Friday, December 16, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்

இன்று பார்க்க வாய்த்த இரண்டு திரைப்படங்களுமே அருமை. இரண்டாவது திரைப்படம் அருமையோ அருமை. இப்படி ஒரே ஒரு படம், தமிழில் வந்தால்... சரி வேண்டாம். விட்டு விடுவோம்.

உட்லண்ஸில் ஐந்தரை மணிக்கு அல்பேனிய திரைப்படமான Amnesty. சிம்பொனியில் ஐந்தே முக்காலுக்கு பிரெஞ்சு திரைப்படமான Heat Wave (Apres Le Sud). இதுவா, அதுவா என்று மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அல்பேனியாவே சிறப்பான திரைப்படம் என்று அரங்கத்தில் பொதுவான பேச்சு அடிபட்டது. ஆனால் நான் முன்பே சற்று ஹோம்ஒர்க் செய்திருந்ததால் பிரெஞ்சே சிறந்தது என்பதை ஒருமாதிரியாக யூகித்திருந்தேன். இம்மாதிரியான யூகங்கள் சமயத்தில் காலை வாரி விட்டு விடும். எனவேதான் அந்த குழப்பம். 'பத்து நிமிடங்கள் அல்பேனியாவை பார்ப்பேன், சரியில்லை என்று தோன்றினால் பிரெஞ்சுக்கு மாறி விடுவேன்' என்று நண்பர் பாஸ்கர் சக்தியிடம் கூறிக் கொண்டிருந்தேன். அப்படியாகவே அல்பேனியாவை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ சரியில்லை என்று உள்ளுணர்வு எச்சரிக்க, பிரெஞ்சுக்கு பாய்ந்து சென்றேன். நான் உள்நுழையும் போது படத்தின் இயக்குநரான Jean-Jacques Jauffret படத்தை அறிமுகப்படுத்தி விட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். மிக அற்புதமான நான்-லீனியர் திரைக்கதை கொண்ட படம். கதை என்று பெரியதாக ஒன்றுமில்லை.

கர்ப்பம் அடைந்த குற்றவுணர்வில் ஓர் இளம்பெண், தந்தையிடம் அடிபட்ட எரிச்சலில் ஊருக்குச் செல்ல துடிக்கும் அவளின் காதலன், தனது குண்டான உடம்பை குறைப்பதற்கான மனஉளைச்சலில் இருக்கும் இளம் பெண்ணின் அம்மா, எதற்காகவோ சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பீத்தோவனின் இசைக்குறுந்தகட்டை திருடி அவமானப்படும் ரிடையர்டு கிழவர்...

இவர்கள் தொடர்பான சம்பவங்களை கலைடாஸ்கோப் பார்வை போல முன்னும் பின்னுமாக கலைத்து கலைத்துப் போட்டு சிலம்பாட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர். ஏற்கெனவே பார்த்த சம்பவத்தை, மறுபடியும் வேறு காமிரா கோணத்தில் பார்க்கும் போது நாமும் அந்த பாத்திரமாகவே மாறிவிடும் மாயாஜாலம் நடக்கிறது. பெண்ணிற்குத் தெரியாமல் மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் குண்டு அம்மா, உபாதை தாங்காத அவஸ்தையில் மருத்துவரின் எச்சரிக்கையையும் மீறி உணவை விழுங்கும் காட்சியில் அவரது நடிப்பு அற்புதம். குண்டாக இருப்பவர்களின் பிரச்சினையையும் மனஉளைச்சலையும் உள்வாங்கிக் கொள்ள முடியாத சில் பார்வையாளர்கள் விவஸ்தையின்றி சிரித்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது.

படத்தின் சிறப்பான திரைக்கதை உத்திக்காகவே பார்க்கலாம்.


இரண்டாவது அர்ஜென்டினா /ஸ்பெயின் திரைப்படம். NO RETURN / SIN RETORNO. இது பற்றி முன்பே தீர்மானித்திருந்ததால் எவ்வித குழப்பமுமின்றி இதை தேர்வு செய்தேன்.

அற்புதமான சைக்காலஜிக்கல் திரில்லர். ஒரு சாலை விபத்து. அதைத் தொடர்ந்து ஒரு மரணம். இதை வைத்துக் கொண்டு இத்தனை அற்புதமான ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்று பிரமிப்பே வந்து விட்டது. படம் எதிர்பார்க்கவே முடியாத யூகங்களில் முட்டுச் சந்து திருப்பங்கள் போல் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. 'குற்றமும் தண்டனையும்' என்று சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் நீதியமைப்பு எத்தனை தூரம் சரியானது என்கிற கேள்வியையும் சந்தேகத்தையும் படம் எழுப்புகிறது. என்றாலும் மனிதனுக்குள் பொதிந்திருக்கும் மனச்சாட்சி அவனுக்கான தண்டனையைத் தந்து விடுகிறது. ஊடகங்கள் வெறும் பரப்பிற்காக செயல்பட்டு எத்தனை தனிமனித வாழ்க்கைகளை பாழாக்குகிறது என்பதும் ஊடிழையாக வெளிப்படுகிறது.

அடுத்த முறை ஊடகங்களில் திரும்பத் திரும்ப  'குற்றவாளி' என்று அழுத்தமாக முத்திரை குத்தப்பட்டு வெளிப்படும் ஒருவரை, அவர் குற்றவாளிதானா என்று பொதுமனங்களில் கேள்வி எழுப்புவதில் இத்திரைப்படம் வெற்றி கண்டிருக்கிறது எனலாம். மிக அபாரமான திரைக்கதை. சமீபத்தில் நான் கண்ட திரைப்படங்களில் மிக அற்புதமான, உணாச்சிவசப்பட வைக்கக்கூடிய கிளைமாக்ஸ் கொண்டது இத்திரைப்படமே. சிக்கலான நேரங்களில் அகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது படம் முழுக்க வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. Leonardo Sbaraglia -வின் நடிப்பு இரண்டாவது பகுதியில் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

4 comments:

Kaarthik said...

//இப்படி ஒரே ஒரு படம், தமிழில் வந்தால்... சரி வேண்டாம். விட்டு விடுவோம்// - :-))

Anonymous said...

//NO RETURN / SIN RETORNO////
இது பிரெஞ்சுப் படம் அல்ல ஸ்பானிஷ் படம்!
நன்றி.

சுரேஷ் கண்ணன் said...

நன்றி நண்பரே. திருத்தி விட்டேன்.

Anonymous said...

சரியான black joke இந்த வரி சொல்லும் உண்மை...

Manmohan உத்தமர் எனும் யாருக்கும் அவர் எதனால் உத்தமர் என அழைக்கப்படுகிறார் என்று தெரியாது.

http://villavan.wordpress.com/2011/11/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/