“பட்டாபிராமன் முனையிலிருந்து பந்து வீச்சாளர் படிப்படியான, சீரான வேகத்தில் ஓடி வருகிறார். அளவு சற்று குறைவாக விழுந்த பந்து. ஆட்டக்காரர் அதை மிக அழகாக மிட்ஆன் திசையிலே திருப்பி அடிக்கிறார். பந்து எல்லைக் கோட்டை தாண்டிச் செல்கிறது. நான்கு ஓட்டங்கள். அணியின் எண்ணிக்கை 80 ஆக உயர்கிறது. இதோ அடுத்த பந்து …”
நீங்கள் நாற்பது வயதைத் தாண்டியவராக இருந்தால் மேற்குறிப்பிட்ட மாதிரியான கிரிக்கெட் தமிழ் வர்ணணையைக் கேட்டிராமல் உங்கள் இளமைப் பருவத்தை கடந்திருக்கவே முடியாது.
**
சமகாலத்திற்கு வருவோம். சமீபத்தில் ஒரு நாள் மாலை சற்று தாமதமாக வீட்டுக்குள் நுழைந்தேன். ‘எப்படி அட்ச்சான் பாரு… பந்து டுய்ங்னு சிக்சர் போயிடுத்து..” என்பது போன்ற வசனங்கள் நாராச மொழியில் காதில் விழுந்தன. தொலைக்காட்சியில் ஐபிஎல் ஆட்டம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முன்னாள் ஆட்டக்காரரான கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த், தன் அதிரடி ஆட்டத்தைப் போலவே தமிழையும் போட்டு இஷ்டத்திற்கு காட்டடியாக சாத்திக் கொண்டிருந்தார். ‘அவன், இவன்’ என்று ஆட்டக்காரர்கள் அனைவரையும் ஏக வசனத்தில்தான் குறிப்பிட்டுப் பேசினார். பண்பலை வானொலியின் மூலம் புகழ்பெற்ற, இன்னொரு வர்ணணையாளரான ஆர்.ஜே.பாலாஜி என்பவர் அசட்டுத்தனமான நகைச்சுவைகளை இறைத்து தன் பங்கிற்கு இன்னமும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். இந்த வர்ணணைகளைக் குறித்த அதிருப்தியையும் ஒவ்வாமையையும் சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவு செய்தார்கள்.
இரண்டு நிமிடத்தில் தயாராகக்கூடிய துரித உணவு போல கிரிக்கெட்டும் இருபது ஓவர்களில் சுருங்கிப் போய் விட்ட அபத்தமும் அதன் பின் உறைந்துள்ள வணிகமும் ஒருபுறம் இருக்கட்டும். இதன் துர்விளைவுகளின் ஒரு பகுதியாக, நாராச மொழியில் அமைந்த இவ்வகை வர்ணணைகளை கவனித்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை இது போன்ற உரையாடல் பாணிக்குப் பழகி விட்டால் எஞ்சியிருக்கும் தமிழ் மொழியின் நிலைமை என்னவாகும் என்பதை யோசிக்கவே திகிலாக இருக்கிறது.
மக்களுக்கான ஊடகங்களில் உரையாடும் போது சாதி, மதம் போன்றவை தொடர்பான வழக்கு மொழிகளைத் தவிர்த்து பொது மொழியில், நல்ல தமிழில் பேசுவது ஒரு மரபு. இதன் மூலம் எந்தவொரு வட்டாரத்தைச் சேர்ந்தவரும் நெருடல்கள் ஏதுமின்றி அந்த உரையாடலை கவனிக்க முடியும். இந்திய கிரிகெட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம் நீண்ட காலமாக இருந்து கொண்டிருப்பதை இது போன்ற வழக்கு மொழி உரையாடல்கள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
“மேட்ச் ஃபாஸ்டா போயிட்டிருக்கும் போது எப்டி சார்.. நல்ல தமிழ்ல பொறுமையா பேச முடியும், கலோக்கியலா.. அப்படி இப்படின்னு ஒரு ப்ளோல பேசத்தான் செய்வாங்க.. இதெல்லாம் ஒரு பிராப்ளமா?” என்று எவருக்கேனும் தோன்றலாம்.
ஆம்.. முந்தைய காலக்கட்டங்களில் அப்படி பேசியிருக்கிறார்கள். வானொலியில் அழகான, நிதானமான தமிழில் கிரிக்கெட் வர்ணணையைத் தந்திருக்கிறார்கள். அதற்கான சிறு உதாரணம்தான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் உதாரணமாக தந்திருப்பது. வி.ராமமூர்த்தி, கூத்தபிரான், அப்துல் ஜப்பார், சி.ரங்காச்சாரி, கே.எஸ்.எஸ் மணி, P.சிவராமகிருஷ்ணன், P.கணேசன் போன்ற கிரிக்கெட் வர்ணணையாளர்கள் அழகுத் தமிழில் தங்களின் பணியை திறம்பட கையாண்டார்கள். இவர்களின் உரையில் தமிழ் மட்டுமல்லாமல் கூடவே இலக்கியமும் மணக்கும்.
கம்பராமாயணத்தில் ஓர் இடம். சீதையை மணம் முடிப்பதற்காக நிகழும் சுயம்வரத்தில், துரித கணத்தில் ராமன் வில்லொடித்த அழகை ‘கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்’ என்று கவித்துவமாக எழுதியிருப்பார் கம்பர். பந்து வீச்சாளரின் மின்னல் வேக திறமையினால் எவராவது ஆட்டம் இழந்தால், இது போன்ற மேற்கோள்களையும் இணைத்து வர்ணணையை கூடுதல் சுவாரசியத்துடன் வழங்குவார்கள்.
முந்தைய காலக்கட்டங்களில், நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட் ஆட்டம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வானொலியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. ஆங்கில மொழியின் பரிச்சயம் அத்தனை இல்லாத எங்களால் ‘கொழ கொழ’ ஆங்கில வர்ணணையை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தி திணிப்பிற்கு எதிரான அரசியல் உணர்வு கொண்டிருந்த காலக்கட்டம் என்பதால் இந்தியை அறிய விரும்பாத தலைமுறையாக அது இருந்தது. எனவே ‘சார் ரன் கலியே’ என்று கூவும் இந்தி வர்ணணைகளும் புரியவில்லை. ‘சார்வாள் என்ன சொல்றாரு, கலி முத்திப் போச்சுன்னா..’ என்று குழம்ப வேண்டியிருந்தது.
இந்த நிலையில்தான் மிகப் பெரிய வரப்பிரசாதமாக வந்தது தமிழ் வர்ணணை. சராசரி நபர்கள் கூட கிரிக்கெட் பற்றிய ஆதாரமான விதிமுறைகளையும் நுணுக்கங்களையும் அழகுத் தமிழில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்தக் காலக்கட்டத்தில், தொலைக்காட்சியின் ஒலியை மட்டும் முழுவதும் அமைதிப்படுத்தி வைத்து விட்டு வானொலியை உயிர்ப்பித்து அருகில் வைத்துக் கொள்வோம். காட்சிகளை தொலைக்காட்சி வழியாகவும் தமிழ் வர்ணணையை வானொலி வழியாகவும் நுகர்ந்து இன்புறுவோம். உண்மையான ‘ஒலியும் ஒளியும்’ என்பது இதுதான்.
.. பின்காலில் சென்று வெட்டி ஆடுகிறார்… ‘கவர் திசைக்கும் பாயிண்ட் திசைக்கும் இடையில் பந்து பறந்து செல்கிறது’… “மூன்று ஸ்லிப்கள், ஒரு கவர் பாயிண்ட், மிட் ஆன், மிட் ஆ•ப், மிட் விக்கெட், லாங் ஆன், லாங் ஆ•ப் என்ற பரந்த வியூக அமைப்பு” என்பது போன்ற வர்ணணைகளை தொலைக்காட்சி இல்லாமலேயே கூட ‘பார்த்து’ மகிழலாம். மனக்கண்ணில் காட்சிகளையும் கிரிக்கெட் மைதானத்தையும் கொண்டு வரும் துல்லியமான வர்ணணைகள்.
இவர்களில் பிரத்யேகமான, கம்பீரமான குரலைக் கொண்டிருப்பவர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார். உலகத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான கிரிக்கெட் குரல். ஏறத்தாழ இவருடைய காலக்கட்டத்து சகாக்கள் அனைவருமே ஓய்வு பெற்று விட்டநிலையில் இன்னமும் கூட ஓர் இளைஞனுக்கான உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருப்பவர். ஏறத்தாழ அறுபது ஆண்டுகளைக் கடந்த ஊடகப் பணி என்பது சாதாரண விஷயமில்லை.
கிரிக்கெட் வர்ணணையாளர், ஊடகவியலாளர் போன்ற முகங்களைத் தாண்டி, நாடக நடிகர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஆளுமை இவருடையது. வணிகத்திற்காக தூத்துக்குடியிலிருந்து இலங்கை சென்ற தந்தையாருடன் இணைந்து கொள்ள வேண்டிய கட்டாயம். எனவே இவரது இளமைப்பருவம் முழுக்க கொழும்புவில் கழிந்தது.
இலங்கை ஒலிபரப்பு, நாடகம், எழுத்து என அங்கு ஏற்பட்ட அனுபவங்களை சுவாரசியமாக பதிவு செய்த நூல் ‘காற்று வெளியினிலே’. ஓர் ஊடகவியலாளராக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவங்களை பரபரப்பும் சுவாரசியமும் இணைந்த மொழியில் ‘கண்டேன் பிரபாகரனை’ என்ற நூலாக எழுதியுள்ளார். ‘இறைத்தூதர் முஹம்மது’ என்கிற மொழிபெயர்ப்பு நூலுக்காக இஸ்லாமிய சமூகம் இவரை என்றும் நினைவில் கொண்டிருக்கும்.
எண்பது வயதை எட்டப்போகும் இந்த இளைஞர் மேலும் பல ஆண்டுகளை இதே உற்சாகத்துடன் கழித்து தனது சேவையைத் தொடர வேண்டும் என்கிற விருப்பத்துடன் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
(சாத்தான்குளம் அப்துல்ஜப்பார் - அகவை எண்பது சிறப்பு வெளியீட்டு மலருக்காக எழுதிய கட்டுரை)
suresh kannan
No comments:
Post a Comment