Sunday, July 14, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”



ஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரைப் பற்றிய தகவல் வழக்கம் போல் கசிந்து விட்டது. பிக்பாஸ் வீட்டிலேயே அதிக டெஸிபலில் பேசுபவர் என்பது ஒரு எளிதான க்ளூ.

ஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என்றே யூகித்தேன். ஏனெனில் அவரால்தான் நிகழ்ச்சியின் பரபரப்பை இத்தனை நாட்களுக்கு தக்க வைத்திருக்க முடிந்தது. இதில் அடிநாதமாக இருக்கும் வெகுசன உளவியலையும் கவனிக்கலாம்.

ஒரு நல்ல விஷயம், சரியாகவும் மென்மையாகவும் சத்தமின்றியும் சொல்லப்பட்டால் நாம் அதிகம் கவனிப்பதில்லை. ‘அட போருப்பா..” என்று சலித்துக் கொள்கிறோம்; கவனிக்காமல் புறக்கணிக்கிறோம்.  ஆனால் தெருவில் எவராவது உரத்த குரலில் சண்டை போட்டால் பதறியடித்துக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆவலாக ஓடுகிறோம். இதுதான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வெற்றியடைவதின் அடிப்படை. நேர்மறையான விஷயங்களை விடவும் எதிர்மறை விஷயங்களின் மீதே நம் மனம் எளிதில் கவனம் கொள்கிறது.  பாவனையாக திட்டிக் கொண்டே மிக ஆவலாக அவற்றைப் பார்க்கிறோம், இல்லையா?

ஆனால் டெஸிபல்காரர் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டாரா அல்லது சீக்ரெட் ரூமில் அடைத்து புலியை இன்னமும் வெறியேற்றி மறுபடியும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளமாக்கப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

**

‘பெண்கள் சமையல் அறைகளுக்குள் பல்லாண்டுகளாக அவதிப்படுகிறார்கள்’ என்று பெண்ணிய நோக்கில் சொல்லப்படுவது ஒருவகையில் உண்மைதான்.

ஆனால் – சமையல் அறையும் ஓர் அதிகாரம்தான். பெண்கள் எளிதில் அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மாமியார் – மருமகள் உறவின் முக்கியமான சிக்கல் இந்த அதிகாரத்தை கைப்பற்றுவதில் இருக்கிறது. இதை எளிதில் மாமியார் விட்டுத்தர மாட்டார். மட்டுமல்ல, கணவனின் உறவினர்கள் வந்து சமையல் அறையை எட்டிப் பார்ப்பதையோ, அதைப் பற்றி விமர்சனங்கள் வைப்பதையோ எந்தப் பெண்ணும் விரும்பமாட்டார்.

ஒருவரின் மனம் குளிர உணவு தயாரித்து அளிப்பது புனிதமான பணி. ஆனால் அதனுள்ளும் அதிகாரம் ஒளிந்திருக்கிறது. வனிதாவின் சிக்கலும் இதுவே. அணிகள் பிரிக்கப்பட்டதால் சமையல் அறையின் அதிகாரம் தன்னிடமிருந்து பறிபோன நெருடலில் இருக்கிறார். எனவேதான் “நான் வேணா ஹெல்ப் பண்றேன்” என்று அலட்சியமாக சொல்வது போல சொல்லி அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியையாவது ருசிக்க முடியுமா என்று பார்க்கிறார்.

இன்னொருபுறம், ஒரு புது மருமகளின் அச்சத்தில் மதுமிதா இருக்கிறார். தன்னால் சுவையாகவும் விரைவாகவும் இத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா என்று அஞ்சுகிறார்; தயங்குகிறார். மிக நியாயமான அச்சம் இது. பழகும் வரைக்கும் இந்த அச்சம் நீடிக்கும்.

இன்னொரு புறம் மதுமிதாவின் அச்சத்தை சரவணன் மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் அணுகுகிறார். “நீ ஆணியே புடுங்க வேணாம். நான் பார்த்துக்கறேன். சும்மா நின்னா போதும். இல்லைன்னா.. அது கூட தேவையில்லை” என்கிறார். இது வனிதாவைத் தவிர்ப்பதற்காகவும் அவரது அலட்டலை அடக்குவதற்காகவும் இருக்கலாம். அதே சமயத்தில் மதுமிதாவை மிகையாக ஒதுக்குவதில் அவரது அதிகார விருப்பம் அசிங்கமாக அம்பலப்படுகிறது.

உணவைப் பற்றி சாக்ஷி குறைகூறுவதும் அதை பற்றிக் கொண்டு ‘பார்க்கலாம் என்னதான் செய்யறாங்க’ன்னு என்று வனிதா கூடவே கும்மியடிப்பதும் இந்த அதிகாரப் போட்டியின் உப விளைவுகள். “சூடா இருக்கும் போது நக்கிச் சாப்பிட்டா எதுவும் நல்லா இருக்கற மாதிரிதான் தெரியும்” என்றார் வனிதா. இதைச் சொல்வதற்கு அனைத்துத் தகுதிகளும் உடையவர் அவர். இரண்டொரு முறை அவர் நக்கிச் சுவைத்துப் பார்க்கும் காட்சிகளை முகச்சுளிப்புடன் பார்க்க முடிந்தது. (ஆனால் சமையல் அறை சாம்ராஜ்ஜியத்திற்குள் இதெல்லாம் சகஜமான காட்சிதான். பல ஹோட்டல்களில் உள்ளே புகுந்து பார்த்தால் நாம் கடந்த வாரம் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி இப்போது வெளியே வரும்).

இதற்கிடையில் தர்ஷனுக்கும் மீராவிற்கும் இடையில் ஒரு கசமுசா. அது தொடர்பாக லொஸ்லியா கோபம் என்று யாருக்கும் புரியாத மினி எபிஸோட் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

**

அகம் டிவியே வந்தார் கமல். அதற்கு முன்பாக, ‘பாதிக்கப்பட்டவர்களும் சரி, பாதிப்பை உருவாக்குபவர்களும் சரி, ஓர் உரையாடலைத் துவங்கி விட்டு சட்டென்று வெளிநடப்பு செய்து விடுவதை’ மென்நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். (தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி வழக்கமாக செய்வதைத்தான் சொல்கிறாரோ?)

‘நகைச்சுவை என்பது திறமை மட்டுமல்ல, அது ஒரு நல்ல பண்பும் கூட’ என்று சாண்டியைப் பாராட்டினார். அதிலும் மற்றவரை புண்படுத்தாத நகைச்சுவை என்று அவர் குறிப்பிட்டதும் ‘இதை மோகன் வைத்யா கிட்ட சொல்லிப் பாருங்களேன்” என்று என் மைண்ட் வாய்ஸ் ஓடிய போது அதையும் கமலே குறிப்பிட்டு மோகனையும் சிரிக்க வைத்தார்.

பிக்பாஸில் வழிதவறும் ஆடுகளுக்கு ஆண்டவர் சொல்லும் உபதேசங்களும் கிடுக்கிப்பிடிகளும் முன்பெல்லாம் நன்றாக இருக்கும். முதல் சீஸனில் இது அருமையாக இருந்தது. ‘என்ன இருந்தாலும் லாயர் ஃபேமில இருந்து வந்தவர் இல்லையா?” என்று நினைத்து வியக்கத் தோன்றியது.

வாழைப்பழத்தில் தையல் ஊசியை இறக்குவது மாதிரி கேட்பவர்களுக்கே தாமதமாகப் புரியும்படி சுற்றி வளைத்து அத்தனை நுட்பமாக இறக்குவார். ஆனால் இப்போது சுருதி ரொம்பவும் இறங்கி விட்டது. பலாக்காயின் மீது குண்டூசியை இறக்குவது மாதிரி.

“கொலைகாரன் டாஸ்க்ல கொன்னுட்டீங்க” என்று முதல் குண்டூசியை வனிதாவின் மீது இறக்கி தன் இன்னிங்க்ஸை துவக்கினார். கமல் மீது பாடல் புனைந்து கவினும் சாண்டியும் பாடிய பாடலும் நடனமும் ஜாலியாக இருந்தது. புகழுரை என்றால் ஆண்டவருக்கு அல்வா மாதிரி. ரசித்துச் சாப்பிட்டார். பார்வையாளர்களும் சாண்டியின் குறும்பை ரசித்தார்கள்.

‘தாமரை இலை தண்ணீராக’ மிதக்கும் லொஸ்லியாவை ஜாடையாக விசாரித்தார் கமல். “நான் சொல்ல நினைச்சதை இன்னொருத்தர் சரியா சொல்லும் போது நான் பேச அவசியமில்லை –ன்னு தோணுது. தர்ஷன் அதை சரியாக செய்தார். எனவேதான் நான் பேசவில்லை. அவர் ஸாரி கேட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று லொஸ்லியா விளக்கம் அளித்த போது வனிதாவின் முகம், சரவணன் செய்த சாம்பாரை மறுபடியும் சாப்பிட்டது மாதிரி ஆகியது.

வனிதாவின் மீது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல் வர, ‘பார்த்தீங்களா.. ஒரு தவறின் மீதான எதிர்ப்புக் குரலை உடனே செஞ்சுடணும். அதுக்கான பலன் கேக்குதா?” என்றார் கமல். இது ஒருபக்கம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய நீதியாக இருந்தாலும் இன்னொருபுறம் “சண்டையோட ஃபோர்ஸ் இன்னமும் போதாது. அந்தப் பக்கம் லெஃப்ட்லயும் ‘நச்’ன்னு குத்தியிருக்கணும்” என்று தூண்டியது மாதிரியும் இருந்தது.

**

“ஒரு ஊர்ல ஒரு வெள்ளை ரோஜா இருந்துச்சாம்.. அது மேல ஒரு குருவிக்கு ஆசையாம்” என்கிற டி.ராஜேந்தர் படத்துக் கதையாக லொஸ்லியா சொன்ன ‘மைனம்மா’ கதை இருந்தது. சற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன்.

லொஸ்லியா சொன்னதை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது. என்னுடைய இளம் வயதில் எங்கள் வீட்டில் ஒரு கோழி வளர்த்தார்கள். அது செய்த குறும்புகளும், புத்திசாலித்தனமான செய்கைகளும் இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். வீட்டிற்குள் எவராவது புதிய நபர் வந்தால் ஆவேசமடைந்து கூவ ஆரம்பிக்கும். அது ஒரு நாள் குழம்பான போது துக்கத்தில் நான் சாப்பிட மறுத்து விட்டேன்.

புத்தி சுவாதீனமில்லாத பையன், மைனாவின் மீது இரும்புக்கம்பியைப் போட்டது போல ‘சிலர் மற்றவர்களை தெரிந்தோ.. தெரியாமலோ புண்படுத்தி விடுகிறார்கள்’ என்று வனிதாவை ஜாடையாக இணைத்தது கமலின் சமயோசிதம். ஆனால் கமல் எத்தனை சாமர்த்தியமாக வலை வீசினாலும் அதை அறுத்துக் கொண்டு தப்பிக்கும் சூட்சுமத்தை வனிதா அறிந்திருக்கிறார். மற்றவர்கள் போல் தயங்கி பேசாமல் இருப்பதில்லை. (இன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி)

**

கொலையாளி யாரென்று தெரியாத போது அபிராமி மீது கோபமாக இருந்த சாக்ஷி, அது வனிதாவென்று அறிந்தவுடன் பெட்டிப் பாம்பாக அமர்ந்து விட்டதைப் பற்றி நானும் எழுதியிருந்தேன். கமலும் அது பற்றி விசாரித்தார். “இது மச்சான் பற்றியது அல்ல. மச்சினி பற்றி’ என்று அபிராமியை நோக்கி இந்த உரையாடலை அவர் திருப்பியது சிறப்பு. ஆனால் இதற்கு தகரத்தின் மீது ஆணி கிழித்தது போன்ற ஜலதோஷக் குரலில் சாக்ஷி அளித்த விளக்கம் தலையைச் சுற்றியது. ஒன்றும் புரியவில்லை.

“ஏன் கேப்டன் பதவியை அபிராமிக்கு விட்டுக் கொடுத்தீர்கள்” என்று தர்ஷனிடம் கேட்டார் கமல். “அவரைப் பற்றி சிலர் இங்கு தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வனிதா அப்படிப் பேசினார். Attention seeking-க்கிறாக அபிராமி நிறைய விஷயங்களைச் செய்கிறார்” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அபிராமி அப்படி அல்ல என்று எனக்குத் தெரியும். எனவே தன்னை நிரூபிக்க அபிராமிக்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்று நினைத்தேன்” என்றார் தர்ஷன். “ஆமாம்.. அவ அப்படித்தான்” என்று வனிதாவும் ஒருமாதிரியாக இதை வழிமொழிய “அப்ப ஃபோகஸ் உங்க மேல இருந்து போயிடும்-னு பயப்படறீங்களா?” என்பது போல் கமல் கொக்கி போட்டது நன்று.

ஸ்கூல் ஆயா வேடத்தில் வந்திருந்த அபிராமி இதற்கு விதம்விதமாக தந்த முகபாவங்கள் சுவாரசியமாக இருந்தன.

கற்பழிப்பு விஷயங்களில் பெண்களின் ஆடைகளை குறை கூறாதீர்கள் என்கிற க்ளிஷேத்தனமான விவாதம் இங்கும் நடைபெற்றது. “நான் அப்படிச் சொல்லவில்லை” என்று மதுமிதா தற்காப்புடன் பேசினாலும் அவர் பழமைவாதத்தில் ஊறிய சூழலில் வளர்ந்தவர் என்பதும் அவரால் அப்படித்தான் பேச முடியும் என்பதும் வெளிப்படை. “ஆனால் இந்த மனோபாவம் பரவிவிடக்கூடாது” என்பதற்காகத்தான் இதை அழுத்தமாகப் பேசுகிறேன் என்று கமல் மதுமிதாவை எதிர்கொண்டது அல்ட்டிமேட்.

வனிதாவை துணிச்சலாக எதிர்கொண்ட தர்ஷனை பாரதியார் பாட்டையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு பாராட்டினார் கமல். “ஏன் மற்றவர்களுக்கு இந்தத் துணிச்சல் இல்லை?” என்ற போது ‘அவங்க லேட்டா சொன்னா புரிஞ்சுப்பாங்க” என்று சேரன் அளித்த விளக்கம் நடைமுறைக்குச் சரி என்றாலும் சற்று மொண்ணையாக இருந்தது. “அவன் காட்டுமிராண்டிப் பயதான்.. ஆனா..மெதுவாத்தான் வருவான்” என்கிற தேவர்மகன் வசனத்தை சேரன் பேச, “மெதுவான்னா.. எவ்ள மெதுவாய்யா.. அதுக்குள்ள நான் செத்துப் போயிடுவேன்யா” என்கிற மாதிரி கமல் பதில் சொன்னார்.

“நீ வாயைத் திறந்தாலே ஏழரையாடுது. சும்மா இரு” என்று பேச விடாமல் தன்னை மற்றவர்கள் தடுக்கிறார்கள். டிஸ்கரேஜ் செய்கிறார்கள்” என்றார் மதுமிதா. இங்கு அவர் தனிமைப்படுத்தப்படுகிறார் என்பது உண்மை. பெரும்பாலும் லொஸ்லியா மட்டுமே தோழியாக இருக்கிறார். என்றாலும் மதுமிதாவும் சளைத்தவர் அல்ல. தன்க்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவர் ஆவேசமாக எதிர்கொண்டதை முந்தைய நாட்களில் பார்த்தோம். ஆனால் இன்னொருவர் பேசுவது சரி என்றால் அதை வெளிப்படையாக ஆதரிப்பதும் ஒருவகை துணிச்சல்தான். பிக்பாஸ் வீட்டில் அதை பலர் செய்வதில்லை. எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகிறார்கள்.. நம் சமூகத்தைப் போலவே.

மோகன் வைத்யா எவிக்ட் ஆனதைப் போல ஒரு நாடகம் ஆடினார் கமல். அதற்கு ‘கோ’வென்று அழுது தீர்த்தார் மோகன். எதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார்கள் என்று சத்தியமாகப் புரியவில்லை. ‘வருமானம் போச்சே’ என்று வெளிப்படையாக அழுதாலும் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

பிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போதும் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. முத்தத்திற்கு காப்பிரைட் வாங்கிய மனுஷனையே டென்ஷன் ஆக்கினா எப்படிய்யா?

suresh kannan

3 comments:

Anantho Speaks.... said...

சற்று இழுவையாக இருந்தாலும் லொஸ்லியா சொன்னதாலேயே அதை சகித்துக் கொள்ள முடிந்தது. இதையே வனிதா சொல்லியிருந்தால் தொலைக்காட்சியை உடைத்துப் போட்டிருப்பேன். //// Lol... :D

Saran said...

இன்று வனிதாவின் ஒப்பனை கவனிக்கும்படி இருந்தது என்றதையும் சொல்ல வேண்டும்... ஹிஹி..sema

Unknown said...

//பிரிவுத் துயரத்தில் இருந்த மோகன் ஏறத்தாழ எல்லாப் பெண்களுக்கும் முத்தம் தரத் துவங்க, கமலே காண்டாகி, “போதும் நிறுத்துங்க.. நீங்க எவிக்ட் ஆகலை” என்று மோகனின் ஆவேசத்தை தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது//ultimate..