Monday, July 15, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 21 – “பிக்பாஸ் வீட்டின் அடுத்த 'வனிதா' யார்?”



அட்டகாசமான உடையுடன் கமல் வந்த இன்றைய நாளில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

முதலில் மீரா – தர்ஷன் விவகாரம். அதெப்படி பிக்பாஸ் வீட்டில் உத்தரவாதமாக சில காதல் ஜோடிகள் உருவாகி விடுகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதென்ன பள்ளிக்கூடமா? பார்த்தவுடனேயே இனக்கவர்ச்சியில் பப்பி லவ் உண்டாகி விட? பிக்பாஸ் scripted என்று பலர் சொன்னாலும் இல்லை என்று அழுத்தமாக யூகிப்பவன் நான்.

கச்சிதமாகத் திட்டமிட்ட, சில சிக்கலான சூழல்களை அமைத்து அதில் மனிதர்களை செலுத்தி அவர்களின் இயல்பான, தன்னிச்சையான எதிர்வினைகளை பதிவு செய்வதில்தான் பிக்பாஸின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘ரெடி.. ஸ்டார்ட்.. காமிரா” என்று படப்பிடிப்பு போல நடத்தினால் இத்தனை யதார்த்தமான தருணங்களை உருவாக்கவே முடியாது. எனில் இதில் கலந்து கொள்ளும் அனைவருமே சிறந்த நடிகர்களாகியிருப்பார்கள்.

ஆனால் இப்படி எளிதில் காதல் வயப்பட்டு விடும் விஷயங்களைப் பார்க்கும் போது off screen-ல் ஏதாவது குறிப்புகள் வழங்கப்படுகிறதா என்கிற சந்தேகம் வருகிறது.

சரி. போகட்டும். மீராவிற்கு தர்ஷனின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதிலோ, அதை அவரிடம் நேரடியாக சொன்னதிலோ ஒரு பிரச்சினையுமில்லை. அதைக் கூட “எங்க அம்மா கிட்ட வந்து பேசு” என்கிற மிக கண்ணியமான proposal-ஆகவே மீரா தெரிவித்திருக்கிறார் போலிருக்கிறது. இதுவரையில் சரி. ஆனால் இது ஒரு வம்பாகப் பரவி, ஒரு பொதுச்சபையில் விசாரணைக்கு உட்பட்டு, மிக அந்தரங்கமான தருணத்தை அங்கு பரஸ்பரம் விளக்க வேண்டியிருப்பது மிகக் கொடுமையான விஷயம்.

இதன் பின்னுள்ள நுண்ணுணர்வற்ற தன்மை பற்றி கமலுக்குத் தெரியும். ஆனால் நிகழ்ச்சியின் அடிப்படையே இது போன்ற வம்புகளை ஊதி வளர்ப்பது என்பதால் அவரும் அதற்கு உடன்பட வேண்டியதாகிறது. தன்னுடைய காதல் முன்மொழிதல் நிராகரிக்கப்பட்டு, அது மீண்டும் பொதுச்சபையில் அலசப்பட்டு உறுதிப்படுத்தப்படும் போது அது சார்ந்த அவமானவுணர்ச்சியால், ஒரு பெண்ணாக மீரா மனம் புழுங்கியிருப்பார் என யூகிக்கிறேன். இதனாலேயே அவர் மீது பரிதாபம் உண்டாகிறது.

இந்த விஷயத்தில் தர்ஷன் மிக கண்ணியமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மீரா முன்மொழிந்தாலும், அதை மறுத்து ‘எனக்கு இன்னொரு பெண் இருக்கிறார்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், இதைப் பற்றி எவரிடமும் வம்பு பேசாமல் இருந்திருக்கிறார். என்றாலும் இவர்களின் உரையாடல்களை சிலர் கவனித்த வகையில் எப்படியோ இந்த விஷயம் வெளியே வம்பாக பரவி விட்டிருக்கிறது. (முதல் சீஸனில் ஆரவ் மீது உண்டான ஈர்ப்பை, ஜூலி காயத்ரியிடம் தனிமையில் சொல்ல, அவர் அடுத்த கணமே மற்றவர்களிடம் சொல்லிச் சிரித்த ஈனத்தனத்தை நினைவு கூரலாம்).

ஆனால் தர்ஷனுக்கு தன் மீது ஈர்ப்பில்லை என்று தெரிந்த மறுகணமே தன் விருப்பத்தை அழுத்தமாகத் துடைத்து விட்டு தர்ஷனுடன் இயல்பான நட்பைத் தொடர்வதுதான் சரியான செயலாக இருக்கும். ஆனால் பிடிவாத மனோபாவமுள்ள மீரா, தானே இந்த விஷயத்தை மீண்டும் விவாதப் பொருளாக்குகிறார். தர்ஷனிடம் அசிங்கமான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். தர்ஷன் தலையைப் பிய்த்துக் கொண்டு உரையாடலில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு விலகுமளவிற்கான உளைச்சலை மீரா தருகிறார். இந்த ‘நீலாம்பரித்தனம்’ முறையானதல்ல.

“இனிமே என் பேச்சுக்கு யாராவது வந்தா.. பச்சை.. பச்சையா.. கேட்பேன்” என்று மீரா சபதம் ஏற்பதிலிருந்து வனிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால், “நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே” என்று கவின் கலாய்த்ததுதான் சரி. வனிதாவைப் போன்று உறுதியாக ஒரு விஷயத்தை எதிர்க்கும் துணிச்சல் மீராவிடம் இல்லை. சும்மா இருந்தவரை சொறிந்து விட்டு விட்டு அங்கிருந்து அழுது கொண்டே சட்டென்று விலகி விடுவதுதான் மீராவின் ஸ்டைல்.

மீராவும் தர்ஷனும் தங்களுக்கு இடையேயுள்ள சிக்கலை மிக சீரியஸாக விளக்கிக் கொண்டிருக்கும் போது “என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு” என்கிற மாதிரி பல முகபாவங்களைத் தந்த கமலின் உடல்மொழி சுவாரசியம். நமக்குமே அப்படித்தான் இருந்தது. இந்தப் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க அவர் கவினை அழைத்தது காமெடி கலாட்டா. (தர்ஷன் ஒரு கேஸ்ல வாய்தா வாங்கறதுக்கே தலை சுத்தி விழும் போது.. இந்த ஆசாமி.. பத்து பதினைந்து கேஸை ஒரே சமயத்துல ஈசியா ஹாண்டில் செய்யற ஆசாமி).

இந்த உரையாடலின் இடையில் “நீங்க உள்ள வாங்க சார்” என்று கமலை வனிதா வெட்கத்துடன் அழைத்ததில் ஒரு ‘மும்தாஜ்’ தனம் தெரிந்தது.

**

வெளியேற்றப்படவிருக்கிறவர்களின் வரிசையில் சரவணன் காப்பாற்றப்பட்ட விஷயம் அறிந்ததும் அவர் மகிழ்ச்சியை காட்டவேயில்லை. இந்த வீட்டிலிருந்து உண்மையாகவே வெளியேற விரும்புகிறவர் அவர் மட்டும்தான். பிறர் வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று பாவனையாக சொல்கிறார்களே தவிர, அப்படியொரு லேசான சூழல் வந்தால் கூட அழுது புலம்புகிறார்கள். இதில் அசிங்கமாக அம்பலப்பட்டவர் வனிதாதான்.

“நீங்கள்தான் வெளியே செல்கிறீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?” என்று யூகமாக கமல் கேட்ட போது தான் வெளியே செல்ல மாட்டோம் என்கிற மிதமிஞ்சிய தன்னம்பிக்கையில் “வெளிய வந்து சொல்றேன் சார்” என்று வாயை விட்டார் வனிதா. ‘அப்படின்னா வந்துடுங்க” என்று கமல் சட்டென்று அடுத்த கணமே சொல்லி கார்டைக் காட்டிய போது திகைத்துப் போனார். அவரால் நம்பவே முடியவில்லை.

வனிதாவின் வெளியேற்றத்தில் ரேஷ்மா அழுததில் நியாயமான காரணங்கள் இருந்தன. இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருந்தன. எனவே அந்த தொடர்பில் ரேஷ்மா அழுதார். சரி. சாக்ஷி உள்ளிட்டவர்கள் கண்கலங்கியதில் கூட சிறிது லாஜிக் இருந்தது. சரி. ஆனால் இந்த மோகன் வைத்யா.. நீண்ட நேரத்திற்கு குலுங்கி குலுங்கி அழுமளவிற்கு என்னதான் நடந்தது? அதென்னமோ இந்த மனிதர் அழத் துவங்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு உலகமகா எரிச்சல் புறப்படுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. பிரிவுத் துயரத்தில்தான் இவரிடமுள்ள ‘சிநேகன்’ வீர்யமாக வெளிப்படுகிறார்.

ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் வடிவேலு கரி டிரம்மில் விழுவதைக் கண்டு அனைவரும் விடாமல் சிரித்து ஓய்ந்த பிறகும் விஜய் மட்டும் தனியாக இன்னமும் சிரித்துக் கொண்டிருப்பார். அது போல வனிதா வெளியேறி மேடையில் தோன்றிய போதும் கூட மனிதர் விடாமல் அழுதது எரிச்சல். “கண்ல தண்ணியே வரலை” என்று சாண்டி கிண்டலடித்த போதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. காப்பாற்றப்பட்ட மதுமிதா எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று சாண்டி கிண்டல் அடித்ததும் சுவாரசியம்.

**

என்னதான் புன்னகையால் மறைத்துக் கொண்டாலும் இந்த வெளியேற்றத்தை வனிதா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது.  ‘நல்லாத்தானே கொலை பண்ணேன்” என்று ஆதங்கப்பட்டார்.. “நான் கர்மாவை நம்பறவ” என்று அவர் சொன்னது சரி. உள்ளே அவர் செய்த அழிச்சாட்டியங்கள்தான் பூமராங் போல் தாக்கி அவரை வெளியே அனுப்பியிருக்கிறது.

வனிதா ஏதோ படுபயங்கரமான, கொடூரமான மனுஷி இல்லைதான். அவர் வெளியேறுவதால் அவர் மீது இப்போது அனுதாபம் உருவாவது இயல்பே. அவர் மற்றவர்களால் இத்தனை வெறுக்கப்பட்டாலும்  துணிச்சல் உள்ளிட்டு அவரிடமும் சில நேர்மறையான அம்சங்கள் இருக்கலாம். ரேஷ்மா குறிப்பிட்டது போல், ஆண் துணையில்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இது போல் வனிதாவிடம் நல்ல முன்னுதாரணமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவருடைய திமிரான மனோபாவம் இத்தனை நல்லியல்புகளையும் துடைத்துப் போட்டு விடுகிறது என்பதில் நமக்கும் சில பாடங்கள் இருக்கின்றன.

‘மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக சுற்றியிருப்பவர்களை அலட்சியமாக தூக்கியெறிவது நல்ல குணமல்ல. இரண்டும் வெவ்வேறு.

பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த விஷயங்களை வீட்டிற்குச் சென்று பார்க்கும் வனிதா இதிலிருந்து தனக்கான பாடத்தைக் கற்பாரா அல்லது ‘தான் செய்வதுதான்  சரி’ என்று தன் போக்கைத் தொடர்வாரா என்று தெரியாது.

பிக்பாஸ் மனிதர்களைத் திருத்தியனுப்பும் கூடமல்லதான். அது அவர்களின் நோக்கமல்ல. வணிகம்தான் பிரதானம். என்றாலும் போட்டியாளர்கள் தங்களைச் சுயபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களும்தான். நம்மிடையேயும் எத்தனையோ ‘வனிதாக்கள்’ இருக்கலாம்.

“நீங்க வெளியேறதுக்கு முன்னால” என்று கமல் ஒரு pause தந்த போது சற்று ‘பக்’கென்றிருந்தது. ஒருவேளை முன்னர் யூகித்தபடி சீக்ரெட் ரூமில் அம்மணியை அடைத்து மீண்டும் உள்ளே அனுப்புவார்களோ என்று. நல்ல வேளை, அப்படியெதும் நடக்கவில்லை.

மாறாக, மேடையில் நிற்காமல் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து இதர போட்டியாளர்களின் எதிர்வினைகளை வனிதா கவனிக்க ஒரு நல்ல வாய்ப்பு தரப்பட்டது. “அவர் பிரச்சினைகளை பெரிது செய்து விடுவார். தர்ஷன் விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். அத்தனை வார்த்தைகளை விட்டவர் அவர். ஆனால் மன்னிப்பு கேட்கவில்லை” என்று லொஸ்லியா குறிப்பிட்டது மிகச்சரியானது.

“அவங்க இன்வால்வ் ஆகாம இருந்தாலே பல பிரச்சினைகள் தன்னால் சரியாகி விடும். அவரால் என் நண்பர்களை இழந்தேன்” என்று அபிராமி கலங்கினார். அதற்கு வனிதா காரணமில்லை என்று அவர்களின் நண்பர்கள் மறுத்தாலும் வனிதாவின் தூண்டுதல் ஒரு காரணமாக இருந்தது என்பது சம்பவங்களின் மூலம் நாம் அறிந்தது. வனிதாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு அபிராமி தன் நண்பர்களிடம் மீண்டும் இணைவதற்கான சூழல் மலர்ந்திருப்பது நல்ல அடையாளம்.

வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது இயற்கை. அதிலும் வனிதாவின் வெற்றிடம் என்பது மிகப் பெரியது. பெளதீக ரீதியாக இதைச் சொல்லவில்லை. அவருடைய ஆளுமையின் நோக்கில் சொல்கிறேன். வனிதா இடத்தை, காற்று அல்ல.. இன்னொரு புயல்தான் நிரப்ப முடியும். புதிதாக வரவிருக்கிற அந்த ரவுடிப்புயல் வலுவாக மையம் கொள்கிறதா என்பதைப் பொறுத்துதான் இனி பிக்பாஸ் வீட்டின் சம்பவங்கள் களைகட்டும். பார்ப்போம்.




suresh kannan

4 comments:

Lakshmi Chockalingam said...

""""ஆனால் இந்த மோகன் வைத்யா.. நீண்ட நேரத்திற்கு குலுங்கி குலுங்கி அழுமளவிற்கு என்னதான் நடந்தது? அதென்னமோ இந்த மனிதர் அழத் துவங்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு உலகமகா எரிச்சல் புறப்படுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. பிரிவுத் துயரத்தில்தான் இவரிடமுள்ள ‘சிநேகன்’ வீர்யமாக வெளிப்படுகிறார். """""



எங்களுக்கும் தான்

malar said...

வெளியேறியபின் பார்வையாளர் இருக்கையில் இரண்டு மகள்களுடன் வனிதா அவர்களை அணைத்து அமர்ந்திருந்த காட்சி என்னமோ மனசுக்கு கஷ்டமாக இருந்தது .
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் பாட்டும் மனதில் வந்துபோனது ..நம் எல்லாருக்கும் ஒரு மைனம்மா கதை இருக்கும் அதுபோலத்தான் லொஸ்லியாவுக்கும் அதை கேட்கும் பொறுமை இருந்தபோது மதுவிடமும் பொறுமையாக சிலவற்றை கேட்டு அவருக்கும் புரியவைத்திருக்கலாம் . வெளியே சென்றவர் சொன்னவற்றை கேட்க முடிந்தவருக்கு அங்கே //மூடுடி /செருப்பாலடிப்பேன் மற்றும் ***f வார்த்தைகள் கேட்காமல் போனது துர் அதிர்ஷ்டம் பிக் பாஸ் முடிவு செய்துவிட்டார் அதனால் மதுவையும் பிறரையும் இனி ஓரங்கட்டுவார்கள் .. சொல்லாமல் செல்ல முடியவில்லை முதல் சீசனில் இருந்த போலீஸ்காரரை காணவில்லை பிறகு வந்த இரண்டு சீசனிலும் .

rajureva said...

அகம்பாவம் ஆணவம் பிறரை மரியாதை இல்லாமல் பொது இடத்தில் திமிராக அடுத்தவர்களை சீண்டியது அடுத்தவர்களை பேச விடாமல் தடுப்பது இவர் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் வெளியேற்ற பட வேண்டியவர் , நன்றாகவே நடந்தது . அந்த இரு சிறுமிகளை பார்க்க பரிதாமாக இருந்தது

malar said...

நேற்று நிறைய காணொளிகள் பார்த்தேன் வனிதா பற்றி ..இந்த மனுஷங்க எத்தனை மோசம் ..அவரின் மகள்கள் அந்த சிறுமிகளும் பழைய காணொளிகளை பார்க்கக்கூடும் .அப்போ அவங்க மனம் எத்தனை வேதனையடையும் .இது புரியாம வனிதாவை திட்டியிருக்கிறார்கள் பலர் .
நேற்று என்னமோ தெரியலை வெளியில் வந்த வனிதா முகம் படு சாந்தமாய் இருந்தது பார்வையாளர் இருக்கையில் ..இனிமேலாவது யாரும் அவரை வார்த்தையால் புண்படுத்தாதிருக்கக்கடவது .

காயத்ரி ஜூலி போன்றோர் வெளியேறியபோது துள்ளி குதித்த மனம் இவருக்கு மட்டும் விசனப்படுவது எனக்கு மட்டும் தானா ?