இன்று பிக்பாஸ் செய்த ஒரு குறும்பால் வீட்டின் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. சில புதிய நட்புகளும் விரோதங்களும் உருவாகின.
என்னவென்று பார்ப்போம்.
காலை டாஸ்க்கில் ‘கோழி பிடிப்பது எப்படி?” என்று செய்து காட்ட வேண்டுமென்று சரவணனுக்கு சொல்லப்பட்டது. ஆனால் இந்த டாஸ்க் கவினுக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும். அவருக்கத்தான் இது பொருத்தமான டாஸ்க். வந்த நாள் முதலே ‘கோழி’ பிடிக்கும் உன்னதமான சேவையில்தான், மனிதர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
காலையுணவாக ‘ஓட்ஸ்’ செய்தார்கள். ஆனால் மதுமிதாவிற்கு அது பிடிக்கவில்லை. இது இயல்பாகவே புரிந்து கொள்ளக்கூடியது. எனவே “‘பழைய சோறு’ இருந்தால் கூட போதும். எனவே இரவு சோறு செய்யும் போதே சற்று கூடுதலாக செய்து விடுங்கள்” என்று கிச்சன் டீமில் இருந்த ரேஷ்மாவிடம் வேண்டினார். வீட்டின் கேப்டனிமும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.
அந்த வீட்டில் தலைமறைவாகவும் டம்மி பீஸாகவும் வாழ்ந்து கொண்டிருந்த ரேஷ்மா, இன்றுதான் தன் அசல் முகத்தைக் காட்டினார். இந்த எளிய கோரிக்கையைக் கூட ஏற்க விரும்பாமல் “ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சமையல் செய்ய முடியாது” என்று மதுமிதா காதில் விழும்படி புறம் பேசினார்; எரிந்து விழுந்தார். இந்த விஷயங்களை பிறகு சேரனிடம் மதுமிதா புலம்பிக் கொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.
மதுமிதா பழைய சோறு கேட்ட போது ‘காலைல ஓட்ஸ் சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். Yummy… mummy… சோறுல்லாம் சாப்பிட்டா கேர் ஆயிடும்’ என்றெல்லாம் மதுமிதாவிற்கு கவுண்ட்டர் அடிப்பது போல் அபிராமி நக்கல் செய்து கொண்டிருந்தது மகா எரிச்சல். உணவு விஷயத்தில் கூடவா ஒருவரை வெறுப்பேற்ற வேண்டும்? ஓட்ஸ் சாப்பிடுவது பற்றிய விவேக் நகைச்சுவை ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.
**
வாக்குமூல அறைக்கு சாண்டியை அழைத்தார் பிக்பாஸ். வீட்டின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒருமனதாக தேர்ந்தெடுத்து ஒருவரை வெளியேற்ற வேண்டும். அதற்கான பலியாடு மீரா. ஆனால் இதுவொரு prank என்பதை முன்பே தெரிவித்து விட்டார்கள்.
இது prank என்பதை பார்வையாளர்களுக்குச் சொல்லாமல் இந்த விளையாட்டை ஆடியிருந்தால் ஒருவேளை சுவாரசியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் துவக்க வாரத்திலேயே, சரியான விதிமுறைகள் இல்லாமல் ஒருவரை வெளியேற்ற மாட்டார்கள் என்பது பிக்பாஸ் பார்க்கிற குழந்தைக்கு கூட தெரியும், பெரும்பாலான பார்வையாளர்கள் இது prank என்று சொல்லாவிட்டாலும் கூட எளிதில் யூகித்திருப்பார்கள். ஆனால் மீரா உள்ளிட்டவர்கள் எப்படி இதை நம்பினார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அப்போதே மதுமிதா மற்றும் மீராவின் முகத்தில் மாற்றம் வந்தது. ஏனெனில் அவர்கள்தான் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவர்கள்.
“ஆக்சுவலி… மதுமிதாவைத்தான் செலக்ட் பண்ணேன்.. ஆனா ஒருமனதான தேர்வு என்பதால் மீராவைத் தேர்ந்தெடுத்தோம்” என்று ஒரே மாதிரியான காரணத்தை பெரும்பான்மையானவர்கள் சொல்லியது சலிப்பு. அதான் ‘ஒருமனதாக’ தேர்ந்தெடுத்தாகி விட்டதே.. அப்புறம் எதற்கு இந்த பில்டப்? யார் வெளியேறப் போகிறார் என்கிற சஸ்பென்ஸ் இருந்திருந்தால்தான் இந்த நாடகம் சுவாரசியம்.
'ஒரு ரூபாய்க்கு நூறு ரூபாய் நடிப்பு' என்கிற பாலிஸியை பின்பற்றினார் பாத்திமா. ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப ‘தேவதை… அவள் ஒரு தேவதை…’ என்றெல்லாம் கண்ணீர் விட்டு மீராவையும் அழவைத்தார். ஆனால் பாத்திமா இப்படி பொய்யாக புகழ்ந்தது கூட வனிதா டீமிற்கு பொறுக்கவில்லை. ‘அவளைப் போய் தெய்வம்.. அது இதுன்னு சொல்றீங்களே…” என்று பாத்திமாவிடம் தன் கடுப்பைக் காட்டினார் வனிதா.
இன்றுதான் முதன்முறையாக பாத்திமா பாபு துணிச்சலாகவும் சரியாகவும் பேசினார். ‘ஒவ்வொருத்தருக்கும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லும் உரிமை இருக்கு. என் கருத்தைப் பற்றி கமெண்ட் சொல்லும் உரிமை யாருக்கும் தெரியாது. மேலும்.. எனக்குத் தந்த டாஸ்க்கை சிறப்பா செய்ய முயற்சித்தேன்” என்று சரியான பதிலைச் சொன்னதும் வனிதா என்கிற வேதாளம் வாயை மூடிக் கொண்டது.
இந்த Prank டாஸ்க், இன்னொரு வகையில் சூட்சுமமான விஷயம். பிக்பாஸ்ஸின் சில டாஸ்க்குகள் மிக நுட்பமானவை. இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். எப்படி ஒருவரையொருவர் கோர்த்து விடலாம் என்று ‘ரூம் போட்டு யோசிக்கிறார்கள்’.
அனைவரும் சொன்ன காரணங்களை ‘கட்டி வைக்கப்பட்டு உதை வாங்கும் பாட்ஷா’ போல புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் மீரா. ஆனால் மதுமிதா அப்படி ஏற்கவில்லை. "இந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியவர் ‘கவின்தான். அவர் என்னையும் மீராவையும் பெண்களாக மதித்து என்ன பிரச்சினையென்றாலும் அதற்கான காரணங்களை எங்களிடம் விசாரித்து அறிய வேண்டும்” என்று சொன்னார். மேலும் தன் மீது கூறப்பட்ட புகார்களுக்கான பதில்களையும் துணிச்சலாக சொன்னார். இதனால் ரேஷ்மா உள்ளிட்ட குழுவின் முகங்களில் அதிருப்தியான பாவங்கள் ஏற்பட்டன.
இந்த prank டாஸ்க்கால் ஒட்டுமொத்தமாக நிகழ்ந்த மாற்றம் என்னவென்றால் மீராவின் மீதிருந்த வழக்குகள் அனைத்தும் ‘பாவ மன்னிப்பு’ அளிக்கப்பட்டு மூடப்பட்டன. மதுமிதாவின் மீது புதிய வழக்குகள் இணைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.
அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் பிக்பாஸின் உத்தரவு. ஆனால் சில உறுப்பினர்கள் மீராவை தேர்வு செய்யவில்லை. எனில், ‘மீரா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று எப்படி பிக்பாஸ் அறிவித்தார்? பொய் டாஸ்க்காக இருந்தாலும் அதுல ஒரு நியாயம் வேணாமாடா?
இந்தப் பஞ்சாயத்து சற்று ஓய்ந்ததும் “அவங்க வெளில என்ன பேசிக்கறாங்கன்னு பார்த்துட்டு வா” என்று ரேஷ்மாவை ஏவிக் கொண்டிருந்தார் வனிதா. “சீரியல்ல வர்ற கேரக்ட்டர் மாதிரி” என்று மதுமிதாவைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் ரேஷ்மாவும் வனிதாவும்தான் அப்படிப்பட்ட டெரர் மூஞ்சிகளாக இருக்கிறார்கள்.
**
கவின் என்கிற குரங்கு அபிராமியிடமிருந்து தாவி சாக்ஷி என்கிற மரத்தில் இப்பொது அமர்ந்து கொண்டிருக்கிறது. அது என்றைக்கு வனிதா என்கிற ஆலமரத்தின் மீது தாவுமோ தெரியவில்லை. சாக்ஷியிடம் அமர்ந்து வழிந்து கொண்டிருந்தார் கவின். சாக்ஷியோ முகினிடம் நெருக்கமாக இருப்பது போல் நடித்து இவரை வெறுப்பேற்ற முயன்று கொண்டிருந்தார். Flirt என்பது தவறான விஷயம் என்றாலும் அதை ரசிக்கும் படி செய்வது ஒரு கலை. ஆனால் கவின் இதை ஆபாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மீராவைப் பற்றி கமெண்ட் செய்யும் போது “அவ பிரண்ட்ஷிப்பை வம்படியா உருவாக்க முயற்சி செய்யறா. அது இயல்பா வரணும் இல்லையா?” என்று சாண்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின். காதல் என்பதும் அப்படியேதான் இல்லையா? ஆண் தன் கம்பீரத்தாலும் கண்ணியத்தாலும் எதிர் பாலினத்தவரை கவர வேண்டும். அந்தக் காதல் மிக இயல்பாக மலர வேண்டும். இப்படி கார்த்திகை மாதத்து …
**
வனிதா டீமில் இணைந்த மீரா ஒரு புதிய பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டார். “அபிராமி .. உனக்கு ஞாபகம் இருக்கா.. மாடலிங் –க்கிற்கு நீ வந்த புதுசுல நான்தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன். உன்னை உருவாக்கினேன்” என்பது போல் ஆரம்பித்தார். இந்த விஷயம் மறுபடி மறுபடி சொல்லப்பட்ட போது அபிராமி கடுப்பானது இயல்பே. ‘உதவி –ன்றது இப்படி சொல்லிக்காட்டப் படுவதல்ல’ என்று அவர் எகிறியது ஒருவகையில் சரியானது.
இவர்களின் பஞ்சாயத்தில் மீராவிற்கு ஆதரவாக வனிதா களம் இறங்கினார். ஏனெனில் தன்னிடம் இணைந்த புதிய அடிமையை அத்தனை எளிதாக விட்டுவிட வனிதாவிற்கு மனமில்லை. “ஆக்சுவலி.. அவ என்ன சொல்ல வர்றான்னா…” என்று மீராவிற்கு சப்போர்ட் செய்யப் போக அபிராமி எரிச்சலுடன் வெளியேறினார்.
இதற்கிடையில் சாக்ஷிக்கும் அபிராமிக்கும் இடையில் ஒரு புதிய புகைச்சல் உருவானது. “அவ.. அடுத்த வாரம் நாமினேட் ஆகிடுவோமோ –ன்னு பயப்படறா. நான் இந்த வாரம் நாமினேட் ஆனதைப் பற்றி அவ கவலைப்படவேயில்ல. எத்தனை சுயநலம்?! அவ கிட்ட நான் எப்படி எல்லாம் பழகினேன்’ என்று சாக்ஷி கண்கலங்க.. “இதுக்கும் நான்தான் காரணமா” என்று மேலும் எரிந்து விழுந்தார் அபிராமி.
“ஹேய்.. நான் யாரு தேவா.. நீ யாரு சூர்யா… நம்ம நட்பு எப்படிப்பட்டது தெரியுமா?” என்று வனிதா ஒரு சென்ட்டிமென்ட் பிட்டைப் போட்டவுடன் அடங்கினார் அபிராமி. வனிதா டீமில் இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பு. இந்த நிதர்சனம் அவருக்குப் புரிந்தவுடன் சற்று இறங்கி வந்தார். பலமுள்ள மிருகத்திடம் பலவீனமான மிருகங்கள் சரண் அடைவதுதான் காட்டின் வாழ்வியல் முறை. மனிதர்களுக்கும் இது பொருந்தும்.
சாண்டிக்கு இன்று பிறந்தநாள். அவரது குழந்தையின் குரலை இசையுடன் இணைத்து திடீரென்று பிக்பாஸ் ஒலிபரப்ப சென்ட்டிமென்ட்டில் விழுந்தார் சாண்டி. அதுவரை குறும்புகள் செய்து மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சாண்டி குலுங்கி குலுங்கி அழுதார். இந்த வாய்ப்பை பிக்பாஸ் டீம் எளிதில் விட்டு விடுவார்களா என்ன? சாண்டியின் மகள் வீடியோவை ஒளிபரப்பி பின்னணியில் ‘கண்ணான கண்ணே…’ பாடலயும் போட நமக்கும் சற்று கண்கலங்கியது உண்மைதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக்பாஸ்?
suresh kannan
2 comments:
ஆண் தன் கம்பீரத்தாலும் கண்ணியத்தாலும் எதிர் பாலினத்தவரை கவர வேண்டும். அந்தக் காதல் மிக இயல்பாக மலர வேண்டும். /// Well said...
ரேஷ்மா டம்மி பீஸா !! இல்லை அதுவும் விஷ பாக்டரி தான் .இந்த விஷ கேங் செய்யும் கூத்துக்களை வைத்து யாரும் தயவுசெய்து காயத்ரி கூட ஒப்பிட வேண்டாம் .
பொங்கலுக்கு சாக்ஷி பொங்கிய போது இருந்தவங்களாம் எங்கே போனார்கள் ?
கவின் பற்றிய உங்கள் கூற்று மெய்யே .இப்படிப்பட்ட ஆபாசத்தை பெண்கள் விரும்பமாட்டார்கள் .இவர் இன்னொரு மகத்தா பதிகிறார் .
ஒரு சந்தேகம் அழகிப்போட்டி மற்றும் மாடலிங் துறையில் உள்ளவர்கள் அபார பொறுமை புரிதலுள்ளோர் என்று நினைத்தேன் ஆனால் அபிராமி எல்லாவற்றுக்கும் மாற்றா இருக்காரே ?
ஓவர் ஆல் உங்களின் பார்வை பிக் பாஸ் பற்றி மற்றும் மிக அருமையான விமர்சனம் .தொடருங்கள்
Post a Comment