Sunday, July 07, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”



கடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒருவர் எல்.கே.ஜி. பையன் ஆடை அணிந்த மாதிரி கந்தர்கோலமான ஒரு டிரஸ். (ஆடை வடிவமைப்பாளரை மாத்துங்க ஏட்டய்யா..)

நாமினேஷன்களுக்காக பத்து கோடி வாக்குகள் வந்திருக்கிறதாம். (ஏம்ப்பே.. நீ பார்த்தே?!). உண்மையா அல்லது இவர்களாக அடித்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையாகவும் இருக்க வாயப்பிருக்கிறது. தமிழக ஜனங்களின் கல்யாண குணங்கள் அப்படி.

நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளித்தாலும், தேர்தல் கமிஷன் பாத்ரூமிற்குள்ளேயே எட்டிப் பார்த்து அடிக்கடி நினைவுப்படுத்தினாலும்  கூட வாக்களிக்க வராமல் ரிமோட்டை மாற்றி மாற்றி ‘ஆதித்யா’ சானல் காமெடியை ஆயிரத்திற்கும் மேலான முறை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பிக்பாஸ் போன்ற உருப்படியில்லாத நாமினேஷன்களுக்கு பத்து கோடி வாக்குகள். . வெளங்கிடும் மக்கழே.

**

“வாங்க.. வெள்ளிக்கிழமை அன்னிக்கு என்ன கண்றாவில்லாம் நடந்ததுன்னு பார்ப்போம்” என்று கமல் பிரியமாக நம்மை அழைத்தார்.

‘நவரசங்களை’ பாத்திமா சொல்லித் தர வேண்டுமாம். ஏற்கெனவே அவர் சும்மாவே ஆடுவார்.. இதில் காலில் சலங்கையை வேறு கட்டி விட்டார்கள். எக்ஸ்பிரஷனே வராத விஜய் ஆண்ட்டனியை சிவாஜி கணேசனிடம் நடிப்பு டியூஷனுக்கு தரதரவென்று இழுத்துச் சென்ற கதையாக இருந்தது.

சாண்டியும் பாத்திமாவும் ‘காதல்’ தூது விட்டுக் கொண்டிருந்த போது ‘வட போச்சே’ என்கிற ஏக்க எக்ஸ்பிரஷனைத் தந்தார் மோகன் வைத்யா. இவரும் மதுமிதாவும் பரிமாறிக் கொண்ட நவரசங்கள் “நாங்க எப்பவும் இப்படித்தான். ஒருத்தரையொருவர் கேவலமா திட்டிப்போம். ஆனா க்ளோஸ் பிரெண்ட்ஸ்” என்பது போல் மொக்கையாக இருந்தது.

இதுவரை வனிதா டீமால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மீரா, அவர்களின் ஜோதியில் ஐக்கியமாகி விட்டார் போலிருக்கிறது. நல்லதுதான். அதற்காக இருக்கிற மேடையிலேயே எதிர்க்கட்சிக்குத் தாவுகிற வடிவேலு போல, குழுவில் இணைந்தவுடனேயே மதுமிதாவைப் பற்றி கோள் சொல்வது அயோக்கியத்தனம். ‘பூனை செய்யறது எல்லாம் தப்பாம். ஆனா அடிச்சா பாவமாம்’ என்கிற கேட்டகிரியில் இருக்கிறார் மீரா. இவர் புடவை கட்டி விடக்கேட்டு மதுமிதா அதைச் செய்யாமல் டபாய்த்து விட்டாராம். இதை நாடகத்தனமாக வனிதாவிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘அவ நேரோ மைண்ட்’ என்று பாத்திமா, மீராவைப் பற்றி ஏதோ புறம்பேசி விட்டாராம். கோள்மூட்டி குளிர்காய்வதில் தங்கமெடல் வாங்கிய வனிதா, இதை மீராவிடம் கனகச்சிதமாக பற்ற வைத்து விட, “இது நியாயமா.. தர்மமமா.. முறையா?” என்று பாத்திமாவிடம் சென்று நீதி கேட்டுக் கொண்டிருந்தார் மீரா. “என் வாய்ல இருந்து பொய்யே வராது” என்று கையை அடித்து அடித்து இவர் சொல்லிய நாடகத்தனம் பயங்கர காமெடியாக இருந்தது. “கடலைக்காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள.. காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல’ என்று வைரமுத்து ஏற்கெனவே எழுதி வைத்து விட்டார். ‘நேரோ … கூட அல்ல மீராவிற்கு  மைண்ட்டே முதலில் இருக்கிறதா என்று சமயங்களில் சந்தேகம் வருகிறது.

**

பள்ளிக்கூடச் சிறுவன் டிரஸ்ஸில் அகம் டிவிக்குள் வந்தார் கமல். கவினின் multitasking-ஐ வஞ்சப்புகழ்ச்சியில் புகழ்ந்தவர், பிறகு அடித்த சிக்ஸர்கள் அருமையான ‘கிரேசி’த்தனம். ‘தூர தர்ஷன்’ “ஈர sandy’ ‘மீனாட்சி ஆட்சியில் ‘நட’ராஜர்களாக மாறி விடும் ஆண்கள் என்று அவர் அடித்த கமெண்ட்டுகள் ஒவ்வொன்றும் அருமையானவை. இவையெல்லாம் script-ல் எழுதித் தருகிறார்களா என்ன என்று தெரியவில்லை. என்றாலும் இவற்றை சமயோசிதமாக உருவாக்கக்கூடிய திறமை கமலுக்கு உண்டு என்பதை பல சமயங்களில் நிரூபித்திருக்கிறார்.

வீட்டின் ‘பெண்கள் ஆட்சி’யின் நிலைமையைப் பற்றி ‘அவங்க அவங்க நியாயத்தை அவங்க அவங்க பேசிக்கறாங்க’ என்று சேரன் சொன்னது ‘நச்’.

முடியாமல் போன மதுமிதாவின் ‘சுயமுன்னேற்ற’ பேச்சை இப்போது முடிக்கச் சொன்னார் கமல். நான் அப்போதைய கட்டுரையிலேயே குறிப்பிட்டதுதான். சினிமாவில் இருப்பதாகச் சொல்லப்படும் தவறான விஷயங்களுக்கு மத்தியில், நான் திறமையின் மூலமாக முன்னேறிய பெண்’ என்பதை நீட்டி முழக்காமல், தன்னை முன்நிறுத்திக் கொள்ளாமல் மதுமிதா அப்போதே  சொல்லியிருக்கலாம். மதுமிதா பேசிக் கொண்டிருக்கும்  போது வனிதா தந்த எக்ஸ்பிரஷன்கள் வழக்கம் போல ‘உவ்வேக்’ ரகம். (மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்ல விருந்து).

முகினின் மீது ‘விசாரணைக் கமிஷனை’ துவங்கினார் கமல். வாழைப்பழத்தில் ஊசியேற்றும் கமலின் திறமை சற்று வெளிப்பட்டாலும் முந்தைய சுவாரசியம் இல்லை. இந்த நோக்கில் முதல் சீஸன் காயத்ரியை :ஹேர்’ விஷயத்தில் மடக்கிய அந்த எபிஸோட்டை ஒரு ‘கிளாசிக்’ என்லாம். மனிதர் அப்படி வீடு கட்டி சுற்றி வந்து விளையாடினார். அதெல்லாம் ஒரு காலம்.

முகின் ராவின் இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளே சாக்ஷி மற்றும் ஷெரீன்தான். அவர்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை.

அடுத்ததாக குடும்ப சர்ச்சைகளைத் தடுக்கத் தவறிய தலைவரின் மீது விசாரணை பாய்ந்தது. வழக்கம் போல் பூர்ணம் விஸ்வநாதன் மாடுலேஷனில் மோகன் வைத்யா தடுமாறினார். ‘பேஷ்.. பேஷ்.. தலைவர்னா… இவர்தான் தலைவர்.. ரொம்ப நன்னாயிருக்கு” என்று இவருக்கு சான்றிதழ் தந்தார் வனிதா. வனிதா செய்யும் அலப்பறைகளை மோகனால் தடுக்க முடியவில்லை என்னும் போது நல்ல தலைவராகத்தானே தெரிவார்? மற்றவர்களும் மோகனைப் புகழ்ந்த போது மதுமிதாவும் சேரனும் மட்டும் மாற்றுக்கருத்துக்களைச் சொன்னார்கள். ‘இயலாமை’ என்கிற வார்த்தையை சேரன் பயன்படுத்தியது சிறப்பு.

வீட்டின் ‘ஸ்வச் பாரத்’ டீமை மனம் திறந்து பாராட்டினார் கமல்.

**

சாண்டி பொழுதுபோக்காக முன்பு விளையாடிய ஒன்றையே இப்போது விளையாடச் செய்தார் கமல். பிக்பாஸில் இது போல் தரப்படும் டாஸ்க்குகளை வெறும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ‘மல்ட்டி பர்சனாலிட்டி’ அந்நியன் விக்ரம் மாதிரி, ஒருவரைப் பற்றி  சில நிமிடங்களுக்குள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாற்றி மாற்றி பேசுவது என்பது ஒரு சவால். குறுகிய நேரத்திற்குள் சமயோசிதமாக செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் எதிர்மறைத்தனங்கள் நம் வாயினாலேயே தன்னிச்சையாக கசிந்து விடும் ஆபத்து இதில் உண்டு. ஜாக்கிரதையாக இல்லையென்றால் எளிதில் மாட்டிக் கொள்வோம்.

சம்பந்தப்பட்டவர் தன் மீது வெளிப்படும் எதிர்மறை கமெண்ட்டுக்களைக் கேட்டு அப்போதைக்கு பாவனையாக சிரித்தாலும் உள்ளுக்குள் நிச்சயம் காண்டாவார். பிறகு இது தொடர்பான சர்ச்சைகள் வெடிப்பதற்கு இது காரணமாக இருக்கும். பிக்பாஸ் டாஸ்க்குகளின் அடிப்படை பெரும்பாலும் இதுதான். ஒருவரையொருவர் கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது.

கவினைப் பற்றி லாஸ்லியா புகழ்ந்து பேச நேர்ந்த போது சாண்டியாலேயே அதைப் பொறுக்க முடியவில்லை. சில விநாடிகளிலேயே கைத்தட்டி எதிர்மறையாக பேச வைத்தார். இருப்பதிலேயே சேரன் இந்த விளையாட்டை திறமையாகச் செய்தார். என்ன இருந்தாலும் இயக்குநர் இல்லையா?

நேர்மறையாக பேச வேண்டிய சமயத்திலும் எதிர்மறையாகப் பேசி தன் பிரத்யேக குணாதிசயத்தைக் காட்டினார் ‘சொர்ணாக்கா’ வனிதா. ‘சீறி வந்த பாம்பு.. புஸ்ஸூன்னு போயிடுச்சு’ என்று மோகன் வைத்யாவை சாண்டி கிண்டலடித்தது சிறப்பு.

**

‘இந்த வீட்டிலிருந்து ஒருவரை வெளியேற்ற வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?’ என்று அடுத்த யார்க்கரை வீசினார் கமல். இதுவும் ஒரு நுட்பமான விளையாட்டு. யார் மீது நமக்கு வெறுப்பிருக்கிறது என்பதை பொதுவில் சொல்ல வைத்து விடும் உத்தி.

வேகாத முந்திரிக்கொட்டை போல் துள்ளிக் குதித்து எழுந்த வனிதா, மதுமிதாவை தான் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் பிறரின் சார்பாகவும் தேர்ந்தெடுத்ததை ஏதாவது கெட்ட வார்த்தையால்தான் குறிப்பிட வேண்டும். அத்தனை எரிச்சலூட்டிய விஷயம்.

“ஐயா.. என்னை விட்ருங்கய்யா..” என்று ஏற்கெனவே பீதியில் அலறிய சரவணன், இப்போது home sick-ல் இருக்கிறார் போலிருக்கிறது. எனவே அவர் வெளியேறினால் அது அவருக்கு நல்லது என்று சிலர் அவரைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒருவகையில் இது safe play. உண்மையிலேயே தாம் நினைப்பவரைப் பொதுவில் தெரிவித்து பகையை உருவாக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் உத்தி.

ஆனால் இதற்கு வனிதா வேறு நோக்கில் காண்டானார். மதுமிதாவைத்தான் பெரும்பாலோனேர் தேர்ந்தெடுத்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய வன்மம் கலந்த எதிர்பார்ப்பு. எனவே சரவணணுக்கு எதிராக போடப்படும் தேர்வுகளை ஆட்சேபித்தபடி இருந்தார்.

‘சரவணன் நல்லவரு. அதனால வெளிய போகட்டும் –ன்னு சொல்லி டபாய்க்காதீங்க. உண்மையிலேயே யாரு வெளியே போனா ‘உங்களுக்கு’ நல்லது –ன்ற மோடில் விளையாடுங்கள்’ என்று ஆட்டத்தைக் கலைத்தார் கமல். ‘இத..இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்’ என்று வனிதா குஷியானார். எனவே அவர் எதிர்பார்ப்பின்படி மதுமிதாவிற்கு எதிராக நிறைய வாக்குகள் விழுந்தன. மீராவிற்கும் சிலர் வாக்களித்தார்கள். வனிதா டீம் இதனால் பயங்கர குஷியடைந்தது. ஆனால் அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்ததை நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

‘யார் வெளியேறக்கூடாது’ என்று மக்கள் தீர்மானத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைச் சொல்கிறேன்” என்று சிறிய சஸ்பென்ஸூடன் மதுமிதாவின் பெயரைச் சொன்னார் கமல். வீட்டில் உள்ள பலரால் தான் வெறுக்கப்படுகிறோம் என்கிற குற்றவுணர்ச்சியில் இருந்த மதுமிதா, மக்களின் ஆதரவைக் கேட்டதும் கதறிக் குமுறி பயங்கரமாக அழுதது இயல்பே.

மதுமிதாவின் அப்போதைய உடல்மொழி சற்று மிகையாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் அவருடைய நோக்கில் இருந்து சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். வீட்டில் தனக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை “ஆண்டவனிடம் ஒப்படைத்தும்” “மற்றவர்களிடம் புலம்பியும்” ஒதுங்கிப் போனார். எனவே அதுவரை அவர் மனதில் அடக்கி வைக்கப்பட்டிருந்த மனஉளைச்சல் ‘அழுகையாக’ பீறிட்டது இயல்பு. ஆனால் இதே மதுமிதா, வனிதாவுடன் இணைந்து கொண்டு துவக்க நாட்களில் செய்த ராவடிகளையும் சற்று நினைவு கூர வேண்டும்.

நாம் எப்போதும் உறுதியான நிலைப்பாட்டுடன் நேர்மையின் பக்கம் நின்றால், எப்படியாவது நம் தலை காப்பாற்றப்படும். நாம் பின்பற்றும் தர்மம் அதற்கு எப்போதும் துணை நிற்கும். (மெசெஜ் சொல்றாராமாமாம்!)

**

மதுமிதாவிற்குப் பதிலாக மீராவைத் தேர்வு செய்ததால் அபிராமியின் மீது காண்டானார் வனிதா. ஏனெனில் அவரின் அப்போதைய டார்க்கெட் மதுமிதாதான். “நாம முன்பே பேசிக் கொண்ட படி ஏன் வாக்களிக்கவில்லை?” என்று அபிராமியை கோபித்துக் கொண்டார். தான் பேசும் போதும், கோபமடையும் போதும் யாரும் எதிர்த்துப் பேசாதீங்க” என்று பிறருக்கு உத்தரவுகளைப் போடும் வனிதா, மற்றவர்களுக்கு என்றால் ‘சுயமாகச் சிந்திக்கவே கூடாது. தான் சொல்வதையே செய்ய வேண்டும்’ என்று எதிர்பார்ப்பது அதிகாரத் திமிரின் அடையாளம். கருத்துரிமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் இவர்கள். தனக்கு வந்தால் மட்டும் ரத்தம். பிறர் என்றால் தக்காளி சட்னி.

மதுமிதா மக்களால் காப்பாற்றப்பட்டதை வனிதா குழுவால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ‘ச்சீ. இந்தப் பழம் புளிக்கும்’ என்கிற கதையாக தாங்களே.. ஏதோ சமாதானம் சொல்லி தங்களைத் தேற்றிக் கொண்டார்கள். ‘அவ இருந்தாத்தான் இங்க பிரச்சினை. அதனால வெச்சிருக்காங்க’ என்பது போல் சொன்னார் ஷெரீன்.

‘யாரை வெளியேற்ற வேண்டும்’ என்கிற டாஸ்க்கில் கவினின் பெயரை மதுமிதா குறிப்பிட்ட போது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்தது. அப்போதே கவினுக்குள் ஏதோ அலாரம் அடித்தது. எனவே சற்று டொங்கலாக அமர்ந்திருந்தார். ஆனால் வனிதா என்கிற புத்திசாலி இந்த விஷயத்தை அப்படியே மாற்றிச் சொன்னார். “கவின் உனக்கு வெளியில பயங்கர ரெஸ்பான்ஸ்”. ஒரு அடிமுட்டாள் புத்திசாலியைப் போல பேச முயன்றால் எப்படியிருக்கும் என்று வனிதாவின் இந்த உடல்மொழியினால் அறியலாம்.

“ஏதோ தப்பு” என்று கவினும் உணர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த சரவணனும் அதை லாஜிக்கலாக விளக்க முயன்றார். ஆனால் “உங்களுக்கெல்லாம் புரியல.. ஆக்சுவலி…இது என்னன்னா..” என்று வனிதா ஆரம்பித்தவுடன் சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். “கேனத்தனமா இருக்கு” என்று நிகழ்ச்சியின் துவக்கத்தில் அவர் சொல்லியதும் இதைத்தான். இயல்பான மொழியில் உண்மைகளை அப்படியே உடைத்துப் பேசி விடுகிறார் சரவணன்.

ஆக.. மதுமிதா காப்பாற்றப்பட்டார். எனில் வெளியேறப் போகிறவர் யார்? அது ஒரு பெண்மணி என்றும் வீட்டின் மூத்தவர் என்றும் ஒரு ‘செய்தி’ கசிந்திருக்கிறது. (இதுக்கு மேலயுமா க்ளூ கொடுக்க முடியும்). பார்ப்போம்.








suresh kannan

5 comments:

Lakshmi Chockalingam said...

தமிழக ஜனங்களின் கல்யாண குணங்கள் அப்படி. 😂😂😂

malar said...

இல்லை அது ஸ்கூல் பையன் காஸ்ட்யூம் இல்லை .
இது வெளிநாடுகளின் பார்ட்டி வேர் suits வித் suspenders என்று சொல்லுவார்கள் . இது fashion அவுட் ஃபிட்

அமெரிக்க ஐரோப்பிய மக்கள் பார்ட்டிகளுக்கு அணியும் உடை ..

நேற்று அவர் மிக ஹேண்ட்ஸம்மாக இருந்தார்

malar said...

ஆனாலும் வனிதாவுக்கு தன்னம்பிக்கை அதிகமோ அதிகம்தான் .பாவம் அவர் குடும்பத்தினர்
இப்போ இவருக்கு 48 வயது இருக்கும் .கொஞ்சமும் அசராமல் சண்டைக்கு தயாராகிறாரே ஆச்சர்யம்

நேற்று எபிசோட் பற்றிய உங்கள் பார்வை அருமை .குறும்படம் காட்டியிருக்கலாம் .நேற்று எதோ ஒரு விஷயம் கமலிடம் மிஸ்ஸிங் .அது fb அவர்களை வெளியேற்றும் கட்டாய சூழலாகவும் இருக்கலாம் .சிறிது டிஸ்டர்ப்ட் ஆகவே காணம்பட்டார்

Saran said...

“ஏதோ தப்பு” என்று கவினும் உணர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த சரவணனும் அதை லாஜிக்கலாக விளக்க முயன்றார். ஆனால் “உங்களுக்கெல்லாம் புரியல.. ஆக்சுவலி…இது என்னன்னா..” என்று வனிதா ஆரம்பித்தவுடன் சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். Vanithaa solluvanga " yaru controversy create pannurangalo avankaluku than makkal vote poduvanga nu solluvanga .saravanan solluvanga etha kavin solla sollunu this reminded unga owa owner sllo comdey

Saran said...

ஏதோ தப்பு” என்று கவினும் உணர்ந்திருக்கிறார். பக்கத்தில் இருந்த சரவணனும் அதை லாஜிக்கலாக விளக்க முயன்றார். ஆனால் “உங்களுக்கெல்லாம் புரியல.. ஆக்சுவலி…இது என்னன்னா..” என்று வனிதா ஆரம்பித்தவுடன் சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். Vanithaa solluvanga " yar controversy create pannurangalo avankaluku than makkal vote poduvanga nu" saravann solluvanga "atha kavin na solla sollunu solluvaru" this reminded me paruthiveeean "appo nee owner illa ya comedy