Saturday, December 17, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்

முதலில் நேர்மையாக ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று என்னால் திரைவிழாவிற்குச் செல்ல இயலவிலலை. என்றாலும் நினைவு முழுக்க அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.

பெரும்பாலான உலகத் திரைப்படங்கள் குறுந்தகட்டிலும் இணையத்தில் கிடைக்கும் போது நிம்மதியாக வீட்டுத்தனிமையில் நள்ளிரவில் பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு நேரம் செலவு செய்து சில பல இடையூறுகளுடன் திரைவிழாவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கடந்து வருடங்களில் நினைத்திருந்தேன். ஆனால் இதற்காக மெனக்கெட்டு அங்கே சென்று ஒத்தஅலைவரிசையுள்ள பல பார்வையாளர்களுடன் இணைந்து பார்ப்பதும் பிறகு அதைப் பற்றி பரவசமாக பேசிக் கொண்டிருப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆகவே என்னைப் போன்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதை உடனே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நேற்று இரண்டு திரைப்படங்களைக் காண வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தேன். 1) பிரெஞ்சு திரைப்படம் - The Snows of Kilimanjaro 2) ருஷ்ய திரைப்படம் - Elena.

முன்னரே குறிப்பிட்டது போல் திரைவிழாவிற்குச் செல்ல முடியவில்லையென்றாலும் இந்த தளத்தை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான (?!) வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே இணையத்தில் தரவிறக்கி வைத்திருந்த ருஷயத் திரைப்படத்தை நள்ளிரவைக் கடந்தும் பார்த்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா?' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.

Spoilers Warning..



பிரதானமாக இரண்டு வயதான பாத்திரங்களைச் சுற்றி நிகழ்வதாலோ என்னவோ மிக மிக நிதானமாக நகர்கிறது  ELENA.  ஆனால் நிகழ்ந்து கெர்ணடிருக்கும் மிக அற்புதமான டிராமா காரணமாக அதுவொரு பெரிய குறையாகத் தோன்றவில்லை.

சுஜாதாவின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் கடிதப் பரிமாற்றங்களின் வடிவத்தில் அந்தச் சிறுகதையை வடிவமைத்திருப்பார் சுஜாதா. கணவனின் கொடுமையையும் அது தரும் மன உளைச்சல்களையும் பற்றி தாய்க்கு எழுதிக் கொண்டிருப்பாள் மகள். தாயும் ஆறுதலாக பதிலளித்துக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் துன்பம் பெருகிக் கொண்டிருக்க அதிலிருந்து விடுபடுவதற்கானதொரு யோசனையை தாய் மிக சூசகமாக பரிந்துரைப்பார். அவர் வேதியியல் படித்தவராக இருப்பார் என்பது உப தகவல்.

இந்தத் திரைப்படமும் அந்தச் சிறுகதையை நினைவுப்படுத்தியது.

பணக்கார கிழவர் ஒருவர். மருத்துவமனையில் அவருக்கு பணிவிடை செய்யும் சமவயது நர்ஸ் ஒருவரின் கனிவான சேவையில் உருகி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் இணைந்து தனிமையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவரின் முன்னாள் திருமணங்களின் மூலம் முறையே கிழவருக்கு லோகாயாத பொறுப்பில்லாத விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் மகளும்,  நர்ஸிற்கு வேலைக்குச் செல்லாத அம்மாவின் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சோம்பேறி மகனும் இருக்கிறார்கள். நர்ஸின் சமீபத்திய மிகப் பெரிய கவலை, அவருடைய பேரனின் கல்விச் செலவிற்காக மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது. "உன்னுடைய குடும்பத்திற்காக என் பணத்தை ஏன் வாரியிறைக்க வேண்டும்?' உன் மகனை உருப்படியாக வேலை பார்க்க்ச் சொல்" என்று எரிந்து விழுகிறார் கிழவர்.

கிழவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. உயில் எழுதுவதைப் பற்றி சிந்திக்கிறார். விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் 'தன்' மகளைப் பற்றிய கவலை அவருக்கு. எங்கே சொத்து முழுவதையும் 'அவருடைய' மகளுக்கு எழுதி வைத்து விடுவாரோ, எங்கே தன் மகனுக்கு உதவ முடியாமற் போய் விடுமோ என்று தவிக்கும் நர்ஸ் ஒரு 'காரியம்' செய்கிறார்.

()

குறுந்தகடு சிக்கி நின்று விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு சில நிமிடங்கள் ப்ரீஸ் ஆகி நிற்கிற பிரேமுடன் துவங்குகிறது திரைப்படம். அங்கேயே படத்தின் நிதானத்திற்கு நம்மை தயார்ப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

கறாராக தீர்மானிக்ப்பட்ட உடல்மொழிகள் மூலமும் முன்னுழைப்பு திட்டமிடல்களின் மூலமும் ஒரு காட்சியை எத்தனை அழுததமாக பார்வையாளனின் நெஞ்சில் பதிய வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இதில் பல காட்சிகள் உள்ளன்.

பென்ஷன் பணத்தை எடுத்துக் கொண்டு கிழவரின் க்ரெடிட் கார்டை உபயோகித்து மளிகைப் பொருட்களை மகனின் வீட்டுக்கு பயணிக்கிறார் நர்ஸ். அங்கே அவள் தேவைப்படவில்லை, அவள் கொண்டு வரும் பணம்தான் எதிர்பார்க்கப்பபடுகிறது' என்பதை மிக நுட்பமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறார் இயக்குநர். சோம்பேறித் தந்தையைப் போலவே மகனும் உருப்படியில்லாமல் போகிறான் என்பதற்கான குறியீட்டுக் காட்சியொன்று. நர்ஸூம் கிழவரின் மகளும் உரையாடல் காட்சி மிக அற்புதம். "கவலையடைந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை நீ மிக திறமையாகச் செய்கிறாய்?, வாழ்த்துகள்" என்று கிழவரின் மகள் கூறும் சினிக்கலான வசனங்களெல்லாம் எனக்கு எழுத்தாளர் ஆதவனை நினைவுப்படுத்தின.

நீதிக்கதை போல் எவ்வித தண்டனைகளுமில்லாமல் மிக இயல்பாக நிறைவு பெறுகிறது திரைப்படம். கேனஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருது பெற்றிருக்கிறது. 

தமிழ் பேப்பரில் வெளியானது. 

suresh kannan

4 comments:

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!
நல்ல உலகசினிமாவை பார்த்து விட்டு ஒத்த ரசனை உடையவர்களிடம் விவாதிக்கும் போது நமது ரசனை மேலும் புதிய தளத்துக்கு உயரும்.
சென்னைக்கு வந்து ஒரு படமாவது பார்க்கவேண்டும்.
விரைவில் வருகிறேன்.

Anonymous said...

//கேனஸ் //

க்கான்!

makku plasthri said...

எந்த தளத்தில் தரவிறக்கம் செய்திர்கள் என்று சொல்ல முடியுமா. நன்றி

Anonymous said...

//இது நொட்டை, அது நொள்ளை என்று ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் நபர்களையும் சக எழுத்தாளர்களையும் இவர் திட்டிக் கொண்டேயிருப்பாராம். "ஏம்ப்பா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே" என்று யாராவது கேட்டால் அவர் மீது வன்மத்துடன் சைக்கோத்தனமாக பாய்வாராம்//

Some time back , SK abt charu

//'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா?' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.//

Purinja sari...