Sunday, December 18, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்

இன்று நான் அலுவலகத்திலிருந்து சிரமப்பட்டு பிய்த்துக் கொண்டு ஓடியது,  இந்த விழாவில் அதிகம் எதிர்பார்த்திருந்த 'A Seperation' என்கிற இரானிய திரைப்படத்திற்காக . 'இரானிய படங்களின் மீது எனக்கு பெரிய மரியாதை ஒன்றுமில்லை, அவை பார்வையாளனை நெகிழச் செய்வதையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன' என்கிறார் விமலாதித்த மாமல்லன்.

ஆனால் என்ன காரணத்தினாலேயோ ஷெட்யூலை மாற்றி HABEMUS PAPAM (WE HAVE A POPE) என்கிற இத்தாலிய திரைப்படத்தை திரையிட்டனர். படு ரகளையான திரைப்படம். உரத்த குரலில் அல்லாமல் subtle ஆக மிக நுட்பமான பகடிகளால் நிறைந்து வழிகிறது. மத நிறுவனங்களையும் குருமார்களையும் சகட்டு மேனிக்கு கிண்டலடிக்கிறது. இப்படியொரு படத்தை இந்தியச் சூழலில் யோசிக்கவே முடியாது. நம்முடைய முதிர்ச்சியின்மையின் பல அடையாளங்களில் இதுவுமொன்று.

நம்முடைய பொதுச் சமூகத்திற்கு பல 'புதினப்பசுக்களின்' தேவையும் இருப்பும் அவசியமானதொன்றாயிருக்கிறது. அன்றாடம் வெளிப்பட்டிருக்கும் நம்முடைய தீய எண்ணங்களுக்கு மாற்றாக எங்கோ சில தூய மனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நம்ப வேண்டியிருக்கிறது. குற்றங்களின் வடிகாலாக அந்த socalled தூய மனங்கள் இருக்க வேண்டுமென்றும் அவை அதிதூய்மையாகவே இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது்; நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக அந்த தூயமனங்களும் நம்மைப் போலவே சதையும் ரத்தமும் கொண்டவை என்பதும் எல்லா அடிப்படை இச்சைகளுக்கும் உட்பட்டவையே என்பதை நம்பவோ விரும்பவோ மறுக்கிறது. இதில் சற்று சறுக்கல் ஏற்பட்டாலும் கூட கோபம் கொள்கிறது.

சில மாதங்களுக்கு முன் ஓர் இளம் சாமியார் நடிகையுடன் இருந்த அந்தரங்க தருணங்களை 'நீதிமான்களாக' வேஷம் போடும் ஊடகங்களில் ஒன்று வெளிப்படுத்திய போது 'ஒரு சாமியார் இப்படிச் செய்யலாமா?' என்று பொதுச்சமூகம் கோபமும் அருவருப்பும் கொண்டது. இதன் மூலம் தன்னையும் ஒரு புனிதனாக காட்டிக் கொள்ள விரும்புகிறது.  இருவரும் மனமொப்பி தன்னிச்சையாக அதை மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றி கேள்வி கேட்க எவருக்குமே உரிமை கிடையாது. மற்ற service provider -களைப் போல ஆன்மீகத்தையும் அதன் உள்ளடக்கத்தை மாத்திரம் பெற்றுக் கொண்டு அதைத் தருபவர்களைப் பற்றிய ஆராய்ச்சியை விடும்வரை இந்த 'வெற்றுப் பொங்கல்'கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். வாஷிங் மெஷின் ரிப்பேர் செய்ய வருபவரின் உடையும் அதிதூய்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நம்முடைய அறியாமைதானே?
 
 
spoilers warning

ரோம் நகரத்தில் புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம். பல நாட்டு கிறித்துவ குருமார்களும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். தேர்வு துவங்குகிறது. கடுமையான விதிமுறைகள் காரணமாக பலருக்கும் தான் போப்பாக தேர்வு செய்யப்படுவதில் விருப்பமில்லை. உள்ளூற பதட்டமும் பயமுமாக அமர்ந்திருக்கின்றனர். உள்ளூற இறைவனிடம் மன்றாடுகின்றனர். இறுதிச் சுற்றில் ஒருவர்  பலியாடாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் அவர் மக்களின் முன் தோன்றி ஆசி வழங்குவதற்கு முந்தைய தருணத்தில் பயந்து போய் விலகிப் போய் விடுகிறார்.

விதிமுறைகளின் படி புதிய போப் பால்கனியில் தோன்றாத வரை அவர் யார் என்பதை பொதுவெளியில் அதிகாரபூர்வமாக அறிவிக்க முடியாத சூழல். மேலும் அப்படி வெளிப்படும் வரை இது ரகசியமாகவும் வைக்கப்பட வேண்டும்.
 
உளவியல் மருத்துவர் ஒருவரை (இயக்குநர் Nannai Moretti) போப்பிடம் உரையாட வைக்கின்றனர். உளவியல் மருத்துவரே ஒருவகையான depression-ல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் போப் அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார். அமைப்பின் தொடர்பு அதிகாரி போலியாக ஒருவரை ஏற்பாடு செய்து 'போப்' அங்கேதான் இருக்கிறார் என்று நம்பச் செய்கிறார். 
 
 

இப்படியாக படம் முழுவதும் பகடியான காட்சிகளாலும் வசனங்களாலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக இயக்குநர் Nannai Moretti படுஜாலியாக நடித்திருக்கிறார். இவரின் இன்னொரு அற்புதமான திரைப்படமான 'The Son's Room'-ல் இவரை சீரியசாக பார்த்து விட்டு இதில் படு ஜாலியாக பார்ப்பது சுவாரசியமாக இருந்தது. புதிய போப்பாக நடித்திருக்கும் Michel Piccoli-ன் நடிப்பும் அற்புதம். 'நான் ஒரு நடிகன்' என்று பெண் உளவியல் மருத்துவரிடம் அறிமுகம் செய்து கொள்ளும் காட்சியிலும் 'புதிய வழிகர்ட்டியை' அறிந்து கொள்ளும் ஆவலில் மாளிகையின் முன் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் இடையில் நெகிழ்ச்சியாக நடந்து செல்வதும் இறுதியில் 'நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியாது' என்று அறிவிக்கும் காட்சியிலும் நெகிழ வைத்து விடுகிறார்.

போப் தேர்வு செய்யப்படும் காட்சிகளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பரவசத்துடன் காத்திருக்கும் காட்சிகளும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 
எல்லா மனிதர்களும் இயற்கையின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு இயங்குபவர்கள்தான், யாரும் அதிபுனிதர்கள் அல்ல, ஆன்மீகம் என்கிற வஸ்துவை வெளியே தேடாமல் உள்நோக்கிய பயணமாக கொண்டிருக்கிற வேண்டும் என்கிற பல ஊடிழைச் செய்திகளை இந்தத் திரைப்படம் தரமான பகடிகளுடன் சொல்லிச் செல்கிறது.

தவற விடக்கூடாத திரைப்படம். ஒருவேளை தமிழில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டால் எந்த மதகுரு இதற்கு அதிபொருத்தமானவர் என்று யோசித்துப் பாருங்கள். சுவாரசியமான கற்பனையாக இருக்கும்.  
 
தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 
suresh kannan

3 comments:

Kaarthik said...

இந்தப் படத்தைப் பற்றி 'ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் சுஹாசினி சொல்லியிருந்தார். அப்போதே இது போல் நம்மவர்கள் படம் எடுக்க துணியமாட்டார்கள், அப்படியே எடுத்தாலும் அது வெளிவருவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் நினைத்தேன்.

நானும் இரானியப் படத்தைத்தான் எதிர்பார்த்திருந்தேன். இரானிய சினிமாக்களின் அறிமுகம் மட்டும் இருக்கும் 2 நண்பர்களைக் கூட்டிச் சென்றேன். Schedule-ஐ மாற்றியதில் கடுப்பாகி கொலைவெறியுடன் என்னைப் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் பிழைத்தேன் :)

நட்புடன் ரமேஷ் said...

மிகவும் ஒரு நல்லபடத்தை அறிமுகம் செய்தத்ற்கு நன்றி நண்பா.

Rettaival's Blog said...

நான் எதிர்பார்த்தது இந்த இத்தாலிய திரைப்படத்தை...ஆனால் Seperation காண நேர்ந்தது. இரானிய படங்கள் மேல் இருந்த ஒரு பொறாமை அதிகரிக்கவே செய்தது.