Monday, April 05, 2010

தி இடியட் - தஸ்தாயெவ்ஸ்கி - அகிரா

உரையாடல் அமைப்பின் சார்பில் அகிரா  குரோசாவாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நண்பர் சிவராமன் திரையிட்ட படம் 'தி இடியட்', தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம் பெரும்பாலும் அகவுணர்வுகளின் போராட்டம் சார்ந்து இயங்கக்கூடியது. இதை எழுத்தில் வாசகனிடம் கடத்திக் கொண்டு வருவதே சவாலானது எனும் போது பல விவரணைகளுடன் சாவகாசமாக உருவாக்கப்படும் இந்த  எழுத்தைச் சிதைக்காமல் திரையில் கொண்டு வருவது இன்னுமொரு மகத்தான சவாலை எதிர்கொள்வதற்கு ஒப்பானது. 

நான் தஸ்தாயெவ்ஸ்கியின் சில குறுங்கதைகளை மாத்திரம் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த நாவலை வாசித்ததில்லையென்பதால் திரைப்படத்தைப் பின்தொடர சிரமமாயிருந்தது. ஆனால் நாவல் திரைப்படமாகும் போது மூலப்படைப்பை படித்திருக்க வேண்டும் என்பது பொது விதியல்ல. அது அல்லாமலே திரைப்படமும் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சமயங்களில் கூடுதலாகவே ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு சத்யஜித்ரேவின் 'சாருலதா'வை ரசிக்க வேண்டுமெனில் தாகூரின் 'சிதைந்த கூடு' சிறுகதையை வாசித்திருக்க வேண்டுமென்பதில்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்.

இப்போது 'தி இடியட்டை' நாவலுடன் தொடர்புபடுத்த இயலாத நிலையில் திரைப்படம் வழியாக என்னுடைய சொற்ப புரிதலிலிருந்து பார்க்கலாம்.



மரணத்தை மிக மிக அருகில் தவிர்த்த ஒரு போர்க்குற்றவாளி Kameda.  அது தரும் அனுபவத்தால் எல்லோரிடமும் அன்பு செலுத்தும் கருணையுள்ளம் கொண்டவனாகவும் வலிப்பு நோயுள்ளவனாயும் மாறுகிறான். இதன் காரணமாகவே மற்றவர்களால் 'முட்டாளாக' பார்க்கப்படுகிறான். ஊருக்குத் திரும்பும் அவனுடைய வாழ்க்கையில் இரண்டு பெண்கள் குறுக்கிடுகிறார்கள். Ayako என்கிற உறவுக்காரப் பெண். செல்வந்தரின் வைப்பாட்டியான Taeko Nasu.

இடியட்டான Kameda, Taeko Nasu-வை புகைப்படத்தில் பார்த்த முதல் கணத்திலிருந்தே அவளால் ஈர்க்கப்படுகிறான். இவனுடன் வண்டியில் பயணிக்கும் முரடனான Akama அவள் அழகை ரசிக்கும் போது, Kameda அவளுடைய கண்கள் கருணையைக் கோருவதாக உணர்கிறான்.  தன் முன்னாலேயே கொல்லப்பட்ட ஒர் இளைஞனின் கண்களை அவளுடைய கண்கள் நினைவுப்படுத்தியதாக பின்னால் விவரிக்கிறான். Taeko Nasuவும் இவனுடைய அப்பாவித்தனத்தினால் ஈர்க்கப்படுகிறாள். இதற்காகவே தன்னை மணந்து கொள்ளவிருக்கும் பணத்தாசை பிடித்த Kayamaவை புறக்கணிக்கிறாள். என்றாலும் திடீரென்று தீர்மானித்தவளாய், தன்னால் இந்த அப்பாவி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முரடன் Akamaவை மணந்து கொள்ளத் தீர்மானிக்கிறாள்.

இப்படியாக இந்த முக்கோணக் காதல் பயணம் செய்யும் பாதைகளும் அதனுடனான உணர்ச்சிப் போராட்டங்களும் அகிராவின் பிரத்யேக திரை மொழியில் விவரிக்கப்படுகிறது.

இடியட்டின் பாத்திரத்தை விட வைப்பாட்டியான Taeko Nasuவின் பாத்திரம் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளதாக நான் உணர்கிறேன். இவள் முரடனுடன் மறைந்துவிடுவதால் அவளைத் தேடித்திரியும் Kameda மெல்ல Ayakoவால் ஈர்க்கப்படுகிறான். என்றாலும் இவர்களின் இடையில் மீண்டும் நுழையும் Taeko Nasu, "அவன் உன்னை விடவும் என்னைத்தான் விரும்புகிறான். வேண்டுமென்றால் சோதித்துப் பார்" என்று சவால் விடுகிறாள். இருவரின் இடையே  Kameda தடுமாறினாலும் Taeko Nasu மீதுள்ள ஈர்ப்பை அவனால் இழக்க முடியவில்லை.

முரடன்  Akama வாக நடித்த தோஷிரோ மிபுனேவின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது. 'செவன் சாமுராய்' உட்பட அகிரா தன்னுடைய பல படங்களில் இவரை உபயோகப்படுத்தியுள்ளார்.


()

ருஷ்யாவின் பனிப்படர்ந்த பின்னணியில் நிகழும் இந்த நாவலின் களத்தை அதே பின்புலத்தோடு ஜப்பானில் நிகழ்வதாக உருவாக்கியுள்ளார் அகிரா. இந்த வேறுபாடும் இருநாட்டு கலாசார முரண்களும் படத்தோடு ஒன்றிப் போக முடியாமல் செய்துவிடுகின்றன. மேலும் தஸ்தாயெவ்ஸ்கி மீதுள்ள மதிப்பால்  நாவலை அப்படியே திரைமொழிக்கு அகிரா மாற்றம் செய்துள்ளதை விமர்சகர்கள் ஒரு குறையாக முன்வைக்கிறார்கள். நாவலின் அடிச்சரடை மாத்திரம் எடுத்துக் கொண்டு தன்னுடைய பாணியில் அதை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

அகிரா இந்தப் படத்தை நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடுவதாக உருவாக்கினார். ஆனால் ஸ்டூடியோ முதலாளிகள் இத்தனை நீளத்தை விரும்பாததால் இருவருக்குள்ளாகவும் கருத்து மோதல் ஏற்பட்டு பின்னர் இரண்டரை மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் படத்தின் சில ஆரம்ப பகுதிகள் எழுத்தின் மூலமாகவும் பின்னணி குரலின் மூலமாகவும் பொருந்தா அபத்தமாக நகர்த்தப்படுகிறது.

அகிராவின் காட்சிக்கோர்வைகளாலும் காமிராக் கோணங்களாலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ள அண்மைக் காட்சிகளாலும் குறிப்பாக முக்கோணக் காதல் கதையினாலும் தமிழ்த்திரை இயக்குநர் ஸ்ரீதர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் யூகிக்கிற அளவிற்கு இது ஸ்ரீதரின் சில திரைப்படங்களை நினைவூட்டியது. ஒளிப்பதிவாளர்  Toshio Ubukata-ன் இருளும் ஒளியுமான கவிதைக் கணங்கள் பிரமிப்பேற்படுத்தியது ஒருபுறம் என்றால் Fumio Hayasaka -ன் பின்னணி இசை காட்சிகளின் தொனியோடு மிகப் பொருத்தமாக இயைந்தொலித்தது.

தஸ்தாயெவ்ஸ்கியின் நாவலை வாசித்த பிறகாகவும் மீள்பார்வைகளின் மூலமாகவும் இந்த திரைப்படத்தை காட்சிகள் ரீதியாக இன்னும் அழுத்தமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

திரையிடலின் இறுதியில் நிகழ்ந்த கலந்துரையாடலில் கவிஞர் ராஜசுந்தர்ராஜன் முன்வைத்த சில விளக்கங்கள், திரைப்படத்தை சரியான கோணத்தில் உள்வாங்கிக் கொள்ள உதவியதோடு மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தை தனியாக காண்பதை விட ஒத்த ரசனையுள்ள நபர்கள் இணைந்து ஒரு குழுமமாக காண்பதிலுள்ள பயன்பாட்டையும் புரிந்து கொள்ள உதவியது.

திரையிடலை ஏற்பாடு செய்த 'உரையாடலுக்கும்' அதற்கு உதவிய  'கிழக்கு பதிப்பகத்திற்கும்' நன்றி. 

suresh kannan

21 comments:

நர்சிம் said...

//ஒரு குழுமமாக// kv??

;);)

****

சுகமான பகிர்வு!

பிச்சைப்பாத்திரம் said...

//ஒரு குழுமமாக//

இண்டு,இடுக்கெல்லாம் எப்படித்தான் கண்டுபுடிக்கறாய்ங்களோ? ரொம்ப உசாரா இருக்கணும் போலிருக்கே. :)

Paleo God said...

சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பரே.:)
--
விவரித்த விதம் அழகு.:)

இளமுருகன் said...

உங்கள் விமர்சன பாணியே தனிதான்
நன்று.

இளமுருகன்
நைஜீரியா

Ashok D said...

படத்தை பார்க்க கொடுத்தற்கு நன்றிங்க :)

Athisha said...

அந்தப் படம் குறித்த விபரங்களை இணையத்தில் தேடிப்படித்தபின்தான் ஏதோ விளங்கினாற் போலிருக்கும. மற்றபடி உங்களுடைய ஒரு பத்தியில் எழுதப்பட்ட கதைப்புரிதலே எனக்கும் உண்டானது.

(ஒரு பத்தியில் தாஸ்தயவ்ஸ்கியின் கதையை சொல்ல முயல்வது கொடுமை நிறைந்த வன்முறையாக எண்ணுகிறேன)

ராஜசுந்தர்ராஜன் பேசும் போது சொன்னதில், இது மாதிரி படங்களை உணர சினிமா மொழி தெரியவேண்டும் , கிரேக்க மித்தாலஜி, கிருத்துவ மித்தாலஜி எல்லாம் ஒரு ஸ்பூனாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது மாதிரியான ஸ்டேட்மென்ட்கள் இது பாமரர்களுக்கான படம் அல்ல என்பதை உணர்த்துவதாக இருந்தது.

சிவராமன் இது போன்ற மிக சிக்கலான வி.குஞ்சுகளுக்கு புரியாத படங்களை போடுவதை தவிர்த்து சினிமா மொழியின் ஏபிசிடி படங்களை திரையிடலாம்.

எல்லா நேரத்திலும் ரா.சு.ராஜன் விளக்கிக்கொண்டிருக்க முடியாதே!

உங்களுடைய அறிமுகம் அருமை.

மணிஜி said...

பாதி படத்திலும், பாதியையே பார்த்ததால் படத்தின் தலைப்பு மட்டுமே புரிந்தது.

மணிஜி said...

ஒரு மைனஸ் ஓட்டு யார்?

butterfly Surya said...

சிவராமன் வழக்கம் போல் அழைத்திருந்தும் எதிர்பாராத ஒரு துயர சம்பவத்தால் வர இயலவில்லை.

பகிர்விற்கு நன்றி சுரேஷ்.

rajasundararajan said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். இனி நான் எழுத வேண்டுமா என்று யோசிக்க வைக்கிறீர்கள். வாழ்க!

அதிஷா என்னை மன்னிப்பாராக. அங்கு வந்திருந்த எவர் ஒருவரும் 'The Idiot' வாசித்திருக்கவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. போகட்டும், நான் அந்தக் காலத்து ஆள். நாங்கள் எல்லாம் எழுத வருவதற்கு முன்பே ருஷ்யப் பொற்கால இலக்கியங்களையும் கிரேக்கக் காவியங்களையும் பைபிளையும் மகாபாரதம், இராமாயணம் இன்னும் உபநிஷதங்களயும் வாசித்துவிட்டோம். (இதனால் வாழ்க்கை இக்கட்டுகளினால் துயர்ப்படாமல் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இலக்கியம் கலைகளைப் புரிந்து கொள்வது இன்னொரு ஊதியம்). தம்பி அதிஷா எழுதிய 'அங்காடித் தெரு' விமர்சனத்துக்கான என் பின்னூட்டத்திலேயே புரிதல் பற்றிப் பேசி இருக்கிறேன். (மற்றவர்களைப் போல அவரைப் புண்படுத்தவில்லை). வளரும் பயிர்; ஊட்டமாக இருப்பதே அறம். தம்பிக்குக் கலகம் பண்ணுவதில் மகிழ்ச்சி போலும். அது கொண்டு தன் இருப்பை அவர் தேற்றுகிறார். எப்படியோ ஓட்டப் பந்தயத்தில் இறங்கிவிட்டார்; திறமைகளைத் தானே வளர்த்துக் கொள்வார். வாழ்க!

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள ராஜசுந்தர்ராஜன்,

நான் எழுதியது வெறும் அறிமுக குறிப்பு மாத்திரமே. அது கூட படத்தின் அவுட்லைனை ஒரளவிற்காவது தொட்டுச் சென்றிருக்குமா என்பது சந்தேகமே. நான் ஒருவேளை இத்திரைப்படத்தை தனியாக வீட்டில் பார்த்திருந்தேயேனால் இப்பதிவை எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே. அவ்வாறு எழுதாமல் விட்ட படங்கள் பல. என்னளவில் ஒரு படத்தைப் பற்றிய அடிப்படை தெளிவு இல்லாமல் எழுதக்கூடாது என்பதை சுயக்கட்டுப்பாடாகவே வைத்திருக்கிறேன். இது ஒரு விதிவிலக்கு.

ஆனால் நாவலையும் படித்த, திரைமொழியின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் அறிந்த நீங்கள் இதை நிச்சயம் எழுத வேண்டும். உங்கள் உடல்நலம் தற்சமயம் சரியில்லை என்பதை அறிந்திருந்தாலும் இதை ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்.

//அங்கு வந்திருந்த எவர் ஒருவரும் 'The Idiot' வாசித்திருக்கவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.//

நண்பர் சிவராமன் வாசித்திருக்கிறார் என அறிகிறேன். நாங்கள் வீடு திரும்பும் வழியெல்லாம் நாவலை அகிரா எத்தனை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் என்பதை சிலாகித்துக் கொண்டே வந்தார். :)

Cable சங்கர் said...

ராஜ சுந்தர்ராஜன் வந்திருந்தாரா..? அஹா.. பாக்காம போயிட்டேனே..:(

யுவகிருஷ்ணா said...

ராஜசுந்தரராஜன் அவர்களின் படம் முடிந்தபிறகு கூறிய விளக்கத்தால் படம் கொஞ்சம் கூடுதலாக புரிந்தது.

இதுபோன்ற சிக்கலான திரைக்கதை அம்சம் கொண்ட படங்களை திரையிடும்போது பைத்தியக்காரன் திரையிடுதலுக்கு முன்பாக கொஞ்சம் விரிவான intro கொடுத்தால் புரிந்துகொண்டு பார்க்க இயலும்.

அரைகுறையாக புரிந்தாலும் படத்தின் செகண்ட் ஹாஃப் அபார வேகத்தோடு நகர்ந்ததை உணரமுடிந்தது. காதல் கோட்டை க்ளைமேக்ஸ் எல்லாம் இந்த க்ளைமேக்ஸுக்கு முன்னால் ஜூஜூபி.

கருப்பு வெள்ளை படத்திலேயே ‘லைட்டிங்' இவ்வளவு பிரமாதமாக இருந்ததுதான் பெரிய ஆச்சரியம். தொழில்நுட்பம் விண்ணை எட்டிய இக்காலத்தில் எடுக்கப்பட்ட விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் லைட்டிங் கூட 1951ல் எடுக்கப்பட்ட இடியட்டின் ‘லைட்டிங்'குக்கு ஈடாகாது!

ஊசூ said...

I think idiot is a film where akira adapted a novel to a movie without any major compromises....it also tells the style of akira and how it differs from tarkovsky whose nature of writing a script completely different from a novel is well known but both admire each other....(gr8 artists appreciate each other!!!)

To under stand a movie as said in by sundarajan in that 'meeting understanding the back ground is essential' but for a lay man understanding 'how akira potray or capture the mood of ordinary' is not a big deal i guess.....after all art is wat we understand...when u learn more, a good art grow more...bach ,raja music, tarkovsky,akira movies are fine examples.....

one of the things which i regret in tat screening is many whom i dunoo (its te first time i came ter) just were sending sms, not interested in watching d movie...talking with many people...if they are not interest ,let them leave d place silently..if they talk , it a bit irritating .. many were ter jus bcos they are 'watching akira kurasawa movie (enga athu karrarum katcheriku porar madiri)'...if they are gr8 or famous bloggers ( i dont blog,dunno any1), then they have to be condemned..it shows Ir responsibility in appreciating a movie....

Even if many 'sudarajans explain a movie,they wont be understanding or appreciate a good movie but they will just blog'....

தமிழ்நதி said...

கவிஞர் ராஜசுந்தரராஜன் வந்திருந்தாரா? அவருடைய 'முகவீதி'யை அடிக்கடி எடுத்து வாசித்துக்கொண்டிருப்பேன். அன்று வந்திருந்தால் பார்த்திருக்கலாம். ஆனால், அன்றைக்கு எத்தனை பெண்கள் படம் பார்க்க வந்திருந்தார்கள் சுரேஷ் கண்ணன்? அபத்தமான கேள்விதான் இல்லையா?:)

ஊசூ said...

i am again stressing da point that 'if people who came for da movie are famous bloggers', they hav to be condemned..one guy came , say 'hi , hi...'..another came , 'took his mobile camera , took pictures and suddenly left da place'..is it da way to watch a movie??..many people were bored and not interested and talking some thing while movie went on...

if these bloggers are famous as claim by themselves, then their review will be a shit but millions of people will believe tat shit...

u are d only person who said 'its a complicate' movie to understand...

let them atleast be like u ....

பிச்சைப்பாத்திரம் said...

//அபத்தமான கேள்விதான் இல்லையா?:) //

தமிழ்நதி: :)

ஒருவர் வந்திருந்தார். நிறைய பெண் பதிவர்களும் வர வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பும்.

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு.நன்றி!

தினேஷ் ராம் said...

அனைத்து திரையிடலுக்கும் கவிஞர் வந்தால் நன்றாக இருக்கும்.

மயிலாடுதுறை சிவா said...

"ஒரு திரைப்படத்தை தனியாக காண்பதை விட ஒத்த ரசனையுள்ள நபர்கள் இணைந்து ஒரு குழுமமாக காண்பதிலுள்ள பயன்பாட்டையும் புரிந்து கொள்ள உதவியது...."

மிகச் சரி....இதுப் போல நாம் எப்பொழுது பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது உங்கள் விமர்சனம்!

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

சார் நீங்க எழுதுனது எதுவுமே புரியல,
இந்த பதிவு த இடியட் படத்தை பத்தியா?இல்ல நீங்க படிச்ச புத்தகங்களை ,விஷய்ங்களை ப்ராபகெண்டா பண்ணுறது பத்தியா?நீங்க ஏன் ஜாக்கிசேகர் போல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதக்கூடாது,அதனால தான் உங்களுக்கு ஃபாலொவருமில்ல,ஹிட்ஸும் இல்ல,அவர் சினிமா விமர்சனம் சூப்பர் சார்.நீங்க ஜெயமொக்கன் போல எழுத முயன்று தோக்கறீங்க சார்.டேக்கேர்.