Wednesday, July 10, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 16 – “பிக்பாஸ் வீட்டு கொலைகளும் பேய்களும்”
இத்தனை நாள் ரணகளமாக இருந்த வீட்டில் இன்று சிரிப்பும் புன்னகையும் வருவதற்கு காரணமாக இருந்தது ‘கொலையாளி’ டாஸ்க்.

இது போன்ற விளையாட்டுக்களின் மூலம் பழைய கசப்புக்களை மறந்து ஒருவரோடு ஒருவர் இணங்கி நெருங்க முடியும். நமது வீடுகளிலும் இதைப் பார்க்கலாம். ஏதோவொரு அற்ப சண்டை காரணமாக முகத்தை திருப்பிக் கொண்டிருப்பவர்கள், எங்காவது சிறு பயணம் செல்லும் போது வேறு வழியில்லாமல் பேச நேர்ந்து விளையாடத் துவங்கி பழைய படி சரியாகி விடுவார்கள். ஆளாளுக்கு செல்போனையும் டிவியையும் கட்டிக் கொண்டு அழாமல் கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடினால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும் என்பது எளிய உண்மை. 

ஆனால் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ மோடிலேயே பிக்பாஸ் நிச்சயம் விட்டு விட மாட்டார். எதையாவது கோர்த்து விட்டு சண்டை போட வைப்பார். இப்படி தெளிய தெளிய வைத்து அடிப்பதுதான் பிக்பாஸ் ஸ்டைல்.

சரி, 16-ம் நாளில் என்னென்ன அற்புதங்கள் நடந்ததென்று பார்ப்போம்.

**

“வெச்சுக்கவா.. உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்கிற ரகளையான ரீமிக்ஸ் பாடலுடன் நாள் துவங்கியது. இந்த டான்ஸ் செஷன் செம போர். நடன மாஸ்டரான சாண்டி இருந்தும் களை கட்டவில்லை.

வெளியே வந்தவர்களுக்கு சிறு ஆச்சரியம். மயானம், எலும்புக்கூடு என்று சுடுகாட்டு எபெக்ட்டை கொண்டு வந்திருந்தார்கள். “நாம நைட்டு பன்னிரெண்டு மணிக்குத்தான் படுக்கப் போனோம். அதுக்குள்ள இவ்ள விஷயம் பண்ணியிருக்காங்களே.. குட்” என்று ஆர்ட் டிபார்ட்மெண்டை பாராட்டிக் கொண்டிருந்தார் சேரன். அவருக்குள் இருக்கும் டைரக்டர் எப்போதும் ‘அட்டென்ஷன்’ மோடில் இருப்பார் போலிருக்கிறது.

முணுக்கென்றால் கண்கலங்கி அழுது தீர்க்கும் மீரா இன்று யோகா சொல்லித் தருகிறாராம். காலக்கொடுமை. “மூச்ச இழுங்க.. வெளில விடுங்க’ என்று கேப் விடாமல் அவர் சொல்லிய போது ‘நடுவுல கொஞ்சம் டைம் கொடும்மா.. ஒரேடியா இழுத்துக்கப் போவுது” என்று மோகன் கமெண்ட் அடிக்க மற்றவர்கள் கவனம் கலைந்து சிரித்தார்கள். வந்த நாளில் இருந்து மோகன் அடித்த முதல் நகைச்சுவை கமெண்ட் இதுதான் போலிருக்கிறது. சாண்டி வழக்கம் போல் குறும்பு செய்து கொண்டிருந்தார்.

‘நல்லா சொல்லிக் கொடுத்த மீரா’ என்று வனிதா பாராட்டினார். அவரும் வந்த நாளில் இருந்து ஒருவரைப் பாராட்டியது இதுவே முதன்முறை. ஆனால் இதற்குப் பின்னால் நிச்சயம் ஏதாவது பாலிட்டிக்ஸ் இருக்கும். அபிராமிக்குப் பதிலாக மீராவை தங்களின் குழுவில் இணைத்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம்.

வழக்கம் போல் சிக்கன உடை ஒன்றை அணிந்து கொண்டு டான்ஸ் ஆடிக்காட்டினார் ஷெரீன். பார்க்கத்தான் பயமாக இருந்தது. பெண்கள் உடை அணிவது அவர்களின் சுதந்திரம்தான். இதில் மறுப்பேயில்லை. ஆனால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தன் உடல் வாகிற்கேற்ப உடையணிவது முக்கியம். ஏதோ மல்யுத்தப் போட்டிக்கு கிளம்புவது போல ரேஷ்மா அணியும் உடைகளைப் பார்க்க கலவரமாக இருக்கிறது. சிக்கென்ற உடல் உள்ளவர்கள்தான் ஸ்லீவ்லெஸ் உடை அணிய வேண்டும். சாதாரண அளவு டிவியில் பார்க்கும் எனக்கே அத்தனை பயமாக இருக்கிறதென்றால் பெரிய சைஸ் டிவியில் பார்ப்பவர்களின் கதியை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

“மீரா நம்ம டீம்ல வரப் பார்க்கிறா.. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சாக்ஷியும் ஷெரீனும் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரிய ஐ.எஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற டீம். சோதனை செஞ்சுதான் சேர்த்துக்குவாங்க.. போங்கம்மா..

கக்கூஸ் ஏரியாவிலேயே எப்போதும் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கும் கவின் இப்போதும் லொஸ்லியாவிடம் (இதுதான் சரியான உச்சரிப்பாம்) அதையே செய்து கொண்டிருந்தார். (உனக்கு வேற இடமே கிடைக்கலையாடா தம்பி?!) லொஸ்லியா எதற்கோ கோபித்துக் கொண்டிருக்க இவர் சமாதானம் செய்து கொண்டிருந்தார். “இன்னிக்கு முழுக்க என்னைப் பார்க்காம இருந்தா மன்னிச்சிடறேன்” என்றொரு டாஸ்க்கை லொஸ்லியா தர.. ‘பார்த்துட்டே இருக்கற டாஸ்க் வேணா செய்யறேன்” என்று சிணுங்கினார் கவின். (“உன் மூஞ்சைப் பார்க்கப் பிடிக்கலை –ன்றதை அந்தப் பொண்ணு எத்தனை நாசூக்கா சொல்லுது.. உனக்குப் புரியலையா?!)

தன் மகளை நீண்ட நேரமாக காணோமே என்கிற பதட்டத்தில் அங்கு சரியாக வந்து விட்டார் சேரன். “சும்மாத்தான் மாமா.. பேசிட்டிருந்தோம்” என்கிற மாதிரி சமாளித்தார் கவின். ஆனால் லொஸ்லியாவின் உடல்மொழியைக் கவனித்தால் கவனின் நோக்கம் என்றைக்காவது நிறைவேறி விடுமோ என்று கலக்கமாக இருக்கிறது.

**

‘காவல்துறையிடமிருந்து ஓர் அறிவிப்பு. ஒரு பயங்கர கொலையாளி தப்பி பிக்பாஸ் வீட்டில் புகுந்திருக்கிறார்’ என்று அமெச்சூரான அறிவிப்பு ஒன்று வந்தது. பழைய தூர்தர்ஷன் நாடகங்களில்தான் இப்படிப்பட்ட அறிவிப்புகளைக் கேட்டிருக்கிறேன்.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களின் பாதுகாப்பிற்காக பயங்கரமான ஆயுதங்களை வழங்கினார். ‘டெமோ செய்து காண்பியுங்கள்’ என்கிற உத்தரவு வேறு. ப்ரூஸ்லியே வெட்கப்படும்படி ஆண்கள் உருட்டுக்கட்டைகளைச் சுழற்றிக் காட்டினார்கள். “பார்த்து சார்.. எங்காவது எசகு பிசகா சுளுக்கிக்கப் போவுது” என்று நாம் அஞ்சும் படி பர்பாமன்ஸ் செய்தார் மோகன். தங்களை ‘பாகுபலி அனுஷ்கா’வாக நினைத்துக் கொண்டு பெண்கள் சுற்றிய கட்டைகள் காமெடியாக அமைந்தன.

பயங்கர டெரரான பெண்கள், கேவலம் கரப்பான்பூச்சிக்கு பயந்து சாவது போல, ஆங்காரமாக சண்டை போடும் பெண்கள், கொலையாளி டாஸ்க்கிற்கு பயந்தது சுவாரசியம். எதற்கோ பேய் மேக்கப் போடத் துவங்கினார்கள். ரேஷ்மாவிற்கெல்லாம் இது போன்ற மேக்கப் தேவையேயில்லை. தூங்கி எழுந்து முகத்தைக் கழுவாமல் வந்தாலே போதும். இந்த டாஸ்க்கின் ‘கொலையாளி’ வனிதாவாம். இதை விடவும் சிறந்த தேர்வு இருக்கவே முடியாது. பிக்பாஸின் குறும்பு இம்மாதிரியான சமயங்களில் நன்றாக வெளிப்படுகிறது.

‘பாஸ்.. நம்ம அடுத்த ஆப்ரேஷன் என்னா?” என்கிற ரேஞ்சிற்கு தனக்கு வழங்கப்பட்ட போனை வைத்துக் கொண்டு புகையறைக்குள் நுழைந்தார் வனிதா. அவர் அணிந்திருந்த வெள்ளை உடைக்கும், மங்கலான காட்சிக்கும் லாங்ஷாட்டில் பார்த்த போது ஜகன்மோகினி படத்தில் அடுப்பில் காலை நுழைத்து சமையல் செய்யும் பேய் போலவே இருந்தது.

‘சாக்ஷியின் மேக்கப்பை கலைக்கணுமாம். அதுதான் கொலையாம்”. என்னய்யா சின்னப்புள்ளத்தனமா இருக்கு! “வாங்க மேக்கப் போடலாம்” என்று சாக்ஷியை அழைத்த வனிதா, அவரின் ஒப்பனையைக் கலைத்து வெற்றிகரமாக டாஸ்க்கை நிறைவேற்றி விட்டார். ‘ஒரு கொலை நிகழ்ந்து விட்டது.. இனி சாக்ஷி பேய்’ என்று அறிவித்தார் பிக்பாஸ். சாக்ஷியை ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். சாண்டியும் தர்ஷனும் சாவு டான்ஸை சிறப்பாக ‘குத்தி’ ஆடினார்கள். எங்கோ மூலையில் பரிதாபமாக அமர்ந்திருந்த சரவணன், சாவு வீட்டில் அமர்ந்திருப்பது போலவே இருந்தார். சாக்ஷி இறந்து போனதால் காவியச் சோகத்துடன் அமர்ந்திருந்தார் கவின். (இவன்தான்யா… தன்னோட கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை ஃபர்பெக்ட்டா .ஃபாலோ பண்றான்!).

**

தான்தான் கொலையாளி என்பது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அபிராமி உள்ளிட்டவர்களின் மீது சாமர்த்தியமாக கை காண்பித்துக் கொண்டிருந்தார் வனிதா. மற்றவர்கள் எல்லோரும் ஆயுதங்களோடு இருந்த போது அவரிடம் எதுவுமே இல்லை. இதை வைத்தாவது கண்டு பிடித்திருக்கலாம்.

“யாரு கொலையாளின்னு நெனக்கறே?” என்று அபிராமி கேட்ட போது.. “யாருமே இல்ல. அப்படிச் சொல்லி நம்மள கன்ப்யூஸ் பண்றாங்க” என்று லொஸ்லியா வெள்ளந்தியாகக் கூறினார். என்னவொரு புத்திசாலித்தனம்?!

இதற்கு இடையில் அபிராமியிடம் பேசிக் கொண்டிருந்தார் சேரன். கவின் பற்றியதாக இருக்கலாம். “நான்தான் முகின் கூட இருக்கேனே” என்று ‘நமக்கு நாமே’ திட்டத்தின் வழியாக தனக்கே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. ‘யாரு யாரை லவ் பண்றா?’ விஷயத்தில் நூறு நாள் முடிவதற்குள் நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிற்கு காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. (அடேய்.. கவினு!).

அடுத்த கொலையை நிகழ்த்துவதற்கான நேரம் வந்தது. மோகனை ‘மைக்கேல் ஜாக்சன் டான்ஸ்’ மாதிரி ஆட வைக்க வேண்டுமாம். பாவம், மைக்கேல் ஜாக்சன். கல்லறையிலிருந்து அலறி புரண்டு படுத்திருப்பார். “வாங்க.. டான்ஸ் ஆடலாம்” என்று குட்டி சுட்டீஸ் அண்ணாச்சி மாதிரி மற்றவர்களை அழைத்த வனிதா, மோகனை வம்பாக அழைத்து டான்ஸ் மாதிரி எதையோ ஆட வைத்தார். முகின் அழைத்தும் டான்ஸ் ஆட வராத மோகன், வனிதா அழைத்ததும் பதறியடித்துக் கொண்டு வந்து விட்டார். (பின்னே.. மேலே விழுந்து வெச்சா என்னாவறது?!) MJ மாதிரி இடுப்பை உயர்த்தி உயர்த்தி மோகன் ஆடியது கொஞ்சம் ரசாபாசமாக இருந்தது.

இன்று மாலை வரை லொஸ்லியாவைப் பார்க்கக்கூடாது என்கிற டாஸ்க்கில் இருந்த கவின், பிறகு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். மோகனின் சாவு ஊர்வலம் துவங்கியது. ‘நல்லா வாழ்ந்த மனுஷன்யா. சிறப்பா இருக்கணும்” என்று சரவணன் சொல்ல ‘மக்க கலங்குதப்பா..’ என்ற பொருத்தமான பாடலைப் போட்டார் தர்ஷன். சாக்ஷி பேயாக இருந்த போது மொக்கை காமெடி செய்து கொண்டிருந்த மோகன், இப்போது தானும் பேயாக மாறி சாகஷியுடன் இணைந்து மொக்கையைத் தொடர்ந்தார்.

நாள் முடிவடையும் நேரம் வந்ததால் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ‘நான் கொலை செய்யப்பட்டதற்கு அபிராமிதான் காரணமா இருக்கணும்” என்று சீரியஸாகவே கோபப்பட்டுக் கொண்டிருந்தார் சாக்ஷி. (ஏ.. நீங்கள்லாம் நிஜமாவே லூசுகளா.. அந்த மாதிரி நடிக்கறீங்களா?!) . அபிராமி, லொஸ்லியா, மதுமிதா ஆகியோர்களின் மீதுதான் இவருக்குச் சந்தேகம். அந்தளவிற்கான பர்பாமன்ஸை வனிதா செய்திருக்கிறார்.

இந்த டாஸ்க்கையும் தாண்டி சாக்ஷி குரூப்பின் முட்டாள்தனத்தை புரிந்து கொள்ளலாம். அருகிலேயே இருந்து கொண்டு வனிதா செய்யும் அலப்பறைகளைப் புரிந்து கொள்ளாமல் அவரைத்தவிர மற்றவர்கள் எல்லோரையும் இந்த குரூப் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது; சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் எதிரியை அடையாளம் காணத் தெரியாத முட்டாள்தனம். 

“வானத்தை வில்லா வளைக்கணுமா… மேகத்தை ரெண்டா ஒடிக்கணுமா?” என்றெல்லாம் கவின் விட்டுக் கொண்டிருந்த பில்டப்புகளை ‘போடா டுபுக்கு’ என்பது போலவே மறுத்துக் கொண்டிருந்தார் லொஸ்லியா.
suresh kannan

1 comment:

Unknown said...

குட் ரிவ்யூ... அதுலயும் சாக்ஷி அபிராமி மட்டும் என்ன கொன்னிருந்தா இத சும்மா விடமாட்டேன் சீரியஸா சொன்னதெல்லாம் ஒரு மகா முட்டாளால தான் சொல்லமுடியும்...