Tuesday, July 02, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 8 – ‘நானும் ரவுடிதான்’ –வம்பாக ஜீப்பில் ஏறிய மதுமிதா’



இந்த சீஸனின் முதல் நாமினேஷன் படலம் இன்று துவங்கியது. சில ஆச்சரியங்களும் அதிர்ச்சிகளும் வெளிப்பட்டன.

இது தொடர்பாக ஒரு சிறு வியாக்கியானம். சற்று சகித்துக் கொண்டு படித்து விடுங்கள். ஏனெனில் நாமினேஷன் ஆச்சரியத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறது.

அவர் – உங்களின் நெருங்கிய நண்பர். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் அவரிடம் ஒளிவுமறைவின்றி சொல்வீர்கள். அவரும் நன்றாகப் பழகுபவர். உங்களின் ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டார் என்கிற நம்பிக்கை உங்களுக்குண்டு.

இந்த நிலையில் நீங்கள் ஒரு விஷயத்தை அறிகிறீர்கள். அதாவது உங்களைப் பற்றி உங்கள் நண்பர் எங்கோ ஒரு இடத்தில் வம்பு பேசியிருக்கிறார். உங்கள் குணாதிசயம் ஒன்றைப் பற்றி எதிர்மறையாக சொல்லியிருக்கிறார். நீங்கள் அதை பிறகு அறிய நேர்கிறது.

இப்போது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? நிச்சயம் மனதில் கத்திக்குத்து ஏற்பட்டது போல இருக்கும். துரோகத்தையும் எரிச்சலையும் உணர்வீர்கள், இல்லையா? நண்பரின் மீது பயங்கரமான கோபம் வரும். அந்த நட்பை நிராகரித்து விடலாமா என்று கூட யோசிப்பீர்கள்.. இல்லையா? நல்லது. இதுதான் இயல்பான வெளிப்பாடு.

ஆனால் ‘இது போன்ற அதிர்ச்சிகளுக்கு மனதளவில் நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்பதைத்தான் பிக்பாஸ் வீட்டின் நாமினேஷன்கள் கற்றுத் தருகின்றன. உங்கள் நண்பர் புறம் பேசியது நிச்சயம் தவறுதான். ஆனால் உடனே அவரை நீங்கள் துரோகியாக கருதி நட்பைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்னதை சற்று நிதானமாக ஆராய்ந்து பார்க்கலாம்.

ஒருவேளை நண்பர் உங்களைப் பற்றி சொன்ன எதிர்மறையான கமெண்ட் ‘உண்மையாக’ இருக்கும் பட்சத்தில், உங்களிடம் குறை இருக்கும் பட்சத்தில் அதை பரிசிலீத்துப் பார்ப்பதே நல்லது. நட்பு பாதிக்குமோ என்று அவர் இதை உங்களிடம் சொல்லத் தயங்கியிருக்கலாம். அல்லது நீங்கள் இதற்கான ஸ்பேஸையே அவருக்கு அளிக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்று அவர் சொல்லாமல் இருந்திருக்கலாம்.  எனவே வேறு எங்கோ நடந்த உரையாடலில் அவர் தன்னிச்சையாக சொல்லியிருக்கலாம்.

ஆகவே உங்கள் நண்பருக்காக இது போன்ற அத்தனை benefit of doubt-ஐயும் நீங்கள் அளிப்பதே நல்லது. சுருக்கமாகச் சொன்னால் ‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’. உங்கள் நண்பர் சொன்ன கமெண்ட்டில் உண்மையிருந்தால் அதைத் திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பிறகு அவரிடம் நேராக “ஏண்டா இப்படிப் பண்ணே.. என் கிட்டயே நேரா இதைச் சொல்லியிருக்கலாமே?” என்று இந்தக் கசப்பை விரைவில் முடிவிற்கு கொண்டு வரலாம். மாறாக இதை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு புகைந்து கொண்டே தொடர்ந்து பழகுவது முறையானதல்ல. அது நல்ல நட்பிற்கான அடையாளமும் அல்ல.

ஒருவேளை உங்கள் நண்பர் அடித்த கமெண்ட், உங்களை காரெக்ட்ட்ர் அஸாஷினேஷன் செய்வதாக, மிக மோசமான பொய்யாக இருந்தால், அவரிடம் இதைச் சொல்லி விட்டு அந்த நட்பை உடனே துண்டிப்பதும் நல்லதே. இருப்பதிலேயே மோசமானது, நம்பிக்கைத் துரோகம்.

**

சரி, இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு இந்த வார நாமினேஷன் ஆச்சரியங்களை சற்று ஆராய்வோம்.

வனிதா, முன்னாள் தலைவர் என்பதால் தப்பித்தார். இல்லையெனில் அவரும் நாமினேஷன் பட்டியலில் நிச்சயம் இடம் பிடித்திருப்பார். வனிதா, தலைமைப் பண்பு உள்ளவராக இருந்தாலும் அதிகாரத்தை நிலைநாட்டும் வேகம் அவரிடம் அதிகமிருப்பது ஓர் எதிர்மறையான அம்சம்.

இப்போதைய தலைவரான மோகன் வைத்யாவிற்கும் சில எதிர் ஓட்டுக்கள் விழுந்திருக்கலாம். (மதையா.. வாய மூதுடா..” – மெளனராகம் காமெடி).

சாக்ஷி மற்றும் அபிராமியை, மீரா நாமினேட் செய்திருப்பது ஒருவகையான அயோக்கியத்தனம் என்றே சொல்வேன். ‘இருவருக்கும் வெளியே சில பிரச்சினைகள் இருந்தன போல. அதனால்தான் துவக்க நாள் சண்டை’ என்று சேரன் சுட்டிக் காட்டிய போது, “அப்படியெல்லாம் இல்லீங்கோ.. நாங்க ஃபிரண்ட்ஸூங்கோ” என்று வெள்ளைக் கொடியை பெருமிதமாக ஆட்டிய மீரா, நாமினேஷனில் வேறு மாதிரி பேசுவது சரியல்ல. ஒருவேளை, சேரனிடம் இந்த மறுப்பை அவர் தெரிவிக்காமல் இருந்தாலாவது, நாமினேஷன் தேர்வை ஏற்கலாம். துவக்க நாட்களில் அபிராமி அண்ட் கோ செய்த ராவடி அப்படி.

ஆனால் அபிராமியை நாமினேட் செய்யும் போது அவரின் பெயரை 'அபிராமி ஐயர்' என்று குறிப்பிட்டது மீராவின் சாமர்த்திய அரசியல்.

**

மீராவிற்கு எதிராக அதிக ஓட்டுக்கள் விழுந்தது எதிர்பார்த்ததே. ஒரு குழுவில் சற்று தாமதமாக இணையும் ஒருவரை மற்றவர்கள் விரோத மனப்பான்மையுடன்தான் வரவேற்பார்கள். ஏனெனில் அதற்குள் அந்தக் குழுவினர் கலந்துரையாடி உள்குழுவாகப் பிரிந்து செட் ஆகியிருப்பார்கள். இந்த நிலையில், வீட்டிற்குள் நுழையும் புது மருமகள் போன்றதொரு நிலையை புது உறுப்பினர் அனுபவிக்க வேண்டும். அந்தக் குழுவிற்குள் சாமர்த்தியமாக தன்னைப் பொருத்திக் கொள்வது அவரின் திறமை. இதுவேதான் மீராவின் நிலை. ஆனால் ஒரு குழுவுடன் இணையும் சகிப்புத்தன்மை மீராவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய நோக்கிலேயே மற்றவர்களை அணுகுகிறார். மற்றபடி அவரிடம் பெரிதாக எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நாமினேஷன் பட்டியலில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் சேரன். சர்ச்சைகளை பொறுமையுடன் தீர்ப்பவராகவும், முதிர்ச்சியான அணுகுமுறையை வெளிப்படுத்துபவராகவுமே அவர் இதுவரை அறியப்பட்டார். ஆனால் அவரையும் ஆட்சேபிக்கிறார்கள் என்றால் நாம் அறியாத சேரனின் முகமும் அங்கே வெளிப்படுகிறது போல. ‘டைரக்டர்..ன்ற ஹோதால.. ரொம்ப டாமினேட் பண்றார்” என்று சரவணன் சொல்லியதும் கவனிக்கத்தக்கது.

சரவணனும் இந்தப் பட்டியலில் இணைந்திருப்பது சற்று ஆச்சரியம். பெரும்பாலும் அமைதியானவராக இருந்தாலும் அவசியமான தருணங்களில் சரியாக பேசுகிறார். ஒருவேளை, இதுவே அவருக்கு எதிரிகளை உருவாக்கித் தந்திருக்கலாம்.

“அண்ணாநகர் முதல் தெரு” என்றொரு அருமையான, இயல்பான நகைச்சுவை திரைப்படம். அதில் மனோரமாவின் கேரக்ட்டர் சுவாரசியமானது. ‘நான்தான் இங்க அஸோஸியேஷன் செக்ரட்டரி.. நான்தான் முதலில் பேசுவேன்” என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். பாத்திமா பாபுவின் செயற்பாடுகளும் இப்படியே இருக்கின்றன. எனவே இவரும் பட்டியலுக்குள் வந்திருக்கிறார். ஆனால் தவிர்த்திருக்கப்பட வேண்டியவர் என்றே நினைக்கிறேன்.

**

“அது ஏண்டா.. அவன் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வி கேட்டான்?” என்கிற ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி “நான் ஏன் நாமினேட் ஆனேன்?” என்று சாக்ஷி ஆச்சரியப்படுவது இயல்பே. பெரிதாக எந்தவொரு சர்ச்சைக்குள்ளும் இவர் சிக்கவில்லை. ‘பொங்கல்’ மேட்டரில் வனிதா சத்தம் போட்ட போது கூட அமைதியாகக் கடந்து விட்டார். அபிராமிக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம்.

ஆனால் ‘சர்ச்சையின் நாயகி’யான அபிராமி எஸ்கேப் ஆகியிருப்பது ஆச்சரியம்.

கடந்த சீஸன் ‘மஹத்’தை நினைவுப்படுத்துவது போல ‘ரோமியோ’வாக சுற்றிக் கொண்டிருக்கும் கவின், ஆண் பார்வையாளர்களின் வெறுப்பை நிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பார். ஏனெனில் அவர்கள் செய்ய ஆசபை்படும் வேலையை இவர் செய்கிறார் அல்லவா? அபிராமி அண்ட் கோவிற்கு ஆதரவாக செயல்பட்ட ‘வழிசல்’ காரணமாக இவர் நாமினேஷன் பட்டியலில் வந்திருக்கிறார்.

“லாஸ்லியா.. தர்ஷன்’ ஆகிய இருவரும் குழந்தைகள். இந்தப் ‘பயங்கரமான’ சூழலில் இருந்து அவர்கள் வெளியேறுவதே நல்லது” என்பது போல் சேரன் செய்த நாமினேஷன் போங்காட்டம். தவறு செய்தவர்கள் என்று அவர் கருதுபவர்களைத்தான் நாமினேட் செய்திருக்க வேண்டும்.

இறுதியாக – மதுமிதா. ‘அவளைத் தொடுவானேன்.. கவலைப்படுவானேன்’’ என்றொரு பழமொழி இருக்கிறது. இது இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும். ‘நான் தமிழ்ப் பொண்ணு’ என்கிற சர்ச்சையை இவர் ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் நாமினேஷன் பட்டியலில் இருந்து தப்பித்திருப்பது மட்டுமல்லாமல் இப்படி தனியாக அமர்ந்து புலம்பவும் அவசியம் இருந்திருக்காது.

எந்தவொரு குழுவிலும் பேசும் போது, சாதி, மதம், இனம் போன்றவை தொடர்பான கமெண்ட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். இது பெட்ரோல் மாதிரியான விஷயம். டக்கென்று பற்றிக் கொள்ளும். ஷெரீனின் ஆவேசமான வெளிப்பாட்டைக் கவனியுங்கள். இது புரியும். மட்டுமல்ல, இது போன்ற பாகுபாட்டு அம்சங்களை பேசுவது அநாகரிகம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. நகைச்சுவையின் மூலமாக சாதியப் பிடிப்புகளை சற்று நெகிழச் செய்ய முடியும். இந்தப் பெட்ரோலின் ‘குபீர்’ தீவிரத்தை மட்டுப்படுத்த முடியும். ஒவ்வொரு சமூகம் தொடர்பாகவும் கிண்டலான பழமொழிகள் உள்ளன. சாதி என்பது பின்னொட்டாகவும் ஒருவரை அவரின் சாதி சார்ந்து கூப்பிடும் பழக்கமும் கிராமப்புறங்களில் முன்பு பெரும்பாலும் இருந்தது. இது தொடர்பான கிண்டல்களை பரஸ்பரம் செய்து கொள்வார்கள். இதனால் சாதி என்றாலே தொட்டாற் சிணுங்கியாகவோ.. டேய்.. நாங்க யாரு தெரியுமா’ என்று ஆவேசப்படும் இயல்பு குறைந்திருந்தது. ஜெயமோகன் இது தொடர்பாக ஓர் அருமையான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

ஆனால் ஒருவரையொருவர் நன்றாக அறிந்த, நன்கு பழகிய நண்பர்களின் உள்வட்டங்களில் மட்டுமே இந்தக் கிண்டல்கள் நிகழ முடியும். உதாரணத்திற்கு பஞ்ச தந்திரம் திரைப்படத்தில் தனது தெலுங்கு நண்பனை கமல் கிண்டலடிப்பதைக் கவனியுங்கள். அந்தக் கிண்டல் பெரிதாக உறுத்தாது. ஜாலியாகவே இருக்கும். (ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு நண்பர்கள் சற்று நெருடலை அடைந்திருக்கலாம்).

ஒரு புதிய நண்பர்களின் குழுவில் நன்றாகப் பொருந்தும் முன், பேசுவதில் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை மதுமிதாவின் நிலைமையில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அவர் தனிமையில் அமர்ந்து புலம்புவது ஒருபக்கம் அனுதாபத்தை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் எரிச்சலாகவே இருக்கிறது. வந்த புதிதில் அத்தனை உற்சாகமாகவும் கம்பீரமாகவும் பேசியவர், இன்னொரு பக்கம் இப்படி டொங்கலாக இருக்கிறாரே என்று தோன்றுகிறது.

பொதுவாகவே, நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள் இன்னொரு பக்கம் படு சீரியஸான ஆசாமியாக இருப்பார்கள். மதுமிதா, வனிதாவின் தன்னம்பிக்கையை சற்று கடன் வாங்கிக் கொள்ளலாம். அம்மணியை பாருங்கள், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் கவலைப்படாமல் இருக்கிறார்.

“இப்போ இருக்கிற மெளன விரதத்தை நீ முன்னாடியே செய்திருந்தா பிரச்சினை வந்திருக்காது” என்று மதுமிதாவிடம் சாண்டி அடித்த கமெண்ட் ‘நச்’.

**

வேறென்ன? ‘ஹோம் சிக்னெஸ்’ வந்து அழும் முதல் ஆசாமியாக சாக்ஷி இருக்கிறார். இந்த விடியாமூஞ்சிகள் தினமும் காலையில் ஆடும் நடனத்தில் அதிகம் கவர்பவர் ‘லாஸ்லியா’தான். ‘சீன்’ போடாமல் ‘தன்னுடைய’ உலகத்தில் ஆழ்ந்து இயல்பாகவும் அழகாகவும் ஆடுகிறார். இதனாலேயே சற்று ஓவியாவை நினைவுப்படுத்துகிறார். ‘ஆர்மிக்கான’ அப்ளிகேஷன் ஃபார்மை எடுப்போமா என்று கை துறுதுறுப்பதை கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

suresh kannan

4 comments:

Lakshmi Chockalingam said...

Super sir

Never thought this kind of perspective in Nomination .

Gopi Chakrabani said...

நேற்று சரவணன் மட்டுமே சரியான காரணங்களை கூறி Nominate செய்ததாக தோன்றுகிறது.
மதுமிதா புலம்பல் போலியாக தெரிகிறது.
மீரா அபிராமி ஐயர் என கூறியதன் மூலம் அவரின் Game planning அறிந்து கொள்ளலாம்.
சென்ற சீசனில் ரித்விகா கையில் எடுத்த ஆயுதம் மற்ற போட்டியாளர்களை பார்வையாளின் பார்வையில் இருந்து அந்நிய படுத்தும் முயற்சியை கையாள்கிறார்கள் மதுமிதாவும் மீராவும்...

Saranya said...

Nice sir

rajureva said...

உங்கள் நாமினேசன் அணுகுமுறையில் எந்த வார்த்தையும் நாமினேசன் செய்ய முடியாது