Thursday, July 04, 2019

"ஏம்ப்பா பிக்பாஸ் பார்த்து கெட்டுப் போறீங்க?"



பிக்பாஸ் சீஸன் துவங்கும் போதெல்லாம் சமூகவலைத்தளங்களில் சிலருக்கு கூடுதல் அறச்சீற்றம் வந்து விடுவது காமெடியாக இருக்கிறது. ஊரில் ஆயிரம் அபத்தமான விஷயங்கள் வருடம் பூராவும் நிகழ்கின்றன. ஆனால் இந்த நிகழ்ச்சி வரும் போது மட்டும் ‘அந்த மிருகம் நம்மளத்தான் தாக்க வருது.. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகருங்க’ என்கிற ரேஞ்சிற்கு பதட்டப்படுவதும் அசூயை காட்டுவதும் செயற்கைத்தனமாக இருக்கிறது.

இம்மாதிரியான பாவனையாளர்கள் இதர நேரங்களில் அணு ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பிக்பாஸைத் தவிர்த்து இதர வம்புகளை எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்கள்தான். அப்புறம் ஏன்யா?

**

நிற்க..  நான் இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்தி எப்போதும் பேச மாட்டேன். நிச்சயம் இது நேர விரயம். இதன் பின்னால் பெரும் வணிகம் இருக்கிறது. இது மனித உளவியலை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கக்கூடியதில் ஒரு துளி பங்குடன் செயலாற்றுகிறது. குத்துச்சண்டை போட்டியைப் போல மனித உணர்வுகளை மோத விட்டு அதை நம்மை வேடிக்கை பார்க்க வைக்கும் குரூரத்தனத்தை உற்பத்தி செய்கிறது.

தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றும் பல அபத்தங்களைப் போல இதுவும் ஒரு மகா அபத்தமான நிகழ்ச்சியே. இதில் மாற்றுக் கருத்தேயில்லை.

ஆனால் – என்னளவில் இதைப் பார்ப்பதற்கான, எழுதுவதற்கான காரணத்தைச் சொல்லி விடுகிறேன். ஏற்கெனவே நிறைய சொல்லியும் இருக்கிறேன்.

எனக்கு எப்போதுமே மனித உளவியலைக் கவனிப்பதிலும் அதைப் பற்றி உரையாடுவதிலும் ஓர் அமெச்சூர்தனமான ஆர்வம் உண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது தொடர்பான டிராமாக்கள் நிறைய நிகழ்கின்றன. இவற்றை என்னுடைய சிறிய பார்வையில் ஆராய்வதே என் நோக்கம். ரொம்பவும் சீரியஸாக எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் என்பதால் கூட நையாண்டிகளை இணைத்துக் கொள்கிறேன்.

பிக்பாஸின் பார்வையாளர் சதவீதம் பெரும்பான்மை என்பதால் இந்த நிகழ்ச்சியை வெறும் வம்பாக மட்டும் பார்க்காமல், மனிதர்களை சமநிலையுடன் புரிந்து கொள்ள முயலும் ஒரு பயிற்சியாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமா என்று இதர பார்வையாளர்களுக்கு சொல்ல முயற்சிக்கிறேன்.

இதைப் பார்த்துதான் மனிதர்கள் திருந்துவார்கள் என்பதெல்லாம் நிச்சயம் கற்பனை. எத்தனையோ நீதி நூல்கள் எழுதப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் மனிதர்களின் சிறுமைத்தனங்கள் குறையவேயில்லை. ஆனால் அறவுணர்வு என்பது அவனுக்கு (அதாவது எனக்கும் இணைத்தே) நினைவுப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பல நபர்கள் பார்ப்பதால் இந்த நிகழ்ச்சியை அதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்று முயற்சிக்கிறேன்.

பிக்பாஸ் பார்த்து மனிதர்கள் திருந்த மாட்டார்கள் என்பதில் எத்தனை உண்மையிருக்கிறதோ அதேயளவு அதைப் பார்த்து கெட்டு விட மாட்டார்கள் என்பதையும் நம்ப வேண்டும். ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் காட்டப்படும் சிறுமைத்தனங்கள் நம்மிடம் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றை உங்களுக்கே ஒருவர் படம்பிடித்துக் காட்டும் போது ‘ச்சே.. நாம் இப்படியெல்லாமா இருக்கிறோம்’ என்று வெட்கி தன் சிறுமைத்தனங்களை ஒருவர் குறைத்துக் கொண்டால் அதுவே இந்த நிகழ்ச்சியின் நேரமுதலீட்டினால் கிடைக்கும் நன்மை.

மாறாக இதையும் வம்பு பேச மட்டுமே பயன்படுத்திக் கொண்டால் இழப்பு நமக்கே.  இதையெல்லாம் என் முந்தைய கட்டுரைகளில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பாரா பாராவாக எழுதியிருக்கிறேன்.


suresh kannan

6 comments:

Unknown said...

Sir please upload yesterday's episode ....Waiting eagerly

arivuindia said...

Let them spend time in useful way. Waiting for today's episode, I am more interested in your review than BB.

Manivannan said...

What happened in yesterday episode review? Kaiyum odala kaalum odala..seekiram

malar said...

பொதுவா இப்படி வேஸ்ட் நிகழ்ச்சி என்று புலம்புவோர் மனா நிலை ஒரே மாதிரிதான் இருக்கும் .

இது ஒன்றும் நம் வாழ்க்கையை உயர்த்தும் நிகழ்வல்ல சும்மா ஒரு பொழுது போக்கு
இந்நிகழ்ச்சி நம்மை திருத்துவதற்கானதல்ல நம்மையும் சுய பரிசோதனை செய்ய .நமக்குள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது வணிதா சாக்ஷிக்கள் அபிக்கள் ஷெரின் , மது மீராக்கள் எட்டி பார்க்காமல் இருந்ததில்லை இந்நிகழ்வில் தனியாக பார்க்கும்போது பிராமிணன்ட்டா தெரிகின்றது . அப்படி தெரியும்போது நமது மனசின் அழுக்கும் அகக்கண்ணாடியில் தெரியும் அது நம்மை உணர ஒரு சான்ஸ் .
இப்போ உலகமே கைக்குள் மொபைல் வழியா வருது இந்நிகழ்ச்சி தான் மக்களை குழந்தைகளை கெடுக்கப்போகுதா !


Gopi Chakrabani said...

இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் என்னை சுய ஒப்பீடு செய்து கொள்வேன். அவர்கள் இடத்தில் நான் இருந்தான் என்ன செய்வேன் என என்னை நானே ஒரு முறை அறிந்து கொள்ள முயற்சிப்பேன்...

Anonymous said...

நான் பிக்பாஸ் பார்க்கும் காலங்களில் அதிகம் புறம்பேச ஆரம்பிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.