Thursday, December 15, 2011

சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011

இந்த துவக்க நாளில் இரண்டு திரைப்படங்களை மாத்திரமே என்னால் காண முடிந்தது. சினிமாவில் மாத்திரம் ஆர்வமுள்ளவர்கள் துவக்க விழா அபத்தங்களை தவிர்த்து விட வேண்டும் என்பதுதான் அன்று எனக்கு கிடைத்த நீதி. அதைப் பற்றி பின்னால்.


பிலிம் சேம்பரில் மழைக்கு ஒதுங்கிய சோகையான கூட்டத்துடன் முதலில் பார்த்தது Varjoja paratiisissa என்கிற 1986 பின்லாந்து திரைப்படம். குப்பை அள்ளும் தொழிலாளியின் அகச்சிக்கலயும் காதலையும் பற்றியது. பின்லாந்தில் மருந்திற்குக் கூட யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதை அன்றுதான்  அறிந்து கொண்டேன். 'போய் வருகிறேன்' என்பதைக் கூட 'தொலைஞ்சு போ நாயே' என்கிற தீவிர முக பாவத்துடன் படம் முழுவதும் இறுக்கமாகத்தான் சொல்கிறார்கள். இதை  பிளாக் காமெடி என்று எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்கிற வழக்கமாக எனக்கு ஏற்படுகிற சந்தேகம் அன்றும் ஏற்பட்டது. 'இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷமா குப்பை கொட்டறீங்க?' என்று கேட்கப்படக்கூடிய அந்தத் தொழிலாளியின் தனிமையில் வாழ்வில் இனிமையாக குறுக்கிடுகிறாள் சூப்பர் மார்க்கெட் பணிப்பெண் ஒருத்தி. இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு இருந்தாலும் ஈகோவினால் தவிர்த்துக் கொள்ள முனைகிறார்கள். தமிழ்ச்சினிமா போலவே இறுதியில் காதல் வெல்கிறது. போகிறார்கள், வருகிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள். படம் முழுக்க இதுவே. இயக்குநர் Aki Kaurismäki-ன் வழக்கமான பாணி இது என்கிறார் கூட வந்திருந்த நண்பர் அக்னிபார்வை. படம் குப்பை என்று சொல்ல விடாமல் ஏதோ தடுக்கிறது. மீண்டும் நிதானமாக பார்க்க வேண்டும். 

இரண்டாவது பார்த்த பிரெஞ்சு படம் - The Kid with a Bike  இதற்கு நேர்மாறாக திருப்தியான அனுபவத்தைத் தந்தது. அற்புதமான, நிச்சயம் தவறவிடக்கூடாத படம். அன்பு என்பது சாஸ்வதமானது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு. முட்களினால் உருவான ஒரு பூவைப் போன்ற ஓர் இளம் சிறுவனைச் சுற்றி இயங்குகிறது திரைப்படம். தன்னை நிராகரித்துச் சென்ற தந்தையை அது அறியாமல் தீவிரமாகத் தேடுகிறான் அந்தச் சிறுவன். இந்த முரட்டுத்தனமான தேடலில் தன்னை நேசிக்கும் சிகைத் தொழிலாளி பெண்ணொருத்தியின்  அன்பை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. இறுதியில் சுபம்.  

ஆரம்பித்த கணத்திலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது படம். தந்தை ஏன் அந்தச் சிறுவனை நிராகரித்துச் சென்றான்? தாய் என்ன ஆனாள்? சிகைத் தொழிலாளி பெண் ஏன் அந்தச் சிறுவனை அப்படி நேசிக்கிறாள்... என்று அதற்கு முந்தைய தருணங்கள், நினைவோட்டங்கள் என்று எதுவுமே படத்தில் சொல்லப்படவேயில்லை. ஆனால் அழுத்தமான காட்சிகளின் மூலம் எதுவும் சொல்லாமலேயே நமக்கு எல்லாமே புரிகிறது. அபாரமான திரைக்கதை. அந்தச் சிறுவனுக்கு என்னாகுமோ என்று நமக்குள் பதைபதைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் செய்வது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பின்னணி இசை ஒலிக்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே திரைப்படம் முடிந்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

ஒரு சிறந்த டிராமா திரைப்படத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான அடிப்படை பால பாடங்கள் இதிலுள்ளது. இதையும் மீண்டுமொரு முறை நிதானமாக பார்க்க வேண்டும்.

()

இனி துவக்க விழா நிகழ்ச்சிகள் பற்றி..

வந்திருந்த அமைச்சர் முதல் அரங்கத்தின் வாட்ச்மேன் வரை முதலமைச்சர் தந்த 25 லட்சம் ரூக்கு பவ்யமாக நன்றி கூறிக் கொண்டேயிருந்தனர். அது என்னவாகப் போகிறது என்பதைப் பற்றி ஞாபகமாக யாரும் கூறவேயில்லை. லோக்கல் தமிழில் பார்த்திபன் பேசியதுதான் கூட்டத்திற்குப் பிடித்திருந்தது. 80 வருட தமிழ் சினி்மாவைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறோம் என்று பிலிம் காட்டி விட்டு... பெரும்பாலான கு்த்துப் பாடல்களின் பின்னணியில் ரெக்கார்டு டான்ஸ் போட்டதெலெலாம் ஓவர். (நான் பால்கனியில் அமர்ந்திருந்ததால் 'உன்னிப்பாக' ரசிக்க முடியாமற் போனது வேறு விஷயம்). தமிழ் சினிமாவில் மிருதுவான இசை வாத்தியங்களையே உபயோகிக்க மாட்டார்கள் என்பதுதான் அதன் வெளிப்பட்ட நீதி என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும்.

"ஊடகச்சுதந்திரத்தின் கழுத்தை அதிகார அமைப்பு நெறிக்கக்கூடாது' என்று இந்து ராம் பேசியமர்ந்த கணமே அதற்கு பொருத்தமாக 'செங்கடல்' திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து லீனா மணிமேகலை குழுவினர் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அரங்கத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாட்டாமை சரத்குமார் மிகத் திறமையாக இங்கும் "பசுபதி எட்றா வண்டியை" ரேஞ்சிற்கு சமாதானப்படுத்தினார். மேடையில் அமர்ந்திருந்த விஐபி பிரகஸ்பதிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே போக நேரம் ஆகிக் கொண்டிருந்த டென்ஷன் எகிறியது. கலையாளுமை பவர் ஸ்டார் சீனிவாசன்தரிசனம் தந்ததுதான் இடையில் ஆறுதலளித்த ஒரே காமெடி.

தமிழ்த்திரைப்படங்கள் வரிசையில் "ஆரண்ய காண்டம்' போன்ற சிறந்த திரைப்படங்கள் இல்லாமல் 'கோ' "தூங்காநகரம்" போன்ற குப்பைகள் இடம் பெற்றிருந்தனின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. வீட்டுத்தனிமையில் திரைப்படம் பார்ப்பது ஒரு ருசி என்றால், இப்படியாக அபத்தங்களுக்கிடையில் திரைப்படம் பார்ப்பது இன்னொரு வகையான ருசியாகத்தான் இருக்கிறது.




suresh kannan

1 comment:

Thozhirkalam Channel said...

தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...