Tuesday, December 06, 2011

சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழாகாமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.

மேடையின் பின்னணி பேனரில் பெரிய அளவு சாரு, மெரூன் நிற சட்டையில் குறுந்தாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்க அதன் மினியேச்சர் போல் அதே போல மெரூன் நிற சட்டையணிந்த நிஜ சாரு கீழே உலவிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இதே போல் எங்கோ ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்று நெருடியது. 'நாடோடிகள்' என்கிற திரைப்படத்தில் ஓர் அரசியல்வாதி வருவார். அவர் யாருக்காவது உதவி செய்கிற மறு கணமே அவரது ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படமாக எடுத்து கட்அவுட் வைத்து அசத்தி விடுவார்கள் . சாரு வாசகர் வட்டத்தினரும் தீயாய் வேலை செய்கிறார்கள் என்பதறிய மகிழ்ச்சி. சிறிது நேரத்திலேயே  கோட், சூட் அணிந்து CEO போல சாரு வந்தது, ஒரு MNC பிராடக்டின் அறிமுகப்படுத்தும் வணிக விழா போல் இருந்தது. தவறில்லை. ஜோல்னாப் பையும் கதர் சட்டையுமாகத்தான் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று யார் சொன்னது.

'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத்  தவிர்க்க முடியாது' என்று நண்பர் சிவராமன் கூறினாலும் இம்மாதிரியான கிம்மிக்கிஸ்களுக்கு இடையில்தான் தமிழ் இலக்கியம் ஜீவித்தாக வேண்டும் என்பது சற்றே பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

வாலி மொக்கைதான் போடுவார் என்று ஏற்கெனவே சர்வநிச்சயமாக எதிர்பார்த்திருந்ததால் ஏமாற்றமெதுவும் ஏற்படவில்லை. ஸ்ரீரங்கத்தில் நடத்திய கையெழுத்துப் பத்திரிகை முதல் சுயபுராணத்தை ஆரம்பித்தாலும் நாவலை 150 பக்கங்கள் வரை வாசித்திரு்ந்தாலும் நாவலின் மையத்தைப் பற்றி அவர் பேசவில்லை. ஆனால் இபாவும் சற்று மொக்கை போட்டதுதான் ஆச்சரியம். 'செக்ஸ் குற்றம் என்று நினைப்பவர்களுக்களுக்கானதல்ல இந்த நாவல். இது 'சாப்ட் போர்னோகிராபி அல்ல, ஹார்டு போர்னோகிராபி' என்றார் இ.பா.  'உச்சா' கூட போகத் தோன்றாமல் நாவலை ஏறக்குறைய முழுவதும் வாசித்திருந்த திடீர் பேச்சாளரான மதன்தான் நாவலைப் பற்றின அவுட்லைனை அடிக்கோடிட்டுப் பேசினார். இவர்கள் உரையாடின வரை வைத்துப் பார்த்தவரை சாருவின் தனிமனித அனுபவங்கள், வாசித்ததில் உருவியவை, வம்பு, கிசுகிசுக்கள் போன்றவைகளின் காக்டெயிலாகத்தான் 'எக்ஸைல்' இருக்கும் என்று தோன்றுகிறது. அது தவறா என்பதை நூலை வாசித்த பின்புதான் அறிய முடியும். ஆனால் எத்தனை பெரிய அறிவுஜீவிகளாயிருந்தாலும் மேடையேறின உடனே மிகுந்த பரவசத்துடன் 'விழா நாயகரை' பாராட்டி 'சர்வதேச படைப்பு' என்று உணர்ச்சிவசப்படும் தமிழ் மேடைகளின் மர்மம்தான் இன்னும் விளங்கவில்லை.

'தேகம்' ஏற்கெனவே ஏற்படுத்தியிருந்த சூட்டின் விளைவாக இந்த நாவலை உடனே வாசிக்கவோ வாங்கவோ தோன்றவி்ல்லை. இத்தனைக்கும் அந்த நாவலை 'நான் இதுவரை எழுதினதிலேயே மிகச் சிறந்த எழுத்து' என்று தேகத்தைப் பற்றி சாருவே முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தாலும் நாவல் என்கிற பெயரில் அவர் செய்த பம்மாத்து அது என்பதுதான் என் அபிப்ராயம். எனவே பரவலான விமர்சனங்களுக்குப் பின்புதான் 'எக்ஸைலை' வாசிப்பது பற்றி முடிவு செய்ய முடியும்.

சாருவின் வாசகர் வட்டம் இந்த விழாவை மிகுந்த ஆர்வத்துடன் சிறப்பாக நடத்தியது பாராட்டத்தக்க விஷயம். அப்படியே சாருவையும் நன்றாக எழுதச் செய்யும் நெருக்கடியையும் அவர்கள் தரலாம். சாரு தன் உரையாடலில் தன்னுடைய பிரத்யேக பாணியில் பாசாங்குகளைக் களைந்த சில தருணங்களை வெளிப்படுத்தினார். முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது. 

image courtesy: http://twitpic.com/photos/haranprasanna

தொடர்புடைய பதிவுகள்
suresh kannan

8 comments:

அக்னி பார்வை said...

// 'இச்சு இச்சு இச்சு கொடு' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, பரங்கிமலை ஜோதி வகையறா பிட்டு திரையரங்கங்களை நினைவுப்படுத்தினாலும் தமிழ் மேடைகளின் வழக்கமான அபத்த மரபுகளைக் கலைத்துக் கொண்டு ஒரு நூல் வெளியீட்டு விழா துவக்கத்திற்கு முன்பு 'வொய் திஸ் கொலைவெறி' போன்ற ஜாலியான பாடல்கள் ஒலித்தது எனக்கு பெரிய ஆறுதலைத் தந்தது உண்மை.

///

அப்படியே இந்த மரபுகளை கட்டுடைப்பதின் அடுத்த கட்டமாக எழுத்தாளர் என்பவர் எழுத வேண்டிய அவசியமில்லை என்று சாரு கட்டுடைப்பு செய்தால் தமிழ் இலக்கிய உலகின் ஆக சிறந்த கட்டுடைப்பு அதுவாக தான் இருக்கும்.

ஸ்ரீதர் நாராயணன் said...

// 'உலகமயமாக்கத்தின் காலகட்டத்தில் இம்மாதிரியான மாற்றங்களைத் தவிர்க்க முடியாது' //

கிம்மிக்ஸ்க்கு எல்லாமா உலகமயமாக்கல் காரணமாயிடுச்சு? போகிற போக்கில் உச்சா ஜாஸ்தியா போனாக்கூட உலகமயமாக்கல்தான் காரணம்னு சொல்வீங்களோ? :))

ஓபி அடிக்காமல் நாவலை படித்துவிட்டு உங்கள் விமர்சகர் கடமையை முழுமையாக ஆற்றவும் :)

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

மோகன் குமார் said...

பல வரிகள் மனம் விட்டு சிரிக்க வைத்தது. குறிப்பாக நாடோடிகள் படத்துடன் ஒப்பிட்டது.. செம !!

குருத்து said...

//கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.//

http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_06.html

D.R.Ashok said...

// முகமூடிகளையே அடையாளமாக்கிக் கொண்டிருக்கும் வழக்கமான சூழலில் இம்மாதிரியான சுவாரசியங்களே சாருவின் மீது இன்னும் நம்பிக்கையை இழக்கச் செய்யாமலிருக்கிறது//

:)

Rathnavel said...

நல்ல பதிவு.

Anonymous said...

சாருவை அவ்வப்போது கிண்டல் செய்து போலி எனும் நீங்கள் சாருவின் நாவல்களை படிப்பதொடு விட்டு விடாமல் அவரின் கூட்டத்திற்கு செல்வது ஏன்? (உங்களுக்கு ஏனோ சாருவை உள்ளூர பிடித்திருக்கின்றது)