இந்த முறை சென்னையில் நிகழும் சர்வதேச திரைவிழாவிற்கு செல்லலாம் என்றிருக்கிறேன்.
கடந்த வருடங்களில் செல்லாமலிருந்தற்கு காரணம், வாங்கி வைத்திருக்கும் திரைப்பட டிவிடிகளையே இன்னும் பார்க்காமலிருக்கும் குற்றவுணர்வும் சோம்பேறித்தனமும். சில உபகாரணங்களும். ரூ.500/- தந்து அனுமதியட்டையை வாங்கி விட்டாலும் அது தொடர்பாக வரப்போகும் addon செலவுகளை நினைத்து. எனக்கு பொதுவாக ஆறு, ஏழு மணியாகி விட்டாலே கடுமையாக பசிக்க ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில் ஜெயமாலினி நடனமே என்றாலும் கூட மனதில் ஏறாது. இதனாலேயே எந்த நூல் விழாவிற்குச் செல்வதென்றாலும் முன்னமே ஏதாவது சாப்பிட்டு விட்டுச் சென்று விடுவேன். அப்படி இல்லாமல் போனதால்தான் சமீபத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்தது.
இந்த திரைவிழாவிலும் அதே பிரச்சினைதான். எனவே இந்த 9 நாட்களுக்கும் அப்படியாக உணவிற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அது கூட ரோட்டோர டீக்கடை சமோசாவின் மூலம் முடித்துக் கொள்ளலாம். அதை விட பெரிய பிரச்சினை, அரங்கம் அரங்கமாக மாற வேண்டியதற்கான போக்குவரத்து. அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக எனக்கு வண்டி ஓட்டத்தெரியாது. பேருந்திற்காக காத்திருந்தால் படம் முடிந்து எல்லோரும் கைதட்டும் நேரம் வந்து விடும். ஆட்டோவிற்கு செலவு செய்து மாளாது.
இதை வாசிக்கும் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் திரைவிழாவிற்கு கலந்து எந்தவொரு நண்பராவது இந்த உதவியை செய்தால் நன்றியுடையவனாயிருப்பேன்.
()
விழாவில் திரையிடவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலின் முதல் பகுதியை இங்கு காணலாம். இந்தப் படங்களின் IMDB தர வரிசைப்பட்டியலின் தொகுப்பை இங்கு காணலாம். கோ, தூங்காநகரம் போன்ற மொக்கையான தமிழ்ப்படங்களையும் சுமாரான இந்தியத் திரைப்படங்களையும் தவிர்த்து விட்டு குறிப்பாக இரான், எகிப்து திரைப்படங்களை முக்கியமாக காண உத்தேசம். இதில் A Separation (2011) என்கிற இரானிய திரைப்படத்தை குறிப்பாக காண விருப்பம். அலுவலகத்திலிருந்து தப்பிக்கும் சாத்தியமுள்ள அன்று காணும் திரைப்படங்களைப் பற்றி அன்றிரவே எழுதவும் உத்தேசம். பார்க்கலாம்.
suresh kannan
No comments:
Post a Comment