Friday, July 12, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 18 – “சிறைக்குச் சென்ற சேரன் செங்குட்டுவன்”
“இருக்கு.. இன்னிக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கு” என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின இன்றைய பிரமோக்கள். பரவாயில்லை. கலகலப்பும் கலாட்டாவும் என்று சரிசமமான சம்பவங்கள் இன்று நிகழ்ந்தன.

“பேட்ட.. பராக்’ என்கிற அட்டகாசமான பாடலோடு விடிந்தது. சாண்டி எல்லோரையும் மாடு ஓட்டிக் கொண்டிருந்தார். லொஸ்லியா கண்ணை ஒருமாதிரியாக மூடி, உடம்பை 45 டிகிரியில் வளைத்து ஒரே மாதிரியாக ஆடிக் கொண்டிருந்தார். அது எந்தப் பாடலாக இருந்தாலும் இதே சலிப்பான எபெக்ட்டைத்தான் தருகிறார்.

வீட்டில் பெண் உறுப்பினர்கள் செய்யும் அலப்பறைகளை வைத்து ‘திடீர்’ கானா பாடல்களை சாண்டி தலைமையில் பாடிக் கொண்டிருந்தார்கள். ‘அடியே லாஸ்லியா’ பாடலை இங்கும் எடுத்து விட்டார் கவின். இயல்பாகவும் பிறகு வேகமாகவும் பாடிய இந்த செஷன் கோஷ்டி பஜனைப்பாடல் போலவே கேட்டது.

சாண்டி, கவின், மீரா ஆகிய மூவரையும் வாக்குமூல அறைக்கு அழைத்தார் பிக்பாஸ். கொலையாளியின் கொடூரங்கள் தொடர்வதால் இதை விசாரிக்க வேண்டுமாம். கவின் இன்ஸ்பெக்ட்டராம் (வெளங்கிடும்). மீரா கான்ஸ்டபிள். சாண்டி ஆவியுடன் பேசுபவர். மீராவிற்கு கான்ஸ்டபிள் உடை கனகச்சித பொருத்தமாக இருந்தது. நித்யானந்தா கெட்டப்பில் வந்து ‘ராத்திரி நேரத்து பூஜையில்’ என்று பெண் ஆவிகளின் இடையில் ஜாலியாக பாடினார் சாண்டி.


‘மதுமிதா.. லொஸ்லியா.. இவங்க ரெண்டு பேர் மேலதான் சந்தேகமா இருக்கு” என்று புதிதாக அமைக்கப்பட்ட இந்த ‘கண்காணிப்பு குழு’ பேசிக் கொண்டிருந்தது. (அப்ப.. இதுங்களும் லூஸூங்கதானா?!).

மீரா மட்டுமே “வனிதா மற்றும் முகின் மீது சந்தேகமாக இருக்கிறது” என்றார். (பேசாம.. இவங்களை இன்ஸ்பெக்ட்டரா போட்டிருக்கலாம்).

**

ஒரு இருட்டான சூழலில், கால் டாக்ஸி வாகனத்தில் விசாரணை நடைபெற்றது. (இங்க.. என்ன..ஃபர்ஸ்ட் நைட்டா நடக்குது.. லைட்டைப் போடுங்கய்யா). “கேக்கற கேள்விக்கு கரெக்ட்டா பதில் சொல்லணும்” என்று மொக்கை இன்ஸ்பெக்டர் கவின் விசாரிக்க “நான் பதில் சொல்றேன். அது கரெக்ட்டா –ன்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்” என்று சரியாக கவுண்ட்டர் கொடுத்தார் மதுமிதா.

கவின், லொஸ்லியாவுடன் ஒரே தட்டில் சாப்பிட்டு வழிந்து கொண்டிருந்ததை பொறுக்க முடியாத சேரன், சாக்ஷியை அனுப்பி போட்டுக் கொடுத்தார்.

பிறகு கையில் பூங்கொத்துடன், அசடு வழிய லொஸ்லியாவை விசாரித்துக் கொண்டிருந்தார் கவின். ‘எனக்கு யாரையும் கொன்று பழக்கமில்லை. எல்லோரையும் அன்பு செய்துதான் பழக்கம்” என்று லொஸ்லியா அளித்த பதில் அப்போதைக்கு பார்க்க காமெடியாக இருந்தாலும் அது லொஸ்லியா சொல்லியதாலேயே சிறப்பான பதிலாக அமைந்தது.

அடுத்த கொலைக்கான அழைப்பு வந்தது. ‘யெஸ்.. பாஸ்” என்று ரெடியானார் தடியாள் அனிதா… மன்னிக்க அடியாள் வனிதா. கவினின் துப்பாக்கியை திருடி ஒளித்து வைக்க வேண்டுமாம். இதுதான் அடுத்த டாஸ்க்.

இதற்கிடையில் ஒரு கலாட்டா உருவாக ஆரம்பித்தது. ‘எங்களால வெயில்ல உக்கார முடியலை” என்று சாக்ஷி க்ரூப் சிணுங்க ஆரம்பித்தது. தாங்கள் சிரமப்படுவது கூட அதிக பிரச்சினையில்லை, மற்றவர்கள் ஜாலியாக உள்ளே ஏஸியில் இருக்கிறார்களே.. என்பதுதான் அவர்களுக்கு காண்டாக இருந்திருக்கும். குறிப்பாக லொஸ்லியாவும் மதுமிதாவும் ஜோடி போட்டுக் கொண்டு ‘கெக்கே.. பிக்கே’’ என்று சிரித்துக் கொண்டே உலவி வருவது அவர்களை பயங்கர கடுப்பாக்கியிருக்கும்.

இனிமேல்தான் பிக்பாஸ் டாஸ்க்குகள் கடுமையாகப் போகின்றன. இதற்கே இப்படி இவர்கள் சிணுங்கினால் எப்படி? ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் மாதிரி ‘பொண்ணுங்க  வாடுவதைக் கண்டு தானும் மனம் வதங்கும் கவினும் அவர்களின் சலிப்பில் கலந்து கொண்டு அதன் சதவீதத்தை உயர்த்தினார்.

பின்பு சேரனும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டார். அவருடைய பிரச்சினை இது மட்டுமல்ல. “கேமே என்னன்னு புரியல. எங்களோட பங்களிப்பே இல்ல. திடீர்னு ஒருத்தர் கொலை–ன்றாங்க.. கடுப்பாகுது’ என்பதே அவரின் பிரதான புகார். இது புரிந்து கொள்ளக்கூடியதுதான். சின்னப்பசங்களே விளையாடாத மொக்கையான விளையாட்டுக்களை மூன்று நாள்களுக்கு விளையாடச் சொன்னால் எப்படி?

"பிக்பாஸ்.. என்ன பிக்பாஸ் இப்படி பண்றீங்க?" என்று காக்காய்க்கு சோறு வைப்பது போல் கத்திக் கொண்டிருந்தார் வனிதா. பின்னே.. தன்னை மறைத்துக் கொள்ள வேண்டுமே!

ஆனால், "இதற்குத்தான் காண்ட்டிராக்டில் சைன் போட்டு வர்றோம்.. சம்பளம் தர்றாங்க.. செஞ்சுதானே ஆகணும்" என்று அவர் சிணுங்கல்வாதிகளிடம் சொன்னது பக்கா ஸ்டேட்மெண்ட். இத்தனை நாள்களில் வனிதா சொன்னதை முதன் முறையாக ஒப்புக் கொள்ளும் திருவாசகம் இது. 

இதற்கிடையில் சரவணனும் மீராவும் சேரனைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தார்கள்."பொணந்தின்னி என்ன சொல்லுது?" என்கிற மாடுலேஷனில் 'என்ன சொல்றாரு.. சேரன் செங்குட்டுவன்?" என்று தன் கோபத்தைக் காட்டினார் சரவணன். "என் மேல இருக்கிற தனிப்பட்ட கோபத்தைக் காட்டுகிறார்" என்று லாஜிக்கே இல்லாமல் புறம் பேசினார் மீரா.

பிக்பாஸிடம் நேரடியாகவே தன் ஆட்சேபத்தைக் கூறி இந்த டாஸ்க்கில் இருந்து ஒதுங்கி விட்டார் சேரன். பிக்பாஸ் வீட்டில் இனிமேல்தான் பல கேனத்தனமான விளையாட்டுக்களை பார்க்கப் போகிறார். இதற்கே சலித்துக் கொண்டால் எப்படி சேரன்? நாய் வேஷம் போட்டாகி விட்டது.. என்ன செய்வது?

கவினிடம் இயல்பாக வந்து பேசுவது போல் துப்பாக்கியை எடுத்தார் வனிதா. அதை முகினிடம் கொடுக்க அவர் என்னமோ அதை ஜேம்ஸ்பாண்ட் பாணியில் சுழற்றிக் கொண்டு போய் பாத்ரூம் அருகில் ஒளித்து வைத்தார். தன்னுடைய துப்பாக்கி இல்லாததைக் கூட உணராமல் வனிதாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின். (ஏண்டா..  வனிதாவும் லிஸ்ட்ல உண்டா?!).

ஆயுதம் என்பது ஒரு வீரனுக்கு உயிருக்கு சமமானது. ஒரு ராணுவ வீரரின் அனுமதியில்லாமல் அவருடைய துப்பாக்கியை ஒருவர் தொட்டுக்கூட பார்த்து விட முடியாது.

**

சேரனின் பலத்த ஆட்சேபம் காரணமாகவோ அல்லது இந்த மொக்கை டாஸ்க்கை பிக்பாஸ் டீமினாலேயே தாங்க முடியவில்லையோ என்னமோ.. நிறுத்தி விட்டார்கள். பாவம் மீராவிற்கு அளிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் பிரமோஷன் வீண்.

அனைவரும் வரவேற்பறையில் உட்கார்ந்திருக்க, அந்தச் சமயம் பார்த்து பிக்பாஸிடமிருந்து வனிதாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. திருட்டு முழியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் வனிதா.

நேரடியாக லைனில் வந்த பிக்பாஸ் உண்மையை சபைக்கு தெரிவிக்கச் சொல்ல.. வனிதாவின் முகத்தில் தெரிந்த பீற்றலை அப்போது பார்க்க வேண்டுமே.. நோபல் பரிசு வாங்கியவனின் முகத்தில் கூட அப்படியொரு பெருமை வழியாது. ‘தான்தான் கொலையாளி’ என்று அவர் அறிவித்தவுடன் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்களே.. தவிர “யாரு கொலையாளி –ன்னு தெரிஞ்சா பின்னிடுவேன்” என்று முன்னர் போட்ட சபதத்தை உடனே கைவிட்டார்கள். பின்னே.. அது வனிதாவாயிற்றே..

குறிப்பாக.. 'என்னை அபிராமிதான் கொன்னிருக்கணும்" என்று லூஸூத்தனமாக புலம்பிய சாக்ஷியே.. இப்போது மூச்சே விடவில்லை.

‘இந்த டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள்?” என்பதை அனைவரும் கூடி தேர்ந்தெடுக்க வேண்டும். வனிதா என்பது நிராகரிக்க முடியாத தேர்வு. சிறப்பாகச் செய்தார். ஆனால் மோகனும் சாக்ஷியும் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரியவில்லை. வயது காரணமாக மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ‘வெயிலில் சிரமப்பட்டு அமர்ந்த’ காரணத்திற்காக சாக்ஷியாம். போங்காட்டம். பதிலாக முகினை தேர்ந்தெடுத்திருக்கலாம். சிறந்த திருட்டுக் கொட்டாக வனிதாவிற்கு உதவி செய்தார்.

அடுத்ததாக “யார் இந்த டாஸ்க்கில் சரியாக பங்கேற்கவில்லை?” என்கிற கேள்விக்கு தாமாக முன்வந்து ஆஜர் கொடுத்தார் சேரன். கூடவே சரவணைனையும் தேர்ந்தெடுத்தார்கள். அப்போதே அவர் முகத்தில் டென்ஷன் ஆரம்பித்தது. ஆனால் ஒருவகையில் இது சரியான தேர்வே. இந்த டாஸ்க்கில் அவரது பங்கு பெரிதாகவே இல்லை. ஆங்காங்கே நின்று கொண்டு திகைப்பான முகபாவங்களைத் தந்து கொண்டிருந்தாரே தவிர, அதிகம் காணப்படவில்லை. ஒருவேளை அவை எடிட்டிங்கில் போய் விட்டதோ என்னமோ.

“தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும். இல்லையென்றால் தூக்கிச் சென்று புதைத்து விடுவார்கள்” என்றொரு சொலவடை சினிமாவுலகில் பிரபலம். பிக்பாஸ் வீட்டிலும் அதேதான் கதை. தனது இருப்பை அழுத்தமாக தெரிவித்துக் கொண்டே இருப்பவர்கள்தான் முன்னேற முடியும்.

சிறப்பாகச் செயல்பட்ட மூவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்கு தகுதியானவர்களாம். எனில் வனிதாவை தக்க வைத்துக் கொள்வதற்கான பிக்பாஸின் முயற்சிகள் வெற்றியடையப் போகின்றன என்றே பொருள்.

‘சரியாக பங்கேற்காத இருவருக்கும் ஜெயில்” என்று அறிவிக்கப்பட்டவுடன் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். வனிதாவின் தலைமையில் சபை மறுபடியும் கூடியது. பாவம் அபிராமி!.. பெயருக்குத்தான் தலைவர். யார் தலைவராக இருந்தாலும் வனிதாவின் கொடிதான் எப்போதும் பறக்குது.

இதில் சரவணணை ரிலீஸ் பண்ணி விட்டு கவினை மாட்டி விடும் நோக்கில் உரையாடலை முன்வைத்தார் வனிதா. பங்கேற்பாளர்களின் சலிப்பை அதிகமாக தூண்டி விடும் வகையில் கவின் செயல்பட்டாராம். “என்னடா.. குற்றத்தை ஒப்புக்கிறயா?” என்பது மாதிரியே அதட்டலாக வனிதா விசாரிக்க ‘சரிங்க மேடம்” என்று உடனடியாக சரணடைந்தார் இன்ஸ்பெக்டர். கவின் சிறைக்குச் செல்லும் சேதியை அறிந்த சாக்ஷி ‘அப்ப நான் போறேன்” என்று ஆரம்பிக்க.. “நான் ஒரு மொள்ளமாறி.. நான் ஒரு முடிச்சவிக்கி’ என்று ஆளாளுக்கு சுயவாக்குமூலம் தர ஆரம்பித்தார்கள்.

இந்தக் குழப்பம் பிக்பாஸிடம் எடுத்துச் செல்லப்பட “நீங்களே அடிச்சு சாவுங்க” என்று தண்ணி தெளித்து அபிராமியை திருப்பி அனுப்பி விட்டார். எனவே இவர்கள் ஒருமனதாக முடிவு செய்தால் அது செல்லுபடியாகும். கவின் முதல் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.

“சேரனுக்குப் பதிலாக யாராவது போறீங்களா?” என்று ஷெரீன் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்க ‘லொஸ்லியா’ கையைத் தூக்கினார். ‘நான் தீர்ப்பு சொன்ன பிறகு அதற்கு அப்பீலா?’ என்று வெகுண்ட வனிதா, ஒரே கத்தலில் லொஸ்லியாவை பின்னடையச் செய்தார். “திடீர் –னு நீ நல்லவளாகி விட முடியாது. இங்க ஒண்ணும் தியாகிக்கான போட்டி நடக்கலை” என்று கோபமடைந்தார். அவர் சொன்னது ஒருவகையில் சரிதான். ஆனால் இத்தனை அலப்பறை தேவையில்லை. சேரனின் பக்கம் பரிவாக பேசுவது போல் நடிக்கும் வனிதாவிற்கு சேரன் தண்டனை பெறாமல் போய் விடுவாரோ என்கிற கலக்கமும் வந்து விட்டது போல.

“நான் ஒண்டு கதைக்கணும்” என்று ஆரம்பித்த லொஸ்லியா உதை வாங்கியவரைப் போல பின்வாங்கி கண்ணீருடன் பாத்ரூம் பக்கம் செல்ல….. வேறென்ன நடக்கும்… பின்னாடியே கவினும் சென்றார். “என் கிட்ட இனி கதைக்காதே…” என்று மருகிய லொஸ்லியாவிடம் “அப்படிச் சொல்லி என் மனதின் மீது உதைக்காதே” என்று உருகினார் கவின்.

“ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. என் பேரைச் சொல்லி ஜெயிலுக்கு அனுப்பச் சொல்ல.. எவனாவது ஜாமீன் எடுக்க வந்தீங்களாடா.. ‘கடல்லேயே.. இல்லையாம்’ –ன்ற மாதிரி கமுக்கமா இருந்திட்டீங்களே… உங்களுக்கு ஆயுதப் பயிற்சில்லாம் கொடுத்தேனடா” என்று ஆண் உறுப்பினர்களிடம் கோபித்துக் கொண்டார் சரவணன். வனிதா மட்டும் வழக்கறிஞராக ஆஜர் ஆகவில்லையென்றால் களி தின்றிருப்போமே என்கிற அச்சம் அவரை ஆட்டிப் படைத்தது. ‘டாஸ்க்கில் பங்கெடுக்க மாட்டேன்’ என்று சொன்ன சேரன் இந்தத் தண்டனைக்கு சரியானவர், தான் இல்லை என்பதும் அவருடைய அழுத்தமான எண்ணம்.

என்னமோ.. உண்மையாகவே புழல் சிறைக்கு அனுப்புவதைப் போல இவர்கள் செய்யும் அலப்பறைகள் காமெடியாக இருக்கின்றன.

suresh kannan

5 comments:

Ramkutty said...

தடியாள்...;););)

Saran said...

துப்பாக்கி இல்லாததைக் கூட உணராமல் வனிதாவிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார் கவின். (ஏண்டா.. வனிதாவும் லிஸ்ட்ல உண்டா?!). SEMA...

malar said...

அருமையான பார்வை ..ஒவ்வொருவரை பற்றி அழகா கணித்து அவதானித்துள்ளீர்கள் .
லொஸ்லியாவின் நடனம் மிக சலிப்பு .இருப்பது தானே வரும் .அது புரியாமல் இதற்கும் பிறரை போல் ஆஹா ஒஹோஒ சொல்வதை விட்டு விலகி உங்கள் நேர்மையான கருத்தை சொன்னதற்கு பாராட்டு .
உண்மையான கருத்து எனது கணிப்பு என்னவென்றால் லொஸ்லியாவின் டிக்ட்டோக் பதிவு ஒன்றை காண நேரிட்டது ,அதில் அவர் அங்கு செய்ததை அப்படியே பிக்பாஸில் செய்கிறார் அவ்வளவே .
ஒருவர் அழகாய் இருப்பதால் தூக்கி வைப்பது trp க்காக மட்டும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை .
நேற்று பேய் உடையில் வாசலில் கவினும் லொசலியாவும் தட்டில் உண்பதை பார்ப்பார் சாக்க்ஷி அந்த சீனில் மிக அழகாக தெரிந்தார் .பிக் பாஸ் வேண்டுமென்றே சிலரை வெறுக்க வைக்கிறார்களோ என்று மனதுக்கு படுகின்றது .அதுபோல் மதுவின் நகைசுவைப்பக்கத்தை நமக்கு காட்டுவதில்லை

rajureva said...

ஏன் எல்லாரும் வனிதாவுக்கு பயப்படறாங்க . அதனால்தான் யாரும் அவங்களை சந்தேக கண்ணோடு பார்க்க வில்லை என்று தெரிகிறது . இதை வைத்துதான் பிக் பாசும் வனிதாவை தலைவர் போட்டிக்கு தக்க வைத்து nomination தப்பிக்க வைக்க ஏற்பாடு செய்து விட்டார் ...............

Saravanan C said...

சரவணன், ஏண்டா.. ஆம்பளைத் தடியன்களா.. என் பேரைச் சொல்லி ஜெயிலுக்கு அனுப்பச் சொல்ல.. எவனாவது ஜாமீன் எடுக்க வந்தீங்களாடா..புலம்பியது சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணி கழுதைகளிடம் புலம்பியது நியாபகம் வந்தது ������