Tuesday, July 09, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 15 – “மீன் மார்க்கெட்டாக மாறிய பிக்பாஸ் வீடு”


“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற கருத்துள்ள பாடலுடன் இன்றைய நிகழ்ச்சி துவங்கியது. (எனில் ஆணையா லவ் பண்ண முடியும்?! என்னய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு!). இந்தப் பாடலின் கருத்து கவினுக்குப் புரிந்தால் சரி. அபிராமியில் துவங்கிய அவரது விளையாட்டு ‘அபிராமி.. அபிராமி’ என்று புலம்பும் நிலைக்குச் சென்று  ‘குணா’வாக மாறாமல் இருந்தால் சரி.

“மீராவிற்கு வாக்களித்த விஷயத்தில்” இன்னமும் அபிராமியை போட்டு வாட்டிக் கொண்டிருந்தார் வனிதா. தீய்ந்து போன கடலையை இன்னமும் மோசமாக வறுத்துக் கொண்டிருந்தது வனிதா டீம். இவர்கள் ஒருபக்கம் மதுமிதாவைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருக்க, அவரோ அந்தப் பக்கம் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். இரண்டையும் மாற்றி மாற்றி காண்பித்தது காமிரா. சாமிப்படங்களில்தான் இப்படியான காட்சியமைப்பை பார்த்திருக்கிறேன். வில்லிகள் ஒருபக்கம் சதி செய்து கொண்டிருக்க நாயகி சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பார்.

“ஏ.. நான் உங்க 'கேங்க்'தாம்ப்பா.. மதுமிதா கிட்ட நான் ஒண்ணும் பழம் விடலை. சும்மா லுலுவாய்க்குத்தான் பேசிட்டு இருந்தேன்” என்று வனிதா குழுவிற்கு தன் நட்பின் புனிதத்தை நிரூபிப்பதற்குள் அபிராமிக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது.

**

‘மாட்டிக்கிட்டியே மன்னாரு’ என்பது அடுத்த டாஸ்க். தலைமைப் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று நபர்களையும் ஒரு பெல்ட்டினால் இணைத்து விடுவார்களாம். மூவரும் ஒன்றாகவே சுற்ற வேண்டும். இறுதி வரை எவர் தாக்குப் பிடிக்கறாரோ.. அவரே தலைவர்.

“ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் பிக்பாஸின் அடிப்படை” என்று முந்தைய கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன். அது பிக்பாஸின் காதில் விழுந்து விட்டது போல. அதை காட்சியாகவே வைத்து விட்டார். சாண்டி, தர்ஷன், அபிராமி ஆகிய மூவரும் ஒட்டவைக்கப்பட்ட ‘உடன்பிறப்புகளாக’ சுற்றிக் கொண்டிருந்தார்கள். ‘மாட்டி விட்டுட்டீங்களே.. மம்மி” என்று ஜாலியாக பாத்திமாவை கூப்பிட்டுக் கொண்டிருந்தார் சாண்டி. அந்த நேரத்திலும் ‘நன்றிம்மா” என்று கூறும் சமர்த்துப் பிள்ளையாக இருந்தார் தர்ஷன்.


**

மீரா லாஸ்லியாவை இழுத்து வைத்து வம்பு செய்து கொண்டிருந்தார். தனக்கு எதிராக ஒருவர் வாக்களிக்கிறார் என்றால் அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஒன்று அதை அமைதியாக கடந்து விடலாம். அல்லது சம்பந்தப்பட்டவரின்  நன்மதிப்பைப் பிறகு பெற முயலாம். அல்லது எதனால் அப்படி ஆயிற்று என்று நட்பாக விசாரித்து அறியலாம். ஆனால் மீரா செய்வது அப்படி அல்ல. வாக்களித்தவரை கோபித்துக் கொள்கிறார். இதையேதான் இப்போது லாஸ்லியாவிடம் செய்து கொண்டிருந்தார். ‘பிரண்டு மாதிரி இருந்தே.. எனக்கு எதிரா வாக்களிச்சிட்டியே?”

“எனக்கு எல்லோரும் ப்ரண்ட்ஸ்தான்” என்று விலாங்குமீனாக நழுவினார் லாஸ்லியா. இந்த விஷயத்தில் அம்மணி பயங்கர சமர்த்து. என்றாலும் மீரா இம்சித்துக் கொண்டே இருந்ததால், வேறு வழியின்றி காரணத்தை மெல்ல கசிய விட்டார் லாஸ்லியா. “நீங்க தனியா இருந்தப்ப.. மதுமிதாதான் வந்து பேசினாங்க.. இப்ப நீங்க வனிதா டீமிற்கு போயிட்டதால அவங்களைப் பத்தி ஏன் நீங்க தப்பா பேசணும்?” என்று சரியான காரணத்தைச் சொல்ல மீராவால் அதற்கு பதிலளிக்க முடியாமல் .. சரி.. விடு.. விடு..’ என்பது போல் நழுவினார். இவர்களின் உரையாடலை சங்கிலி குழு ஜாலியாக ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

மீராவிடம் உள்ள இன்னொரு கெட்ட பழக்கம். ஒரு உரையாடலை தீவிரமாக ஆரம்பித்து விட்டு பிறகு பாதியிலேயே கோபத்துடன் விலகிச் செல்வது. இது எதிரே பேசிக் கொண்டிருப்பவருக்கு கொலைவெறியை ஏற்படுத்தும் விஷயம். சும்மா இருந்தவனை சொறிந்து விட்ட மாதிரி…

“இரவு விளக்குகள் அணைந்ததும் ஷெரீன் உள்ளிட்டவர்கள் படுக்கையறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தூங்க இடைஞ்சலாக இருக்கிறது” என்கிற நியாயமான காரணத்தை ‘வருங்கால தலைவர்களிடம்’ புகாராக சொல்லிக் கொண்டிருந்தார் மதுமிதா. இவரின் உடல்மொழியை தூரத்தில் இருந்தே மோப்பம் பிடித்து விட்ட வனிதா, சாப்பிடுவதைக் கூட விட்டு விட்டு உளவு பார்க்க வந்து விட்டார். ‘அப்பேட்டாக’ இருக்கணுமாம். பெரிய ஜெனரல் நாலெட்ஜ் விஷயம்.

‘யாருக்கும் தொந்தரவா இருக்க வேணாம் நாம வெளில போய்  பேசலாம்’ என்று பிறிதொரு சந்தர்ப்பத்தில் அபிராமி சொன்ன போதும் “பெட்ரூம்ல பேசக்கூடாது’ன்னு ரூல்ஸ்லாம் இல்லை” என்று வழக்கம் போல் ஆடினார் வனிதா. ஒருவரின் உறக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பது அடிப்படையான நாகரிகம். இதற்கெல்லாம்மா ரூல் போடுவார்கள்? கடவுளே! (முதல் சீஸனில் காயத்ரி குழு, ஓவியாவை தூங்க விடாமல் செய்த சம்பவம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் மதுமிதா அந்தளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை. ஒரேயொரு சூரியன்தான் இருக்க முடியும்).

**

பிணைத்து வைக்கப்பட்டிருந்த உடன்பிறப்புகள் தாமாக முன்வந்து விலகினால்தான் தலைவரை முடிவு செய்ய முடியும் என்கிற சூழல். பிக்பாஸூம் இதை வலியுறுத்தினார். எனவே முதலில் சாண்டியும் பிறகு தர்ஷனும் விட்டுக் கொடுத்தார்கள். எனவே அபிராமி இந்த வார தலைவரானார். “சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ” என்கிற அம்மாவாசை கெத்து அவர் முகத்தில் தெரிவதை ஏற்கெனவே எழுதியிருந்தேன். அது உண்மையாகி விட்டது.

“இங்க சில பேர் அபிராமிக்கு எதிராக இருக்காங்க. அபிராமிக்கு தன்னை ப்ரூவ் செய்ய ஒரு வாய்ப்பு தரணும்னு தோணுச்சு” என்று தான் விட்டுக் கொடுத்த காரணத்தைச் சொன்னார் தர்ஷன். “யாரு.. எதிரா இருக்காங்க?” என்று சாக்ஷி உள்ளிட்டவர்கள் ஜெர்க் ஆனார்கள்.

ஆக..புதிய தலைவர் அபிராமி…. “இப்பவே எனக்கு கண்ணைக் கட்டுது” என்று எதற்கோ சலித்துக் கொண்டிருந்தார் சாக்ஷி.

தலைவர் என்கிற கெத்துடன் டீம் பிரிக்க அமர்ந்தார் அபிராமி. ஆனால் வழக்கம் போல் அந்த இடத்தை தானே ஆக்ரமித்துக் கொண்டார் வனிதா. எனவே கடந்த வார மோகனைப் போலவே அபிராமியும் டொங்கலான தலைவராகத்தான் இருக்கப் போகிறார் என்பது முதலிலேயே தெரிந்து விட்டது.

சாக்ஷியும் கவினும் அமர்ந்து வழக்கம் போல் கடலை போட்டுக் கொண்டிருந்தார்கள். “நீ ஏன் இப்பல்லாம் என் கிட்ட சரியா பேசமாட்டேன்ற.. லாஸ்லியா கிட்ட போய்ப் பேசறே?” என்று தன் பொஸஸிவ்னஸ்ஸை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சாக்ஷி. “ஏய்.. ஏய்.. நான் உன் கிட்ட சொல்லிட்டுத்தானே பாத்ரூமிற்கே போறேன்” என்று நடிகர் கார்த்திக் மாதிரி குழறிக் கொண்டிருந்தார் கவின். ‘லவ்வும் கிடையாது.. ஒரு மண்ணும் கிடையாது. மாமா பொண்ணுங்க கூட விளையாடற மாதிரிதான் இருக்கேன்” என்று கவின் பொதுவில் சொல்லி விட்ட போதும் ஏன் இந்தப் பொண்ணுங்க லூசுகளாக இருக்குதுங்க?!

அபிராமியும் மதுமிதாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். தனது கலாசார காவலர் பதவியை மறுபடியும் அணிந்து கொண்டார் மதுமிதா. “மத்த பொண்ணுங்க எப்படி வேணா இருக்கட்டும். ஆனா தமிழ்ப் பொண்ணுங்க அப்படி இருக்கக்கூடாது. அந்த ஆடியன்ஸ்தான் பார்க்கிறாங்க.. மீரா கிட்ட கூட சொல்லிட்டு இருக்கேன். இப்படி உக்காராதே..ன்னு.. அவ கேட்க மாட்டேன்றா”

கட்டுப்பெட்டியான, பழமைவாத, நடுத்தரவர்க்க சூழலில் வளர்ந்திருப்பதால் மதுமிதாவிற்கு இப்படித் தோன்றுவது இயல்பே. ஆனால் தன் எதிர்பார்ப்புகளை பிறரிடம் திணிக்க முயல்வது அநாகரிகம். இத்தனைக்கும் அவர் சினிமாத்துறையில் இது போல் பலவற்றைப் பார்த்திருப்பார். இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று விட்டு விட வேண்டியதுதான். ‘தமிழ்ப்பொண்ணு’ என்று ஏற்கெனவே ஆரம்பித்ததால்தான் இத்தனை பிரச்சினை உண்டாயிற்று. எனில் ஏன் அதை மறுபடி ஏழரையைக் கூட்ட வேண்டும்?

**

நாமினேஷன் படலம் ஆரம்பமாயிற்று. கடந்த வாரங்களில் ‘தலைவர்’ என்கிற ஹோதாவில் தப்பித்த வனிதா இம்முறை செமயாக மாட்டிக் கொண்டார். ‘வனிதா.. வனிதா..’ என்று அவருக்கு எதிரான வாக்குகள் வந்துக் கொண்டேயிருக்க மனம் ஆனந்தமாக இருந்தது. ஆனால் அவர் இல்லையென்றால் இந்த வீட்டில் எந்தக் கலகமும் நடக்காது. நிகழ்ச்சி சலித்து விடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். எனவே பார்த்து வாக்களியுங்கள் மக்கழே.

ஆக.. மதுமிதா, மோகன் (மாட்டினியா தலைவா!), சரவணன், வனிதா, மீரா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் வந்தார்கள். மீராவும் அதிக எண்ணிக்கையிலான எதிர் வாக்குகளைப் பெற்றிருந்தார். மதுமிதாவைத் தேர்ந்தெடுத்த வனிதா, அதற்கான காரணமாக “ரொம்பத் திமிரா இருக்கா” என்று சொன்ன போது எனக்கு கண் கலங்கியது. தன்னுடைய புகழை இன்னொருவருக்கு விட்டுத் தருவதென்பது பெரிய தியாகம்.

தலைவராகி விட்டதால் அனைவரையும் அனுசரித்துப் போக வேண்டிய சூழலில் இருக்கிறார் அபிராமி. ஆனால் அதற்கான புத்திசாலித்தனமோ, சமயோசிதமோ அவரிடம் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுவது வேறு அவரின் பலவீனம்.

“மதுமிதா கிட்ட என்ன பேசிட்டு இருந்தே?” என்று வனிதா டீம் விசாரணை செய்ய ஆரம்பிக்க, அந்தக் கலாசார மேட்டரை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர் துவங்கியதுதான் தாமதம்.. “என்னாது.. கதை கேளேன்” என்று சாமியாட ஆரம்பித்து விட்டார் வனிதா. தன்னை பேசவே விடாமல் வனிதாவே ஆடியதால் ஏற்பட்ட எரிச்சலில் ‘ஏன் கத்தறீங்க.. ஃபிஷ் மார்க்கெட் மாதிரி இருக்கு” என்று அபிராமி ஒரு வார்த்தையை விட்டு விட வனிதா அதை பலமாகப் பற்றிக் கொண்டார்.

“ஏய்.. யாரைப் பார்த்து ஃபிஷ் மார்க்கெட்-ன்ற..” என்று அவர் கத்திக் கொண்டிருந்தது மீன் சந்தையை விடவும் மோசமானதாக இருந்தது. உடனே பம்மிய அபிராமி “அப்படிச் சொன்னதுக்கு சாரி’ என்று சொல்லி விட்டு விலகி விட்டார். சாண்டியிடம் இது குறித்தான நியாயத்தை வனிதா ஒப்புக்கு கேட்க ‘அவங்களை நீங்க முழுசா பேச விட்ருக்கணம்” என்று பதில் வர, தனக்கு ஆதரவான குரல் வராததால் ‘போடா’ என்பது விலக்கி விட்டார் வனிதா. தர்ஷனும் அபிராமியின் சார்பாக பேச வர “போடா… போடா.. வீட்ல பெரியவங்க இருந்தா வரச் சொல்லு” என்று அவரையும் தலையில் தட்டி அனுப்பி வைத்து விட்டார்.

“சாட்சிக்காரன் காலில் விழுவதை விடவும் சண்டைக்காரன் காலில் விழுவது மேல்’ என்றொரு பழமொழி இருக்கிறது. அதன் படி ‘அபிராமி சொல்லாட்டா.. என்ன.. மதுமிதாவிடமே கேட்டுக் கொள்கிறேன்” என்று எதிர்டீம் ஆசாமியிடமே தன் விசாரணையை மேற்கொண்டார் வனிதா. ‘தான் அபிராமி குறித்து மட்டுமே அப்படிச் சொன்னதாகவும் மற்றவர்களை குறித்து அல்ல என்றும் மதுமிதா விளக்கம் அளித்தார். ‘என்னை லோ –கிளாஸ் –ன்னு சொன்னாங்க.. இல்ல’ என்று அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வனிதாவை குண்டூசியால் மதுமிதா குத்தியது சிறப்பான சம்பவம்.

“பார்த்தியா.. மதுமிதா அப்படிச் சொல்லலையாம்..” என்று அபிராமியிடம் வந்து மறுபடியும் குதித்துக் கொண்டிருந்தார் வனிதா. அபிராமியால் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. ஒருபக்கம் தன் தலைவர் பதவியின் கெத்தையும் விட்டுவிடக்கூடாது. இன்னொரு பக்கம் வனிதா டீமின் பாதுகாப்பையும் இழந்து விடக்கூடாது. (முதல்வர் பதவின்னா என்னன்னு தெரியுமா.. எத்தனை பிரச்சினை.. எத்தனை எதிர்ப்பு.. என்ன தம்பி… ஒரு நாள் இருந்து பார்க்கறியா?!)

“எனக்குப் புரியது.. எனக்காக வனிதா நின்னுருக்காங்க.. ஆனா அதுக்காக அவங்க காலைக் கழுவிக் கொண்டிருக்க முடியாது” என்று ஷெரீனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. சுயமரியாதை சற்றாவது இருப்பதின் அடையாளம் இது. “இந்த விஷயத்தை மறுபடியும் ஆரம்பிச்சதே அபிராமிதான்” என்று வனிதாவிடம் போட்டுக் கொடுத்தார் மதுமிதா.

பொதுவாக சேரன் இந்த சந்தைக்கடை விவகாரங்களில் தலையிட மாட்டார். ஆனால் அவருக்கு ரொம்பவும் போர் அடித்ததோ, என்னமோ… இன்று பஞ்சாயத்திற்குள் நுழைந்தார். அபிராமியிடமும் மதுமிதாவிடமும் அவர்களின் குறைகளை நயம்பட எடுத்துச் சொன்னார். இருவரும் ‘சரிதான்’ என்று ஒப்புக் கொண்டார்கள். அது தனக்கும் சாதகமாக இருந்ததால் மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா.(ஃபிஷ் மார்க்கெட்'ன்றது கேவலம் கிடையாது என்று சேரன் சொன்னது வனிதாவிற்கான அம்பு).

“நீங்க என் கிட்ட சொன்னதை அவங்க கிட்ட சொல்லியிருக்கக்கூடாது” என்று மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி. .யெஸ்.. இதுதான் விஷயம். எந்தெந்த சூழலில் எவர் எவரிடம் எதை எதை பேச வேண்டுமோ, சொல்ல வேண்டுமோ, அதை மட்டுமே பேச வேண்டும். ஒருவரின் நட்பை வளர்த்துக் கொள்கிறேன் பேர்வழி என்று வம்புகளை இன்னமும் பெரிதாக ஊதி வளர்க்கக்கூடாது. அது சமயத்தில் நம் மீதே பூமராங் போல் திரும்பி வந்து பாயும்.

வனிதாவின் குழுவில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக, மதுமிதாவிடம் பேசிய விஷயத்தை மெல்ல ஆரம்பித்தார் அபிராமி. அவர்களும் இதை அறிய ஆர்வமாக இருந்தார்கள். அதுதான் அபிராமிக்கு பிரச்சினையாக வந்து முடிந்தது. சமயோசிதமாக இதைத் தவிர்த்திருந்தால் ‘ஃபிஷ் மார்க்கெட்’ சண்டையையும் தவிர்த்திருக்கலாம்.

மதுமிதா உள்ளிட்டவர்களுடன் அபிராமி அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த .. ஷெரீன், சாக்ஷி, வனிதா ஆகியோர் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தார்கள். "துரோகி' என்பது போல விதம் விதமாக அபிராமியைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

“நீ எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்கே.. அதைப் பத்தி மட்டும் யோசி” என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த அபிராமியிடம் பிறகு தனிமையில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் லாஸ்லியா. இந்த விலாங்கு மீன் இறுதி வரைக்கும் நிச்சயம் வந்து விடும்.

“வேணாம். மச்சான்.. வேணாம். இந்தப் பொண்ணுங்க காதலு’’ என்கிற பாடல் இப்போது அபிராமிக்குத்தான் பொருந்தும் போல் இருக்கிறது.அவர் வனிதா குழுவிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும் அல்லது விலகி நிற்க வேண்டும்.

ஆனால் ஒன்று, ஆண்களை மட்டும் வைத்து ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், ஒரே சீஸனில் Endemol நிறுவனம் திவாலாகி விடும் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு பெண்கள் மட்டுமே அனைத்து கலகங்களையும் ரணகளமாக நடத்துகிறார்கள். பாவம்,  ஆண்கள் டம்மிகளாக உலவுகிறார்கள்.

suresh kannan

9 comments:

Sri said...

Vanitha is full of vesham

Anantho Speaks.... said...

குறைவான வாக்குகள் பெற்றாலும் இந்த வாரம் வனிதா வெளியேற்றப்பட மாட்டார். மோகன் வைத்யா அல்லது சரவணன் இந்த வார பலிகடா. கன்டென்ட் கொடுக்க வேறு யாரும் இல்லை. சேனலுக்கு viewers வேண்டும். அவரவர்க்கு அவரவர் நியாயம். பாத்திமா பாபு அவர்களின் பேட்டியைப் பார்த்த பொழுது கபீர்தாஸரின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது...

கள் இருந்த இடத்திலே விற்றுப்போகும்.
மோரை தெரு, தெருவாக கூவி விற்கவேண்டும்.

நல்லதுக்குக் காலமில்ல...

Unknown said...

Bigg boss பற்றி டேனி ஒரு சூப்பர் பேட்டி கொடுத்திருக்கிறார் நக்கீரன் சேனல்ல...நீங்க இங்க அடிக்கடி சொல்லற விசயத்ததான் வேறு வார்த்தைகள்ல சொல்லியிருக்கார்...

vino rooby said...

super sir. bigg boss parthalum unga artical paditha pinbu than mulu thirupthiye etpadukirathu thank u sir

Gopi Chakrabani said...

வனிதா இல்லாமல் Bigg boss சுவாரஸ்யமாக இருக்காது. ஏதாவது ஒரு Task கொடுத்து அவரை காப்பாற்றிவிடலாம்..

//ஒருவரின் உறக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பது அடிப்படையான நாகரிகம். இதற்கெல்லாம்மா ரூல் போடுவார்கள்? கடவுளே! (முதல் சீஸனில் காயத்ரி குழு, ஓவியாவை தூங்க விடாமல் செய்த சம்பவம்தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் மதுமிதா அந்தளவிற்கெல்லாம் ஒர்த் இல்லை. ஒரேயொரு சூரியன்தான் இருக்க முடியும்).//
நான் நினைச்சதை நீங்கள் சொல்லவிட்டீர்கள்..

அபிராமிக்கு ஆதரவாக தர்ஷன் அருமையாக வாதம் செய்தார். வனிதாவால் அதற்கு பதிலளிக்கமுடியாமல் சூனாபனா மாதிரி பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சி போச்சு போ போ என்ற மாதிரி இருந்தது...

rajureva said...

களேபர சண்டையை உங்கள் விமர்சனம் மறக்க செய்துவிட்டது

malar said...

//ஒரேயொரு சூரியன்தான் இருக்க முடியும்).//

very true .

யூ டியூபில் வரிசையா பழைய 2017 எபிசோடெல்லாம் யாரோ ஓவியா விசிறி கிளறி விட்டுட்டாங்க உங்க வரிகளும் அதையே சொல்கிறது ..
நானும் அந்த புன்னகை குழந்தையை மீண்டும் ரசித்தேன் .
என்னெமோ தெரியவில்லை ஒருவரும் ஈர்க்கவில்லை இரண்டு சீஸனிலும் அவரைப்போல் yaarumillai

malar said...

உங்கள் முகப்புத்தகம் பக்கம் பின்னூட்டம் தர இயலவில்லை . பாத்திமா பாபு பற்றிய உங்கள் பதிவுக்கு கருத்து .
உண்மைதான் சிறந்த சைக்கியாட்ரிஸ்ட் போல் பேசியுள்ளார் ஆனால் கொஞ்சம் குறைந்தரது 3 நாட்களாவது இடைவெளி கொடுத்து பேட்டி அளித்திருக்கலாம் .வெளியே வந்ததும் பல குழப்பங்கள் இருக்கும் .
அடுத்தது அவர் சேரனை பற்றி கருத்து சொல்லி ஒரு பேட்டியில் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறார் மேலும் லொஸ்லியா போன்றோரை பப்லிசிட்டிக்காக உயர்த்தியும் மதுவை தாழ்த்தியும் எல்லா பேட்டிகளிலும் சொல்வது சரியல்ல .

இது உங்களுக்கு அங்கே பின்னூட்டம் தர முடியாமையால் இங்கே சொல்வது .வெளியிட வேண்டிய அவசியமில்லை

RAHUL ARVIND said...

Nice review Su.ka....