல்லை. பழைய திரைப்பட இயக்குநர் குமார், ஆர்யா கூடச்சுற்றும் சிறுவன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பு.

இத்திரைப்படத்தில் பிடித்திருந்த இன்னொரு அம்சம், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அடித்தட்டு மக்களின் பாசாங்கற்ற நகைச்சுவை. சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்ற முறையில் இன்னும் கூட இயல்பான ஆபாசமான, பாலியல் சார்ந்த கிண்டல்களும், பொதுவாக பிறப்புறுப்புக்களை உதாரணப்படுத்தி நடைபெறும் உரையாடல்களும் தினமும் கேட்கக் கிடைத்தவை. 'சாமானைப்பிடிச்சு ஒண்ணுக்கு போகத் தெரியாது' என்பதெல்லாம் அங்கே மிகச் சாதாரணமான கிண்டல். நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட நடுத்தர வயதைக் கடந்த பெண்மணியொருவர், சேலையை உயர்த்திக் கொண்டு நின்றபடியே சாக்கடையில் சளசளவென்ற சப்தத்துடன் சிறுநீர் கழிக்கும் கோலமே ஏறக்குறைய நாங்கள் அன்றாடம் காலையில் காணும் காடசி. சுருட்டு பிடித்தபடியே போகிற வருகிற ஆண்,பெண்களை வயது வித்தியாசமில்லாமல் பாலியல் தொடர்பான கிண்டல்களை உதிர்த்தபடியே இருக்கும் அவர் இரவுகளில் சாராயம் குடித்து விட்டு சொரணயில்லாமல் எங்கள் வீட்டுத் திண்ணையில் மல்லாந்திருப்பார். நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு இது அருவருப்பானதாக, ஆபாசமானதாக தோன்றியிருக்கலாம். ஆனால் இதுதான் அங்கு யதார்த்தமான வாழ்வியல் நடைமுறை. இதை பாலா கூடுமான அளவிற்கான நாகரிகத்துடன் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.

வலுவான கதைப்பின்னணியும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட திரைக்கதையும் இல்லாத காரணத்தினால் அனைத்தும் முயற்சிகளுமே வீணாகிவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம், இயக்குநரான பாலாதான்.

suresh kannan

Wednesday, August 03, 2011

விசித்திர நிறப் பிரச்சினை



புதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.

ஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை? அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன்? சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா?. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா? மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா?

குறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.

இருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது?

மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)

suresh kannan

Thursday, July 28, 2011

மதிய நேர நாய் பிழைப்பு (DOG DAY AFTERNOON)



இந்தச் சுமாரான படத்தைப் பற்றி எழுத ஒரே ஒரு காரணம் - அல்பசினோ.

இரண்டு அமெச்சூர் குற்றவாளிகளால் 1972-ல் ப்ரூக்ளின் நகரில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளை முயற்சியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமிது.

ஒரு மதிய நேரத்தின் சாவகாசமான காட்சிகளோடு துவங்குகிறது திரைப்படம். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தனது இரு நண்பர்களோடு நுழைகிறார் அல்பசினோ. (சன்னி). துவக்கத்திலேயே ஒருவன் பயந்து ஓடிவிட, அதீத பதட்டத்தோடு தனது சாகசத்தை தொடர்கிறார் அல்பசினோ. அதிலிருந்து படம் முழுவதும் அவர் ராஜ்ஜியம்தான். வங்கியில் பணமில்லாததைக் கண்டு எரிச்சலடைவதும் வங்கி ஊழியர்களை கருணையுடன் மிரட்டுவதும் (?!) அதீத ஜாக்கிரதையாய் இருந்தும் சில நிமிடங்களிலேயே காவல்துறை வங்கிக் கட்டிடத்தை சூழ்ந்து கொண்டதைக் கண்டு புரியாமல் பயப்படுவதும், எல்லாமே சொதப்பினாலும்.. ஏதோவொரு நம்பிக்கையில்அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை தனது அரைகுறை நம்பிக்கைத் தோழனுடன் முயல்வதும்...



படம் முழுக்க தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார் அல்பசினோ. அவருக்கென்ற உருவாக்கப்பட்ட பாத்திரம் போல் கச்சிதமாக நிகழந்திருக்கிறது உண்மைச் சம்பவம். பிரதான பாத்திரத்தின் அக உணர்வுகளை துளிக்கூட குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்வது ஒரு சிறந்த கதைசொல்லியின் அடிப்படை தகுதி. நடிகரும் இயக்குநரும் கைகோர்த்துக் கொண்டு இதை சாதித்திருக்கிறார்கள்.

சீரியஸான பாவனையில் இயங்கும் இந்தப் படத்தை பல இடங்களில் சிரித்துக் கொண்டே பார்க்கலாம். அல்பசினோவின் பதட்டம் நமக்குச் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒருசேர வழங்குகிறது. இந்த உணர்வையே வங்கி ஊழியர்களும் அடைந்திருக்கலாம். ஏனெனில் நம்பவே முடியாதபடி அந்த ஊழியர்களும் கொள்ளையர்களுடன்.. மன்னிக்க கொள்ளையடிக்க முயன்ற இந்தக் காமெடியர்களுடன் ஒத்துழைத்துச் செல்கிறார்கள். இது உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால்... 'என்னய்யா, லாஜிக்கே இல்லையே' என்று புறக்கணித்துச் சென்றிருக்கலாம். "I'm supposed to hate you guys [Wojtowicz/Naturile], but I've had more laughs tonight than I've had in weeks. We had a kind of camaraderie." என்கிறருக்கிறார் உண்மைச் சம்பவத்தை எதிர்கொண்ட வங்கியின் மேனேஜர். 12 ANGRY MEN போன்ற படத்தை இயக்கிய, Sidney Lumet இந்தப்படத்தை அதிக பட்ச நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார். மதியத்தில் துவங்கி நள்ளிரவைக் கடந்து முடியும் இத்திரைப்படத்தின் இயங்கும் காலம் மிகச் சீராக பின்பற்றப்பட்டிருக்கிறது. ஒப்பனையும் கூட.

அலபசினோவின் ரசிகர்கள் கொண்டாடும்/கொண்டாட வேண்டிய படமிது.


தொடர்புடைய பதிவுகள்:

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்


ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்

suresh kannan

Tuesday, July 19, 2011

மானசரோவர் - அசோகமித்திரன் - கசப்பின் ருசி



மருத்துவக் காரணங்களுக்காகவோ, உடல் ஆரோக்கியத்திற்காகவோ வேப்பிலைக் கொழுந்து போன்ற கசப்பான வஸ்துவை சாப்பிட நேருபவர்களைக் கவனித்தால் முதலில் அந்த கசப்பை எண்ணி விகாரமாக முகஞ்சுளிப்பார்கள். நாக்கு அந்த கசப்பை அனுபவிப்பதற்கு முன்பே மனம் அனுபவித்து அதை நிராகரிக்கத் துடிக்கும். ஆனால் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மென்று தின்ன ஆரம்பித்து பழகினவுடன நாளடைவில் அதே மனம் அந்த கசப்பின் ருசிக்காக ஏங்க ஆரம்பித்து விடும். உடல் மீது விழும் அடிகளினால் வலி தாங்காமல் அலறும் மனம், ஒரு கட்டத்தில் அடுத்த அடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் இச்சையை நோக்கி நகர்ந்து விடும். அசோகமித்திரனின் எழுத்து இம்மாதிரியான கசப்பின், வன்முறையின் ருசியைக் கொண்டிருக்கிறது. பொதுவாக அசோகமித்திரனின் எழுத்து மென்மையானதுதானே என்கிற கருத்தைக் கொண்டிருப்பவர்கள், அ.மி.யின் மானசரோவர் புதினத்தை வாசிக்க நேர்ந்தால் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரலாம். அந்தளவிற்கு ஒரே அமர்வில் வாசித்து முடிக்க முடியாத மனஉளைச்சலை தந்தது மானசரோவர். அப்படி எதற்கு வாசித்து தொலைய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்தப் பத்தியை முதலிலிருந்து மீண்டும் வாசிக்கவும்.

அ.மியின் 'கரைந்த நிழல்கள்' சினிமா உலகின், திரைக்குப் பின் இயங்கும் உலகத்தை பருந்துப் பார்வையில் சித்தரித்தது என்றால், மானசரோவர் ஒரு நடிகன் மற்றும் ஒரு கதாசிரியரின் அக உலகை, விநோதமான உறவை மிக நெருக்கமாக முன்வைக்கிறது. வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் இந்தி நடிகன் சத்யன்குமார், தமிழகத் திரையில் சொற்ப ஊதியத்திற்கு மல்லுக்கட்டும் கதாசிரியன் கோபாலனுக்கு 'கூஜா தூக்கியாவது' பணிபுரிய விரும்புகிறான். இருவரின் பார்வையில் மாறி மாறிப் பயணம் செய்யும் புதினம், சுய விசாரணைகளின் மூலம் அவரவர்களின் அந்தரங்கங்களை ஆழமாக வாசகன் முன் வைக்கிறது. முள்கீரிடம் அணிந்திருக்கும் பிரபலங்களின் இருப்பியல் பிரச்சினைகளை சத்யன்குமாரின் பாத்திரம் அசலாக சித்தரிக்கிறது. ஆயிரம் நபர்களின் நடுவிலும் தனியனாய் உணரும் அவன், காரணமேயில்லாமல் கோபாலனை பார்த்த கணத்திலிருந்தே விசித்திரமான வசீகரத்தால் ஈர்க்கப்படுகிறான். சதய்ஜித்ராய் இயக்கி உத்தம் குமார் மிக அருமையாக நடித்த 'நாயக்' திரைப்படம் அடிக்கடி நினைவில் வந்து போனது.

மறுபுறம் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபாலன், தன் வாழ்வின் அன்றாடச் சிக்கல்களோடும் தத்துவம் சார்ந்த சிந்தனைகளோடும் வாழ்கிறான். சமயங்களில் சத்யன்குமாரின் துரத்தல்கள் அவனுக்கு எரிச்சலாகவே தோன்றுகிறது. அகம் சார்ந்த விசாரணையும் ஆன்மீகம் என்கிற புள்ளியும் இருவரையும் இணைக்கிறது.

இந்தப் புதினம் இருவரின் பார்வையில் மாறி மாறி பயணித்தாலும் தொடர்ச்சியின் இழை எங்கும் அறுபடாமல் இயல்பாய் அமைக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் வணிகத் தொடர்கதைகளின் 'சிறுதிடுக்கிடல்' பாணி கூட பின்பற்றப்பட்டிருக்கிறது. பின்னோக்கு சம்பவங்களில் கூட எவ்வித தருக்கப் பிழைகள் கூட அல்லாத பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ஜெயசந்திரிகாவின் அம்மா போன்ற சிறுபாத்திரங்களைக் கூட நுட்பமான விவரணைகளுடன் வாசகனுக்கு மிக கச்சிதமாக அறிமுகப்படுகிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று 'மானசரோவர்'

suresh kannan

Tuesday, June 21, 2011

ஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்





தீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதற்கான உதாரணக் காட்சி ஒன்று.

தனது நம்பிக்கையான அடியாட்களில் ஒருவனான முள்ளு, தங்களுக்குத் தெரியாமல் எதிரணி நபரான பசுபதியிடம் எதையோ பேரம் பேசப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ரவுடித் தலைவன் கஜேந்திரனும் வலது கை கஜபதியும் காவல் நிலைய வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் எதற்கும் அசராத கஜேந்திரன் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க, கஜபதியோ பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஜோஸ்யம் கூறும் ஒருவன் இருவரிடமும் தொணதொணவென்று அரற்றிக் கொண்டேயிருக்கிறான். " பாருங்க சார்..நீங்க ரெண்டு பூவ மனசுல நினைச்சுக்கங்க. அதை நான் சரியா சொல்லிட்டன்னா.. என் கிட்ட ஜோசியம் பாருங்க... இல்லாட்டி வேண்டாம் சார். ..நீங்க நினைச்சது வெள்ளைல மல்லிகையும் சிவப்புல ரோஜாவும்.சரியா"  ஜோஸய்க்காரனின் தொணதொணப்பை சகிக்க முடியாமல் கஜபதி தவிக்க, கஜேந்திரன் அதற்கும் அசராமல் உட்கார்ந்திருக்கிறான். ஒருநிலையில் ஜோஸ்யக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகி விடுகிறான். இருந்தாலும் இடிசசபுளி போல அமர்ந்திருக்கும் கஜேந்திரனிடம் தழுதழுத்த குரலில் கேட்கிறான். "அப்படி என்ன பூவத்தான் நினைச்சீங்க?'

சற்று நேரம் மவுனம். கஜேந்திரன் கரகரத்த குரலில் சொல்கிறான்.

பிரபு - குஷ்பு.

இந்த பெயர்களின் பின்னாலுள்ள trivia-வினால் திரையரங்கமே வெடிச்சிரிப்பில் அலறுகிறது.

சப்பையும் சுப்புவும் உடலுறவிற்குப் பின் சாவகாசமாக அமர்நது பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட, சிங்கப் பெருமாள்தான் வந்து விட்டார் என்று சப்பை அழ ஆரம்பிக்க... அந்தக் காட்சி இன்னொரு உதாரணம்.

நகைச்சுவையில் துவங்கி தீவிரத்தில் முடிவதற்கு உதாரணம் .. ஸ்பீக்கர் போன் காட்சி. 'பசுபதிய போட்டுத் தள்ளிடு"

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்... மிக யதார்த்தமான உரையாடல்கள். வடசென்னை ரவுடிகள் என்ன ஆக்ஸ்போர்டு ஆங்கிலத்திலா பேசி்க் கொள்வார்களா? 'யாருண்ணே.. அண்ணியா, என்ற கேள்விக்கு... மனைவி தந்த தொணதொணப்பு எரிச்சலில் இருக்கும் பசுபதி  "இல்ல. சுண்ணி" என்கிறான். ஆனால் விவஸ்தையே இல்லாத சென்சார் போர்டு இந்த மாதிரி வார்த்தைகளை வெட்டி அதன் மூலமே இந்தக் காட்சிகளை  ஆபாசப்படுத்தியிருக்கிறது. பொதுச் சமூகத்துடன் புழங்கும் போது இம்மாதிரியான வார்த்தைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம்; உபயோகித்திருப்போம். ஆனால் திரையில் இதை கேட்கும் போது மாத்திரம் பாசாங்குடன் கோபம் கொள்கிறோம் என்பது மாத்திரம் எனக்கு புரியவில்லை. மேலும் இது 'வயது வந்தவர்களுக்கான படம்' என்ற சான்றிதழுடன்தான் வெளியாகிறது. அதிலும் குறிப்பாக ஆ.கா. போன்ற படங்கள் Matured Audience எனப்படும் முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு மாத்திரமான படைப்பு. தயாரிப்பாளரான, எஸ்.பி.சரண், குழந்தைகளும் படத்தின் தொனியோடு உடன்பாடில்லாத பார்வையாளர்களும் தவிர்க்க வேண்டிய படம் என்று தெளிவுப்படுத்துகிறார்.

வசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத  பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.

"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா"


"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே"


"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...


"என்னா நீங்க டொக்காயிட்டீங்களா?"


"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி."  - " ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா?"


"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்".


"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு"


"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு".


"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....

குறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது  போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்படுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வினோத்தின் ஒளிப்பதிவு. படத்தின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இயக்குநரின் மனச்சாட்சி போல் செயல்பட்டிருக்கிறார். Source of lighting எனப்படும் அந்தச் சூழலில் இருக்கும் இயற்கையான ஒளியைக் கொண்டே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பெருமாள் வீட்டின் இருளும் வெளிச்சமும் இன்டீரியரும், பாவா லாட்ஜின் கோணங்களும் பசுபதி சேஸிங் காட்சிகளும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. ஒரே நாளின் நிகழ்வுகளின் தொகுப்பு என்பதால் எடிட்டிங்கின் பங்களிப்பு இதில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் இப்படியானதொரு கால எல்லைக்குள் திரைக்கதையை அமைத்துக் கொள்ளும் போது காலத்தின் தொடர்ச்சி கறாராகவும் சீராகவும் வருவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இதில் நழுவியிருப்பது போல் தோன்றுவது நெருடலாக இருக்கிறது.

இளையராஜா தன்னுடைய இத்தனை வருட அசுர உழைப்பால் கிடைத்த பின்னணியிசை புகழை, யுவன் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார் என்று சொன்னால் சற்று மிகையாகத் தோன்றலாம். இசையை நவீன யுகத்திற்கு பொருத்தமாகவும் கிளிஷேக்களை உதறியும் உபயோகிப்பதில் ராஜாவையும் யுவன் தாண்டிச் சென்றிருக்கிறார் என்பது நிச்சயம் மிகையாக இருக்காது. பசுபதிக்கும் கஜேந்திரன் குழுவினருக்கும் இடையில் நிகழும் தீவிரமான சண்டைக்கு (ஆனால் எனக்கு காமெடியாகத்தான் தோன்றியது) வழக்கமாக உபயோகிக்கும் பரபரப்பான இசைக்குப் பதிலாக  துள்ளலான இசையையும், சிறுவன் கொடுக்காப்புளி கோகெய்ன் பையை ஒளித்து விட்டு வர ஓடிச் செல்லும் காட்சியில் தந்திருக்கும் இசையும் சப்பையும் சுப்புவும் உரையாடும் காட்சிகளில் தந்திருக்கும் இசையும் பிரமிக்க வைக்கிறது. என்றாலும் பீத்தோவனின் இசைத் துணுக்குகளும், IN THE MOOD FOR LOVE திரைப்படத்தின் பின்னணி இசையும் சில இடங்களை நினைவு கூர வைக்கின்றன.

தமிழ் சினிமாவை சர்வதேச தளத்திற்கு நகர்த்திச் செல்வதை இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படுத்தியதில் யுவனின் பங்கும் அபாரமாக அமைந்திருக்கிறது எனலாம்.
 மறுபடியும் மறுபடியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னும் நவீன திரைக் கதைச் சொல்லியை வியக்க வேண்டியிருக்கிறது. சில உதாரணங்கள் தருகிறேன்.

இந்தப் படத்தில் பெரும்பாலும்  80-களின் திரைப்படங்களின் பாடல்கள் எங்காவது ஒலி்த்துக் கொண்டேயிருக்கின்றன. (இது சற்று அசெளகரியத்தை தருகிறது என்பதையும் சொல்ல வேண்டும்). தொலைக்காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகும் பாடல்களை பார்வையாளனுக்கு எந்தவொரு இடத்தில் இயக்குநர் காட்டுவதில்லை. ரவுடிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வினாயகம், டீக்கடையில் பொன்மேனி உருகுதே... வீடியாவில் சிலுக்குவை பார்த்து சிலாகிக்கிறார். ''இந்தப் பொண்ணை எனக்கும் பிடிக்கும்யா".. அதே போல் சிங்கப் பெருமாளின் வீட்டிலும் தொலைக்காட்சி இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எல்லா இடத்திலும் அவைகளின் ஒலியை மாத்திரமே பார்வையாளனால் கேட்க முடிகிறது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் தொலைக்காட்சியின் பிம்பத்தை இயக்குநர் காட்டுகிறார். அது அணைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் சப்பையும் சுப்புவும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பிம்பங்கள். போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை விட அன்றாட வாழ்வின் நிஜ பிம்பங்களையே இயக்குநர் பார்வையாளனுக்கு காட்ட விரும்புகிறார் என்று யூகிக்க முடிகிறது. (எப்பூடி).

பசுபதியின் மனைவி நைச்சியமாக கடத்தப்படும் போது வீட்டின் முன் வடை சுட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிழவி பிரேமின் ஓரத்தில் போகிற போக்கில் தெரிகிறார். இயக்குநர் நினைத்திருந்தால், அவருக்கு ஒரு குளோசப்பை போட்டு, சிங்கப்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியை அழைத்துச் செல்வதை பார்ப்பது போல் காட்டி, பார்வையாளனின் மனதில் நிறுவி, அடுத்தக் காட்சியின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தியிருக்கலாம். சிறிது நேரம் கழித்து பசுபதி வந்து அந்த கிழவியிடம் விசாரிக்கும் போதுதான்.. அவர் குளோசப்பில் காட்டப்படுகிறார்.

நாயகன், சென்னையிலிருந்து சிங்கப்பூர் வருவதை இன்னமும் விமானத்தைக் காட்டி, பார்வையாளனை அவமானப்படுத்த வேண்டாம் என்பதற்காக இதை உதாரணமாகச் சொல்கிறேன்.

அதே போல் சிறு கதாபாரத்திரத்தை கூட எப்படி நுட்பமாக வடிவமைப்பது என்பதற்கான பாடம் இதில் இருக்கிறது. சில காட்சிகளில் மாத்திரமே தோன்றும் சப்-.இன்ஸ் மயில்வினாயகம். குருவி மூலம் கடத்தி வரப்படும் கஜேந்திரனின் சரக்கை குருவி விற்று விட நினைக்கிறான். அது எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தை மயில்விநாயகம்தான் பசுபதிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு தெரிவிக்கிறான். கூடவே அது கஜேந்திரனின் சரக்கு, ஜாக்கிரதை என்று எச்சரிக்கவும் செய்கிறான்.

உரையாடலின் இறுதியில் பசுபதி 'இதை வெளியில் சொல்ல மாட்டீங்களே" என்று கேட்பதற்கு மயில்விநாயகம் சொல்கிறான். "தெரியலையே".

இன்னொரு முறை இன்னொரு தகவலைப் பரப்புவதற்கு தொலைபேசுவதற்காக பசுபதியின் மொபைல் போனைக் கேட்கிறான். தகவல் தெரிவிப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டாலும் போன் காசை மிச்சப்படுத்தும் அல்பத்தனம் காரணமாக இதைச் செய்கிறான். பசுபதி அதற்கும் தான் காசு தருவதாக சொல்வதும் அசடு வழிந்து கொண்டே தன்னுடைய மொபைலை உபயோகிக்கிறான். இடைத்தரகனுக்கு, அல்பத்தனமாக இருந்தாலும் பணம்தான் முக்கியம் என்பதற்கான கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.

அதே போல் கொலைவெறியுடன் துரத்தும் கஜேந்திரனின் ஆட்களிடம் தப்பிப்பதற்காக உயிர்பயத்துடன் ஓடும் பசுபதியின் கூடவே அவனது மனவோட்டமும் ஒலியாக பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. "என் கூட என் சாவும் ஓடிவர்றது எனக்குத் தெரியுது". படத்தின் கவித்துவமான தருணங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.

இந்தப் படத்தின் அசலான லொக்கேஷன்கள் பிரமிக்க வைக்கிறது. ஒரு மளிகைக்கடை காட்டப்படுகிறதென்றால் அது உண்மையான மளிகைக்கடையாக இருக்கிறது. செளகார்பேட்டை, மின்ட் தெருவில் நுழையும் காமிரா அற்புதமாக அதை படம்பிடித்திருக்கிறது. (ஆனால் இது வடசென்னையின் நிலப்பகுதியை காட்சிப்படுத்தவில்லை. அந்த அடையாளம் தேவையில்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம்).

இப்படி பல நுட்பமான காட்சிகளை உதாரணமாக சொல்ல முடியும். அதே சமயத்தில் சிறு சிறு குறைகளும் இல்லாமல் இல்லை. தனது தந்தையை, கடத்திச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தருவதாக உறுதியளிக்கும் பசுபதியிடம், சிறுவன் கொடுக்காப்புளி கேட்கிறான். "உன் பொண்டாட்டியையே பத்திரமா வெச்சுக்கத் துப்பு இல்ல. எப்படிய்யா எங்க அப்பாவை கொண்டாருவே?" அதிகப்பிரசங்கித்தனமாக பேசும் குழந்தைகள், தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும் இத்தனை விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் இந்தப் பிசிறுகளையும் கவனித்திருக்கலாம். சிக்கலான ஒரு சூழ்நிலையில், அதுவும் முகம் பார்த்திராத ஓர் அந்நியனிடம் ஒரு சிறுவனால் இப்படிப் பேசு முடியுமா? மற்றபடி அந்தச் சிறுவனின் நடிப்பு பல இடங்களில் அட்டகாசம்.

இயக்குநர் தியாகராஜன் குமாராஜா லயோலாவில் விஸ்.காம் படித்து விட்டு, சில விளம்பரப் படங்களை இயக்கி விட்டு, ஆட்டோ (ஓரம் போ) -விற்கு வசனம் எழுதி விட்ட அனுபவங்களில் இந்தப் படத்தை இயக்க முன்வந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அவர் யாரிடமும் இதுவரை உதவி இயக்குநராக இருந்தததில்லை என்பது. தனித்தன்மையோடு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான தகுதி என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் இன்னமும் கூட குருகுல வாசமே கல்வியாக அமைகிறது. இது ஒரு வகையில் பலம்தான் என்றாலும் இன்னொரு வகையில் குருக்களின் அபத்தங்களின் வழியிலேயே சிஷ்யர்களும் பின்பற்றிச் செல்லும் அவலமே பெரும்பாலும் நிகழ்கிறது. தமிழ் சினிமாவின் பாதையில் முக்கியமான மைல்கல் திரைப்படமான 'நாயகன்' இயக்கிய மணிரத்னமும் யாரிடமும் உதவியாக இருந்திராதவர் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.

ஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்திருக்கிறது எனலாம். கதைச் சொல்லாடலில் ஓர் அதிநவீன பாதையை இட்டுச் சென்றிருக்கிறார் குமாரராஜா. இனி வரும் இளம் இயக்குநர்கள் அதை இன்னமும் முன்னெடுத்துச் செல்வார்களா, அல்லது வணிகப்பட மாய்மாலங்களின் உத்திகளின் மூலம் அந்தப் பாதையை குப்பைகளினாலும் மலத்தினாலும் மூடி விடுவார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நிச்சயமாக இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் காணுங்கள். நிச்சயம் அது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அத்தகையது. மொக்கை பிரிண்டில் கண்டிப்பாக பார்க்காதீர்கள்..அரங்கில் காண முடியாவிட்டால் ஒரிஜினல் டிவிடி வரும் காத்திருந்தாவது பாருங்கள். எவ்வித அரசியலும் இல்லாவிட்டால், ஆரண்ய காண்டத்திற்கு நிச்சயம் நான்கைந்து தேசிய விருதுகள் நிச்சயம். சோமசுந்தரத்திற்கு துணை நடிகருக்கான விருது நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங்..பின்னணி யிசை, சிறந்த திரைக்கதை.. இத்தனைக்கும்.

இத்தனை எழுதி வி்ட்டாலும். ஆரண்ய காண்டத்தின் முக்கியத்துவத்தை சரியாகச் சொல்ல வில்லையோ என்கிற தயக்கம் ஏற்படுகிறது. அத்தனை வலுவான படத்தை இன்னமும் வலுவாக உங்களுக்கு பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். DO NOT MISS IT.  முன்னமே சொல்லியிருந்த படி இந்தத் திரைப்படம் முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களுக்கானது. இன்னமும் லாலிபாப் சுவைக்கும் வாலிப வயோதிகர்கள், இந்தப்படத்தின் அருகில் கூட வந்து தொலைக்காதீர்கள். நன்றி.

suresh kannan